Headlines News :
முகப்பு » » அதிகஷ்ட பிரதேசம் அறியப்படாத விடயமல்ல - ஜே.ஜி.ஸ்டீபன்

அதிகஷ்ட பிரதேசம் அறியப்படாத விடயமல்ல - ஜே.ஜி.ஸ்டீபன்



சமகாலநோக்கு என்ற அடிப்படையில் மலையகத்தின் கல்வித்துறை குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போமாக இருந்தால் அதன் வளர்ச்சி வேகம் அல்லாவிட்டால் அடைவு மட்டம் குறித்து இரண்டும்கெட்டான் நிலையில் நிலைபெற வேண்டிய தன்மை காணப்படுகிறது.

இன்று உலக அரங்கில் போராட்டங்கள், கோரிக்கைகள் என்பன பல்வேறு வடிவங்களில் உருப்பெற்று வருகின்ற சமயத்தில் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது பிள்ளைச் செல்வங்களும் எதனை அடைவதற்காக என்றில்லாது எல்லாவற்றுக்காகவுமே ஏக்கம்கொண்ட சமூகமாக வாழ்ந்து கொண்டிருப்பதும் யாவருக்கும் வெ ளிச்சம் இலங்கையின் எழுத்தறிவு வீதம் 97 என்று கூறப்படுகிறது. அது மட்டுமா? ஆசியாவிலேயே இலங்கை எழுத்தறிவில் முதலிடம் வகிக்கின்றது. இந்த கணிப்பு எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்று எழும் கேள்வி நியாயமானதுதான்.

மலையகம் படைத்திடுவோம் என்றும் புதிய மலையகம் செய்வோம் வாரீர் என்றும் இன்னும் சொல்லப்போனால் மலையகம் எழட்டும் என்றெல்லாம் முகப் புத்தகத்தில் மெய்சிலிர்க்கும் வரிகளின் நாமங்களோடு பக்கங்களை வடிவமைத்து அந்த பக்கங்கள் நிருவகிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்ற முறைமையூடாக ஏதோ ஒன்றை சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அங்கு குடி கொண்டிருக்கின்றது என்பது திண்ணமாகின்றது.

1823ஆம் ஆண்டு காலப்பகுதியில் தொழிலாளர்கள் என்ற போர்வையில் குழந்தை குட்டிகளோடும் குமரிப் பெண் மக்களோடும் கூட்டம் கூட்டமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர் ஒருபகுதி மக்கள் தொகையினர்.
வெள்ளைத் தோல் கொண்டோனின் வியாபார வேட்கையைத் தணிப்பதற்காய் அந்நிய தேசமான இந்திய மண்ணிலிருந்து கொண்டு வரப்பட்ட மக்கள் கூட்டம் மந்தைகளாக நடத்தப்பட்டனரே தவிர அவர்களும் மனிதர்கள்தான் என்பதை உணரவில்லை என்பதை வரலாறுகள் கூறி நிற்கின்றன.

அப்போது அழைத்து வரப்பட்ட அந்த சமூகம் கூலிகளாக நோக்கப்பட்டதால் அவர்களது பிள்ளைகள் பெற்றோருடன் இருப்பது தொழிலுக்கு இடையூறு என்ற காரணத்தைக் கூறி சிறுகுழந்தைகளை ஓரிடத்தில் கூட்டமாக வைத்திருக்கும் முறைமை உருவாக்கப்பட்டது.

அதுமாத்திரமின்றி சிறுகுழந்தைகள் வெளியேற முடியாதவாறு அகன்ற குழிகளை வெட்டி அந்த குழிகளுக்குள் குழந்தைகளை வைத்துவிட்டு பெற்றோர் தொழில்புரிய வேண்டும் என்பதும் அன்றிருந்த வரலாறாக கூறப்படுகிறது.

சிந்தித்து கருமமாற்றத் திராணியற்றவர்களாக ஆக்கப்பட்ட அன்றைய சமூகம் அவ்வாறே இருந்துவிட வேண்டும் என்பதுதான் அன்றிருந்த விதி எனக் கூறலாம்.
ஆனாலும் இன்று 200 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் அதே நிலைமை நீடிக்க வேண்டும் என்று சிந்திப்பதுதான் பெருந்தவறாகும்.

தலைமுறை தலைமுறையாக கல்வி அறிவை பெறக்கூடாதவர்கள் என்ற பாங்கிலேயே நோக்கப்பட்ட மலையக சமூகம் இன்று இந்திய வம்சாவளி மக்கள் என்று அழகு தமிழில் கூறி பெருமிதம் கொள்கின்றனர். மிக அண்மித்த கால கட்டத்திலிருந்தே இதற்கு அந்தஸ்தும் கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்று மலையக சமூகம் இன்று அழைக்கப்படுவதற்கும் அவர்கள் ஏனையோரோடு இணைந்து கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கும் ஏனைய சமூகங்களோடு சமமாய் சமூகமாய் வாழ்வதற்கும் பொருந்தாத சூழலும் காணப்படுவதை எவரும் மறுக்க முடியாது. இதுபற்றி எடுத்துக்கூறும் தன்மைகளும் கிட்டிவராத நிலை காணப்படுகிறது.

எமது நாடு இன்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற பட்டியலுக்குள்தான் இருக்கின்றது. இலங்கை தேசம் தன்னிறைவு கண்ட தேசமாக மாற்றம் பெறுவதற்கு இன்னும் பல தசாப்தங்கள் கடக்க வேண்டியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இப்படிக் கூறுவதற்கு காரணம் இல்லாமலில்லை.

நாட்டில் அபிவிருத்திகள் குறித்து என்னதான் படம்பிடித்துக் காட்டப்பட்டாலும் ஊடகங்களில் விளம்பரப்படுத்தினாலும் மலையகத்தில் பின்தங்கிய கஷ்ட, அதிகஷ்டப் பிரதேசங்கள் குறித்து சிந்திக்கப்படுவதில்லை. அல்லது மறைக்கப்படுகின்றன என்பதே நிதர்சனம்

1866ஆம் ஆண்டு காலப்பகுதியில் முதன்முதலாக தேயிலை பயிரிடப்பட்ட லூல்கந்துர தோட்டப்பகுதி அமைந்துள்ள பிரதேசம் முதல் பதுளை மாவட்டத்தின் பசறை 'கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்காகலை எலமான், பட்டாவத்தை, வெரலப்பத்தனை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் வரையில் அதிகஷ்ட பாடசாலைகளாகவும் கஷ்டப்பிரதேச பாடசாலைகளாகவும் இருக்கின்றன.

இதேபோன்று கண்டி மாவட்டத்தில் கம்பளை வலயத்துக்குட்பட்ட ஸ்டெலன்பேக், நியூ பீ கொக் புப்புரஸ்ஸ, லெவலன் ஆகிய தமிழ் வித்தியாலயங்கள், நாவலப்பிட்டி கல்வி வலயத்திற்குட்பட்ட வெஸ்டோல், பார்கேபல், கலபட ஆகிய தமிழ் வித்தியாலயங்கள், கண்டி வலயத்திற்குட்பட்ட போப்பிட்டிய, லூல்கந்துர, அயரி ஆகிய வித்தியாலயங்கள், வத்துகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட அலகொல, மாவுசா, குறிஞ்சி, உள்ளிட்ட தமிழ் பாடசாலைகள், தெல்தெனியவில் ரங்கல தமிழ் வித்தியாலயம் என்பனவும் மாத்தளை மாவட்டத்தில் பெருந்தோட்டப்புறங்கள் உள்ளிட்ட சுமார் 28 தமிழ் பாடசாலைகளும் கஷ்டப்பிரதேசப் பாடசாலைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்றும் களுத்துறை மாவட்டத்தில் மத்துகம கல்வி வலயத்துக்குட்பட்ட மத்தேகெதர த.வி., ஹொரண கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலைகளும் மாத்தறை மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளும் கஷ்டப் பிரதேச பாடசாலைகளாக அறியப்பட்டுள்ளன.

இதேநிலை நுவரெலியா மாவட்டம், கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் அவிசாவளையை உள்ளடக்கிய பகுதிகளிலும் நீடிக்கிறது.
இவையனைத்தும் பெருந்தோட்டப் பகுதிகளிலேயே நிலவுகின்றமை இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயமாகும்.

பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட பட்டாவத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை கற்கும் மாணவ மாணவியர் தினமும் எட்டு கிலோ மீற்றர் தூரம் நடைபயணமாகவே பாடசாலையை வந்துசேர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முறையான, சீரான போக்குவரத்துகள் என்பது பெருந்தோட்டப் பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவது தொடர் கதையாகிப் போயுள்ளது. மனித வாழ்வில் போக்குவரத்து என்பது பின்னிப்பிணைந்த அடிப்படைத் தேவைகளில் பிரதானமானதாகும். நகர்ப்புறங்களில் நிமிடத்துக்கு நிமிடம் பஸ்கள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும் பெருந்தோட்டப் பகுதிகளின் அதிகமான பிரதேசங்களுக்கான பஸ் போக்குவரத்து சேவை என்பது மிகவும் அடிமட்டத்தில் காணப்படுகிறது.

சில பகுதிகளில் நாளொன்றுக்கு இரு தடவைகள் என்ற ரீதியிலும் சில பகுதிகளில் 3 முதல் 4 தடவைகள் என்ற ரீதியிலும் காணப்படுகிறது.
இன்னும் சில பகுதிகளில் தனியொரு பஸ் மாத்திரமே சேவையில் ஈடுபடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் சேவையாளர்களில் ஒருவருக்கு சுகயீனம் என்றாலே அன்றைய நாளில் பஸ் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டு விடும் நிலையுண்டு. மாற்று நடவடிக்கைகளுக்கு அங்கு இடமுமில்லை.

போக்குவரத்தினை சீர்செய்து கொடுக்க முடியாதிருக்கின்ற மலையகப் பகுதிகளில் கல்வி விருத்தியடைய வேண்டும் என்ற நல்ல சிந்தனை எவ்வாறு எழும் என்பது ஆதங்கமே....

குறிப்பிட்டுக் கூறும் அளவில் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டுமானால் மேலே கூறப்பட்டதுபோன்று காலையில் எட்டு கிலோ மீற்றர் தூரமும் பிற்பகல் எட்டு கிலோ மீற்றர் தூரமும் நடைபயணத்தை மேற்கொள்ளும் மாணவர் சமூகம் எவ்வாறு தனது முழுக்கவனத்தை கல்வியின் பால் திருப்ப முடியும். உடல் பசித்து களைத்துவிடும் மாணவனோ, மாணவியோ இவர்களின் மனோநிலை எப்படி இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

கஷ்டப் பிரதேசம் மற்றும் அதிகஷ்டப் பிரதேசம் என்ற வரையறை குறித்து அதிகாரிகள் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கம் ஆகிய தரப்பினர் அறியாமல் இல்லை. புரியாமல் இல்லை. எனினும் ஏன் இது நிவர்த்தி செய்யப்படவில்லை.
இந்தப் பிரதேசங்கள் இப்படியே இருந்து விட வேண்டுமா? இந்த பிரதேசங்கள் இப்படியே இருந்து விட்டால் அபிவிருத்தியின் அர்த்தம்தான் என்ன?

கஷ்டப் பிரதேசம் மற்றும் அதிகஷ்டப் பிரதேசம் என்ற சொற்பதங்களை இல்லாதொழிக்க முடியும். ஆனாலும் மலையகப் பகுதிகளில் மாத்திரமே வரையறுக்கப்பட்டிருக்கின்ற இந்த சொற்பதம் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதில் அதிகாரம் பொருந்திய அனைவரும் அவதானமாக இருக்கின்றனர் என்பதுதான் உண்மையாகின்றது.

கஷ்டப்பிரதேசங்கள் அதிகஷ்டப் பிரதேசங்கள் என்ற பெயர்கள் சூட்டப்பட்ட பிரதேசங்களில் அமையப்பெற்றுள்ள பாடசாலைகளில் கற்பவர்களும் கற்பிப்பவர்களும்தான் பாவப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

கஷ்டப் பிரதேசம் அதிகஷ்டப் பிரதேசம் என்ற வரையறைக்குள் இருக்கின்ற பெருந்தோட்டப் பாடசாலைகளில் ஐந்தாம் தரம் வரையில் மாத்திரமே வகுப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஐந்தாம் வகுப்புக்கு மேலான வகுப்புக்களில் காலடி எடுத்து வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அநேகமான மாணவர்களுக்கு அமைவதில்லை. இதற்கு பெற்றோரின் வருமான நிலைமையும் பிரதான காரணமாகின்றது.

1980களின் பின்னரே மலையக சமூகத்தின் கல்வித்துறை பற்றி தானாகவே சிந்திக்கும் திறன் எழுந்தமையால் இன்று பாரிய அளவில் என கூறி விடுவதற்கில்லா விட்டாலும் பல முன்னேற்றங்கள் அடைந்து வருவது கண்கூடு.

இந்த முன்னேற்றங்கள் நகர்ப்புறங்களை அண்டி காணப்படுகிறதே தவிர அது வேறு பகுதிகளில் கிடையாது.

கஷ்டப் பிரதேசம் மற்றும் அதிகஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கென நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களும் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் திணறிக் கொண்டிருக்கின்றனர். இப்பகுதிகளுக்கென சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ள பஸ்களை தவறியேனும் தவற விட்டால் அன்றைய தினம் அந்த ஆசிரியர் பாடசாலையை அடைய முடியாது. இது ஒருபுறமிருக்க இங்குள்ள வளங்கள் என்பது மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. நகர்ப்புற பாடசாலைகளையே நாடுகின்ற, விரும்புகின்ற ஆசிரியர்கள் தமது உண்மையான அர்ப்பணிப்பினைக் காட்டி சமூக உணர்வோடு சிந்தித்து செயற்படுவதற்கு தவறுகின்றனர். மேற்கூறப்பட்ட காரணங்களால் கஷ்டப்பிரதேச பாடசாலைகள் எனும்போது அவர்களுக்கு அது வேம்பாக கசக்கின்றது.

1980களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இருந்த அர்ப்பணிப்புடனான ஆசிரியர் சேவை இன்று வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் தொழில் முறையாகவும் அதேநேரம் பணம் சம்பாதிக்கும் வழிமுறை யாகவும் எண்ணுகின்றமை கவலைக்குரியது.

இன்று மாணவனோ, மாணவியோ தனது கல்வி நிலையில் நல்ல தேர்ச்சியை அடைய வேண்டுமானால் அவனுக்கு அல்லது அவளுக்கு பிரத்தியேக வகுப்பு என்பது
அத்தியாவசியம் என்ற நிலை தோற்றுவிக்கப் பட்டுள்ளது. பகுதி நேர பிரத்தியேக வகுப்புக் களை நாடிச்செல்ல வேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருக்கின்றதென்றால் பாடசாலையின் கற்பித்தல் முறையில் எங்கோ தவறு இழைக் கப்படுகின்றது என்பதுதான் உண்மை. இதனை சகித்துக்கொண்டேனும் சம்பந்தப் பட்ட தரப்பினர் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

எமது நாடு தன்னிறைவு கண்டு, ஆசியா வின் ஆச்சரியமாக மாற வேண்டுமானால் அபிவிருத்தி அடைந்த நாடாக உலகு ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் மலையகத் திலே வரையறுக்கப்பட்டுள்ள கஷ்டப் பிர தேசம் அதிகஷ்டப் பிரதேசம் என்ற பதங்கள் இல்லாதொழிக்கப்படும் அளவில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.இது ஒருபுறமிருக்க அரசியல ்வாதிகளைப் பொறுத்தவரையில் பிரபல மான அல்லது நகர்புற பாடசாலைகளுக்கே அதிக விஜயங்களை மேற்கொள்வதையும் அங்கு மேலும் மேலும் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் கவனம் செலுத்து கின்றனரே தவிர பின் தங்கிய பகுதிகளுக்கு செல்வதற்கு அரசியல்வாதிகளின் வாகனங் களும் மறுத்து விடுகின்றன. என்பது வேதனை யானது. மேலும் வலயக் கல்விப் பணிப்பாளர் களும் அதிகாரிகளும் கூட தமது பொறுப் புக்களை நிறைவேற்றுகின்றனரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.நாட்டின் கல்வித்துறை ஒட்டு மொத்தமாக சமநிலைத் தன்மையுடன் நோக்கப்பட வேண்டும். மலையக சமூகமும் இந்நாட்டின் பிரஜைகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டு சமஉரிமை பேணப்பட வேண்டும். அதுமாத்திரமின்றி ஆக்கபூர்வ செயற்பாடுகளின் மூலமே அனைத்தும் நிறைவாகும் என்பதுடன் காண்கின்ற கனவும் நனவாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates