Headlines News :
முகப்பு » » மலையக தேசியத்தை வரையறுப்பதில் ஏற்படும் பிரச்சனைகளும் சவால்களும்- III லெனின் மதிவானம்

மலையக தேசியத்தை வரையறுப்பதில் ஏற்படும் பிரச்சனைகளும் சவால்களும்- III லெனின் மதிவானம்

மலையக தேசியமும் அரசியல் தொழிற்சற்க பண்பாட்டு இயக்கங்களின் நிலைப்பாடுகளும்

மலையக தேசிய உணர்வின் ஆரம்ப கர்த்தாக்களாக நாம் நடேசய்யர் மீனாட்சியம்மாள் தம்பதிகளையே  காண முடிகின்றது. மலையக மக்களின் வர்க்க அடக்குமுறைகளையும் இன அடக்கு முறைகளையும் அரசியல் அரங்கிலே இனங்கண்டு அதனை ஸ்தாபன மயப்படுத்தபட் அரசியல் போராட்டமாக முன்னெடுத்தவர்கள் இத்தம்பதியினர். மலையக தேசியம் தொடர்பில்  திருமதி. மீனாட்சியம்மாளின் பின்வரும் பாடல் வரிகள் கவனத்திற்குரியது:

லங்கா மாதா நம்ம தாய் தான்- இந்த
நாட்டினி லெல்லொரும் அவளுக்கு சேய்தான்

நடேசய்யர் தம்பதிகளின் தொடர்ச்சியாகவும் மலையகத்திலே பண்பாட்டுத் தளத்தில்  தோன்றி வளர்ந்த  எதிர் மரபின் விளைபொருளாகவும் முகிழ்ந்தவர் திரு. ஏ. இளஞ்செழியன். மலையக தேசியம் தொடர்பில் மலையக பண்பாட்டுத் தளத்தில் அவரது பங்களிப்பு கவனத்திலெடுக்கத்தக்கது. இது குறித்து இந்நூலில் அடங்கிய மலையக தேசியம் பற்றி: தோழர் இளஞ்செழியனின் சமூகநோக்கும் பங்களிப்பும்; என்ற கட்டுரையில் விபரிக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறே மலையகம் என்ற உணர்வின்; பின்னணியில் உருவாகி வந்த இயக்கங்கள் சிலவற்றையும் குறித்துக் காட்டுதல் அவசியமானதாகும. திரு. இர.சிவலிங்கம் தலைமையில் செயற்பட்ட மலையக இளைஞர் முன்னணி, வீ. எல். பெரேரா, சக்தி பாலய்யா முதலானோரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட மலையக இளைஞர் பேரவை, சாந்தி குமாரால் உருவாக்கப்பட்ட மலையக மக்கள் இயக்கம், வீ.ரி. தர்மலி;ங்கம், பி.ஏ. காதர், ஏ.லோரன்ஸ் ஆகியோரால் தேற்றுவிக்கப்பட்டிருந்த மலையக வெகுசன இயக்கம், திரு. புத்திரசிகாமணி, நேருஜி முதலானோரால் தோற்றுவிக்கப்பட்ட மலையக ஐக்கிய இளைஞர் முன்னணி, இலங்கை தேசபக்த வாலிப இயக்கம் முதலிய அமைப்புகளை சுட்டிக் காட்டலாம். கருத்துகள்;-வர்க்க நலன்கள்- வெகுசனங்களை அணிதிரட்டல் முதலிய அம்சங்களில் இவ்வியக்கங்களிடையே வேறுபாடுகள் உள்ளன என்ற போதிலும் மலையகம் என்ற கருத்தியலை ஏற்றுக் கொள்வதில் உடன்பாடு உடையவர்களாக காணப்படுகின்றனர். காலப்போக்கில் இவ்வியக்கங்கள் வௌ;வேறு வர்க்க நலன்களை பிரதிபலித்துள்ளன என்பதை அறியலாம். திரு. வி.ரி. தர்மங்கத்தின் ”மலையகம் எழுகிறது” நூலின் முன்னுரையில் திரு.  இர. சிவலிங்கத்தின் பின்வரும் கூற்று அவதானத்திற்குரியது:

"ஒரு முல்லோயாகோவிந்தனையும் டெவன் சிவனு லட்சுமணனையுமே போராட்டத் தியாகிகளாகத் தர்மலிங்கத்திற்கு காட்ட முடிந்திருக்கிறது. இந்தத் தியாக இளைஞர்கள் கூட தொழிலாள வர்க்கத்திலிருந்து வந்தவர்கள். நண்பர் தர்மலிங்கத்தின் கட்டுரைகளில் பட்டியலிட்டிருக்கும் இளைஞர் இயக்கங்கள், படித்த இளைஞர்கள் நல்ல கருத்துக்களைக் கூறினார்கள். புரட்சிகரமாக சிந்தித்தார்கள். ஆனால் அவர்கள் எந்தப் புரட்சிகரமான போராட்டக் களத்தையும் சந்திக்க முடியவில்லை 6”.

மலையக சமூக பண்பாட்டு அமைப்புகளுக்கும் பொது மக்களுக்குமான- குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களுக்கும் இடையிலான இடைவெளி இன்னும் நிரப்பபாடாமலே இருக்கின்றது என்பதை நாம் சுயவிமர்சனம் செய்ய வேண்டியுள்ளது.

மேலும், மலையகத்தில் இயங்கிய தொழிற் சங்க அரசியல் இயக்கங்களும் இது தொடர்பில் கவனமெடுத்துள்ளன. மலையக மக்களிடையே செல்வாக்குடன் விளங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,  ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி முதலான அமைப்புகளும் தமது தொழிற்சங்க அரசியலைக் கடந்து மலையக தேசியம் தொடர்பில் கவனமெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். எடுத்துக் காட்டாக 1983 மலையகத்தில் இடம்பெற்றக் இனக்கலவரத்தை தொடர்ந்து 1985 இல் தலைவாக்கலையில் நடைப்பெற்ற கூட்டத்தில் இ.தொ.கா.வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் "மலையகம் நமது மண். இதனை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றவகையில் மண்ணிலிருந்து துரத்துவதற்காக எவரும் நம்மை அடித்தால் நாம் அவர்களை திருப்பி அடிக்க வேண்டும்" என்று கூறியமை மலையக மக்களிடையே ஒரு உந்துதலை ஏற்படுத்தியிருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே கூட்டத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்களும் தவிர்க்க முடியாதவகையில் அக்கருத்தை ஆதரித்திருந்தார்.

இதே போன்று இ.தொ.கா.வில் இருந்து வெளியேறிவர்களும் ஜனநாயக சக்திகளும் இணைந்து உருவாக்கிய மலையக மக்கள் முன்னணியும் மலையக தேசியம் தொடர்பில் கூடிய கவனமெடுத்திருந்தனர். இவ் அமைப்பின் ஆரம்ப காலத்தில் செயற்பட்ட சிலர் குறிப்பாக வீ.ரி.தர்மலிங்கம், பி.ஏ. காதர், வீ.செல்வராஜா முதலானோரும் மற்றும் இன்றும் இவ்வியக்கத்தில் அங்கம் வகிக்கும் ஏ.லோரன்ஸ் அவர்களும்  கோட்பாட்டளவில் மலையக தேசியம் குறித்து கொண்டிருந்த பார்வை முற்போக்கானது.  அவ்வாய்வுகள், மதிப்பீடுகள்  மலையக மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் முன்னிறுத்தியதாக காணப்பட்டன. அதேசமயம் அவர்களின் செயற்பாடு என்பது ஒரு புறம் வடகிழக்கில் தோன்றிய அதிதீவிரவாத இயங்களுடனான தொடர்பையும்- அது சார்ந்த அரசியல் செயற்பாடுகளை பிரதிப்பலிப்பதாகவே இருந்தன. இது தொடர்பில் திரு. இ. தம்பையாவின் பின்வரும் கூற்று அவதானத்திற்குரியது:

மலையக மக்கள் முன்னணியில் பழைய இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் தலைமை பாத்திரம் வகித்த போதும் மலையக தேசியவாத அமைப்பாக மலையக மக்கள் முன்னணி தன்னைக் காட்டிக் கொள்கின்றது. மலையக மக்களுக்கென தனியான பிராந்திய சபை மலையகத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. மலையக மக்களின் மீதான இனவொடுக்குதலுக்கு எதிராக மலையக தேசிய வாதத்தை அரசியற் கோட்பாடாக ம.ம. முன்னணி கொண்டுள்ளதாக அடையாளம் காட்டிக்கொள்கின்றது (வெளிப்படையாக கூறாவிடினும்). இப்போக்கும் கூட வடகிழக்கு தீவிரவாத அல்லது மிதவாத அமைப்புகளின் வடகிழக்கு தமிழ் தேசிய வாதத்தின் நேரடிப் பாதிப்புக்கு உட்பட்டதாக கொள்ளமுடியும் 7.

அவ்வாறே இ.தொ. கா வுடனான தொழிசங்க போட்டியில் இவர்கள் காட்டிய அக்கறை மலையக மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதில் காட்டவில்லை என்றே கூற வேண்டும்.

மலையகத்தில் செயற்பட்ட இவ்வமைப்புகள் பாராளுமன்றத்தை பிரதானமாக கொண்டே தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தன. இது குறித்து மலையக மக்கள் முன்னணியின்; மறைந்த தலைவர் பெ. சந்திரசேகரன் (பிரதி அமைச்சராக இருந்த காலத்திலே) மலையக அரசியல் தொழிற்சங்கங்கள் பற்றி விமர்சனத்திற்குட்படுத்தினார். அவரது பின்வரும் கூற்று அவதானத்திற்குரியது:

இவர்களின் (மலையக மக்களின் - கட்டுரையாசிரியர்) அரசியல் பிரதிநிதித்துவமும் எதிர்கால பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகின்றன. தேசிய கட்சிகளினால் போடப்படும், பிச்சையான பாராளுமன்ற பதவியும் அமைச்சரவை அந்தஸ்த்தும், இந்த சமூகத்தை ஒருபோதும் பாதுகாக்க போவதில்லை. அழிவின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கும், இச் சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றி இப்போதாவது, தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிடப்படாது விட்டால், நீண்டகால பார்வையில், இச் சமூகத்தின் வரலாற்று சுவடுகள் கூட, துடைத்து எறியப்பட்டுவிடும். ஒரு இனத்தின் பாதுகாப்பென்பது அவர்களுக்கிருக்கும், சமூக அந்தஸ்த்தினதும், அரசியல் பிரதநிதித்துவத்தினதும் வளர்ச்சியிலே தங்கியுள்ளது 8.

மலையக மக்களின் உரிமைகள் தொடர்பிலாக திரு. பெ. சந்திரசேகரனின் சுயவிமர்சனம் மலையகத்தில் இயங்கிவருகின்ற அனைத்து மிதவாத அரசியல் தொழிற்சங்க ஸ்தாபனங்களுக்கும் பொருந்தும் எனக் கூறலாம்.

இன்று மூன்றாம் உலக நாடுகளில் நிவாரண அரசியல் முனைப்படைந்து வருகின்றது. மலையக தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகள் இந்தியாவுடனான உறவின் மூலமாக சில சலுகைகளை செய்து தருவதாக கூறி அல்லது சிறு சிறு உதவிகளைப்  பெற்றுத் தந்து தங்களது தொழிற்சங்கத்தின்-கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் தக்க வைக்கின்ற நிலையே காணப்படுகின்றது. இந்நிலையில் இந்நிவாரண அரசியல் செயற்பாடுகள் யாவும் இந்தியாவின் ஆதிக்கத்தை இங்கு நிலைநிறுத்த முனைகின்ற முயற்சியாகவே அமைந்து காணப்படுகின்றது. இந்த போக்கு சிங்கள மக்களிடையே இனவாதத்தை தோற்றுவிக்கின்ற நிலையையும் உருவாக்கியிருக்கின்றது. இந்த செயற்பாடுகள் மலையக மக்களிடைய இந்திய சார்பை ஏற்படுத்துவதுடன் மலையக மக்கள் தேசிய இனம் என்ற அடையாளத்தை சிதைக்கின்ற முயற்சியாகவும் அமைந்து காணப்படுகின்றது.

மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புகள் மலையக தேசியத்தை இந்திய நிவாரண அரசியலாக- இந்நாட்டில் அதனை இனத் தேசியமாக முன்னெடுக்க முனைகின்றமை அபத்தமாகும். இவ்வம்சம் மலையக மக்களின் தேசியத்துக்கான போராட்டத்தைப் பிரதேசவாதமாகவோ இனவாதமாகவோ குறுக்கிவிடுவதுடன் இப்பபேராட்டத்தில் இணைய கூடிய தேசிய ஜனநாயக சக்திகளையும்- ஏனைய ஒடுக்கப்பட்டமக்களையும் பிரிப்பதாக அமைந்துவிடும். இன்று “இலங்கைத் தமிழர் மத்தியில் போராட்டம் என்ற பேரிலும் சிங்கள உழைக்கும் மக்களிடம் பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரிலும் எழுச்சிபெற்ற இனவாத சக்திகள் அந்தந்த மக்களின் வரலாறு படைக்கும் ஆற்றல்களைச் சிதைக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தன@ மலையகத்தில் தொண்டு நிறுவனங்கள் அந்தக் கைங்கரியத்தை நிறைவு செய்துள்ளன 9”. இன்று தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியில்லாமல் எதனையும் செய்ய முடியாது என்ற வகையிலான பிரமையை இவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். மக்கள் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தி அவர்கள் சார்ந்த போராட்டங்களை திசைதிருப்புவதே இந்நிறுவனங்கள் செய்து வருகின்ற கைங்கரியங்கள்.


இவ்விடத்தில் இடதுசாரி அரசியல் தொழிற்சங்களின் நிலைப்பாடுகள் எத்தகையதாக இருந்துள்ளது என்பது குறித்த தேடலும் அவசியமாவையாகின்றன. மலையகத்திலே தோழர் நா. சண்முகதாசன் தலைமையிலான இடதுசாரி இயக்கமானது குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தின் அமுக்க சக்தியாக செயலாற்றியுள்ளது. இவ்வியக்கம் தன் அரசியல் முன்னெடுப்புகளை தொடங்கிய போது மலையக தொழிளாளர்கள், சமூக அக்கறை மிகுந்த புத்திஜீவிகள், மாணவர்கள் என்போர் சமூக பிரக்ஞையோடு இணைந்தனர். தொழிற்சங்க பணிகள் இடதுசாரி தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன. காலப் போக்கில்  தோழர் சண்ணில் வெளிப்பட்ட அகச்சார்பான தவறுகளும் அவற்றினடியாக எழுந்த விளைவுகளும் இடதுசாரி இயக்கத்தை பல பின்னடைவுகளுக்கு இட்டு சென்றன. இவர்கள் இனவொடுக்குதலுக்கு எதிரான போராட்டத்தையும் இனவாதமாக கருதியமையால் பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டத் தவறிவிட்டனர்.  அந்தவகையில் மலையக தேசியத்தின் அவசியத்தை இவர்கள் உணர தவறியமை துரதிஸ்ட்டவசமானதொன்றாகும்.

இவ்வாறே மலையகத்தில் இயங்கிய தேசிய ரீதியான இடதுசாரி இயக்கங்களான சமசமாஜக் கட்சி, இலங்கை கம்ய+னிஸ்ட் கட்சி போன்றனவும்; ஏகாதிபத்திய எதிர்புணர்வைக் கொண்டிருந்த அதேசமயம் பேரினவாதத்திற்கு எதிரான அரசியல் போராட்டங்களை முன்னெடுக்கத் தவறிவிட்டன. இது குறித்து முந்திய கட்டுரையிலும் பேசப்பட்டுள்ளது. இவ்வமைப்புகள் மலையகத்தில் இயங்கிய போதும் தொழிற்சங்க செயற்பாடுகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை மலையக மக்களின் இருப்புக்கான- சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் செயற்பாடுகளுக்கு கொடுக்கவில்லை.

இவ்வாறானதோர் சூழலில், சண்ணின் இயக்கத்தில் ஏற்பட்ட தத்துவார்த்தம்- நடைமுறைசார்ந்த செயற்பாடுகள்- அவ்வியக்கத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றிய விமர்சனங்கள் - கேள்விகள் எழுந்தபோது கே.ஏ. சுப்பிரமணியம் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) தோன்றியது. அவ்வியக்கம் பின்னால் புதிய ஜனநாயக கட்சி எனவும், தற்போது புதிய ஜனநாக மார்க்ஸிய லெனினிஸ கட்சி என பெயர் மாற்றம் பெற்றுள்ளது. மலையகத்தில் இவ்வமைப்பை தோற்றுவித்து  வெகுசன வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு கட்சியின் வாலிபர் இயக்கமான இலங்கை தேச பக்த வாலிப இயக்கம் செயற்பட்டது. மலையகத்தில் இவ்வமைப்பாக்க செயற்பாட்டில் முக்கியமாக பங்காற்றியவர்கள் ந. இரவீந்திரன். இ.தம்பையா, வீ. விஜயரட்ணம், ஜோன்சன் ஆகியோராவர். பல தொழிற்சங்கங்களில் அங்கம் வகித்த தொழிலாளர்களை அரசியல் ரீதியாக ஸ்தாபன மயப்படுத்தியதுடன், மலையக மக்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கபட வேண்டும் - சுயநிர்ணய உரிமைப் உரிமைகள் அங்கீகரிக்கபடவேண்டும் என்ற உயரிய இலக்குடன் தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். மலையக மக்களை   தொழிற்சங்க அரசியலுக்கு அப்பால் அரசியல் மயப்படுத்த முடியாது என வாதிட்டவர்களின் கூக்குரலைக் கடந்து அவற்றை நடைமுறை சாத்தியமாக்கியவர்கள் இவ்வமைப்பினரே. காலப்போக்கில் இவ்வமைப்பில் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகள் - நடைமுறைசார்ந்த ஐக்கிய முன்னணி தந்திரோபாயம் என்பனவற்றில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இவ்வமைப்பில் அங்கம் வகித்த பலர் விலகி சென்றனர். இன்று இந்த ஸ்தாபனத்தில், உயர் பதவிகளில் செல்வாக்கு செலுத்துகின்றவர்கள் குழு வாதத்தில் மூழ்கி தம்முடன் கருத்து மாறுபட்டவர்களுக்கு எதிரான தனிமனித தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.   இவர்கள் வெகுசனங்களை அணிதிரட்டுவதை விட தமக்கான ரசிக மன்றங்களை உருவாக்குவதிலேயே அதிக கவனமெடுப்பது துரதிஸ்டமானதொன்றாகும்.

இவ்வாறாக, இவ்வியக்கத்தில் அங்கம் வகித்து மலையக தேசியம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தவர்கள் இம் மக்களின் அடையாளம் பற்றி குறிப்பிடுகின்ற போது மலையகத் தமிழர், மலையக இந்திய வம்சாவழித் தமிழர், இந்திய வம்சாவழித் தமிழர் என பல பெயர்களை குறிப்பிடுகின்றனர். உதாரணத்திற்கு திரு. சி.கா.செந்திவேல் எழுதிய புதிய -
பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கு ஜனநாயகமும் போராட்ட மார்க்கமும் (புதிய ப+மி வெளியீட்டகத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை, 1993) என்ற நூலிலும், திரு.இ. தம்பையா எழுதிய மலையக மக்கள் என்போர் யார்? (புதிய ப+மி வெளியீட்டகத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை,1995) என்ற நூலிலும் இந்த குழப்பங்கள் காணப்படுகின்றன. அவ்வாறே வேறு சில இடதுசாரி அமைப்பில் அங்கம் வகித்தவர்களும் அதே தவறை செய்து வருகின்றனர். அண்மையில் சிவா சுப்பிரமணியம் எழுதிய இலங்கை அரசியல் வரலாறு ஒரு நோக்கு என்ற நூலிலும் இந்தியவம்சாவழித் தமிழர் என்ற அடையாளத்தையே உபயோகின்றார்.

அந்தவகையில் அரசியல் தொழிற்சங்க பண்பாட்டு இயக்கங்களின் பின்னணியில் மலையக தேசியம் பற்றிய உணர்வு வெவ்வேறு தளங்களில் - வெவ்வேறு நலன்களில் வெளிப்பட்டு நிற்கின்றன.

தொடரும்.....
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates