Headlines News :
முகப்பு » , , , » ஒப்பாரிக் கோச்சி - மு. சிவலிங்கம்

ஒப்பாரிக் கோச்சி - மு. சிவலிங்கம்


இன்னும் அந்த உச்சி மலைக் கற்பாறையின் மேல் உட்கார்ந்துக் கொண்டு, பள்ளத்தாக்கை… பணிந்த நிலப்பரப்பை… நோக்கிக் கண் கொட்டாமல் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தான் சுக்குரு என்ற சுப்பிரமணி. உலகத்தின் பாதிப்பிரதேசத்தைத் தன் கண்கள் பார்த்து விட்டப் பரவசத்தில் ஆழ்ந்திருந்தான்… அதி உயரத்திலிருந்து காணும் காட்சியைப் பறவைப் பார்வை என்பார்கள்.

இனி ஒரு காலத்தில்… இந்த மலையில்… இப்படி வந்து உட்கார்ந்து… இவ்வளவு அழகு கொட்டும் பூமியைப் பார்க்க முடியுமா…? அவன் கண்கள் தூரத்துப் பார்வையிலிருந்து அருகில் இருக்கும் மலைத்தொடர்கள் வரை நோட்டமிடுகின்றன… குளிர் வாடையாய், தென்றலாய் அவனைத் தழுவுகின்ற பாசக்காற்று இன்னும் எத்தனை மாதங்களுக்கு உறவாடும்? அவனுக்கு இலங்கை மண்ணை விட்டு இந்தியாவுக்குப் போகவே விருப்பமில்லை.

பெற்றோர்கள் செய்த முட்டாள்தனத்தால் பழியை இவன் அனுபவிப்பதா…? வழிகாட்டத் தவறிய தலைமைகளினால் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இன்னும் தேடிக் கொண்டிருப்பவர்களில் அவனும் ஒரு திசை தெரியாதவன்.

சுக்குரு கற்பாறையிலிருந்து எழும்பி… கல்லிடுக்கில் பளிங்கு போல் வடியும் காட்டு நீரில் முகத்தைக் கழுவிவிட்டு… இரண்டு வாய் தண்ணீரை அள்ளிக் குடித்து… ஏப்பம் விட்டான். காட்டுத் தண்ணீரைக் குடித்தால், வயிறு நிறைந்து பசியாறியது போல் தெம்பு வரும். சும்மாடு துணியில் முகத்தைத் துடைத்துக் கொண்டு… விறகுக் கட்டைச் சுமப்பதற்குத் தொப்பியை மாட்டினான். இனிமே நமக்கு என்னாத்துக்கு இவ்வளவு வெறகு…?

சுக்குரு விறகுக் கட்டைத் தூக்கிக் கொண்டு பள்ளத்தை நோக்கி நடந்தான். கவ்வாத்து மலையில் அவன்தான் கடைசி ஆள். சக தொழிலாளர்களெல்லாம், ஒவ்வொரு விறகுக் கட்டுகளோடு பள்ளத்தைக் கடந்து… மலை அடிவாரத்துக்குச் சென்று கருத்தை ரோட்டில் இறங்கி நடப்பது தெரிகிறது.

களைப்போடு விறகுக் கட்டைச் சுமந்து வந்து, அடுத்த வீட்டுச் செல்லம்மா வீட்டு வாசலில் போட்டான். செல்லம்மாக்கா…! இனிமே எனக்கு என்னாத்துக்கு வெறகு…? இருக்கிற வெறகு போதும். அது முடியிறதுக்குள்ள, நாங்க இந்தியாவுக்குப் பயணப் பட்டுருவோம்…! என்றான்.

அப்புடியெல்லாம் சொல்லாத சாமி! நீ மகா தைரியசாலி! சொந்த ஊர்ல போயி புள்ளக் குட்டிகளோட மவராசனா இருப்ப…! ஈந்தியா நம்ம ஊருதானே சாமி…? திரும்பவும் சொந்த ஊருக்குப் போறதப் பத்தி சந்தோசப்பட்டுக்கணும் ராசா…! இந்தா தேத்தண்ணி..! ஆட்டுப்பாலு தேத்தண்ணி..! என்று செல்லம்மா அத்தை சுப்பிரமணிக்கு தேத்தண்ணியைக் கொடுத்து ஆறுதல் கூறினாள்.

அவளுக்கு இந்த வருசத்துக்கே போதுமான தேயிலை விறகைச் சுப்பிரமணி கொண்டு வந்து போட்டிருந்தான். எந்தக் காலமும் அடுத்த வீட்டுச் செல்லம்மா… சுப்பிரமணியின் பிள்ளைகளிடம் உயிராய் இருப்பாள். குழந்தையிலிருந்து பெரிய குமரிகளாய் வளரும் வரை அவளும் ஒரு தாயாக இருந்தாள்.

சுப்பிரமணியின் பிள்ளைகள் அம்மாயி… அம்மாயி… என்று ஆயிரந் தடவை கூப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் என்ன கறிக் குழம்பு வைத்தாலும் கிண்ணம் நிறைய ஊற்றிக் கொண்டு அடுத்த வீட்டுக் கதவைத் தட்டிக் கொடுப்பாள்.
சுக்குருவின் பிள்ளைகளும் கறி மாற்றம் செய்து கொள்வார்கள். நாட்டுக் கோழி இறைச்சிக் கறி வைத்தால், எலும்பில்லாத இறைச்சிகளைக் கிண்ணம் நிறையப் போட்டு, அம்மாயிக்குக் கொண்டு போய்க் கொடுப்பார்கள். செல்லம்மா குடும்பம் கொஞ்சம் விபரம் தெரிந்த குடும்பம். புருசன்காரன் மருதை படிப்பறிவு உள்ளவன்.

அவன் நேரங் காலத்தோடே இலங்கைக்கே பிரஜா உரிமைக்கு விண்ணப்பம் செய்து விட்டவன். நாடு பிரிட்டிஷ்காரனிடமிருந்து, சுதந்திரம் அடைந்ததும், சிங்கள அரசியல்வாதிகளின் ஆட்சி அமைந்ததும், இந்தியத் தொழிலாளர்களின் குடியுரிமையைப் பறித்ததுதான் முதல் அரசியல் நடவடிக்கையாக இருந்தது.

இந்தியத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்த அரசியல்வாதிகள், மீண்டும் இலங்கைப் பிரஜையாவதற்கு விருப்பமானவர்கள் குறிப்பிட்டக் காலத்துக்குள் விண்ணப்பம் செய்யலாம் என்று சட்டமும் போட்டார்கள். தொழிலாளரின் தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள், ஒழுங்காக… தெளிவாக… வழி காட்டவில்லை. விண்ணப்பம் செய்ய வேண்டாம்… போராடுவோம்… என்றார்கள். நடு வழியில் கையை விரித்து விட்டார்கள்! கடைசி நேரத்தில் அப்ளிகேசன் போடுங்கோ என்று அபயக்குரல் எழுப்பினார்கள்.

இலங்கையில் சிறிமா ஆட்சி வந்தது. இந்தியாவில் லால்பகதூர் சாஸ்திரி ஆட்சி வந்தது. இரண்டு நாட்டுப் பிரதம மந்திரிகளும் இந்தியத் தமிழர்களைப் பங்கு வைக்கும் ஒரு பண்டமாற்று ஒப்பந்தத்தைப் போல் ஒப்பந்தம் எழுதி, மக்களைப் பங்கு வைத்துக் கொண்டனர். வழி தெரியாமலும்… அனுபவித்தத் துயரத்தாலும்… தாய், தகப்பன் பொறந்த தாய் நாட்டுக்கே போயிச் சேருவோம் என்ற ஆக்ரோஷத்தால், இந்தியக் குடியுரிமைக்கு மனுப் போட்டவர்களில் சுப்பிரமணியத்தின் தகப்பன் சிவசாமியும் ஓர் ஆளாகும். இந்தியாவுக்கு விண்ணப்பம் செய்து விட்டப் பிறகுதான் மடையன் மாதிரி தவறு செஞ்சிப்புட்டேன் ராக்கம்மா! என்று மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு பிள்ளைகளுக்குத் தெரியாமல் அழுதார்.

சுப்பிரமணி இந்தியாவுக்குப் போவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். முன்பின் அறியாத ஓர் ஊருக்குத் தாய்நாடு என்ற பெயரை மட்டுமே கேள்விப்பட்டு… அங்கே… மூன்று குமரிப் பிள்ளைகளையும், ஒரு மகனையும், லயக்காம்பிரா, பிரட்டுக்களம், அம்மன் கோயில், தேயிலைக்காடு என்ற இந்த நான்கு இடங்களைத் தவிர வேறு எதுவுமே தெரியாத மனைவியையும், வயசாகி நடை தளர்ந்து போன பெற்றோர்களையும் இழுத்துக் கொண்டு, இன்னொரு நாட்டில் போய் எப்படிப் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பது? அவனுக்கு முன் போய்ச் சேர்ந்தவர்களெல்லாம் இங்கே வராதே..!
அந்த நாட்டிலேயே செத்துப் போனாலும் நல்லது..! என்று அழுதழுது எழுதிய கடிதத்தின் மேல் கொட்டிய கண்ணீரை, மைக் கசிவின் மூலம் சுக்குருவினால் அறிய முடிந்தது. அவன் தனது திக்குத் தெரியாத பயணத்தை நினைத்து மனம் கலங்கினான். எதற்கும் அஞ்சாத நெஞ்சம் படைத்தவனின் முறுக்கேறிய அவனது உடல் தளர்ந்து, மெலிந்து போய்க் கொண்டிருந்தது.

தாயகம் திரும்புவோர் (Repatriates) என்ற ஒரு புதிய அரசியல் நாமத்தோடு இந்தியா சென்றவர்களின் ஓலங்கள் இந்து மகா சமுத்திரத்தின் பேரலைகளின் இரைச்சலை விட ஓங்காரமாக ஒலித்துக் கொண்டிருந்தன. பலரது வாய்ப் பேச்சுத்தான் பரபரப்பைத் தோட்டங்களில் உண்டு பண்ணின. ஏண்டா ஈந்தியாவுக்கு எழுதினோம்…? என்ற ஏக்கப் பெருமூச்சு… நூறு விதமான மக்களின் நெஞ்சறைகளிலிருந்து வெளிக் கிளம்பிக் கொண்டிருந்தன.

சுப்பிரமணியின் தகப்பனாரின் சொந்தக் கிராமம்… திருச்சி மாவட்டம், வாலிகண்டபுரம், முருக்கன்குடி என்று நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான். அவனது தகப்பன் சிவசாமி நான் செத்துப் போயிட்டா, சிலோன்ல யாரும் இருக்காதீங்க! என் சித்தப்பன் மவன், பெரியப்பன் மவன் எல்லோரும் நஞ்சை, புஞ்சையோட, காணி, பூமியோட செறப்பா வாழுறாங்க. அட்ரஸ்ஸ எழுதிக்கோ… பத்திரமா ரேங்குப் பெட்டியில வச்சுக்கோ! என்று அவர் அன்று கூறிய வார்த்தைகளை எண்ணிப் பார்த்தான்.

நாலு, அஞ்சி பரம்பரைக்குப் பொறகு இனிமே… அந்த நாட்டுக்குப் போயி, சித்தப்பன், பெரியப்பன் மகன்மார்களக் கண்டு, கதைச்சி என்னா புரயோசனம்? சுப்பிரமணியின் தலை சுற்றியது. இந்தியப் பயணத்தின் மேல் வைத்த நம்பிக்கை அவனுக்குக் குறையத் தொடங்கியது.

சிறிமா, சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் 1964-லிலிருந்து, இந்தியா திரும்பிய உறவினர்கள், நண்பர்கள் அடிக்கடி கண்ணீரில் நனைந்த கடிதங்களையே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். என் இரு கண்களிலும் கிடைக்கப்பெற்ற சுக்குருவுக்கு, தங்கவேலு எழுதும் கடுதாசி.. நாங்கள் இப்பவும் கடவுள் கிருபையால் ஷேமமாக இருக்கோம். தம்பி, இந்தியாவுக்கு வர்ற ஆசைய வுட்டுப்புடு…! இங்க இருக்கிறவனெல்லாம் மனுசங்களே கெடையாது. திருட்டு, ஏமாத்து, பொய்தான் வாழ்க்க. வாக்குவாதம் செஞ்சா.. வெட்டு, கொத்து, கொல.. எல்லோருமே கொடூரமானவங்க.

இலங்கையிலே சிங்களச் சனங்க எவ்வளவு தங்கமானவங்க… பண்பு, பாசம் உள்ளவங்கன்னு இந்தியா வந்த பெறகுதான் புரியுது. கையில் மடியில் கொண்டு வந்த பணமெல்லாம் மண்டவம் கேம்ப்போட முடிஞ்சி போச்சி. இப்போ இந்தியா கவருமெண்டு குடுக்கிற ரேசன் சாமான்களை வாங்கித்தான் வயிறு கழுவுறோம். அது தர்மமோ, பிச்சையோ தெரியல்ல.. யாவாரக்கடன், விவசாயக்கடன் எல்லாம் வாங்கினாலும் எங்களால ஒன்னும் செய்ய முடியாது. பெருமாளு, கோவிந்தசாமி, தங்கராசு மூணு பேரும் வடநாட்டுப்பக்கம் போயி காடு வெட்டி, கொஞ்ச காலம் இருந்து சொகமில்லாம செத்துப் போனாங்கன்னு.. பாப்பாத்தி காயிதம் போட்டிருந்திச்சு. அவங்கெல்லாம் என்னா கெதி என்று தெரியாது. நாங்க இன்னும் மண்டவம் கேம்புலதான் இருக்கோம்.

ப்பவும் இலங்கை நெனப்புத்தான். நாங்க தவறு செஞ்சிட்டோம். கேப்பார் பேச்சுக் கேட்டு, இந்தியாவுக்கு எழுதியது விதியாய்ப் போச்சி. கடவுள் உங்களையெல்லாம் நல்லா வச்சிருப்பார். நீங்கள் இங்கே வரும் யோசனையை விட்டு விடுங்கள். வணக்கம்… அன்புள்ள தங்கவேல் குடும்பத்தினர். சுப்பிரமணி கடிதத்தை வாசித்து, மனைவி, பிள்ளைகளுக்குத் தெரியாமல் பெட்டி அட்டாலுக்கடியில் ஒளித்து வைத்து விட்டான். அவன் மனம் இன்னும் தளர்ந்தது.

சிறிமா, சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் தாயகம் திரும்புவோர் என்ற பெயர் இலங்கையிலும், அக்கரையில் சிலோன் அகதி என்றும் சீர் கெட்ட புனர் வாழ்வுத் திட்டத்தில் தொழிலை அமைத்துக்கொள்ள முடியாமல் இடம் மாறியவர்கள்… விட்டோடிகள் என்றும் பட்டப் பெயர் பெற்றார்கள். விவசாயக் கடன், வியாபாரக் கடன் வாங்கித் தருவதாக முன் நின்றவர்கள், பணத்தை வாங்கிக் கொண்டு மறைந்தார்கள். ஒவ்வொரு அசைவிலும் ஏமாற்று, களவு, கொள்ளை, கொடூரம், நிர்க்கதி என்ற நிலைமைகளை சுப்பிரமணி அறிந்தான்.
அவன் தைரியத்தை இழக்கவில்லை. பாக்கியம்..! நாளைக்கு வேலைக்குப் போகாதே..! வீட்டுல இரு… புள்ளைக ஸ்கூலுக்குப் போனதும் நீயும் நானும் ஒக்காந்து இந்தியா பயணம் பத்திப் பேசணும்…! என்றான்.

ஏற்கனவே இந்தியாவுக்குக் கொண்டு போகச் சாமான் பெட்டி ஒன்று அடித்து வைத்து மேல் விலாசமும் எழுதி வைத்திருந்தான். சிவசாமி சுப்பிரமணியம்- மண்டபம் கேம்பு.

பாக்கியம், சுப்பிரமணி சொல்வதற்கெல்லாம் மறுத்துப் பேசாமல், சம்மதம் தெரிவித்துக் கொண்டிருந்தாள். அந்தப் பேதைக்கு உலகம், வாழ்க்கை, உயிர், மரணம் எல்லாமே அவன்தான். பெரிய பாப்பாவுக்கும், சின்ன உங்காளுக்கும், நண்டுக்குட்டிக்கும் மூணு பவுன்ல செயினு… ரெண்டு பேருக்கும் தோடு… தம்பிப் பயலுக்குக் கால் பவுன்ல மோதரம்… ஒனக்கும் ஒரு செயினு… எனக்கும் ஒரு மோதரம்… அப்புறம் உடுப்பு, துணி மணி… கொஞ்சம் சமையல் பாத்திரம் புதுசா வாங்கிக்கணும்… எல்லாம் கெடைக்கப்போற கடைசிச் சீட்டுப் பணத்தில வாங்கிக்கலாம்… சீட்டு எப்பக் கெடைக்கும்..? என்று கேட்டான் சுப்பிரமணி.
இன்னும் கடைசிச் சீட்டுக்கு ரெண்டு மாசம் இருக்கு… சீட்டுச் சல்லி ஐயாயிரத்துல சமாளிச்சுக்கலாம் என்றாள் பாக்கியம். அப்புறம் ஈப்பியெப் பணம்… சர்வீஸ் பணம் கெடைச்சா…செலவுக்கட கடன், கைமாத்துக்கடன், தீவாளி அட்வான்ஸ் எல்லாம் குடுத்து மீதிக்காசு இருக்கும். பத்திரமா அந்தப் பணத்தோடதான் மண்டவம் கேம்பு போயி, வேல வெட்டி கெடைக்கிற வரைக்கும், கைச் செலவுக்கு வச்சிக்கணும்..! யாருக்கும் பத்து சதங்கூடக் கடன் வைக்காம இந்த நாட்ட வுட்டுப் போகணும்…! என்று பெருமூச்சு விட்டான் சுப்பிரமணி.

இது வைகாசி மாதம்.. மழை ஆரம்பமாகும் காலம்.
தேயிலைக்கு ஒரம் போடுற காலமுமாகும்.
சுப்பிரமணி அவனது பாடசாலை நண்பனான சுந்தரத்துடன், ஞாபகத்துக்காக ஒரு புகைப்படம் பிடித்துக்கொள்ள ஆசைப்பட்டான். இருவரும் தோட்டத்துப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பை முடித்துக்கொண்டு, நகரப் பாடசலையில் ஓ.எல். வரை படித்து, ஒருவன் நான்கு பாடங்களும், மற்றவன் மூன்று பாடங்களும் சித்தியடைந்து, தேயிலைக் காட்டுக்கே தொழிலுக்கு வந்து விட்ட துரதிர்ஷ்டசாலிகள்..!

சுந்தரம்..!
ஒரம் போட்டு முடிச்சதும் ரெண்டு பேரும் டவுனுக்குப் போயி ஒரு போட்டோ புடிச்சுக்குவோம்! இனிமே எந்தக் காலம் நீயும் நானும் இப்படி இருக்கப்போறோம்..? என்று சுப்பிரமணி சொன்னான். அவனது கைகளை இறுகப் பிடித்துக் கொண்ட சுந்தரம், டேய்.. நீ போனப் பொறகு ஒன்னையப் பாக்குறதுக்குக் கட்டாயம் வருவேன். கவலப்படாத..! போட்டோ செலவு நாந்தான் குடுப்பேன்… என்றான். இருவரும் உர மூட்டைகளைப் பிரித்து, தேயிலை நிறைக்குள் இறங்கினார்கள். பகல் 11 மணிக்கெல்லாம் 7-ஆம் நெம்பர் மலையில் உரம் போடும் வேலை முடிந்தது.

தேயிலைச் செடிகளுக்குச் சீமை உரம் (செயற்கை உரம்) போடும் வேலையின் போது தொழிலாளர்கள் உடல் முழுக்கச் சாம்பல் பூசியது போல், முகத்தில் அரிதாரம் பூசிய கோமாளிகள் போலவும் இருப்பார்கள். சீமை உரம் தாவரங்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த ரசாயனக் கலவையாகும்.

இவை கண், மூக்கு, சுவாசத்துக்கு ஊறு விளைவிக்கும். உரம் போடும் வேலை முடிந்ததும் தொழிலாளர்கள், குளிக்காமல் வீடு செல்ல மாட்டார்கள். உரம் போடுவதற்குப் பாதுகாப்பு உடைகள் உண்டு. ஆனால் நிர்வாகம் கொடுக்க மாட்டாது. அவர்களும் கேட்க மாட்டார்கள்.

வேலை முடிய காட்டுப் பீலியில் குளிப்பதற்கு இருவரும் தோட்டத்து ஆபீஸ் ரோட்டு வழியாக இறங்கினார்கள். சுப்பிரமணிக்கு டவுன் பக்கம் போவதற்குக் கொஞ்சம் அச்சம் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது. அசோகச் சக்கரம் பொறித்த இந்திய சிவப்புப் பாஸ்போர்ட் வாங்கி, சென்ற மாதத்தோடு இலங்கையில் வசிக்கும் விசா காலம் முடிவடைந்திருந்தது.

தோட்டங்கள் தோறும் பொலிஸ் வண்டி நடமாடியது. இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்குப் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இந்த மண்ணில் பிறந்தவனுக்கு, இன்னொரு நாட்டு விசா குத்தப்பட்டு, இங்கே வசிக்க வேண்டிய கால வரையறை வழங்கப்பட்டது.

இந்தியாவுக்குப் பயணமாகும் கால வரையறை முடிந்தவர்களின் குடும்பத் தலைவனைப் பிடித்துப் பலவந்தமாக வண்டியில் ஏற்றி, கொழும்பு கொம்பனித்தெரு சிறைச்சாலையில் அடைத்து வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட தொழிலாளியின் குடும்ப உறவினர்களுக்குத் தோட்ட நிர்வாகம் கொடுக்க வேண்டிய கொடுப்பனவுகளைத் துரிதப் படுத்துவார்கள். இந்த நடவடிக்கைகளுக்கு குடியேற்ற, வெளியேற்றத் திணைக்களமும், பொலிஸ் திணைக்களமும் இணைந்து செயல்படும்.

இன்று காலை எட்டு மணிக்கெல்லாம் மேகமலைத் தோட்டக் காரியாலயத்துக்குப் பொலிஸ்காரர்கள் ஐந்து பேர் வந்து காத்திருந்தார்கள். பொலிஸ் வண்டி தோட்டத்துக்கு வெளியே அரை கிலோ மீட்டர் தொலைவில் மறைந்திருந்தது.

குளிப்பதற்குப் போய்க் கொண்டிருந்த இருவரில், சுப்பிரமணியத்தை ஆபீஸிலிருந்தபடி பெரிய கிளாக்கர் அடையாளம் காட்டினார். சிவில் உடையில் வந்திருந்த இரண்டு பொலிஸ்காரர்கள் ஓடிப்போய் சுப்பிரமணியைப் பிடித்துக் கொண்டார்கள். திருடனைப் பிடித்தது போல் இழுத்துக்கொண்டு பொலிஸ் வண்டியில் ஏற்றிக்கொண்டு பறந்தார்கள்…! சுக்குரு தேயிலைக்கு உரம் போட்டவன். அந்த உரம் படிந்த கோலத்தோடு பொலிஸ் வண்டியில் ஏற்றப்பட்டான்…!

சேர்..! சேர்..! நான் எங்க வேணுமுன்னானும் வர்றேன். இப்போ வூட்டுக்குப் போகணும்… குடும்பத்தச் சந்திக்கணும்… மொதல்லாவது நான் குளிக்கணும்…!
கட்ட வஹப்பன் ஓய்…! இந்தியாவே கிஹின் நாப்பான்… வாய் மூடு ஓய்…! இந்தியாவுல போய்க் குளி…! என்றான் ஒரு பொலிஸ்காரன்.

சுக்குருவுக்கு சிங்களம் நன்றாகப் பேச முடியும். அவனும் சிங்களத்தில் பதில் சொன்னான்.
தமுசே மனுச ஜாத்தித…? தமுசெட்ட மனுஸ்ஸகம் தியெனவாத…?
அடோ உம்பட்ட சிங்ஹள கத்தா கரண்ட புளுவன்த..! உம்ப அப்பிட்ட தமுசே கியனவானேத… தெமளா…!

உரையாடல் காரசாரமாகியது… மூன்று பொலிஸ்காரர்கள் ஓடுகின்ற ஜீப்புக்குள் சுக்குருவைக் கொடூரமாகத் தாக்கினார்கள். வாயில் வடிந்த இரத்தத்தைத் துடைத்துக் கொண்ட சுக்குரு, ஒரு பொலீஸ்காரனின் குரல்வளையையாவது கடித்துக் குதறுவோமா என்று திமிறியவன், திடீரெனக் குடும்பத்தை நினைத்து மௌனமானான்.
ஜீப் வண்டி போலீஸ் ஸ்டேசனை நோக்கி ஓடியது.

சுந்தரம் பதை பதைத்தவனாய் பாக்கியத்திடம் தகவலைச் சொல்வதற்கு ஓடினான்.

தோட்டத்து கிளாக்கர் பொலிஸ் அதிகாரியின் கட்டளைப்படி சுப்பிரமணி, அவன் மனைவி பாக்கியத்தின் கொடுப்பனவுகளை அவசர அவசரமாகத் தயார் செய்து கொண்டிருந்தார். இன உணர்வு, சமூக உணர்வு, அரசியலில் பொது அறிவு எதுவுமே அற்ற ஜடமாகவே தோட்டத்து உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தின் விசுவாசிகளாக மட்டுமே இருப்பார்கள்.

பாக்கியத்திற்கும், சுப்பிரமணியத்திற்கும் தோட்ட நிர்வாகம் சேமித்து வைத்திருந்த ஊழியர் சேமலாப நிதியுடன் ஏனைய லீவ் போனஸ், சேவைக்காலப் பணம் என்று இருவருக்கும் மொத்தமாக 30 ஆயிரம் கணக்கு எழுதி, அதில் தோட்டத்துக் கடன் பணத்தையும் கழித்துக்கொண்டு, இருபத்தைந்தாயிரம் ரூபாவை பாக்கியத்தின் கையில் கொடுத்தான் தோட்ட நிர்வாகி.

பாக்கியம்… கொடுத்த பணத்தைக் கணக்குப் பார்ப்பதற்கோ, அதை வாங்கிக் கொள்ளும் நிலையிலோ இல்லை… கட்டிய துணியோடு போனாலும் பரவாயில்லை.. கணவனுக்கு ஆபத்து நடந்துவிடக் கூடாதென்று மழை மழையாய்க் கண்ணீரைப் பொழிந்தாள்.
நண்பனின் மனைவி பாக்கியத்துக்கு, சுந்தரம் பயண ஏற்பாடுகளைச் செய்ய உதவினான்.
சுக்குருவின் குடும்பத்தினருக்குத் தோட்டத்து உறவினர்கள், நண்பர்கள் வேட்டி, சேலை, பிள்ளைகளுக்கு உடுப்பு துணிமணிகள் எடுத்துக் கொடுத்தார்கள். வசதியற்றவர்கள் 2 ரூபாய், 1 ரூபாய் என்று தங்களால் முடிந்ததைக் கொடுத்தார்கள்.
அநேகமானோர் கோழி அடித்து, விருந்து கொடுத்தார்கள். செல்லம்மாக்கா… சுக்குரு குடும்பத்துக்கு உடுப்பு, துணிகளோடு.. அவனது கடைசி மகளுக்கு தான் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்தாள். பிள்ளைகள் எவ்வளவோ மறுத்தும், செல்லம்மா திரும்பி வாங்கிக் கொள்ளாமல் கோபப்பட்டாள். இந்தியா பயணம் ஆரம்பமாகிய நாள் முதல் தோட்டத்து லொறியில் (லாரியில்) ஏறும் வரை சுக்குரு வீட்டில் அடுப்பு எரிக்க எவருமே விடவில்லை..! பாக்கியத்துக்குத் தோட்டத்து ஜனங்கள் விபூதி வைத்து, பிள்ளைகளை ஆசீர்வதித்து, கட்டிப்பிடித்து அழுது புலம்பினார்கள்.

புள்ளக்காம்பரா சந்தியில் தோட்டத்து லொறி வந்து நின்றது. பாக்கியம் குடும்பத்தை வழியனுப்புவதற்காக அந்தத் தோட்டத்தில் எவரும் வேலைக்குப் போகவில்லை. பிள்ளைக் காம்பரா சந்தியில் தோட்டத்துச் சனங்கள் குழுமியிருந்தார்கள். சுக்குருவின் சின்ன மகன் தனது பாட்டனின் பாரம்பரியச் சொத்தான ரேங்குப் பெட்டியைத் தலையில் சுமந்து கொண்டு சென்றான்.

சொந்தக்காரர்கள், நெருங்கிப் பழகியவர்கள் யாவரும் ரெயில்வே ஸ்டேஷன் வரை வந்தார்கள். மண்டபம் கேம்ப் வரையிலான பிரயாண டிக்கட்டுகளையும், ரயில் நிலையம் வரை வாகன வசதியையும் தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்றிருந்தது. இந்தச் சலுகைகள் சிறிமா… சாஸ்திரி ஒப்பந்தத்தில் உள்ளன.

றயில்வே நிலையத்தில் பாக்கியம் குடும்பத்தைப் போல பல தோட்டத் தொழிலாளர்கள் வந்து நிறைந்திருந்தார்கள்.

தலைமன்னார் கோச்சி பதுளையில் காலை 6 மணிக்குப் புறப்படும். இந்தக் கோச்சியை ஒப்பாரிக் கோச்சி என்று பட்டப்பெயர் சூட்டியிருந்தார்கள்…! தலை மன்னார் கோச்சி, தலவாக்கொல்லை ஸ்டேஷனுக்கு வந்ததும், எல்லோரும் குய்யோ… முறையோ… என்று ஓலமிட்டுக் கதறினார்கள். மரண வீட்டு ஒப்பாரி வைத்து அழுதார்கள். கோச்சி வண்டிக்குள் ஏறியவர்கள், கரங்களை நீட்டிக் கீழே நிற்பவர்களைப் பிடித்துக்கொண்டு அலறும் அந்தத் துயரக் காட்சி உயிரையும், ஆத்மாவையும் பிடுங்கியது. ஒப்பாரிச் சத்தத்தோடு கோச்சி புறப்பட்டது.

கோச்சி ஓடத் தொடங்கியதும், பல இளைஞர்கள், தங்கள் உறவுகளைப் பிரிய முடியாமல், கைகளை அசைத்துக்கொண்டு, சிறிது தூரம் கோச்சியின் அருகிலேயே ஓடினார்கள். சட்டத்தின் முன்னால் மனிதத் தவிப்புகள் எப்படி எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்படுகின்றன என்பதை அந்தக் காட்சி கண்முன்னே காட்டியது.

அந்த ரயில் வண்டியை இந்தியா கோச்சி, ஒப்பாரிக் கோச்சி என்று பெயர் வைத்துக் கொண்டார்களே தவிர, அது

சாஸ்திரி கோச்சி… சிறிமா கோச்சி… என்று சொல்லும் அளவுக்கு, கடைசி வரை அவர்களுக்கு அரசியல் தெரியாமலேயே போய் விட்டது.

- தலைமன்னார் இறங்குதுறை.
தேயிலைக்கு உரம் போட்ட நிலையில் கை கால் கூடக் கழுவாமல், வியர்த்த, பசளை பற்றிய உடலோடு, மனிதாபிமானமின்றி இழுத்து வரப்பட்டு, உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் கை கால் கழுவிக்கொண்டு, வேலைக்காட்டு உடையோடு, கொழும்பு, கொம்பனித்தெரு, சிறையில் இருந்த சுப்பிரமணி, சுந்தரம் கொண்டு வந்து கொடுத்த மாற்றுடையை உடுத்தியிருந்தான்.

சுப்பிரமணியைக் கப்பல் ஏற்றுவதற்குப் பொலிஸ் அதிகாரிகள் தலை மன்னார் இறங்கு துறைக்கு அழைத்து வந்திருந்தனர்.

மனைவி பாக்கியம், மகள்மார் மூவரும், மகனும், சுப்பிரமணியின் பெற்றோர்களும் திகிலடைந்த நிலையில் தலைமன்னாருக்கு வந்திருந்தனர். குடும்பத்திடம் சுப்பிரமணியை ஒப்படைத்து விட்டு, அடுத்த வேட்டைக்குப் பொலிஸ் அதிகாரிகள் கொழும்புக்குத் திரும்பினார்கள்.
நாட்டைச் சுரண்டும் வியாபாரிகளும், ஏனைய தீய சக்திகளும் இந்த நாட்டில் கௌரவப் பிரஜா உரிமை பெற்றுக் கொண்டு நிலைத்து வாழுகின்றபோது, காட்டை அழித்து, நாட்டை உருவாக்கிய பாட்டாளிக் கூட்டம் நாடு கடத்தப் படுகின்றது. சட்டம் ஒரு சிலந்திக்கூடு… அதில் வலிமை பெற்ற வண்டுகள் துளைத்துக்கொண்டு பறந்தோடுகின்றன. எளிய பூச்சிகளே சிக்கிக் கொள்கின்றன.
சுந்தரமும் சுக்குருவும் கட்டிப் பிடித்துக்கொண்டு குமுறிக் குமுறி அழுதார்கள். தலை மன்னார் இறங்குதுறையில் எங்கு பார்த்தாலும் ஒரே ஓலங்கள்… ஒப்பாரிச் சத்தங்கள் துயரச் சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதிகாரிகளின் அதட்டலும்.. வழிநடத்தலும் ஆரம்பமாகின…

வாழ்க்கையைத் தேடி இந்த நாட்டுக்கு வந்த மக்கள்.. இருநூறு வருசங்களை வீணடித்து விட்டு… மீண்டும் வாழ்க்கையைத் தேடிக்கொண்டு அந்த நாட்டுக்குக் கப்பலை நோக்கி… கடல் பாலத்தின் மேல் நடந்தார்கள்.

அவர்களது மூதாதையர்கள் இதே திசையில், இதே கடல் பாதையில் தோணிகளிலும், வள்ளங்களிலும் வந்த வரலாறு… அந்த வழிப்பயணத்தில் பலரைக் கடல் விழுங்கிய கதைகள்… தப்பிக் கரையேறிய வம்சத்தினரின் இன்றைய எச்சங்களாகிய இவர்கள், இன்று அரச மரியாதையுடன் கப்பலேறி, மீண்டும் அக்கரைக்குத் திரும்பிப் போகும் கசந்த வரலாறு காவியமாகிக் கொண்டிருந்தது…!

ராமானுஜம் கப்பல் ஊளையிட்டுக்கொண்டு அசைவதைச் சிலையாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தரம்.

(யாவும் நடந்தவை…!) – வீரகேசரி, ஜூலை 2008.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates