Headlines News :
முகப்பு » , » மலையகத்தில் பொன்னர் சங்கர் கூத்து ஓர் அறிமுகம் - சு.தியாகராஜ்

மலையகத்தில் பொன்னர் சங்கர் கூத்து ஓர் அறிமுகம் - சு.தியாகராஜ்



மலையக கூத்துக்களின் வளர்ச்சியும் வரலாறும்

இருநூறு வருடங்களுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்த மலையக தோட்ட தொழிலாளர்கள் தங்களது உழைப்பை மட்டும் இங்கு கொண்டு வரவில்லை. தமது பாரம்பரிய கலைகளையும் இங்கு கொண்டு வந்தனர். சமீப காலம் வரை இக்கலைகள் எம்மக்களின் வாழ்வோடு பின்னிப்பினைந்திருந்தன. அவர்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டன.

காலையில் எம்மவர்களை 'காலை தப்பு' துயில் எழுப்ப அதன் பின்னர் வேலைத்தளத்திற்கு செல்வதற்கு 'பிரட்டுத்தப்பு'. வேலை முடிந்து வீடு செல்வதற்கு மாற்று ஓசையுடன் கூடிய தப்பு. காவடியாட்டம், கரகாட்டம், திருவிழாக்கள், சமயக்கிரியைகள், சடங்குகள் போன்றவற்றிற்கு வௌ;வேறு சுருதி கொண்ட தப்பு. இப்படியாக பதினாறு வகை தப்போசைகள்.

மாலை மயங்கி இரவு தொடங்கிவிட்டால் தொழிலாளர் வாழும் லயங்களில் ஏதாவது ஒரு காம்பிராவில் ஒருவர் மகாபாரதம் நல்லத்தங்கால் கதையை ராகத்துடன் வாசிக்க மற்றவர்கள் சூழ்ந்திருந்து இரசிக்கும் காட்சி அன்றிருந்தது. சமய உணர்வும், கேளிக்கையும், உடற்பயிற்சியும் சார்ந்த சிலம்பாட்டம், கோலாட்டம், கும்மி, கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கரவஞ்சி இவற்றைவிட உடுக்கு, தமூர், செஞ்சனக்கட்டை, சங்கு, தண்டை இன்னோரன்ன மலையகத்திற்கே உரிய ஆட்டங்களும் வாத்தியங்களும் மக்கள் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துள்ளன.

அர்சுனன் தபசு, பொன்னர் சங்கர் கூத்து, காமன்கூத்து என மாசிபிறந்து விட்டால் கூத்துக்கள் குதூகலிக்கும். காலை முதல் மாலைவரை வேலை செய்து கலைத்துப்போன உடலுக்கும் உள்ளத்திற்கும் வெண்சாமரை வீசுவதாக இக்கூத்துக்கள் இடம்பெறுகின்றன. ஒருவர் தன்னை மறந்து இவ்வாறான கலையில் தன்னை ஈடுபடுத்தி இன்பம் காணும் வேட்கையாகவே இக்கூத்துக்கள் காணப்படுகின்றன.

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட அடக்கு முறைகளும் கெடுபிடிகளும் உழைப்புக்கேற்ற ஊதியமின்மையாலும் அதிகம் பாதிக்கப்பட்டு துன்பக்கேணியில் கிடந்துழன்ற தொழிலாளர்களுக்கு மன ஆறுதலையும் மகிழ்ச்சியையும் வாழ்க்கையில் நம்பிக்கையையும் அளித்தவை நாட்டாரியற் கூறுகளேயாகும். தொழிலாளர்கள் தம் முன்னோரிடமிருந்து பெற்றுக்கொண்ட விலைமதிக்க முடியாத பெரும் சொத்து இவையாகும்.

மலையக தொழிலாளர்கள் வெங்கொடுமை சாக்காட்டில் வெந்துழன்ற போதும் மலையகத்தில் அடிக்கடி இடம்பெறும் இனச்சங்கார செயல்களினால் வெகுவாக பாதிக்கப்பட்டப் போதும் தம் முன்னோர் அளித்த அரும் செல்வமாகிய நாட்டாரியற் கூறுகளை பேணிப்பாதுகாப்பதில் முனைப்பாக நிற்றல் மனந்திறந்து பாராட்டத்தக்கதாகும்.

இந்நாட்டாரியற் கூறுகள் தாலாட்டுப்பாடல்கள், தொழிற்பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், கரகம், காவடி, கும்மியாட்டம், கோலாட்டம் என நீண்டு செல்கின்றன. இந்நாட்டாரியற் கூறுகளில் ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான பண்புகளும் சுவையும் எம்மவர்களிடம் இழையோடிருப்பது நாட்டாரியலின் வெற்றியாகும். அந்த வகையில் இந்நாட்டாரியற் கூறுகளில் 'கூத்துக்கள்' பெற்றுள்ள இடம் தனித்துவமாக காணப்படுகின்றமை கூத்துக்கள் மலையக மக்களிடத்தில் பெற்றுள்ள செல்வாக்கினை எடுத்தியம்புகின்றன.

இனி மலையகத்தில் கூத்துக்களின் வளர்ச்சியையும் அது பெற்றிருக்கும் செல்வாக்கினையும் எடுத்து நோக்கும் போது இந்நாட்டின் நாகரீகத்தையும் பண்பையும் உயிர்ப்பையும் ஓங்கி வளர்த்த  பெருமை கிராமங்களுக்குரியது. கிராமங்கள் இயற்கைக்கு மிக அருகாமையில் இருக்கின்றமையால் அவை வாழ்வில் என்றும் உயிரூற்றுடன் நெருங்கிப் பிணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய கிராமங்களில் வாழும் மக்களால் வளர்க்கப்பட்ட அழகிய கலைகளே கிராமிய கூத்துக்களாகும். இவை பொதுமக்களின் விலைமதிக்க முடியாத பெறும் சொத்தாகும்.

கூத்து என்பது நாட்டுப்புற கலைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. இவற்றை 'நாட்டுப்புறக்கூத்துக்கள்' என்றும் 'கிராமிய நாடகங்கள்' என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவற்றில் ஆடல்களும் பாடல்களும் அமைந்திருக்கும். மேடையின்றி திரைகள் இன்றி அதிக ஒப்பனைகள் இன்றி திறந்த வெளி அரங்குகளில் நடைபெறும் கிராமிய நாடகங்களே கூத்துக்களாகும்.

ஆதிகால மனிதன் நாளாந்தம் தான் செய்து வந்த தொழிலை ஓய்வு பெற்ற நேரங்களில் அபிநயங்களோடு செய்து பார்க்க முற்பட்டான். அபிநயத்தோடு கூடிய தொழிலானது கூத்தாக உருப்பெறலாயிற்று. இக்கூத்துக்கள் கிராமிய மக்களின் வாழ்க்கை வரலாற்றையும், மக்களின் மனப்பாங்குகளையும், சமய அடிப்படையிலான கொள்கைகளையும் வெளிக்காட்டுகின்றன. இவ்வாறு கூத்து நிகழ்த்துபவர்களை 'கூத்தாடிகள்' என்று அழைத்தனர்.

'கூத்தாடி கிழக்கே பார்ப்பான்
கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்'

மேற்படி பழமொழி கூத்துக்கள் விடியும் வரை நடைபெறுவதையே உணர்த்துகின்றது. ஓர் இரவை மக்கள் இனிதாக கழிக்கக் கூடியதாகவே கூத்துக்கள் ஒழுங்கு செய்யப்படும்.

கிராமியக் கூத்துக்களில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் இடம்பெறுகின்றன. ஆயினும் பாட்டின் செல்வாக்கே அதிகமாக காணப்படுகின்றது. இதைத்தவிர இக்கூத்துக்கள் ஆரம்ப கால இதிகாச, புராண நாடகங்;களிலிருந்தே உருப்பெற்றது. கூத்து என்பது ஒருவரோ அல்லது ஒருசிலரோ ஒரு பாடலையோ அல்லது ஒரு கதையின் பகுதியையோ வாய்ப்பாட்டு, இசைக்கருவி முதலியவற்றின் துணையுடன் ஆடிகாட்டும் நடனமாக கருதப்படுகின்றது.

தமிழில் வழங்கி வரக்கூடிய பல்வேறு கூத்துக்கள் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும், மலையகத்திலும் பரிணமித்துள்ளமையை நாம் காணலாம். வடக்கிலே வடமோடி, தென்மோடி கூத்துக்கள் என காத்தவராயன், இலங்கேஸ்வரன், வசந்தன், அருளப்பர் போன்ற கூத்துக்கள் காணப்பட, மலையகத்தில் காமன்கூத்து, பொன்னர் சங்கர், அருச்சுனன்தபசு, இராமர் கூத்து, மதுரைவீரன் போன்ற பல்வேறு கூத்துக்களும் காணப்படுகின்றன. இவற்றில் மலையகத்தில் பெரிதும் பிரபல்யம் அடைந்து வரும் கூத்து காமன்கூத்தாகும். ஏனையவை அனைத்தும் வழக்கொழிந்து வருகின்றவையே. அந்த வகையில் அருகிவரும் கூத்துக்களில் காமன்கூத்தும் பொன்னர்சங்கர் கூத்தும் காணப்படுகின்றன.

அந்நியரின் பிடியில் சிக்கி துவண்டிருந்த மலையக தொழிலாளர்களுக்கு இக்கூத்துக்கள் பெரிதும் தமது இன்னல்களை மறந்து சற்று நேரம் இன்பத்தில் லயித்து இளைப்பாறும் ஆசனங்களாகவே காணப்பட்டன. இவ்வாறு வளர்ச்சியடைந்து வந்த இந்த கூத்துக்கள் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்று வந்தன. ஆனால் பிற்பட்ட நவீனமயமாக்கல், நகரமயமாக்கல் மோகத்தினால் மக்களுக்கு கூத்துக்களின் பால் ஈடுபாடு அருகியே வருகின்றது. அந்தவகையில் அருகிவரும் கூத்துக்களில் ஒன்றாகிய பொன்னர் சங்கர் கூத்தை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகின்றது.

மலையகத்தின் பொன்னர் சங்கர் கூத்தின் வரலாறும் கதைக்கருவூலமும்
பண்டைய காலத்தில் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் இலக்கியங்களை வளர்ததனர் என்பதும் நாடகத்திற்கு அடிப்படையான கதைக்கூத்துக்களை மக்கள் பெரிதும் போற்றி வந்துள்ளனர் என்பதும் நூல்களினூடாக அறியக்கிடக்கின்றன.

19ம் நூற்றாண்டின் ஒப்பந்த கூலிகளாக இந்தியாவின் நாமக்கள், நெல்லை, சீமை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், தர்மபுரி போன்ற பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தாம் வாழ்ந்த கிராமங்களின் சாதியமைப்பிற்கேற்ப கலை, கலாசார பண்பாடுகளையும் தம்முடன் கொண்டு வந்தனர். இவ்வகையில் இம்மக்கள் தம் வாழ்வோடு இணைந்த கூத்துக்களில் ஒன்றான பொன்னர் சங்கர் கூத்தினையும் கொண்டுவந்தனர். இக்கூத்தானது தமிழகத்தில் இடம் பெற்ற கூத்தினை அடியொட்டியதாகவும் மலையகத்திற்கே தனித்துவமானதாகவும் காணப்படுகின்றது.

இப் பொன்னர் சங்கர் கூத்தானது அண்ணன்மார் சாமிக்கதை எனவும் குன்றுடையான் கதை எனவும் கூறுவோரும் உள்ளனர். இவ்வரலாறானது மலையக பகுதிகளான கிருமக்கொலை, பீரட் ஆகிய தோட்டங்களில் 55 - 60 வருடங்களாக நடைபெற்று வருகின்றது. மேலும் மாணிக்கவத்தை, சலங்கண்டி, போற்றி, பெரியமஸ்கெலியா, லெட்சுமித்தோட்டம், அரிசிதோட்டம், ஸ்ரப்பி, நானுஓயா, அப்புத்தளை, சென்.கூம்ஸ், கொஸ்லந்த, வட்டவலை, லொனக், செல்வகந்த, ரூவாக்கொல போன்ற தோட்டங்களில் ஆடப்பட்டு வருகின்றது.

இக்கூத்தின் ஆரம்பத்தினை எடுத்துக் கொள்வோமாயின் இக்கூத்தினை முன்னின்று நடாத்தியவர்கள் இறந்து விட்டதாகவும் சிலர் இந்தியாவிற்கு சென்று விட்டதாகவும் இதனால் பல தோட்டங்களில் இக்கூத்து இடம்பெறுவதில்லை என ஆய்வின் போது தெரியவந்துள்ளது. கிருமக்கொலையிலே முதல்முதலில் இக்கூத்து ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து வந்தவரான அழகன் என்பவர் தன் வறுமை காரணமாக இக்கூத்துப் பாடல்களைப் பாடி ஆடிக்கொண்டு லயன்கள் வழியாக அரிசி, காசு வாங்கிக் கொண்டு வந்த போது அங்குள்ள மக்கள் அதன்பால் ஈர்க்கப்படவே சில பெரியவர்களும் இளைஞர்களும் இதனை முன்னின்று நடத்தினர் எனவும் அவரையே ஆசிரியராக கொண்டு ஆட்டங்களையும் பாடல்களையும் கற்று 1946 - 1949 காலப்பகுதியிலே முதன்முதலில் இக்கூத்தாட்டாத்தினை ஆரம்பித்ததாகவும் கூறுகின்றனர்.

இனி பொன்னர் சங்கர் கதையை எடுத்து நோக்கும் போது இக்கூத்தினை அண்ணன்மார் கதை அல்லது அண்ணன்மார் வரலாறு என்றும் அழைப்பதுண்டு. பொன்னரும் சங்கரும் இக்கூத்தின் கதாநாயகர்களாக அமைவதால் இருவரதும் பெயரைக்கொண்டு இக்கூத்து அழைக்கப்படுகின்றது. இவர்களது வாழ்க்கை வரலாறும் வீர தீர செயல்களும் இக்கூத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளன. இப்பொன்னர் சங்கர் கூத்தில் காமன் கூத்தில் காமனை வழிப்படுவது போல பெரியசாமி எனும் தெய்வம் வழிபடப்படுகின்றது. இக்கூத்தானது 16 அங்கமாக ஆடப்படுவதுண்டு. ஏனெனில் சிவனருளால் தவமிருந்து பெற்றெடுத்த பொன்னரும் சங்கரும் 16 வயது வரையிலேயே வாழ்நாளை கொண்டிருந்தனர் என்பதனாலாகும்.

இக்கூத்தின் வாயிலாக அவதாரக் கோட்பாடுகள் பற்றிய ஐதீகங்கள் விளக்கப்படுகின்றது. இக்கூத்தானது ஆலயத்திற்கு அண்மையிலுள்ள சூழலிலோ மைதானத்திலோ ஆடப்படுவதுண்டு. இக்கூத்தில் ஆடுபவர்களுக்கு அணிவிக்கப்படும் ஆடையணிகள் வடமோடி, தென்மோடி கூத்துக்களினை ஒத்தது. பொன்னர் சங்கர் கூத்தினை நோக்கும் போது அதன் கதையமைப்பானது அவலச்சுவையுடன் அங்கதச் சுவையும் கொண்டிருப்பதால் அதனை அவலமும் அங்கதமும் நிறைந்த நாடகமாகக் கொள்வது பொருத்தமுடையதாகும். இக்கூத்தில் வேளாளர் என்று ஒரு சமூகத்தின் பரம்பரைக்கதை இலையோடிக்; கிடப்பதை அவதானிக்க முடிகின்றது.

பொன்னர் சங்கர் கூத்து மூன்று கட்டங்களாக பிரித்து ஆடப்படுகின்றது. கதையின் முதற்கட்டமாக பிள்ளைப் பேரின்றி வருந்தும் குன்றுடையின் கவுண்டன், தாமரை நாச்சியார் தம்பதியினருக்கு பிள்ளை வரம் வேண்டி தாமரை நாச்சி மர உச்சியில் மேற்கொள்ளும் பெரும் தவத்தினை சித்தரிக்கின்றது. தாமரை பெரும் தவம் செய்கின்றாள். மாயவர் காரணமறிந்து சிவனிடம் கேட்கவே சிவன் வீரபுத்திரனிடம் பிள்ளைப்பேறு உண்டாவதவன் விசாரித்ததன் பின் பொன்னர், சங்கர், அருக்காணி ஆகிய தங்காள் பிறப்பு இடம்பெறுகின்றது.

இக்கதையினை பின்வரும் பாடலைப்பாடி குத்துவிளக்கேற்றி திரைத்திறப்பு செய்து ஆரம்பித்து வைப்பார்கள்.

'மாரிமுன்ன நம்பினேன்
மாரிஉன்ன நம்பினேன்
தாயே உன்ன நம்பினேன்
சரஸ்வதி தாயே உன்ன நம்பினேன்
தாயே உன்ன நம்பி கரிசலுக்கு வாரேன்...'

என்று தொடங்குகிறது.

'எங்கே பேய் வச்சன் சற்குறியே
எனக்கு பக்கத்துணை வாரீகளோ
என்னாவும் பின்னிராம என்
பக்கத்தில நிக்கனுமே
ஆடுகிற ஆட்டத்துல அலும்பு
வந்து நின்டுறாம
வந்தரிதம் வந்தரிதம் நாங்க வாமையால
சேரநாதா...'

என்று பல்வேறு பாடல்கள் படிக்கப்பட்டு கதை ஆரம்பமாகிறது.

இவ்வாறு பிறப்பு இடம்பெறுகின்றது. சோழர் ஆண்பிள்ளைகள் இருவரையும் கொல்வதற்கு சதி செய்து திடீரென பொன்னரும் சங்கரும் காணாமற் போகின்றார்கள். தங்கா மாத்திரம் பெற்றோருடன் வளர்ந்து வரும் வேளையில், பொன்னரையும் சங்கரையும் வீரப்புறக்காடு எனும் காட்டிலேயே எடுத்து வந்து பொன்னி வளநாட்டில் வளர்ந்து வந்தனர். ஐந்து வருடங்களின் பின் காட்டில் விடப்பட்ட பொன்னரும் சங்கரும் 'வையமலை' என்பவருடன் சேர்ந்துக்; கொண்டு தமது தாய் தந்தையரை தேடிவந்து வாழ்கின்றனர். பின் தமது மாமனாரான மாயவரின் ஏபாட்டிலே நன்னாட்டு பட்டினத்திலுள்ள நல்லையா கவுண்டரின் இரு புதல்விகளான கொழுந்தாய், கொழுந்தம்மா ஆகிய இருவரையும் முறையே பொன்னரும், சங்கரும் மணமுடித்துக் கொள்கின்றனர்.

பின்பு பொன்னரும் சங்கரும் தாம் மணமுடித்த பெண்ணுடன் வாழாது வையமாலையுடன் சேர்ந்துக் கொண்டு மூவரும் காட்டு வேட்டைக்கும் புறப்பட்டு விடுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் சோழ ராஜன் குன்னடையான் கவுண்டரையும் தாமரையாளயும் சூது செய்து கொன்று விடுகின்றான். அவ்வேளையில் தனித்திருக்கும் தங்காளின் புலம்பலைக் கேட்டு பொன்னர், சங்கர், வையமாலை ஆகிய மூவரும் நாடு திரும்பி தம் பெற்றோர்களுக்கு கிரியை செய்ய வருகின்றனர். மாமனான மாயவர் சந்தனக் கட்டைகள், குங்குமக்கட்டைகள் அடுக்கி மைத்துனருக்கும் தங்கையாருக்கும் கோடி போடுகின்றார். பொன்னர் தலைசிரைக்கு கொல்லி வைக்க சங்கர் கைசிரைக்கு கொள்ளி வைக்கிறான்.

தங்காளின் தனிமையை போக்க பொன்னர் செம்பகுல ஆசாரியிடம் சொல்லி பொற்கிளி ஒன்றை கொடுக்கின்றான். அது பேசாமலும் பாலும் பழமும் உண்ணாமல் இருக்கவே உடைத்து எறிகின்றான். இதனால் சங்கர் கிளி வேண்டுமா என கேட்க அவள் தனக்கு படித்த கிளி 60அடி கம்பத்தின் உச்சியில் இருப்பதாகவும் அதைப் பிடித்து தரவும் கூறுகின்றாள். சங்கரும் வையமாலை மாயவரும் சென்று கஸ்டபட்டு கிளி படித்து கொடுக்கின்றனர். இத்துடன் இரண்டாம் பாகம் முடிகின்றது.

மூன்றாவது பாகத்தில் படுகளமாரும் பொன்னர் சங்கர் பங்காளிகள் இவர்களை பலி வாங்க காளியின் உதவியுடன் சூது செய்கின்றனர். பின்பு சோழராஜன் சூழ்ச்சியுடன் மாயவன் என்பவனுடன் சூதாட வைக்கின்றான். சங்கர் அச்சூதாட்டத்தில் தோல்வியுறவே அவனை விலங்கிடுகின்றான். பின்பு சங்கரை ஏமாற்றிய சோழராஜன் பொன்னரையும் பலிவாங்க எண்ணி செம்பகுல ஆசாரியைப் பயன் படுத்துகின்றான்.

பொன்னரிடம் சென்று ஆசாரியார் அரசரின் பொன்மரக்காய் ஒன்றினை வைத்திருக்க கொடுத்துவிட்டு தான் கொடுத்தது தங்க மரக்காய் என்று கூறி அதனை கேட்கின்றான். இதனை திருப்பி கொடுக்க முடியாத பொன்னர் செம்பகுல ஆசாரியை கொலை செய்து விடுகின்றான். அதே வேளை தானும் இறந்து விடுகின்றான்.

பொன்னரின் மரணத்தையறிந்த சங்கரின் கைகளில் கட்டப்பட்டிருந்;த விலங்கு தானாகவே தெரித்து விழுகின்றது. பின்பு சங்கர் பொன்னர் இருந்த இடத்திற்கு வரும் போது மறைவில் இருப்பவரை சங்கர் போருக்கு அழைக்க அப்போது சங்கர் பொன்னர் போன்றோரது பிறவிக்காலமான ஆறு வருடங்கள் முடிந்து விட்டதாக மாயவரின் குரல் கேட்கின்றது. அதையடுத்து சங்கரும் இறக்கின்றார்.

தமையன்மார் இறந்ததை அறிந்த தங்காள் அவ்விடத்திற்கு சென்று பார்க்க பொன்னர், சங்கர் மனைவிகள் தம்மை தீயிட்டுக் கொள்கின்றனர். அப்போது தங்காள் கண்ணீர் மல்க அழுவதை இவ்வாறு பாடல் மூலம் கூறுகின்றார்கள்.

'செத்து நல்ல மடியிராராம்
இன்னக்கி மாண்டு நல்ல மடியிராரோ
செத்து நல்ல மடியிராராம்
அங்கே உக்கிறியே பரனம் மாறி
வெசத்தண்ணி தான் அறிஞ்சி
இந்த மாயரோட காலத்தில்
மாண்டு நல்ல மடியிராளே
அங்கே பொன்னர் சங்கர் மாண்டு
நல்ல மடியிரானே...'

இவ்வாறு தங்காள் புலம்புகின்றாள்.

'நான் என்ன செய்வேன் எங்கண்ணன் மாரே
நான் ஏது செய்ய போரேனோ
அண்ணா நீங்க மாண்டு நல்ல மடிந்திட்டிங்க
நீங்க செத்து நல்ல மடிந்திட்டிங்க
அண்ணா தெய்வத்தோட போயிடிங்க...'

இதன் பின்பு தங்காள் தவசி மரத்தில் ஏறி ஈசனை நினைத்து தவம் செய்கின்றாள். தங்காள் தவமிருக்கும் கம்பம் மீது பட்சிகள் பறக்கும் வரை இவளது தவம் தொடரும். பட்சியைக் கண்ட பின்பு இறங்கி வந்து ஆற்றில் மூழ்கி ஈறத்துணியுடன் வந்து இறந்து கிடப்பவர்களுக்கு தண்ணீர் தெளித்து எழுப்பும் காட்சியுடன் இக்கூத்து முடிவடைகின்றது. இவ்வாறு தங்காள் தன் அண்ணன் இருவரையும் உயிரெழுப்பும் போது

'வாருங்கடி எங்க அண்ணம் மாரே
வரிசையாக சென்றிடுவோம்
எங்க அண்ணராலே பாக்கவல்லம்
வாருங்க அந்நிமாரே...'

என பாடுவர். இக்கதை முடிவுறும் போது பின்னவரும் பாடலுடன் முடிவடைகிறது.

'நான் பாடியிடும் பாட்டிலேதான்
பறந்து வந்தேன் நேந்திடாம
ஆடுகிற ஆட்டதில அலுப்பேதும் தங்காநேர்ந்திடாம
எங்க காட்சி நல்ல கொடுத்திடாதே
கடக்கவே தங்காள் நின்டுறாதே
இந்தப்பாரித் தங்கம் முடியமட்டும்
பக்கத்துணை தங்கா நிக்கனுமே
எங்க வீரப்புல காளியம்மா
எனக்கு பக்கத்துணை தாயி நிக்கனுமே
எங்க மந்திரத்த கண்டவரு எங்க மாமுனியே
நீங்க நிக்கனுமே...'

மயைகத்தில் பாமர மக்களால் வாய் மொழியாக வந்து காணப்படும் இக்கூத்தானது சில ஒழுக்க முறைகள் அற்றும் நேர்த்தியான அணிகலன்கள் அன்றியும் மேடை ஏறுகின்றது. இதில் கிறிஸ்தவர்களும், பெண்களும் பங்கேற்கின்றனர். டோல், தபேலா, மிருதங்கம், தப்பு, உடுக்கு என்பன இசைக்கப்படும் இசைக்கருவிகளாகும். ஒருவர் பாட்டு பாட மற்றவர்கள் பின்பாட்டு பாடுகின்றார்கள்.

பொன்னர் சங்கர் கூத்தின் இன்றைய நிலையும் பாதுகாத்து   வளர்த்தெடுக்க வேண்டிய முறையும்
இன்றைய நவீன காலமாகையால் இக்கலைகள் பேணுவாரின்றி மறைந்து வருகின்றன. இக்கலைகளை பேணி பாதுகாத்து வந்தவர்கள் பலர் வறுமையாலும் முதுமையாலும் வேறு பல காரணிகளாலும் இக்கலைகளை வளர்தெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். மலையகத்தின் இளம் தலைமுறையினருக்கும் இவற்றிலெல்லாம் ஈடுபாடு இருப்பதாக தெரியவில்லை. இன்றைய நவீன வாழ்க்கை முறையும் பிற பண்பாட்டு அம்சங்களின் தாக்கமும் இவர்களை தமது பாரம்பரிய கலைகளை பேணிகாக்காது விலகிச் செல்ல வைக்கின்றன.

லயக்காம்பிராக்களை தொலைக்காட்சிகளும் வானொலிகளும் ஆக்கிரமிக்கின்றன. இவை இளந்தலைமுறையினரின் ஆர்வங்களை வேறு திசைகளுக்கு இட்டுச் செல்ல தொடங்கி உள்ளன. 'தப்பு' போன்ற வாத்திய கலைகள் கீழ்மட்ட மக்களுக்கு உரியவை அவற்றை பழகுவது தமக்கு கௌரவ குறைவு என்ற தப்பான எண்ணமும் இளைய தலைமுறையினரிடையே நிலவுகின்றது.

ஒரு சமூகம் அழிந்து விடாமல் நிலைப்பதற்கு அச்சமூகத்தின் கலை கலாசாரம், பண்பாடு ஆகியன பாதுகாக்கப்பட வேண்டும். ஆச்சமூகத்தின் தனித்துவம் பேணப்பட வேண்டும் இல்லையெனில் அச்சமூகம் காலப் போக்கில் தனது அடையாளத்தை இழந்து விடும். தமது மூத்த தலைமுறையினர் தமக்கு அழித்த அரிய செல்வங்களான கலைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்க வேண்டியது தமது தலையாய கடமை என்பதனை மலையகத்தின் இளந்தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மலையக தலைமைகள் அக்கறையுடன் செயற்பட்டு கலைமன்றங்கள் கூத்துக்;களை நடாத்துவதற்கும் இளந்தலைமுறையினருக்கு கொண்டு செல்ல பள்ளிகள், பயிற்சி பட்டறைகள், பாசறைகள் என்பனவற்றை வளர்த்துவிட வேண்டும்.

இக்கலைகள் பாடசாலை மட்டத்திலேயே அறிமுகம் செய்ய ஆவணம் செய்ய வேண்டும். மலையக பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள்  மலையக கல்விமாண்கள் இதுப்பற்றி சிந்திக்க வேண்டும்.

கலாசார அமைச்சராக கௌரவ லக்சுமன் ஜெயதிலக்க இருந்த காலத்தில் மலையக கலை மேம்பாட்டுக்குழு என்ற அமைப்பு ஆரம்பத்தில் அரசமட்டத்தில் இயங்கி மலையகக் கலைஞர்களுக்கு விருதுகளும் பணப்பரிசில்களும் கொடுத்து கௌரவித்தது. இப்படியான நிலைமை மீண்டும் உருவாவதற்கு மலையக அரசியல் சக்திகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கூத்துப்பாடல்களை தொகுத் இருவெட்டுக்களில் பதிவு செய்தல், கூத்துக்களை மேடையேற்றம் செய்தல், ஓளி - ஒலி பதிவு செய்து ஆவணப்படுத்துதல் போன்ற வற்றையும் மேற்கொள்ள வேண்டும். மாகாண மட்டத்திலும் பாரம்பரிய கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டத்தை மத்திய மாகாண, ஊவா மகாண சபைகள் முன்னெடுக்க வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் 'நாடகமும் அரங்கியலும்' பகுதியின் ஊடாக மலையக கூத்துக்களையும் பாட நெறிகளாக உள்வாங்கப்பட வேண்டும். மலையகத்தில் கூத்துக்கள் இடம்பெறும் தோட்டங்களில் உள்ள கலைஞர்களை கௌரவித்தும் கலையை வளர்த்தெடுக்கக்  கூடியதான பொருட்களையும் வழங்க வேண்டும்.  தவிர இவ் இனத்துக்கென அடையாளப்படுத்தக்கூடிய இக் கூத்து கலைகளை வளர்த்தெடுக்க இளைஞர் யுவதிகளை இணைத்த புதியதொரு சமுதாய கட்டமைப்பினை உருவாக்க வேண்டும்.

எனவே மேல் உள்ளவற்றை தொகுத்த நோக்கும் போது மேற்கூறிய காரணங்களுடன்  அவற்றினை செயற்படுத்தக் கூடியதுமான திட்டங்களை நடைமுறைப் படுத்துவோமாயின்; பிற்காலத்தில் இச்சமூகத்தின் அடையாளங்கள் சிதைந்து போகாமல் இவ் இளைய தலைமுறையினருக்கும் எதிர்கால மலையக சமூகத்திற்கும் எமது சமுதாயத்தின் பாரம்பரிய அடையாளங்களை எடுத்து செல்ல ஏதுவாய் இருக்கும்.

நன்றிகள்

தகவல்களை வழங்கியோர்
திரு .எம். கிட்ணசாமி (வீரட்)
திரு.மூக்கையா( வீரட்)

மதுரத்தமிழ் (2007) அரசினர் ஆசிரியர் கலாசாலை, யதன்சைட்,
கொட்டக்கலை.
காமன் கூத்தம் மலையக பாரம்பரியமும், சோதிமலர் ரவிந்திரன்.
ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை.

(இக்கட்டுரை 2007ஆம் ஆண்டு பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் நடாத்தப்பட்ட 'மலையக தமிழ் இலக்கியம்' ஆய்வுக் கையேடு எனும் நூலில் வெளியிடப்பட்டுள்ளது.)
Share this post :

+ comments + 1 comments

11:59 PM

Wonderful story

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates