Headlines News :
முகப்பு » , , » "தேசிய இயக்கம்” : உறவு – முறிவு – பிரிவு!!!??? - என்.சரவணன்

"தேசிய இயக்கம்” : உறவு – முறிவு – பிரிவு!!!??? - என்.சரவணன்


வரலாற்றில் என்றுமில்லாதவாறு இம்முறை இனவாத அணிகளின் பாத்திரம் குறித்தும், ஒவ்வொன்றும் எந்தெந்த நிலைப்பாடுகளை எடுக்கும், எந்த அணியை சேரும், என்ன கருத்தை கூறும் என்றும் அனைவரின் கவனத்தையும் தம் பக்கம் திசைதிருப்பிவிட்டுள்ளன இனவாத அணிகள். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாகவும், பேரம் பேசும் ஆற்றல் கொண்ட சக்தியாகவும் அவை உருப்பெற்றது தற்செயல் நிகழ்வல்ல. பிரதான அரசியல் அரங்கில் தேசிய கட்சிகளை மற்றுமல்ல ஏனைய அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுக்கும் சக்தியாகவும், அரசியல் மிரட்டல் செய்யும் வல்லமையையும் அவை கொண்டிருக்கின்றன.

வரலாற்றில் காலத்துக்கு காலம் அரசாங்கங்களினதும், அரசியல் கட்சிகளினதும் அனுசரணையாலும், ஆதரவினாலும் வளர்ந்ததெழுந்த பேரினவாதம் இன்று சித்தாந்தத்தாலும், வடிவத்தாலும், பண்பாலும்  நிறுவனமயப்பட்டு ஆழ வேரூன்றி விருட்சமாக நிலைபெற்று பூதம் போல காட்சியளிக்கிறது.

இப்படி வளர்வதற்கு காரணமாக இருந்த அரசியல் சக்திகளோ ஏன் அரசோ கூட இனி இதனை கட்டுபடுத்த தாமே விரும்பினாலும் அது முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருகிறது அதுமட்டுமன்றி அவை பேரினவாதத்தின் தயவில் தங்கியிருக்கும் நிலைக்கு ஆளாகியிருப்பது தான் இன்றைய அரசியலின் பெரும்போக்கு. அந்த கண்ணோட்டத்திலிருந்தே தற்போதைய இனவாத உறவுகளையும், முறிவுகளையும் கணிக்க வேண்டியிருக்கிறது.

இனவாத சக்திகள் எத்தனைதான் சிறு சிறு அமைப்புகளாக இயங்கினாலும்; சரியான புள்ளியில் வந்து சமரசமின்றி இணைந்துவிடுவதை பார்க்கலாம். கடந்த இரு தசாப்தகாலமாக அவை தம்மை “ஜாதிக பலவேக” “தேசிய சக்தி” என்றே தம்மை அழைத்துக்கொள்கின்றன. ஜாதிக ஹெலஉறுமய, பொதுபலசெனா, ராவணா பலய,  சிங்கள ராவய, ஜாதிக சங்க சம்மேளனய இன்னும் எத்தனையோ அமைப்புகளும் தமக்குள் முரண்பட்டாலும் “தேசிய சக்தி”க்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரி செய்ய வேண்டும்” என்று முனங்குகிற கதையாடல்களையும் காணத்தான் செய்கிறோம். 

மகிந்தயிசம்
தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வெற்றிக்குப் பின்னால் ஒரு முக்கிய தந்திரோபாய வழிமுறை இருந்து வந்திருக்கிறது  என ஒரு நோர்வேஜிய ஆய்வாளர் சமீபத்தில் சுட்டிக்காட்டினார். வேறென்ன பிரித்தாளும் வழிமுறை தான் அது என்கிறார். புலிகளைப் பிரித்தது, வடக்கு கிழக்கை பிரித்தது, பிரதான எதிர்க்கட்சியையே சுக்குநூறாக ஆக்கி பலமான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தையே இழக்கசெய்தது, எவ்வாறு இருந்தாலும் இன-மத ரீதியில் ஐக்கியப்பட்ட கட்சி என்று கருதப்பட்ட முஸ்லிம் காங்கிரசை உடைத்தது, மூன்றாவது சக்தியாக வளர்ந்து வந்த ஜே.வி,பி.யை உடைத்தது வரை பட்டியலிடலாம். எதிரியை அவர்களுக்குள்ளேயே உடைத்து பிரித்து பலவீனபடுத்துவதோடு நில்லாமல் பிரிந்த உதிரிகளை தம்மாடு சேர்த்துக்கொண்டு கொழுத்துகொண்டு போவது அந்த வழிமுறை. அதன் மூலம் அரசியலமைப்பை மாற்றுமளவுக்கு பெரும்பான்மை பலத்தை ஸ்தாபித்து, இறுதியில் வரலாற்றுப் பிரச்சினையான யுத்தத்தை வெல்வது வரை நடந்தேறியது என்கிறார் அவர். இதனை மகிந்தவாதம் (Mahindaism) என்று அறிமுகப்படுத்துகிறார் பிரபல சிங்கள நடிகர் ஜெக்சன் என்டனி.

இந்த கோணத்திலும் ஒரு பார்வையை முன்வைக்க முடியும். அந்த பார்வை சரியானால் அதன் நீட்சியாக இன்று இனவாத அமைப்புகளுக்கும் அதே தந்திரோபாயம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது.

இறுதியில் பூமராங் போல அதே பிரித்தாளும் தந்திரோபாயம் மிகப்பெரிய சுனாமியாக அரசாங்கத்தையே வந்து தாக்கி சுக்குநூறாக்கும் என்று எவரும் கனவு கூட கண்டிருக்கமாட்டார்கள்.

ஆனால் “தேசிய இயக்கத்தில்” கை வைப்பது என்பது அவ்வளவு எளிமையான விடயமல்ல. எந்த இனவாத சக்திகளின் தயவில் ஏனைய அரசியல் கட்சிகள் அனைத்தையும் அரசாங்கம் தேசத்துரோக குற்றம் சாட்டியதோ, இன்று அதே இனவாத சக்திகளால் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் ஆளாகத் தொடங்கியிருப்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அரசாங்கமும் பதிலுக்கு தமது பினாமி “சிங்கள பௌத்த” சக்திகளை பிரயோகித்து அதே குற்றச்சாட்டை பதிலுக்கு வீசத் தொடங்கியிருக்கிறது.

ஜாதிக ஹெல உறுமய
ஏனைய பல அமைப்புகளை கடந்த இரு தசாப்தங்களுக்குள் குட்டிபோடவைத்த தாயமைப்பு ஜாதிக ஹெல உறுமய. பேரினவாதத்தக்கு சித்தாந்த பலத்தை வலுவூட்டுவதில் கைதேர்ந்த நிபுணத்துவம் பெற்ற, விலைபோகாத ஒரு அமைப்பு. எனவே ஏனைய எந்த அணியையும் விட ஜாதிக ஹெல உறுமய தனது பலத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டு தான் இருக்கிறது.

18ஆம் திகதியன்று தாம் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி ஜாதிக ஹெல உறுமய தனது தீர்மானத்தை வெளியிட்டது. அதன்படி அரசாங்கத்தில் வகிக்கும் அனைத்து அமைச்சு பதவிகளையும் ராஜினாமா செய்வதாகவும், இது அன்றைய தினம் ஜனாதிபதிக்கான தமது பிறந்த நாள் பரிசென்றும் சம்பிக்க ஊடகங்களுக்கு அறிவித்தார். “நாங்கள் கல்லைப் பிளந்துள்ளோம். சிங்களவர்களே வெளியே வாருங்கள்” என்றார்.

ஜாதிக ஹெல உறுமயவைப் பொறுத்தளவில் மகிந்த கொம்பனியே தமது இலக்குக்கு சாதகமானது என்பது தற்போதைய அரசியல் சூத்திரத்தை அறிந்த அனைவருக்கும் தெரியும். அரசாங்கத்தில் இருப்பார்கள் ஆனால் அமைச்சு பதவியை ராஜினாமா செய்வார்களாம். தமது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று அரசாங்கத்தை மிரட்டுவார்களாம் ஆனால் அரசாங்கத்தின் ஏனைய தீர்மானங்களை ஆதரித்து இருப்பதாக முடிவு செய்வார்களாம். மகிந்தவை தோற்கடிப்பார்களாம் ஆனால் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டர்களாம். அடிப்படையில் ஐ.தே.கவின் கொள்கைககள் அவர்களுக்கு சாதகமானது அல்ல. இதனை அவர்கள் நேரடியாக வெளிப்படுத்துவதில் உள்ள சூட்சுமம் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

விக்டர் ஐவன் பி.பி.சி க்கு அளித்த பேட்டியில் இந்த வெளியேற்றம் குறித்து இப்படி கூறுகிறார். “இந்த பிக்குமார் முட்டையை உடைத்துவிட்டார்கள். உடைந்த முட்டை அழுகுவதற்குள் அதனை ஒம்லட் ஆக்குவது எதிர்கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளைப் பொறுத்தது.”
அரசாங்க சார்பு நேரடி ஆதரவு அணியாகிய விமல் வீரவங்ச அணியை மூன்றாவது பலம் பொருந்திய இனவாத அணியாக தற்போதைய நிலையில் கணிக்கலாம். அதிகாரம், பண பலம், முக்கிய மூத்த பிக்குகள் அமைப்புகளின் பலம் என்பவை அதற்கு சாதகமானவை. 

பொதுபல சேனா
18ஆம் திகதி பொதுபல சேனா தலைமையகத்தில் நடத்தப்பட்ட ஊடக மாநாட்டில் ஞானசார தேரர் 
“ஜனாதிபதித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அரச தரப்பை சார்ந்த சிலரும் எதிர்க்கட்சியை சார்ந்தவர்களும் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சதிகாரர்களுக்கு துணை போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனும் முஸ்லிம் காங்கிரஸுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். சில நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு உடன்படிக்கைகளையும் செய்து கொண்டுள்ளனர். எனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் என்ன நிபந்தனைகள் என்ன? செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் என்னவென்பது தொடர்பில் நாட்டுக்கும் மக்களுக்கும் பகிரங்கப்படுத்த வேண்டும்...
இந்நாட்டின் தலைவர்கள் யாரென்பதை சிறுபான்மையின அரசியல் கட்சிகள் தீர்மானிக்கும் காலம் மலையேறி விட்டது. இனி ஒருபோதும் அதற்கு இடமளிக்கமாட்டோம். இந்நாட்டின் தலைவரை தீர்மானிக்கும் சக்தியாக பொதுபலசேனா உருவாகி விட்டது. சிங்கள பெளத்தர்களே இந்நாட்டை ஆழ வேண்டும். அதனை நாமே தீர்மானிப்போம். எனவே அரச தரப்பினரும் எதிர்க்கட்சியினரும் நாட்டை காட்டிக்கொடுக்கும் சிங்கள பௌத்தர்களை காட்டிக்கொடுக்கும் வரலாற்றுத் தவறை செய்வதற்கு முன்வரக்கூடாது.
பொதுபல சேனாவை சேர்ந்த ஒருவரை வீரவங்ச தனது கூட்டத்தில் பேச வைத்திருந்தார். ஏற்கெனவே நாங்கள் நோர்வே அரசின் பணத்தில் இயங்குவதாக அவதூறு கூறியவர் அவர். அப்படியிருக்கையில் எங்களை அழைத்ததன் மூலம் ஒன்றில் “நோர்வே அரசின்” கைக்கூலியாக அவரும் மாறியிருக்க வேண்டும் அல்லது நாங்கள் அப்படி அல்ல என்பதை அவர் இப்போது எற்றுகொண்டிருக்கவேண்டும். எப்படியோ வீரவங்ச இந்த செய்கைக்காக வெட்கப்படவேண்டும்.”
என்று செவ்வாய்கிழமை ஊடக மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
சமீபகாலமாக முக்கிய கட்சிகள் தம்மை போதுமான அளவு கணக்கிலெடுப்பதில்லை என்கிற ஆதங்கத்தில் அறிக்கை போர்களிலும், ஊடக மாநாடுகளை கூட்டிக்கொண்டே இருக்கிறது பொது பல சேனா. தனது செல்வாக்கை நிலைநிறுத்த ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய பாத்திரத்தை வகிக்கலாம் என்பதில் குழம்பிப் போயிருப்பது தெரிகிறது. எதிர்கட்சிகள் ஏன் தமது பொது வேட்பாளர் பற்றிய முடிவை இன்னமும் அறிவிக்கவில்லை என்று சகல இடங்களிலும் புலம்பிய ஞானசாரர், தாம் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்கிற முடிவை இன்னமும் அறிவிக்கவில்லை. இடைக்கிடை தமது தரப்பு வேட்பாளரை நிறுத்துவோம் என்றும் பயமுறுத்துகிறார்.

மதுமாதவ அரவிந்த
இவ்வாரம் இனவாத முகாம்களில் சர்ச்சைக்குரிய செய்திகளில் ஒன்று மதுமாதவ அரவிந்த ஜாதிக ஹெல உறுமயவை விட்டு விலகியதும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்ததாக அறிவித்ததும்.

ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினர் மதுமாதவ அரவிந்த. இனவாதத்துக்கு வரலாற்று ரீதியில் பேர் போன கம்பஹா மாவட்டத்தின் கட்சி அமைப்பாளரும் கூட. அக்கட்சியின்  சார்பில் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பின்னர் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அப்பதவியை துறந்தவர். அவர் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாடகர். பாடலாசிரியர். ஒரு நடிகரும் கூட.. சமீபத்தில் அவர் சிங்கள வரலாற்று இனப்பெருமிதத்தை பறைசாற்றும் “அபா” எனும் திரைப்படத்தில் முக்கியபாத்திரமேற்று நடித்திருந்தார். அது தவிர சிங்கள பௌத்த பிரச்சார மேடைகளில் சிங்கள எழுச்சிப் பாடல்களை உணர்ச்சிபூர்வமாக பாட அழைக்கப்படுபவர். கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி அலுத்கமவில் நிகழ்த்தப்பட்ட இனவெறியாட்டத்தை தூண்டிய பிரசித்தி பெற்ற “விழித்தெழு” எனும் பொதுபல சேனா கூட்டத்தில் இன எழுச்சியூட்டும் இவரது பாடலை முடித்த பின் இனவெறியூட்டும் உரையையும் நிகழ்த்தியிருந்தார். பொதுபல சேனாவுக்கு நெருக்கமாகவே இயங்கி வருகிறார். கடந்த செப்டம்பர் 28 அன்று அஸின் விறாத்துவை அழைத்து பொது பல சேனா  நடத்திய பிரசித்திபெற்ற மாநாட்டில் இன எழுச்சிப் பாடலையும் பாடியிருந்தார்.

90களில் இனவாத கருத்தாக்கங்களுக்கு மதத் தலைமை கொடுத்த கங்கொடவில சோம ஹிமி காலத்திலும் அவரோடு பணியாற்றிய புகைப்படங்கள் மதுமாதவ அரவிந்தவின் இணையத்தளத்தில் உள்ளது. இப்போது ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து விலகியது தொடர்பாக அவர் அளித்துள்ள கருத்துக்கள் முக்கியமானது.

“ஜாதிக ஹெல உறுமயவின் பாதையிலிருந்து விலகிய ஒன்றாக அத்துரலியே ரதன தேரர் உருவாக்கிய “பிவிதுரு ஹெட்டக் உதெசா ஜாதிக சபாவ” (நாளைய தூய்மைக்கான தேசிய பேரவை) இயங்குகிறது. தற்போது எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானமும் கட்சியின் இலக்குக்கு முரணானது. சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில ஆகியோரையும் கூட அதுரலியே ரதன தேரர் பிழையாக வழிநடத்திவிட்டார். அவர் என்.ஜீ.ஓ க்களுக்கு விலைபோய் விட்டார். எனவே தான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் எனது எதிர்கால அரசியல் பணிகளை மேற்கொள்ளவிருக்கின்றேன். ஜனாதிபதியின் மீது எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது.”

கடந்த மாதம் 18 ஆம் திகதி “மவ்பிம” பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் இப்படி கூறுகிறார்.

“பிவிதுரு ஹெட்டக்” தமிழ் தேசிய கூட்டமைப்போடும், முஸ்லிம் காங்கிரசுடனும், அசாத் சாலி, மனோ கணேசன்  பேச்சுவார்த்தை நடத்துவார்களாம், இந்த மரக்கல காரன்களின் அட்டகாசத்தைப் பற்றி கூட ஒன்றும் கூறாத இவர்கள் எப்படி உருப்படப்போகிறார்கள்” 
முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வலையை ஊக்குவிப்பதற்காக தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் “ஹலால் எதிர்ப்பு” வேலைத்திட்டத்தை முன்னின்று நடத்துபவர்களில் ஒருவர் மதுமாதவ. அது குறித்து மதுமாதவ வெளியிட்டுள்ள போஸ்டர்கள் இனவாத விஷம் கொண்டவை.

சோபித்த தேரர்
மகிந்தவுக்கு எதிராக பிரதான எதிரணியை உருவாக்குவதில் முன்னணி வகித்து வந்த மாதுலுவாவே சோபித்த தேரரை கடந்த 12 அன்று ஜனாதிபதி மகிந்தவும் கோத்தபாயவும் சந்தித்ததன் பின்னர் அவர் சுகவீனமுற்று ஆஸ்பத்திரியில் கிடந்தார். சோபித்த தேரரோடு ஜனாதிபதி சற்று கடுப்புடன் நடந்துகொண்டதாகவும் தான் ஜனாதிபதியாகி 6 மாதங்களில் தங்கள் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றுவேன். ஆகவே முயற்சியை கைவிடுங்கள் என்று ஜனாதிபதி கோரியதாக ஊடகங்கள் செய்தியாக்கியிருந்தன. 5 நாட்களின் பின்னர் அவரின் நாகவிகாரைக்கு திரும்பியிருந்தார். இந்த முக்கிய நிலைமை குறித்து அவர் ஏன் வாயே திறக்கவில்லை என்பது சந்தேககங்கள் வலுப்பதற்கு காரணமாகின.

தமிழர் நலன் என்பது அரசியல் நிகழ்ச்சிநிரலில் இறுதிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை இங்கு கவனத்தில் கொள்ள  வேண்டும். தமிழர்களின் கோரிக்கைகள் வெற்றிக்கு அத்தனை பெரிய முக்கியத்துவம் இல்லை என்பதும், அதைவிட அப்படி அதனை கையில் எடுத்தால் அது சிங்கள பௌத்த வாக்குகளை இழக்க காரணமாகிவிடும் என்பதையும் இந்த இரு பெரும் கட்சி கூட்டுகளும் உணர்ந்துள்ளன என்கிற செய்தியும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அரசியல் உத்தரவாதங்களுக்கான தேவை இல்லை என்பது, பேரம் பேச வேண்டிய தேவை இல்லை என்பது மட்டுமல்ல... தமிழர்களின் அரசியல் உரிமைகளையும் பறிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக காட்டிக்கொண்டால் தான்; சிங்கள பௌத்த வாக்கு வங்கியை வெல்லலாம் என்கிற நிலைக்கு சிங்கள பௌத்த சக்திகள் கொண்டுவந்து நிறுத்தியுள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மை. உண்மையிலேயே இதுவரை மிதக்கும் வாக்கு வங்கியாக இருந்த தமிழர் வாக்கு வங்கியின் இடத்தை சிங்கள பௌத்த சக்திகள் பிரதியீடு செய்துவிட்டனவா என்பது ஆராயப்படவேண்டிய விடயம்.
ஜனாதிபதி தேர்தல் பிரகடனம் இந்த கணிப்புகளை உறுதிசெய்ய உதவிடும்.
நன்றி - தினக்குரல்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates