Headlines News :
முகப்பு » » முக்கியத்துவம் பெற்றுள்ள மலையக மக்களின் வாக்குகள் - சிலாபம் திண்ணனூரான்

முக்கியத்துவம் பெற்றுள்ள மலையக மக்களின் வாக்குகள் - சிலாபம் திண்ணனூரான்


மலையக மக்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அச்சமூகத்தின் தலைவிதியை மாற்றியுள்ளவர்கள் கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த தியாகிகளேயாவர். அவர்களின் உயிர்த்தியாகமே இன்று மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினை பற்றி அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. மலையக பிரதிநிதிகளை மட்டுமல்லாது தேசிய அரசியல்வாதிகளையும் மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினை பற்றி பேச வைத்து ள்ளது.

இப்பிரச்சினை தேர்தல்கால வாக்குகளுக்காக பேசப்பட்டு, தேர்தலின் பின்னர் மறக்கப்பட்டால் எதிர்கால அரசியல் களத்தில் பெரும் சிக்கல்களை மலையக பிரதிநிதிகள் எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மலையகத்தின் இளம் சமூகம் இன்று தெளிவான நிலையில் விழிப்படைந்துள்ளது.

இவ்விழிப்புக்கு அறைகூவியவர்கள் யார்? மலையகப் பிரதிநிதிகளோ, தொழிற் சங்கவாதிகளோ அல்ல. அக்டோபர் 29 மண்ணுக்குள் புதையுண்ட தியாகிகளேயாவர்.

மலையகத்தின் புதிய இளம் தலைமுறையை விழிப்படைய வைத்த அத்தோழர்களை நாம் கண்ணியப்படுத்தும் வகையில் மலையக சமூகம் அக்டோபர் 29ஆம் திகதியை மலையகப் பாட்டாளி வர்க்கத்தின் தியாகிகள் தினமாக அங்கீகரிக்க வேண்டும்.

1922 அக்டோபர் மாதத்தில் லெனின் பாட்டாளி வர்க்கத்தை நோக்கி ''புதுமை சேர் நமது உலகை அமைப்போம். எதுவுமற்றிருந்தார் எல்லாம் ஆவார்'' என்றார். இவ்வார்த்தைகள் இன்று மலையக பாட்டாளி வர்க்கத்திற்கும் சொந்தமாகிவிட்டன. ஆட்சி அதிகாரங்களால் கடந்த காலத்தில் மலையக சமூகம் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டுள்ளது. மீண்டும் கற்றுக்கொள்ள இயலாத வகையில் மலையக சமூகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலையொட்டி மலையக அரசியலில் பெரும் சதுரங்கம் இடம்பெறுகிறது. இத்தேர்தல் மலையக மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்துக்கான தேர்தலாக அமைய வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளதை மறந்து விட முடியாது. தேர்தல் காலங்களில் வழங்கப்படும் உறுதிமொழிகள் ஆட்சிப் பொறுப்பை கையில் எடுத்ததும் மறந்து போவது காலங்காலமாக இடம்பெற்று வருகிறது. மலையக சமூகம் வளமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதில் அவர்கள் பெருமைப்படுவதில்லை.

இந்நாட்டில் 1977களுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட மக்களாட்சிகளில் பங்கா ளர்களாக மலையகத் தொழிலாளர்கள் இருந்து வந்துள்ளனர். ஆனாலும் அவர்கள் ஏமாற்றப்பட்ட சமூகமாகவே இருக்கின்றனர். தொடர்ந்தும் இந்த நிலைமையை அவர்கள் விரும்பவில்லை.

இன்று மலையக சமூகத்தின் காணி, வீட்டு உரிமைகள் பற்றி அனைவராலும் தேர்தல் மேடைகளில் பேசப்படுகின்றன. இதுவும் தேர்தல் காலத்தின் மற்றுமொரு நாடகமா என மக்கள் சந்தேகிக்கின்றனர். அவர்கள் சந்தேகப்படுவதில் நியாயம் உள்ளது. எதைச் சொல்லி இம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலையிலேயே இந்த கட்சித்தலைவர்கள் உள்ளனர்.

இந்த நிலையிலே 'மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி' என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் 15ஆம் அத்தியாயத்தில் உறை யுள் பகுதியில் மலையகத்தில் தோட்டப் பகுதியிலுள்ள அனைத்து குடும்பங்க ளுக்கும் 7 பேர்ச்சஸ் காணியும் வீடும் அமைத்துக் கொடுக்கப்படும். அத்துடன் 2015 – 2016ஆம் ஆண்டில் தோட்டப் பகுதியில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த சிந்தனை புதியதோர் இலங்கை' கொள்கைப் பிரகடனத்திலும், 2010 ஜனாதிபதித் தேர்தல் 'மஹிந்த சிந்தனை தொலைநோக்கு' கொள்கை பிரகடனத்திலும், 2014இன் வரவு  செலவுத்திட்ட அறிக்கை யிலும் ஜனாதிபதி மஹிந்தவால் மலையக சமூகத்திற்கான காணி, வீட்டுரிமை பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனமான 'மாற்றத்தை நோக்கி ஒன்றிணைவோம்' என்ற விளக்க நூலின் 6ஆம் பக்கத்தில் 74ஆம் வேலைத்திட்டமாக மலையக மக்களது வாழ்வாதார கட்டமைப்பு கல்வி, உயர்கல்வி, கலாசார, சுகாதார, பொது வசதிகள் சம்பந்தமாக நிர்வாக அமைப்புக்கள் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டு, அரச சேவைகள் அம்மக்களுக்கு நேரடியாக கிடைக்க ஆவன செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும், கல்வி பொதுத்தராதர பரீட்சைக்கான விஞ்ஞா னம், கணிதம், ஆங்கிலம் கற்பிக்கக் கூடிய விசேட பாடசாலைகள் மலையகத்தில் உருவாக்குதல் போன்றவை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

73ஆம் வேலைத்திட்டத்தில் வீடு, காணி உரிமைப் பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது. மலையக மக்களை தற்போதைய லயன் வாழ்க்கையிலிருந்து மீட்டெடுத்து காணி உரிமையுடன் கூடிய சகல வசதிகளும் கொண்ட நவீன கிராமிய சூழலில் தனி வீடுகளும், பொது வசதிகளும் அமைத்து கொடுப்பதுடன் இத்திட்டம் முழுமையாக தோட்ட நிர்வாகத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் பிரதேச சபைகளின் மூலம் சேவைகளை பெறக்கூடியவாறு உருவாக்கிக் கொடுக்கப்படும் என்று தமிழ் மொழி மூலமான பிரதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தின் புதிய தலைமுறையினர் இன்று புதிய பயணத்தில் இறங்கியுள்ள வேளையில் ஆளுங்கட்சி வேட்பாளரும் பொது எதிரணி வேட்பாளரும் மலையக மக்களின் அவசியம், தேவைகள் பற்றி தமது விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளனர்.

2025ஆம் ஆண்டளவில் ஒடுக்கப்பட்ட சமூகம் என வர்ணிக்கப்பட்டு வரும் மலையக சமூகம் அறிவு சார் சமூகமாகவும், அதிக பட்டதாரிகளைக் கொண்ட சமூகமாகவும் மாற்றம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நாட்டின் நல்லாட்சிக்கு மலையக சமூகத்தினரை வாக்களிக்குமாறு ஆளும் கட்சி மற்றும் பொது எதிரணி வேட்பாளர்கள் அழைப்பு விடுப்பதை நாம் பெரும் கவனத்துடன் பார்வையிடல் அவசியம். இது தேர்தல் கால அங்கீகாரமா அல்லது சமூகத்தின் விடிவுக்காக எழுந்து நில்லுங்கள் என்ற தகவலை வழங்குகின்றனரோ தெரியவில்லை.

இத்தேர்தல் மூலம் பாட்டாளி வர்க்கத்தில் வீட்டு உரிமை, காணி உரிமை, கல்வி, சுகாதாரம், அரச நிர்வாகம், மலையகப் பல்கலைக்கழகம் என அனைத்து பிரிவுகளிலும் நீதி, நியாயம் கிடைக்க வேண்டும். இத்தேர்தலின் பின்னர் இவை கள் நிறைவேறுமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சமூகத்தின் புதிய வரலாறு எழுதப்பட வேண்டும். இத்தேர்தல் பிரசார காலத்தின் பின்னர் இச்சமூக பிரதிநிதிகள் இன்று கூறும் வாக்குறுதிகளை மக்களுக்கு பெற்றுத்தர முன்வர வேண்டும். கடந்த காலங்களில் இச்சமூகம் கற்றுக் கொண்ட பாடங்களே இன்று புதிய தலைமுறை யினரை எழுப்பி விட்டுள்ளது. தவறு செய்தால் திருத்திக்கொள்வோம். முடியா விட்டால் கற்றுக்கொள்வோம். கடமையை நிறைவேற்றுங்கள் என தோழர் லெனின் 1918இல் கூறியது இன்றைய மலையக புதிய தலைமுறையினருக்கு நல்லதோர் தத்துவமாகும். மலையகப் பிரதிநிதிகளுக் கும்தான். 

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates