Headlines News :
முகப்பு » » கூட்டணி வைத்துக்கொள்வது பற்றி மலையக கட்சிகளுக்கு ஆலோசனை தேவையில்லை! - அருண் அருணாசலம்

கூட்டணி வைத்துக்கொள்வது பற்றி மலையக கட்சிகளுக்கு ஆலோசனை தேவையில்லை! - அருண் அருணாசலம்


பெரும் சர்ச்சைகள், பிரச்சினைகள், வன்முறைகள் என்பவற்றுக்கு மத்தியில் ஊவா மாகாண சபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பல்வேறு அரசியல் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அது மட்டு மன்றி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆளும் கட்சியையும் எதிர் க்கட்சிகளையும் சிந்திக்க வைத்துள்ளது.

பிரதானமாக ஊவா தேர்தலை அடிப்படையாக வைத்தே ஆளும் கட்சி பல முக்கிய முடிவுகளை மேற்கொள்ளவுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவ தா? அல்லது பின் போடுவதா என்ற தீர்மானத்துக்கு வரவுள்ளது.

அதேவேளை, ஐ.தே.க தமது கட்சிக்கான மக்கள் செல்வாக்கு எவ்வாறான நிலையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டுள்ளது. எனவே, தற்போது ஐ.தே.க தலைவர் கள் தமது கட்சி எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்தத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அனைத்து சக்தியை யும் பயன்படுத்தி ஐ.ம.சு. கூட்டமைப்பு போட்டியிட்டது. அதனடிப்படையில் அந் தக் கட்சிக்கு ஊவா மாகாணத்தில் 51.21 வீத வாக்குகள் கிடைத்ததுடன் 2 போனஸ் ஆசனங்கள் அடங்களாக 19 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

ஐ.தே.க வும் கூட தமது முழுமையான பலத்தையும் பிரயோகித்து 40.24 வீத வாக்குகளைப் பெற்றது. அந்தக் கட்சிக்கு 13 ஆசனங்கள் கிடைத்தன.

ஐ.ம.சு. கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.க ஆகிய இரண்டு கட்சிகளுமே பெரும்பான்மையின மக்களை அதிகளவில் கொண்ட கட்சிகளாகும். இந்த இரண்டு கட்சிகளுக்குமே பெரும்பான்மை இன மக்கள் ஏறக்குறைய சம வீதத்திலான வாக்குகளை அளித்திருப்பதாகவே தெரியவருகிறது. எனவே, இங்கு வெற்றியைத் தீர்மானிப்பவர்களாக சிறுபான்மையினரான தமிழர்களே இருந்துள்ளனர் என்பதை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.ம.சு. கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த வின் பேச்சு அமைந்திருக்கின்றது. ஊவா மாகாண தேர்தல் வெற்றி குறித்து ஸ்ரீல ங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற ஊடகவிய லாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்து அவர், மலையக பெருந்தோட்ட மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் அமோகமாக வெற்றி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார். மலையக தமிழ் மக்களின் வாக்குகளால் தான் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது என்பதை உறுதிப்படுத்திய அமைச்சர், எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள் ளார்.

இதன் மூலம் அரசுக்கு மலையக மக்கள் பெரும் ஆதரவை வழங்கியுள்ளமை உறுதி ப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங் கம், மலையக மக்கள் முன்னணி போன்ற பிரதான மலையகக் கட்சிகள் ஐ.ம.சு. கூட்டமைப்புக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தமையும் இதற்கு முக்கிய காரணமாகும்.

இதேவேளை, ஐ.தே.க.வுக்கு இந்தளவு வாக்குகள் கிடைப்பதற்கும் கூட தமிழ் மக் கள் தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றால் அது மிகையாகாது. அந்தக் கட்சி யின் வேட்பாளரான வேலாயுதம் ருத்திர தீபனுக்கு 30,457 வாக்குகள் கிடைத்துள்ளன. அத்துடன் ஏனைய வேட்பாளர்களான எம். சச்திதானந்தன் எம்.பி., லோகாநாதன் மற் றும் பொ. பூமிநாதன் ஆகியோரும் கணிச மான வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற் கும் தமிழ் மக்கள் காரணமாக இருந்துள்ள னர் என்பதை எவராலும் மறுதலிக்க முடியாது.

பொதுவாக மலையக கட்சிகள், மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப் பதற்காகவும் தமது சமூகத்துக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவும் தேசிய கட்சிகளுக்கு ஆதரவை வழங்கி வருகின்றன.

குறிப்பாக சொல்லப்போனால் மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வ தற்காக ஒவ்வொரு தேர்தலின் போதும் பிரதான தேசியக் கட்சிகள்தான் போட்டி போடுகின்றன, பேரம் பேசுகின்றன; சலுகைகளை வழங்குவதாக தெரிவிக்கின்றன. அந்த அடிப்படையில் மலையக கட்சிகளை தமது அணியில் இணைத்துக்கொள்ள முய ற்சிக்கின்றன. இதற்கு ஊவா தேர்தல் கூட ஒரு உதாரணமாகும்.

ஆனால், அண்மையில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத்தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்திருக்கும் கருத்து இதற்கு மாறாக உள்ளது. எதிர்வரும் காலங்களில் இ.தொ.கா. போன்ற கட்சிகள் ஐ.தே.க. வுடன் இணைந்து போட்டியிட விரும்பினால் முன்னைய காலங்களைப்போன்று இணைத்துக்கொள்ளப்படாமல் நிபந்தனைகள் விதிக்கப்பட்டே இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த 13ஆம் திகதி சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.

உண்மையில் அரசியலில் உள்ள நெளிவு, சுழிவுகளை அறிந்துதான் இதனை சொன்னாரா என்பதை புரிந்துகொள்ள முடியாதுள்ளது.

வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மலையக கட்சிகளுக்கும் ஐ.தே.க வுக்கும் இருந்த உறவுகள், தேர்தல் கூட்டுக்கள் என்பவற்றைப்பற்றி அறிந்துகொள்ள முடியும். மாகாண சபை உறுப்பினர் ஹரின் பெர்னா ண்டோவின் பேச்சுக்கு இ.தொ.கா. தலைவரும் பொருளாதார பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
''மலையக மக்களின் மேம்பாட்டுக்காக எந்த நேரத்தில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பது இ.தொ.கா. வுக்கு தெரி யும். இதுபற்றி எவரும் எமக்கு அறிவுறு த்த வேண்டியதில்லை. 1977 தொடக்கம் 1994வரை ஐ.தே.க. ஆட்சி நிலைத்திருக்க இ.தொ.கா. வே பக்க பலமாக விளங்கியது என்பதனை மறந்துவிடக் கூடாது. வாய்க்கு வந்தபடியெல்லாம் கருத்துக்களை தெரிவிப்பது புத்திசாலித்தனமாகாது. எமது மக்களின் நலன் கருதி எமது கொள்கைகளிலும் செயற்பாடுகளிலும் மாற்றம் கொண்டுவர வேண்டிய தேவை உள்ளதா? இல்லையா? இ.தொ.கா.வே முடிவு செய்யும்'' என்று பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ''மலையக மக்கள் நலன்கருதி யாருடன் கூட்டு சேர வேண்டும் யாருடன் சேரக்கூடாது என்பது எமக்கு தெரியும். ஓடிச்சென்று ஒட்டிக்கொள்ள வேண்டிய தேவை எமக்கில்லை'' என்றும் பதிலடி கொடுத்திருக்கின்றார். இது வரவேற்கத்தக்க பதிலாகும்.

எந்தவொரு பெரும்பான்மைக் கட்சியும் மலையக மக்களின் பின்னணியையும் அவர்கள் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்காக செய்திருக்கும் தியாகங்களையும் எண்ணிப்பார்த்து பேச வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காகத் தம்மை தியாகம் செய்து உயிரைக் கொடுத்தவர்களுக்காக எந்தவொரு அரசும் உரிமைகளையும் சலுகைகளையும் தாமாக வழங்க முன்வரவில்லை. போரா டியே பெறக்கூடியதாக இருந்து வருகின் றது. தற்போது தமது சமூகத்துக் குரிய உரி மைகளையும் தேவைகளையும் பெற்றுக் கொள்வதற்காக அரசியல் ரீதியாக வாக்கு பலத்தை வைத்து மலையக கட்சிகள் செய ல்படுகின்றன.
அந்த வகையில் மலையக மக்களின் உரி மைகள், தேவைகள் என்பவற்றை வழங்கு வதற்கு உறுதியளிக்கும் அரசுக்கு ஆதரவ ளிக்கும் தீர்மானத்தை எடுக்கும் உரிமை மலையகக் கட்சிகளுக்கு உண்டு என்பதை இந்த தேசிய கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி - வீரகேசரி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates