Headlines News :
முகப்பு » » பெருந்தோட்ட சிறுவர் உரிமை குறித்த அக்கறை மேம்பட வேண்டும் -எஸ். வடிவழகி

பெருந்தோட்ட சிறுவர் உரிமை குறித்த அக்கறை மேம்பட வேண்டும் -எஸ். வடிவழகி


இது சர்வதேச சிறுவர் உரிமைகள் வெள்ளி விழா ஆண்டா கும். அதாவது ஒக்டோபர் முதலாம் திகதி அனைத்துலக சிறுவர் தினம் என்பதால் இந்த காலத்தில் சிறுவர் தொடர்பாக நாட்டின் பல பகுதிகளிலும் சர்வதேச நாடுகளிலும் பேசப்படுவது டன் அது தொடர்பான நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆயினும் நமது நாட்டில் தற்பொழுது தினம் தினம் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் கடத்தல், தற்கொலை மற்றும் கொலை போன்ற சம்பவங்கள் தொடர்பான செய்திகளே ஊடகங்களில் முக்கிய இடத்தினைப்பெற்று வருகின்றன. சிறுவருக்கும் பாதுகாப்பான தாக இதுவரை கருதப்பட்ட வீடு, பாடசாலை, வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற் றில் கூட சிறுவர் பாதுகாப்பு கேள்விக்குறி யாக மாறியுள்ளது.

பெருந்தோட்ட பகுதிகளிலும் இவ்வாறான சம்பவங்களும் சிறுவர் தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வருவதை காண்கிறோம். தெற்காசிய நாடுகளில் நமது நாட்டிலேயே சிறப்பான சிறுவர் பாதுகாப்புச் சட்டங்களும் அமைப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆயி னும் இந்த சட்டங்களும் அமைப்புகளும் செயல்படவில்லையா என்று கேட்கும் அளவுக்கு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

சிறுவர்களின் பாதுகாப்பும் அபிவிருத்தியும் அரசினதும் மற்றும் பெரியவர்கள் அல்லது வளர்ந்தவர்களின் கைகளிலேயே உள்ளதால் அவர்கள் அது தொடர்பாக அக்கறை எடுத்துக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமென்ற காரணத்தினாலேயே சிறுவர் உரிமையை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 1989 ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி சிறுவர் உரிமை சம வாயம் அல்லது சிறுவர் உரிமை சாசன த்தை பிரகடனப்படுத்தியது. இவ்வாறு இந்த சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டு இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. அதாவது சிறுவர் உரிமை சமவாயத்தில் வெள்ளி விழா ஆண்டு இது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறுவர் உரிமை சாசனம் என்ற ஒரு ஆவணம் இரு ப்பதையே பெரும்பாலானோர் அறியாத நிலையே காணப்படுகிறது.

இந்த பின்னணியில் அண்மைக்காலம் வரை சிறுவர்களை மனித மாண்புள்ள தனி மனிதர்களாக கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழல் நிலவாத பெருந்தோட்ட பகுதியில் சிறுவர் உரிமை தொடர்பான அறிவு முற்றிலும் இல்லாத நிலையே காணப்பட்டது. சிறுவர்களுக்கு உரிமை கிடையாது; அவர்களால் எதுவும் செய்ய முடியாது; அவர்களால் எந்தவித தீர்மானங்களையும் எடுக்க முடியாது. அவர்களுக்காக அனை த்தையும் செய்ய வேண்டியவர்கள் வளர்ந்தவர்களே அல்லது பெற்றோர்களே என்ற மனப்பாங்கு பெருந்தோட்ட பகுதியில் நிலவி வந்தது. அத்தோடு பெருந்தோட்ட பகுதியில் நடைமுறையில் இருந்த சிறுவர் நிலையங்களை சிறுவரின் உரிமை களை முற்றாக மறுப்பவையாகவும் பெற்றோ ரின் பொறுப்புகளை அவர்கள் உணர்ந்து கொள்வதற்குத் தடை ஏற்படுத்தும் நிலையங்களாகவுமே இருந்தன. தங்கள் பிள்ளைகளை மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற உணர்வை இந்த சிறுவர் நிலையங்கள் பெற்றோர் மத்தியில் ஏற்படுத்தியிருந்தன. இந்த பின்னணி காரணமாகவே அண்மைக்காலம் வரை பெருந்தோட்ட சிறுவர்கள் ஓரளவு வளர்ந்தவுடன் தோட்டங்களிலோ வெளியிடங்களிலோ வேலைக்கு அமர்த்தப்படும் நிலைமை காணப்பட்டது.

அவர்களின் கல்வி மற்றும் அபிவிருத்தி என்பவற்றில் மிகக் குறைந்த அக்கறையே காட்டப்பட்டது. ஆனாலும் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் சிறுவர் உரிமைகளை மேம்படுத்துவதற்காக சமூக அமைப்புகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் காரணமாக தற்போது நிலைமையில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டாலும் பெருந்தோட்ட சிறுவர்கள் மற்றைய துறைகளிலுள்ள சிறுவர்களோடு ஒப்பிடுகையில் எல்லா வகையிலும் பின் தங்கியவர்களாகவே இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் சிறுவருக்கும் உரிமை உண்டு என்ற கோட்பாடு பெருந்தோட்ட பகுதியில் இன்று வரையில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத நிலையும் மலையகத்தை பொறுத்தவரையில் சிறுவர் உரிமை தொடர்பான அறிவு, சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரி யர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் மத்தியில் காணப்படாமையேயாகும். சிறுவர்களே ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை உருவாக்குபவர்கள். எனவே, அவர்களுடைய உரிமைகள் பற்றிய அறிவு ஒரு சமூகத்தில் இல்லையேல் அந்த சமூகம் எவ்வாறு ஒரு அபிவிருத்தி அடைந்த சமூகமாக வளர முடியும்?

இதுவரை தேசிய சுகாதார சேவை பெருந்தோட்ட பகுதியை வந்தடையவில்லை. இதன் காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கானதும் பாலூட்டும் தாய்மார்களுக்குமானதுமான கிளினிக் சேவைகளை பெறுவதில் தாய்மார் பாரதூரமான பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள். பிள்ளைகளுக்கு தடுப்பூசிபோடுதல் திரிபோசா போன்ற போசாக்கு உணவு வழங்கப்படுதல் என்பன நாட்டின் மற்றைய பகுதிகளை போல பெருந்தோட்ட பகுதி யில் சுமுகமான முறையிலும் சரியான முறையிலும் நடைபெறவில்லை. இதுவரை முன்பள்ளிக் கல்வி பெருந்தோட்ட பிள்ளைகளில் உரிமை என்பது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அந்த உரிமையில் தோட்ட நிர்வாகங் கள் தலையிடுகின்றன. ஆனால் இந்த குறைபாடுகளை எவரும் சிறுவர் உரிமை மீறல்களாக கருதுவதுமில்லை. பேசுவதுமில்லை தோட்டங்களில் சிறுவருக்கென விளையாட்டு மைதானங்கள், சிறுவர் பூங்காக்கள் என்பன எத்தனை இடங்களில் உள்ளன? இது சிறுவர்களின் விளையா ட்டு மற்றும் பொழுது போக்குக்கான உரிமையை மீறும் செயல் என எவரும் இதுவரை பேசியது கிடையாது.

பெருந்தோட்ட பகுதிகளில் தேயிலை பயிர்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் போது போதிய பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படாததால் பாடசாலை சிறுவர்கள் பாதிக்கப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தோட்டங்க ளில் இருந்து பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள் சரியான போக்குவரத்து வசதி யின்றி அல்லல்படும் சம்பவங்கள் தற்போதும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பாதுகாப்பு வழங்க வேண்டிய பாடசாலைகளிலேயே சிறுவர் துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன. பாடசாலைகளு க்கென ஒதுக்கப்பட்ட காணிகள் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில் இவை அனைத்துமே அடிப்படையில் சிறுவர் உரிமை மீறல் சம்பவங்களே. ஆனால் இவ்வாறான எந்த சம்பவத்தின் போதும் இவை சிறுவர் உரிமை மீறல்கள் என்ற அடிப்படையில் எவரும் பேசுவதில்லை.

சிறுவர் மேம்பாட்டுக்காக அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. வசதியற்ற அல்லது பெற்றோர் இல்லாத பிள்ளைகளுக்கு தாபரிப்பு பெற்றோர் திட் டம் உட்பட இன்னும் பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அங்கவீனமான அல்லது ஊனமுற்ற பிள்ளைகளுக்கு உதவி செய்து அவர்களை சமூகத்தில் சொந்தக்காலில் நிற்க வைப்பதற்காக பல திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்துகிறது. இந்த திட்டங்கள் எத்தனை பெருந்தோட்ட பிள்ளைகளுக்கு கிடைக்கிறது என்ற கேள்வியை எழுப்பினால் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களுக்கு கூட கிடைப்பதில்லை என்ற பதிலையே பெற முடியும். மிகத் தெளிவாக பெருந்தோட்ட சிறுவர்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது.

சிறுவர் உரிமை சமவாயத்தின் இரண் டாம் உறுப்புரை எந்தக் காரணம் கொண் டும் சிறுவர்களுக்கு பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பதை வலியுறுத்திக் கூறுகிறது.

பாகுபாடு காட்டாமை
எல்லாப் பிள்ளைகளும் அவர்களின் வயது, பால், இனம், ஊனம், நிறம், சாதி, மொழி அல்லது மதம் எவ்வாறாக இருப்பினும் இந்த உரிமைகள் உள்ளன. அரசாங்கம் பிள்ளைகளை எல்லா வகையான பாகுபாடுகளிலிருந்தும் பாதுகாப்பதுடன் அவர்களின் உரிமைகளைப் பரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
எனவே, எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து சிறுவர் மேம்பாடு தொடர்பாக அரசு சேவைகளையும் அனுபவிக்கும் உரிமை பெருந்தோட்ட சிறுவர்களுக்கு உண்டு.

இந்த சேவைகள் பெருந்தோட்ட சிறுவருக்கும் கிடைக்கவில்லை என்பதற்காக நாம் அரசை மட்டும் குறை கூற முடியாது. இந்த உரிமைகளை நாம் கேட்டுப் பெற வேண்டும். அவ்வாறு கேட்டுப் பெறுவதற்கு நமக்கு சிறுவர் உரிமை தொடர்பான விழிப்புணர்வு இருக்க வேண்டும். நமது அரசியல் தலைவர்களுக்கு சிறுவர் உரிமை தொடர்பான அறிவு வேண்டும். சிறுவர் தொடர்பான பிரச்சினைகளை சிறுவர் உரிமைகள் என்ற அடிப்படையில் அணுகும் சமூக அறிவு வேண்டும். இது இல்லாத வரையில் பெருந்தோட்ட சிறுவர்கள் மற்றைய சமூகங்களில் உள்ள சிறுவர்களை போன்று உரிமைகளை அனுபவிக்கும் நிலையை உருவாக்க முடியாது.

சிறுவர் உரிமை சமவாயத்தின் 42 உறுப்புரை பின்வருமாறு கூறுகிறது.
சிறுவர் உரிமைகளைப் பெரியவர்களும் பிள்ளைகளும் பரவலாக அறிந்து கொள் ளச் செய்தல் அரசுகளின் கடப்பாடாகும்.

ஆனால், அரசினால் மட்டும் அனைவருக் கும் சிறுவர் உரிமை பற்றிய அறிவை பரப்பும் பொறுப்பை நிறைவேற்ற முடி யாது. எனவே, அந்த பொறுப்பினை சமூக அமைப்புகள் பாடசாலை உட்பட பொறு ப்பு வாய்ந்தவர்கள் ஏற்க வேண்டும். அதே வேளையில் சிறுவர் உரிமைகள் பற்றி நமது அரசியல் மற்றும் சமூகத் தலைவர்க ளுக்கு தெரியாதமையால் நமது சிறுவர் தமது உரிமைகளை அனுபவிக்க முடியாத நிலையில் உள்ளனர் என நாம் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்க முடியாது.

சிறுவர் சமவாயம் பிரகடனப் படுத்தப் பட்டு 25 ஆண்டுகள் கடந்து வெள்ளிவிழா கொண்டாடப்படும் இந்த காலத்திலாவது பெருந்தோட்ட சிறுவர்கள் மற்றைய சிறு வர்களை போன்று தமது உரிமைகளை அனுபவித்து எதிர்காலத்தில் உரிமையுள்ள சமூகமாக உருவாகுவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவது அனைவரின் பொறுப்பாகும். நமது சமூக மற்றும் அர சியல் தலைவர்கள் இது குறித்து தீவிர மாக சிந்திப்பது அவசியம். நமது சிறுவர் உரிமையை மேம்படுத்த நாம் என்ன செய்ய முடியும் என்பதை மலையக சமூக மும் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates