Headlines News :
முகப்பு » , , » JHUவின் பரிணாமமும் பரிமாணமும் – (பகுதி-2) - என்.சரவணன்

JHUவின் பரிணாமமும் பரிமாணமும் – (பகுதி-2) - என்.சரவணன்


90களில் சிங்கள வீர விதான முன்னெடுத்த பல்வேறு வேலைத்திட்டங்களின் விளைவாக பல சிங்கள முன்னணி அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. சாதாரண சிங்கள அயலவர்கள் மீதும் அச்சம்கொள்ளும் காலம் உருவானது.

1997இல் விடுதலைப் புலிகள் கொலன்னாவ எண்ணைத் தாங்கிகளைத் தாக்கிய போது கொழும்பில் தமிழர்கள் பலர் சாதாரண சிவிலியன்களால் தாக்கப்பட்டதும், சில அப்பாவி இளைஞர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம். அதுபோல 2000 ஒக்டோபர் 25 அன்று அதி பாதுகாப்பைக் கொண்ட பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமை தாக்கி அங்கிருந்த 52 தமிழ் இளைஞர்களை கொன்றும் பலரை வெட்டி காயப்படுத்தியதும் நினைவுக்கலாம். சாதாரண சிங்கள சிவிலியன்கள் மீது பலி போடப்பட்டாலும். அந்த சிவிலியன்கள் யார் அவர்கள் எப்படி சிங்கள வீர விதான அமைப்பினரால் வழிநடத்தப்பட்டார்கள் என்பது குறித்து தெட்டத்தெளிவாக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை உட்பட பல மனித உரிமை அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த சம்பவத்தின் பின்னர் சிங்கள வீர விதான எனும் பெயரில் இயங்குவது படிப்படியாக நிறுத்தப்பட்டது. பேரினவாத சக்திகளுக்கு எவரின் பெயரில் இயங்குகிறோம் என்பது அவசியமில்லை. அவர்களுக்கு இலக்கு நிறைவேறினால் போதும். எனவே பல பினாமி பெயர்களில் இயங்குவதும் அவை நாளடைவில் காணாமல் போவதும் புதிதாக வேறொன்று முளைப்பதும் என அதன் நிகழ்ச்சிநிரல் திட்டமிட்டபடி நகர்ந்துகொண்டே போவதை அவதானிக்கலாம். குற்றம்சாட்டப்பட எவரும் இருக்கமாட்டார்கள். அன்று கொலன்னாவ, பிந்துனுவெவ தொடங்கி இன்றைய அளுத்கம வரை எவர் மீதும் எந்த அமைப்பின் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்ததும் கிடையாது. இதுவரை எவரும் தண்டிக்கப்பட்டதும் கிடையாது என்பதை நினைவில் வையுங்கள்.

தொண்டமான் ஒரு தடவை வடக்கை விடுதலைப்புலிகளுக்கு 10 ஆண்டுகள் ஆட்சிபுரியச் கொடுத்து பார்க்கலாம் என்று வெளியிட்ட கருத்துக்கு தென்னிலங்கையில் எழுந்த எதிர்ப்புணர்வின் விளைவாக; இறுதியில் ஹெல உறுமய எனும் கட்சி உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் இனவாதிகளாக அறியப்பட்ட அப்போதைய களுத்துறை மாவட்ட ஐ,தே.க பாராளுமன்ற உறுப்பினர் திலக் கருணாரத்ன, எஸ்.எல்.குணசேகர வுடன் சம்பிக்க ரணவக்கவும் பிரதான பாத்திரம் வகித்தனர்.

2000ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஹெல உறுமய 127,863 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை பெற்றது. அந்த ஆசனம் திலக் கருணாரத்னவுக்கு வழங்கப்பட்டது.

தேர்தலின் பின்னர் சில உட்கட்சி சலசலப்புகளைத் தொடர்ந்து திலக் கருணாரத்ன அதிலிருந்து விலகி பின்னர் ஐ.தே.க.வில் இணைந்தார். சில பிக்குமார்களும் விலகிய போதும் கட்சியை உறுதியுடன் தூக்கி நிலைநிறுத்தியது சம்பிகவும், அதுரலியே ரதன தேரவும். ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான உடுவே தம்மாலோக தேரர் விலகிய வேளை; பிக்குமார் அரசியலுக்குள் வந்தது தவறு என்று தான் உணர்ந்துள்ளதாகவும் ஏனைய கட்சி உறுப்பினர்களும் அது குறித்து பரிசீலிக்குமாறும் பின்னர் கேட்டுக்கொண்டார்.

இந்த இடைக்காலத்தில் பல முன்னணி அமைப்புகளை வெவ்வேறு வேலைத்திட்டங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டன. குறிப்பாக பலர் அறிந்த “பயங்கரவாதத்துகெதிரான தேசிய இயக்கம்”, “வடக்கு-கிழக்கு சிங்கள சங்கம்”, “SPUR” போன்ற தேசிய சர்வதேசிய அமைப்புகளை இயக்கியது. 

சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டிருந்ததால் அதற்கெதிராக முழு அளவில் செயற்பாடுகள் மையப்படுத்தப்பட்டன. கொழும்பு விகார மகா தேவி வெளியரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிங்கள-தமிழ் கலாசார ஒன்ருகூடலைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. சிங்கள-தமிழ் கலைக்கூடல் நிகழ்வையும் தாக்கி குழப்பினார்கள்.

அதன் பின் சிஹல உறுமய கலைக்கப்பட்டு அதன் பின்னர் ஜாதிக்க ஹெல உறுமய என்று மாற்றம் பெற்றது. 90களில் பேரினவாதத்தை ஜனரஞ்சகமாக பட்டை தீட்டுவதில் வெற்றிகண்ட கங்கொடவில சோம ஹிமி; இந்த பேரினவாத சக்திகளுக்கெல்லாம் சிறந்த வெகுஜன பிரச்சாரகராக திகழ்ந்தார். அவர் 90களில் அதிக அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்திய முக்கிய பௌத்த துறவி. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதாக அவர் 2002இல் அறிவித்திருந்தார். ஆனால் அவர் ரஷ்யா சென்றிருந்த வேளை 2003 டிசம்பர் 12 திடீரென்று மரணமடைந்தார். அது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கக்கூடும் என்று இலங்கையில் பெரும் சர்ச்சைகுள்ளானது. அதன் விளைவாக 2004இல் பௌத்த துறவிகளுக்கு முக்கியத்துவம் வழங்கக்கூடியவகையில் கட்சியாக மாற்றியமைக்கும் முடிவு எடுக்கப்பட்டு “ஹெல உறுமய” அதன் பின்னர் “ஜாதிக ஹெல உறுமய” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சோம ஹிமி உயிரோடு இருந்து உருவாக்க முனைந்த பிக்கு அரசியல் அவரது உயிர் போனதால் உருவாக்கப்பட்டது.

 பௌத்த பிக்குமார்களை தலைமையில் முதன்மைப்படுத்தி அரசியலுக்கு வந்த முதல் கட்சி என்பதால்; ஆரம்பத்தில் பல பௌத்த அமைப்புகளும், பௌத்த பிக்குமார்களும் பௌத்த துறவிகளை நேரடி அரசியலில் ஈடுபடுத்துவதை எதிர்த்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். ஆனாலும் பெரும்பாலான சிங்கள பௌத்த மத்திய தர வர்க்கத்தின் ஆதரவோடு அக்கட்சியை பிரகடனப்படுத்தினர். லங்கா சம சமாஜ கட்சியின் பத்தேகம சமித்த தேரோ இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் அங்கம் வகித்த முதல் பௌத்த துறவி எனலாம். அது 2001ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

பிக்குமார்களை தேர்தலில் போட்டியிட முடியாதபடி அரசியலமைப்பின் 91ஆவது பிரிவான பாராளுமன்ற உறுப்பினரின் தகுதி பற்றிய விதிகளை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வருவது இன்னொரு கதை.

2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இறங்கியது ஜா.ஹெ,உ. அவசர அவசரமாக ஆரம்பிக்கப்பட்டு 48நாளில் தேர்தலை எதிர்கொண்டது. ஏப்ரல் 2 நடந்த அத் தேர்தலில் அக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மொத்த 260 பேரும் பௌத்த துறவிகள் என்பது குறிப்படத்தக்கது. முதற்தடவையிலேயே நாடு முழுவதும் 552,724 அதாவது 6 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன் 9 ஆசனங்களை வென்றனர். அதனை ஒரு வரலாற்று சாதனையாகவே இன்றும் அறிவித்து வருகின்றனர். அந்தத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) மொத்த வாக்கு வீதமும் 6.84 மட்டுமே. தமது பலம் தற்போது TNA விட அதிகமானது என்றும், தாமே பேரம் பேசும் பலம் அதிகமுள்ள கட்சி என்றும் தற்போது அரசாங்கத்தை சவாலிட்டு வருவதையும் அறிவீர்கள்.

சம்பிக்க ரணவக்க ஜா.ஹெ.உ வின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார். 2004இல் அரசியலுக்கு வந்த வேகத்திலேயே மதமாற்றத்தை தடுப்பதற்கான சட்டத்தை நிறைவேற்ற அதிக பிரயத்தனம் எடுத்தனர். அது அன்று வெற்றியளிக்காத போதும் அவர்களது நிகழ்ச்சிநிரலில் இன்னமும் நீங்காத அங்கம் அது.

2004 டிசம்பரில் சுனாமி பேரனர்த்தத்தைத் தொடர்ந்து அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தத்தை கைவிடும்படி ஜா.ஹெ.உ வின் முக்கிய பிரமுகரான ஓமல்பே சோபித்த தேரர் மேற்கொண்ட சாகும் வரை உண்ணாவிரதம் ஒரு அரசியல் பூகம்பத்தேயே ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலை தமிழர் எதிர்ப்பு சக்திகளுக்கு சாதகமாக அமைந்தது. 15ஆம் திகதி இறவுக்குள் கைவிடாவிட்டால் கூட்டரசாங்கத்திலிருந்து 16 ஆம் திகதி விலகப்போவதாக அறிவித்ததுஜே.வி.பி. மூன்று பௌத்த பீடங்களும் பொதுக்கட்டமைப்பை எதிர்த்தனர். சந்திரிகாவை சிங்கள பௌத்த சமூகத்திலிருந்து வெளியேற்றி விடுவதாக அவை எச்சரித்தன. ஜே.வி.பியுடன் சேர்ந்து 80 தொழிற்சங்கங்களும் பௌத்த அமைப்புகளும் வீதியில் இறங்கினர். சந்திரிகா சரணடையும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதன் காரணமாக உச்சநீதிமன்றத்தில் மேற்கொண்ட வழக்கைத் தொடர்ந்து அந்த சுனாமி பொதுக்கட்டமைப்புக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் சந்திரிகாவை பலவீனப்படுத்துவதில் முக்கிய காரணங்களில் ஒன்றானது. அதுவே அரசியல் மாற்றமொன்றுக்கும் இட்டுச்சென்றது. இந்த வெற்றி ஜா.ஹெ.உவின் பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியென்றே கூறவேண்டும். அதன் தொடர்ச்சியாக 2005ஆம் ஆண்டு மகிந்தவை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறச் செய்யும் பாரிய பணியை ஜா.ஹெ.உ ஆற்றியது. சுனாமியால் மோசமாக பாதிக்கப்பட்டு உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து நிர்க்கதியாக நின்ற மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணத்தைக்கூட கிடைக்க விடாமல் செய்வதற்கான கருத்து நிலையை ஏற்படுத்தியதில் ஜா.ஹெ.உ கண்ட வெற்றி மறக்கூடியதல்ல.

விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நிகழ்ந்த பேச்சுவார்த்தையை முறியடிப்பதற்காக முழு அளவில் களம் இறங்கியிருந்தார்கள். அரசியல் தீர்வுக்கு எதிராக, உள்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக, நோர்வே அரசாங்கத்துக்கு எதிராக தொடர் பிரசாரத்தையும் போராட்டத்தையும் நடத்தினார்கள். போர் வெற்றிக்கு  அடிக்கடி நோர்வே தூதுவராலயத்தை முற்றுகையிட்டார்கள் தாக்கினார்கள். மாவிலாறு சம்பவத்தை நாடெங்கிலும் எடுத்துச்சென்று பாரிய அளவு சிங்கள பௌத்தர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தினார்கள். ஊடக சந்தையில் சிங்கள பௌத்த சித்தாந்தத்துக்கு சந்தைப் பெறுமதியை ஏற்படுத்தினார்கள். சிங்கள பௌத்த கருத்தியல் போருக்கு சாதகமற்ற ஊடகங்கள் சந்தையில் வெற்றிபெற முடியாத நிலையைக் கொண்டு வந்தார்கள். அனைத்து தளங்களிலும் தமிழர் எதிர்ப்பு உணர்வுநிலையை மக்கள்மயப்படுத்துவதில் பாரிய வெற்றி பெற்றார்கள். அவர்கள் எந்த தகவலையும், கருத்தையும் புனைவேற்றி பரப்பினாலும் அதற்கு பின்னால் பெரும்பான்மையோர் அணிதிரளும் நிலைக்கு கொண்டுவந்தார்கள். அதுவே பேச்சுவார்த்தையை படிப்படியாக பலவீனப்படுத்தி, முறியடித்து, வடக்கு கிழக்கை பிரித்து, போரைத் தொடக்குவதற்கு ஏதுவானது. அதற்கான வலுவான நியாங்களையும் புனைந்தார்கள். 

அதுமட்டுமன்றி ரதன தேரர் உள்ளிட்ட பல பிக்குமார்கள் போர்க்களத்திற்கு சென்று படைவீரர்களுக்கு பௌத்த ஆசி வழங்குவது, உபதேசம் வழங்குவது, உளபலத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி தமது ஆதரவுடனும் ஆசியுடனும் அவர்கள் போரில் வெற்றி பெறுவார்கள் என்கிற செய்தியை ஊடகங்கள் ஊடாக பிரசாரப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். அரசியல் தீர்வு மூலமே நிரந்தர தீர்வு காண முடியும் என்கிற அபிப்பிராயத்தை தோற்கடித்து இராணுவத் தீர்வே ஒரே வழி. அதில் வெல்லலாம் என்கிற இலக்கை நோக்கி அனைத்து சிங்கள சக்திகளையும் மையப்படுத்தினார்கள். 

போரிலும் வெற்றிபெற்றார்கள். எதிர்க்கட்சியோ, ஜே.வி.பி. உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகளோ கூட இந்த நிலைமைக்கு எதிராக ஏதேனும் மேற்கொள்ள எத்தனித்தால் சிங்கள மக்களிடமிருந்து ஓரங்கட்டப்படும் விதத்தில் நிலைமைகள் கட்டமைக்கப்பட்டன. இப்படியான பக்கபலம் இன்றி போரை கிஞ்சித்தும் வென்றிருக்க முடியாது என்பதை உணரவேண்டும்.

சமகால இனப்பதட்ட நிலையையும், மதப் பதட்ட நிலையையும் தக்க வைப்பதில் சிங்கள பௌத்த ஆளும் அதிகாரத்துவ நிறுவனமும், சிங்கள பௌத்த சக்திகளும் கைகோர்த்து செயலாற்றி வருகின்றன. போர் இருந்த காலத்தில் ஆயுதப்போராட்டம் ஒரு பேரம் பேசும் பலத்தை தமிழர் தரப்புக்கு தந்திருந்தது. அது முஸ்லிம்-மலையக அரசியலுக்கும் கணிசமான சாதகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் போரின் பின்னர் வெறும் சிதறடிக்கப்பட்ட அரசியல் சக்திகளின் கைகளுக்குள் மாத்திரம் அந்த பேரம் பேசும் ஆற்றல் குறுக்கப்பட்டது. இன்று பேரம் பேசுமளவுக்கு தகுதி எந்த சிறுபான்மை கட்சிகளுக்கும் இல்லை என்று நம்புகிறது அரசு. அப்படியொரு தகுதியை தமக்கே இருப்பதாக இப்போது பேரினவாத சக்திகள் பிரகடனப்படுத்தியுள்ளன. அதில் பெரிய உண்மையும் உண்டு.

எனவே தான் தற்போது தமிழ்-முஸ்லிம்-மலையக மக்களின் அரசியல் இருப்பை முற்றுமுழுதாக செயலிழக்க செய்வதற்கான அடுத்த கட்ட போரை ஆரம்பித்திருக்கிறது ஜாதிக ஹெல உறுமய. இந்த அரசியல் புரிதலே சிறுபான்மை அரசியல் நடவடிக்கைகளுக்கு முன்நிபந்தனையாகும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates