Headlines News :
முகப்பு » » காமன் கூத்தினை நவீனயப்படுத்தலாமா?

காமன் கூத்தினை நவீனயப்படுத்தலாமா?


நமது மலையகம் இணையத்தளத்தில் வெளியான “மலையக கூத்துக்களின் மீட்டுருவாக்கத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சும் கலைஞர் ஹலன்” எனும் கட்டுரையை வாசித்தப்பின்னர் “மலையகக் கூத்துக்களை நவீன படுத்தலாமா?”எனும் தலைப்பில் நான் எழுதிய ஒரு சிறிய  - ஆரோக்கியமான விமர்சன குறிப்பை இங்கு வெளியிடலாம் என நினைக்கின்றேன்.

மலையக சமூகத்தின் பாரம்பரிய கூத்துக்கள் அண்மைக்காலங்களில் சமூக நிலை நின்று நோக்குங்கால்இ அதன் பேணுகை சறுக்கி கொண்டே செல்கின்றது. அரங்க நிலை நின்று நோக்குங்கால் அதன் முன்னரெப்போதையும் விட அதிகம் உணரப்பட்டு வருகின்றது. காரணம் அக்கூத்துகளின் சமூக நியதியும்; அதன் சடங்கு, நம்பிக்கை, கலைத்துவம் சார்ந்த கலவைத்தன்மையுமாகும்.

இக்கட்டுரையானது மேற்சொன்ன நிலை நின்று மலையக சமூகத்தின் காமன்கூத்து பற்றி ஆராய முற்படுகின்றது. குறிப்பாக காமன்கூத்து பற்றிய நேரடி அனுபவங்கள் அவதானிப்புக்கள் கலந்துரையாடல்கள் சிறு ஆய்வு முயற்சிகள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்படுகின்றது.

காமன் கூத்தினை நவீனமயப்படுத்தலாமா? எனும் பெரும்  கேள்வியானது  பலவேறு சிறு  கேள்விகளுக்கு பதில்களை  ஆராய்வதனூடாக விடை காண  முற்படுகிறது.  காமன் கூத்து என்பது மலையக சமூகத்தில் தனியே  சடங்கு சாரந்;தோ நம்பிக்கை  சார்ந்தோ  அல்லது கலை  சார்ந்தோ அமையவில்லை மாறாக இவை மூன்றையும் தன்னுள்ளே  கொண்டமைந்த ஒரு கூத்தாகவே காணப்படுகி;ன்றது. எடுத்துக்காட்டாக காமன்கூத்தின் நம்பிக்கை சார்ந்த பகுதியை நோக்கும் போது மக்கள் குழந்தை பாக்கியம், நோய் தீர்த்தல், நீதிபெறல் போன்ற இன்னோரன்ன விடயங்களுக்கு நேர்த்தி வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறே அதன் கலை சார்ந்த பகுதியும் சடங்கு சார்ந்த பகுதியும் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றித்து பிரிக்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. எனவே தான் இக்கூத்தினுள் கை வைப்பது கேள்விகுறியாகின்றது.

கூத்தினை நடாத்துதல் தொடர்பான முதலாவது கலந்துரையாடல் தொடக்கம் கூத்து நடந்து முடிந்ந பின்னர் சமூகத்தின் அது தொடர்பான சலசலப்பு வரையான (சுமார் மூன்று மாதகாலமாக) சகல கட்டங்களிளும் எற்படுகின்ற முரண்பாடுகள்;, மோதல்கள், அவற்றை கையாளும் விதம், தாமாகவே அவற்றை தீர்த்துக்கொள்ளும் பாங்கு என்பன ஆழ்;து நோக்குமிடத்து பிரமிக்கவைகக்கின்றது.

கூத்தினை நவீனப்படுத்துதல் எனும் போது தான் மேற்சொன்ன விடயங்களில் தார்மீக பிரதிபலிப்புகள் புரியத்தொடங்கும் நவீன மயப்படுத்தும் போது கூத்தினை கையாள்பவர்கள், பங்கேற்பவர்கள் ஆடல்;;இ  பாடல்இ இசை, உடை, ஒப்பனை, பாத்திர வார்ப்பு வெளிப்பாட்டு தன்மை, கூத்து நடைமுறை போன்ற பல விடயங்களில் மாறுதல்கள் ஏற்படுவதனை அவதானிக்கலாம். குறிப்பாக கூத்தினை நவீனப்படுத்தும் போது கூத்தின் நம்பிக்கை சார்ந்த பெரும்பகுதியும் சமூகஉளவியியல், சடங்கு சம்பிரதாயங்கள் கலைத்துவத்தின் இயல்பு தன்மை முதலானவற்றில் ஏற்படும் சிதைவுகளையே நாம் இங்கு அடிக்கோடிட்டு ஆராய வேண்டியவையாகின்றன.

மலையகத்தில் காமன்கூத்தானது ஒவ்வொரு தோட்டங்களிலும் சாதாரண பாமர தொழிலாளர்களாலேயே முன்னெடுக்கப்பட்டு, பயிற்றப்பட்டு, ஆடப்பட்டு வருகின்றது. நவீனப்படுத்தும்போது கூத்தானது படித்த மத்தியதர வர்க்கத்தின் கையகப்படுகின்றது. இங்கு கூத்தானது வெறுமனே பொழுதுபோக்கு அம்சமாகவும் காட்சிப்பொருளாகவும் மாற்றப்பட்டு இருப்பிடத்திலிருந்து பெயர்த்தெடுக்கப்படுகின்றது. இன்னும் சொன்னால் ஒரு வியாபாரி தனது பொருட்களை நுகர்வோரின் வீடு தேடிச்சென்று விற்கும் பரிமாணத்தை பெறுகின்றது. இதன்போது கூத்து மீதான நம்பிக்கை, சடங்கு, சமூகத்தில் அதன் பிரதிபலிப்பு, தொழிலாளர்களின் போராட்ட குணாம்சம் என்பன புறந்தள்ளப்படுகின்றன. இந்நிலைமை எதிர்கால நுகர்வுச் சமுதாயத்தில் காமன்கூத்துக்கு ஒரு சந்தை வாய்ப்பை தேடச்செய்து விடுவது தவிர்க்கமுடியாததாகிவிடும்.

கூத்திற்காக தம்மையும் தம் உடல் பொருள் ஆவியையும் தியாகம் செய்து கட்டிக்காத்த ஒரு தரப்பு ஓரமாக கை கட்டி வேடிக்கை பார்க்க, இதுவரை கூத்தினை புறநிலை நின்று நோக்கிய ஒரு தரப்பு கூத்தினை இருப்பிடத்திலிருந்து பெயர்த்தெடுக்க அதன் இயல்புத்தன்மையில் செல்வந்த மெழுகு பு+சி அடையாளப்படுத்துவது என்பது படுபயங்கரமானதாகும்.

நவீன படுத்தல் எனும் பெயரில் கூத்தின் பாத்திரவார்ப்பு, பாத்திர வரையறை என்பவற்றில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றங்களும் கூர்ந்து அவதானிக்கதக்கன. மலையக கூத்து பாரம்பரியத்தின் படி காமன்கூத்திற்காக பாத்திரங்களும் அவற்றுக்கான ஆடலும்;;;; பாடலும்; இசையும் உடை ஒப்பனையும் அவை கூறும் செய்தியும் மிகவும் தெளிவானதாக அமையப்பெற்றிருக்கின்றது. அதனை நவீனப்படுத்தும் போது பாத்திரங்களை குறைத்தல், புதிய பாத்திரங்களை இணைத்தல், பெண்பாத்திரங்களுக்கு பெண்களை ஆடச்செய்தல் என்பன நிகழ்கின்றன. இதன் அரத்தமும் நோக்கமும் என்ன? புதிதாக இணைக்கப்படும் பாத்திரங்களுக்கான ஆடல், பாடல், இசை, உடை, ஒப்பனை, அது கூறும் செய்தி என்ன? அது எங்கிருந்து யாரால் உருவாக்கப்படுகின்றது? அதன் நோக்கம் என்ன? நவீனப்படுத்துனர்கள் அதற்கு கூறும் விளக்கம் யாது?

மரபுரீதியான பாத்திரங்களின் உடை, ஒப்பனைகளிலும் புதிய நுட்;பங்கள் கைகொள்ளப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அரிதாரத்திற்கு பதிலாக நவீன இரசாயன அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றது. உடைகளின் அமைப்பும் நிறமும் மாற்றப்படுகின்றன. அணிவிக்கப்படும் ஆபரணங்களிலும் கிரீடத்திலும் புஜத்திலும் புதுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. அவதானிக்குமிடத்து இவற்றில் செல்வந்த தன்மையே மிகுந்திருக்கின்றன. இதனால் பாரம்பரியமாக கூத்திலிருந்து வந்த பாத்திர பொருத்தப்பபாடும் பயபக்தியும் நம்பிக்கையும் நீக்கப்பெற்று நவீன மேடை நாடக கதாநாயகர்களைப்போல பாத்திரகங்கள் ஆக்கப்பெருகின்றன.

கூத்தினை பயிற்றுவிப்பதிலும் நடத்துவதிலும் நம்பிக்கையை வளர்த்தெடுப்பதிலும் அதற்காக சமூகத்தை பக்குவப்படுத்துவதிலும் அண்ணாவியாரின் (மாஸ்டர்) பங்கு காத்திரமானதாகும். முழு கூத்திற்கும் அண்ணாவியாரும் பிற்பாட்டுக்காரர்களும் பாடுவது மலையத்தில் காமன்கூத்தின் வழக்காகும். நவீனப்படுத்தலின் போது அவ்வவ் பாத்திரங்களே தமக்குரிய பாடல்களை பாடிக்கொள்கின்றன. பிற்பாட்டுக்காரர்கள் சினிமா பாணிக்கு ஆக்கப்படுகின்றனர். அண்ணாவியார் “குறை நிரப்புனர்” ஆக மாற்றப்படுகின்றார். கூத்திலே எதிர்பாராதவிதமாக ஏற்படும் இடையு+றுகள், அசம்பாவிதங்கள், மருள் கட்டுப்பாடு முதலானவற்றை கையாளும் அண்ணாவியாரின் திறன் இங்கு மறுதளிக்கப்படுகின்றது. இது போன்ற இன்னும் பல நுணுக்கமான பாதக விளைவுகளும் இதனுள் உண்டு.

ஒவ்வொரு தோட்டத்திலும் 200சதுர மீற்றருக்கு குறையாத இடப்பரப்பிலே கூத்து ஆடப்படுகின்றது. கூத்து களமான பொட்டல் வெளிகள் அல்லது வீதியோரங்கள் (வட்டக்களரி) நவீன மேடையாக (மூடப்பட்ட களரியாக) மாற்றப்படுகின்றபோது பார்வையாளர்கள் ஒரு பக்கம் இருந்து பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இங்கு அவதானிக்க வேண்டிய விடயம் யாது? காமன் நடல், ஆற்றங்கரையில் காப்பு கட்டுதல், வீதி வலம் வருதல், கூத்தின் பல்பக்க வெளிப்பாடு, சமூகத்தின் பங்களிப்பு, பார்வையாளர்கள் மற்றும் பங்குபற்றுனர்களின் உளவியல் மனப்பாங்குகள் போன்ற அடிப்படையான அம்சங்கள் சிதைக்கப்படுகின்றன. விடியும் வரை விழித்திருந்து, காத்திருந்து மதனை இழந்த இரதியின் துயரத்தில் பங்கெடுக்கம் சமூகத்தின் மனநிலையானது குறுந்திரைப்படம் பார்த்து இரசித்த கூட்டம் கை தட்டி விசிலடித்து ஆரவாரிக்கும் மனநிலையாக மாற்றப்படுகின்றது.

வாசகர்களுக்கு இக்கட்டுரையாளன் புதுமைகளையும் மாறுதல்களையும் விரும்பாத ஒரு பழமை வாதியாகவோ அல்லது நிலையியல் வாதியாகவோ தோன்றலாம். அதற்காக கூத்தின் அஸ்திவாரத்தை தகர்த்து அதன் சிதை மேல் ஒரு காமன் கூத்து எனும் பெயரிலான மேடை நாடகத்தை உருவாக்கி ஒப்பிட்டு அழகு பார்க்க முடியாது. காரணம் காமன்கூத்து ஏனைய கூத்துக்களை போல வெறும் முருகியல் உணர்ச்சிக்காக மட்டும் பயன்படும் அழகியல் கலையல்ல.

காமன் கூத்தினை தகவமைத்து நவீன காலத்திற்கு ஏற்புடையதாக்குதல், நிறுவனமயப்படுத்துதல் என்பவை தொடர்பாக சமூகத்தின் சகல மட்டங்களிலும் கருத்தாடல்களும் ஆய்வுகளும் பரீட்சயங்களும் மேற்கொள்ளப் பட்டப் பின்னர் அத்தகைய முயற்சிகளில் கால்பதிப்பது பயன்மிக்கதாகும். படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

(இவ் விமர்சனக் குறிப்பானது 04.07.2013 அன்று கிழக்குப் பல்கலைகழகத்தின் நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களால் மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய முன்றலில் வெளியீடு செய்யப்பட்ட “கூத்தியல்” எனும் நூலில் வெளியாகியுள்ளது)

தொகுப்புதவி - பொகவந்தலாவை - ப.விஜயகாந்தன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates