Headlines News :
முகப்பு » » மலையக மக்களுக்கு உள்ளூராட்சி முறைமையில் சட்ட ரீதியான தடைகள் - இரா. சந்திரமோகன்

மலையக மக்களுக்கு உள்ளூராட்சி முறைமையில் சட்ட ரீதியான தடைகள் - இரா. சந்திரமோகன்


எமது நாடு அபிவிருத்தி அடைந்து வரும் பட்டியலில் முன்னிலை பெற்று வருகின்ற நாடு எனும்போது எமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தனி நபர் அபிவிருத்தியின் மூலம் குடும்பமும் குடும்பத்தின் அபிவிருத்தி மூலம் கிராமமும் கிராமத்தின் அபிவிருத்தி மூலம் பிரதேசமும் பிரதேச அபிவிருத்தி மூலம் தேசமும் அபிவிருத்தி அடையும் என்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கூற்றாகும். இதில் தனி நபர் மற்றும் குடும்பங்களை அபிவிருத்தி செய்வதற்கான கீழ்மட்ட அமைப்பாகவே கிராம சேவையாளர் பிரிவு நோக்கப்படுகின்றது. இலங்கையில் உள்ளூராட்சி கட்டமைப்பு என்பது மிகவும் பழைமையான அம்சமாகும்.

கம்சபா முறையிலேயே இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் 1939 ஆம் ஆண்டு 61ஆம் இலக்க நகர சபை சட்டத்தினால் நகர சபைகளும் 1947 ஆம் ஆண்டு 16ஆம் இலக்க மாநகர சபை சட்டத்தினால் மாநகர சபைகளும் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தினால் பிரதேச சபைகளும் உருவாக்கப்பட்டன. எனினும், இந்த எந்த கட்டமைப்புகளும் பெருந்தோட்ட மக்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக உள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள் இந்த கட்டமைப்புக்குள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்கள் பற்றிய சுருக்கமான விளக்கத்தை தருவது மலையக மக்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புக்கள் குறித்து விளங்கிக் கொள்வதற்கு வசதியாக இருக்கும் எனக்கருதி அது பற்றிய சுருக்கமான வரலாறு முதலில் முன்வைக்கப்படுகின்றது.

* 1987ஆம் ஆண்டு பிரதேச சபை (15ஆம் இலக்க) அறிமுகப்படுத்தப்பட்டது. இது மக்களால் 4 வருடத்திற்கு ஒரு முறை தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்களை கொண்டிருக்கின்றது. (271 பி.ச) ஆரம்பத்தில் உதவி அரசாங்க அதிபரே பிரதேச சபையின் செயலாளராக செயற்பட்டார். ஆயினும் பின்வந்த காலத்தில் உதவி அரசாங்க அதிபர் பிரதேச செயலாளராக மாற்றம் செய்யப்பட்டதுடன் பிரதேச சபை தனியாக்கப்பட்டது. அத்துடன் உள்ளூர் மட்டத்தில் அரச நிர்வாக முறையொன்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்க அதிகார சபை ஒன்றும் உருவாக்கப்பட்டது. இவ்விரு அமைப்புக்களும் தமது பணிகளில் பிரதிபலிப்பு, இரட்டிப்பு, ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்தல், ஒரு பிரதேசத்தில் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துதல் என்பவற்றினை மேற்கொள்கின்றன.

இந்த உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கையில் வாழும் ஏனைய அனைத்து இனங்களும் உள்ளடக்கப்பட்டுள்ள போதும் இலங்கையில் வாழும் சுமார் 150,0000 மலையக தமிழ் மக்களில் சுமார் 900,000 பேர் பெருந்தோட்டங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் செயற்பாடுகளில் பங்கு கொள்வதோடு வாக்களிப்பு முறையிலும் பங்கு கொள்கின்றனர். எனினும், உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை இவர்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இன்று வரையில் தொடர்கின்றது. இது இம்மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதி என்பதோடு ஒரு உரிமை மீறலாகவும் பார்க்க முடியும். இந்த 900,000 பெருந்தோட்ட மக்கள் உள்ளூராட்சி சபைகளின் செயற்பாட்டு சட்டகத்துக்குள் உள்வாங்கப்படாமையானது அம்மக்களின் அபிவிருத்தியில் மாத்திரமன்றி, ஒட்டு மொத்த தேசிய அபிவிருத்தியிலும் எதிர்மறையான தாக்கத்தினையே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடு என்ற பட்டியலில் வருவதற்கு இம்மக்களின் வாழ்க்கையும் ஏனைய மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப மாற்றமடைந்தால் மாத்திரமே சாத்தியமாகும்.

பிரதேச சபை சட்டத்தின் கீழ் பெருந்தோட்டங்கள் வர்த்தக அல்லது வியாபார நிறுவனங்களாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பொருள் தோட்டங்கள் கிராமங்கள் என்ற வரையறைக்குள் கொண்டு வரப்படவில்லை என்பதாகும். இதற்கு அரசாங்கம் கொடுக்கும் விளக்கம் கிராமிய மற்றும் நகர மக்கள் தாம் பெற்றுக்கொள்ளும் சேவைகளுக்கு வரி செலுத்துவதாகவும், ஆயினும் பெருந்தோட்ட மக்கள் எதுவித வரியும் செலுத்துவதில்லை என்பதாகும். எனினும் தோட்ட நிருவாகமானது ஏக்கர் வரி என்ற ஒன்றை வருடாந்தம் செலுத்தி வருகின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகும். உள்ளூராட்சி சபைகளின் பிரதான வருமான மூலங்களில் வரி வருமானமும் ஒன்றாகும்.

உள்ளூராட்சி மன்றங்களில் மலையக மக்களை உள்ளடக்குவதில் உள்ள சட்ட சிக்கல்கள்
உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை மலையக மக்கள் பெற்றுக்கொள்வதில் முக்கியமான தடையாக அமைவது சட்ட ரீதியான அம்சமாகும். குறிப்பாக, நடைமுறை சார்ந்த விடயங்கள் காணப்படுமாயின் அதனை தகர்த்துக்கொண்டு சென்று விடலாம். ஆனால், சட்ட ரீதியான சிக்கல்கள் காணப்படும்போது அவ்வாறு செய்ய முடியாது. இவ்வாறான சட்ட ரீதியான தடைகள் பற்றி கீழே காணலாம்.

பிரிவு – 33
பிரதேச சபையானது அதன் எல்லைக்குள் அமைந்துள்ள ஒரு தோட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட தோட்டங்கள் அல்லது கைத்தொழில் பொறுப்பு முயற்சிகள் எவற்றினதும் சொந்தக்காரரின் அல்லது சொந்தக்காரர்களின் வேண்டுகோளின் பெயரில் அத்தகைய ஓர் இடப்பகுதியில் வீதியொன்றை நிர்மாணித்தல் அல்லது பேணுதல் பொதுமக்களின் நலனை வேறு வகையில் நியாயமானதாக்கவென பிரதேச சபை அபிப்பிராயப்படும் ஏதேனும் விடயத்தில் பிரதேச சபையால் அங்கீகரிக்கப்படக்கூடியவராக அத்தகைய நிர்மாணத்தின் அல்லது பேணுகையில் செலவுகள் தொடர்பான அத்தகைய உதவு தொகையை கொடுப்பனவு செய்வதற்கு அமைவாகவும் ஒரு சாசனத்தின் மூலம் அத்தகைய வீதி பகிரங்க வீதியொன்றாக அமைக்கப்பெற்று பிரதேச சபைக்கு உரித்தாக்கப்படும் என்ற நிபந்தனைக்கமைவாகவும் கேள்விக்குட்பட்ட தோட்டத்தின் அல்லது தோட்டங்களின் அல்லது தொழில் பொறுப்பு முயற்சியின் அல்லது முயற்சிகளின் சேவைக்காக வீதியொன்றை நிர்மாணிப்பதற்காக அல்லது பேணுவதற்காக அத்தகைய சொந்தக்காரருடன் ஒப்பந்தத்தை செய்யலாம் என்றும்,

பிரிவு – 134 (4)
கட்டடமொன்று அது அமைந்திருக்கின்ற காணியில் பயிர்ச்செய்கையுடன் சம்பந்தப்பட்ட அல்லது அதன் இடர்நேர் விளையான நோக்கங்களுக்காக அல்லது அந்த காணியின் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவரான எவரேனும் ஆளினால் அல்லது ஆட்களினால் வதிவிட நோக்கங்களுக்காக பயன்படுத்துமிடத்து அந்த காணிகள் மீது ஏக்கர் வரியொன்று விதிக்கப்பட்டு செலுத்தப்படுமிடத்து அந்தக்காணி கட்டமைந்த இடப்பிரதேசத்துக்குள் அமைந்திருக்கின்றதென்பது சட்டப்படி இருப்பினும் அக்கட்டடத்தின் மீது வீத வரி எதுவும் அறவிட இயலாது.

பிரிவு –19 (XIV)
பிரதேச சபைகளின் நிதியானது கிராமங்கள் கட்டடங்கள் அமைத்தல், திருத்துதல், பராமரித்தல் என்பவற்றுக்காகவும் பிரதேச சபையின் நிர்வாகத்துக்குள் காணப்படும் அல்லது பிரதேச சபைக்கு மாற்றப்பட்ட சொத்துக்களை பராமரிக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

பிரிவு –19 (XXII)
பிரதேச சபைகளின் நிதியானது கிராமிய பெண்களின் அபிவிருத்தி செயற்பாடுகள், தெரிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள், கிராமிய அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கு மானியம் வழங்குதல், கிராமோதய மண்டலய மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைப்புக்களுக்காக செலவிடப்பட வேண்டும். (Section 58 (I) © of the village council ordinance No 09 of 1924 )

பிரதேச சபை சட்டத்தின் 2 ஆம் பிரிவானது பிரதேச சபையானது பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் அமைய வேண்டும் எனக்குறிப்பிடுகின்றது. பிரதேச சபையும் இம்மக்களை உள்வாங்க முடியாது. பிரதேச சபை ஒன்றினை தாபிக்கும் போது கிராமங்கள் மட்டுமே அதனுள் அடங்கும். காரணம் பிரதேச செயலகம் தோட்டங்களை உள்வாங்காமையாகும்.

மேலே குறிப்பிடப்பட்டவை சட்ட ரீதியான சிக்கல்களாக காட்டப்பட முடியும். எனினும், இதற்கும் அப்பால் வேறு சில காரணங்களும் காணப்படுகின்றமையும் குறிப்பிட்டு காட்டப்பட வேண்டியதொன்றாகும்.

* தேர்தலில் வாக்களிப்பதனை தவிர ஏனைய உள்ளூராட்சி அமைப்பு செயற்பாடுகளில் பங்கேற்கும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைப்பதில்லை
* ஒரு சில மாவட்டங்களில் இவர்கள் வாக்களிக்கின்ற போதும் இவர்களின் பிரச்சினைகளை பேசக்கூடிய தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதில்லை.
* பிரதேச சபையின் சேவைகளில் புவியியல் ரீதியில் அந்நியப்படுத்தல்.
* தோட்ட முகாமைத்துவத்தின் அதிகார ஆதிக்கம் விருப்பமின்மை.
* அரசியல் விருப்பமின்மை
* பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் ஒரு சில அபிவிருத்தி வேலைகள் இடம்பெறல்.
* அரசியல் பலம் மற்றும் பேரம் பேசும் சக்தி இருந்த காலத்தில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படாமை
* உரிமை, கொள்கை அரசியல் இன்றி சலுகை அரசியல் முன்னிலைப்படுத்தப்படல்.
* பாராளுமன்ற மந்திரி சபை விவாதங்களில் அழுத்தம் கொடுக்கப்படாமை.
* வாக்கு வங்கியினை அடிப்படையாக கொண்ட அபிவிருத்தி.

மேலும் உள்ளூராட்சி மன்றங்களை தாபிக்கும் போது இலங்கை பொதுவாக 350 குடும்பங்களுக்கு (750 மக்கள்) ஒரு கிராம சேவையாளர் பிரிவினையும் 1,500 – 3,000 மக்களுக்கு ஒரு நகர சபையையும் 3,000 – 5,000 மக்களுக்கு மாநகர சபைகள் 7,000 – 40,000 மக்களுக்கும் பிரதேச சபைகளையும் தாபித்துள்ளன. எனினும், மலையக பெருந்தோட்டப்புறங்களை பொறுத்தமட்டில் மிகப்பெரிய அளவிலான கிராம சேவையாளர் பிரிவுகளும் பிரதேச சபைகளுமே தாபிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஐந்து பிரதேச சபைகள் காணப்படுகின்றன. இதில் கொத்மலை பிரதேச சபைக்கு 100,437 மக்களுக்கு 96 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் ஹங்குராங்கெத்த 88,055 மக்களுக்கு 131 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் வலப்பனை 103,105 மக்களுக்கு 125 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் நுவரெலியா 210,927 மக்களுக்கு 72 உத்தியோகத்தர் பிரிவுகளும் மற்றும் அம்பகமுவ 204,026 மக்களுக்கு 67 கிராம சேவகர் பிரிவுகளும் என்ற அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

இதிலும் இலங்கையின் மிகப்பெரிய பிரதேச சபையாக அம்பகமுவ காணப்படுவதோடு இங்குள்ள கேர்கஸ்வோல்ட் கிராம சேவையாளர் பிரிவே இலங்கையில் உள்ள மிகப்பெரிய கிராம சேவையாளர் பிரிவும் ஆகும். இங்கும் சுமார் 12,898 மக்களும் 2,396 குடும்பங்களும் உள்ளன. அத்தோடு சுமார் 12 தோட்டப்பிரிவுகளும் காணப்படுகின்றன. அதேபோல் லெதன்டி 6,118, என்பீல்ட் 7142, நோர்வூட் 6,598, மொக்கா 5,175, பிரவுன்ஸ்விக் 5,746, கவரவில 5,441, வெஞ்சர் 5,331, லொய்நோன் 7,406, ஓல்டன் 5,201, ஸ்ரெஸ்பி 5,206, பொகவந்தலாவ தெற்கு 6,215 எனும் சனத்தொகை காணப்படுவதோடு கலுகல 799, புலத்கம 1,657, மில்லகாமுல்ல 852, மினுவன்தெனிய 702 , தீனியகல 669 சனத்தொகையையும் கொண்டுள்ளன. இதன்படி பார்க்கும் தோட்டப்புறங்களை அடிப்படையாக கொண்ட கிராம சேவையாளர் பிரிவுகள் அதிக சனத்தொகை கொண்டதாக உள்ளன.

இதனை சராசரியாக பார்க்கும் போது கொத்மலையில் 1,046 மக்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவும் ஹங்குராங்கெத்தயில் 672 மக்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவும் வலப்பனையில் 824 மக்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவும் நுவரெலியாவில் சராசரியாக 2,929 மக்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவும் அம்பகமுவவில் 3,045 மக்களுக்கு ஒரு பிரிவு என்ற அடிப்படையிலேயே உள்ளமையை காணலாம்.

மேலும் இப்பிரதேசத்தில் உள்ள கிராம சேவையாளர் பிரிவில் உள்ள சனத்தொகையை கொண்ட பிரதேச சபைகளும் நாட்டில் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் உள்ள லகுகல பிரதேச செயலாளர் பிரிவு 8,900 மக்களையும் திருகோணமலை மாவட்டத்தின் பதவிசிறிபுர 11,858, கோமரன்கடவல 7,339, மொரவெவ 7,946 என்ற சனத்தொகையை அடிப்படையாக கொண்டுள்ளன.

மேலும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்பது மேற்குறிப்பிடப்பட்ட கிராம சேவையாளர் பிரிவிற்கும் ஒன்று என்ற அளவிலேயே காணப்படுகின்றது. இதனால் இவை இன்னும் பின்னடைவான பிரிவுகளாக காணப்படுகின்றன.

அதேபோன்று ஏனைய அபிவிருத்திகளை எடுத்துக்கொண்டாலும் அதிக சனத்தொகை கொண்ட பிரதேசத்திற்கு குறைந்த சனத்தொகை கொண்ட பிரதேசத்திற்கும் சமமாகவே வழங்கப்படுகின்றது. இதனால் இப்பிரதேசத்தின் மக்கள் சேவைகளை அனுபவிப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

இதற்கு மேலாக பிரதேச சபைகளின் சேவைகளை பெருந்தோட்ட மக்கள் அனுபவிக்க முடியாத சட்ட சிக்கல்கள் காரணமாக பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளால் தமக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்ய முடியாத நிலையே தொடர்கின்றது. இது தொடர்பில் அண்மைக்காலம் வரை பல்வேறு சிவில் அமைப்புக்களால் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்ததை கவனத்தில் கொள்ளல் வேண்டும். எனினும், இதற்கான முறையான சட்ட திருத்தங்கள் இன்று வரையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது.

மலையக மக்கள் ஏன் உள்ளூராட்சி மன்ற கட்டமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதற்கு உள்ளூராட்சி மன்றங்களால் செய்யப்படும் சேவைகளை சுருக்கமாக தெளிவுபடுத்துவது அவசியமாகும். எனினும் இந்த சேவைகளில் எதனையும் பெருந்தோட்ட மக்கள் அனுபவிக்கவில்லை என்பதை குறிப்பிட்டு காட்ட வேண்டும்.

பிரதேச சபைகளின் தொழிற்பாடுகள்
1. வரிப்பணம் அறவிடுதல்
 வரிப்பணம் அறவிடுதல் சம்பந்தமான வேலைத்திட்டம்
 வரிப்பணம் அறவிடுகின்ற பிரதேசங்களில் காணப்படும் குப்பை கூழங்களை அகற்றுதல்
2. நீர் கட்டணம்
 குறைந்த விலையில் நீரினை வழங்குதல்
 கிராமிய மட்டங்களுக்கு புதிய திட்டங்களின் மூலம் நீரினை விநியோகம் செய்தல்
 கட்டிட வேலைகளுக்கு பௌசர்கள் மூலமாக நீர் விநியோகம் செய்தல்
3. வியாபார அனுமதிப்பத்திரங்களை விநியோகித்தல்
 அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்குள் வியாபார நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கல்
 சுற்றுச்சூழலியல் ரீதியில் பாதிப்பினை ஏற்படுத்தாத தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு அனுமதிப்பத்திரங்களை விநியோகித்தல்.
04 கட்டிட வேலைத்திட்டங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகித்தல்.
* தகைமையுடைய கட்டிடங்களுக்கான விண்ணப்ப படிவங்களை விநியோகித்தல்
* தகைமையற்ற கட்டிடங்களை தகைமையுடையதாக்கல் நடவடிக்கை
* கட்டிட வேலைத்திட்டங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகித்தல்
5. மின்சார வசதியை பெற்றுக்கொடுப்பதற்கான வரைபடங்கனை விநியோகித்தல்
* அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்குள் வரும் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கான மின்சார வசதியை பெற்று கொடுப்பதற்கான திட்ட வரைபடங்களை விநியோகித்தல்
* திட்ட வரைபட சான்றிதழ்களை வழங்குதல்.
6. சுகாதார செயற்பாடுகள்
*சுகாதார உத்தியோகத்தர்களை கொண்டு அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்குள் வரும் அனைத்து இடங்களையும் அலங்கரித்தல், சீர்படுத்தல்
*வடிகால்களையும் கால்வாய்களையும் சுத்தப்படுத்துதல்
7. பாதைகளைப் புனரமைத்தலும் சுத்தப்படுத்தலும்
* பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து வீதிகளையும் பிரதேச சபை ஊழியர்களை கொண்டு சுத்தப்படுத்துவதும் சீராக்கலும்
*பாதைகளை புனரமைத்தல்
8. கைத்தொழில்
* மாகாண சபை, பாராளுமன்ற அமைச்சர்களின் மூலமாக கிடைக்கப்பெறும் நிதியுதவிகளை கொண்டு கைத்தொழில் நடவடிக்கைகளை ஊக்குவித்தல்.
* குறிப்பிட்ட விதிகளுக்கிணங்க கைத்தொழில் நடவடிக்கைகளுக்கான குறிப்பிட்ட உதவிகளை வழங்குதல்
9. அபிவிருத்தி
*அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்துக்குள் அபிவிருத்தியை ஏற்படுத்துவதும் அதற்கான வழி வகைகளை கண்டு பிடித்து செயற்படுத்துதலும்
* அடையாளம் காணப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளல்.
10. சுகாதாரம் / சூழல் முகாமைத்துவம்
* பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் காணப்படும் குப்பைகளை அகற்றுதல் சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்க உதவுதல்
* அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
*சூழலியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களையும் இடங்களையும் பாதுகாத்தல்
* மலையக மக்களுக்கு பிரதேச சபையின் சேவையின் தேவை

மலையக மக்களுக்கு ஏன் இந்த உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் தேவைப்படுகின்றன என்பது பற்றி கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அப்போது தான் மக்கள் அந்த தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக தம்மை சார்ந்திருக்கும் அரசியல் தலைமைகளை வலியுறுத்துவர். இது சுருக்கமாக கீழே தரப்படுகின்றது.

பெருந்தோட்ட கைத்தொழில் வீழ்ச்சியடைந்து வருவதால் மலையக மக்களுக்கான சேவைகளை செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் தேவையாகின்றன. தோட்ட புறங்களில் துப்புரவு ஏற்பாடு மற்றும் ஏனைய மக்களின் சுகாதார சேவைகளை வழங்குவதில் பாரிய தொழிலாளர் பற்றாக்குறை காணப்படுவதால் உள்ளூராட்சி மன்றங்களின் தேவை உள்ளது.

தோட்ட நிருவாகத்தினால் பெருந்தோட்ட மக்களின் சேம நலனுக்கு மிகக் குறைந்த முதலீடே வழங்கப்படுகின்றமை. அதேபோன்று அண்மைக்காலங்களில் பல தோட்டங்களை நிருவாகங்கள் மற்றும் அரசாங்கம் என்பன கைவிடப்படும் நிலை தொடர்கின்றமை குறிப்பாக கண்டி பதுளை, மாத்தளை, கேகாலை போன்ற மாவட்டங்களில் தோட்டங்கள் கைவிடப்பட்டுள்ளமையால் மக்களின் மேற்குறிப்பிட்ட தேவைகளை நிறைவு செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. அதேபோன்று இன்றைய நிலையில் தோட்டத்தில் தொழில் செய்வோரின் அளவு மிகக் குறைவாக காணப்படுகின்றது.

மேலும் அரச தோட்டங்களில் உள்ள தொழிலாளர் நிலையும் பெரும் பிரச்சினைக்குரியதாக உள்ளது. இவர்களுக்கு எவ்வித சேம நலன்களும் நிருவாகத்தால் பெற்றுக்கொடுக்கப்படுவதில்லை. இதனால் இவர்களுக்கான சேம நலன்களை கருத்திற் கொண்டு உள்ளூராட்சி மன்றங்களின் சேவை தேவையாகவுள்ளது. எடுத்துக்காட்டாக  JEDB, SLSPCபோன்ற தோட்டங்களை குறிப்பிடலாம்.

அதேபோன்று மலையக மக்களுக்கு சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்காக பெருந்தோட்ட மனித அபிவிருத்தி பொறுப்பு சபை தாபிக்கப்பட்டது. எனினும் அண்மைக்காலத்தில் இது அரசியல் மயப்படுத்தப்பட்டமையால் அதன் சேவைகளும் செயலிழந்துள்ளமை.

மேலும் நுவரெலியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அரசியல் பிரதி நிதித்துவம் மலையக மக்களுக்கான பிரதி நிதித்துவம் குறைவாகவோ அல்லது பூச்சியமாகவோ உள்ளது. இதனால் நுவரெலியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் கூட ஏனைய பிரதேசங்களில் காணப்படவில்லை. குறிப்பாக காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை போன்ற மாவட்டங்களில் இந்நிலை காணப்படுகின்றது. அதனால் அபிவிருத்தி வேலைகளிலும் பாகுபாடு காணப்படுகின்றது.

இதற்கும் அப்பால் மலையக மக்களை பொறுத்தமட்டில் ஏனைய கிராம மக்களுக்கு காணப்படுவது போல மாற்று வருமான மூலங்கள் காணப்படவில்லை. குறிப்பாக தோட்ட மக்களுக்கு காணிகள் பெருமளவு காணப்படுவதில்லை.

மலையக மக்கள் ஏனைய சமூக வகுப்பினரை விட அதிகரித்த வறுமையில் வாழ்கின்றனர். இதனை கீழ் உள்ள அட்டவணையில் காணலாம்.
வறுமை நிலை (%) Household income and expenditure survey Report 2009 / 10
இலங்கை   8.9
நகரம் 7.9 6.7 5.3
கிராமம் 24.7 15.7 9.4
தோட்டம் 30 32 11.4
நுவரெலியா 22.6 33.8 7.6
நுவரெலியா 1995/96  32%

இதுவரை காலமும் மலையக மக்களுக்கு காணப்பட்ட பிரஜாவுரிமை பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளமையால் ஏனைய மக்களுக்கு கிடைக்க வேண்டிய சகல உரிமைகளும் சலுகைகளும் இவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் முன்பள்ளிக்கல்வி நிலையை உயர்த்த உள்ளூராட்சி மன்றங்கள் பாரிய பங்களிப்பை செய்கின்றன. மலையக மக்களை பொறுத்தமட்டில் பெரும்பாலும் தோட்ட நிருவாகத்தின் கீழேயே இக்கல்வியும் காணப்படுகின்றது. இதனை மாற்றியமைக்க உள்ளூராட்சி மன்றங்களின் சேவை இம்மக்களுக்கு தேவையாக உள்ளது.

சுகாதார நிலையை மேம்படுத்துவதில் உள்ளூராட்சி மன்றங்கள் பல சேவைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக டெங்கு பரவுவதை தடுத்தல் மலேரியா கழிவகற்றல் போன்ற செயற்பாடுகளை தோட்டப்புறங்களில் மேற்கொள்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் தேவை காணப்படுகின்றது.

அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்கள் தமது எல்லைக்குட்பட்ட பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பங்களிப்பு செய்கின்றன. இந்த அபிவிருத்திகளை தோட்ட மக்களும் பெற்றுக்கொள்ள இதன் சேவை தேவையாக உள்ளது.

அதேபோன்று தோட்டத்தின் அபிவிருத்திக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் தேவை உள்ளது.

இன்று நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக கழிவகற்றல் (Recycling) காணப்படுவதோடு இது தற்போது தோட்டப்புறங்களிலும் பிரச்சினையாக மாறியுள்ளது. தோட்டப்புறங்களின் கழிவுகள் பெரும்பாலும் ஆறுகளிலும் ஓடைகளிலும் கொட்டப்படுகின்ற நிலையே தொடர்கின்றது. இது இவர்களுக்கு மட்டுமன்றி ஒட்டு மொத்த இலங்கையருக்கும் ஒரு பிரச்சினையாக உருவெடுக்கலாம். எனவே இதனை குறைத்து கொள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தேவை உள்ளது.
இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு என்ன செய்ய முடியும் ?

* பிரதேச சபை சட்டத்தை திருத்தல்
* தோட்டங்களை கிராமங்களாக பிரகடனப்படுத்தல்
* நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபை எல்லைகளை மீள சீரமைத்து குறைந்த பட்சம் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக அம்பகமுவ மற்றும் நுவரெலியா என்பனவற்றை ஆறு செயலகப்பிரிவுகளாகவும் ஏனைய மூன்று செயலகங்களையும் ஆறு பிரிவுகளாகவும் பிரிக்க வேண்டும்.
* மிகப்பெரிய பரப்புக்களையும் சனத்தொகைகளையும் கொண்ட கிராம சேவையாளர் பிரிவுகளை இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் பின்பற்றுவது போன்ற முறைக்கு உட்படுத்தி பிரிக்க வேண்டும்.
* தற்போதைய நிலையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது சனத்தொகையையும் இடப்பரப்பையும் கருத்திற்கொண்டு விசேடமான அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணமாக ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் போன்றவற்றில் இவ்வாறான பிரதேசங்களுக்கு மேலதிகமான இரண்டு அல்லது மூன்று செயற்றிட்டங்களை வழங்குதல்
* ஒதுக்கீட்டு கொள்கைகள் (Reservation policies) நியாயமான பாரபட்ச கொள்கை (policy of positive discrimination)குறை தீர நடவடிக்கை (Affirimative action)ஒரு பக்க சார்பான கொள்கை (Partial policies)
* உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேசிய சபைகளை தாபித்தல்
* புதிய பிரதேச சபைகளை தாபித்தல்
* அரசியல் சீர்திருத்தம் மற்றும் அதிகார பிரிவு முறையை மேலும் வலுப்படுத்தல்
* தோட்ட முகாமைத்துவம் மற்றும் பிரதேச சபை இணைப்பு
* தோட்ட அபிவிருத்தி சங்கம் அமைத்தல்
* உட்கட்டுமாண வசதிகளை மேம்படுத்தல்
* இரு மொழிக்கொள்கை அமுலாக்கம்
* அரசாங்க அதிகாரிகளின் எண்ணப்பாங்கு மாற்றம்
* தோட்ட கிராமிய பிரதேச சபைகள்
* வாக்காளர் தொகையை அதிகரித்தல்
* இன விகிதாசாரத்தை பாதுகாத்தல்

இதற்கு அப்பால் புதிய அரசாங்கம் தனது நூறு நாள் வேலைத்திட்டத்தின் 73 ஆம் உறுப்புரையில் குறிப்பிட்டுள்ள மலையக மக்களுக்கான காணி வீட்டுரி மையை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளுக்கு மலையக அரசியல் தலைமைகள் கட்சி பேதமின்றி அணி திரண்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த நூறு நாட்களில் அனைவருக்கும் காணி வீட்டு உரிமையை பெற்றுக்கொடுக்க முடியாவிடினும் அதில் குறிப்பிட்டுள்ள ஒரு விடயத்தை நிவர்த்தி செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் தோட்ட நிருவாகத்தில் இருந்து விடுபட்ட உள்ளூராட்சி மன்ற கட்டமைப்புக்களுக்குள் உள்வாங்கக்கூடிய வகையான தோட்ட குடியிருப்புகள் என்பதை சாத்தியமாக்கி கொள்ள முடியும். கடந்த அரசாங்கத்தின் இறுதிக்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களின்

சேவைகளை தோட்டப்புற மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கான சட்டதிருத்ததிற்கும் உடன்பட்டிருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதனையேனும் சாதித்துக்கொள்ள மலையக தலைமைகள் முன்வர வேண்டும். இதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் தோட்டப்புற மக்களுக்கும் சென்றடைய வாய்ப்பு உள்ளது. இதுவே மலையக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி - வீரகேசரி


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates