Headlines News :
முகப்பு » » மலையக சமூக அசைவியக்கமும் பண்பாட்டு நகர்வும்

மலையக சமூக அசைவியக்கமும் பண்பாட்டு நகர்வும்


இலங்கையின் புராதன காலத்திலிருந்தே தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான சமூகப் புலம் பெயர்வுகள் நடந்திருக்கின்றன. இவை வழி வழியாக வந்த நிலமானிய சமூக அமைப்புக்களுடன் ஊடாட்டம் கொண்ட உதிரியான நிகழ்வுகளாக ஆரம்ப காலத்தில் காணப்பட்டன. நிலமானிய அரச பரம்பரையினரின் நலன்களை ஒத்த உற்பத்தி உறவு முறைகளுடன் கட்டமைந்த ஒரு நிகழ்வாய் அமைந்தன. தென்னிந்திய அடையாளங்களோ அல்லது தமக்கென ஒரு அடையாளத்தையோ பேண முடியாத ஒரு புலப்பெயர்வின் தன்மை காணப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் தளத்தில் தமிழகத்திலிருந்து ஏற்பட்ட புலப்பெயர்வு மிக  முக்கிய நிகழ்வாக அமைந்தது.

பிரித்தானிய ஏகாதிபத்திய தேவைகளுக்காக தமிழகத்திலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இங்கு குடியமர்த்தப்பட்ட மக்கள் புதிய பொருளாதார, சமூக, அரசியல் முறைமை ஒன்றினைக் கட்டியெழுப்பினர். அதாவது தமிழகத்திலிருந்து இங்கு வந்த மக்கள் ஒரு சமூகத் தொகுதியாகவும், வர்க்கமாகவும். உற்பத்தி முறையுடன் சம்மந்தப்பட்டவர்களாகவும் வெளிப்பட்டனர். இவர்களில்  தமிழகத்தில் விவசாயிகளாகவும், கைவினைஞர்களாகவும் நிலமானிய சமூக அமைப்பின் கீழ் வாழ்ந்தவர்கள் இங்கு வந்தவுடன் தொழிலாளர் வர்க்கமாக அடையாளம் காணப்பட்டனர். பெரும்பகுதி மக்கள் ஏழைகளாகவும், இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்களாகவும் பெருந்தோட்டப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். பிரித்தானிய எஜமானர்களின் உச்ச சுரண்டலுக்கு உட்பட்ட இவர்கள் ஒரு சமூகத்தின் அடையாளமாகவே திகழ்ந்தனர்.

இவர்கள் தமிழகத்துடன் உறவுகளை தொடர்ச்சியாகப் பேணினாலும், இலங்கையின் பெருந்தோட்ட மக்கள் சமூகமாக இருந்து மலையகத் தமிழர்களாக வருவதற்கு தேவையான வேர்களைக் கொண்டே வளர்ந்து வருவதாக இனங் காணப்பட்டனர். அதாவது தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்த பின்னர் இவர்களின் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததொன்றாக இருந்ததால், இவர்கள் இலங்கையின் விவசாய உற்பத்தி முறையில் இணைந்து தொழிலாளர் வர்க்கமாக வெளிப்பட்டனர். இதனால் இலங்கையில் அப்போது செயற்பட்ட இனவாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாண மேட்டுக்குடி சார்ந்தவர்களின் நிலைப்பாட்டுகு;கு எதிராகவும் தென்பட்டனர். பிரித்தானியரால் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டு துரைமார்களால் கசக்கிப் பிளியப்பட்டு கறுப்புக் கங்காணிமார்களால் ஏமாற்றப்பட்ட போதிலும் கூட இலங்கையுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களுடனேயே இணைந்திருந்தனர்.

நடேசய்யர் தொடங்கிய இலங்கை இந்திய காங்கிரஸ் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்தது. இலங்கையில் இடதுசாரித் தொழிற்சங்கங்களுடன் இணைந்து தம் சமூக அசைவுகளை வெளிப்படுத்தினர். இந்திய ஆளும் வர்க்கத்துடனும் இலங்கையின் ஆளும் வர்க்கத்துடனும் செய்து கொள்ளப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களால் இச் சமூகம் பிரித்தாளப்பட்ட போதிலும் பெரும்பகுதிச் சமூகமாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை விசேட அம்சம் என விளங்கிக் கொள்ள வேண்டும். பிரித்தானியா இலங்கைக்குச் சுதந்திரத்தைக் கையளிக்கும் போது, “அதனை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். நீங்கள் இலங்கைக்குச் சுதந்திரம் தாருங்கள்” எனக் கூறப்பட்டது. இந்தியா பார்த்துக் கொள்ளும் எனக் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே காலகட்டத்தில் ஆபிரிக்கா, பிஜி, மொறிசியஸ், மேற்கிந்தியத் தீவுகள் இன்னும் பல நாடுகளுக்கு இந்தியர்கள் புலம்பெயரும் போது தமது அடையாளத்தை ஒழந்து வருகின்ற அதேவேளை; இலங்கையில் மலையகத் தமிழர்கள் என்ற அடையாளத்துடன் வாழ்வதை அவதானிக்கலாம். 1960களுக்குப் பின்னர் அரசியல் மற்றும் பொருளாதாரவியலிலும் தம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டு இலங்கையின் சமூக மாற்றங்களிலும் ஒரு அங்கமாக திகழ்வதற்கு தம்மை வளர்த்துக் கொண்டமை முக்கிய விடயமாகும்.

மலையகம் என்பது வெறும் புவியியல் பிரதேசமன்று. அது இங்கு வாழுகின்ற மக்களின் சமூக, அரசியல், பொருளாதார இருப்பாகும். அதனால் பெயர் குறிப்பிடாத பெயர்கள் தொடங்கி முல்லோயா கோவிந்தன், சிவனுலட்சுமன், பிந்துனுவாப் போராட்டம் வரை மலையக மக்களின் சமூக அசைவிற்கான அடையாளமாகக் கருதலாம். தவிரவும், தொழிற்சங்கம் அமைப்பதற்கான போராட்டம், வாக்குரிமைப் போராட்டம், உருளுவள்ளிப் போராட்டம், சம்பளப் போராட்டம், மேல்கொத்மலைப் போராட்டம் என்பன மலையக சமூக அசைவியக்கத்திற்கான முன்னகர்வுகள் என கட்டியம் கூறலாம்.

மலையக மக்களின் பண்பாட்டு நகர்வினை அடையாளமாக நோக்க முடியும். பண்பாடுகள் பொதுவாகச் சமூக மாற்றத்திற்கு அடி நாதமானவை, சமூக மாற்றத்திற்கு இணையானவை எனப் பார்க்க முடியும். வர்க்கம், தேசியம், சமத்துவம் என்பனவற்றுடன் துணை புரிபவை. அடி நாதமானவையாகவும், அவ்வாறான மாற்றங்களுக்குத் துணை புரிவனவாகவும் பண்பாட்டம்சங்களைக் காணமுடியும். பொதுவான பண்பாடு எனப்படுவது ஒரு மக்கட் தொகுதியின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், மரபுகள், கலைகள், சமூக உறவுகள் என அடையாளப்படுத்தலாம்.

இலங்கையின் மலையகத் தமிழர்களின் பண்பாட்டம்சங்கள் இறை வழிபாட்டு முறைகளுடன் தொடர்புபட்டவையாகும். அவை  முழுமையாகப் பேணப்படாவிட்டாலும் அவற்றின் அடிப்படையில் இணைந்து செயற்பட்டாலும் மலையக தமிழர் பண்பாட்டிற்குரிய நகர்வினைக் கொண்டிருப்பதை சமூகவியல் ரீதியாக புரிந்து கொள்ள முடியும். தமிழகத்திற்கு ஒத்திசைவாகக் காணப்பட்டாலும் இங்கு விசேட சூழ்நிலைகளுக்கேற்ப புதிய பண்பாட்டம்சங்களையும் உள்வாங்கிக் கொண்ட சமூகமாக இதனைப் பார்க்கலாம். கொலனியத் தாக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட உணவுப் பழக்கவழக்கங்கள், சடலங்களைப் புதைத்தல் போன்றன புதிய நடைமுறைகளாகக் காணப்பட்டன. மேலும் இந்தியாவில் காணப்பட்ட சிறு தெய்வ வழிபாடுகளை விட இங்கு கவ்வாத்துசாமி, கொழுந்துசாமி, ரோதை முனி, கம்பிமுனி போன்ற ஆகம நெறிகளுக்கு உட்படாத கூட்டுவழிபாட்டு முறையினை வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறான வழிபாடுகளுடன் அமைந்த முறைகள் இவர்களுக்கே உரிய ஒழுங்குபடுத்தப்பட்ட பண்பாட்டு நகர்வாகும். திருமண முறைகள் யாழ்ப்பாணத் தமிழர்களின் அம்சங்களைப் பிரதிபலிப்பதையும் காணலாம். தமிழகத்துடன் ஒப்பிடுகையில் சாதிக் கட்டமைப்புகள் இங்கு மிகக் குறைவு. தமிழகத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதிய தீண்டாமை அம்சங்கள் பாரிய அளவில் இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மலையக நாட்டார் பாடல் வகைகளை நோக்கும் போது நாட்டார் பாடல்களில் தொடங்கி கூத்துக்கள் வரை மலையத் தமிழருக்குரிய பண்பாட்டு நகர்வினைப் புரிந்து கொள்ள முடியும். மலையகச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், ஆய்வுகள் என்பன மலையகத் தமிழர்களின் வாழ்வியல் போராட்டங்களுடன் சம்மந்தப்பட்டவையாகவே பெரும்பாலும் படைக்கப்பட்டுள்ளன என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. இவ்வாறான பண்பாட்டுச் சமூக அசைவுகள் பண்பாட்டு நகர்வுகளில் முற்போக்கானவை என கருதி விட முடியாது. முதலாளித்துவ நிலமானிய சமூக நடைமுறைகளுடன் இன்னும் பின்தங்கிய சமூகமாக இச் சமூகம் இருந்து வருகின்றது. மத்திய வர்க்கக் குணாம்சத்தின் பாதிப்பும் இருந்து வருவதையும் அவதானிக்கவும் முடியும்.

“பாட்டாளி வர்க்கம் அரசியல் வடிவத்தில் வர்க்க ரீதியாக கூட்டமைந்து போராடுவதில் ஒரு அம்சமாக பண்பாட்டம்சங்களையும் நகர்வுகளையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்” என்பது அந்தோனியே கிராம்சியின் கருத்தாக உள்ளது. அதனைக் கவனத்திற் கொண்டு மலையக, சமூக பண்பாட்டுத் தளங்களை கட்டி வளர்க்க வேண்டும். சமூக அசைவியலின் உள் பரிணாமத்தை புரிந்து கொண்டும், பிற்போக்கான அம்சங்களை களைந்தும் புதிய வார்ப்புக்கான அடித்தளத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

சமூக மாற்றத்திற்கு அடி நாதமானவை, இணையானவை எனத் தெளிவாக இனங்கண்டு வளர்க்கவும், புதியவற்றைச் சரியான தளத்தில் இணைத்து வளர்க்க வேண்டுமானால் அது ஒரு இயக்கமாக மலையகத்தில் செயல்பட வேண்டும். புதிதாக வான்வழி உள்ளுர் தொலைக்காட்சி நிகழ்வுகள்; அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள்; பிற்போக்குத் தனமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் மத நிறுவனங்கள்; புதிய பாதிப்புக்களை மலையகத்தில் ஏற்படுத்தி வருகின்றன. அதற்கு மாறான புதிய எழுச்சியான பண்பாட்டுச் சிந்தனைகளை முன்னெடுப்பது அவசிய தேவை ஆகும்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates