Headlines News :
முகப்பு » » ஊவாவில் முடக்கப்பட்டுள்ள தமிழ்க் கல்வித்துறை: கண்டுகொள்ளாத மலையகத்தலைமைகள் டி.சுபா

ஊவாவில் முடக்கப்பட்டுள்ள தமிழ்க் கல்வித்துறை: கண்டுகொள்ளாத மலையகத்தலைமைகள் டி.சுபா


இலங்கையின் சமூகங்களை கல்வியினடிப்படையில் வகைப்படுத்தினால் இன்றளவிலும் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு ஏனைய சமூகங்களைவிட குறைந்தளவு கல்வியறிவினைக் கொண்டதொரு சமூகமாக அடையாளப்படுத்தப்படுவது மலையக சமூகமாகும். ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகின்றபோது கல்வி, பொருளாதாரம், சமூகம் என்று எல்லாத் துறைகளிலும் இந்த சமூகமானது பின்தங்கியதொரு நிலையில் இருப்பதற்கு பல்வேறு காரணிகள் சொல்லப்பட்டாலும், உண்மையில் சுதந்திரத்தின் பின்னர் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களைத்தான் கூற வேண்டும். அத்துடன் சமூகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்திய மலையகத் தலைமைகள் இந்த மக்கள் தொடர்பில் தீர்க்கமானதொரு கொள்கையினை வகுத்து செயற்படாமையினையும் ஒரு காரணமாகக் குறிப்பிடலாம்.

மலையக கல்வியில், கடந்த 2 தசாப்தங்களுக்கு முன்னர் பல கல்விமான்களை உருவாக்கித் தந்த ஊவா மாகாணத்தின் பிரபலமான பல பாடசாலைகள் இன்று மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் திட்டங்களிலும் மாகாண சபைகளின் திட்டங்களிலும் பெரும்பான்மை சமூகத்திற்கு அள்ளிக்கொடுக்கின்ற அரசியல்வாதிகள், தமிழ் பாடசாலைகளுக்கு கிள்ளிக் கொடுக்கின்ற போக்கையே கொண்டிருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக ஊவாவில் சில பாடசாலைகளில் குறித்த சில உயர்கல்வி பாடத்துறைகளை மூடிவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலோட்டமாக பார்க்கின்ற ஒருவருக்கு மேற்படி பாடசாலைகளில் உயர்தர பாடப் பிரிவுகளை மூடிவிட்டார்கள் என்பது மட்டுமே தெரியும். ஆனால், அவை என்ன காரணத்தினால் மூடப்பட்டன. இதனால் நேரடி, மறைமுக பாதிப்புக்கள் என்ன என்பது யாருக்கும் தெரியாது.

ஊவாவின் அண்மைக்கால கல்விசார் பிரச்சினைகளை ஆழமாக ஆராய்கின்றபோது ஒரு பாடசாலையிலிருந்து உயர்தரப் பிரிவொன்று மூடப்படுமாயின் அங்கு பிரதானமாக குறைபாடாக நோக்கப்பட வேண்டியது போதிய ஆசிரியர் வளமின்மையாகும். அது தவிரவும் ஊவாவின் தமிழ் பாடசாலைகள் அனைத்திலுமே பெளதீக வளப்பற்றாக்குறை என்பது காலங் காலமாக இருந்து வருகின்ற பிரச்சினையாக உள்ளது. இவ்வாறு ஊவாவின் தமிழ் பாடசாலைகள் அனைத்துமே ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கித் தவித்து வருகின்றன.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஆளணி வளம், பெளதீக வளம் என்பனவற்றை ஒன்றிணைத்து பாடசாலைகளின் சிறப்பான நிர்வாகத்திற்கு வழிவகுக்கின்ற பிரதான நிறுவனங்களாக நாம் கல்வி அமைச்சினையும், மாகாண கல்வி அமைச்சினையும், மாகாண கல்வித் திணைக்களத்தினையும், வலயக் கல்விக் காரியாலயங்களையும் குறிப்பிடலாம். பாடசாலைகளின் கல்வி அடைவுகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் என்பவர்களின் செயற்பாடுகளை உரிய முறையில் ஒழுங்குபடுத்துவதற்கான கொள்கை உருவாக்கங்களை மேற்கொள்ள வேண்டிய இந்த நிறுவனங்களில் இயங்குகின்ற தமிழ் பிரிவுகளின் நிலைமை மிகப் பரிதாபமாக இருக்கின்றமையினை அண்மைக்காலமாக நோக்க முடிகின்றது.

ஊவாவில் இயங்குகின்ற நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் பாடசாலைகளை நிர்வகிப்பதற்காக கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழ் கல்வியமைச்சு என்ற தனியான அமைச்சு செயற்பட்டு வந்த போதிலும், பின்னர் அந்த அமைச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால், அப்போது மலையகத் தலைமைகளுக்கு மாகாண சபையில் அமைச்சு பதவி தேவைப்பட்டதே தவிர, எந்த அமைச்சு தேவை என்ற எண்ணம் இருக்கவில்லை. ஊவா மாகாணத்தில் இருக்கின்ற 2 தமிழ் தேசிய பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்து தமிழ் பாடசாலைகளும் மாகாண கல்வியமைச்சின் கீழேயே பொறுப்பாக்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையிலேயே தமிழ் கல்வியமைச்சு இல்லாமல் செய்யப்பட்டு, பொது மாகாண கல்வியமைச்சின் கீழ் அதன் பொறுப்புகள் கொண்டு வரப்பட்டன. இவ்வாறானதொரு செயற்பாடு 5 வருடங்களுக்கு முன்னர் ஊவாவின் அரசியலில் நடந்தபோது அதனை கண்டுகொள்ளாத மலையகத் தலைமைகள் மத்திய மாகாணத்திலும் இதுவரை காலமும் இருந்த தமிழ் கல்வியமைச்சினையும் தாரை வார்த்திருக்கின்றன.

இது இவ்வாறிருக்க தனியானதொரு அமைச்சாக இயங்கிய ஊவா மாகாண தமிழ்க்கல்வியமைச்சு மாகாண கல்வியமைச்சுடன் இணைக்கப்பட்டதுடன் அமைச்சு மட்டுமின்றி தமிழ் கல்விக்கென்று தனியானதொரு பிரிவுகூட இல்லாமல் ஒழிக்கப்பட்டிருப்பதனை காண முடிகின்றது. நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் பாடசாலைகளையும், 1000இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் இன்னும் பல நூறு கல்வி சாரா ஊழியர்களையும் கொண்டிருக்கின்ற தமிழ் கல்வித்துறை சார்ந்த பாடசாலைகளின் வளப்பகிர்வு, ஆசிரியர்களின் இடமாற்றம், பதவி நிலைமாற்றம், பதவி உயர்வு, பாடசாலைகளுக்கான அதிபர்கள் நியமனம், இவர்களின் ஏனைய நலன்சார் செயற்பாடுகள் என்று அனைத்தையும் தற்போதைய அமைச்சில் ஒரேயொரு உத்தியோகத்தரே மேற்கொள்கின்ற நிலையினை ஊவா மாகாண கல்வியமைச்சில் காண முடிகின்றது.

தனியானதொரு அமைச்சின் மூலம் செய்யப்பட்ட ஊவாவின் தமிழ் கல்விச் செயற்பாடுகள் இன்று தனியொரு உத்தியோகத்தரிடம் வழங்கப்பட்டிருக்கின்றமையானது பெரும் வேதனைக்குரிய விடயமாகும்.

இது இவ்வாறிருக்க ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தில் இயங்குகின்ற தமிழ்ப்பிரிவின் நிலைமையும் இதேபோன்றதொரு நிலையிலேயே இருக்கிறது. மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளரின் கீழ் இயங்குகின்ற தமிழ்ப்பிரிவின் வசதிகளும் ஆளணியும் மிகவும் குறைவான நிலையிலேயே இந்தப் பிரிவு இயங்கி வருகின்றது. அத்துடன் மாகாண கல்வித் திணைக்களத்தில் இயங்குகின்ற தமிழ்ப் பிரிவானது சுயாதீனமான முடிவுகளை எடுக்கின்ற நிலையில் இல்லை. வெறுமனே சிபாரிசுகளை செய்துவிட்டு எந்தவொரு செயற்பாட்டிற்கும் மாகாண பணிப்பாளரை எதிர்பார்த்திருக்கின்ற நிலையிலேயே இருக்கிறது.

மத்திய அரசின் கல்வியமைச்சில் தோட்டப்புற பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவொன்று இயங்குவதுடன் அதன் பணிக்கூற்று பின்வருமாறு அமைந்துள்ளது. ''பெருந்தோட்டப் பாடசாலைகளின் அளவு, தரம், வரையறை முதலியவற்றில் கல்வியை மேம்படுத்தி வளர்ச்சிப்படுத்தலும், கல்வி முறைமைக்குள் சமத்துவமான நிலையில் அவற்றை ஒன்றுபடுத்தலும்'', அத்துடன் கல்வியமைச்சின் பணிகளாக பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன.

* ஓராண்டுத்திட்டம், ஐந்தாண்டுத் திட் டம் தயாரித்தல்.
* தோட்டப் பாடசாலைகளின் கல்வித்தர வளர்ச்சி தொடர்பான வேலைத்திட்டங்களை மாகாண மட்டத்தில் நடத்துவதற்காக தமது கிளையினூடாக மாகாணங்களுக்கு நிதியொதுக்கீடு செய்தல்.
* தோட்டப் பாடசாலைகளின் புலமைப் பரீட்சைப் பெறுபேற்றை உயர்த்துவதற்காக தோட்டப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல்.
* தேசிய மட்டத்தில் வெளியாகும் முன்னேற்ற அறிக்கை தொடர்பாக மாகாண மற் றும் வலய அலுவலர்களுக்கு விளக்குதல்.
* தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துதலும் அறிக்கை பெற்றுக்கொள்ளுதலும்.
* சத்துணவுத் திட்டங்கள் ஏனைய திட்ட ங்களை பெருந்தோட்டப் பாடசாலைகளுக் கும் விஸ்தரிப்பதுடன் அவற்றை மேம்படு த்தல்.
* மாதாந்த, வருடாந்த முன்னேற்ற அறிக்கையினைத் தயாரித்தல்.

இவ்வாறு கல்வியமைச்சு பெருந்தோட் டப் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர் பில் கொண்டிருக்கின்ற கொள்கைத் திட்ட மானது நீண்டு செல்கின்ற அதேவேளை யில், ஊவாவில் முழு தமிழ் கல்விப் பிரிவினதும் பணிகள் ஒரு ஊழியரின் கைக ளில் ஒப்படைக்கப்பட்டிருப்பது வியப்பாக இருக்கிறது. மேற்குறிப்பிடப்பட்ட கல்வி யமைச்சின் கொள்கைத் திட்டங்களை மாகாண மட்டத்தில் பாடசாலைகளில் நடை முறைப்படுத்துகின்ற பொறுப்பு மாகாண கல்வியமைச்சிற்கு உரியதாக இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவையனைத்தினையும் ஒரு உத்தியோகத்தர் மேற் கொள்ளும் சாத்தியம் மிகக் குறைவா கும்.

தமிழ் கல்வியமைச்சு தனியாக இயங்காத போதிலும் தகுதி வாய்ந்த தமிழ் அதிகாரியொருவரின் கீழ் தனியொரு தமிழ் பிரிவாவது இயங்குமாயின் இந்த அரசியல் சார்ந்த செயற்பாடுகளிலிருந்து ஊவாவின் தமிழ் பாடசாலைகள் விடுபட்டு செயற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனினும், துரதிர்ஷ்டவசமாக இதுவரை காலமும் தமிழ் பிரிவொன்று ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சில் அமைக்கப்படாதிருக்கின்றமை வேதனை கலந்த உண்மையாகும்.

அமரர் செளமியமூர்த்தி தொண்டமா னின் காலத்தில் அவரின் அரசியல் சாணக்கி யத்தினால் பெற்றுக்கொள்ளப் பட்ட முக்கி யமான விடயங்களில் இந்த மாகாண தமிழ் கல்வியமைச்சும் ஒன்றாகும். இவ்வாறு தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் அன்று அவரால் பெற்றுக்கொடுக்கப்பட்ட இந்த அமைச்சினை ஏன் எமது மலையகத் தலைமைகளினால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை? என்ற வினா பரவலாக எழுப்பப்படுகிறது.

நன்றி - வீரகேசரி 25-05.2014

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates