Headlines News :
முகப்பு » , » மலையக தமிழர்கள் சார்பாக 16 பேர் பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் - லோறன்ஸ்

மலையக தமிழர்கள் சார்பாக 16 பேர் பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் - லோறன்ஸ்


இலங்கையின் சனத் தொகைக்கு ஏற்ப மலையக தமிழர்கள் சார்பாக குறைந்தது 16 உறுப்பினர்களாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டும். அதற்கான சூழலும் உருவாக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ் தெரிவித்தார்.

19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் கூட்டமொன்றை அட்டன் மலையகம் ஆய்வகம் அட்டன் – டிக்கோயா நகர சபை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. முன்னாள் கல்விப் பணிப்பாளர் கே.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாட லில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மலையகத் தமிழ் மக்கள் இந்நாட்டில் கிட்டத்தட்ட 200 வருடங்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும், நாடு சுதந்திரமடைந்த பின்னர் குறிப்பாக 1970ஆம் ஆண்டு வரை, அரசியல் பிரதிநிதித்துவம், நிர்வாக ரீதி யான ஏற்பாடுகள் முறையாக வழங்கப்படவில்லை. தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கான தேர்தல் தொகுதிகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், மாவட்டச் செயல கங்கள், பிரதேச செயலகங்கள், கிராம சேவகர் பிரிவுகள் அனைத்தும் அவர்களின் சனத்தொகை மற்றும் புவியியல் பிரதேசத்துக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கள மக்களுக்கு நூற்றுக் கணக்கான தேர்தல் தொகுதிகளும், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களும் காணப்படுகின்றன. அது போலவே, வட கிழக்குத் தமிழர்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் அவர்களின் சனத்தொகை செறிவுக்கு ஏற்ப உள்ளன. ஆனால், சுமார் 15 இலட்சம் மலையகத் தமிழ் மக்களுக்கு அவர்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களது சனத் தொகைக்கு ஏற்ப புவியி யல் அடிப்படையில் அரசியல் பிரதிநிதித்து வம் ஏற்படுத்தப்படவில்லை.

1947ஆம் ஆண்டு தேர்தலில் 101 உறுப்பினர்களைக் கொண்டிருந்த அன்றைய பாராளுமன்றத்தில் எமக்கு 8 உறுப்பினர்கள் இருந்தார்கள். இன்று அந்த நிலைமை இல்லாது போய்விட்டது. 225 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இன்றைய பாராளுமன்றத்தில் 2015இல் 7 பேர் மாத்திரமே இருக்கின்றார் கள். இன்று எமக்குள்ள சனத் தொகைக்கு ஏற்ப ஆகக் குறைந்தது 16 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.

1947இல் இருந்த 95 தேர்தல் தொகுதிக ளில் நுவரெலியா மாவட்டத்தில் 4 தொகுதி களும், பதுளையில் 2 தொகுதிகளும், கண்டியில் 2 தொகுதிகளும், மொத்தமாக 8 தேர் தல் தொகுதிகள் காணப்பட்டன. இன்றைய சனத்தொகை அதிகரிப்பில் 1947 இல் 8 ஆக இருந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்று 16 ஆக உயர்ந்திருக்க வேண்டும். அதேநேரம், கண்டியிலும், பதுளையிலும் அன்று இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்க ளைத் தெரிவு செய்த நிலைமை இன்று காணப்பட வேண்டும். இன்று 160 தேர்தல் தொகுதிகள் காணப்பட்டாலும் 3 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட நுவரெலியா – மஸ்கெலியா தேர் தல் தொகுதி ஒன்று மாத்திரமே இருக்கின்றது.

இலங்கையில் காணப்படும் 22 தேர்தல் மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவனவாகவும், ஏனைய 5 மாவட்டங்கள் வடகிழக்கில் தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவனவாகவும் அமைந்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் மலையகத் தமிழ் மக்கள் கூடுதலாக வாழ்ந்தாலும் அவர்களுக்கென ஒரு தேர்தல் மாவட்டம் கிடையாது. வடகிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு 24 தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன. மொத்தமாக உள்ள 160 தொகுதிகளில் மலையகத் தமிழ் மக்களுக்கென நுவரெலியா – மஸ்கெலியா தொகுதி மாத்திரமே உள்ளது.

இப்போதுள்ள தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 196 பாராளுமன்ற உறுப்பினர்களில் மலையகத் தமிழ் மக்கள் சார்பாக 5 பேரும், 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் 2 பேரும் மாத்திரமே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். நாடு முழுவதிலும் உள்ள 560 மாகாண சபை உறுப்பினர்களில் மலையகத் தமிழ் மக்கள் சார்பாக மத்திய மாகாணத்தில் 14 பேரும், ஊவா மாகாணத்தில் 5 பேரும், சப்பிரகமுவ மாகாணத்தில் 2 பேரும், மேல் மாகாணத்தில் 2 பேருமாக மொத்தம் 23 பேர் மாத்திரமே இருக்கின்றார்கள். இந்தத் தொகை 30 – 35 ஆக இருக்க வேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்கள் மொத்தமாக 335 இருக்கின்றன. அவற்றில் உள்ள 271 பிரதேச சபைகளில் அம்பகமுவ, நுவரெலியா பிரதேச சபைகள் மாத்திரமே மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. 43 நகர சபைகளில் அட்டன் – டிக்கோயா நகர சபை மாத்திரமே மலையகத் தமிழ்ப் பரதிநிதித்துவதுடன் காணப்படுகின்றது. 23 மாநகர சபைகளில் ஒன்று கூட மலையக மக்களுக்கு இல்லை.

தற்போது தேர்தல் தொடர்பான யாப்புச் சீர்த்திருத்தங்கள் பற்றி வெகுவாக சிலாகிக் கப்பட்டு வருகின்றன. தொகுதிவாரியாகவும், விகிதாசார ரீதியாகவும் கலப்புத் தேர்தல் முறை பற்றிப் பேசப்பட்டு வருகின்றன. அதேநேரம், இப்போதுள்ள 225 பாராளு மன்ற உறுப்பினர்களின் தொகையை 250 ஆகா அதிகரிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. எந்தத் தேர்தல் முறை வந்தா லும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்து வத்துவம் காக்கப்பட வேண்டும். இன ரீதியான நியாயம் கிடைக்க வேண்டும். இது தொடர்பாக சமூக ஆர்வலர்களைத் திரட்டி மக்களுக்குத் தெளிவை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates