Headlines News :
முகப்பு » » லெனின் மதிவானத்தின் ‘சமூக இலக்கியத் தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்‘ - ஒரு மதிப்பீடு பேராசிரியர் மா.கருணாநிதி

லெனின் மதிவானத்தின் ‘சமூக இலக்கியத் தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்‘ - ஒரு மதிப்பீடு பேராசிரியர் மா.கருணாநிதி

இனக்குழுக்கள் மற்றும் சமூகக் குழுக்களின் வாழ்வியற் கோலங்களையும் பிரச்சினைகளையும் சமூக பொருளாதார, அரசியல், வரலாறு மற்றும் கலாசாரத் தளங்களிலிருந்து ஆராய்தல் இலக்கியங்களின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று. “சமூக - இலக்கியத் தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்” என்னும் தலைப்பில் திறனாய்வாளர் லெனின் மதிவானம் அவர்களால் வெளியிடப்படும் இந்நூல் மலையகம் மற்றும் வடபுலச் சமூகங்களில் இன்னும் தீர்வுகளை எட்டமுடியாமல் இருக்கின்ற பிரச்சினைகளின் யதார்த்தங்களை இலக்கியங்களினூடாகத் தரிசிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நூலின் வாயிலாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ள பதினொரு கட்டுரைகளும் அவற்றில் இடம்பெறுகின்ற படைப்பாளிகளும் உழைக்கும் மக்கள் பக்கம்  நின்று அவர்கள் மீதான சமூக ஒடுக்குமுறைகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள்,  அவற்றின் வெற்றி தோல்விகள்    ஆகியவற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். மக்கள் பிரச்சினைகளின் யதார்த்தங்களை அக மற்றும் புறநிலைகளில் நின்று உணர்வுபூர்வமாக வெளிக்கொணர்ந்த படைப்பாளிகள் மிகக்கவனமாகத் தெரிவுசெய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இக்கட்டுரைகள் யாவும் பொதுவுடைமைக் கோட்பாட்டின் பின்னணியில் சமூகங்கள் மீது செலுத்திய பார்வைகளாகவும் உள்ளன. உணர்வுபூர்வமாகச் சிந்திக்கத் தலைப்படுவோரை மேலும் சிந்திக்கத் தூண்டும் இயல்பு இத்தகைய படைப்புகளுக்கு நிறையவே உண்டு.

பெருந்தோட்டத் தொழிலாளராக இலங்கைக்குக் குடிபெயர்ந்த காலம் தொடக்கம் இன்றுவரையில் தேசிய இன அடையாளத்திற்காகப் போராடுகின்ற மலையகமக்களின் வாழ்வாதாரங்களையும் அவலங்களையும் “சிவனு லட்சுமணனின் உயிர்த்தியாகம்”, மு.சி. கந்தையாவின் ‘நிஜங்களின் சத்தம்’, மலையக சமூகத்தின் நினைவுப்பதிவுகள் ஆகிய கட்டுரைகள் எடுத்துக்காட்டுகின்றன. மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்நாட்டில் மட்டுமன்றி புலம்பெயர்ந்த பின்னரும் ஓய்ந்தபாடில்லை.
இத்தேசத்தில் மலையக மக்கள் தனித் தேசிய இனமாக வாழ்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளும் போராட்டங்களும் அச்சமூகத்துள்ளிருந்த மேட்டுக்குடியினராலும் பிற இனக்குழுக்கள் செய்த சூழ்ச்சிகளாலும் தோல்வியைத் தழுவின. தனிநலன்களுக்காகவும் அதிகார நிலைப்புக்காகவும் பிரச்சிகைகைளைக் கண்டும் காணாமல் இருந்தமை மற்றும் காட்டிக்கொடுப்புகள் ஏற்படுத்திய பாதிப்புகளின் விளைவுகளே மலையக மக்களின் இருப்பிற்கான அடிவேர்களை அறுப்பதற்குக் காரணமாயின. அதனால் ஏற்படும் விளைவுகளே மு.சி கந்தையாவின் கவிதை வரிகளாலும் தோழர் இளஞ்செழியன் பற்றிய கட்டுரையின் வழியேயும் மாக்சியக் கோட்பாடுகள், கோட்பாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள், அம்முரண்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்புகள் என்பவற்றை நூலாசிரியர் தமது கோணத்திலிருந்து பார்க்கிறார்.

சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் முக்கிய வகிபாகத்தை  ஏற்பது சிறுகதைகளா அல்லது நாவல்களா அன்றேல் வேறு வடிவங்களா என்ற வாதத்தினை முன்வைத்து, சிறுகதைகள்தான் என்ற முடிவுக்கு வந்து, சிறுககைள் ஊடாக யாழ்ப்பாண சமூகம் பற்றிய ஆழமான ஊடுபார்வையை செலுத்தியுள்ளது இந்நூல்.  கே.ஆர்.டேவிட், தெணியான், புஷ்பராணி ஆகியோரது ஆக்கங்களினூடாக யாழ்ப்பாணச் சமூகத்தில் இருந்துவரும் தீராத வடுவான சாதியமைப்பும் அதன் சமூக எதிர்விளைவுகளும், சாதியமைப்பின் குரூரங்களிலிருந்து விடுபடுவதற்கு சமூக விடுதலை இயக்கங்கள் நடாத்திய போராட்டங்கள், அவற்றினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அவற்றின் நிறைவுறாத செல்நெறிகள் என்பவற்றை எடுத்துக்காட்டுவதற்கு ஆசிரியர் முற்பட்டு;ள்ளார். இலக்கியங்கள+டாகப் படைப்பாளிகள் சமூகத்தில் நிலவும் உண்மைநிலைகளையும் அவைபற்றிய தமது பார்வைகளையும் முன்வைத்தல் என்னும் பொறுப்பை நிறைவேற்றியிருக்கின்றார்கள். அத்தகைய இலக்கியங்களுக்குத் தலித் இலக்கியங்கள் எனப் பெயர்சூட்டி மகிழ்கின்ற மெத்தனப் போக்குகளும் உண்டு. ஆனால் படைப்பாளிகள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் சமூக இயல்புநிலையில் மிகமெதுவாகவே நிகழ்கின்றன. கல்வி, புலம்பெயர்வு, தொழில்அமைப்பு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் பொருளாதார மேம்பாடு; முதலிய காரணங்களால் சமூக வகுப்பு நிலைகளில் மாற்றங்கள் நிகழ்வது உண்மையெனினும் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் அவை புதிய வடிவங்கள் பெறுகின்றனவே தவிர அவை தீர்ந்தபாடில்லை.

தமிழினத்தின் சமூக பொருளாதார, பண்பாட்டு மற்றும் சமுதாயக் கட்டுக்கோப்புகளில் மிகப் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய விடயமாகக் கடந்த முப்பதாண்டுகாலப் போராட்டங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு தனி மனிதனும்  ஏதோவொரு விதத்தில் இப்போரட்டத்தின் பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியவில்லை. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்கள் வறுமை மற்றும் அதன் வழியேயான துன்ப துயரங்கள் அவர்களின் வாழ்க்கையில் குறுக்கிட்டன. இத்தகைய நிலைமைகளின் யதார்த்தங்களை போர்க்காலங்களில் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் எடுத்துக்கூறியுள்ளன. இங்கும் கே.ஆர் டேவிட், தெணியான் போன்றவர்கள் குறிப்பிட்டுப் பேசப்பட்டுள்ளார்கள் ஆயினும், இத்தகைய படைப்புகள் யதார்த்தங்களை வெளிப்படுத்தியமை தொடர்பிலும் பல விமர்சனங்கள் உண்டு. அத்தகைய இலக்கியங்கள் கலைத்துவமற்றவை என்பது விமர்சகர்களின் கணிப்பாகும். ஆயினும, இலங்கையில் பொதுவுடைமைத் தத்துவப் பின்னணியைக் கொண்டுள்ள படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் அரசியல் கலப்பின்றி இலக்கியங்களை வெளிக்கொணர்தல் சாத்தியமாக இருக்கவில்லை என்பதையும் லெனின் மதிவானம் அழுத்த்pக் கூறியுள்ளார்.

கல்வி சமூக மாற்றங்களுக்கு வழிகோலும் ஒரு கருவி அல்லது அக்கல்வியை முக்கொண்டு ஒரு சமூகத்தை உள்ளவாறே பேணலாம் என்பது மாக்சின் வாதமாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் ஆங்கிலக் கல்வி வாய்ப்புகளைப் பெற்றிருந்த மேலோர் குழாத்தின் பிடியிலிருந்து விடுபடுவதற்கும் சமூகவகுப்பில் மாற்றங்களை உருவாக்குவதற்கும் கல்வி கருவியாக இருந்துள்ளமையை மறுக்க முடியாது. மறுபுறத்திலே பல சமூகக் குழுக்கள் நியாயத்தன்மையுடன்கூடிய வகையில் கல்வியின் பலாபலன்களை அனுபவிக்கும் நிலைமை இருக்கவில்லை என்பதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமே. இச்செல்நெறி வடபுலத்தில் சாதி முயைமையினால் பின்தள்ளப்பட்ட மக்களுக்கும் மலையகத் தொழிலாளருக்கும் பொருந்தும். கடந்த காலங்களில் வெளிவந்துள்ள இலக்கியங்கள் கல்விசார்ந்து சமூகக்குழுக்கள் அனுபவித்த பிரச்சினைகளையும் முன்வைக்கத் தவறவில்லை.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதுகெலும்பாக இருந்து செயற்பட்ட பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்களும் தமது பல்வேறு துறைசார் அனுபவங்கினூடான ஆளுமையுடன் மக்கள் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்குப் பொருத்தமான ஆலோசனைகளையும் முன்வைத்தவர். மாக்சியக் கோட்பாடுகளால் கவரப்பட்ட பிரேம்ஜி அவற்றினை இலக்கியம் சார்ந்து பிரயோகிப்பதன்மூலம் சமுதாய விடுதலைக்கு உதவியமுறையை ஆராய்துள்ள லெனின் மதிவானம் பிரேம்ஜி பற்றிய தொடர்ச்சியான பார்வைகளின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

பேராசிரியர் கைலாசபதி அவர்கள் பற்றிய பார்வை இடம்பெற்ற விதத்தினை மூன்று வகையில் வகைப்படுத்தி அவற்றின் சார்புநிலை மற்றும் எதிர்விளைவுகளையும் குறிப்பிட்டு அத்தகைய பார்வைகளை மேற்கொண்டோரின் கோட்பாட்டு நிலைகள் பற்றியும் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மறுபுறத்திலே பேராசிரியர் கைலாசபதியின் பங்களிப்புகளைச் சமூக உணர்வு, மற்றும் கரிசனையுடன் அணுகியவர்கள் பற்றிய குறிப்புகளும் இங்கு காணலாம். முற்போக்குத் தளத்திலிருந்து கைலாசபதியை நோக்கியோர் கைலாசபதியின் பங்களிப்புகள், இலக்கியத்தில் அழகியல் பார்வை, தமிழியல் சூழலில் முனைப்புப்பெற்றிருந்த புதிய இலக்கியக் கோட்பாடுகளின் பின்னணியில் அமைந்த விமர்சனங்கள் சிறிதளவில் இடம்பெற்றுள்ளன. கைலாசபதியின் ஆக்கங்கள் தொடர்பான விஞ்ஞான ரீதியான நடுநிலைப்பார்வை செலுத்தியோர் வரிசையில் ந.இரவீந்திரனின் ஆய்வுகளின் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக பண்பாட்டுச் சூழல் பற்றிய ஆய்வுகளில் கைலாசபதி விட்டுச்சென்ற இடைவெளியை இரவீந்திரனின் ஆய்வுகள் நிரப்புவதாக அமைகின்றது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் பற்றிய குறிப்புகளில் இடதுசாரி இயக்கத்திற்கான அவரது பங்களிப்புகள், விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பார்வை, தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் காட்டிய முனைப்பு, அவருடைய அரசியல் தத்துவம் மலையகத்தில் வேர்கொண்டு கிளைபரப்பிய விதம் முதலிய விடயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. கே.ஏ.சியின் சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகள் எழுத்துலகிலும் சமூக நிலைப்பாடுகளிலும் வேரூன்றிய விதம் தொடர்பான பார்வைகள் பரணீயுடனான நேர்காணல்; வரிகளின் மூலம் தரிசிக்கச் செய்துள்ளமை எமது கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும்.

திரு.லெனின் மதிவானம் அவர்களின் இத்தகைய முயற்சியானது வாழ்க்கையில் உரிமைகள் மறுக்கப்பட்டதன் காரணமாக பிரச்சினைகளை எதிர்நோக்கும் மக்கள் நச்சுவளையத்தின் பிடிக்குள் சிக்குண்டு நலிவுற்று வருகின்றமை தொடர்பாக எமது சிந்தனையை மேலும் கிளறுகின்றது.  இத்தகைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கோட்பாடுகள் வழியேயான அணுகுமுறைகளின் விளைதிறன்களை மீள்வாசிப்புச் செய்வதற்கும் இந்நூல் பாதைகளைத் திறந்துள்ளது.

இலக்கியங்கள் அவற்றினை ஆக்குவோரது ஆதங்கங்களை வெளிக்கொணர்வதாக இருக்கின்றனவேயொழிய அவை சமூகத்தில் ஆக்கபபூர்வமான மாற்றங்களைக் கொணாந்;துள்ளனவா என்ற வாதமும் உண்டு. இவ்வாதத்திற்கான விடையை ஆழமான முறையில் தேடுவதற்கு லெனின் மதிவானம் போன்றவர்களின் பார்வை மேலும் வழிகோலும் எனக் கருதுகின்றேன்.  இவ்வாறான முயற்சிகளில் அவர்கள் தொடர்ந்தும் ஈடுபடுதல் வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்து முன்னுரையை நிறைவு செய்துகொள்கிறேன். 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates