Headlines News :
முகப்பு » , , » கொழும்பு தமிழர் பிரதிநிதித்துவம்: அருணாச்சலம் முதல் மனோ வரை - என்.சரவணன்

கொழும்பு தமிழர் பிரதிநிதித்துவம்: அருணாச்சலம் முதல் மனோ வரை - என்.சரவணன்

இக்கட்டுரை 2015 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து 06.09.2015 வெளியான தினக்குரலுக்காக எழுதப்பட்டது. அதன் பின்னர் 2019 டிசம்பரில் "கள்ளத்தோணி" என்கிற தலைப்பில் வெளிவந்த நூலிலும் திருத்தப்பட்ட இக்கட்டுரை இடம்பெற்றது.
கொழும்பில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் மீண்டும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. மொத்தம் 19 ஆசனங்களைக் கொண்ட கொழும்பில் குறைந்தது 4 உறுப்பினர்களாவது தெரிவாகியிருக்கவேண்டும் ஆனால் ஒரே ஒரு தமிழராக மனோ கணேசன் அதுவும் நூலிலையில் தப்பியிருக்கிறார்.

இறுதியாக மேற்கொண்ட தொகைமதிப்பு புள்ளிவிபரங்களின்படி இலங்கையில் 32 லட்சம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஏறத்தாழ 50 வீதத்தினர் வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியில் வாழ்கிறார்கள். வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திற்கும் வெளியில் அதற்கடுத்ததாக தமிழர்கள் அதிகமாக வாழும் மாகாணம் மேல் மாகாணம். அதிலும் கொழும்பில் அதிக தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் அதிகமானோர் இந்திய வம்சாவளிப் பின்னணியையுடைய தமிழர்கள்.

வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த தமிழ் மக்களில் கணிசமானோர் நிரந்தர வதிவாளர்களாக ஆனார்கள். அதே வேளை தமிழர்களுக்கு தமது வீடு காணிகளை விற்றுவிட்டு புறநகர்களை நோக்கி இடம்பெயர்ந்தார்கள் கணிசமான சிங்களவர்கள். கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக கொட்டகதெனிய இருந்தபோது 1996இல் தெரிவித்த கருத்தொன்றின்படி அப்போதைய கொழும்பு மாநகர சபை பிரதேசத்திற்குள் மாத்திரம் 60 வீதத்துக்கும் அதிகமான தமிழர் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்திருந்தார். தமிழர்களின் பெருக்கம் வேகமாக அதிகரிக்கின்றது என்கிற பீதியைச் சிங்களவர்களுக்கு ஏற்படுத்தினார்.

கொழும்பைப் பொறுத்தளவில் பெருமளவு இந்திய வம்சாவளி மக்களும், வடக்கு கிழக்கு பகுதியிலிருந்து போருக்கு முன்னரும், போர் காலத்திலும் இடம்பெயர்ந்த தமிழர்களும், மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களுமாக பெருமளவு தமிழர்கள் வாழ்கிறார்கள். கொழும்பு பல்லின மக்கள் வாழ்ந்து வரும் மாவட்டம்.

தமிழ் முற்போக்கு கூட்டணி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலை முன்னெடுத்த போதும். வடக்கு கிழக்குக்கு வெளியில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஒரு அமைப்பு இதுவரை காலம் இருக்கவில்லை. கடந்த காலங்களில் இ.தொ.க அதில் சிறிய அளவு பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது என்ற போதும் மலையகத்தில் தொழிற்சங்க அரசியலையும் அதற்கு வெளியில் இன்னொரு அரசியலையும் முன்னெடுப்பதில் வெற்றியடையவில்லை. ஆனால் இம்முறை வடக்கு கிழக்குக்கு வெளியில் அந்தந்த தளங்களில் அரசியலை மேற்கொண்டு வந்த சக்திகள் ஓரணி திரண்டு அப்படியான ஒரு தேவையை இனங்கண்டு அதனை ஒரு வேலைத்திட்டமாக முன்னெடுப்பதற்கான கூட்டணியை நிறுவின. அதன் விளைவே தமிழ் முற்போக்கு கூட்டணி. தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக நக்கல் முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணியைத் தோற்றுவித்தன. பெரும்பாலும் இந்திய வம்சாவளி பின்னணியைக் கொண்டவர்களை இலக்காகக்கொண்ட கூட்டணியாக இருந்தும் “இந்திய” அல்லது “மலையக” போன்ற பதங்களைக் கட்சிப் பெயரில் இணைத்துக்கொள்ளாததன் காரணம் பரந்துபட்ட அனைவரையும் இணைக்கும் நோக்கில் தான்.

1939இல் இலங்கை இந்திய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை பறிப்புக்குப் பின்னர் “இந்திய” அடையாளம் என்பது அச்சுறுத்தலுக்குள்ளானதைத் தொடர்ந்து அவ்வமைப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்று 1950இல் பெயர் மாற்றம்பெற்றது. ஆனால் 1998ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், செங்கொடி சங்கம், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்து “இந்திய வம்சாவளி பேரணி” என்கிற அமைப்பை உருவாக்கிய போது மீண்டும் “இந்திய” என்கிற பதம் 48 வருடங்களுக்குப் பின்னர் ஒரு தேர்தல் கூட்டுக்காக பயன்படுத்தப்பட்டது ஆனால் அந்த அமைப்பும் நிலைகொள்ளவில்லை.

தேசிய அளவில் தமிழர்களுக்கு தலைமை தாங்கும் எந்த ஒரு அரசியல் இயக்கமும் இதுவரை இருந்ததில்லை. ஆக தமிழ் கட்சிகள் பிரதேச கட்சிகளாகவே இயங்கி வந்திருக்கின்றன. வடக்கு கிழக்கு – மலையகம் – மற்றும் இதற்கு வெளியில் உள்ள தமிழர்களின் அரசியல் தேவைகளும், அபிலாஷைகளும் ஒன்றல்ல அவை ஒன்றுக்கொன்று தனித்துவமான அரசியல் கோரிக்கைகளைக் கொண்டவை என்பதும் ஒரு காரணம் தான். 1972 இல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்பன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய போதும் மலையக அரசியல் நிகழ்ச்சி நிரலும் தமிழீழ அரசியல் நிகழ்ச்சி நிரலும் இப்படி மாறுபட்டதாக இருந்ததால் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் கூட்டணியிலிருந்து 70களின் பிற்பகுதியில் விலகிக்கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தமிழர்கள் என்கிற அளவில் பொதுப் பிரச்சினைகளும் இருக்கின்றன. அவற்றுக்காகவாவது எந்த ஒரு தேசியக் கூட்டும் இதுவரை உருவானதில்லை.

மனோ கணேசன்
கொழும்பு பிரதிநிதித்துவத்துக்கான தேவை குறித்த விழிப்புணர்வும் 2000 வரை இருக்கவில்லை. இப் பிரச்சினையைச் சரியாக இனங்கண்டு அதனை ஒரு அரசியல் வேலைத்திட்டமாக முன்னெடுக்க எவருமற்ற சூழலில் தான் மனோகணேசனின் பிரவேசம் நிகழ்ந்தது. அதுவரை தமிழர்களின் வாக்கு வங்கி மோசமாகச் சிதறியே இருந்தது. பெரும்பான்மை கட்சிகளே அவர்களுக்கு இருந்த தெரிவாக இருந்தது. இ.தொ.க இந்த நிலைமையை சற்று மாற்றியிருந்தது. கண்டியைச் சேர்ந்த மனோகணேசன் கொழும்பு சூழலுக்கு புதியவரல்லர். மேல் மாகாணத்துக்கான தமிழர் அரசியல் விவகாரத்தை ஒரு கருத்தாக்கமாக விளங்கிக்கொண்டு அதற்கான இயக்கமொன்றின் தேவை குறித்தும் மனோகணேசன் குழாம் கருதியது.

இந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் தான் மேல்மாகாண மக்கள் முன்னணி தொடக்கப்பட்டது. பின்னர் அது மேலக மக்கள் முன்னணியாக மாறியது. அதுவே அதற்குப் பின்னர் ஜனநாயக மக்கள் முன்னணியாகி இப்போது தமிழ் முற்போக்கு கூட்டணியோடு ஐக்கியமாகியிருக்கிறது.

தலைநகர் தமிழர் மத்தியில் செல்வாக்கு பெற்றுவரும் ஒரு கட்சி என்கிற ரீதியில் தமிழர் பிரதிநிதித்துவம் பற்றிய அவர்களின் அக்கறை கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது. கொழும்பில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அழிந்து போவதையிட்டு அதிகம் கோஷமிடும் மனோகணேசன் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் வெற்றி பெற்றபின்னர் அதிலிருந்து ராஜினாமா செய்து அவரது கட்சியில் அவருக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற தமிழர்களைத் தவிர்த்து விட்டு பட்டியலில் பின்தங்கியிருந்த சிங்களப் பெண்மணிக்கு தன்னுடைய ஆசனத்தை வழங்கியமை குறித்து அவரது கட்சியிலிருந்து வெளியேறிய அவர சகோதரர் பிரபா கணேசன் மற்றும் குமரகுருபரன் ஆகியோர் பகிரங்கமாக விமர்சனம் செய்தனர்.

மனோ கணேசன் 2001 இல் 54,942 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். 2004ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெற்றார். அதே தேர்தலில் ஐ.தே.க சார்பில் தியாகராஜா மகேஸ்வரனும் போட்டியிட்டு வெற்றியடைந்தார். 2010 தேர்தலில் மனோகணேசன் கொழும்பு மாவட்டத்தை விட்டு கண்டியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேசியப்பட்டியலின் மூலம் ஐ.தே.க. பாராளுமன்றத்துக்கு அனுப்பும் என்கிற எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. மனோகணேசன் அதற்குப் பின்னர் போட்டியிட்ட நான்கு தேர்தல்களிலும் வாக்குகளை படிப்படியாக இழக்கத் தொடங்கினார். இறுதியில் கடந்த ஆண்டு நடந்த மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 28,558 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. அனால் தற்போது நடந்துமுடிந்த பொதுத்தேர்தலில் 69,064 வாக்குகளைக் கொழும்பில் பெற முடிந்திருக்கிறது. அதற்கான அரசியல் முனைப்பும், கட்சியின் திட்டமிட்ட பணிகளும் நிச்சயம் காரணமாக இருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணங்களில் ஒன்று புதிய கூட்டணியின் உருவாக்கமும் தான்.
கடந்த காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட மேல் மாகாண தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசையைப் புரிந்துகொள்ளாத நிலையிலேயே அரசியலில் குதித்தது. இந்திய வம்சாவளிப் பின்னணியைக் கொண்டவர்களின் வாக்கு வங்கி உண்டு என்கிற ஒற்றைப் புரிதல் மட்டுமே அவர்களிடம் இருந்தது. அந்த அரசியல் இடைவெளியை நிரப்புவதற்குப் பதிலாக அரசியல் வாதியின் இடத்தை நிரப்புவதிலேயே கவனம் செலுத்தினார்கள்.

இதுவரை கொழும்பில் தெரிவான அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐ,தே.க வின் தயவின்றி தெரிவானதில்லை கவனிக்கத்தக்கது. யானைச் சின்னத்துக்கும், பச்சை நிறத்துக்கும் வாக்களித்து பழக்கப்பட்டவர்கள் மலையக மக்கள் மாத்திரமல்ல. கொழும்பு வாழ் தமிழர்களும் தான்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் செல்லச்சாமி 1989 ஒரு தமிழராக கொழும்பு மாவட்டத்தில் இ.தொ.க சார்பில் போட்டியிட்டுத் தெரிவானார். அதற்கு முந்திய 1977 தேர்தலில் கொழும்பு மத்தியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்தார். ஆனாலும் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் உரிமை, பிரதிநிதித்துவம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்திய முதல் அரசியல்வாதி அவர் தான். இந்த இடைவெளியில் இ.தொ.கா.விலிருந்து பிரிந்து இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் எனும் கட்சியைத் தொடங்கினார். 1994இல் சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதன் பின்னர் மீண்டும் இ.தொ.க வில் இணைந்து தேசியப் பட்டியலின் மூலம் 2000ஆம் ஆண்டு பாராளுமன்றம் சென்றார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மீண்டும் தேசியப் பட்டியல் உறுப்பினராக தெரிவாகி 2010 வரை அங்கம் வகித்தார்.

1994 பொதுத் தேர்தலில் கொழும்பிலிருந்து ஒரு தமிழர் கூட தெரிவு செய்யப்படவில்லை. பின்னர் கிடைத்த இரு தமிழ் பிரதிநித்துவம் கூட புலிகளின் தயவில் கிடைத்தது என வேடிக்கையாகக் கூறுவது வழக்கம். ஏனெனில் 1994 பொதுத் தேர்தல் முடிந்ததும் ஓரிரு மாதங்களில் தொட்டலங்கயில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெடித்த குண்டைத் தொடர்ந்து கொழும்பு மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற பிரதிநிதிகளான ஒஸி அபேகுணசேகர மற்றும் வீரசிங்க மல்லிமாராச்சி ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து அடுத்ததாக அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்த பி.பி.தேவராஜ் மற்றும் ஆர்.யோகராஜன் ஆகியோர் அதிருஷ்டம் கிட்டியிருந்தது. இல்லையென்றால் அதுவும் இருந்திருக்காது.

யோகராஜன் 2000 ஆம் ஆண்டு தெர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தோல்வியடைந்தார். ஆனால் தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகியிருந்த மாரிமுத்து இராஜினாமா செய்து கொண்டதால் யோகராஜனுக்கு அந்த இடம் கிடைத்தது. 2001 தேர்தலிலும் போட்டியிட்டு தோற்றுப்போனார். ஆனால் மீண்டும் அவர் தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் தெரிவானார். அதற்கடுத்த 2004 தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2010 ஆம் ஆண்டு மீண்டும் தேசியப் பட்டியலின் மூலம் பாராளுமன்றம் சென்றார். ஆனால் இம்முறை கொழும்பு மாவட்டத்தை விட்டுவிட்டு நுவரெலியாவில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்திருக்கிறார். யோகராஜன் இதுவரை எந்தவொரு பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறாத ஒருவராகவே இறுதிவரை இருந்திருக்கிறார்.

அருணாச்சலம் ஏமாற்றம்
கொழும்பு மாவட்டத்திற்கான தமிழ் பிரதிநிதித்துவ தேவை குறித்து இன்று நேற்றல்ல இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே உருவாகிவிட்டது. ஆரம்பத்தில் சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், அருணாசலம் மகாதேவா, எனத் தமிழர்கள் அன்றைய சட்டசபையில் படித்த இலங்கையரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். அவர்கள் கொழும்பை மையப்படுத்தியே அரசியல் செய்தார்கள். சரவணமுத்து, நேசம் சரவணமுத்து ஆகியோரும் பிற்காலங்களில் கொழும்பில் பிரதிநிதித்துவம் வகித்தனர்.

1915ஆம் ஆண்டு இனக்கலவரம் மற்றும் அன்றைய ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்த விளைந்த இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பு என்பவற்றைத் தொடர்ந்து சிங்கள தமிழ் முஸ்லிம் தலைவர்கள் ஒரு இயக்கத்தை அமைக்க முனைந்தனர்.

அதன்படி இலங்கை சீர்திருத்தக் கழகம் என்கிற அமைப்பை 1917 இல் உருவாக்கியபோது அதன் ஸ்தாபகர்களில் ஒருவரான சேர் பொன் அருணாச்சலத்தைத் தலைவராக நியமித்தனர். இலங்கை சட்ட நூல்நிலையத்தில் 19 உறுப்பினர்களால் (அதாவது 19 வழக்கறிஞர்களைக் கொண்ட) சீர்திருத்த கழகம் ஆரம்பிக்கப்பட்டது. “எமது அரசியல் தேவை” என்கிற தலைப்பில் அருணாசலம் ஆற்றிய உரையில்..

“இலங்கை பிச்சை கேட்கும் வறிய நாடல்ல எமது பாரம்பரிய சொத்தைத் தான் கேட்கிறோம்” என்றார் (02.04.1917)

வெகு விரைவில் அப்போது இலங்கையில் இயங்கிய ஏனைய சங்கங்களான இலங்கை தேசிய சங்கம், சிலாபம் சங்கம், யாழ்ப்பாண சங்கம் ஆகிய சங்கங்களையும் இணைத்து இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த இந்தியத் தேசிய காங்கிரஸ் போலவே இலங்கையிலும் இலங்கை தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress - CNC) எனும் இயக்கத்தை அமைத்துக் கொண்டனர். இதனை ஆரம்பிப்பதில் முன்னின்ற எப்,ஆர்,சேனநாயக்க, ஜேம்ஸ் பீரிஸ் போன்றோர் இனரீதியிலான பிரதிநிதித்துவத்தை நீக்குவதையும் தமது நிகழ்ச்சிநிரலில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். தம்முடன் இணைந்த யாழ்ப்பாண சங்கம் மாத்திரம் இந்த விடயத்தில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தது. யாழ்ப்பாண சங்கம் அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் குடியேற்ற நாடுகளின் மந்திரிக்கு “எந்த சந்தர்ப்பத்திலும் இன ரீதியிலான பிரதிநிதித்துவம் நீக்கப்படலாகாது” என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

15.12.1917 இல் தேசிய காங்கிரசை உருவாக்குவதற்காக கூடிய முதலாவது ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட 144 பேரில் 17 பேர் மட்டுமே தமிழர்கள். அதுவும் யாழ்ப்பாண சங்கத்தின் பிரதிநிதிகள் இருவர் மாத்திரமே. இன ரீதியான பிரதிநிதித்துவம் நீக்கப்படக் கூடாது என்கிற அவர்களின் கோரிக்கையை பெரும்பாலான பெரும்பான்மை சிங்களவர்கள் எதிர்த்தனர். இந்த நிலைமையைச் சரி கட்டுவதற்கு அருணாசலத்தை அணுகினார்கள்.

இலங்கை தேசிய சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் பீரிஸ், இலங்கை சீர்திருத்தக் கழகத் தலைவர் ஈ.ஜே.சமரவிக்கிரம, யாழ்ப்பாண சங்கத் தலைவர் ஏ.சபாபதி ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்றை ஏற்படுத்தினார் அருணாசலம். அந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படாத நிலையில் அருணாசலம் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைக்குள் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைப் பேணுவது எப்படி என்று ஆராய்ந்தார். அதன் விளைவாக மேல் மாகாணத்தில் தமிழர்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்க சிங்களத் தலைவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

08.12.1918 அருணாசலத்துக்கு எழுதிய கடிதத்தின் மூலம் ஜேம்ஸ் பீரிசும், சமரவிக்கிரமவும் அந்த வாக்குறுதியை அளித்தார்கள்.

“மேல் மாகாணத்தில் தமிழருக்கு ஒரு தொகுதியை ஒதுக்குவதற்கு எமது ஆதரவைத் தருவோம் என்று வாக்குறுதியளிக்கிறோம்” என்றார்கள்.
அன்றே அருணாசலம் அச்செய்தியைச் சபாபதிக்கு அறிவித்தார். அந்த உறுதிமொழியின் பேரில் யாழ்ப்பாணச் சங்கமும் இன ரீதி பிரதிநிதித்துவத்தைக் கைவிட்டு 11.12.1919 இல் நடந்த இலங்கை தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டது. அதன் தலைவராக அருணாசலம் நியமிக்கப்பட்டார். தமிழர்களைச் சமரசத்துக்கு அழைத்து தமது தேவை கைகூடியபின், கைவிடுவது என்பது இங்கிருந்து தான் தொடங்குகிறது.

மனிங் சீர்திருத்தத்திற்கான முயற்சிகளை ஆங்கிலேய அரசு மேற்கொண்டிருந்தபோது தமிழ் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது குறித்து இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்த தலைவர்கள் கண்மூடித்தனமாக இருப்பதைக் கண்ட அருணாசலம் முரண்படத்தொடங்கினார். தேர்தல் கிட்டிய நேரத்தில் கொழும்பு தொகுதிக்கான வேட்பு மனுவை அருணாசலம் அவர்கள் தயார் செய்துகொண்டிருந்தபோது அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டு ஜேம்ஸ் பீரிசை அப்பதவிக்கு நியமித்தார்கள். இந்த சதியின் சூத்திரதாரியாகச் செயல்பட்டவர்கள் எப்.ஆர்.சேனநாயக்கா, டீ.எஸ்.சேனநாயக்கா ஆகிய இரு சகோதரர்களுமே. இவர்கள் இருவரும் அப்போது அநகாரிக தர்மபாலாவின் சிங்கள பௌத்த செயற்பாடுகளுடன் இணைந்து பணிபுரிய ஆரம்பித்திருந்தார்கள்.

1921சட்டசபைத் தேர்தல் நெருங்கிய வேளை கொழும்பு நகர் ஆசனம் ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி தமக்கு வழங்கப்படவேண்டும் என்பதை நினைவுறுத்திய வேளை

“இலங்கை சீர்திருத்தச் சங்கத்தின் தலைவராக இருந்த போது நான் கொடுத்த வாக்குறுதி இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவராக உள்ள என்னைக் கட்டுப்படுத்தாது” என்று ஜேம்ஸ் பீரிஸ் அறிவித்தார்.

எப்.ஆர்.சேனநாயக்கா இந்த சதியின் பின்னணியில் இருந்தார். இந்த ஆசனம் ஒரு தூய சிங்களவருக்கே வழங்கப்படவேண்டும் என்று தனது சகாக்களுக்குக் கூறினார். இறுதியில் அந்த தொகுதிக்கு ஜேம்ஸ் பீரிசை தெரிவு செய்தார்கள். அதுவே சிங்களத் தரப்பினரால் நம்பி மோசம் போன முதலாவது நிகழ்வாகப் பதியப்படுகிறது.

இந்த துரோகத்தை எதிர்கொண்ட வேளை அருணாசலம் 70 வயதை எட்டிக்கொண்டிருந்தார். ஏமாற்றத்தால் துவண்டு போன அருணாசலம் இலங்கை தேசிய காங்கிரசிலிருந்து விலகி யாழ்ப்பாணத்துக்குச் சென்றுவிட்டார். கனகசபை, சபாபதி உள்ளிட்ட சகல தமிழ் உறுப்பினர்களும் காங்கிரசிலிருந்து விலகினர். இலங்கை தேசிய காங்கிரஸ் அதன் பின்னர் ஒரு தூய சிங்கள அமைப்பாகவே மிஞ்சியது. சிங்கள தரப்பு தமிழர்களுக்கு செய்த துரோக ஒப்பந்த வரலாறு அங்கிருந்து தான் தொடங்கிற்று. முதல் ஒப்பந்த மீறல் அங்கிருந்து தான் ஆரம்பமானது. சிங்கள தலைவர்களிடம் முதலில் நம்பிக்கை இழந்துபோன சந்தர்ப்பமும் அது தான்.

70களின் பின்
கொழும்பின் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யப் பேரினவாதத்தால் நடத்தப்பட்ட சதி அன்று மட்டுமல்ல அதற்குப் பின்னரும் பல தடவைகள் மேற் கொள்ளப்பட்டன. சோல்பரி அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் தேர்தல் தொகுதி கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி எனத் துண்டாடப்பட்டன. 1977க்கு முன்னர் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவம் அமுலிலிருந்த போது சிறுபான்மை இனத்தவர்கள் பாதிக்காது இருப்பதற்காகக் கொழும்பு மத்தியானது பின்னர் பல அங்கத்தவர் தொகுதியாக (மூன்று) (Multi member contituencies) மாற்றப்பட்டதாகக் கூறப்பட்ட போதும் அதனால் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. 1947 இலிருந்து இதுவரை ஒரு பிரதிநிதியும் கொழும்பு மத்தியிலிருந்து தெரிவு செய்யப்படவில்லை.

1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல் திட்டத்தின் மூலம் முன்னைய தொகுதிவாரி பிரதிநிதித்துவம் மற்றும் பல அங்கத்தவர் தொகுதி முறை நீக்கப்பட்டு விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் விகிதாசார முறைமை கூட இது விடயத்தில் தமிழர்களுக்கு தீர்வையளிக்கவில்லை.

இது வரை காலம் கொழும்பில் தமிழர்களது வாக்குகள் தமிழரல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு வந்திருப்பது தெரியாததொன்றல்ல. ஆனால் சிங்களவர்களின் வாக்குகள் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இல்லை, அல்லது விதிவிலக்காக நடந்துள்ளன என்றே கூறலாம். தமிழர்களின் பிரதிநிதிகளாகத் தமிழர்களால் சிங்களவர்களே தெரிவு செய்யப்பட்டு வந்திருக்கின்றனர்.

கொழும்பில் தமிழர்களை ஒன்றிணைக்கும் அரசியல் பணி இப்போது தான் ஒருமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் மக்கள் மத்தியில் அந்த தேவை குறித்த போதிய விழிப்புணர்வு இன்னமும் போதியளவு ஏற்படுத்தப்படவில்லை. இலங்கையின் அரசியலில் தவிர்க்க இயலாதபடி இனத்துவ அரசியலையும், பிரதேச அரசியலையும் தவிர்க்கமுடியாத அங்கமாக ஆக்கப்பட்டிருக்கிறது. வாக்காளர்களும், வேட்பாளர்களும் இந்த இன, பிரதேச அடிப்படையிலேயே வழிநடத்தப்பட்டு வருகிறார்கள். ஆக அரசியல் குரலுக்கான தேவையின் நிமித்த தமிழர்களையும் அந்த இன அடையாள அரசியலுக்குள் நிலைநிறுத்துவது தவிர்க்க இயலாததாகியுள்ளது. எனவே அந்த நுண்ணரசியலின் வழியிலேயே போய் சமகால அரசியலை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.

"கள்ளத்தோணி" நூலில் இக்கட்டுரையை வெளியிடுவதற்கு முன்பாக இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் விமர்சனங்கள் குறித்து மனோ கணேசனிடம் கருத்து கோரியிருந்தேன். அவர் அதற்கு ஒரு நீண்ட பதிலையும் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். சில திருத்தங்களையும் செய்தேன். விரிவு கருதி அதன் சாரம்சத்தை மாத்திரம் கூறுகிறேன்.
“கொழும்பு மாநகரசபையில் நியமிக்கப்பட்ட பிரியாணி குணரட்ன, திடீரென கட்சிக்குள் வந்தவர் அல்ல. 2005ம் வருடத்தில் இருந்து கட்சியில் இருப்பவர். இன்றும் கட்சியின் நிர்வாக செயலாளர் மற்றும் அரசியல் குழு உறுப்பினர். எனது நண்பர், மறைந்த ரவிராஜின் நண்பரே, பிரியாணி குணரட்ன ஆவர். ரவியினால் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிரியாணி, முற்போக்கு சிங்கள மனித உரிமை செயற்பாட்டாளர். அரசியல் விஞ்ஞான முதுமானி பட்டதாரி. மனித உரிமைகள் துறை ஆராய்ச்சியாளர். இந்த அடிபபடையிலேயே ரவிக்கு நண்பரானார். பிரியாணி, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிங்கள கிராமிய சேவை பணிப்பாளர். பணி விடுப்பிலேயே கட்சி பணிகளை அவர் செய்கிறார். நானும் ரவியும், சிறிதுங்கவும் சேர்ந்து, கடத்தல், படுகொலைகளுக்கு எதிராக 2006ம் வருடம் அமைத்த “மக்கள் கண்காணிப்பு குழு’ வின் செயலாளர்... “தமிழ் பிரதிநிதித்துவம்” என்றால், “தமிழர்” என்பதை விட “தமிழ் மக்களின் அபிலாஷைகள்” பிரதிநிதித்துவம் ஆவது என்றே எண்ணுகிறேன்.”
Share this post :

+ comments + 2 comments

வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளை
சொல்லும் கட்டுரை ...அருமை

வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளை
சொல்லும் கட்டுரை ...அருமை

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates