Headlines News :
முகப்பு » » தெளிவுடன் இருக்கும் மக்கள் குழம்பிப் போயுள்ள தலைமைகள் - என்னென்ஸி

தெளிவுடன் இருக்கும் மக்கள் குழம்பிப் போயுள்ள தலைமைகள் - என்னென்ஸி


சொந்தமான காணி, அதில் தனிவீடு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் மலையக மக்கள் மிகவும் தெளிவுடன் இருக்கின்றனர். அதற்காகக் குரல் கொடுப்ப தற்கும் போராடுவதற்கும் தயாராகி விட்ட னர். ஆனால், மலையகத் தலைமைகள் தான் குழம்பிப்போய் கிடக்கின்றன.

தமக்கெனத் தனியாகக் காணிகள் வழங்கப்பட்டு, அதில் தனித்தனி வீடுகள் அமை த்துக் கொடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி மலையக மக்கள் சுயமாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரத்தில் கூட ஹட்டன் மற்றும் பதுளை ஆகிய இடங்களில் இதற்கான போராட்டங்கள் இடம்பெற்றன.

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதுடன், அவர்களின் தேவைகளை பூர் த்திசெய்து அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொடுத்து வழிகாட்ட வேண்டிய மலையகத் தலைமை கள் இன்று குழம்பிப்போயுள்ளன என்பது தெளிவாகிறது. மக்களின் கோரிக்கைகளு க்கு எவ்வாறு பதிலளிப்பது என்று தடுமாறிக்கொண்டிருக்கின்றன.

மக்கள் தமக்கான காணியுரிமை, வீட்டுரிமை என்பவற்றுக்காக தமக்கிடையிலான குரோதங்கள், கட்சி பேதங்கள் அனைத்தையும் துறந்து ஒன்றுபட்டு குரல் கொடுக்கின்றனர். போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த ஒற்றுமை மலையகத் தலைமைகளிடம் இல்லாமலிருப்பது வேதனைக்குரியது.

தொழில் பிரச்சினை தொடங்கி சம்பள உயர்வு கோரிப் போராடுவது வரை ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு திசையிலேயே பயணிக்கின்றன. ஒரு கட்சி ஒரு தொகையைக் கேட்டால் இன்னொரு கட்சி வேறொரு தொகையைக் கோருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஏட்டிக்குப் போட்டியாக நடப்பதால் கோரிக்கைகள், போராட்டங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகின்றன. இதனால் பாதி க்கப்படுவது அப்பாவித் தோட்டத் தொழிலாளர்கள்தான்.

தற்போது தோட்டப்பகுதி மக்கள் முன்வைத்திருக்கும் காணியுரிமை, வீட்டுரிமை கோரிக்கைகளிலும் மலையகத் தலைமை களிடம் ஒத்த கருத்தோ அல்லது ஒரு பொதுத் திட்டமோ இல்லை. ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கருத்தினைக் கொண்டிருக்கின்றன.

ஒரு கட்சி தோட்டத் தொழிலாளருக்கு மாடி வீட்டுக் குடியிருப்பு முறையே சிறந்ததென்று தெரிவிக்கிறது. ஆனால் தோட்டத் தொழிலாளருக்கு மாடிவீட்டுத் திட்டம் பொருத்தமற்றது. தனித்தனி வீடுகளே அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று ஏனைய கட்சிகளும் பொதுமக்களும் கூறுகின்றனர்.

மற்றொரு கட்சியோ தொழிலாளருக்கு 7 பேர்ச் காணி வழங்கப்பட்டு அதில் தனித்தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென்று கூறுகிறது.
இன்னொரு கட்சியோ 7 பேர்ச் காணி போதாது 10 பேர்ச் காணியும் அதில் தனியான வீடும் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் பிறிதொரு கட்சியோ 7 பேர்ச் நிலமோ அல்லது 10 பேர்ச் நிலமோ போதாது. 20 பேர்ச் காணி வழங்கப்படுவதுடன் அதில் தனி வீடு அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். அதுவே தற்போதைய தேவை என்கிறது.

எத்தனை பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும். அதில் எவ்வாறான வீடு அமை க்கப்பட வேண்டும் என்பதில் கூட மலையகத் தலைவர்களிடம் ஒரு பொதுவான திட்டமோ, கொள்கையோ கிடையாது. அவரவர் விருப்பப்படி ஒரு குறிப்பிட்ட அளவை வழங்க வேண்டுமென்று கூறுகின்றனர். ஏட்டிக்குப் போட்டி என்பார்களே அதுதான் இங்கும் நடைபெறுகிறது.

சில வாரங்களுக்கு முன்னர் மலையகத் தின் பிரதான கட்சியொன்றின் அரசியல்வாதி ஒருவர் அறிக்கை ஒன்றை விடுத்தி ருந்தார். அந்த அறிக்கையில் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் தொழிற்சங்கங்கள் செய்து கொண்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் வீடமைத்துக் கொள்வதற்காக 7 பேர்ச் காணி வழங்குவதற்கான விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

கூட்டு ஒப்பந்தத்தில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன என்பதையெல்லாம் அறிந்திராத ஒருவர் தான் அந்தப் பிரதான கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். விளக்கமில்லாத தலைவர்கள் முதலில் குறித்த விடயம் தொடர்பாக தாங்கள் விளக்கம் பெற்றுக்கொண்ட பின்னர், அதுபற்றி மற்றவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். அதை விடுத்து எதையாவது சொல்லி மக்களை ஏமாற்றி விடலாம் என்று மட்டும் நினைத்துவிடக் கூடாது. ஏமாற்ற நினைத்தால் ஏமாந்து போய்விடுவீர்கள் என்பதே உண்மை.

எனவே, ஒரு குடும்பத்துக்கு எத்தனை பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும்? அதில் எவ்வாறான வீடு அமைய வேண் டும்? என்ற ஒரு பொதுத் தீர்மானத்துக்கு வரவேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள், மலையக சமூக அமைப்புக்கள் என்பன ஒன்றிணைந்து தீர்மானிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

மலையக மக்கள் தற்போது என்றுமில்லா தவாறு தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடுவதற்குத் தயாராகி விட்டனர். இது சமூகத்தின் உரிமைக்கான ஒரு எழுச்சியாகும். எனவே, மலையத்தலைமைகள் ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்து செயற்பட வேண்டும்.

அரசாங்கம் ஏற்கனவே அறிவித்த தரிசு காணி பகிர்ந்தளிப்பு மற்றும் 50 ஆயிரம் மாடி வீடுகள் என்பன நடைமுறைக்கு வராமைக்கு காரணம் யார்? அரசாங்கமா? அல்லது மலையக மக்களா? இல்லை, மலையக அரசியல் தலைமைதான் காரணம்!

மலையக பிரதான கட்சிகள் மட்டுமன்றி, ஏனைய சிறிய கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்திலேயே அங்கம் வகிக்கின்றன. அமைச்சர், பிரதியமைச்சர்கள், மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபை, நகர சபை தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர்.

இவ்வாறு அரசாங்கத்துடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள கட்சிகள் தரிசு நில பகிர்ந்தளிப்பு, வீடமைப்பு என்பவற்றை விரைவுபடுத்துமாறு அரசை வலியுறுத்தியிருக்க வேண்டும். பாராளுமன்றத்திலும் அமைச்சரவைக் கூட்டங்களிலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால், இதனை எந்தவொரு கட்சியுமே செய்யவில்லை. தானுண்டு, தமது குடும்பம் உண்டு, தொழில் உண்டு என்று இருந்து விட்டனர். ஒருவர் தருகிறேன் என்று கூறினால் அதனை அவ்வப்போது கேட்டுப் பெற வேண்டும் சும்மா இருந் தால் கிடைக்காது.

இந்த நிலையிலேயே தற்போது மலையக மக்கள் மலையகத் தலைமைகளை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் சுயமாகவே போராடத் தொடங்கி விட்டனர் என்பதே உண்மை. எனவே, இனியாவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுப்பதாகத் தெரிவித்த ஐந்தாயிரம் வீடுகளுக்கும் என்ன நடந்தது? மலையக தொழிற்சங்கங்களின் தலையீடு, போட்டி, சண்டை என்பவற்றால் அதுவும் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

யாருக்குக் கிடைத்தாலும் அது மலையக மக்களுக்குத்தானே என்ற பரந்த மனப்பான்மையின்றி, குறுகிய மனப்பான்மையுடன் நடந்து கொண்டதால் அநியாயமாக ஐயாயிரம் வீடுகள் யாருக்கும் கிடைக்காமல் போயுள்ளன.

இது ஒரு நல்ல சந்தர்ப்பம்! ஜனாதிபதி தேர்தல் நடைபெறப் போகின்றது.
தரிசு காணியை பகிர்ந்தளிப்பதாகவும் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துத் தருவதா கவும் அறிவித்த ஜனாதிபதி அதனை நிறை வேற்றுவதற்குத் தயங்கமாட்டார் என்பது மலையக மக்களின் நம்பிக்கை.

ஒட்டுமொத்த மலையகக் கட்சிகளும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கே ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளன. இந்த மலையகக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து (தமக்குள் உள்ள வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு) மேற்படி திட்டத்தை நிறை வேற்றித்தருமாறு ஒரு கோரிக்கையை முன்வைக்கலாமல்லவா? இந்தக் கோரிக்கையை முன்வைத்து செயற்பட்டால் நிச்சயமாக மக்கள் தங்களது ஆதரவை வழங்குவார்கள்!

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பதையும் மலையகத் தலைவர்கள் மறந்துவிடக் கூடாது!

நன்றி - வீரகேசரி 23.11.2014
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates