Headlines News :
முகப்பு » , , » 19வது திருத்தச்சட்டமும் ஜாதிக ஹெல உறுமயவும் - என்.சரவணன்

19வது திருத்தச்சட்டமும் ஜாதிக ஹெல உறுமயவும் - என்.சரவணன்


சமீப காலத்தில் அரசாங்கத்துக்கு உள்ளிருந்தே அரசாங்கத்துக்கு எதிராக விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை ஜாதிக ஹெல உறுமயவினது.

சமகால அரசியல் களத்தில் மிகவும் பாரதூரமானது இந்த எச்சரிக்கை. அரசாங்கத்துக்கு மாத்திரமல்ல அதைவிட ஏனைய தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு  மோசமான பாதிப்பை கொணரும் அறிவித்தலே அது.

ஜாதிக ஹெல உறுமய (JHU) கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள 19 ஆவது திருத்தச் சட்ட பிரகடன நிகழ்வு கடந்த 14 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற போது தமது கொள்கைப் பிரகடனத்தினை வெளியிட்ட பின்னர் உரையாற்றுகையிலேயே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அதுரலியே ரத்தன தேரர் அவ்வாறு அறிவித்தார்.

19வது திருத்த உள்ளடக்கம்

17 ஆவது திருத்தத்தினை முற்றாக ஒழித்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட 18 ஆவது திருத்தத்தினை தெரிந்தோ, தெரியாமலோ ஆதரித்து விட்டோம். இப்போது அதனை நிவர்த்தி செய்ய இந்த 19ஆவது திருத்தச் சட்டத்தினை அரசியல் யாப்பில் உள்ளடக்குவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் என்கிறார் அவர். மேலும் இந்த பிரேரணையில்

அமைச்சு பொறுப்புக்களை வலுப்படுத்தி அதேபோல் அமைச்சு மற்றும் பிரதி அமைச்சு எண்ணிக்கைகளை 20-25க்குள் மட்டுப்படுத்தல், சுயாதீன சேவைகளை உறுதிப்படுத்தி ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் ஒரே காலத்தில் நடத்துதல், ஜனாதிபதிக்கு இப்போதியிருக்கும் மிகவும் பலமானதும் சர்வதிகார முடிவெடுக்கக் கூடியதுமான அதிகாரங்களை கட்டுப்படுத்தில், அரச தலைவர் ஜனாதிபதி, அரசாங்கத்தின் தலைவர் பிரதமர், அரசியலமைப்புக்குள் சுயாதீன ஆணைக்குழுக்கள் சட்டமாக்கப்படல் என தொடர்கிறது.

இதையெல்லாம் மேலோட்டமாக பார்த்தால் ஏதோ நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான அரசியலமைப்பு முயற்சி என்று தோன்றும். ஆனால் இதனை JHU வின் தோற்றப் பின்னணி, அது கடந்துவந்த பாதை, தற்போதைய அதன் பாத்திரம், கடந்த இரு தசாப்தத்திற்குள் அது ஏற்படுத்தியிருக்கும் சித்தாந்த தாக்கம் என்பவற்றோடு இணைத்து பார்த்தால் இதன் அரசியல் உள்நோக்கம் புரிந்துவிடும். அந்த திருத்தத்தின் உள்ளடக்கம் மேற்குறிப்பிட்டவை மட்டுமல்ல. சிறுபான்மை இனங்களிடம் உள்ள குறைந்தபட்ச அதிகாரங்களையும் தட்டிப்பறித்தலே அவை.

விருப்புத் தெரிவை இல்லாதொழிப்பது, 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் மாகாணசபை பட்டியலிடப்பட்ட அதிகாரங்கள் குறித்த விடயங்களில் ஏதேனும் திருத்தங்கள் கொண்டு வருவதாக இருந்தால் சகல மாகாணங்களின் உடன்பாட்டையும் பெறல் வேண்டும். மாகாண சபைகளின் பொலிஸ் காணி அதிகாரங்கள் இல்லாதொழித்தல் என்பனவும் உள்ளடங்கும்.

குடியரசுக்கு எதிராக செயல்படும் தருணங்களில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தியாவில் இருப்பதைப்போன்று 256, 257 ஆகிய அரசிலமைப்பு விதிகள் மூலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் இலங்கை அரசும் கொண்டிருக்க வேண்டும் என்று JHU அறிவித்திருக்கிறது. 

இந்திய அரசியலமைப்பின் படி ஒரு மாநில அரசு அரசியல் சட்ட விதிப்படி நடக்கவில்லை என்பது தெரிய வந்தால் முதலில் 256 மற்றும் 257 ஆகிய பிரிவுகளின் கீழ் எச்சரிக்கப்பட வேண்டும். அதன் பிறகும் தொடர்ந்து பழைய நிலை நீடித்தால் கடைசி ஆயுதமாக 356-வது பிரிவு மூலம் மாநில அரசின் செயற்பாடுகளை முடக்கமுடியும்.

எங்கிருந்து தொடங்கியது

JHUவின் கூட்டத்திற்கு எதிக்கட்சி தலைவர், பசில் ராஜபக்ஷ மற்றும் பல கட்சிகளின் தலைவர்கள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த திருத்தத்திற்கு ஆதரவாக JHU வுடன் ஐ.தே.க, ஜேவிபி மற்றும் பல அமைப்புகள் தம்முடன் இருப்பதாக அக்கட்சிகள் அங்கு பிரசன்னமாகியிருந்த போது அறிவித்தது. சோபித்த தேரர், முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா ஆகியோரும் பேச்சாளர்களாக கலந்துகொண்டனர்.

இந்த பிரேரணையை கடந்த வருடம்  மே 29 அன்று பாராளுமன்ற செயலாளரிடம் JHU கையளித்திருந்தது. வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அதனை நிறைவேற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனை நிறைவேற்றும் வரை அத்தேர்தலை ஒத்திவைக்கும்படியும் தொடர்ச்சியாக கோசம் எழுப்பியது. அனைத்தும் தோல்வியுற்றன. 19வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக ஏனையோரையும் இணைத்துக்கொள்வதற்காக “நாளைய தூய்மைக்கான தேசிய பேரவை” (National Council for a Clean Tomorrow) எனும் அமைப்பை உருவாக்கி இருந்தது. அதன் முதல் அங்குரார்ப்பன கூட்டத்திற்கு பொது பல சேனாவினரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். பொது பல சேனா (BBS)வின் தலைவர் விமலஜோதி தேரரும், தேசிய அமைப்பாளரான டிலந்த பெரேராவும் அதில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் இவை இரண்டுக்குமிடையில் உள்ளூர புகைந்துவரும் சண்டை காரணமாக BBS கடந்த மாதம் நடத்திய மாநாட்டுக்கு JHU அழைக்கப்படவில்லை. அதற்கு பதிலடியாக இந்த தடவை JHU நடத்திய மாநாட்டுக்கு BBS அழைக்கப்படவுமில்லை.

மாறாக BBSயின் விரோதிகளாக ஆக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன, சோபித்த தேரர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண, கொம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் டியூ குணசேகர உள்ளிட்டோர் முக்கியஸ்தர்களாக கலந்துகொண்டிருந்தனர்.

ஆரம்பத்தில் 13வது திருத்தச்சட்டத்தை திருத்துவதிலேயே அதிக அக்கறை காட்டிய JHU பின்னர் படிப்படியாக சகலரும் கோரும் ஜனநாயக கோரிக்கைகளையும் உள்ளடக்கி பல எதிர்கட்சிகளும் தமது பிரேரணையை ஏற்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த எதிர்கட்சிகள் எவையும் இதில் உள்ள தமிழ் மக்கள் விரோத அம்சங்கள் குறித்து தமது அபிப்பிராயங்களை தெரிவித்ததாக தெரியவில்லை.

"வெல்லுகின்ற குதிரையில்தான் பந்தயம் கட்ட வேண்டும்" என்கிற அரசியல் சித்தாந்தத்தின் படி மலையக கட்சிகள் சிலவும், முஸ்லிம் கட்சிகள் சிலவும் அரசை ஆதரித்து இருப்பது தமது மக்களுக்கான சவக்குழியை தாமே தோண்டி வைக்கும் ஏற்பாடாகவே நோக்க முடிகிறது. எந்த ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என ஆரம்பத்தில் இவர்கள் பிரச்சாரம் செய்தார்களோ அதனை மேலும் பல மடங்கு பலப்படுத்தும் வகையில் 18வது திருத்தச்சட்டத்தை ஆதரித்ததை வரலாறு மறக்காது.

எச்சரிக்கை

பங்காளிக் கட்சியான JHU தற்போது பகிரங்கமாக அரசை கடும் தொனியில் விமர்சித்து வருகிறது. மகிந்த இப்போதே 11 லட்சம் வாக்குகளை இழந்துவிட்டார் என்று சம்பிக்க ரணவக்க மாத்தறையில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

இப்போதைய தேவை ஜனாதிபதித் தேர்தல் அல்ல. எனவே, எமது கோரிக்கையினை மீறி ஜனாதிபதி தேர்தலை, மஹிந்த ராஜபக் ஷ நடத்துவாராயின் அரசை கவிழ்க்கும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என அத்துரலிய ரத்ன தேரர் சூளுரைத்தார்.

எமது கொள்கைப் பிரகடனத்தினை ஆதரித்து சகல எதிர்க்கட்சிகளும் துணை நிற்கின்றன. இதனை மீறி ஜனாதிபதி செயற்பட்டால் விளைவுகள் மிக மோசமானதாக அமையும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அது போல JHU வின் உபசெயலாளரும் அக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில ஒக்டோபர் 5ஆம் திகதி பேருவளையில் நடந்த JHU களுத்துறை மாவட்ட கட்சி மாநாட்டில் ஆற்றிய உரையில். 

 “சிங்களவர் இரண்டாக பிளவுபடுகின்ற இடைவெளிக்குள் சிறுபான்மையினர் தமது வாக்குகளை ஏலத்துக்கு விட்டு நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்க முற்படுகின்றனர். தேயிலை செய்ய வந்தவர்கள் கூட இன்று மன்னரை உருவாக்குபவர்களாக ஆகியிருக்கின்றனர். வியாபாரம் செய்ய வந்தவர்களும் மன்னரை உருவாக்க முனைகின்றனர். அது மட்டுமல்ல தனிநாடு உருவாக்க முற்பட்டவர்களும் ராஜாவை தீர்மானிக்கின்றனர். அமைதியான பெரும்பான்மையினரோ இவற்றை பார்த்துக் கொண்டு பச்சை, நீல, சிகப்பு கட்சிகளாக பிளவுற்று பார்த்துகொண்டிருக்கின்றனர்.” என்று அரசியல் அதிகாரத்தில் சிறுபான்மையினரின் பங்கு குறித்து சிங்களவர்களுக்கு எச்சரிக்கிறார்.

அன்று மாகாண சபை முறையை தீவிரமாக எதிர்ப்பதில் பேர் பெற்ற சோபித தேரர், வடக்கு கிழக்கை பிரிக்கும் தீர்ப்பை வழங்கிய முன்னாள் நீதியரசர் சரத் டி சில்வா, போரை நடத்தி முடிப்பதற்கு சிங்கள பௌத்த சித்தாந்த பலத்தை வழங்கி வந்த தமிழ், முஸ்லிம் விரோத ஜாதிக ஹெல உறுமய, தமிழர் உரிமை மறுப்பை மாக்ஸியத்தின் பேரால் அரங்கேற்றி வந்த ஜேவிபி. அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று தமிழர் விரோத அரசியலை விட்ட இடத்திலிருந்து தொடங்க காத்திருக்கும் ஐ.தே.க. என எல்லோரும் இந்த விடயத்தில் ஓரணியில் இணைந்திருப்பது ஆச்சரியமில்லை.

போரை வெல்வதற்கான புலி எதிர்ப்பு, தமிழர் உரிமை மறுப்பு பிரச்சாரத்தை சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக 20 வருடங்களுக்கும் மேலாக செய்து சிங்கள பௌத்த உணர்வை / தமிழர் விரோத உணர்வை தக்கவைப்பதில் வெற்றி பெற்றது. யுத்த வெற்றிக்கு மிகப்பெரிய பக்க பலமாக அதுவே இருந்தது. வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு தேவையான சித்தாந்த பின்புலத்தை பலப்படுத்தியது. யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அடிப்படை அத்தியாவசிய உரிமைகளை மறுப்பதற்கு உரிய வழிவகைகளை ஏற்படுத்தியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் JHU வின் பாத்திரம் இன்றிமையாதது.

நிகழ்ந்துவரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் உரிமைகளை படிப்படியாக குறைக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இதனை நோக்க முடிகிறது.

JHU வை புரிந்துகொள்வது

சிறுபான்மை இனங்கள் பற்றிய பீதியை பெரும்பான்மையினத்தவரிடம் ஏற்படுத்தி, அவர்களுக்கெதிரான பகைமையுணர்வையும் உருவாக்கி அதனை எதிர்கொள்வதென்றால் அரசாட்சி, நீதி, நிர்வாக, பொருளாதார, சமூக கட்டமைப்புகளை சிங்கள பௌத்தமயமாக்குவதே அதற்கான அருமருந்து என்கிற புனைவை தொடர்ந்தும் செய்துவருகிறார்கள். சிங்கள பேரினவாத அணிகள் வெவ்வேறு கோணங்களில் இருந்து வெவ்வேறு வியூகங்களின் ஊடாக வெற்றிகரமாக தமது நிகழ்ச்சிநிரலை நகர்த்தி வருகிறார்கள் என்பதை விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

பேரினவாதம் என்பது நிறுவனமயப்பட்ட ஒன்று என்கிற வகையில் ஒரு கட்டத்திற்கு பின் பேரினவாத சக்திகளின் தயவு அந்த சித்தாந்தத்துக்கும் கட்டமைப்புக்கும் தேவையிராது. மக்கள்மயப்படுத்தப்பட்டதன் பின்னர் நிலவும் கட்டமைப்பே அதனை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுவிடும். அதன் பின்னர் எந்த சக்தியின் மீதும் நேரடியாக குற்றம் சாட்டத் தேவையில்லை. அனைத்தும் இயல்பாக நடப்பதைப் போல தோன்றும். “தன்னெழுச்சியாக நிகழ்த்தினர் மக்கள்” என்பார்கள், தர்கா நகரில் சொன்னது போல. இன்று வரை எவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலையை நினைவில் கொள்ளுவோம்.

இலங்கையில் கடந்த கால் நூற்றாண்டுக்குள் இனவாத போக்கை நுட்பமாக ஆராய்ந்தால் அதன் பின்னணியில் தலைமை பாத்திரத்தை ஆற்றியது சம்பிக்க ரணவக்கவும் அவர் சார்ந்த அமைப்புகளுமே என்பது தெட்டத்தெளிவாகத் தெரியும். “ஜாதிக சிந்தனய” – “ஜனதா மித்துரோ” –“வீரவிதான” – “சிங்கள வீர விதான”  “சிங்கள உறுமய” –- “ஜாதிக ஹெல உறுமய” என்று சம்பிகவின் இந்த பயணம் கடந்து வந்திருக்கிறது. இந்த கால் நூற்றாண்டுக்குள் சகல தளங்களிலும் மிகப் பெரிய சித்தாந்த பாத்திரத்தை ஆற்றியிருப்பது தெரியவரும். போரின் வெற்றி முழுமையாக சேர வேண்டியதும் இவர்களுக்கே.

இவர்கள் பதவிக்கு பின்னால் அலைபவர்கள் அல்ல. அதுபோல விலைபோகக்கூடியவர்கள் அல்ல. இன்று ஆட்சியில் இருக்கும் பங்காளிக்கட்சிகளிலேயே ஊழலுக்குள் அகப்படாதவர்கள். மிகவும் உறுதியான கொள்கைப் பிடிப்புள்ளவர்கள். சிங்கள பௌத்த தேச உருவாக்கத்தின் உறுதியான லட்சியவாதிகள்.லட்சியத்துக்காக பதவியையும் பெறுவார்கள் அதே லட்சியத்துக்காக எந்த பதவியையும் துறப்பார்கள்.

சம்பிக்க ரணவக்க மற்றும் அதுரலிய ரதன தேரர் ஆகியோரின் சாணக்கியமும் கவர்ச்சிகரமுமான பேச்சுக்கள் எவரையும் மூளைச்சலவை செய்யக்கூடியவை. வாழைப்பழத்தில் ஊசியேற்றப்படுவதைப்போல சூட்சுமமாக தமது பேச்சைக் கேட்போரை வசியப்படுத்திவிடும் கைதேர்ந்த ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தகவல் நிறைந்ததாக இருக்கும், ஜனநாயக பூர்வமாக கதைப்பதைபோல இருக்கும், தர்க்கம் நிறைந்திருக்கும், ஆனால் தகவல்கள் கவனமாக கோர்க்கப்பட்டு மூளைச்சலவைக்குள் கொணரப்பட்டிருக்கும்.

இன்றைய பொதுபல சேனா உள்ளிட்ட பல அமைப்புகளின் தத்துவார்த்த ஞானத்தந்தையாக சம்பிகவை கூறலாம். அவர்கள் உருவாக்கிய சித்தாந்த கட்டமைப்பிலேயே தற்போது BBS போன்ற அமைப்புகள் இயங்கி வருகின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.

BBS போன்ற அமைப்புகள் கூட வேகமாக உதிர்ந்துவிடக்கூடிய வாய்ப்புகள் உண்டு அவர்கள் அதிகார அரசியல் சக்திகளின் தயவில் இருக்கிறார்கள். ஆனால் JHU அப்படியல்ல. அதுபோல JHU வுக்கு BBS ஒரு சவாலும் இல்லை. ஆனால் BBS போன்ற அமைப்புகள் JHU வுக்கு தேவை. தாம் கட்டளையிடாமலேயே தமது சித்தாந்தங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் களப் போராளிகள் அல்லவா BBS போன்றோர்.

இலங்கையின் வரலாற்றில் காலத்துக்கு காலம் தோன்றி மறைந்துபோன இனவாத அமைப்புகள் வரிசையில் BBS அலையும் கணிசமான காலத்துக்கு நிலைபெற்றிருக்கும் என்று கணிக்கலாம். அதேவேளை அவர்கள் இட்டுச்சென்ற தீ தணலாக கதகதத்துக்கொண்டிருக்கும். அவ்வப்போது அதற்கு எண்ணையூற்றும் நிகழ்ச்சிகள் மட்டும் அவ்வப்போது பல வடிவங்களில் நடந்தேறும்.

இந்த பின்னணியிலிருந்து தான் BBS இன் தற்போதைய 19 திருத்தசட்ட நகர்வைப் பார்க்க வேண்டும். இனிவரப்போகும் எந்த ஆட்சியையும் விட தற்போதுள்ள ஆட்சி JHUக்கு சாதகமானது. எனவே அரசுக்கெதிரான தற்போதைய எச்சரிக்கை ஒரு மிரட்டலாகவே காண முடிகிறது.

புலிகளைத் தோற்கடிப்பது, வடக்கு-கிழக்கை பிரிப்பது, மாகணசபையை படிப்படியாக இல்லாதொழிப்பது போன்ற நிகழ்ச்சிநிரலை அவர்கள் வெற்றி கொண்டது இந்த கூட்டணியால் தான். எனவே அடுத்த கட்டத்திற்கு அதனை நகர்த்துவதற்கும் ஏற்ற தமக்கு சாதகமான தலைமை தற்போதைய மகிந்த அரசு தான்.

ஆளும் கட்சி கூட்டணி தற்போது சிறிது சிறிதாக உதிர்ந்து வரும்நிலையில் உன்னை ஜனாதிபதியாக்குகிறோம் 19வது திருத்தசட்டத்தை அங்கீகரி என்று அரசை அடிபணியவைக்கும் கைங்கரியம் நிகழ்கிறது.

JHUவின் புதிய நகர்வும், வியூகமும், அரசியல் தந்திரோபாயங்களும் எந்தஅளவு வெற்றியளிக்கும் என்பதை இனிவரும் நாட்களில் கவனிக்கலாம்.

நன்றி - தினக்குரல்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates