Headlines News :
முகப்பு » » மலையக இளைஞர்கள் சந்தேகத்தின்பேரில் கைதானமைக்கு அரச நிர்வாக முறைமை தோட்டங்களில் இல்லாமையே காரணம் - எம். திலகராஜ்

மலையக இளைஞர்கள் சந்தேகத்தின்பேரில் கைதானமைக்கு அரச நிர்வாக முறைமை தோட்டங்களில் இல்லாமையே காரணம் - எம். திலகராஜ்


தோட்ட  தனியார் முகாமைத்துவத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டிருக்கும் தோட்ட நிர்வாக முறைமையானது அரச நிர்வாக முறைமையின் கீழ் கொண்டு வரப்பட்டு  அங்கு கிராம சேவகர் பிரிவுகள் அதிகரிக்கப்பட வேண்டும். பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் அந்த பிரதேச செயலகங்களினூடாக உள்ளூராட்சி சபைகள் மாற்றப்பட்டு உள்ளூராட்சி சபைகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக தெரிவித்துள்ள நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் பொதுநிர்வாக முறை முநறயாக இடம்பெறாமையினாலேயே மலையகத்தில் பெரும்பாலன இளைஞர்கள் கைது செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பொதுநிர்வாகம் சம்பந்தப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

 பொதுநிர்வாகம் சம்பந்தப்பட்ட தனிநபர் பிரேரணை கொண்டு வந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்  புத்திக பதிரணவிற்கு நான் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இந்த பொது  நிர்வாக மமுறையிலேயே மாற்றங்கள் செய்யப்பட்டு எல்லை மீள் நிர்ணயம்  கடந்த காலங்களிலே செய்யப்பட்டது. எவ்வாறு எல்லை நிர்ணயம் செ்யயப்பட்டுள்ளது என்பது பற்றி தற்பொழுது வர்த்தமானி அறிவித்தலும் கிடைக்கப்பெற்றிருக்கின்றது. புதிதாக வட்டார முறை அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது.  இந்த வட்டார  முறைமையினூடாக அடுத்த கட்டத்தில் பிரதேச செலகங்கள் எவ்வாறு மேலதிகமாக பிரிக்கப்பட வேண்டும் அல்லது அதிகரிக்கப்பட வேண்டும் என்ற விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேபோல இதன் தொடர்ச்சியாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையும் கூட இந்த பிரதேச செயலகங்களின் அதிகரிப்புக்களினூடாக பிரதேச சபை அதிகரிப்பினூடாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் நான் எனது கன்னியுரையில் குறிப்பிட்டதை நான் இங்கு மீண்டும் நினனவுபடுத்துகின்றேன். இந்நாட்டில் நகரம், கிராமம், தோட்டம் என மூன்று துறை நிலைப்பட்டு இந்த கட்டுமானங்கள் அமைக்கப்பட்டிருக்கின்ற பொழுது இந்த எஸ்டேட் செக்டர் என்கின்ற தோட்ட த்துறையானது இன்னும் கூட பொது நிர்வாகத்திற்குள் முழுமையாக உள்வாங்காத நிலைமை இருப்பதை நான் இந்த உச்ச சபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்நாட்டிற்கு காலனித்துவ ஆட்சியுடன்  வந்த தோட்டத் தொழிற்துறையானது  200 வருட காலமாக அண்மித்து கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் வெறும் 20 வருட காலங்கள் மாத்திரமே அந்த தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பை அரச கூட்டுத்தாபனங்கள் மேற்கொண்டிருக்கின்றன. ஜனவசம எனப்படுகின்ற நிறுவனமும் SPC எனப்படுகின்ற மக்கள் பெருந்தோட்டயாக்கமும் 1972 க்கும் 1992க்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே அந்த தோட்டங்களை நிர்வகித்திருக்கின்றன. இந்த தோட்டங்களை நிர்வகிக்கும் முறைமையை நான் இங்கு பேசுவதற்கு காரணம் தோட்டங்களை நிர்வகிப்பது மாத்திரம் அல்ல அந்த மக்களின் நிர்வாக விடயங்களையும் அந்த தோட்ட நிர்வாகமே பார்க்கிக்ன்றது என்பது மிகவும் பாரதூரமான விடயம்.  இந்த மக்களை இந்த சமூகத்தை இந்த அரசாங்க நிர்வாகத்திற்குள் உள்வாங்காததாகத்தான் நமது அரச நிர்வாக பொறிமுறை காணப்படுகின்றது.

இந்நாட்டில் தோட்டத்தில் பிறக்கின்றவர்களுக்கு பிறப்புச்சான்றிதழ் அல்லாமல் , பிறப்பு அட்டை (Birth Card) எனப்படுகின்ற ஒரு அட்டை வழங்கப்படும்.  அந்த தோட்டத்தில் ஒரு குழந்தை பிறந்து இருந்தால் அந்த குழந்தை பிறந்ததை சொல்பவர் அந்த தோட்ட முகாமையாளராக இருக்கின்றார். தோட்டத்தில் பிறந்தவன் என்ற வகையில் நான் கூறுகின்றேன். இந்த நிலைமை எனக்கு கூட இருந்தது. நான் சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றும் போதே அரசாங்கத்தினால் வழங்கப்படும் பிறப்புச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டேன் என்பதை மிகுந்த கவலையோடு இந்த உச்சசபையிலே தெரிவித்துக்கொள்கின்றேன். அந்தளவிற்கு ஒரு குழந்தையின் பிறப்பு கூட தனியாரின் முகாமையாளருக்கு ஒப்படைக்கப்படுகின்ற நிலைமையே தோட்டத்துறையிலேயே காணப்படுகின்றது.

 கடந்த ஆட்சியில் எல்லை மீள் நிர்ணயம் செய்கின்றோம் என்ற பெயரில் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்ட போது அரசியல் ரீதியாக தாங்கள் தொடர்ச்சியாக எவ்வாறு இந்த உள்ளூராட்சி  மன்றங்களை கைப்பற்றி வைத்துக்கொள்ளலாம் என்ற அடிப்படையிலேயே அது இடம்பெற்றதே தவிர இந்த தோட்டத்துறை முறைமை அங்கு உள்வாங்கப்படவில்லை. ஒர் ஆச்சரியமான செய்தி. நுவரெலிய மாவட்டத்தில் ஹங்குராங்கெத்த பிரதேசத்தில் 120 குடும்பங்களுக்கு ஒரு கிராமசேவகர் இருக்கின்ற பொழுது பொகவந்தலாவை பிரதேசத்தில் கேர்கஸ்வோல் என்ற கிராமசேவகர் பிரிவு 3200 குடும்பங்களைக் கொண்டிருக்கின்றது. 3200 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் எவ்வாறு சேவையாற்ற முடியும்? இன்று நாங்கள் கைதுகள் மற்றும் கைதுகளின் விடுதலைப்பற்றி பேசுகின்றோம் மலையக இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் இந்த பொது கைதின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதற்கு பிரதான காரணம் என்ன? அடையாள அட்டை இல்லை என்பதே அவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு பிரதான காரணம்.

 அடையாள அட்டை இல்லாமல் போனதற்கு பிரதான காரணம்  என்ன ? அவர்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் கிராம சேவகர்களின் எண்ணிக்கை  குறைவு. 3200 குடும்பங்களைக்கொண்ட ஒரு கிராம சேவகர் பிரிவில் ஒரு கிராமசேவகர் அங்குள்ள அனைவருக்கும் எவ்வாறு அடையாள அட்டை வழங்க முடியும்?  இது அதிகாரிகளின் தவறு அல்ல நமது நிர்வாக முறைமையிலேயே தவறு . எந்த விதத்திலும் சமநிலையற்ற வகையிலே நாங்கள் இந்த நிர்வாக முறையை அமைத்திருகங்கின்றோம். ஒரு புறம் 120 குடும்பங்களுக்கும் மறு புறம் 3200 குடும்பங்களுக்கும் தலா ஒரு கிராம சேவகர் என்பது எந்த விதத்தில் நியாயமானது?

 6000 குடும்பங்களுக்கு ஒரு பிரதேச செயலகம் இருக்கின்றது. ஆனால்,  நுவரெலியா மாவட்டத்தில் இரண்டரை இலட்சம் மக்களுக்கு ஒரு பிரதேச செயலகம். அந்த பிரதேச செயலகத்துக்கு பொறுப்பான  மாவட்டச் செயலாளரே இப்போது ஐந்து பிரதேச செயலகங்களாக இருக்கும் பிரதேச செயலகங்களை நுவரெலியா மாவட்டத்தில் 12 பிரதேச செலகங்களாக ஆக்க வேண்டும் என ஒத்துக்கொண்டுள்ளார். நாங்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் நாங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் கலந்துரையாடலின் அடிப்படையிலேயே அதற்கான  திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனவே அவரும் உரிய அதிகாரிகளுக்கு அதனை அனுப்பி வைத்திருக்கிறார் எனவே இந்த மாற்றங்களைச் செய்யும் போது நுவரெலியா மாவட்டத்தில் ஐந்தாக இருக்க கூடிய செயலகங்களை 12ஆக  உயர்த்துவதற்கு அரச அதிகாரிகளும் ஒத்து கொண்டிருக்கின்றார்கள். மாவட்டச் செயலாளர் ஒத்துக்கொண்டிருக்கிறார்.

 நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இந்த மாவட்டதை மையப்படுத்தி பேசினாலும் நாடளாவிய பெருந்தோட்டங்கள் இருக்கன்ற எல்லா மாவட்டங்களிலும் இந்நிலைதான் காணப்படுகின்றது என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன். தோட்ட  தனியார் முகாமைத்துவத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டிருக்கும் தோட்ட நிர்வாகமுறைமையானது அரச நிர்வாக முறைமையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் அங்கு கிராம சேவகர் பிரிவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் அந்த பிரதேச செயலகங்களினூடாக உள்ளூராட்சி சபைகள் மாற்றப்பட்டு உள்ளூராட்சி சபைகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates