Headlines News :
முகப்பு » » மலையக மக்களுக்கான “பசுமை பூமி” திட்டம் - பா.திருஞானம்

மலையக மக்களுக்கான “பசுமை பூமி” திட்டம் - பா.திருஞானம்


மனிதனின் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, உறையுள் என்பவற்றில் ஒரு தனி மனிதனின் இருப்பிடம் அவனது வாழும் உரிமையினை கட்டாயப்படுத்தி நிற்கின்றது. ஓர் அரசின் எல்லைக்குள் தான் நினைக்கும் எந்த ஓர் இடத்திலும் அவன் வாழ்வதற்கான உரிமை உண்டு. ஆனால் இவ்வுரிமை தோட்ட மக்களின் வாழ்கையில் முழுமையாகக் கிடைக்கின்றதா? என்று கேட்டால் அது கேள்விக் குறியாகவே உள்ளது.

தோட்ட மக்களின் வாழ்க்கை வரலாற்றுப் பாதை மலர்கள் தூவிய பாதையல்ல. கரடு முரடான கற்கள், முட்கள் நிறைந்த பாதையாகும்.1815ஆம் ஆண்டு காலப்பகு தியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த இவர்கள் தேயிலை, தென்னை, இறப்பர் போன்ற பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர். அக்காலப்பகுதியில் அனைத்து தோட்டங்களிலும் லயன் காம்பிராக்களே காணப்பட்டன. இது 10 x 12 காம்பிராவும் ஒரு குசினியும் ஒரு வராந்தாவும் கொண்டது. இதுவே இவர்களின் காணியாகவும், வீடாகவும் இருந்து வந்தது.

இவ்வாறான நிலையிலேயே மலையக மக்கள் தற்போதும் 460 தோட்டங்களில் காணி உரிமை, வீட்டு உரிமை மற்றும் முகவரி அற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்த 200 ஆண்டு காலப்பகுதியில் தோட்ட மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இடைப்பட்ட காலப்பகுதியில் பல அரசியல் மாற்றங்களினால் நாடற்றவர்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இந்தியா சென்றவர்களும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். பிரித்தானிய அரசாங்கத்தினால் முற்றிலும் அடிமைகளாக அழைத்து வரப்பட்ட தோட்ட மக்கள், இன்னமும் அதே நிலையில் வாழ்ந்து வருகின்றமை வேதனைக்குரியது.

1985 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த அரசாங்கம் நாடற்ற மலையக மக்களுக்கு ஒரு சத்தியக் கடதாசியை வழங்கியதன் மூலம் இலங்கையர் என்ற பிரஜா உரிமையை வழங்கியது. அதனூடாகவே தற்போது தோட்ட மக்கள் இலங்கையர் என்ற அந்தஸ்தைப் பெற்றனர். அன்றிலிருந்தே தோட்ட மக்களின் காணி, வீட்டு உரிமைபற்றி பேசப்பட்டு வருகின்றது.

ஆரம்ப காலத்தில் பெருந்தோட்டக் காணிகள் அனைத்தும் அரசின் பொறுப்பிலேயே காணப்பட்டன. இக்காணிகளில் விவசாயத்திற்கு உதவாத ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே தொழிலாளர்களுக்கான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சில குடியிருப்புகள் மிக நீண்ட தூரத்தில் தொழிலாளர்கள் வேலைக்கு தேயிலைமலைகளுக்கு செல்லக்கூடிய வசதிக்கு ஏற்ப அமைக்கப்பட்டன. 1992ஆம் ஆண்டிலிருந்து இக்காணிகள் சுமார் 23 கம்பனிகளுக்கும் அரச பெருந்தோட்டம் (SLPC), மக்கள் பெருந் தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) போன்ற வற்றின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இலங்கையில் காணப்படும் பெரும்பாலான காணிகள் தனியார் வசமே உள்ளன. ஆனால் பெருந் தோட்டங்களை பொறுத்தவரையில் 80% காணிகள் அரசாங்கத்திற்கு சொந்தமானது. இந்நிலையில் தோட்ட மக்களுக்கு கடந்த அரசாங்கங்கள் காணி உரிமையை முறையாகப் பெற்றுக் கொடுக்காதது வேதனைக்குரிய விடயமாகும்.

இன்றும் தோட்டத் தொழிலாளர்களின் அடிமை சின்னமாக லயன் குடியிருப்புக்கள் காணப்படுவது வேதனைக்குரிய விடயமாகும் இந்நிலையில் சுமார் 200 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இவர்கள் இப்பிரதேசத்திலேயே வாழ்ந்து வரும் வேளையில் அவர்களுக்கெனக் காணி உரிமை வழங்கப்படவில்லை.

மலையகத் தோட்டப் புறங்களில் 1.5 மில்லியன் தோட்ட மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஒரு வீட்டில் 05 பேர் கொண்ட குடும்பம் என்று எடுத்தால் சுமார் 3,00,000 வீடுகளுடன் காணி தேவை. தற்போது இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றில் வீடு உள்ளவர்களை கழித்து தற்போதைக்கு 1,85,000 வீடுகள் தேவை. அண்மைக்காலமாக மலையகத்தில் பல வீடமைப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் 07 பேர்ச் காணி, மாடி வீட்டுத் திட்டம், இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படும் கிராம வீடமைப்புத் திட்டம், தோட்ட வீடமைப்புத் திட்டம் போன்றவை நடைமுறையில் காணப்பட்டாலும், கடந்த அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்ட 7 பேர்ச் வீட்டுத்திட்டம் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளது. வீடுகள் நெருக்கமாக உள்ளதால் மக்களின் ஏனைய தேவைகளுக்கு போதிய இடமில்லை.

ஒரு வீட்டின் கழிவுகள் இன்னொரு வீட்டுக்குச் செல்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு, மண்சரிவு அபாயங்களில் ஒரு வீடு இன்னொரு வீட்டில் விழுகின்றமை. இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்கால மண் சரிவுகளின் போது அதிகமாகவே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. வீடுகள் கட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபை ஒரு தொகை பணத்தையும், தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியை அடைமானமாக வைத்து ஒரு தொகை பணமும் வழங்கப்பட்டு வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணம் முறையாக மக்களிடம் போய் சேராத தினால் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான வீடுகள் பூர்த்தியாகாமல் காணப்படுகின் றன. இந்த மக்கள் தங்கள் சொந்தப் பணத் தில் இன்னொருவரின் காணியில் வீடுகளை அமைக்கின்றார்கள். வீட்டு உரிமை இருந்தாலும் அவரகளுக்கான காணி உரிமை கிடைக்குமா? என்பதுதான் கேள்விக் குறியாக இருக்கிறது.

தற்போது நடைமுறையில் காணப்படும் வீடமைப்புத் திட்டங்கள் சுய உதவி வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக சேமலாப நிதியை பிணையாகக் கொண்ட கடன் ஊடாக அமைக்கப்படுகின்றன. சில வங்கி உதவிகளுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. அதே வேளை உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி, மத்திய வங்கி, அரச முதலீட்டு வங்கி கடன், பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம், தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் அரச சார்பாற்ற நிறுவனங்கள் மூலமாகவும் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் தற்காலிக கூடாரங்களில் 25,000 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலைமை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு இக்காணி உரிமை கிடைக்காதது வேதனைக்குரிய விடயமாகும். தோட்டங்களினாலும் அரசாங்கத்தினாலும் உரித்துடன் காணிகள் வழங்கி இலவசமாக வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டிய நிலையில் இவ்வாறு செயற்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.

கம்பனித் தோட்டங்களில் ஓரளவு இவ்வாறான வீடமைப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவை முறையாக இடம்பெறவில்லை. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சில தோட்டங்களில் இவர்களுக்கான காணித்துண்டுகள் ஒதுக்கபட்ட போதும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை. சில இடங்களில் காணி த்துண்டுகள் ஒதுக்கப்படவும் இல்லை. அவ்வாறு வழங்கினாலும் போதிய வசதி உள்ள இடமாக இல்லை.

கட்டப்பட்ட வீட்டை சுற்றி போதிய வசதி இல்லாமையால் இவற்றின் ஏனைய தேவைகளை செய்து கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது. அத்துடன் மின்சாரம், நீர் போன்றவை கிடைக்கப்பெறவும் இல்லை. ஸ்ரீலங்கா பெருந்தோட்ட யாக்கம் (SPC), மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) போன்றவற்றில் இச்செயற்பாடுகள் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றன. லயன் குடியிருப்புகளுக்கு கூட 100 வருடங்களாக தகரங்கள் மாற்றப்படாத நிலையில் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவர்களுக்கும் முறையாகக் காணி உரித்துடன் காணிகள் வழங்கவும் கிராம திட்டத்தின் கீழ் தனித்தனி வீடுகள் அமைக்க ஏற்பாடுகள் தேவை.

தோட்டங்களில் வேலை செய்து ஒய்வு பெற்றோருக்கும் படித்துவிட்டு உயர் தொழிலுக்காக எதிர்பார்த்து இருப்போருக்கும், நோயாளர்களுக்கும், வலது குறைந்தோருக்கும், தோட்டத்தில் இருந்து கொண்டு வெளியில் வேலை செய்பவர்களுக்கும் வீடுகளோ காணிகளோ கிடைப்பதில்லை.

கேட்டால் தோட்டத்தில் வேலை இல்லை என்கின்றார்கள். அவ்வாறாயின் இவர்களின் வீட்டு உரிமை, காணி உரிமை சம்பந்தமான பிரச்சினை எப்போது தீரும். அதேபோல் தோட்ட சேவையாளர்களுக்கும் இந்நிலைமையே. அவர்களின் தோட்ட சேவைக் காலம் முடிந்ததும் தோட்டத்தை விட்டு சென்றுவிட வேண்டும். இவ்வாறு மலையகம் சார்ந்த மக்கள் தங்களது காணி உரிமையையும் வீட்டு உரிமையையும் பெற்றுக்கொள்ள பல இன்னல்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைக்கு புதிய அரசாங்கம் முன்வைத்துள்ள நடவடிக்கை தான் என்ன? தோட்ட மக்களுக்கும் ஏனைய மக்களுக்குப் போல் தங்களது முகவரியை தடம்பதித்துக் கொள்ள எடுத்த முயற்சிதான் என்ன? இலங்கையில் உள்ள ஒவ்வொருவருக்கும் கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டுமானால் விலாசமும் வீட்டு இலக்கமும் இருக்கின்றது. ஆனால் தோட்ட மக்களுக்கு இல்லை. இந்த நிலையில் தோட்ட மக்களின் முகவரி தொடர்பாக நல்லாட்சியில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தான் என்ன?

மலையக மக்களின் காணி உரிமையை யும் தனி வீட்டு உரிமையையும் மையப் படுத்தி அந்தந்தச்சந்தர்ப்பங்களில் பலர் பல வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளனர். அந்தவகையில் இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தன 1977ஆம் ஆண்டு தோட்ட மக்களின் 7 பேர்ச் காணி தனி வீட்டுத்திட்டத்தை முன்னெடுத்தார்.

அதனை தொடர்ந்து காமினி திசாநாயக, 2ஆவது நிறைவேற்று ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவும் காணி உரிமையுடன் மலையக மக்களின் வீட்டு உரிமை தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தனர் நுவரெலியாவில் அதற்கான உரித்து வழங்கும் நிகழ்வினையும் நடத்தினார். அச்சந்தர்ப்பத்தில் அமைச்சராக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமான் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இருந்தும் காணி உரித்துடன் தனி வீட்டுத்திட்டம் வெற்றியளித்ததாக இருக்கவில்லை.

மலையக வரலாற்றில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் மலையகத்தின் தோட்ட மக்களுக்கு தனி வீடும், காணியும் என்ற செயற்பாட்டிற்கு அமைய பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி தற்போது மலையகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இருந்தும் இந்த வீடுகளுக்கும், காணிகளுக்கும் உரித்துகளை வழங்குவதில் பல சிக்கல்கள் காணப்பட்டன. தற்போதும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மூலம் தனி வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 2ஆவது நிறைவேற்று ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, 3ஆவது ஜனாதிபதி டீ.பி. விஜயதுங்க, 4ஆவது ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க ஆகியோருடன் இணைந்து மலையக மக்களின் காணி, வீட்டு உரிமை, தொடர்பில் குரல் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

1995ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது 4ஆவது ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க ஆட்சி அமைப்பதற்கு எத்தனித்தபோது குறைவாக இருந்த ஆசனத்தை பெரும் நோக்கில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஸ்தாபகருமான பெரியசாமி சந்திரசேகரனை நாடியபோது அவரின் கனவாக இருந்த மலையக மக்களின் கிராம செயற்றிட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததிற்கு இணங்க அரசாங்கத்துடன் இணைந்து மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கும், காணிப்பிரச்சினைக்கும் முடிவு கட்டுமுகமாக 7 பேர்ச் காணியுடன் கிராம வீடமைப் புத் திட்டங்களை அமுல்படுத்தினார்.

தொடர்ந்து வந்த 5ஆவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆரம்பகால கட்டங்களில் இத்திட்டத்திற்கு ஆதரவளித்த அதேநேரம், மலையக மக்களின் காணியுடன் கூடிய வீடு என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போது அதற்கு அவர், தனி வீடு இல்லை மாடி வீடுதான் தீர்வு என்று கூறினார். ஏற்கனவே மாடி வீடுகள் மலையகத்தில் அமைக்கப்பட்ட போதும் அவை வெற்றி அளித்ததாக இல்லை. இச்சந்தர்ப்பத்தில் மலையக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் வாதப்பிரதிவாதங்கள் வெடித்தன.

இச்சந்தர்ப்பத்தில் பூனாகல மீரியபெத்த பிரதேசத்தில் பாரிய மண்சரிவேற்பட்டு 77 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு சுமார் 37 பேர் மண்ணுடன் புதைந்து மாய்ந்தனர். இதன் பின்னர் உலகளாவிய ரீதியில் மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினை பேசப்பட்டது. அரசியல்வாதிகளின் பேச்சுகளுக்கு அப்பால் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு காணியுடன் தனி வீடு தேவை என்பதை ஞாபகப்படுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், மஹிந்த அரசோ அதன்பால் செவிமடுக்கவில்லை. இந்நிலையில் 6ஆவது ஜனாதிபதிக்கான தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் மலையக கட்சிகளில் ஒருசிலர் மஹிந்த அரசுடன் இணைந்து மஹிந்தவின் செயற்றிட்டத்திற்கும் பலர் மஹிந்தவிடமிருந்து விலகி மைத்திரியுடன் இணைந்து காணி உரித்துடன் மலையக மக்களுக்கு தனி வீட்டுத்திட்டத்தை நாடினர்.

அதன்படி மைத்திரி அரசு வெற்றி பெற்றதினால் இன்று மலையகத்தில் காணி உரித்துடன் தனிவீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்த சகல நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, பூனாகலை மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்கு காணி உரித்து டன் தனி வீட்டுத்திட்டம் இலவசமாக நடை முறைப்படுத்தப்பட்டு அடிக்கல் நாட்டப் பட்டு வேலைத்திட்டம் செயற்படுத் தப்பட் டும் வருகின்றது. அது மட்டுமல்லாது, மலைகத்தில் பல்வேறுபட்ட இடங்களில் காணி யுடன் தனிவீட்டுக்கான அடிக்கல் நாட்டப்படுகின்றன.

இந்த நிலையிலேயே மலையக மக்களுக்கான பசுமை பூமி திட்டம் தொடர்பான பேச்சுக்கள் வலுவடையத் தொடங்கின. ஏற்கெனவே கடந்த காலங்களில் மலையகத்தில் இவ்வாரான பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அவ்வாரான திட்டங்கள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்படாமையினால் அவை வெற்றியளிக்க வில்லை.

எனவே இந்த பசுமை பூமித்திட்டம் வெற்றியளிக்குமா? என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழாமலில்லை. இருந்த போதிலும் இந்த புதிய அரசாங்கத்தின் மீது மலையக மக்கள் மாத்திரமின்றி அனைத்து பிரிவினரும் சற்று நம்பிக்கை வைத்திருப்பதை காணமுடிகிறது.

மக்கள் இந்த அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் இவ் அரசு செயற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மலையக மக்களுக்கு காணி உரிமையு டன் வீடுகள் அமைக்கப்பட்டு அவர்களும் கிராம எழுச்சி திட்டத்தில் உள்வாங்கப்பட்டு அவர்கள் வாழும் வீட்டு, பாதைகளுக்கு பெயர், வீட்டுக்கு இலக்கம் இடப்பட்டு, கடிதங்கள் அனுப்பினால் குறித்த நபருக்கே கடிதம் கிடைக்கும் முகவரி உருவாக்கப்பட
வேண்டும். அவ்வாறு ஏற்பட்டால் அது நல் லாட்சியில் மலையக மக்களுக்கு கிடைத்த முகவரியாக கருதலாம்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates