Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

இலங்கை மலையகத்தமிழர் தொடரும் அடிமை வாழ்வு - இளைய அப்துல்லாஹ்

நூல் - இனத்துவ முரண்பாடும் மலையக மக்களும்
(கட்டுரைகள்) தொகுப்பு - தை. தனராஜ்,  ஏ. எஸ். சந்திரபோஸ்
வெளியீடு - அமரர்.  இர. சிவலிங்கம் ஞாபகார்த்த குழு மெனிங்டவுன்,  மங்களறோட்,  கொழும்பு-8விலை - 200. 00 (இலங்கை ரூபாய்) பக்கம் - 260

இறப்பர் மரமானேன் நாலு பக்கம் வாதுமானேன் எரிக்க விறகுமானேன் இங்கிலீஸ்காரனுக்கு ஏறிப்போக காரானேன் என்பது இலங்கை மலையக நாட்டார்பாடலில் பிரபல்யமான பாடலாகும்.  தனது வேதனையை அவலத்தை மலையக தொழிலாளி இப்படி பாடுகிறார். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஆங்கிலேயர்களால் கூலிகளாக அடிமைகளாக கொண்டு வரப்பட்ட தமிழர்கள் இருநூறு வருடங்கள் கழிந்த பின்னும் அதே அவலப்பட்ட வாழ்வுதான் வாழ்கிறார்கள்.

சனி ஞாயிறு நாட்களில் நாவலப்பிட்டி,  ஹட்டன்,  கண்டி போன்ற மலையக நகரங்களுக்கு போனால் மலைத்தோட்டங்களில் இருந்து டவுண் பகுதிக்கு சாமான்கள் வாங்க வரும்பொழுது அவர்களை காணலாம்.  ஏழைத்தொழிலாளர்கள் என்ற அவலம் அவர்கள் முகங்களில் நிரந்தரமாக எழுதியிருப்பதை பார்க்கலாம்.  அது சிங்கள அரசியல்வாதிகளால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுக்கொண்டே வருகிறது.

யாழ்ப்பாணத்தில் தமிழர் இயக்கங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய போதெல்லாம் ஒன்றுமறியாத மலையக தமிழர்கள்@ தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக சிங்களவர்களால் தாக்கப்பட்டார்கள்.  அவர்களது ஏழைக்குடிசைகள் எரிக்கப்பட்டன.  ஆனால் யாழ்ப்பாண தமிழர்கள் இன்றும் ~தோட்டக்காட்டான்| என்றுதான் அவர்களை அழைக்கிறார்கள் அதுதான் முரண்.

அமரர். இர. சிவலிங்கம் ஞாபகார்த்த குழு,  மலையக மக்கள் தொடர்பான மிக முக்கியமான பணியை ஆய்வு ரீதியாக செய்திருக்கிறது. இரத்தினபுரி மாவட்டத்தில் மலையகத்தமிழருக்கு எதிரான வன்முறைகள்,  1983 கறுப்பு  ஜூலை வன்முறைகள் பதுளை மாவட்ட மலையக தமிழ் மக்களின் கல்வியில் ஏற்படுத்திய தாக்கங்கள்,  மலையக கல்வி அபிவிருத்தியில் இன முரண்பாடுகளின் தாக்கம்,  மலையக நாட்டார்பாடல்கள், பெருந்தோட்ட காணிப்பங்கீட்டில் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான பாதிப்பு, இன ஒடுக்குமுறையும் இந்திய வம்சாவளித்தமிழர்களின் இனத்துவ அடையாளங்களும்,  இலங்கை பாராளுமன்றத்தில் மலையக தமிழரின் பிரதிநிதித்துவம்,  இலங்கையின் மக்கள் தொகைப்பரம்பலில் மலையக தமிழர்களின் பரம்பலும் முரண்பாடுகளும், மலையக பெண்களின் பொருளாதார அபிவிருத்தியில் இன முரண்பாட்டின் தாக்கம்.  என மலையக மக்களின் மிக முக்கியமான பிரச்சனைகள் தொடர்பாக இந்நூலின் கட்டுரைகளில் ஆராயப்படுகின்றன. சு. விஜயகுமார், மூ. சந்திரகுமார், ஆ. கலையரசு, சு.  அமிர்தலிங்கம், வெ.  கணேசலிங்கம், பெ. சரவணகுமார், அ. சண்முகவடிவு, சி. புஸ்பராஜ். ரெ. புனிதா, நான்ஸி, க. விஜயசாந்தினி, பெ. ராமகிருஸ்ணன், பா. பானுமீரா, ப. ஷோபா, த. விமலேஸ்வரி ஆகியோர் இந்தத்தொகுப்பில் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சனையை நாடுதழுவிய ரீதியில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான இனத்துவேசத்தை ஊட்டி வளர்க்க பயன்படுத்தியது.   அதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் மலையக தமிழர்கள்.  அவர்களுக்கும் போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இருக்காது.  ஆனால் 1979 ஜூலைமாதம் கொண்டுவரப்பட்ட தற்காலிக பயங்கரவாத தடைச்சட்டம் பின்னர் 1982 ஆம் ஆண்டு நிரந்தர சட்டமாக்கப்பட்தன் பின்பு மலையக தமிழ் மக்களும் பயங்கரவாதிகள் என்று கைது செய்யப்பட்டு இன்னும் 30 வருட காலமாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.  இந்தக்கட்டுரைகளில் ஆழமாக இந்த விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.

இலங்கை அரசியலில் பேரம் பேசும் சக்தியாக மலையக தமிழர்கள் இருந்தபோதும் தொடர்ச்சியாக வந்த தொழிற் சங்கங்கள் படிப்பறிவில்லாத மக்களை வைத்து அரசியல் பேரம் பேசினவே தவிர அவர்களுக்காக எதுவுமே செய்யவில்லை. இன்றுவரை நிலமை அதுதான். இலங்கையில் வாழுகின்ற சிங்களவர்கள் தமக்கு தேவையான பாராளுமன்ற  பிரதிநிதித்துவத்தை பெறுகின்ற போதிலும் மலையக தமிழ் மக்கள் இன்று வரை தமது பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதில் இருந்தும் ஏமாற்றப்படுகின்றனர்.  தொழில் சங்கங்கள்; ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி என்ற இரண்டு பெரும் கட்சிகளுக்கு பின்னால் நின்று கொண்டு அரசியல் செய்வதனால் மலையக தொழிலாளர்களுக்கான உரிமைகள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.

1960 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிறீமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் மூன்று லட்சம் இந்தியா வம்சாவளியினருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்படும் என்றும் ஐந்து லட்சத்து இருபத்தையாயிரம் பேருக்கு இந்தியா பிரஜாவுரிமை வழங்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.  ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.  பின்னர் இந்திரா-சிறீமா இணக்கப்பாட்டின்படி எழுபத்தையாயிரம் பேருக்கு இலங்கை பிரஜாஉரிமையும் எழுபத்தையாயிரம் பேருக்கு இந்திய பிரஜா உரிமை வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.  ஆனால் இவை எதுவுமே நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து அவர்கள் இலங்கை இந்திய அரசுகளால் ஏமாற்றப்பட்டதை ~இன முரண்பாடு தொடர்பான கண்ணோட்டம் கட்டுரை ஆதாரங்களோடு முன்வைத்துள்ளது.

1956 ஆம் ஆண்டு இலங்கையின் அப்போதைய பிரதமரான பண்டார நாயக்கா கொண்டு வந்த தனிச்சிங்கள அரச கருமமொழி சட்டம் மலையக தமிழ் மக்கள் அரச அலுவலகங்களில் தமது தேவைகளை தாய்மொழி மூலம் செயற்படுத்த முடியாமல் அல்லலுற்றனர்.  அரசாங்க அலுவலகங்களில் தமிழர்கள் புறக்கணக்கப்பட்டு சிங்களவர்கள் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.  இந்தச்சட்டத்தினூடாக மலையக தமிழ் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர். 1985 இல் திம்பு பேச்சுவார்த்தைகளின் போது மலையக தமிழ் மக்களின் குடியுரிமை பிரச்சனையும் பேசப்பட்டது.  ஆனால் இன்னும் முழுமையாக தீர்க்கப்படாத பிரச்சனையாகவே இது இருக்கிறது. மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் காலம்காலமாக வாழ்ந்து வந்த தமிழர்களின் விகிதாசாரத்தை குறைக்கவும் சிங்கள ஆதிக்கத்தை நிலைநாட்டவும்  பெரும்பான்மை சிங்கள மக்களை தோட்டங்களில் இலங்கை அரசாங்கம் குடியமர்த்துகிறது.

கலாசார ரீதியாக தமிழ் மக்களை சிங்கள மக்களோடு இணைக்கும் நடவடிக்கை நடைபெறுகிறது.  சிங்கள பாடசாலைகளுக்கு தமிழ் மாணவர்களை சேர்த்தல், பௌத்த விகாரைகளுக்கு வழிபாட்டுக்காக செல்லும்படி மென்மையாக வற்புறுத்துதல் , பிள்ளைகளுக்கு சிங்கள பெயர்களை வைக்க வற்புறுத்துதல், மரண மற்றும் திருமண சடங்குகளில் சிங்கள கலாசரத்தை தழுவி செய்தல், பேச்சுவழக்கில் சிங்கள மொழியின் கலப்பு, பௌத்த கலாசாரத்துக்கு உரித்தான ஆடைகளை அணிதல் என்று தமிழ் சமூகத்திற்கான கலாசாரா அடயாளங்களை இல்லாமலாக்கி நாளடைவில் அவர்களை பௌத்த சிங்களவர்களாக மாற்றும் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.

1956, 1977, 1978, 1981, 1983 இனக் கலவரங்களினால் சமூகத்தில் வசதிபடைத்தவர்கள் இந்தியாவை நோக்கி இடம் பெயர்ந்தார்கள்.  அதன் பின்பு கலாசார ரீதியான தாக்குதல்கள் தொடர்வதாக இந்தக்கட்டுரைகளில் பதியப்பட்டுள்ளன. இலங்கையில் வாழும் மலையக மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் நிரந்தரமானதாகவும் திட்டமிட்ட முறையிலும் நடைபெறுவதை அவதானிக்கலாம். இலங்கை மலையக சமூகத்தின் பல்பக்க பார்வையாக அரசியல், சமூகம், கலாசாரம், இன ஒடுக்குமுறை போன்ற விடயங்களை உள்ளடக்கிய ஆய்வு ரீதியான கட்டுரைகள் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  இலங்கை மலையக மக்களின் வாழ்வு தொடர்பாக அறிய விரும்பும் வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்த தொகுப்பு மிக முக்கியமானதாகும்.

மலையகத்தில் பொன்னர் சங்கர் கூத்து ஓர் அறிமுகம் - சு.தியாகராஜ்



மலையக கூத்துக்களின் வளர்ச்சியும் வரலாறும்

இருநூறு வருடங்களுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்த மலையக தோட்ட தொழிலாளர்கள் தங்களது உழைப்பை மட்டும் இங்கு கொண்டு வரவில்லை. தமது பாரம்பரிய கலைகளையும் இங்கு கொண்டு வந்தனர். சமீப காலம் வரை இக்கலைகள் எம்மக்களின் வாழ்வோடு பின்னிப்பினைந்திருந்தன. அவர்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டன.

காலையில் எம்மவர்களை 'காலை தப்பு' துயில் எழுப்ப அதன் பின்னர் வேலைத்தளத்திற்கு செல்வதற்கு 'பிரட்டுத்தப்பு'. வேலை முடிந்து வீடு செல்வதற்கு மாற்று ஓசையுடன் கூடிய தப்பு. காவடியாட்டம், கரகாட்டம், திருவிழாக்கள், சமயக்கிரியைகள், சடங்குகள் போன்றவற்றிற்கு வௌ;வேறு சுருதி கொண்ட தப்பு. இப்படியாக பதினாறு வகை தப்போசைகள்.

மாலை மயங்கி இரவு தொடங்கிவிட்டால் தொழிலாளர் வாழும் லயங்களில் ஏதாவது ஒரு காம்பிராவில் ஒருவர் மகாபாரதம் நல்லத்தங்கால் கதையை ராகத்துடன் வாசிக்க மற்றவர்கள் சூழ்ந்திருந்து இரசிக்கும் காட்சி அன்றிருந்தது. சமய உணர்வும், கேளிக்கையும், உடற்பயிற்சியும் சார்ந்த சிலம்பாட்டம், கோலாட்டம், கும்மி, கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கரவஞ்சி இவற்றைவிட உடுக்கு, தமூர், செஞ்சனக்கட்டை, சங்கு, தண்டை இன்னோரன்ன மலையகத்திற்கே உரிய ஆட்டங்களும் வாத்தியங்களும் மக்கள் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துள்ளன.

அர்சுனன் தபசு, பொன்னர் சங்கர் கூத்து, காமன்கூத்து என மாசிபிறந்து விட்டால் கூத்துக்கள் குதூகலிக்கும். காலை முதல் மாலைவரை வேலை செய்து கலைத்துப்போன உடலுக்கும் உள்ளத்திற்கும் வெண்சாமரை வீசுவதாக இக்கூத்துக்கள் இடம்பெறுகின்றன. ஒருவர் தன்னை மறந்து இவ்வாறான கலையில் தன்னை ஈடுபடுத்தி இன்பம் காணும் வேட்கையாகவே இக்கூத்துக்கள் காணப்படுகின்றன.

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட அடக்கு முறைகளும் கெடுபிடிகளும் உழைப்புக்கேற்ற ஊதியமின்மையாலும் அதிகம் பாதிக்கப்பட்டு துன்பக்கேணியில் கிடந்துழன்ற தொழிலாளர்களுக்கு மன ஆறுதலையும் மகிழ்ச்சியையும் வாழ்க்கையில் நம்பிக்கையையும் அளித்தவை நாட்டாரியற் கூறுகளேயாகும். தொழிலாளர்கள் தம் முன்னோரிடமிருந்து பெற்றுக்கொண்ட விலைமதிக்க முடியாத பெரும் சொத்து இவையாகும்.

மலையக தொழிலாளர்கள் வெங்கொடுமை சாக்காட்டில் வெந்துழன்ற போதும் மலையகத்தில் அடிக்கடி இடம்பெறும் இனச்சங்கார செயல்களினால் வெகுவாக பாதிக்கப்பட்டப் போதும் தம் முன்னோர் அளித்த அரும் செல்வமாகிய நாட்டாரியற் கூறுகளை பேணிப்பாதுகாப்பதில் முனைப்பாக நிற்றல் மனந்திறந்து பாராட்டத்தக்கதாகும்.

இந்நாட்டாரியற் கூறுகள் தாலாட்டுப்பாடல்கள், தொழிற்பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், கரகம், காவடி, கும்மியாட்டம், கோலாட்டம் என நீண்டு செல்கின்றன. இந்நாட்டாரியற் கூறுகளில் ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான பண்புகளும் சுவையும் எம்மவர்களிடம் இழையோடிருப்பது நாட்டாரியலின் வெற்றியாகும். அந்த வகையில் இந்நாட்டாரியற் கூறுகளில் 'கூத்துக்கள்' பெற்றுள்ள இடம் தனித்துவமாக காணப்படுகின்றமை கூத்துக்கள் மலையக மக்களிடத்தில் பெற்றுள்ள செல்வாக்கினை எடுத்தியம்புகின்றன.

இனி மலையகத்தில் கூத்துக்களின் வளர்ச்சியையும் அது பெற்றிருக்கும் செல்வாக்கினையும் எடுத்து நோக்கும் போது இந்நாட்டின் நாகரீகத்தையும் பண்பையும் உயிர்ப்பையும் ஓங்கி வளர்த்த  பெருமை கிராமங்களுக்குரியது. கிராமங்கள் இயற்கைக்கு மிக அருகாமையில் இருக்கின்றமையால் அவை வாழ்வில் என்றும் உயிரூற்றுடன் நெருங்கிப் பிணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய கிராமங்களில் வாழும் மக்களால் வளர்க்கப்பட்ட அழகிய கலைகளே கிராமிய கூத்துக்களாகும். இவை பொதுமக்களின் விலைமதிக்க முடியாத பெறும் சொத்தாகும்.

கூத்து என்பது நாட்டுப்புற கலைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. இவற்றை 'நாட்டுப்புறக்கூத்துக்கள்' என்றும் 'கிராமிய நாடகங்கள்' என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவற்றில் ஆடல்களும் பாடல்களும் அமைந்திருக்கும். மேடையின்றி திரைகள் இன்றி அதிக ஒப்பனைகள் இன்றி திறந்த வெளி அரங்குகளில் நடைபெறும் கிராமிய நாடகங்களே கூத்துக்களாகும்.

ஆதிகால மனிதன் நாளாந்தம் தான் செய்து வந்த தொழிலை ஓய்வு பெற்ற நேரங்களில் அபிநயங்களோடு செய்து பார்க்க முற்பட்டான். அபிநயத்தோடு கூடிய தொழிலானது கூத்தாக உருப்பெறலாயிற்று. இக்கூத்துக்கள் கிராமிய மக்களின் வாழ்க்கை வரலாற்றையும், மக்களின் மனப்பாங்குகளையும், சமய அடிப்படையிலான கொள்கைகளையும் வெளிக்காட்டுகின்றன. இவ்வாறு கூத்து நிகழ்த்துபவர்களை 'கூத்தாடிகள்' என்று அழைத்தனர்.

'கூத்தாடி கிழக்கே பார்ப்பான்
கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்'

மேற்படி பழமொழி கூத்துக்கள் விடியும் வரை நடைபெறுவதையே உணர்த்துகின்றது. ஓர் இரவை மக்கள் இனிதாக கழிக்கக் கூடியதாகவே கூத்துக்கள் ஒழுங்கு செய்யப்படும்.

கிராமியக் கூத்துக்களில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் இடம்பெறுகின்றன. ஆயினும் பாட்டின் செல்வாக்கே அதிகமாக காணப்படுகின்றது. இதைத்தவிர இக்கூத்துக்கள் ஆரம்ப கால இதிகாச, புராண நாடகங்;களிலிருந்தே உருப்பெற்றது. கூத்து என்பது ஒருவரோ அல்லது ஒருசிலரோ ஒரு பாடலையோ அல்லது ஒரு கதையின் பகுதியையோ வாய்ப்பாட்டு, இசைக்கருவி முதலியவற்றின் துணையுடன் ஆடிகாட்டும் நடனமாக கருதப்படுகின்றது.

தமிழில் வழங்கி வரக்கூடிய பல்வேறு கூத்துக்கள் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும், மலையகத்திலும் பரிணமித்துள்ளமையை நாம் காணலாம். வடக்கிலே வடமோடி, தென்மோடி கூத்துக்கள் என காத்தவராயன், இலங்கேஸ்வரன், வசந்தன், அருளப்பர் போன்ற கூத்துக்கள் காணப்பட, மலையகத்தில் காமன்கூத்து, பொன்னர் சங்கர், அருச்சுனன்தபசு, இராமர் கூத்து, மதுரைவீரன் போன்ற பல்வேறு கூத்துக்களும் காணப்படுகின்றன. இவற்றில் மலையகத்தில் பெரிதும் பிரபல்யம் அடைந்து வரும் கூத்து காமன்கூத்தாகும். ஏனையவை அனைத்தும் வழக்கொழிந்து வருகின்றவையே. அந்த வகையில் அருகிவரும் கூத்துக்களில் காமன்கூத்தும் பொன்னர்சங்கர் கூத்தும் காணப்படுகின்றன.

அந்நியரின் பிடியில் சிக்கி துவண்டிருந்த மலையக தொழிலாளர்களுக்கு இக்கூத்துக்கள் பெரிதும் தமது இன்னல்களை மறந்து சற்று நேரம் இன்பத்தில் லயித்து இளைப்பாறும் ஆசனங்களாகவே காணப்பட்டன. இவ்வாறு வளர்ச்சியடைந்து வந்த இந்த கூத்துக்கள் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்று வந்தன. ஆனால் பிற்பட்ட நவீனமயமாக்கல், நகரமயமாக்கல் மோகத்தினால் மக்களுக்கு கூத்துக்களின் பால் ஈடுபாடு அருகியே வருகின்றது. அந்தவகையில் அருகிவரும் கூத்துக்களில் ஒன்றாகிய பொன்னர் சங்கர் கூத்தை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகின்றது.

மலையகத்தின் பொன்னர் சங்கர் கூத்தின் வரலாறும் கதைக்கருவூலமும்
பண்டைய காலத்தில் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் இலக்கியங்களை வளர்ததனர் என்பதும் நாடகத்திற்கு அடிப்படையான கதைக்கூத்துக்களை மக்கள் பெரிதும் போற்றி வந்துள்ளனர் என்பதும் நூல்களினூடாக அறியக்கிடக்கின்றன.

19ம் நூற்றாண்டின் ஒப்பந்த கூலிகளாக இந்தியாவின் நாமக்கள், நெல்லை, சீமை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், தர்மபுரி போன்ற பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தாம் வாழ்ந்த கிராமங்களின் சாதியமைப்பிற்கேற்ப கலை, கலாசார பண்பாடுகளையும் தம்முடன் கொண்டு வந்தனர். இவ்வகையில் இம்மக்கள் தம் வாழ்வோடு இணைந்த கூத்துக்களில் ஒன்றான பொன்னர் சங்கர் கூத்தினையும் கொண்டுவந்தனர். இக்கூத்தானது தமிழகத்தில் இடம் பெற்ற கூத்தினை அடியொட்டியதாகவும் மலையகத்திற்கே தனித்துவமானதாகவும் காணப்படுகின்றது.

இப் பொன்னர் சங்கர் கூத்தானது அண்ணன்மார் சாமிக்கதை எனவும் குன்றுடையான் கதை எனவும் கூறுவோரும் உள்ளனர். இவ்வரலாறானது மலையக பகுதிகளான கிருமக்கொலை, பீரட் ஆகிய தோட்டங்களில் 55 - 60 வருடங்களாக நடைபெற்று வருகின்றது. மேலும் மாணிக்கவத்தை, சலங்கண்டி, போற்றி, பெரியமஸ்கெலியா, லெட்சுமித்தோட்டம், அரிசிதோட்டம், ஸ்ரப்பி, நானுஓயா, அப்புத்தளை, சென்.கூம்ஸ், கொஸ்லந்த, வட்டவலை, லொனக், செல்வகந்த, ரூவாக்கொல போன்ற தோட்டங்களில் ஆடப்பட்டு வருகின்றது.

இக்கூத்தின் ஆரம்பத்தினை எடுத்துக் கொள்வோமாயின் இக்கூத்தினை முன்னின்று நடாத்தியவர்கள் இறந்து விட்டதாகவும் சிலர் இந்தியாவிற்கு சென்று விட்டதாகவும் இதனால் பல தோட்டங்களில் இக்கூத்து இடம்பெறுவதில்லை என ஆய்வின் போது தெரியவந்துள்ளது. கிருமக்கொலையிலே முதல்முதலில் இக்கூத்து ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து வந்தவரான அழகன் என்பவர் தன் வறுமை காரணமாக இக்கூத்துப் பாடல்களைப் பாடி ஆடிக்கொண்டு லயன்கள் வழியாக அரிசி, காசு வாங்கிக் கொண்டு வந்த போது அங்குள்ள மக்கள் அதன்பால் ஈர்க்கப்படவே சில பெரியவர்களும் இளைஞர்களும் இதனை முன்னின்று நடத்தினர் எனவும் அவரையே ஆசிரியராக கொண்டு ஆட்டங்களையும் பாடல்களையும் கற்று 1946 - 1949 காலப்பகுதியிலே முதன்முதலில் இக்கூத்தாட்டாத்தினை ஆரம்பித்ததாகவும் கூறுகின்றனர்.

இனி பொன்னர் சங்கர் கதையை எடுத்து நோக்கும் போது இக்கூத்தினை அண்ணன்மார் கதை அல்லது அண்ணன்மார் வரலாறு என்றும் அழைப்பதுண்டு. பொன்னரும் சங்கரும் இக்கூத்தின் கதாநாயகர்களாக அமைவதால் இருவரதும் பெயரைக்கொண்டு இக்கூத்து அழைக்கப்படுகின்றது. இவர்களது வாழ்க்கை வரலாறும் வீர தீர செயல்களும் இக்கூத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளன. இப்பொன்னர் சங்கர் கூத்தில் காமன் கூத்தில் காமனை வழிப்படுவது போல பெரியசாமி எனும் தெய்வம் வழிபடப்படுகின்றது. இக்கூத்தானது 16 அங்கமாக ஆடப்படுவதுண்டு. ஏனெனில் சிவனருளால் தவமிருந்து பெற்றெடுத்த பொன்னரும் சங்கரும் 16 வயது வரையிலேயே வாழ்நாளை கொண்டிருந்தனர் என்பதனாலாகும்.

இக்கூத்தின் வாயிலாக அவதாரக் கோட்பாடுகள் பற்றிய ஐதீகங்கள் விளக்கப்படுகின்றது. இக்கூத்தானது ஆலயத்திற்கு அண்மையிலுள்ள சூழலிலோ மைதானத்திலோ ஆடப்படுவதுண்டு. இக்கூத்தில் ஆடுபவர்களுக்கு அணிவிக்கப்படும் ஆடையணிகள் வடமோடி, தென்மோடி கூத்துக்களினை ஒத்தது. பொன்னர் சங்கர் கூத்தினை நோக்கும் போது அதன் கதையமைப்பானது அவலச்சுவையுடன் அங்கதச் சுவையும் கொண்டிருப்பதால் அதனை அவலமும் அங்கதமும் நிறைந்த நாடகமாகக் கொள்வது பொருத்தமுடையதாகும். இக்கூத்தில் வேளாளர் என்று ஒரு சமூகத்தின் பரம்பரைக்கதை இலையோடிக்; கிடப்பதை அவதானிக்க முடிகின்றது.

பொன்னர் சங்கர் கூத்து மூன்று கட்டங்களாக பிரித்து ஆடப்படுகின்றது. கதையின் முதற்கட்டமாக பிள்ளைப் பேரின்றி வருந்தும் குன்றுடையின் கவுண்டன், தாமரை நாச்சியார் தம்பதியினருக்கு பிள்ளை வரம் வேண்டி தாமரை நாச்சி மர உச்சியில் மேற்கொள்ளும் பெரும் தவத்தினை சித்தரிக்கின்றது. தாமரை பெரும் தவம் செய்கின்றாள். மாயவர் காரணமறிந்து சிவனிடம் கேட்கவே சிவன் வீரபுத்திரனிடம் பிள்ளைப்பேறு உண்டாவதவன் விசாரித்ததன் பின் பொன்னர், சங்கர், அருக்காணி ஆகிய தங்காள் பிறப்பு இடம்பெறுகின்றது.

இக்கதையினை பின்வரும் பாடலைப்பாடி குத்துவிளக்கேற்றி திரைத்திறப்பு செய்து ஆரம்பித்து வைப்பார்கள்.

'மாரிமுன்ன நம்பினேன்
மாரிஉன்ன நம்பினேன்
தாயே உன்ன நம்பினேன்
சரஸ்வதி தாயே உன்ன நம்பினேன்
தாயே உன்ன நம்பி கரிசலுக்கு வாரேன்...'

என்று தொடங்குகிறது.

'எங்கே பேய் வச்சன் சற்குறியே
எனக்கு பக்கத்துணை வாரீகளோ
என்னாவும் பின்னிராம என்
பக்கத்தில நிக்கனுமே
ஆடுகிற ஆட்டத்துல அலும்பு
வந்து நின்டுறாம
வந்தரிதம் வந்தரிதம் நாங்க வாமையால
சேரநாதா...'

என்று பல்வேறு பாடல்கள் படிக்கப்பட்டு கதை ஆரம்பமாகிறது.

இவ்வாறு பிறப்பு இடம்பெறுகின்றது. சோழர் ஆண்பிள்ளைகள் இருவரையும் கொல்வதற்கு சதி செய்து திடீரென பொன்னரும் சங்கரும் காணாமற் போகின்றார்கள். தங்கா மாத்திரம் பெற்றோருடன் வளர்ந்து வரும் வேளையில், பொன்னரையும் சங்கரையும் வீரப்புறக்காடு எனும் காட்டிலேயே எடுத்து வந்து பொன்னி வளநாட்டில் வளர்ந்து வந்தனர். ஐந்து வருடங்களின் பின் காட்டில் விடப்பட்ட பொன்னரும் சங்கரும் 'வையமலை' என்பவருடன் சேர்ந்துக்; கொண்டு தமது தாய் தந்தையரை தேடிவந்து வாழ்கின்றனர். பின் தமது மாமனாரான மாயவரின் ஏபாட்டிலே நன்னாட்டு பட்டினத்திலுள்ள நல்லையா கவுண்டரின் இரு புதல்விகளான கொழுந்தாய், கொழுந்தம்மா ஆகிய இருவரையும் முறையே பொன்னரும், சங்கரும் மணமுடித்துக் கொள்கின்றனர்.

பின்பு பொன்னரும் சங்கரும் தாம் மணமுடித்த பெண்ணுடன் வாழாது வையமாலையுடன் சேர்ந்துக் கொண்டு மூவரும் காட்டு வேட்டைக்கும் புறப்பட்டு விடுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் சோழ ராஜன் குன்னடையான் கவுண்டரையும் தாமரையாளயும் சூது செய்து கொன்று விடுகின்றான். அவ்வேளையில் தனித்திருக்கும் தங்காளின் புலம்பலைக் கேட்டு பொன்னர், சங்கர், வையமாலை ஆகிய மூவரும் நாடு திரும்பி தம் பெற்றோர்களுக்கு கிரியை செய்ய வருகின்றனர். மாமனான மாயவர் சந்தனக் கட்டைகள், குங்குமக்கட்டைகள் அடுக்கி மைத்துனருக்கும் தங்கையாருக்கும் கோடி போடுகின்றார். பொன்னர் தலைசிரைக்கு கொல்லி வைக்க சங்கர் கைசிரைக்கு கொள்ளி வைக்கிறான்.

தங்காளின் தனிமையை போக்க பொன்னர் செம்பகுல ஆசாரியிடம் சொல்லி பொற்கிளி ஒன்றை கொடுக்கின்றான். அது பேசாமலும் பாலும் பழமும் உண்ணாமல் இருக்கவே உடைத்து எறிகின்றான். இதனால் சங்கர் கிளி வேண்டுமா என கேட்க அவள் தனக்கு படித்த கிளி 60அடி கம்பத்தின் உச்சியில் இருப்பதாகவும் அதைப் பிடித்து தரவும் கூறுகின்றாள். சங்கரும் வையமாலை மாயவரும் சென்று கஸ்டபட்டு கிளி படித்து கொடுக்கின்றனர். இத்துடன் இரண்டாம் பாகம் முடிகின்றது.

மூன்றாவது பாகத்தில் படுகளமாரும் பொன்னர் சங்கர் பங்காளிகள் இவர்களை பலி வாங்க காளியின் உதவியுடன் சூது செய்கின்றனர். பின்பு சோழராஜன் சூழ்ச்சியுடன் மாயவன் என்பவனுடன் சூதாட வைக்கின்றான். சங்கர் அச்சூதாட்டத்தில் தோல்வியுறவே அவனை விலங்கிடுகின்றான். பின்பு சங்கரை ஏமாற்றிய சோழராஜன் பொன்னரையும் பலிவாங்க எண்ணி செம்பகுல ஆசாரியைப் பயன் படுத்துகின்றான்.

பொன்னரிடம் சென்று ஆசாரியார் அரசரின் பொன்மரக்காய் ஒன்றினை வைத்திருக்க கொடுத்துவிட்டு தான் கொடுத்தது தங்க மரக்காய் என்று கூறி அதனை கேட்கின்றான். இதனை திருப்பி கொடுக்க முடியாத பொன்னர் செம்பகுல ஆசாரியை கொலை செய்து விடுகின்றான். அதே வேளை தானும் இறந்து விடுகின்றான்.

பொன்னரின் மரணத்தையறிந்த சங்கரின் கைகளில் கட்டப்பட்டிருந்;த விலங்கு தானாகவே தெரித்து விழுகின்றது. பின்பு சங்கர் பொன்னர் இருந்த இடத்திற்கு வரும் போது மறைவில் இருப்பவரை சங்கர் போருக்கு அழைக்க அப்போது சங்கர் பொன்னர் போன்றோரது பிறவிக்காலமான ஆறு வருடங்கள் முடிந்து விட்டதாக மாயவரின் குரல் கேட்கின்றது. அதையடுத்து சங்கரும் இறக்கின்றார்.

தமையன்மார் இறந்ததை அறிந்த தங்காள் அவ்விடத்திற்கு சென்று பார்க்க பொன்னர், சங்கர் மனைவிகள் தம்மை தீயிட்டுக் கொள்கின்றனர். அப்போது தங்காள் கண்ணீர் மல்க அழுவதை இவ்வாறு பாடல் மூலம் கூறுகின்றார்கள்.

'செத்து நல்ல மடியிராராம்
இன்னக்கி மாண்டு நல்ல மடியிராரோ
செத்து நல்ல மடியிராராம்
அங்கே உக்கிறியே பரனம் மாறி
வெசத்தண்ணி தான் அறிஞ்சி
இந்த மாயரோட காலத்தில்
மாண்டு நல்ல மடியிராளே
அங்கே பொன்னர் சங்கர் மாண்டு
நல்ல மடியிரானே...'

இவ்வாறு தங்காள் புலம்புகின்றாள்.

'நான் என்ன செய்வேன் எங்கண்ணன் மாரே
நான் ஏது செய்ய போரேனோ
அண்ணா நீங்க மாண்டு நல்ல மடிந்திட்டிங்க
நீங்க செத்து நல்ல மடிந்திட்டிங்க
அண்ணா தெய்வத்தோட போயிடிங்க...'

இதன் பின்பு தங்காள் தவசி மரத்தில் ஏறி ஈசனை நினைத்து தவம் செய்கின்றாள். தங்காள் தவமிருக்கும் கம்பம் மீது பட்சிகள் பறக்கும் வரை இவளது தவம் தொடரும். பட்சியைக் கண்ட பின்பு இறங்கி வந்து ஆற்றில் மூழ்கி ஈறத்துணியுடன் வந்து இறந்து கிடப்பவர்களுக்கு தண்ணீர் தெளித்து எழுப்பும் காட்சியுடன் இக்கூத்து முடிவடைகின்றது. இவ்வாறு தங்காள் தன் அண்ணன் இருவரையும் உயிரெழுப்பும் போது

'வாருங்கடி எங்க அண்ணம் மாரே
வரிசையாக சென்றிடுவோம்
எங்க அண்ணராலே பாக்கவல்லம்
வாருங்க அந்நிமாரே...'

என பாடுவர். இக்கதை முடிவுறும் போது பின்னவரும் பாடலுடன் முடிவடைகிறது.

'நான் பாடியிடும் பாட்டிலேதான்
பறந்து வந்தேன் நேந்திடாம
ஆடுகிற ஆட்டதில அலுப்பேதும் தங்காநேர்ந்திடாம
எங்க காட்சி நல்ல கொடுத்திடாதே
கடக்கவே தங்காள் நின்டுறாதே
இந்தப்பாரித் தங்கம் முடியமட்டும்
பக்கத்துணை தங்கா நிக்கனுமே
எங்க வீரப்புல காளியம்மா
எனக்கு பக்கத்துணை தாயி நிக்கனுமே
எங்க மந்திரத்த கண்டவரு எங்க மாமுனியே
நீங்க நிக்கனுமே...'

மயைகத்தில் பாமர மக்களால் வாய் மொழியாக வந்து காணப்படும் இக்கூத்தானது சில ஒழுக்க முறைகள் அற்றும் நேர்த்தியான அணிகலன்கள் அன்றியும் மேடை ஏறுகின்றது. இதில் கிறிஸ்தவர்களும், பெண்களும் பங்கேற்கின்றனர். டோல், தபேலா, மிருதங்கம், தப்பு, உடுக்கு என்பன இசைக்கப்படும் இசைக்கருவிகளாகும். ஒருவர் பாட்டு பாட மற்றவர்கள் பின்பாட்டு பாடுகின்றார்கள்.

பொன்னர் சங்கர் கூத்தின் இன்றைய நிலையும் பாதுகாத்து   வளர்த்தெடுக்க வேண்டிய முறையும்
இன்றைய நவீன காலமாகையால் இக்கலைகள் பேணுவாரின்றி மறைந்து வருகின்றன. இக்கலைகளை பேணி பாதுகாத்து வந்தவர்கள் பலர் வறுமையாலும் முதுமையாலும் வேறு பல காரணிகளாலும் இக்கலைகளை வளர்தெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். மலையகத்தின் இளம் தலைமுறையினருக்கும் இவற்றிலெல்லாம் ஈடுபாடு இருப்பதாக தெரியவில்லை. இன்றைய நவீன வாழ்க்கை முறையும் பிற பண்பாட்டு அம்சங்களின் தாக்கமும் இவர்களை தமது பாரம்பரிய கலைகளை பேணிகாக்காது விலகிச் செல்ல வைக்கின்றன.

லயக்காம்பிராக்களை தொலைக்காட்சிகளும் வானொலிகளும் ஆக்கிரமிக்கின்றன. இவை இளந்தலைமுறையினரின் ஆர்வங்களை வேறு திசைகளுக்கு இட்டுச் செல்ல தொடங்கி உள்ளன. 'தப்பு' போன்ற வாத்திய கலைகள் கீழ்மட்ட மக்களுக்கு உரியவை அவற்றை பழகுவது தமக்கு கௌரவ குறைவு என்ற தப்பான எண்ணமும் இளைய தலைமுறையினரிடையே நிலவுகின்றது.

ஒரு சமூகம் அழிந்து விடாமல் நிலைப்பதற்கு அச்சமூகத்தின் கலை கலாசாரம், பண்பாடு ஆகியன பாதுகாக்கப்பட வேண்டும். ஆச்சமூகத்தின் தனித்துவம் பேணப்பட வேண்டும் இல்லையெனில் அச்சமூகம் காலப் போக்கில் தனது அடையாளத்தை இழந்து விடும். தமது மூத்த தலைமுறையினர் தமக்கு அழித்த அரிய செல்வங்களான கலைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்க வேண்டியது தமது தலையாய கடமை என்பதனை மலையகத்தின் இளந்தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மலையக தலைமைகள் அக்கறையுடன் செயற்பட்டு கலைமன்றங்கள் கூத்துக்;களை நடாத்துவதற்கும் இளந்தலைமுறையினருக்கு கொண்டு செல்ல பள்ளிகள், பயிற்சி பட்டறைகள், பாசறைகள் என்பனவற்றை வளர்த்துவிட வேண்டும்.

இக்கலைகள் பாடசாலை மட்டத்திலேயே அறிமுகம் செய்ய ஆவணம் செய்ய வேண்டும். மலையக பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள்  மலையக கல்விமாண்கள் இதுப்பற்றி சிந்திக்க வேண்டும்.

கலாசார அமைச்சராக கௌரவ லக்சுமன் ஜெயதிலக்க இருந்த காலத்தில் மலையக கலை மேம்பாட்டுக்குழு என்ற அமைப்பு ஆரம்பத்தில் அரசமட்டத்தில் இயங்கி மலையகக் கலைஞர்களுக்கு விருதுகளும் பணப்பரிசில்களும் கொடுத்து கௌரவித்தது. இப்படியான நிலைமை மீண்டும் உருவாவதற்கு மலையக அரசியல் சக்திகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கூத்துப்பாடல்களை தொகுத் இருவெட்டுக்களில் பதிவு செய்தல், கூத்துக்களை மேடையேற்றம் செய்தல், ஓளி - ஒலி பதிவு செய்து ஆவணப்படுத்துதல் போன்ற வற்றையும் மேற்கொள்ள வேண்டும். மாகாண மட்டத்திலும் பாரம்பரிய கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டத்தை மத்திய மாகாண, ஊவா மகாண சபைகள் முன்னெடுக்க வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் 'நாடகமும் அரங்கியலும்' பகுதியின் ஊடாக மலையக கூத்துக்களையும் பாட நெறிகளாக உள்வாங்கப்பட வேண்டும். மலையகத்தில் கூத்துக்கள் இடம்பெறும் தோட்டங்களில் உள்ள கலைஞர்களை கௌரவித்தும் கலையை வளர்த்தெடுக்கக்  கூடியதான பொருட்களையும் வழங்க வேண்டும்.  தவிர இவ் இனத்துக்கென அடையாளப்படுத்தக்கூடிய இக் கூத்து கலைகளை வளர்த்தெடுக்க இளைஞர் யுவதிகளை இணைத்த புதியதொரு சமுதாய கட்டமைப்பினை உருவாக்க வேண்டும்.

எனவே மேல் உள்ளவற்றை தொகுத்த நோக்கும் போது மேற்கூறிய காரணங்களுடன்  அவற்றினை செயற்படுத்தக் கூடியதுமான திட்டங்களை நடைமுறைப் படுத்துவோமாயின்; பிற்காலத்தில் இச்சமூகத்தின் அடையாளங்கள் சிதைந்து போகாமல் இவ் இளைய தலைமுறையினருக்கும் எதிர்கால மலையக சமூகத்திற்கும் எமது சமுதாயத்தின் பாரம்பரிய அடையாளங்களை எடுத்து செல்ல ஏதுவாய் இருக்கும்.

நன்றிகள்

தகவல்களை வழங்கியோர்
திரு .எம். கிட்ணசாமி (வீரட்)
திரு.மூக்கையா( வீரட்)

மதுரத்தமிழ் (2007) அரசினர் ஆசிரியர் கலாசாலை, யதன்சைட்,
கொட்டக்கலை.
காமன் கூத்தம் மலையக பாரம்பரியமும், சோதிமலர் ரவிந்திரன்.
ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை.

(இக்கட்டுரை 2007ஆம் ஆண்டு பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் நடாத்தப்பட்ட 'மலையக தமிழ் இலக்கியம்' ஆய்வுக் கையேடு எனும் நூலில் வெளியிடப்பட்டுள்ளது.)

மலையக மக்கள் குறித்து பௌத்த பிக்குவின் கரிசனை


இந்த நாட்டில் உழைக்கும் வர்க்கமாக வாழ்ந்து வரும் மலையக பெருந்-தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் பற்றி, அவ்வர்க்கத்திலிருந்து தோற்றம் பெற்ற அதிகார வர்க்கத்தினரே அதிகம் அலட்டிக்கொள்ளாது இருக்கும் போது இனவாத போக்குக்கொண்ட தென்னிலங்கைச் சமூகத்திலிருந்து இம்மக்களைப்பற்றிய அக்கறையுடனும் கரிசனையுடனும் குரல் கொடுக்க ஒரு பெளத்த பிக்கு முன் வந்திருக்கின்றமையானது மலையக மக்களின் அவல நிலையை மேலும் உணர்த்துவதாய் உள்ளது. கடந்த வெள்்ளிக்கி-ழமை 23 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் குழு அறையில் இடம்பெற்ற தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை பெருபித்தல் தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றிய தென்மாகாண சபை உறுப்பின-ரான வணக்கத்திற்குரிய பத்தேகம சமித்த தேரர் தென் மாகாணத்தில் வாழ்ந்து வரும் மலையக மக்களின் உரிமைகள் வாழ்க்கைத்தரம் பற்றி பல அரிய கருத்துக்களை கூறியது மட்டுமில்லாது இம்மக்களின் வாழ்க்-கைத்தரம் மாற வேண்டுமாயின் புதிய தலைமைகள் உருவாக வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக கூறியுள்ளார்.

சமூக அழுத்தம் என்ற விடயத்தை அவர் பல்வேறு உதாரணங்களுடன் விளக்கியிருந்தமை கோடிட்டு காட்ட வேண்டிய விடயமாகும். பல்வேறு நிர்பந்தங்களுக்கு மத்தியில் பெரும்பான்மை சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் பிரதேசங்களில் வசித்து வரும் இந்த மலையக தமிழர்கள் சிங்-களவர்களாக மாற்றப்படுகின்றனர். மேலும் தமது பிள்ளைகளை சிங்கள மொழியில் கற்க அனுமதிக்கின்றனர், மட்டுமில்லாது சிங்கள பெயர்களை வைக்கின்றனர். இந்த சமூக அழுத்தத்தை அவர்கள் மீது பிரயோகிக்க முடியாது.மலையக மக்களுக்கென்று இருக்கும் மொழி,மதம்,கலாசார பண்-புகள் என்பது அவர்களின் அடிப்படை உரிமையாகும். இதை எக்காரணம் கொண்டும் மாற்றுவதற்கு எவருக்கும் உரிமையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட கருத்தரங்கில் மலையகம் சார்ந்த பல கல்விமான்கள் பலர் வெவ்வேறு தலைப்புகளில் பெருந்தோட்ட சமூகம் பற்றி உரையாற்-றியிருந்தாலும் வேறு சமூகத்தைச்சேர்ந்த அதுவும் இலங்கை ஒரு பெளத்த நாடு பெளத்தர்களிலேயே ஏனையோர் தங்கியிருக்க வேண்டும் என அண்மைக்காலமாக குரல் கொடுத்து வரும் பிக்குகளின் வரிசையில் மலையக மக்கள் பற்றி மிகவும் கரிசனையுடன் உரையாற்றிய பத்தேகம சமித்த தேரர், சிறப்பான இடத்தில் வைத்து போற்றப்பட வேண்டிய ஒருவர் என்றால் மிகையாகாது. தென்னிலங்கை பிரதேசங்களில் வாழ்ந்து வரும் மலையக மக்களின் வாழ்க்கைதரம் எத்தகைய வறுமை நிலையில் உள்ளது என்பதை அவர் மிகவும் வேதனையுடன் எடுத்தியம்பினார்.கண் தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள தனது நண்பர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த போது தான் தோட்டப்பகுதி ஒன்-றுக்கே அழைத்து சென்றதாகவும் அங்குள்ள சிறார்களை பரிசோதித்த அந்த வைத்திய நண்பர் கண் கலங்கி சொன்ன தகவலை கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டார் தேரர்.

இந்த சிறார்களுக்கு போஷாக்கான உணவுகள் இல்லை. ரொட்டியும் பாணுமே இவர்களது உணவாக இருக்கின்றது.பெற்றோர்களும் காலையில் வேலைக்குச்சென்று மாலை திரும்புவதால் இந்த சிறுவர்கள் கவனிக்கப்ப-டுவதில்லை. இதன் காரணமாகவே இவர்களின் கண்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை தனது நண்பர் வேதனையுடன் வெளிப்படுத்தியதை அவர் கூறினார். 

13 லயன் அறைகள் இருக்கும் ஒரு தோட்டக்குடியிருப்பில் வாழ்ந்து வரும் 30 மாணவர்கள் ஒரே மலசல கூடத்தையே பாவிக்கும் அவலத்தை கூறிய சமித்த தேரர் இவர்களிடம் சென்று வாக்கு கேட்பது எவ்வளவு வெட்கத்திற்குரிய செயல் என்று கூறியது மட்டுமல்லாது இந்த நாட்டில் ஜனநாயகம் உரிமை என்றெல்லாம் பேசுகிறார்கள் ஆனாலும் இந்த குறிப்-பிட்ட சமூகத்தினரின் அவலங்கள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே உள்-ளது என்ற கருத்தைத்தெரிவித்தார். 

ஆனாலும் தென் பிராந்தியத்தில் மட்டுமில்லாது 180 வருடங்களுக்கும் மேலாக ஏனைய பல இடங்களிலும் வாழ்ந்து வரும் மலையக பெருந்-தோட்ட சமூகத்தின் மலசல கூட பிரச்சினைகள் உட்பட ஏனைய அடிப்-படை அம்சங்கள் தீர்க்கப்படாமலேயே உள்ளதையும் ஆனாலும் வெட்கப்-படாமல் பிரதிநிதிகள் காலங்காலமாக அவர்களிடம் சென்று வாக்குறு-திகள் வழங்கி வாக்குகளை பெற்று வருவதையும் சமித்த தேரர் அறிந்தி-ருப்பாரோ தெரியவில்லை.

இன்று ஏனைய சமூகங்களுக்கு இந்த நாட்டில் கிடைக்கும் சலுகைகள் உரிமைகளை பெருந்தோட்ட சமூகமும் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசாங்கத்தினால் வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்பட அவர்கள் பக்கம் ஒட்டிக்கொண்டிருக்கும் அதிகாரம் படைத்தவர்களே வாய் திறக்க வேண்டும். 

எனினும் தனிப்பட்ட இருப்பு மற்றும் அதிகாரத்தை தக்க வைத்தல் கார-ணங்களுக்காக கிடைக்கவிருக்கும் சலுகைகளையும் நாட்டாற்றில் விட்-டுச்செல்லும் நிலைமைகளே அண்மைக்காலமாக மலையகத்தில் அதிக-ரித்து வருகின்றன. இந்திய அரசாங்கத்தின் நான்காயிரம் வீட்டுத்திட்-டத்தில் அரங்கேறியிருக்கும் தொழிற்சங்க குடுமி பிடி சண்டைகள் இதை நன்கு உணர்த்தி நிற்கின்றன. வறுமை வீதத்தில் நுவரெலியா மாவட்டம் நாளுக்கு நாள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டு வருகி-றது. கைவசம் இருந்த பொறுப்பான அமைச்சுகள் மற்றும் திட்டங்கள் கைவிட்டுப்போய் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அதிக தமிழ் பாராளு-மன்ற மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்தை கொண்ட மாவட்டம் என மார் தட்டிக்கொள்வதில் இங்கு என்ன பெருமை உள்ளது? கடந்த 35 வரு-டங்களுக்கு மேலாக தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்ட மாவட்டத்திலேயே இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் போது தென் மாகாணத்திலுள்ள மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றி புதிதாக எதுவும் கூறத்தேவையில்லை. குடிசன மதிப்பீட்டு கணக்கெ-டுத்தல் காலகட்டங்களிலும் மலையகமக்களை இந்திய வம்சாவளியினர் என பதியும் படி கூற எவரும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வில்லை. விளைவு இன்று இலங்கை தமிழர்கள் என்ற வகைக்குள் அவர்-களில் கணிசமானோர் அடங்கி விட்டனர். இதன் காரணமாக இந்த சமூ-கத்திற்கென பிரத்தியேகமாக கிடைக்கவேண்டிய சில உரிமைகளும் வாய்ப்புகளும் பறிபோய்விட்டன. அதே போன்றதொரு அபாயகரமான சமூக உருமாற்றம் தான் தென்பகுதி வாழ் மலையக மக்களிடத்தே இடம்பெற்று வருவதை சமித்த தேரர் ஆதாரபூர்வமாக கூறியிருக்கிறார். மேற்படி கருத்தரங்கில் கூறப்பட்ட விடயங்கள் குறித்து இனி ஒவ்வொரு நாளும் அறிக்கை விடுத்தப்பின்னர் அப்படியே அமைதி காத்து விடும் செயலை மட்டுமே இவர்களால் செய்ய முடியும்.

அந்த வகையில் தனக்குள்ள அரசியல் மற்றும் சமூக,ஆன்மீக பின்னணி இடையூறுகள் பற்றி கவலைப்படாமால் தனது பிரதேச மலையக மக்களின் நிலைமைகளையும் அதற்கான அரசியல் தீர்வையும் துணிகரமாக எடுத்துக்கூறிய சமித்த தேரரை பார்த்து நமது பிரதிநிதிகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

'பச்சை ரத்தம்' ஆவண படம் தொடர்பாக – ப.விஜயகாந்தன்


திரு தவமுதல்வனின் முயற்சியின் பயன் வழி உருவான 'பச்சை இரத்தம்' ஆவணப்படத்தினை ஒவ்வொரு மலையகத்தவரும் பார்க்க வேண்டும். திரு தவமுதல்வனின் மேலான இந்த முயற்சி மிககுந்த வரவேற்புக்குரியது. தலைசிறந்த மனிதாபிகளின் மனிதாபத்தைக் கூட பெறாதிருந்த இலங்கை - இந்திய தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் துயரங்களை ஆவணப்படமாக்கி உலகறியச் செய்ய எடுத்த முயற்சி மேலானதே.

இலங்கையிலிருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் துயரங்களை இந்தியர்களோ இந்திய தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் துயரங்களை இலங்கையர்களோ சரியாக புரிந்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அற்றநிலையில் திரு.தவமுதல்வனின் இந்த முயற்சி தொப்புள் கொடி உறவுகளை இணைக்கும் உறவுப்பாலமாக கட்டாயம் திகழும்.

இரண்டு சமூகங்களிலும் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் ஒரே விதமானவையாக இருக்கின்றன. இலங்கையிலும் தொழிலாளர்கள் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை இறுதியில் கேலிகூத்துக்களாகவே முற்றுப்பெறுகின்றன.

முடிந்தவரை தொழிலாளர்களை எல்லோரும் பகடைக்காயாக பயன்படுத்தியே இருக்கின்றனர். தொழிலாளர்களின் உண்மையான நலன் சார்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள் என அடையாளம் காட்டுவது மிக கடினம். தொழிலாளர்களும் தங்களின் பிரச்சினைகளைப் பேசி பேசி விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர்.

பச்சை ரத்தம் ஆவணப்படத்தின் இறுதியில் சேர்த்துள்ள குறிப்புக்கள் மிகப்பயனுடையவை.

அது சார்ந்து இன்னும் சில :
யுத்தத்தில் பெரும்பாலான மலையக தமிழர்கள் பங்கேற்றிருந்தாலும் அவர்கள் வெறுமனே பலிகடாக்களாக ஆக்கப்பட்டமை மாத்திரதே எஞ்சியுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்களும், சமுக நலன்சார்ந்து செயற்படுவதாக கூறிக்கொள்ளும் குழுக்களும், தொழிற்சங்களும், அரசியல் வாதிகளும்,  அரசும் மலையக மக்களை பணயமாக வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் பணம் ஈட்டி பிழைப்பு நடத்தும் ஈனச்செயல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

அரசாங்க தொழில்வாய்ப்புகள் என கூறி வெறுமனே ஆசிரியர் நியமனங்களை மாத்திரம் வழங்கி ஏனைய எல்லா துறைகளிலும் சமூகத்தின் முன்னேற்றத்தை எல்லா வழிகளிலும் வீணடிக்கின்றனர்.

கருவறைக் கொலைகளும் இனசுத்திகரிப்பு முயற்சிகளும் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டே இருக்கின்றன. புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதி, நீர்த்தேக்கத்திட்டங்கள், அபிவிருத்தி திட்டங்கள், அரசியல் சீர்த்திருத்தங்கள் (புதிய தேர்தல் தொகுதி நிர்ணயம்), கல்விச் சீர்த்திருத்தங்கள் (ஆயிரம் பாடசாலைகள் திட்டம்) போன்ற பல விடயங்கள் இவற்றிற்கு ஆதாரமாய் அமைகின்றன.

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை கூலி உயர்வுக்கான போரடத்திலேயே இழுத்தடிக்கச் செய்வதனூடாக அரசியல் விடுதலை, சமுதாய விடுதலை, இனவிடுதலை பற்றிய பேச்சுக்கே வழியில்லாமலாக்கு தந்திரோபாயம் முன்னெடுக்கப்படுகின்றது.

தொழிலாளர்கள் நலன் சார்ந்த இத்தகைய முயற்சிகள் வெற்றியளிக்கும் வகையில் இலங்கையிலும் இந்தியாவிலும் வாழும் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் நலன் சார்ந்து இணைந்து இயங்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேவையான கருத்தாடல்களை தொடங்குவதற்கான அவசியம் பரவலாக உணரப்படுகின்றது.

கவிதை, சிறுகதை போட்டிகள் - "மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்"

மலைநாட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் "மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்" அமரத்துவம் அடைந்த எழுத்தாளர்களை நினைவு கூர்ந்து நடாத்தும் கவிதை, சிறுகதை போட்டிகள்.

காட்டை அழித்து தோட்டம் செய்தோம் தோட்டம் மீண்டும் காடாகிறது - தொழிலாளர்கள் போராட்டம்


லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஊவாக்கலை 1ம் இலக்க தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிருவாகத்தின் அசமந்த போக்கை கண்டித்து நேற்றும் இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொழிலாளர்களின் கோரிக்கைக்கு தோட்ட முகாமையாளர் செவிசாய்க்காத காரணத்தால் இன்றைய தினம் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாகக் கூடி போராட்டம் செய்யத் தொடங்கினர். 

இதனையடுத்து இது குறித்து தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி தொழிற்சங்க பிரதிநிதிகள் அவ்விடத்திற்குச் சென்றனர். 

அதன்பின் தோட்ட முகாமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக முகாமையாளர் உறுதி அளித்துள்ளார். 

எனவே தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார். 

ஊவாக்கலை 1ம் இலக்க தோட்டத்தில் உள்ள தேயிலை செடிகள் உரிய வகையில் பராமரிக்கப்படுவதில்லை எனவும் தேயிலை தோட்டங்களில் காடு மண்டிக் கிடப்பதால் வன விலங்குகள் தேயிலை தோட்டங்களை நாடி வருவதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

கொழுந்து பறிக்கச் செல்லும் வேளை சிறுத்தை, பன்றி, பாம்பு போன்ற விலங்குகளால் தமக்கு உயிர் ஆபத்து ஏற்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

சுமார் இரண்டு வருட காலமாக ஊவாக்கலை 1ம் இலக்க தோட்டத்தில் உள்ள தேயிலைச் செடிகள் பராமரிக்கப்படவில்லை எனவும் மருந்து அடித்தல், உரம் இடுதல், கவ்வாத்து வெட்டுதல், மனாபுல் வெட்டுதல் போன்ற செயற்பாடுகள் முறையாக இடம்பெறுவதில்லை எனவும் இவற்றை தோட்ட முகாமையாளர் கண்டுகொள்வதில்லை எனவும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

மலையகத்தில் பெரும்பாலான தோட்டங்கள் உரிய பராமரிப்பு இன்றி காணப்படுகின்றமை இன்று பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 

மலையக மக்களின் பிரதான பொருளாதாரமான பெருந்தோட்ட பொருளாதாரத்திற்கு சில தேயிலை தோட்ட கம்பனிகாரர்களால் சாவு மணி அடிக்கப்பட்டு வருவதால் மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து உரிய தொழிற்சங்கங்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. 

(அத தெரண - தமிழ்) 

மலையகத் தோட்டங்களில் தொடரும் 'நவீன அடிமைமுறை' - பி.பி.சி

வழக்கறிஞர் இ. தம்பையா

உலகில் நவீன அடிமை முறைகளில் ஒன்றான கட்டாயப்படுத்தி வேலைவாங்கும் தொழில் முறைகளை ஒழிப்பதற்காக உலகநாடுகளை சட்டப்படி நிர்ப்பந்திக்கும் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றில் அரசுகள் கைச்சாத்திட வேண்டும் என்று அடிமைத்தனம், குடியேறிகள் மற்றும் மனிதக் கடத்தல்கள் தொடர்பாக ஆராயும் ஐநாவின் சுயாதீன நிபுணர்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
உலகில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என சுமார் இரண்டு கோடிப்பேர் கட்டாய வேலைவாங்கல் முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா கூறுகின்றது.

'லாபங்களும் வறுமையும்: கட்டாய தொழிலின் பொருளாதாரம்' என்ற பெயரில் ஐஎல்ஓ என்ற சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் இந்தவாரம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபரங்களில், ஏற்கனவே மதிப்பிடப்பட்டதை விடவும் மூன்று மடங்கு அதிகமாக, அதாவது ஆண்டுக்கு சுமார் 150 பில்லியன் டாலர்கள் கட்டாய வேலைவாங்கல் முறைகள் மூலம் லாபம் ஈட்டப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரும் மே 28-ம் திகதி நடக்கவுள்ள உலக தொழிலாளர் மாநாட்டில், அரசுகளை சட்டப்படி நிர்ப்பந்திக்கும் உடன்படிக்கை ஒன்றுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி ஐஎல்ஓவின் உறுப்புநாடுகளை மனித உரிமை ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலைமையில், இலங்கையில் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் இன்றளவும் நவீன அடிமைமுறைகள் நீடிப்பதாக சமூக ஆர்வலர்களும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நூற்றாண்டு காலமாக தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் குடியிருப்புகள், அவர்களுக்கு சொந்தமாக்கப்படாத சூழ்நிலையை தோட்டக் கம்பனிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் இ. தம்பையா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தோட்டக் கம்பனிகள் தமது நிர்ப்பந்தங்களுக்கு கட்டுப்படாத தொழிலாளர்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுகின்ற போக்கு பல தோட்டங்களில் இன்னும் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத் தோட்டமொன்றில், '30 நாட்களும் வேலைசெய்ய தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதற்கு முடியாதபோது தோட்டக் காவலாளிகளை வைத்து தொழிலாளர்களைத் தாக்குகின்ற சூழ்நிலையும் காணப்படுகின்றது' என்றார் வழக்கறிஞர் தம்பையா.

தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சனைகளை சர்வதேச மட்டத்துக்கு கொண்டுசெல்லமுடியாத முடியாதவிதத்தில் தோட்டக் கம்பனிகள் மலையகத் தொழிற்சங்கங்களை முடக்கி வைத்திருப்பதாகவும் வழக்கறிஞர் தம்பையா கூறினார்.

'மலையக நாட்காட்டி' அட்டன் சமூக நல நிறுவனத்தின் (CSC) சாதனை - ப.விஜயகாந்தன்

அட்டனை தளமாகக் கொண்டு இயங்கும் சமூக நல நிறுவம் (CSC) 2012ஆம் ஆண்டு மலையகத்திற்கான தனித்துவமான நாட்காட்டி ஒன்றினை வெளியிட்டிருந்தது. வழமையான நாட்காட்டி என்பதற்கு மாற்றாக ஒரு வரலாற்று ஆவணமாக இதனை காணமுடிகின்றது. அதுவும் மலையத்திற்கான தனித்துவத்தினை தன்னகத்தே கொண்ட இந்நாட்காட்டி மலையகம் சார்ந்த வரலாற்றினை பதிவு செய்துள்ளது.


நாட்காட்டியினுள் காணப்படும் விசேட அம்சங்கள்

1.புகைப்படங்கள்

•19அம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து தமிழர்கள் இலங்கைக்கு  அழைத்துவரப்பட்டமைக்கான காரணிகளை காட்டும் படங்கள்
•இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சிறிய படகுகளில் தொழிலாளர்கள்  ஏற்றி வரப்படும் காட்சிகளை கொண்ட படங்கள்
•தோட்டங்களில் தொழிலாளர்களை கட்டுக்குள்  வைத்திருந்த    பெரியங்கங்காணிகளின் படங்கள்
•கோப்பி தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலைசெய்யும் காட்சிகளை  காட்டும் படங்கள்
•தேயிலை, இறப்பர் தோட்ங்களுக்கு அதிகமான தொழிலாளர்கள்  வரவழைக்கப்பட்ட காட்சிகள்
•வெள்ளையர்களின் காலத்தில் தொழிலாளர்கள் மீதான உரிமை மீறல்கள்,  அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை காட்சிப்படுத்தும்  படங்கள்
•பிரஜாவுரிமை பரிக்கப்பட்ட காலத்திய தலைவர்களின் படங்கள்
•மலையக பகுதிகளில் ஆரம்பிக்கபட்ட புகையிரத சேவை, தேயிலை  கொண்டுச் செல்லும் கப்பல் என்பவற்றை பிரதிபலிக்கும் படங்கள்
•மலையக கல்வித்துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களை பிரதிபலிக்கும்  படங்கள்
•நாட்டின் இன முரண்பாடுகள் மலையகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை  பிரதிபலிக்கும் படங்கள்
•மலையக தொழிலாளர்களின் வாழ்விடச்சூழல்கள், தொழிற் தளங்கள்,  அபிவிருத்தி திட்டங்கள், கூட்டு ஒப்பந்த நிகழ்வுகள் முதலானவற்றை  பிரதிபலிக்கும் படங்கள்
•தேயிலை தொழற் துறையில் மாற்றம் இல்லாத போதும் உலக  சந்தையில் தேயிலைக்கான கிராக்கி உயர்வடைதல், மலையகத்தில்  ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களை குறியீட்டு வடிவில் குறிக்கும்  படங்கள்


2.விசேட தினங்கள் - சர்வதேச நினைவுத்தினங்களும் இலங்கைக்கு உரிய  விசேட தினங்களும் அவ்வந் திகதிகளின் மேல் குறிப்பிடப்பட்டுள்ளது.

3.வரலாற்றில் சில நபர்கள் (மறைவு தினம்) எனும் தலைப்பில்  மலையகத்தில் முக்கியத்துவம் பெறும் நபர்களினதும் உலகளவில்  பிரபல்யமான பலரின் நினைவுத்தினங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
4.வரலாற்றில் சில நிகழ்வுகள் எனும் தலைப்பில் மலையகத்தில்  விளைவுகளை ஏற்படுத்திய பல நிகழ்வுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.  எடுத்துக்காட்டாக போராட்டங்கள், சட்டங்கள் போன்றவை)
5.நபர்களின் படங்கள் - நாட்காட்டியின் கீழ்ப்பகுதியில் சிறிய அளவிலான  தனி நபர்களின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்படங்கள் மலைய  தியாகிகள், தொழிற்சங்கள மற்றும் அரசியல் தலைவர்கள்  என்பவற்றோடு உலக பிரசித்தி பெற்றவர்களின் படங்களும்  இணைக்கப்பட்டுள்ளன.

மேற்படியான தலைப்புகளில் ஒவ்வொரு மாதத்தையும் காட்டும் பக்கங்களில் வெவ்வேறான பல அரிய குறிப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மலையக நாட்காட்டியினை அநேகமானோர் பார்த்திருப்பதற்கான சாத்தியங்கள் குறைவானதாக இருந்திருக்கும் என்ற யாதார்த்தத்தை புரிந்து இக்குறிப்புக்கள் இங்கே வழங்கப்படுகின்றன. ஆர்வர்கள் பயன்பெறுவர் என நம்புகின்றோம். அட்டன் சமூக நல நிறுவனத்திற்கும் இவ் நாட்காட்டியை உருவாக்கியளித்தவர்களுக்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும்.

சிறுபான்மையினத்தவரின் ஐக்கியம் குறித்த மலையக மக்களின் கலந்துரையாடல்


சிறுபான்மை தேசிய இனமக்களின் ஒருமைப்பாட்டிணக்க முயற்சியில், மலையக மக்களினது அரசியல் உரிமைபற்றிய கலந்துரையாடல் நேற்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் ஆயதப் போராட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புலம் பெயர் சூழலில் பல்வேறு தரப்பினராலும் அமைப்புக்களாலும் சிறுபான்மை தேசிய இன மக்கள் தொடர்பான அரசியல் செயற்பாடுகள் முனைப்புப்பெற்று வருகின்றன.

சிறுபான்மை தேசிய சமூகங்களை ஒன்றுதிரட்டி, ஒருமித்த கருத்துடன் அவர்களின் அரசியல் தீர்வுபற்றிய கோரிக்கை ஒன்றினை அல்லது திட்டவரைபொன்றினை முன்மொழியும் பட்சத்தில், அது சாதகமான அரசியல் சூழலை இலங்கையில் உருவாக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், லண்டனில் அமைந்துள்ள தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம், சிறுபான்மை தேசிய இனம்சார்ந்த கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.

இந்தவகையில் நேற்று லண்டன் ஈஸ்ற்ஹாமில் மலையக மக்களின் அரசியல் உரிமைகள் பற்றியும், சிறுபான்மை இன மக்களின் ஒருமைப்பாட்டில் மலையக மக்களினது இணைவின் அவசியம் பற்றியும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நான்கு தசாப்தத்திற்கு மேலாக மலையக மக்கள் மத்தியில் பணியாற்றி வருபவரும், மனிதஉரிமைகள் செயற்பாட்டாளரும், ஆய்வாளரும் சமூகவியலாளருமான அருட்தந்தை கை டி பொன்கலன் கலந்துகொண்டார்.

அருட்தந்தை கை டி பொன்கலன் மார்ச் மாதம் 24 ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டு மலையக மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக உரையாற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள் இராணுவ அடக்குமுறை, பௌத்த மேலாதிக்கம், அரசியல் அடக்குமுறை, சிங்களமயமாக்கல், நிர்வாக அடக்குமுறை என்பவற்றால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றார்கள் என்றும், இம்மக்களிடையே உள்ள வேறபாடுகளையும் கருத்துமுரண்பாடுகளையும் களைந்து ஒருமித்த நோக்கோடு அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த கலந்துரையாடலில் பல சமூக ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உரையாற்றினார்கள். தலைமைக்கு கட்டுப்படும் இயல்புகொண்ட மலையகமக்களின் பலம் அரசியல் தீர்வுகளில் முக்கியமானது என்று எழுத்தாளரும் ஆய்வாளருமான டீ.யு. காதர் குறிப்பிட்டார்.

இன்றுள்ள நெருக்கடி நிலையில் இருந்து சிறுபான்மை தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்க வலுவான கருத்துவாக்கங்களும் அதற்கான தலைமையும் செயற்பாடுகளும் தேவை என்று கலந்துகொண்டவர்கள் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி - ஆதவன் நியுஸ்

தெற்கில் உள்ள மலையக தமிழர்கள் சிங்களவர்களாக மாறி வருகின்றனர் - சமித்த தேரர் (பழனி விஜயகுமார்)


மலையகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் மலையக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய புதிய தலைமை உருவாக வேண்டும் என தென் மாகாண சபை உறுப்பினர் வணக்கத்திற்குரிய பத்தேகம சமித்த தேரர் தெரிவித்தார். 

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் குழு அறையில் 23ம் திகதி வௌ்ளிக்கிழமை மாலை நடைபெற்ற தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை பெருபித்தல் தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றிய போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

´வௌிநாட்டில் இருந்து எனது நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் கண் சிகிச்சை தொடர்பில் நன்கு கற்றறிந்தவர் என்பதால் கண் பரிசோதனை செய்து சிலருக்கு கண்ணாடி வழங்க என்னிடம் இடமொன்று கேட்டார். நான் அவரை தென் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றேன். அங்கு சுமார் 30 மாணவர்களுக்கு அவர் கண் பரிசோதனை செய்துவிட்டு அவர் வீட்டுக்கு வந்தார். 

அவரை நான் சந்தித்தபோது கண்ணீர்விட்டு அழுதார். காரணம் பரிசோதித்த பிள்ளைகளின் கண்ணில் பாரிய குறைப்பாடு காணப்படுவதாக தெரிவித்தார். பிள்ளைகளின் உணவு பழக்கம் இதில் முக்கிய காரணி என்ற அவர், சில பிள்ளைகள் கண் பார்வையற்று போகும் நிலையிலும் மூளை பாதிப்பு ஏற்படும் நிலையிலும் உள்ளதாகத் தெரிவித்தார். 

தோட்டப் பகுதிகளில் பிள்ளைகள் காலையில் ரொட்டி (கோதுமை மாவில் தயாரிக்கப்படுவது) பகல் ரொட்டி இரவு பாண் அல்லது வேறு ஏதேனும் உண்ணுகின்றனர். போசாக்கான உணவு கிடையாது. பெற்றோர் காலையில் வேலைக்குச் சென்று மாலையே வீடு திரும்புகின்றனர். அவர்களும் சரியாக கவனிப்பதில்லை. 

நுவரெலியா மாவட்டத்தில் பரவாயில்லை. நுவரெலியாவைத் தாண்டி தென் பகுதிகளில் சிங்களவர்களுக்கு மத்தியில் வாழ்கின்ற தமிழர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதே லயன் அறை வாழ்க்கை, அரசாங்க நலன்புரி திட்டங்கள் எதுவும் கிடையாது. 

ஒருமுறை நான் ஒரு தோட்டத்திற்குச் சென்றிருந்தேன். அந்த ஊர் மக்கள் யாருக்கும் வாக்களிக்க முடியாது என்று கூறினர். அந்த மக்களிடம் வாக்கு கேட்க எனக்கும் வெட்கம். 13 அறைகள் கொண்ட ஒரு லயனில் இருக்கும் 30 பிள்ளைகள் ஒரு மலசலகூடத்தையே பயன்படுத்துகின்றனர். 

நாட்டில் ஜனநாயகம், உரிமை, அதிகாரம் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். நாட்டில் யாருக்கும் விசேட கவனிப்பு இருக்க முடியா எவரையும் கவனிக்காமலும் இருக்க முடியாது. 

மலையக மக்கள் இந்தியாவில் இந்தியாவில் இருந்து விருப்பத்துடன் அழைத்து வரப்படவில்லை. தென் பகுதியில் உள்ள மலையகத் தமிழர்கள் இன்னும் கொஞ்ச காலத்தில் தனி சிங்களவர்களாக மாறிவிடுவர். தென் பகுதி மலையகத் தமிழர்களின் மொழி, கலாசாரம், மதம் அழிந்து வருகிறது. இதனை அனுமதிக்க முடியாது. இவை அந்த மக்களின் அடிப்படை உரிமையாகும். 

சமூக அழுத்தத்தின் காரணமாக தென் பகுதி மலையக மக்கள் சிங்களவர்களாக மாற்றப்படுகிறன்றனர். இன்று அவர்களின் பிள்ளைகளுக்கு சிங்கள பெயர்கள் வைக்கின்றனர். நான் சிறுவயதில் யாழ்ப்பாணம் சென்று வளர்ந்திருந்தால் சிங்களத்தை மறந்திருப்பேன். இந்த நிலையை அனுமதிக்க முடியாது. சமூக அழுத்தத்தினால் இந்த மக்களின் அடையாளம் அழிக்கப்படுகிறது. 

நான் ஒரு சுப்பர்வய்சரை (தோட்ட கண்காணிப்பாளர்) சந்தித்தேன் மலையக இளைஞர்களின் கல்வித் தரம் முன்னேற வேண்டும் என அவரிடம் கூறினேன். நீங்கள் ஏன் அதனை பேசுகிறீர்கள் அப்படி நடந்தால் உங்களால் மாகாண சபைக்குச் செல்ல முடியாது என அவர் கூறுகிறார். இவ்வாறான நிலைமைதான் காணப்படுகிறது. 

நாங்கள் வரலாற்று தவறு செய்துள்ளோம். இந்தியாவில் இருந்து விருப்பம் இன்றி வந்த மலையக மக்கள் உரிமை இழந்து நிற்கின்றனர். உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற அடிமைத்தனம் இன்றும் உள்ளது. எனவே மலையகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் மலையக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய உண்மையான தலைமை உருவாக வேண்டும்´ என தென் மாகாண சபை உறுப்பினர் வணக்கத்திற்குரிய பத்தேகம சமித்த தேரர் தெரிவித்தார்.

மலையகத்தில் பதிலீட்டு அரசியலும் மாற்று அரசியலும்


2013 பொதுவில் இலங்கையில் உள்ள அனைத்து உழைக்கும் மக்களும் அரசியல், பொருளாதார ரீதியில் பாரிய சவால்களுக்கு உட்பட்ட ஆண்டாகும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள், சுத்தமான நீர் வழங்க கோரிய போராட்டங்கள், ஆட்கடத்தல்கள் படுகொலைகளையும் நிறுத்தவும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான என்ற கோரிக்கையுடனான போராட்டங்கள் ஆகியன மக்களின் எதிர்ப்பை அரசியல் அதிகார மையத்துக்கு வெளிப்படுத்தி நின்றன. எனினும் மக்களின் இந்த போராட்டங்கள் எவ்விதத்திலும் வெளிப்படாத, பிரதிபளிக்காத பிரதேசமாக மலையகம் காணப்பட்டது. மலையக மக்கள் முகம்கொடுக்கும் பொதுப் பிரச்சினைகளுக்கும் (பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, மனித உரிமை மீறல்கள், தனியார்மயம், இலஞ்ச ஊழல் அதிகரிப்பு) தமக்கே உரித்தான விசேட பிரச்சினைகளுக்கும் (சம்பள கூட்டு ஒப்பந்தம், வீடு, காணி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு) குரல் கொடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? ஏனைய பிரஜைகளைவிட பொதுப் பிரச்சினைகளில் அதிகம் பாதிப்பவர்களாகவும் விசேடமாக பாரபட்சங்களுக்கும் உள்ளாக்கியுள்ள நிலையில் மலையக மக்களின் மௌனம் ஆழமாக பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மலையக அரசியல் தலைமைகள் பொதுவில் அரசாங்கத்திற்குச் சார்பாக இருப்பதனால் அரசாங்கத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்ற மக்களின் எண்ணத்தினால் இந்த மௌனம் நிலவுகின்றது என்றோ அல்லது மலையக மக்களை சரியாக வழிநடத்த மாற்று கொள்கையுடனான வேலைத்திட்ட நடைமுறையுடனுமான அரசியல் சக்தி இன்மையினாலே என்று நோகுவது கோளாறுகளைக் கொண்டதாகும்.

மலைகயத்தில் மைய நீரோட்டத்தில் உள்ள அரசியல் சக்திகள் அனைத்தும் அரசாங்கத்தை சார்ந்து நிற்கின்றன.  அரசாங்கத்தைப் சார்ந்து நிற்பவைகளுக்கிடையிலான வாக்குப் போட்டிகளே தேர்தல் காலத்தில் ஒரே ஒரு ‘போராட்டமாக’ நிற்கின்றது.  இந்த போராட்டத்தில் யார் வெற்றி பெற்றலும் செயற்பாடுகளில் அரசியல் நடைமுறையில் பாரிய வேறுபாடுகள் இல்லை. சமரச அரசியல் என்ற மக்கள் உரிமையை சமரசம் செய்யும் அரசியல் பல்வேறு பெயர்களினால் முன்னெடுக்கப்படுகிறது. இன்று அதன் தொடர்ச்சியாக அபிவிருத்தி அரசியல் என்ற பெயரில் அது நிலவுகிறது. அத்தோடு அரசாங்க அதிகார மையத்துடன் நாங்களே அதிக உறவையும் செல்வாக்கையும் வைத்திருக்கின்றோம் என்பதனை வெளிப்படுத்தும் ஆர்வமும் இந்த மைய நீரோட்ட அரசியல் சக்திகளிடம் காணப்படுகிறது.

எனவே, மைய நீரோட்டத்தில் உள்ள அரசியல் சக்திகள் தங்கள் தேர்தல் மூலமான வெற்றியின் பலத்தை கொண்டு மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் நிலைநாட்டவேண்டும் என்ற அடிப்படையிலேயே இயங்கி வருகின்றன. இந்த அணுகுமுறையில் இவர்களுக்கிடையே மாற்றங்கள் இல்லை. இந்த கருத்து ஜனநாயக வழிமுறை என கூறப்பட்டாலும் அது மக்களை அரசியலில் இருந்து நீக்குவதற்கும் மறுபுரமாக மக்களை ஒடுக்குவதற்கும் சாதகமாக உள்ளமையை காணத்தவறக் கூடாது. நாங்களே மக்களின் பிரதிநிதி என்று கூறுபவர்கள் ஒரு கூறிகொள்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த வரலாறு இல்லை. மக்களின் பிரதிநிதிகள் என்பது மக்கள் எவ்வளவு தூரம் அரசியல் செயற்பாடுகளில் இணைந்துள்ளார்கள் அரசியல் தீர்மானங்களில் பங்குபற்றுகிறார்கள் என்பதை வைத்தே அளவிடக்கூடியதாகும். மலையகத்தில் இந்த அளவிட்டை கொண்டு நோக்கினால் இலங்கையில் ஏனைய மக்களை விட அரசியலில் இருந்து நீக்கம் பெற்றவர்களாகவே மலையக மக்கள் காணப்படுகின்றார்கள்.

மைய நீரோட்ட அரசியல் சக்திகள் தேர்தல் காலத்தில் ஒரு கட்சியின் செயற்பாடுகளை விமர்சிப்பதன் மூலம் அவர்கள் தங்களை மாற்று அரசியல் சக்தி என்று காட்ட முனைகின்றபோதும் அவர்கள் உண்மையில் பதிலீடுகளே. இவர்கள் உடனடியாகவோ அல்லது சற்று காலம் தாழ்த்தியோ தாங்கள் பதிலீடுகளே என்பதை வெளிப்படுத்திவிடுவர். இதனை மலையக அரசியல் வரலாறு மலையக மக்களுக்கு உணர்த்தி வந்துள்ளது.  அப்படியானால் மாற்று அரசியல் சக்தி என்றால் என்ன? மக்களை மையப்படுத்தியதும் மக்கள் ஊக்கத்துடன் பங்குபற்றல் இடம்பெறுகின்ற அரசியலாகும். இங்கு மக்கள் விழிப்புணர்வுட்டப்பட்டு அரசியலில் அணிதிரட்டப்படுவது அடிப்படையான அம்சமாகும். இங்கு மக்கள் சொல்லுகின்றவற்றை கேட்டு கொண்டிருக்கும்  முனைப்பற்ற மக்கள் கூட்டத்திற்கு பதிலாக உரையாடலை மேற்கொள்ளும் மக்களாக மாற்றப்படும் பண்பாடு காணப்படும். இவ்வாறான மாற்று அரசியலுக்கான முனைப்பும் தேவையும் மலையக இலக்கியப் பரப்பில் தொடர்ந்து நிலைபெற்று வந்துள்ளமையை மறுக்க முடியாது. அத்தோடு இது மலையகத்தில் பல்வேறு தரப்பினரால் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன.

நடேசய்யர் முதற்கொண்டு அந்த அரசியல் பாரம்பரிய ஜனநாயகவாதிகளின் செயற்பாடுகள், இடதுசாரி அரசியல் சக்திகள் என தொடர்கிறது. இன்று மலையகத்தில் மாற்று சக்திகளாக அரசியல் தொழிற்சங்க அமைப்புகள், சில தனிநபர்கள், புத்திஜீவிகள், இலக்கியவாதிகள், ஆசிரியர்கள் இருந்து வருகின்றன.  இவர்கள் மாற்று குரல்களாக பல மட்டங்களில் ஒலித்துவருகின்றன.  இவர்களுக்கிடையில் ஒரு ஐக்கியப்பட்ட வேலைத்திட்டம் ஒன்று இல்லாத போதும் இவர்களின் குரல்கள் ஊடகங்களில் ஒலி;ப்பதன் வாயிலாக மக்களின் எதிர்பார்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை.  மலையகத்தில் பதிலீட்டு தலைமைகள் அனைத்தும் மக்கள் நலன்சார் விடயங்களுக்கு உதட்டளவிலேனும் இன்று முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணமாக இவர்களின் குரல் காரணமாக அமைந்துள்ளது.  தவிர்க்க முடியாமல் மக்களின் உரிமைகளையும் ஏதோ ஒரு அடிப்படையில் பேசுவதற்கு அவர்கள் நிற்பந்திக்கப்பட்டுள்ளனர்.  இதனை மாற்று சக்திகளுக்கு கிடைத் வெற்றி என கொள்வதில் சிக்கல் உண்டு.  இது ஆதிக்க, பதிலீடு அரசியல் சக்திகளின் பிடி மக்களிடத்தில் நிலவுவதனை உறுதி செய்துள்ளமையை மாற்று சக்திகள் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

இந்த பின்னணியில் மாற்று அரசியல் சக்திகள் அரசியல் ரீதியாக வலுப்பெற வேண்டிய அவசரத் தேவைக் காணப்படுகிறது. இதற்கு மாற்று அரசியல் சக்திகளிடையே ஐக்கியமும் மக்கள் மையப்படுத்தப்பட்ட நடைமுறையும் (practice) தவிர்க்க முடியாதது. ஒரு பொது உடன்பாடுகளின் அடிப்படையில் மாற்றுச் சக்திகள் ஐக்கியப்படாத நிலையில் அது சலகை அரசியலுக்கும் சமரச அரசியலுக்கும் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கும் மலைய மக்கள் தொடர்ந்தும் இழுத்துச் செல்லப்படுவதனையும் தடுக்கவியலாது.

மலையகத்தில் இருந்து - விஜயகுமார்

கருத்தரங்கு: தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை பெருபித்தல்


தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை பெருபித்தல் தொடர்பான கருத்தரங்கு ஒன்று நாளை (23) வௌ்ளியன்று இடம்பெறவுள்ளது. 

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் குழு அறையில் நாளை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை இந்த கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. 

பாத் பைண்டர் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்விற்கு நிறுவனத்தின் தலைவரும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளருமாகிய பேர்நாட் குணதிலக தலைமை தாங்கவுள்ளார். 

நிகழ்வின் பிரதான உரையை தோட்ட வீடமைப்பு, உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.வாமதேவன் ஆற்றவுள்ளார். 

´தோட்ட சமூகமும் சமத்துவமும்´ என்ற தலைப்பில் தென் மாகாண சபை உறுப்பினர் வணக்கத்திற்குரிய பத்தேகம சமித்த தேரர் உரையாற்றவுள்ளார். 

´உள்ளூராட்சி சேவைகளும் தோட்டத்துறை சமூகமும்´ என்ற தலைப்பில் புனித மார்க்ஸ் தேவாலயம் பதுளை மற்றும் கிறிஸ்ட் தேவாலயம் மொனராகலை ஆகியவற்றின் வதிவிட போதகர் பிதா அன்ட்ரூ தேவதாசன் உரை நிகழ்த்தவுள்ளார்.

´தோட்ட இளைஞரை ஏனைய துறைகளில் தொழிற்படுத்துவதினை பெருப்பித்தல்´ என்ற தலைப்பில் திறந்த பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். சந்திரபோஸ் உரையாற்றவுள்ளார். 

தமிழ் மற்றும் சிங்களத்தில் சமகால மொழி பெயர்ப்புடன் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

(அத தெரண - தமிழ்) 

வளர்ச்சி கண்டுவரும் மலையக கல்வி - இரா. சிவலிங்கம்


மலையகம் கல்வித் துறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இலங்கையின் கல்வி வரலாறு பல தசாப்தங்களை கடந்துள்ளது. குருகுலக் கல்வி முதல் போர்த்துகேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற வெளிநாட்டவர்கள் இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலினார்கள்.

இலங்கையில் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவால் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1945 ஆம் ஆண்டு இக் கல்வி முறைமையில் ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன. 1946 ஜூன் மாதத்தில் ‘இலவச கல்வி சட்டம்’ அமுல்படுத்தப்பட்டது. 1951 இல் கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் 6 வயது முதல் 16 வயது வரையான எல்லா பிள்ளைகளும் கட்டாயக் கல்வியைப் பெற வேண்டும் என்ற சட்டமும் அமுலுக்கு வந்தது.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச கல்வியானது மலையக மக்களுக்கு கிடைப்பதற்கு 30 வருடங்கள் சென்றன. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் 03 தசாப்தங்களுக்கு பின்னரே தோட்டப் பாடசாலைகள் அரசுடைமைகளாக்கப்பட்டன.

ஏனைய சமூகங்களுக்கு கிடைத்த கல்வி வாய்ப்புக்களை 30 வருடங்களின் பின்னரே நோக்கவேண்டும். இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட மலையகச் சமூகம் பல வழிகளாலும் பல துறைகளாலும், தொழில் துறை ரீதியாகவும், கலை, கலாசார, பண்பாட்டு அம்சங்களாலும் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளாலும் மாற்றங்களை காணக்கூடியதாக உள்ளது.

பாடசாலைக்கு மாணவர் அனுமதி, பெற்றோரின் பங்களிப்பு, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நிலை போன்றவற்றை சுட்டிக் காட்டலாம். இன்னும் 2ம் தர கல்வியை உயர்த்த வேண்டும். அத்தோடு உயர்தர கல்வி பெறுபேற்றையும், பல்கலைக்கழக அனுமதியையும் அதிகரிக்க கூடிய வகையில் வேலைத்திட்டங்களை அமைச்சு மட்டங்களில் முன்னெடுக்க வேண்டும்.

இன்று மலையகத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் ஆசிரியர்களாக, விரிவுரையாளராக, எஞ்சினியர்களாக, வக்கீல்களாக, நிர்வாக உத்தியோகத்தர்களாக, அதிபர்களாக, கல்வி சேவை உத்தியோகத்தர்களாக, கல்வி அதிகாரிகளாக, அரசியல்வாதிகளாக (அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்களாக உள்ளார்கள்) வெளிநாட்டு தூதுவர்களாக, உலக வங்கி நிறுவனங்களில் வேலை செய்பவர்களை, அரச சார்பற்ற நிறுவனங்களை கொண்டு நடத்துபவர்களாக, உயர் அதிகாரிகளை, பொலிஸ் உத்தியோகஸ்தர்களாக, வர்த்தகர்களாக, உழைப்பாளர்களாக (தோட்ட தொழிலாளர்கள்) இன்று காணப்படுகின்றனர்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கூட வருடா வருடம் தேசிய மட்ட புள்ளிகளோடு போட்டி போடுகின்றார்கள். மாவட்ட, மாகாண, தேசிய மட்டத்தில் 2ம், 10ம் இடங்களையும் கூட பெற்றுக் கொள்கின்றார்கள்.

மலையகப் பிரதேசத்தில் இருந்து இன்று பெரும்பாலான மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இம்முறையும் நுவரெலியா மாவட்டத்தில் 185, 181 புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் இருக்கின்றார்கள்.

இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். நாங்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

க. பொ. த. சாதாரண பரீட்சையில் கூட 9 ‘ஏ’ சித்திகளை அதிகமான மாணவர்கள் பெற்றுக் கொள்வதைக் காணலாம். தற்போது உயர் தரத்திற்கு வரும் மாணவர்கள் கலை, வர்த்தகத்தை தெரிவு செய்வதை விட விஞ்ஞான, கணித பிரிவுகளுக்கு செல்வதே அதிகமாக உள்ளது.

உயர்தரப் பரீட்சையில் கூட கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளில் 3 ‘ஏ’ சித்திகளை பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் மிக அதிகமாக உள்ளார்கள். மலையகத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் விகிதம் கூடியுள்ளது.

அண்மையில் ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் உலக ரீதியில் 5 ம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் கூட மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலகட்டத்தில் மலையக பிரதேசத்தில் ஆசிரியர்கள் கூட வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று மலையகத்தில் பிறந்து வளர்ந்து இப்பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்றவர்களே ஆசிரியர்களாக அதிபர்களாக, விரிவுரையாளர்களாக, ஆசிரிய ஆலோசகர்களாக, பட்டதாரி ஆசிரியர்களாக (ஷிழிரிஷி, ஷிழிதிஷி, ஷிழிஜிஷி) உத்தியோகத்தர்களாக கல்விப் பணிப்பாளர்களாக, ஆலோசகர்களாக உருவாகியிருப்பது மலையகத்தின் கல்வி வளர்ச்சியை ஒரு படி மேல் உயர்த்தி காட்டுகிறது.

எமக்கு கிடைத்த மனித பெளதிக வளங்களை பயன்படுத்திக் கொண்டு இச்சமூகம் இப்போது ஓரளவு கல்வித் துறையில் வளர்ந்து வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

யார் எந்த வகையில் விமர்சனங்களை முன்வைத்தாலும் பல அமைச்சர்களின் அயராத உழைப்பினால் பாடசாலை கட்டடங்களில், ஆசிரியர் நியமனங்களும் பெளதிக வளங்களும் கிடைத்திருக்கின்றன. இவற்றை நாம் போராடியே பெற்றுள்ளோம். பிரதிக் கல்வி அமைசச்ர், மாகாணக் கல்வி அமைச்சர் பதவிகளைப் பெற்றதும் கல்வி மறுமலர்ச்சியின் வெளிபாடே ஆகும்.

எனவே கல்வி வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்ற மலையகம் இன்று பூரணமாக வளர்ச்சி அடைய நீண்டகாலம் காத்திருக்க தேவையில்லை. மலையகம் கல்வியில் முன்னேற முடியும்.

முன்னேறும் இன்றைய ஆசிரியர்களின் அயராத உழைப்பின் மூலம் எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும்.

மலையக அமைச்சர்கள், உறுப்பினர்கள் தொழிற் சங்கங்கள் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கான வேலைத் திட்டங்களை கட்சி, இனம், மதம், சாதி பார்க்காமல் மலையகத்தின் கல்வி வளர்ச்சியே எமது சமூகத்தின் வளர்ச்சி என்ற தொனிப் பொருளில் சேவையாற்ற வேண்டும். தற்போது பல அமைச்சர்கள் இவ் விடயத்தில் அதிக கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது.

மலையகப் பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்வதன் மூலம் மலையகத்தின் கல்வி அபிவிருத்தியை பிரசித்தப்படுத்தலாம். இதற்கு உயர் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை ஒரே நோக்கோடு செயற்பட வேண்டும்.

இன்று இருப்பதை விட பல மகா வித்தியாலயங்கள், மத்திய மகா வித்தியாலயங்கள், தேசியப் பாடசாலைகள், கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் மலையகத்தில் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கல்வியியல் கல்லூரிகளை மேலும் மலையகத்திற்கு நன்மை தரக்கூடியவாறு பல பயிற்சி நெறிகளையும் ஆரம்பிக்க வேண்டும். மலையகத்திற்கென வாசிகசாலை, அருங்காட்சியகம், கணனி வளநிலையம், ஆய்வு கூடங்கள், தகவல் மையங்கள் என்பன கல்வித் துறையை மையப்படுத்தி உருவாக்க வேண்டும். குறிப்பாக மலையகத்தில் இருந்து கற்று இன்று உயர் ஸ்தாபனங்களில் இருப்பவர்களின் சேவையை மலையகம் முழுமையாக பெறும் போது எமது கல்வி வளர்ச்சி வெகு தூரத்தில் இல்லை என்பது உறுதி.

எமது, மக்களையும், ஆசிரியர்களையும், அதிபரையும் குறைகூறுவதை விட்டுவிட்டு செயற்பாட்டில் இறங்குவோம். அதற்காக சிறப்பாக சேவை செய்பவர்களையும், சிறந்த பெறுபேற்றை எடுத்த மாணவர்களையும் பாராட்டி கெளரவிக்க வேண்டும். ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் உச்சாகப்படுத்த வேண்டும்.

வருடா வருடம் இவர்களை உற்சாகப்படுத்தல் செயற்திட்டங்களை உருவாக்க கல்வித் திணைக்களங்கள் கல்வி அமைச்சு உட்பட கல்வித் துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பும் முன்வர வேண்டும்.

பரீட்சை பெறுபேறுகளை அதிகரிப்பதற்கு பாடசாலை மட்டத்திலும், மாவட்ட, மாகாண மட்டத்திலும் (6 – 9) தேசிய மட்டத்திலும் பரீட்சைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு செயலமர்வுகளை செய்வதோடு மாணவருக்கும் வழிகாட்டல் கருத்தரங்குகளையும் பரீட்சைகளையும் நடத்தி பரீட்சை பெறுபேறுகளை பாடசாலை மட்டத்தில் மீள் பரிசீலனை செய்யப்பட்டு குறைபாடுகள், பிரச்சினைகள் காணப்படின் நிவர்த்தி செய்யவேண்டும். பாடசாலை சமூகத்தோடு தொடர்புடைய (ஷிளிஷி) பழைய மாணவர் சங்கம், நலன்விரும்பிகள், அரசியல்வாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் சேவைகளையும் பெற்றுக் கொள்வதோடு நிஷிதி ஷிஸிகிநிரிவிஹி திளி. வளவாளர்கள், கற்றோர்கள் நிபுணர்களின் சேவைகளை கூடுமானவரை பெற்றுக்கொள்ள வேண்டும். சாதாரண தரத்திற்கு ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர்கள், சிரேஷ்ட ஆசிரியர்கள் போன்றோரை பாடசாலைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நன்றி - தினகரன்

'நந்தலாலா' ஜோதிகுமாருடன் ஒரு நேர்காணல்! - வ.ந.கிரிதரன்


'நந்தலாலா' ஆசிரியர்களிலொருவர்.இலங்கையிலிருந்து வெளிவரும் 'நந்தலாலா' , முன்பு வெளிவந்த 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாருடன் நடைபெற்ற நேர்காணல். இந்த நேர்காணல் 1997இல் ஜோதிகுமார் தொராண்டோ வந்திருந்த சமயம் எடுக்கப்பட்டது. பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் கருதிப் பதிவுகளுக்காக இங்கு பதிவு செய்கின்றோம். பேட்டி கண்டவர் வ.ந.கிரிதரன்.- 

வ.ந.கிரிதரன்:ஜோதிகுமார்! நீங்கள் ஆரம்பத்தில் 'தீர்த்தக்கரை' சஞ்சிகையினை வெளியிட்டீர்கள். தற்போது 'நந்தலாலா'வினை வெளியிடுகின்றீர்கள். ஏனிந்தப் பெயர் மாற்றம்?


ஜோதிகுமார்: தீர்த்தக்கரை நண்பர்களால் ஒன்று சேர்ந்து வெளியிடப்பட்டது. 1983 வன்செயலின் பின்னர் தீர்த்தக்கரை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பலர் பிரிந்து சிதறுண்ட நிலையில்...அவர்களனைவரையும் மீண்டும் ஒன்றிணைத்து அதே பெயரில் சஞ்சிகையினை வெளியிடுவது முடியாத காரியமாயிருந்தது. எனவே அதில் ஈடுபட்டிருந்த சில நண்பர்கள் தீர்த்தக்கரை வெளிவராத நிலையில் பிறிதொரு சஞ்சிகையினை ஆரம்பிக்கலாமென்று கூறினார்கள். அதன் விளைவாக உருவானதுதான் 'நந்தலாலா'. இரண்டினையும் ஒரே சஞ்சிகையென்று கூறமுடியாது. ஆனால் ஒரே இலக்கிய தர்மத்தினை, ஒரே போக்கினைக் கொண்டவையெனக் கூறலாம். 

வ.ந.கிரிதரன்: ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் 'நந்தலாலா'வின் பங்களிப்பு எத்தகையதாக இருக்க வேண்டுமெனக் கருதுகின்றீர்கள்? மலையக இலக்கியக் களத்தையே பின்னணியாகக் கொண்டு இயங்கவேண்டுமெனக் கருதுகின்றீர்களா?அல்லது..... 

ஜோதிகுமார்: அது சகல சமூகங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. மலையகத்தை மாத்திரம் உள்ளடக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மலையகம் என்ற எல்லையைத் தாண்டிவரவேண்டிய நிர்பந்தமிருக்கிறது. அதனால், மலையகமென்ற அதாவது அதனுடைய யதார்த்தப் போக்கினை, அதனுடைய குணாம்சங்களை வெளிப்படுத்தும் அதே சமயம் பல சமூகங்களிற்கிடையே புரிந்துணர்வினை தோற்றுவிக்குமொரு சஞ்சிகையாகவும் இலக்கியப் பாலமாகவும் இருக்கவேண்டுமென எண்ணுகிறோம். 

வ.ந.கிரிதரன்: உங்களுடைய எழுத்துலக அனுபவத்தைச் சிறிது கூறமுடியுமா? இதுவரை கால எழுத்துலக, இலக்கிய அனுபவங்களின் விளைவாக நீங்கள் எத்தகைய உணர்வினைக் கொண்டிருக்கின்றீர்கள்? 

ஜோதிகுமார்: பொதுவாகத் தீர்த்தக்கரை, நந்தலாலாவில் செயற்பட்டவர்கள், செயற்படுகின்றவர்கள் எல்லோருமே ஒரு புரிந்துணர்வுடன் செயற்பட்டவர்கள். செயற்படுகின்றவர்கள். உதாரணமாக எம்மிடம் பிரசுரத்திற்கென வரும் படைப்புகளை நாம் பொதுவாகத் திருத்துவதில்லை. பொதுவாக, அவற்றை எழுதியவர்களைக் கஷ்ட்டப்பட்டுக் கண்டுபிடித்து, அவற்றின் குறைநிறைகளை விவாதித்து, அப்படைப்புகளை அப்படைப்பாளிகளினூடாகவே எவ்வளவு முன்னேற்ற முடியுமோ அவ்வளவு தூரம் முன்னேற்றுவதற்கு முயல்வோம். அது ஒரு நல்ல அம்சம். இரண்டாவது , படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் சரியான கவனமாகவிருப்போம். வாசகர்களுக்கு அவை பிடிக்குமாவென்பது தெரியாது. ஆகவே, பல்வேறுபட்ட வாசகர்களிடமும் அவற்றை வாசிக்கக் கொடுப்போம். அது சாதாரண இளைஞர்களிலிருந்து சாதாரண ஆசிரியர் வரை எல்லாவகையானவர்களிடமும் வாசிக்கக் கொடுப்போம். அவர்கள் அபிப்பிராயம் சொல்லும்போது விமர்சனரீதியாக அபிப்பிராயம் சொல்ல மாட்டார்கள். சும்மா சொல்லுவார்கள். பிடித்திருக்கிறதா இல்லையாவென்று. அடுத்த கேள்வியென்ன கேட்போமென்றால்..அப்படைப்பு எவ்விடத்தில் தொய்வது போல் படுகிறதென்பதுதான். இதற்கு அவர்கள் ஏதாவது சொல்லக்கூடும். இவற்றிலிருந்து தான் நாம் சில விடயங்களைக் கிரகித்து, சரி இந்தப்படைப்பைப் போடலாமா, போடக்கூடாதா , எவ்வாறு திருத்தப்பட வேண்டும் போன்றவற்றைத் தீர்மானிப்போம். இப்படியானதொரு போக்கு எம்மிடையே நிலவுகின்றது. இதனால் நந்தலாவில் நல்ல படைப்புகள் வெளிவருவதாக நீங்கள் கருதினால் அதற்குரிய பாராட்டினை இந்த மாதிரி வாசகர்களுக்குத் தான் நாம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கூடாகத்தான் நாமும் படிக்கிறோம். நாங்களெல்லாம் பெரிய கலைஞர்களென்ற எண்ணமே எம் நண்பர்களிடையே இருக்கவில்லை. இதுவுமொரு நல்ல விசயமே. 

அடுத்ததென்னவென்றால் எல்லோருமே committed. உதாரணமாக தீர்த்தக்கரையோ நந்தலாலாவோ அவை வந்த காலகட்டங்களில் மலையகத்தைப் பொறுத்தவரையில் போர்ப்பிரகடனங்களாகத்தான் வெளிவந்தன. மலையகத்தைப் பொறுத்தவரையில் தொண்டமானிற்கெதிராக விமர்சனங்கள் வைக்க முடியாததொரு நிலையிருந்தது. இந்நிலையில் தொண்டமானிற்கெதிராகக் காத்திரமான விமர்சங்களை நந்தலாலா வைத்தது. மலையகம் பற்றிய வரலாறு சம்பந்தமான ஆங்கில நூலினை நடேசன் வெளியிட முயன்றபொழுது - அப்பொழுது ஆட்சியிலிருந்தது ஐ.தே.க.- பலரால் அவரிற்கு தொல்லைகள் ஏற்பட்டன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கெதிரான விடயங்கள் பல இருப்பதாகக் கூறி எச்சரிக்கப் பட்டார். இந்நிலையில் நடேசன் என்னுடன் தொடர்பு கொண்டு அந்நூலினை இருபாகங்களாக வெளியிடலாமேயெனக் கருத்து வெளியிட்டார். நந்தலாலா' நண்பர்களினால் அதனை ஏற்க முடியவில்லை. அப்படிப் பாதிப்பு வந்தால் வெளியிடும் நமக்குத்தானே முதற்பாதிப்பு எனக் கூறினார்கள். இவ்விதமாகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற பண்பு அந்நண்பர்களிடமிருந்தது. இதனால் உக்கிரமான இலக்கியத்தையோ எழுத்துகளையோ தரக்கூடியதொரு களத்தை எம்மால் அமைக்கக் கூடியதாகவிருந்தது. இது எனது இலக்கிய அனுபவத்தில் நல்லதொரு விசயம். 

வ.ந.கிரிதரன்: நல்லது ஜோதிகுமார். இவ்விதமாகப் பாடுபடவேண்டுமென்ற எண்ணம் தங்களுக்கு எவ்விதமுண்டானது? 

ஜோதிகுமார்: தீர்த்தக்கரை வெளிவந்த காலகட்டம் 1980 தான். அதே காலகட்டத்தில் வெளிவந்த முக்கிய சஞ்சிகைகளாகக் 'குமரன்'...போன்றவற்றைக் கூறலாம். செ.கணேசலிங்கனின் 'குமரன்' சஞ்சிகையினைத் தான் குறிப்பிடுகின்றேன். இது இடதுசாரிப் போக்கினைக் கொண்டது. அதே சமயம் மறுபுறத்தே 'பூரணி' , 'அலை' போன்றன வெளிவந்தன. அக்காலகட்டத்தில் இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களிற்கெதிராக நிறைய விமரிசனங்கள் வெளிவந்தன. 'கலை கலைக்காக என்ற விமரிசனக் கோட்பாடு ஒரு புதிய வடிவத்தை எடுக்கத் தொடங்கியது. அது எத்தகைய வடிவமென்றால்...'மார்க்ஸியத்தை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் உங்கள் படைப்புகளில் அழகியல் போதாது' என்றார்கள். அதாவது 'கலை கலைக்காக' என்பதன் புது வடிவம் தானிது. 'மார்க்கிஸியத்தை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் உங்கள் படைப்புகளை நிராகரிக்கப் போகின்றோம்' என்பது போன்ற போக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் எமக்குக் 'குமரன்' எழுத்துகளுடன் அவ்வளவு உடன்பாடு இருக்கவில்லை. அதன் கலாபூர்வமான வெளிப்பாடு போதாது. பிரச்சாரத் தன்மையாகத் தெரிகிறதென எம்மில் பலபேர் நினைத்தார்கள். இந்நிலையில் புதியதொரு சஞ்சிகையினை வெளியிடவேண்டிய தேவையிருந்தது. அதற்காகத்தான் 'தீர்த்தக்கரை'யென்ற சஞ்சிகையினை முக்கியமாக வெளிக்கொணர்ந்தோம். பல கூறுகள் ஒன்றாக இணைந்திருக்கலாம். இது ஒரு கூறு. இன்னும் பல வேறு கூறுகள் இருந்திருக்கலாம். அதாவது 'தீர்த்தக்கரை'யின் தோற்றத்திற்கான கூறுகளைக் கூறுகின்றேன். உதாரணமாக மலையகச் சமூக உருவாக்கம், இனத்துவ அடையாளங்கள் போன்றவற்றைக் கூறலாம். 

நண்பர்கள் எல்லோருக்கும் பாரதியாருடன் கூட நெருக்கம். பாரதியைப் பெரிதும் மதிப்பவர்கள். இந்த இணைப்புகள் பற்றிய கேள்விகள், மலையக யதார்த்ததை எந்த அளவிற்கு வேலுப்பிள்ளைக்குப் பிறகு படைப்பாளிகள் முன்வைத்தார்கள் என்பன போன்ற கேள்விகளெல்லாம் எம்மிடையே எழுந்தன. இவையெல்லாம் , இக்காரணங்களெல்லாம் ஒன்றாகச் சேர்ந்ததனால் ஒரு சஞ்சிகை தேவையென்ற கருத்து உருவாயிற்று. 'கால நிர்ப்பந்தமா?' என நீங்கள் கேட்கலாம். ஆம். கால நிர்பந்தம்தான் காரணம். ஆனால், கால நிர்ப்பந்தமென்பது மலையகமென்றதொரு யதார்த்தத்திற்குள் மட்டும் எல்லைப்படுத்தப் படவில்லை. பல்வேறு கூறுகள் அதனைத் தீர்மானித்தன். நிர்ப்பந்தித்தன. 

வ.ந.கி: அண்மைய ஈழத்து மலையக இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ஒரு விழிப்புணர்வினைக் காண முடிகின்றது. பல எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் மலையகத்தின் பங்களிப்பைப் பல பத்திரிகைகளில் வெளிப்படுத்தி வருகின்றார்கள். மு.நித்தியானந்தனைக் குறிப்பிடலாம். 'மலையகச் சிறுகதைகள்', 'தீர்த்தக்கரைச் சிறுகதைகள்' போன்ற காத்திரமான சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. பொதுவாக, அண்மையில் ஈழத்திலிருந்து வெளிவந்த தமிழ்ப் படைப்புக்களுடன் ஒப்பிடுகையில் மேற்படி மலையகப் படைப்புக்கள் சற்று காத்திரமானவையாகத் தென்படுகின்றன. மலையகத் தமிழ் இலக்கியம் ஒருவிதமான உற்சாக நடை ப்போடுவதாகத் தெரிகின்றது. இது பற்றி என்ன நினக்கின்றீர்கள் ஜோதி? 

ஜோதிகுமார்: மலையக இலக்கியம் மாத்திரம் மற்றையவற்றுடன் ஒப்பிடும்பொழுது உற்சாகமாகவுள்ளதென்பதை ஏற்றுக் கொள்வது கஷ்ட்டம். மலையக இலக்கியத்திலும் இருவகையான போக்குகளையும் காணலாம். உற்சாகமான போக்கும் உண்டு. உற்சாகம் குன்றிய போக்கும் உண்டு. மலையகத்தில் சில போக்குகள் உள்ளன. அதாவது இன்றைய இலக்கியத் தளத்தில் நடக்கின்ற எல்லா முரண்பாடுகளையும் உள்வாங்க முடியாததொரு நிலைமை காணப்படுகிறது. இன்றைய தமிழ் இலக்கியம் எந்தெந்த நெருக்கடிகளினூடாக வந்து சேர்ந்துள்ளது? இன்று இருக்கின்ற இலக்கியத் தளத்தில் காணப்படுகின்ற முரண்களுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறதா? முரண்களின் தொடர்ச்சியா? இவற்றின் சாராம்சத்தை உள்வாங்க முடியாததன்மை மலையகத்தில் இருக்கிறது. அதாவது மலையகத்தின் சில இலக்கியப் போக்குகளிலுள்ளன. அதே சமயத்தில், எல்லாவற்றையும் மிகக் கவனமாக ஆராய்ந்து, அவதானித்து அதன் சாராம்சத்தைப் புரிந்து, அதன் நிலையைச் சரியாக வரையறை செய்து, அதற்கூடாக ஒரு காத்திரமான இலக்கியப் போக்கினை அடுத்தபடிக்கு முன்னெடுக்கும் தன்மையும் காணப்படுகின்றது. எனவே இரண்டு அம்சங்களுமுள்ளன. இது தவிர, மலையகம் என்று ஜீவிக்கும் நிலை, அதனுடைய இருப்பு- அதாவது அது ஒரு சமூகவியற் கேள்வி- அது எத்தகையதொரு ஜீவனை இவர்களுக்குள் செலுத்துகிறது? இவையெல்லாம் சேர்த்துத்தான் உற்சாகம், உற்சாகமின்மை இவற்றிற்கெல்லாம் தலைமை வகிக்கின்றன. உதாரணமாக, முக்கியமாக நான் கூறுவதென்னவென்றால்... ஒரு கட்டத்தில் வடக்கில் நல்ல கவிஞர்கள் தோன்றினார்கள். ஜெயபாலன் எனக்கு மிகவும் பிடித்த கவிஞன். அவருடையதொரு கவிதை வன்னியைப் பற்றியது. 'எங்கள் மண்ணும் எங்கள் முகமும்' என்ற கவிதை. அதிகமாக அதுபோன்ற கவிதைகள் தமிழில் தோன்றவில்லையென்று கூறலாம். 'பாஞ்சாலி சபதம்' மாதிரி சில நெடுங்கவிதைகளைப் பற்றிக் கதைக்கக் கூடும். ஆனால் அதுமாதிரியொரு நெடுங்கவிதை இங்கு இன்னொரு தளத்தில், இன்னொரு பரிமாணத்தில் வந்திருக்கிறது. இதனுடைய தோற்றத்தைக் கவனமாக ஆய்வு செய்தால்.. அங்கேயும் அந்த புத்தி ஜீவிகளை, நடுத்தர வர்க்கத்தவர்களை, ஒரு வரலாற்றுக் கட்டம் அப்படியே தூக்கி மக்கள் மத்தியில் வீசியுள்ளது. 'மக்கள் மத்தியில் போய்ப் படித்து வா' என்பது போல். எல்லா விழுப்பாடுகளையும் கடந்து போய், அவர்கள் எல்லாவற்றையும் தொட்டு, உணர்ந்து, கிரகித்து, உள்வாங்கி வந்து கவிதை படிக்கும் போது அது இயற்கையை நேசிக்கிறதாகவிருக்கு; வாழ்க்கையை நேசிக்கிறதாகவிருக்கு; மக்களை நேசிக்கிறதாகவிருக்கு; மக்கள் அவர்களை நேசிக்கிறதாகவிருக்கு. இப்படிப் பல பரிமாணங்கள் கொண்ட படைப்புக்களை அவர்கள் உருவாக்குகின்றார்கள். அது பாரதியாகவிருக்கட்டும், ஜெயபாலனாகவிருக்கட்டும். ஆகவே, இந்தப் போக்கு, அதாவது இத்தகைய புத்திஜீவிகளை, மத்தியதர வர்க்கத்தினரைத் தூக்கி வாழ்க்கையினுள் வீசி, அலைய வைத்து அப்படியே கொண்டு வந்து திரும்பவும் சேர்க்கின்ற போக்கு... 

வ.ந.கி: ஒருவித அக்கினிப் பிரவேசம்... 

ஜோதிகுமார்: ஆம. இந்தப் போக்கு வடகிழக்கில் இருக்கு. இன்றைக்கு இத்தகைய போக்கு தமிழகத்தில் இல்லை. ஒப்பீட்டளவில், விகிதாசாரத்தில் ஜெயபாலன் போன்றவர்களின் இத்தகைய பண்பு கூடும் பொழுது உற்சாகமான இலக்கியங்கள் வந்து சேரும். அவற்றின் தாக்கங்கள் மறைமுகமாகவிருக்கலாம். நேரடியாகவிருக்கலாம். ஓர் எழுத்தை, கலைஞனை இத்தகைய சமூகவியற்காரணிகளே உருவாக்குகின்றன. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது தற்போது மலையகத்தில் நிலவும் சூழலினை, காரணிகளினைக் கவனத்திலெடுக்க வேண்டியுள்ளது. 

வ.ந.கி: மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றி மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர்களான அ.செ.மு, அ.ந.கந்தசாமி போன்றோர் சிறுகதை படைத்திருக்கின்றார்கள். இவ்விதம் மலையகத்தைச் சேராதவர்களின் மலையகம் பற்றிய படைப்புக்களைப் பதிவு செய்வதுண்டா? 

ஜோதிகுமார்: அவர்களுடைய படைப்புக்களை நிச்சயம் பதிவு செய்ய வேண்டும். என்ன காரணமென்றால்...? மலையக இலக்கியமென்னும்போது இவையெல்லாம் உள்ளடங்க்கிதானுள்ளது. அதுதான் மலையக இலக்கியத்தின் வளர்ச்சி. இதனை விளங்கிக் கொள்வது வரப்போகும் எழுத்தாளர்களுக்கு மிகவும் முக்கியமானது. இரண்டாவது, அவர்களது பங்களிப்பை அறிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது என்னவென்றால்... மலையகத்தைச் சாராத எழுத்தாளர்கள் கூட எவ்விதம் மனித நேயத்துடன் அணுகியிருக்கின்றார்கள்? அவ்விதம் அம்மனித நேயத்தை வெளிப்படுத்தும் போது எவ்வளவு தூரம் அதில் வெற்றி அடைந்திருக்கின்றார்கள்? என்ற கேள்விகளெல்லாம் எழும். அப்படியொரு கோணத்திலிருந்து பார்க்கும்போது கூடப் பதிவு செய்தலென்பது மிகவும் முக்கியமானதாகின்றது. 

வ.ந.கி: இவ்விதம் பிற பிரதேசங்களைச் சேர்ந்த படைப்பாளிகளின் மலையகம் பற்றிய படைப்புக்கள் எவ்வளவு தூரம் வெற்றிகரமாக அமைகின்றன? 

ஜோதிகுமார்: நீங்கள் என்ன கேட்கின்றீர்களென்றால்... எழுதலாமா? கூடாதா? என்பதைத்தானே? தலித்திலக்கியத்தைப் பொறுத்த வரையில் எழுதக் கூடாதென்கின்றார்கள். என்ன காரணமென்றால்.. பிரச்சினையைப் பிழையாக வெளிப்படுத்துகின்றார்கள் என்ற நோக்குத்தான். எங்களைப் பொறுத்தவரையில்... யாரும் எழுதலாம். ஏனென்றால், அது ஏகபோக சொத்தல்ல. பிழையாக எழுதினால் அதற்கான விமர்சனமும் வெளிவரும். ஆனால், விஷயம் என்னவென்றால்.. இவ்விதம் வெளியிலிருந்து வந்து எழுதும்போது, மலையக மக்கள் என்னும் சமூகத்தின் உள் விதிமுறைகளை, அதாவது அச்சமூகத்தின் வாழ்வைத் தோற்றுவிக்கும் அந்த நெளிவு சுளிவுகளை, சிலவேளை இவ்விதம் வெளியிலிருந்து வரும் எழுத்தாளர்கள் விட்டு விடுகின்றார்கள். மேலோட்டமாக அவதானிப்புக்களை எழுத முற்படுகின்றார்கள். உதாரணமாக, வெளியிலிருந்து பலர் அட்டைகளைப் பற்றி அதிகம் எழுதியிருக்கின்றார்கள். ஆனால் வேலுப்பிள்ளையைப் பொறுத்தவரையில் அட்டையைப் பற்றியும் ,குளிரைப்பற்றியும் எழுதினது மிகக் குறைவு. அதிலிருக்கின்ற சில, வாழ்க்கையைத் தோற்றுவித்திருக்கின்ற உன்னதங்களை, மனிதநேயங்களை- அதாவது அவர்களும் மனிதர்கள்தான் என்பதை- இறுக்கிக் காட்டுகின்ற பண்புகளைத்தான் வேலுப்பிள்ளையின் படைப்புக்களில் காணமுடியும். அதற்காக நாம் வெளிப்படைப்பாளிகள் மலையகத்தைப் பற்றி எழுதக் கூடாதென்று சொல்லக் கூடாது. ஏனென்றால் வேலுப்பிள்ளையும் மனிதர்தான். இரண்டுபேருக்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால்... வேலுப்பிள்ளை நெருங்கின அளவுக்கு மற்றவர்களால் நெருங்க முடியுவில்லை. அதற்குக் கொஞ்சக் காலம் தேவை. கூடக் Commitment தேவை. அவர்களோடு ஒட்டிப் பழகவேண்டிய , சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதொரு நிர்ப்பந்தம் தேவை. இவையெல்லாம் இருந்தால் நான் நினக்கின்றேன், அவர்களும் நல்ல இலக்கியம் செய்வார்கள். உதாரணமாக, மலையகத்திலிருந்து வந்த படித்தவர்கள் சிலர் அந்த மக்களிடமிருந்து அன்னியப்பட்டு விட்டார்கள். படித்தவர்களின் இத்தகைய அன்னியப்பட்டுப் போகின்ற தன்மையும் மலையகத்திலுண்டு. அதற்கு நிறைய சமூகவியற் காரணிகளுண்டு. ஒரு காரணம்.. நிலம் சொந்தமில்லை. இவ்விதம் அன்னியப்பட்டவர்களும் மலையகத்தைப் பற்றி எழுதும்போது குளிர், அட்டையென்று எழுதிய கதைகளுமுண்டு. ஆகவே இவ்விரண்டு வகையினருக்குமிடையில் பெரியதொரு வித்தியாசத்தைப் பார்க்கின்றேன். நாங்கள் சொல்லக் கூடுவதென்னவென்றால்.. அது எந்த மக்களாகவுமிருக்கலாம். மலையகம் மட்டுமல்ல அது வடகிழக்கு மக்களாகவுமிருக்கலாம். வடக்கு கிழக்கு மக்களைப் பற்றி எழுதும்போது கூட அப்பகுதி எழுத்தாளர்கள் எவ்வளவுதூரம் அம்மக்களுடன் உண்மையில் நெருங்குகின்றார்கள்... அம்மண்ணின் ஆழ வேரோடு எப்படி அவர்கள் ஆழமாகப்போய்ப் பின்னிப் பிணைகின்றார்கள்... இவையெல்லாம் கேள்விகள். அந்த அளவுக்கு நீங்கள் போகும் போதுதான் அனுபவங்கள் உங்கள் இதயம் பூராவும், உங்கள் சிந்தனைபூராவும், 'சித்தமும் நீயே , சிந்தனையும் நீயே' என்பது போல் ஒன்றாக ஒட்டி வருகின்றன. அப்படி ஒட்டி வருகையில்தான் எழுத்து வந்து வனப்பாக விழுகின்றது. வனப்பு என்று சொல்லும்போது.. வாழ்க்கையில் நம்பிக்கையும், மக்கள் மேல் நேயமும் இவையெல்லாம் ஒத்து வருகின்றன. அதுதான் தேவை. பிரித்துச் சொல்ல முடியாது. நீ எழுது அல்லது நீ எழுதாதே என்று சொல்லுவது தப்பு என்று நினைக்கின்றேன். 

வ.ந.கி: இலக்கியத்தில் அழகியலின் பங்களிப்பு பற்றி உங்கள் எண்ணம் என்ன? 

ஜோதிகுமார்: அழகியல் பற்றி நிறைய விவாதிக்கப்பட்டிருக்கு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அளவுகோல் வைத்திருக்கின்றார்கள். இந்த அளவுகோலிறு ஒரு சமூகவியற் பின்னணி, நிலைப்பாடு இருக்கின்றதைக் கண்டு கொள்ளலாம். அழகியல் என்பது உள்ளடக்கத்துடனும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டது. உதாரணமாக, தாஸ்தவாஸ்கியை எடுத்தால் அவர் நல்ல தேர்ச்சி மிக்க ஓர் எழுத்துக் கலைஞர். அவரது எழுத்துத் திறனில் அழகியலை எடுத்தீர்களென்றால்... எந்தவொரு குறையும் காணமுடியாது. உள்ளடக்கத்தை எடுத்தீர்களென்றால்.. கோர்க்கி சொல்லுவார்: 'புண்களை உயர்த்திக் காட்டுவதற்கு ஒருவனுக்கு உரிமையில்லை' என்று. அது அந்தரங்கமானது. அது ஒரு நிராகரிக்க வேண்டிய தன்மை அப்படியென்று அவர் சொல்லுவார். ஆகவே அழகியல் என்பது பல்வேறு தளங்களிலை இருக்கு. ஒரு தளம் எழுத்துத் திறன், இன்னொரு தளம் அதனுடைய உள்ளடக்கம். இன்னுமொரு தளம் இருக்கு. அது எத்தகையதொரு பாதிப்பை மனிதரில் ஏற்படுத்துகின்றது என்பது. சோகமா? அவலமா? கோபமா? அதனுடைய இறுதி விளைவென்ன? அப்படியென்கிற ஒரு கேள்வியையும் கணக்கிலெடுத்து அழகியல் சம்பந்தமாக நோக்க வேண்டும். 

வ.ந.கி: இலக்கியத்தில் அழகியலின் பங்களிப்பு பற்றி உங்கள் எண்ணம் என்ன? 

ஜோதிகுமார்: அழகியல் பற்றி நிறைய விவாதிக்கப்பட்டிருக்கு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அளவுகோல் வைத்திருக்கின்றார்கள். இந்த அளவுகோலிற்கு ஒரு சமூகவியற் பின்னணி, நிலைப்பாடு இருக்கின்றதைக் கண்டு கொள்ளலாம். அழகியல் என்பது உள்ளடக்கத்துடனும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டது. உதாரணமாக, தாஸ்தவாஸ்கியை எடுத்தால் அவர் நல்ல தேர்ச்சி மிக்க ஓர் எழுத்துக் கலைஞர். அவரது எழுத்துத் திறனில் அழகியலை எடுத்தீர்களென்றால்... எந்தவொரு குறையும் காணமுடியாது. உள்ளடக்கத்தை எடுத்தீர்களென்றால்.. கோர்க்கி சொல்லுவார்: 'புண்களை உயர்த்திக் காட்டுவதற்கு ஒருவனுக்கு உரிமையில்லை' என்று. அது அந்தரங்கமானது. அது ஒரு நிராகரிக்க வேண்டிய தன்மை அப்படியென்று அவர் சொல்லுவார். ஆகவே அழகியல் என்பது பல்வேறு தளங்களிலை இருக்கு. ஒரு தளம் எழுத்துத் திறன், இன்னொரு தளம் அதனுடைய உள்ளடக்கம். இன்னுமொரு தளம் இருக்கு. அது எத்தகையதொரு பாதிப்பை மனிதரில் ஏற்படுத்துகின்றது என்பது. சோகமா? அவலமா? கோபமா? அதனுடைய இறுதி விளைவென்ன? அப்படியென்கிற ஒரு கேள்வியையும் கணக்கிலெடுத்து அழகியல் சம்பந்தமாக நோக்க வேண்டும். 

வ.ந.கி: ஆக அழகியல் முக்கியமென்று கூறுகின்றீர்கள்? 

ஜோதிகுமார்: மிகவும் முக்கியம். சுலோகத்தன்மையுடன் எழுதக் கூடாது. அழகியல் தன்மையுடன் கலாபூர்வமாகவிருக்க வேண்டும். அது சரி, அதனை ஏற்றுக் கொள்கின்றேன். அப்புறம் கலாபூர்வமான வெளிப்பாடென்று புறப்பட்டால்.. இன்னும் நிறையப் பிரச்சினைகள் இருக்கு... 

வ.ந.கி: இலக்கியப் படைப்பு கலாபூர்வமாகவும் அதே சமயம் சமுதாயப் பயன்பாடு மிக்கதாகவுமிருக்கவேண்டும்? 

ஜோதிகுமார்: அப்படிச் சொல்லலாம். ஆனால், அதே சமயத்தில்... அந்த எழுத்து இசைக்கும் நாதமென்ன? அதனுடைய இராகமென்ன? அவலமா? அதன் சமூகவியற் கண்ணோட்டமென்ன? என்பன நோக்கப்பட வேண்டும். மனிதரைப் பற்றிய அதனுடைய சாராம்சம், அது இசைக்கின்ற இராகத்தின் சாராம்சம், அவல கீதமாக இருந்தால் அதனை நிராகரிக்க வேண்டும். 

வ.ந.கி: ஒரு படைப்பாளியை அவருடைய படைப்புக்களினூடு ஆராய வேண்டுமென்று ஒரு சாராரரும், அவரது வாழ்க்கைப் பின்னணியில் அவருடைய படைப்புக்களை ஆராயவேண்டுமென்று இன்னொரு சாராரும் கூறுகின்றார்களே. இது பற்றிய உங்களது கருத்தென்ன? 

ஜோதிகுமார்: ஒரு படைப்பு மாத்திரம்தான் சமூகப் பெறுமானத்தைப் பெறுகின்றது. அது மாத்திரம்தான் சமூகத்திற்காக கொடுக்கப்படுகின்றது. படைப்பாளி தன்னைக் கொண்டுவந்து நிறுத்தவில்லை என்னை விமர்சியென்று. அவரொரு அரசியல்வாதி மாதிரிப் பிரகடனம் செய்யவில்லை. தன் படைப்பை மட்டும்தான் சமூகத்தின் முன்னால் வைக்கின்றார். ஆகவே, அந்தப் படைப்பு எழுத்தில் வரும்போது எங்களுக்கொரு உரிமை இருக்கு அதனை விமரிசிக்க. ஆகவே அத்துடன் விடுவது நல்லதென நினக்கின்றேன். அது ஒரு பக்கம்... இரண்டாவது பக்கமென்னவென்றால்.. ஒரு படைப்பைப் படிக்கையில் அதிலிருக்கின்ற நேர்மையை நாம் உணர்ந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. அது உண்மையான படைப்பா? செய்யப்பட்டதொரு படைப்பா? ஓர் இயல்பானதொரு தோற்றமா? இயல்பானதொரு சிருஷ்ட்டியா? Genuine Creationஆ... இல்லையாயென்பதை உணர்ந்து கொள்ளலாம். உதாரணமாகப் பல கவிதைகள் வெளி வருகின்றன. ஆனால் பாரதியின் கவிதைகளில் அதிக ஓளியிருப்பது எல்லோருக்கும் தெரியும். அதிக உண்மையிருப்பது எல்லொருக்கும் தெரியும். அதிலிருந்து அவனுடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை நாம் ஓரளவுக்கு ஊகிக்கலாம். அந்த அளவுக்கு மனித ஞானம் இன்று வளர்ந்திருக்கு. ஆகவே கட்டாயம் படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்கையைத் தேடி ஆராய வேண்டியதென்ற கட்டாயமில்லை. 

அப்படியிருக்கும் போது கூடச் சிலர் ஆராய்ச்சி செய்திருக்கின்றார்கள். தனிப்பட்ட வாழ்க்கையை - ஒவ்வொருத்தரும் தமது தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய முடியாமலிருக்கும்போது- இன்னொரு மனிதருடைய வாழ்க்கையைப் பற்றி நாம் ஆராய முடியாது. அதிலுள்ள எல்லா முரண்பாடுகளையும் நாம் அறிய முடியாது. எங்கள் கண்களுக்குத் தெரிகின்ற சில முரண்களை நாங்கள் தூக்கிக்ப் பிடித்துக் கொள்கின்றோம். ஆகவே பிறிதொரு மனிதரின் வாழ்க்கையைப் பற்றி நாங்கள் எவ்விதம் அரைகுறையாக ஆய்வு செய்து சொல்வது? அது சரியா? அது தர்மமா? இல்லை. முதலாவது இத்தகைய விமர்சனப் போக்கே தர்மமற்றது. இரண்டாவது.. சரி அப்படியே ஏற்றுக் கொண்டாலும் எவ்விதம் படைப்பாளியைப் பற்றி முழுதும் கூற முடியும்?



நன்றி: பதிவுகள்.

மீள்பிரசுரம்: பதிவுகள் - ஆகஸ்ட் 2007; இதழ் 92.
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates