Headlines News :
முகப்பு » » மலையக இளைஞர்கள் அபிவிருத்தி எவ்வாறான நிலையில் உள்ளது? - கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ்

மலையக இளைஞர்கள் அபிவிருத்தி எவ்வாறான நிலையில் உள்ளது? - கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ்


ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி முகவரகம் வருடாந்தம் மேற்கொள்ளும் இலங்கை பற்றிய அறிக்கை தயாரிப்பில் இவ்வருடம் 'இளைஞர்களும் அபிவிருத்தியும்' என்ற தலைப்பில் விரிவான ஆய்வை நடத்தி அதன் அறிக்கையை இப்போது வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் மலையக இளைஞர்கள் பற்றிய பல்வேறு விபரங்களும் தரப்பட்டுள்ளன. அவற்றில் சில விடயங்களை குறிப்பிட்டுக் காட்டுதல் இக்கட்டுரையின் பிரதான இலக்காகும்.
* இளைஞர்கள் என்போர் 15 – 29 வயதுடைய ஆண், பெண் யாவரையும் உள்ளடக்கிய பிரிவினராவர்.

* இலங்கையின் மக்கள் தொகையில் இவர்களது எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 23.2 வீதத்தினராகும்.

* இலங்கையிலுள்ள இளைஞர்களில் 37 வீதமானவர்கள் ஆர்வம் இருந்தும் இரண்டாம் நிலைக் கல்வியை பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லாதவர்களாகக் காணப்படுகின்றனர்.

* 70 வீதமான இளைஞர்கள் கிராமிய / தோட்டத்துறைகளில் காணப்படுகின்றனர்.

கல்வி வாய்ப்புகள்
இலங்கையில் கல்வி வாய்ப்புகள் பல நிலைகளில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் பிரதேச ரீதியில் மிகப்பெரிய இடைவெளிகள் காணப்படுகின்றன. உதாரணமாக க.பொ.த. உயர்தரத்தில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை மேற்கு மாகாணத்தில் 44 வீதமாக காணப்படும் போது பெருந்தோட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மாகாணங்களில் அதன் எண்ணிக்கை மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. அதிலும் ஊவா மாகாணத்தில் க.பொ.த. உயர்தர வகுப்புகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் தாழ்ந்த நிலையில் 15 வீதமாகவே காணப்படுகின்றது. கல்வியைப் பொறுத்தவரையில் மாணவர்கள் போட்டிப் பரீட்சைக்கு தங்களை தயார்படுத்தக்கூடியதாகவே காணப்படுகின்றதன்றி திறமைசாலிகளாக வளர்வதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன. மாணவர்களுக்கென ஏற்பாடுகள் செய்யும் மேலதிக நேர வகுப்புகளில் பரீட்சையில் எவ்வாறு சித்தியடையலாம் என்று பயிற்சி அளிக்கப்படுதல் என்பதே ஏற்றுக்கொள்ளப்பட்ட கற்கை முறையாக காணப்படுகின்றது. இவ்வாறான பயிற்சிகளுக்காக பாடசாலை நேரத்திலேயே டியூசன் வகுப்புகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை 33 வீதமாக காணப்படுவதும் அறியப்பட்டுள்ளது.
இலங்கையில் தொழில்நுட்பக் கல்வி விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட போதும் 3.6 வீதமானோர் மட்டுமே தொழி ல்நுட்பத் துறைகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இளைஞர்களில் 16வீதமானவர்கள் மட்டுமே பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக சென்று முறையான தொழில்நுட்பக் கல்வியை பெற்றுக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். உண்மையில் தொழில்நுட்பக் கல்வி தொடர்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதும் அதன் பலாபலன்களை இளைஞர்களில் கணிசமானவர்கள் பெற்றுக் கொண்டதாகக் காணப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கையில் 2,077 தொழில்பயிற்சி நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில் 711 மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தொழில் பயிற்சி நிலையங்களாக காணப்படுகின்றன. இவற்றில் 291அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. 898 தனியார்களாலும் 240 அரசசார்பற்ற நிறுவனங்களாலும் நடத்தப்படுகின்றன. இங்கு பயிற்றப்படும் கற்கை நெறிகள் உயர்ந்த தரம்மிக்கதாக காணப்படவில்லை என்று கருதப்படுகின்றது. இலங்கையில் 10 முதல் 20 கிலோ மீற்றர் இடைவெளியில் தொழில்நுட்பக்கல்லூரிகள் அமைந்திருந்தாலும் 85 வீதமான இளைஞர்கள் இவ்வாறான தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிற்சியை முடித்தவர்களாக இல்லை.

இன்னுமொரு விடயத்தையும் அவதானித்தல் அவசியமாகும். பாடசாலையில் உயர் கல்வி மேற்கொள்ளும் இளைஞர்கள் மூன்றாம் நிலைக் கல்வியாக பல்கலைக்கழக கல்வியையே விரும்புகின்றனர். அன்றி தொழில்நுட்பக் கல்வியை மேற்கொள்வதில் நாட்டம் குறைவாகவே காணப்படுகின்றது. அவ்வாறே பயிற்சியை முடித்தவர்களும் போதுமான வேலைவாய்ப்புகள் விஸ்தரிக்கப்படாமையும் தொழில்நுட்பக் கல்வியில் நாட்டம் இல்லாமைக்கான மற்றுமொரு காரணமாகும். இத்தகைய தொழில்நுட்பக் கல்விக் கூடங்கள் பெரும்பாலும் சிங்கள மொழியிலேயே நடத்தப்படுவதன் காரணமாக சிங்களவர்கள் மத்தியில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்கள் இதன் பலனை அனுபவிக்க முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். இதில் அதிகமாக பாதிப்பிற்கு உட்படுபவர்கள் மலையக இளைஞர்களாவர்.

இதைவிட, தொழில் வாய்ப்புகளை பொறுத்தமட்டில் தேசிய பாடசாலைகளில் கல்வியை சிறந்த பெறுபேறுகளுடன் பூர்த்தி செய்துகொண்டு ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சியை முடித்துக் கொண்டாலும் வேலை வாய்ப்புகளில் யாவருக்கும் தகுதிக்கு ஏற்றவாறு கிடைப்பதில்லை. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் வேலை வழங்கும்போது பிரசித்தி பெற்ற பாடசாலையில் படித்து வெளியேறிய மாணவர்களுக்கே முதலிடம் வழங்குகின்ற நிலைமை இந்நாட்டில் தொடர்ந்தும் காணப்படுகின்றது. தேசிய கல்வித்திட்டத்தில் மலையகப் பாடசாலைக்கென்று ஒரு பாடத்திட்டம் அல்லது பின்தங்கிய பாடசாலைக்கென்று ஒரு பாடத்திட்டம் என்பது இல்லாத போதும் வேலைவாய்ப்பில் பாராபட்சம் காட்டப்படுவது கிராமிய தோட்ட இளைஞர்கள் மத்தியில் வெறுப்புணர்வை வளர்த்து வருகின்றது.

வேலைவாய்ப்புகள்
உலகில் 1.2 பில்லியன் இளைஞர்கள் இருக்கின்றனர். இவர்களில் 73 மில்லியன் இளைஞர்கள் வேலையற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களுக்கு வேலை வழங்க வேண்டுமாயின் சுமார் 600 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் சுமார் 40 மில்லியன் பேர் வேலையில்லாத இளைஞர்களாக உள்வாங்கப்படுகின்றனர். இவர்களில் 60 வீதமான இளைஞர்கள் ஆசிய – பசுபிக் பிராந்தியத்திலேயே வாழ்கின்றனர்.

இலங்கையில் 20 – 24 வயதுடைய இளைஞர்களில் 36 வீதமானவர்கள் வேலையற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இலங்கையில் மொத்த தொழிற்படையில் 96 வீதமானவர்கள் வேலைவாய்ப்பு பெற்றவர்களாகக் காணப்பட்ட போதிலும் இளைஞர்களைப் பொறுத்தவரை திருப்திகரமான வேலைவாய்ப்புகள் இலங்கையில் விஸ்தரிக்கப்படவில்லை என்பதை அறிய முடிகின்றது. அடையாளப்படுத்தப்படும் இளைஞர்களில் 41.6 வீதமானவர்கள் முழு நேரத் தொழிலாளர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இவர்களில் 19 வீதமானவர்கள் தமது தொழிலில் திருப்தியுடன் இருப்பவர்களாக இல்லை. மேலும் 15.5 வீதமானவர்கள் வருமானமற்ற வீட்டுத் தொழில் புரியும் குறிப்பாக பெண்களாகக் காணப்படுகின்றனர்.

இலங்கை இளைஞர்களை பொறுத்தவரை தொழில் திறனைப் பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை தொழில் பெற்றுக் கொள்வதற்கான போதுமான அறிவுறுத்தல்கள் இல்லை. அவ்வாறே ஆர் வம் இருந்தும் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்துவிட்டு தொழில்பயிற்சியை முடித்துக் கொள்வதற்காக பெற்றோர்களை தொடர்ந்து தங்கியிருத்தல் போன்றதான இளைஞர்கள் தமது தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர்.

மேற்குறிப்பிட்டது போல 20 – 24 வய தில் வேலையில்லாத 40 வீதமான இளைஞர்களில் 60 வீதமானவர்கள் பெண்களாகக் காணப்படுகின்றனர். இவர்களில் வறுமைக்குட்பட்டுள்ள குடும்பங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை தெரிவு செய்வதைவிட வேறு வழியற்றவர்களாக நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

வேலை பெற்றுக்கொள்வது தொடர்பாக இளைஞர்கள் மற்றுமொரு கருத்தையும் கொண்டுள்ளனர். இவர்களில் கணிசமான வர்கள் தகவல் தொழில்நுட்பமும் ஆங் கில மொழித்திறனும் இருப்பின் வேலை யைப் பெற்றுக்கொள்ள உதவியாக இரு க்கும் என்று கருதுகின்றனர். இருப்பினும் அரசாங்க தொழில் வாய்ப்புகளை பெற் றுக்கொள்ள அரசியல் ரீதியில் செல்வாக்கு காணப்படுவது அவசியம் என்று சுமார் 54 வீதமான இளைஞர்கள் கருது கின்றனர்.

இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள் கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமல்ல. சுகா தாரம், யுத்த நிலைமையின் பின்னர் ஏற்ப ட்டுள்ள சமூகச் சூழல், இளைஞர்களின் அரசியல் பிரயோகம், எதிர்காலம் என்பன இவ்வறிக்கையில் விரிவாக ஆராயப்பட்டு ள்ளன. மிக விரைவில் இவ்வறிக்கையின் தமிழ் மொழி பெயர்ப்பும் வெளியாகும். அடுத்து வரும் 10 ஆண்டுகளில் இளைஞர் முன்னேற்றம் பற்றிய ஆர்வலர்களுக்கு இவ்வறிக்கை வரப்பிரசாதமாகும்.

நன்றி  - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates