Headlines News :
முகப்பு » » சுய பொருளாதாரமொன்றின் அவசியமும் - சட்டத்தரணி இரா. சடகோபன் பி.ஏ.

சுய பொருளாதாரமொன்றின் அவசியமும் - சட்டத்தரணி இரா. சடகோபன் பி.ஏ.

 மலையக மக்கள் என்போர் யார்?

வரலாற்றுப் பின்னணி

இலங்கையில் இந்திய வம்சாவழி மலையக மக்கள் என்போரின் தோற்றம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆரம்பிக்கின்றது. சிலர் இவர்களின் தோற்றத்தினை கோப்பிப் பயிர்ச்செய்கையின் ஆரம்பத்துடன் ஆரம்பிக்கின்றனர். எனினும் இலங்கையில் இந்திய வம்சாவழித் தமிழரின் பிரசன்னம் முதலாம் ராஜசிங்கன் காலத்திலும் (சீதாவாக்கை மன்னன்) அதன் பின்னர் ஒல்லாந்தர் காலத்திலும் (1638 1796) இருந்துள்ளது. பின்னர் 2ஆம் ராஜசிங்கன் மன்னன் காலத்தில் மதுரை நாயக்க அரச வம்சத்தில் இருந்து மணப் பெண்களை அழைத்து கண்டி மன்னர்கள் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் ஆரம்ம்பமாயிற்று. பல காலங்களில் பரிவாரமாக இலங்கை வந்த இந்திய வம்சாவழியினர் மீண்டும் இந்தியாவுக்குச் சென்றுவிட்டதற்கு ஆதாரமில்லை. இக்காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதியில் கொழும்பு முதல் களுத்துறை வரையில் காணப்பட்ட கறுவாப்பயிர்ச் செய்கையில் இந்தியத் தமிழர் பெருந்தொகையில் அழைத்து வரப்பட்டு ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் பின்னர் முற்றிலும் சிங்களவர்களாக மாறிப் போய்விட்டனர்.

அடுத்த கட்டத்தில் பிரித்தானிய கவனித்துவ அரசு காலத்தில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட்டபோது கொழும்பை மையமாகக் கொண்டு இந்திய வம்சாவழி மக்களின் சனத்தொகை அதிகரித்தது. இதன் முதற்கட்டமாக இலங்கையின் பிரித்தானிய ஆளுனராக பிரடரிக் நோர்த் என்பவர் கடமையாற்றிய போது 1804 ஆண்டு முதன் முறையாக தென்னிந்திய தொழிலாளர்களை உள்ளடக்கியதான முன்னோடிப் படைப்பிரிவு (கடிணிணஞுஞுணூ இணிணூணீண்) ஒன்றை அமைத்தார். இலங்கையின் கடைசி சிங்கள அரசான கண்டி ராச்சியத்தை 1815ஆம் ஆண்டு கைப்பற்றும் போதும் அதன் பின்னர் 1818ஆம் ஆண்டு கண்டிக் கிளர்ச்சியை அடக்கும் போதும் இராணுவத் துணைப் படையில் 5000 இந்தியத் தொழிலாளர் தொழில் புரிந்தனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்த அரை இராணுவ துணைப்படைப்பிரிவு பின்பு மேலும் விஸ்தரிக்கப்பட்டு பொது வேலைப் படைப்பிரிவாக மாற்றப்பட்டது. பின்னர் இவர்களே கொழும்பு கண்டிப் பாதை, கொழும்பு காலி பாதை, கொழும்பு திருகோணமலைப் பாதைகளையும் அவற்றில் காணப்படுகின்ற பாலங்களையும் (களனி ஆற்றின் மேல் அமைக்கப்பட்ட விக்டோரியா பாலம் முதலாவது பாலம்) சுரங்கங்களையும் அமைத்தனர்.மேலும் ஒரு தொகையினர் பட்டிண, நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டனர்.

இலங்கையில் பெருந்தோட்டத்துக்கென அழைத்து வரப்பட்ட முதலாவது தொழிலாளர் பிரிவில் 1800 பேர் இருந்தனர். 1818ஆம் ஆண்டு பிரித்தானிய தேசாதிபதியாக இருந்த எட்வர்ட் பார்ண்ஸ் (உஞீதீச்ணூஞீ ஆச்ணூணண்) என்பவரும் கோப்பிப் பெருந்தோட்டம் அமைக்கும் முதல் முயற்சியில் கம்பளை சின்னப்பட்டி என்ற இடத்தில் (தற்போது சிங்ஹபிட்டி) இவர்களைக் கொண்டு கோப்பித் தோட்டம் அமைத்தனர். அதன் பின்னரான கோப்பிப் பெருந்தோட்டத்தையும் அது வீழ்ச்சியடைந்தமையும் பின்னர் தேயிலை பெருந்தோட்டமும், றப்பர் நடுகையும், கொக்கோ பற்றியம் நமக்குத் தெரியும். இப் பெருந்தோட்டங்கள் நன்கு வளர்ச்சி பெற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பிரிக்க முடியாத அளவு இணைந்து போய்விட்டன.

இலங்கையின் கோப்பி மற்றும் தேயிலைப் பெருந்தோட்ட பொருளாதார வளர்ச்சியுடன் கொழும்புத் துறைமுக வளர்ச்சிக்கும் இலங்கையின் ரெயில்வே மற்றும் பெருந்தெருக்கள் போக்குவரத்து வலைபின்னல் அமைப்பு வளர்ச்சிக்கும் தென்னிந்தி தமிழ்த் தொழிலாளர்களே அடிமரமும் ஆணிவேருமாக இருந்தனர்.

சனத்தொகையும் பரம்பலும்

மலையக இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் சனத் தொகைக் கணிப்பீடுக்ள இவர்களின் உண்மையான சனத்தொகையை பிரதிபலிக்கவில்லை என்பது மிக வெளிப்படையான உண்மையாகும். பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளின் நிமித்தம் இவர்கள் தம்மை இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று சனத்தொகை கணிப்பீடுகளின் போது பதியத் தவறியதால் இம் மக்களின் மொத்த சனத்தொகையை சரியாக அறிய முடியாதுள்ளது. உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி இவர்களின் மொத்த சனத்தொகை சுமார் 1,500,000 (பதினைந்து இலட்சம்)மாக இருக்கும் என்று கருதப்பட்ட போதும் 2001 ஆண்டின் உத்தியோகபூர்வமான சனத்தொகை புள்ளிவிபரக் கணக்கெடுப்பின் படி இவர்களின் மொத்த சனத்தொகை 855,891 மட்டுமே. (கணக்கெடுப்பு இடம்பெற்ற 18 மாவட்டங்களில் மட்டும்) 1981 ஆண்டின் சனத்தொகை புள்ளிவிபரக் கணக்கெடுப்புகளின் பிரகாரம் இவர்களின் சனத்தொகை 818,665 ஆக இருந்தது. இதன்படி பார்த்தால் உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் வெறும் 37,235 பேர்களிலான (20 வருடங்களில்) அதிகரிப்பையே காட்டுகிறது.

இது இப்படி இருக்க தனிப்பட்ட ஆய்வாளர்களின் கணிப்பீட்டின்படி இலங்கை முழுவதுக்குமான மொத்த இந்திய வம்சாவழி மலையகத் தமிழரின் சனத்தொகை 1,202,349 ஆகும். இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் இவர்களது சனத்தொகை பரவலாக சிதறிக் காணப்பட்டாலும் மதிப்பிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி கொழும்பு மாவட்டத்திலும் (155,411), நுவரெலியா (370,747), கண்டி (132,214), பதுளை (164,016), இரத்தினபுரி (101,624), கம்பஹா (63,878), மாத்தளை (40,214), கேகாலை (53,329) முதலான மாவட்டங்களிலும் கணிசமான அளவு செறிந்து காணப்படுகின்றனர்.

தனியான தேசிய இனம்

கிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிபரங்களின் படி இலங்கையின் இரண்டாவது பெரிய மக்கள் கூட்டத்தினராக மலையக தமிழ் மக்கள் இருக்கின்றனர். பெருந்தோட்டத் துறையில் தொழிலாளர்களாக வேலை செய்வதற்கென அழைப்பு வரப்பட்ட இம்மக்கள் இன்று அத்துறையின் நெகிழ்ச்சியற்ற சமூக உயர்ச்சி காரணமாக மிக மிக மெதுவாக அத்துறையில் இருந்து படிப்படியாக வெளியேறி இலங்கையின் ஏனைய சமூக பொருளாதார அரசியல் துறைகளில் இணைந்து கொண்டுள்ளனர். இன்று இம் மக்களின் 50% மாணவர்கள் மட்டுமே பெருந்தோட்டத்துறையில் தங்கி இருக்கின்றனர். 1995ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி பெருந்தோட்டத்துறையில் மொத்தம் 750,000 பேர் வதிவிடத் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களையே மலையக பெருந்தோட்ட வதிவிடத் தொழிலாளர்கள் என்ற நிலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு இப்பிரதேசங்களுக்கு அண்டிய பகுதிகளில் குடிபெயர்ந்து சொந்தமான நிலத்திலோ அல்லது வாடகைக்கு வசிப்பவர்களாகவோ இருந்து கொண்டு வேறு தொழில் பார்ப்பவர்களாக உள்ளனர். எனினும் இவர்கள் அனைவருமே 1000 சமவுயரக் கோட்டுக்கு மேலான மலையகப் பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள் என்ற அடிப்படையில் மலையக மக்கள் என்ற வரையறைக்குள் வருபவர்கள். ஏனையோர் கொழும்பு போன்ற ஓர் இடத்தில் வசித்தாலும் மலையகத்தை தமது மூலவேராகக் கொண்டவர்கள் (கீணிணிt) என்ற அடிப்படையில் மலையக தமிழ் மக்கள் என்றே பார்க்கப்பட வேண்டும். எனவே இம்மக்கள் கூட்டத்தினரின் பெரும்பான்மையினமானவர்கள் மலையக மக்கள் என்ற வரையறைக்குள் வருவதால் இம் மக்களை மலையகத் தமிழ் தேசிய இனம் என்ற வரையறைக்குள் கொண்டு வரலாம். ஏனையோர் தம்மையும் இம்மக்களுடன் இணைத்துக் கொண்டு இவ்வரையறைக்குள் வர வேண்டும். 

இம் மக்கள் தம்மை இத்தகைய தேசிய இனம் என்ற ஒரு வரையறைக்குள் கொண்டு வர விரும்புகிறார்களா? என்ற கருத்தே இங்கு முக்கியம் பெறுகிறது. தேசிய இனக் கோட்பாட்டின் அண்மைக்கால அபிவிருத்தியின் படி ஒரு தேசிய இனம் தம்மை அவ்வாறு அழைத்துக் கொள்ள விரும்புகின்றது என்ற ஒரு அம்சமே அவ்வினத்தை தேசிய இனமாக அங்கீகரிக்கப் போதுமானதாகும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆதலினால் மலையக தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி அவர்கள் ஒரு தனியான தேசிய இனம் என்ற கருத்தை தொடர்ச்சியாக வலியுறுத்த வேண்டியதன் தேவை அவசியமாக எழுந்துள்ளது. எனவே இவர்கள் தொடர்பான பொருளாதார கட்டமைப்புக்களும் இக்கருத்தை அபிவிருத்தி செய்யும் விதத்திலேயே அமைய வேண்டும்.

மலையகத்தின் இட அமைவும் புவியியல் அம்சங்களும்

இட அமைவு

மலைநாட்டின் புவியியல் இட அமைவை பின்வருமாறு வரையறுக்கலாம். இலங்கையின் பல்வேறு புவியியல் பிரதேசங்களும் அவற்றுக்கேயுரிய சிறப்பம்சங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மலைநாட்டுக்கேயுரிய தனியான சிறப்பம்சங்கள் உண்டு. அவற்றைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.

1. கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி அல்லது 300 மீற்றர் சம உயரக் கோட்டுக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள பிரதேசம்.

2. புல்கொடை இறக்வானை குன்று தனியாகக் காணப்படுகின்றது

3. சிவனொளிபாதமலை, அப்புத்தளை, நமுனுகுல, நக்கிள்ஸ் மலைத்தொடர் ஆகிய நான்கு மலைத் தொடர்கள்.

4. மகாவலி, களுகங்கை, களனி, வளவை முதலான பெரிய ஆறுகள் இங்கு உற்பத்தியாவதுடன் பெரும் பள்ளத்தாக்குகளும், நீர்வீழ்ச்சிகளும் இங்குள்ளன.

5. சீரான வெப்பநிலையையும் (25 பாகை செல்சியஸ் 17 பாகை செல்சியஸ்) அதிக ஈரலிப்பான மழைக்கால நிலையையும் கொண்டு செழிப்பான பிரதேசமாக இது உள்ளது.

இலங்கையின் பொருளாதாரமும் தேயிலைப் பெருந்தோட்டக் கைத்தொழிலும்

தேயிலைப் பொருளாதாரத்தின் முக்கியத்துவம்

இலங்கையின் பொருளாதாரத்தில் தேயிலை பெருந்தோட்டக் கைத்தொழில் எந்தளவுக்கு முக்கியத்துவம் வகிக்கின்றது என்பதனை விளங்கப்படுத்தத் தேவையில்லை. மத்திய மலைநாட்டின் பயன்படுத்தத்தக்க அனைத்து நிலமும் தேயிலைப் பெருந்தோட்டங்களே காணப்படுகின்றன. இத் தோட்டங்களில் 99% தினர் இந்திய வம்சாவழி தமிழ் மக்களே தொழிலாளர்களாக தொழில் செய்த போதும் இவர்கள் இன்றும் இத்தோட்டங்களில் வெறுமனே வதிவிடத் தொழிலாளர் என்ற நிலையிலேயே உள்ளனர். முழு நாட்டினதும் தேசிய வருமானத்துக்கும் அந்நிய செலாவணி உழைப்புக்கும் பெரும் பங்காற்றும் இவர்களுக்கு இன்று சுதந்திரமாக குடியிருக்கும் ஒரு சிறு துண்டு நிலம் தானும் இல்லை என்பது தொடர்பில் நாம் எந்தளவுக்கு குரல் கொடுத்து உள்ளோம்.

இன்று தேயிலை பயிரிடப்படும் மொத்த நிலப்பரப்பு 188,000 ஹெக்டேயர்கள் ஆகும். இது 1981ஆம் ஆண்டு 245,000 ஹெக்டேயராக இருந்தது. இவ்விதம் தேயிலை நிலப்பரப்பு வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம் பல்வேறு காரணிகளுக்காக (வீடமைப்புக் கொலனியாக்கம், பல பயிராக்கல்) இவை கையளிக்கப்பட்டமைவாகும். எனினும் தேயிலையால் பெறப்படும் மொத்த உற்பத்தி வருமானம் தேசிய வருமானத்துக்கான பங்களிப்பு, அந்நிய செலாவணி உழைப்பு என்பன அதிகரித்துள்ளனவே தவிர குறையவில்லை. எனினும் நாடு சுதந்திரமடைந்த போது இலங்கையின் தேசிய வருமானத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் அந்நிய செலாவணி உழைப்பு ஆகியவற்றில் தேயிலை, றப்பர், தெங்கு, கொக்கோ மற்றும் வாசனைத் திரவிங்களே முதன்மை ஸ்தானத்தில் இருந்தன. எனினும் 1948ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மலையக இந்திய வம்சாவழி மக்கள் தேர்தல் வெற்றியாலும் அவர்கள் ஒரு ஸ்தாபனப்படுத்தப்பட்ட தொழிற்சங்க சக்தியாக உருவாகி இருந்தமையாலும் அவர்கள் எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய சக்தியாக உருவாகக் கூடும் என்ற பயத்தால் தேசிய முதலாளித்துவ கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, கு.ஙி.கீ.ஈ. பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இலங்கையின் தேயிலைப் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டன. இதன் காரணமாக மலையகத் தமிழரின் பிரஜா உரிமையும் வாக்குரிமையும் கூட பறிக்கப்பட்டது. இதனைப் புரிந்து கொண்டு 1948ஆம் ஆண்டு சாத்வீகப் போராட்டத்தைக் கைவிட்டு தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்திலும் வீதிமறியல் மற்றும் ஏனைய பகிஷ்கரிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தால் இலங்கையின் பொருளாதாரத்தையே ஸ்தம்பிதமடையச் செய்து பிரஜா உரிமை கோரிக்கையில் வெற்றிபெற்றிருக்கலாம். இப்படிச் செய்யாமல் விட்டமை அன்றைய இலங்கை இந்திய காங்கிரஸின் மாபெரும் அரசியல் தவறாகும். இதன் காரணமாக நாம் 50 ஆண்டுகால சமூகப் பின்னடைவை அடைந்துவிட்டோம்.

1948ஆம் ஆண்டு 136 மில். கிராமாக இருந்த இலங்கையின் தேயிலை உற்பத்தி 1996ஆம் ஆண்டு 258 மில்.கி. அதிகரித்துள்ளது.

1950ஆம் ஆண்டு தேயிலை மொத்த விளை நிலப்பரப்பு 225,000 ஹெக்டேயரில் இருந்து 1996ஆம் ஆண்டில் 188,000 ஹெக்டேயராக வீழ்ச்சியடைந்தது.

1996ஆம் ஆண்டு பெருந்தோட்ட மீள் கட்டமைப்பு அபிவிருத்திக்கென 100 மில். யு.எஸ். டொலர் நிதியுதவி தனியார் மயமாக்கப்பட்ட தோட்டக் கம்பனிகளின் நிருவாகத்துக்கு வழங்கப்பட்டன. இதன் பலன் தொழிலாளரை சென்றடையவில்லை.

தேயிலையின் உற்பத்தித்திறன் 1950ஆம் ஆண்டு ஹெக்டேயருக்கு 650 கி.கி. மாத்திரமே இருந்தது. இது 1996ஆம் ஆண்டு 1500 கி.கி. ஆக அதிகரித்திருந்தது.

1948ஆம் ஆண்டின் மொத்த தேயிலை உற்பத்தியான 136 மில். கி. கிராமில் 134 மில்.கி.கி. ஏற்றுமதி செய்யப்பட்டது. இது மொத்த உற்பத்தியின் 99%மாகும். 1996ஆம் ஆண்டு மொத்த உற்பத்தியான 258 மில்.கி.கிராம்களில் 244 மில்.கி.கி. ஏற்றுமதி செய்யப்பட்டது. இது மொத்த உற்பத்தியின் 96% ஆகும். (எனவே வேறு உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி முக்கியத்துவம் அதிகரித்திருந்தனவே தவிர தேயிலை உற்பத்தியின் முக்கியத்துவம் அதன் முதன்மை ஸ்தானத்தில் இருந்து குறையவில்லை. மாறாக அதன் உற்பத்தி அளவும் ஏற்றுமதி அளவும் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது)

தேயிலைத் தொழிலின் ஏற்றுமதி முக்கியத்துவம் கருதி அதன் மீதான வரிவிதிப்பு பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் 1970களில் இருந்து அது வரிவிதிப்புக்குட்பட்டது. 1978ஆம் ஆண்டு இத் தொழிலின் மீதான மறைமுக வரிவிதிப்புக்களில் இருந்து ரூபா 3,462 மில். அரசிறையாக (மொத்த வரி வருமானத்தின் 29%) பெறப்பட்டது. அதன் பின் இது மட்டுப்படுத்தப்பட்டதுடன் அறவிடப்பட்ட வரி அத்துறையின் அபிவிருத்திக்கே செலவிடப்பட்டது. 1996ஆம் ஆண்டு இவ்விதம் வரிவிதிப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட தொகை ரூபா 492 மில். ஆகும். ஆனால் தொழிலாளரை இந்நலன் சென்றடைந்ததா? என்பது கேள்விக்குறி.

தேயிலையின் விலை 1948 1950 காலத்தில் 1.13 யு.எல். டொலராக இருந்தது. 1992 1996 காலத்தில் இது 2.04ஆக இருந்தது. இது வருடாந்தம் சராசரி 1.6% தால் அதிகரித்து வந்துள்ளது.

தொழிலாளரின் சம்பளம் (கூலி) 1948ஆம் ஆண்டு ரூபா 1.44 ஆகவும் 1970ஆம் ஆண்டு ரூபா 3.10 ஆகவும் 1996ஆம் ஆண்டு ரூபா 83 ஆகவும் 2003ஆம் ஆண்டு ரூபா 121 ஆகவும் மட்டுமே அதிகரித்துள்ளது.

சுதந்திரத்துக்குப் பின் அரசுகளின் மலையக  தமிழ் மக்கள் விரோத பொருளாதாரக்கொள்கைகள்

1948ஆம் ஆண்டுக்குப் பின்னரான சுதந்திர இலங்கையின் அரசுகள் மலையகத் தமிழ் மக்களுக்கெதிரான பொருளாதாரக் கொள்கைகளையே கடைப்பிடித்து வந்துள்ளன. பிரஜா உரிமை பறிப்புச் சட்டத்தையும் வாக்குரிமை பறிப்புச் சட்டத்தையும் கொண்டு வந்து அரசியல் சக்தியாக இவர்கள் உருவாவதை வெற்றிகரமாகத் தடுத்துவிட்ட இவ்வரசுகள் இவர்கள் தொடர்ந்தும் தொழிற்சங்க ரீதியில் இணைந்து தொழிற் சங்க போராட்டங்கள் வாயிலாக நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உருவாவதாகக் கருதினர்.

மறுபுறத்தில் ஏனைய பிரஜைகள் அனுபவித்த உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்பட்டு இந்நாட்டுக்குரிய மக்கள் அல்லாத விதத்திலேயே நடத்தப்பட்டனர். குறிப்பாக நிலங்கள், வீடமைப்புக்கள் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட போது இம்மக்களுக்கு அவை மறுக்கப்பட்டன. கொலனிகள் உருவாக்கப்பட்டபோது அவற்றில் இம்மக்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. இம்மக்கள் 200 ஆண்டுகளுக்குப் பின்னரும் தோட்டங்களில் தற்காலிக குடியிருப்பாளர்களாகவும் நிலமற்றவர்களாகவும் வீடற்றவர்களாகவும் உள்ளனர்.

இன்று தேயிலை ஏற்றுமதி 4ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் இடத்தை ஆடை உற்பத்தித் தொழில், ஏனைய கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள், வெளிநாடுகளில் தொழில் புரிவோர் அனுப்பும் பணம் என்பன பிடித்துக் கொண்டுள்ளன.

எனினும் ஏற்றுமதி வருமானத்தைப் பொறுத்தவரையில் தேயிலை 4ஆவது இடத்தில் உள்ளது என்பதனை பொருளாதார ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் வெறுமனே மேலோட்டமான புள்ளிவிபரங்களைக் காட்டி சகலரையும் ஏமாற்றப் பார்க்கிறார்கள். இதனை பின்வரும் புள்ளிவிபரங்களை உண்ணிப்பாக அவதானித்தால் தெரிய வரும்.

இப்புள்ளிவிபரங்களின் பின்னிணைப்பு இக்கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டின் இப்புள்ளி விபரங்களை இலங்கை வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ளது.

1995ஆம் ஆண்டின் மொத்த ஏற்றுமதி 195,258 ரூ. மில்

ஆடை உற்பத்தி ஏற்றுமதி 84,806 ரூ. மில்

வெளிநாட்டில் பணிபுரிவோர் அனுப்பும் நிதி 40,806 ரூ. மில்

ஏனைய கைத்தொழில் உற்பத்திகள்

(றப்பர், இயந்திராதிகள், பெற்றோலியம், தோற்பொருள், மற்பாண்டங்கள், ஆபரணம், மரப்பொருட்கள், பிளாஸ்டிக் முதலான கைத்தொழில் பொருட்கள்) 36,181 ரூ. மில்.

தேயிலை 24,638 ரூ. மில்.

இப்புள்ளிவிபரங்களின் படி 
தேயிலை நான்காவது ஏற்றுமதிப் பொருளாகவே உள்ளது. இவ்வுற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பெருமானங்களைப் பார்ப்போம்.

பருத்தி, வெற்றுத்துணி, அச்சிடப்பட்ட துணி, இயந்திரங்கள், மின்சாரம் சம்பந்தப்பட்டது 63,777

இயந்திராதிகள் 32,186

பெற்றோலியம் 19,830

பிளாஸ்டிக் மூலப்பொருள் 7,886

இரசாயணங்கள் 7,329

உரம் 4,436

இதனை ஏற்றுமதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தோமாயின் ஆடை உற்பத்தித் தொழிலுக்கு அதன் 70% உள்ளீடுகள் இறக்குமதி செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது. எனவே அதன் ஏற்றுமதிப் பெறுமானத்தில் 30% மட்டுமே உண்மையான ஏற்றுமதி வருமானமாகும். அதேபோல் ஏனைய கைத்தொழில் ஏற்றுமதிகளிலும் (உதாரணம் பெற்றோலிய உற்பத்தி, தோற்பொருள், பிளாஸ்டிக்) அதிக அளவில் வெளிநாட்டு இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. எனவே ஆடை உற்பத்தித் தொழில் உற்பத்தி ஏற்றுமதி வருமானமும், கைத்தொழில் உற்பத்திப் பொருள் வருமானமும் தேயிலை ஏற்றுமதி வருமானத்துக்கு பின்னரே வைத்துப் பார்க்கப்பட வேண்டும். ஆதலால் வெளிநாட்டில் பணிபுரிவோர் அனுப்பும் பணத்துக்கு அடுத்ததாக இப்போதும் அதிக அந்நிய செலாவணி பெற்றுத் தரும் துறையாக தேயிலையே உள்ளது. இந்த நிலைமை அண்மைய எதிர்காலங்களில் மாற்றப்படுவதற்கான சூழ்நிலை இல்லை. இதனை வைத்துப் பார்க்கும் போது இப்போதும் மலையகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பது புலனாகும்.

எனினும் இந்த உபாயத்துவ முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார நிலைமையினை மலையக அரசியல் தலைவர்களும், தொழிற் சங்கத் தலைவர்களும் பயன்படுத்தத் தவறுவதால் அரசாங்கத்துடனும், தொழில் கொள்வோருடனும் சம்பளம் மற்றும் அரசியல் பிரச்சினைகளின் போது பேரம் பேசுவதில் தோல்வியடைகின்றனர். இந்த மக்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தால் அதனால் எத்தனை கிலோ தேயிலை இழக்கப்படுகின்றது. எத்தனை மில்லியன் டொலர் அந்நிய செலாவணி இழக்கப்படுகின்றது? என்பதனை சுட்டிக்காட்டும் திராணி ஏன் நம் மக்கள் தலைவர்களுக்கில்லை? இதனை ஒரு கேள்வியாகவே முன்வைக்கிறேன்.

ஏனெனில் தேயிலைத் தோட்டங்கள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தமக்கு தொழிலாளர் பிரச்சினைகளுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை எனவும் அவற்றை தனியார் நிறுவனங்களும் தொழிலாளர்களுமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பெருந்தோட்ட அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தேசிய வருமானத்திலும் அந்நிய செலாவணி உழைப்பிலும் இத்தகைய பங்கு வகிக்கும் ஒருதுறை மீது அரசுக்கு எந்தவித பொறுப்பும் இல்லை என்று கூறுவது மிகவும் போலித்தனமானதும் இம்மக்களை ஏமாற்றுவதும் ஆகும். தகுந்த புள்ளி விபரங்களுடன் இப்பாரிய பொறுப்பினை அரசுக்கு சுட்டிக்காட்டி இம் மக்களின் பிரச்சினைகளின் போது அரசாங்கத்தின் பொறுப்பை உணர்த்த வேண்டிய பணியையும் மலையக மக்களின் தலைவர்கள் செய்கிறார்கள் இல்லை.
மலையக மக்களுக்கான வாழிடக் கொள்கையும்
பொருளாதார முக்கியத்துவமும்

நிரந்தர வாழிடம் இல்லாமை

மலையக மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய பாதகமாக இருப்பது இவர்கள் தொடர்ந்து நிலமற்றவர்களாக இருப்பதும் தற்காலிக வதிவிடக் கூலிகளாக இருப்பதும், நிரந்தரமான வாழிடங்களைக் கொண்டிராமல் இருப்பதுமாகும். இவர்களுக்கான ஒரு சுயபொருளாதாரம் வளர்த்தெடுக்கப்பட வேண்டுமாயின் அதற்கான முதல் நிபந்தனையாக இம்மக்கள் இந்நாட்டின் நிரந்தரக் குடிமக்களாகவும் அவர்களுக்கென நிரந்தரக் குடியிருப்புக்களும் நிரந்தரமான வாழிடமும் இருக்க வேண்டியதவசியம். அப்போதுதான் இம்மக்கள் இந்நாட்டின் ஏனைய குடிமக்களுக்கு சமமானவர்களாக இருப்பார்கள். சொந்த நிலத்திலும் சொந்த வீட்டிலும் சொந்த வாழிடத்திலும் குடியிருக்கும் போதுதான் “இந்த மண் நமக்குச் சொந்தமானது’ என்ற சுயசிந்தனையும் நாம் சுதந்திரமானவர்கள் என்ற சிந்தனையும் தோன்றும். அப்போதுதான் நமக்கு சொந்த மண்ணில் அவர்கள் சுய பொருளாதார முயற்சிகளில் ஈடுபடுவார்கள். இன்று இவர்கள் இவ்வித தற்காலிக கூலிகள் என்று நிராகரிக்கப்பட்டு தோட்டங்களில் வேலை இழக்கும் போதும் தோட்டங்கள் மூடப்படும்போதும் வீதிக்கு வர வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். இன்றைய பத்திரிகை செய்திகளின்படி 35 ஆயிரம் தொழிலாளர் இத்தகைய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

1995ஆம் ஆண்டின் ஆய்வொன்றின்படி தேயிலைப் பெருந்தோட்டங்களில் மாத்திரம் 750,000 தொழிலாளர்கள் தற்காலிக வதிவிடங்களான “லைன்’ காம்புறாக்களில் குடியிருந்து வந்தனர். இவர்கள் அனைவரும் தோட்டத்தின் பிடியில் அகப்பட்டு கொத்தடிமைகளாக இருக்கின்றனரே தவிர தமது நாளாந்த வாழ்க்கைத் தேவைப்பாடுகளை தாமே சுதந்திரமாக தீர்மானிக்க அனுமதிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் இவர்கள் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வராமையாகும். இந்த நிலைமையில் இருந்து இவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான பெருந்தோட்ட குடியிருப்புக்கள்

மலையகப் பெருந்தோட்டங்களின் கைத்தொழில் தன்மை கருதியும், அதன் உற்பத்திகளை ஏற்றுமதிக்கென கொழும்புத் துறைமுகத்துக்கு இலகுவாக கொண்டு செல்ல வேண்டிய தேவை கருதியும் இப்பிரதேசம் எங்கும் பெருந்தெருக்களும் புகையிரதப் போக்குவரத்தும் அமைக்கப்பட்டன. அநேகமான தேயிலைத் தோட்டங்களும், தொழிலாளர் குடியிருப்புகளும் பெருந்தெருக்களுக்கு அருகாமையிலோ அல்லது பிரதான பாதைகளுக்கு அண்மியதாகவோ உள்ளன. மற்றும் பல தோட்டங்களின் எல்லைகளாக இத்தகைய தெருக்களே உள்ளன. எனவே இத்தகைய பெருந்தெருக்களை இணைத்து சுதந்திரமான பெருந்தோட்ட குடியிருப்புக்கள் (கடூச்ணtச்tடிணிண கூணிதீண குடடிணீண்) அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.

இத்தகைய குடியிருப்புக்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்கும் எதுவித தொடர்புகளோ தலையீடுகளோ இருக்கக் கூடாது. இவை தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகளும் பொது வசதிகளும், கிராமசபையூடாகவோ, பிரதேச சபையூடாகவோ நடைபெற வேண்டும். இவை தமக்கென போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு முதலான உள்ளகக் கட்டமைப்புக்கள் மற்றும் பொது வசதிகளான பாடசாலை, வணக்கத் தளங்கள், தபாற்கந்தோர், கடைத்தெருக்கள், பஸ் நிலையம், மருத்துவமனை, கூட்டுறவு விற்பனை நிலையம், பொதுச் சந்தை, நூல்நிலையம், கலாசார நிலையம், விளையாட்டு மைதானம், பொது ஒன்று கூட்டலுக்கான பிரதேசம் முதலானவையும் அமைந்திருத்தல் வேண்டும். சிலவேளை இத்தகைய ஒரு திட்டத்தை மலையகமெங்கும் ஒன்றுசேர ஏற்படுத்துவது கடினமானதாக இருக்கலாம். எனினும் எங்காவது ஒரு பொருத்தமான இடம் இனம் காணப்பட்டு மிகச் சிறிய அளவிலாவது ஆரம்பிக்கப்பட வேண்டும். உதாரணமாக மலையகத்தமிழ் மக்கள் பெரும்பான்மைச் சமூகமாக இருக்கும். நுவரெலியா மாவட்டத்தில் இது ஆரம்பிக்கப்படலாம்.

மலையக மக்களுக்கான சுய பொருளாதாரம்

தேயிலைப் பொருளாதாரமும் மலையக மக்களும்

கடந்த 2 நூற்றாண்டு காலமாக மலையகத் தமிழ்மக்கள் இந்த நாட்டு பெருந்தோட்ட பொருளாதாரத்துடன் மிகக் கலந்து போய்விட்டார்கள். இந்த நாட்டில் பொருளாதாரத்தின் முகுகெலும்பாக இருந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகவாழ்வு அளித்தது அவர்ளக் தான். மிக அண்மைக் காலம் வரை அவர்கள் உழைத்த அந்நியச் செலாவணியில் இருந்துதான் நாட்டின் இறக்குமதித் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஏற்றுமதியில்லாமல் வெளிநாடுகளில் இருந்து எந்த பொருளையும் இறக்குமதி செய்ய முடியாது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்நிய செலாவணியை உழைத்துத் தந்த இவர்களுக்கு அதன் மூலம் நாட்டுக்கு கிடைத்த நலனில் சிறிதளவுகூட போய்ச் சேரவில்லை.

(அ) ஆதலால் இந்த நாடு அவர்களுக்கு பாரிய கடன்பட்டிருக்கின்றது. அதன் ஒரு அங்கமாக தற்போது இலாபமீட்டாமல் செயற்படும் அரசுக்கு சொந்தமான பெருந்தோட்டங்கள் தொழிலாளர் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதனை அவர்கள் தனித்தனியாகவோ கூட்டுறவு முறையிலோ பயிர் செய்யலாம். இத்தகைய கோரிக்கை ஒன்று ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் அழுத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். (ஆ) அண்மைக் காலத்தில் செயற்கை உணவுப் பொருட்கள் மீதும் பானங்கள் மீதும் மக்களின் அக்கறை குறைந்து வருகின்றது என்றும் மூலிகை பானங்கள் மீதான (ஏஞுணூஞச்டூ ஈணூடிணடுண்) அக்கறை அதிகரித்து வருவதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே எதிர்காலத்தில் தேயிலை பானத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆதலால் வெறுமனே “பெருந்தோட்ட கூலிகள்’ என்ற நிலைமை மாற்றப்பட்டு சிறுசிறு தோட்ட உரிமையாளர்களாக இவர்கள் மாற்றப்பட ÷வ்டும். மொத்த தேயிலை நில உடமையின் கணிசமான பங்கு இப்போதும் சிற்றுடைமையாளர்களிடமே உள்ளது. 1975ஆம் ஆண்டின் நிலச் சீர்திருத்த சட்ட அமுலாக்கலை அடுத்து 366,184 ஏக்கர் நிலம் (61.6 வீதம்) அரசுடமையாகவும் 228,277 ஏக்கர் நிலம் (38.4 வீதம்) தனியாருக்கும் சொந்தமாக இருந்தது. இந்த நிலங்கள் இன்று நூற்றுக்கணக்கான தனியார் உடமைகளாக உள்ளன. இத்தகைய தேயிலைத் தோட்டங்கள் விலைக்கு விற்கப்படும் போது அவற்றை கொள்வனவு செய்து லி, லீ, 1 ஏக்கர் என இம் மக்களிடையே பகிரப்படுவது வாயிலாக அவர்களை நில உடமையாளர்களாக்கலாம். இதற்கென மலையக மக்கள் அபிவிருத்தி நிதி ஒன்று உருவாக்கப்பட்டு உலகளாவிய பங்களிப்பினை பெற வேண்டும்.

ஏனைய சுயபொருளாதார முயற்சிகள்

மலையக இந்திய வம்சாவழித் தமிழர்கள் பூர்வீகத்தில் விவசாயிகளே. எனவே இவர்கள் தோட்டத் தொழிலாளி என்ற கொத்தடிமைச் சிறையில் இருந்து படிப்படியாக வெளியேறி தாம் வாழ்கின்ற பிரதேசத்திலேயே காணித்துண்டொன்றை பெற்று அதில் சுதந்திரமாக வாழவும் தம்மால் இயன்ற அளவு சிங்கள நாட்டுக் கிராமத்தவர்கள் போல வாழப் பழகிக் கொள்ளவும் வேண்டும். அதற்கு இவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

1975ஆம் ஆண்டுகளை அடுத்து வந்த காலப்பகுதியில் தேயிலை உடமை தேசிய மயமாக்களின் பொது ஜனவசம, உசவசம, அ.பெ.தோ.யா. ஆகிய நிறுவனங்களுக்கு மேலதிகமாக நாட்சா (பல் பயிராக்கல் அமைப்பு) என்ற அமைப்பு ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பு இலாபம் பெறாத பெருந்தோட்டங்களை கையேற்று அவற்றை பல பயிராக்கல் திட்டத்தின் கீழ் சிறு ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிப்பதற்காகவும் கிராமத்தவரிடையே குடியிருக்கவும் பகிர்ந்தளித்தது. இத்திட்டத்தின் கீழும் மலையகத் தமிழர்கள் ஒதுக்கப்பட்டனர். இத்திட்டத்தின் கீழ் காணிகள் பகிர்ந்தளிக்கும் போது மலையகத் தமிழர்களுக்கு அவை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இவற்றைத்தவிர நுவரெலியா, வெளிமடை முதலான இடங்களில் மரக்கறி, கிழங்கு மற்றும் சிறுவியாபார பண்னைச் செய்கை, பாற்பண்ணை, கோழிப்பண்ணை போன்ற வியாபார முயற்சிகளும் இம் மக்களிடை ஊக்குவிக்கப்பட வேண்டும்.

முடிவுரை

மலையக தமிழ் தேசிய இனத்தினை ஒரு தனியான தேசிய இனம் என்று வலுவுடன் வரையறை செய்து கொள்வதற்கு தடையாக முதலாளித்துவ பொருளாதார சிந்தனைவாதிகள் சுட்டிக்காட்டும் முதன்மைக் காரணிகள் இம் மக்களுக்கு ஒரு உறுதியான பொருளாதாரம் இல்லாதிருப்பதும் அவர்கள் புவியியல் ரீதியில் ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பில் நிரந்தரமாக வதியாதிருப்பதும் ஆகும் என்று கூறுகின்றனர். ஒரு தேசிய இனம் என்று இவர்களை அழைக்க இத்தகைய காரணிகளை அவர்கள் கொண்டிருக்க வேண்டிய அவசியமற்றது என்று மார்க்ஸிய சிந்தனைவாதிகள் வலியுறுத்துகின்றனர். இதனைத் தீர்மானிப்பதற்கு இவர்கள் சுயமான மனப் பிரக்ஞைகளுடன் தம்மை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்குமாறு கோருவதனை அடிப்படையாகக் கொண்டு மாத்திரம் இவர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்குமாறு கோருவதனை அடிப்படையாகக் கொண்டு மாத்திரம் இவர்கள் ஒரு தேசிய இனமா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். அப்படியாயின் இப்போது அவ்வித ஒரு கோரிக்கை இம் மக்களிடம் இருந்து வலுவாக எழுந்துள்ளது என்று கூறலாம். இக்கோரிக்கைகளுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டியதன் தேவை இப்போது அவசியமாக எழுந்துள்ளது.

எனினும் இம்மக்கள் தம்மை மேலும் வலுவுடையவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமாயின் சுயமான பொருளாதாரத்தையும், மலையகத்தில் தொடர்ச்சியான பூமிப்பிரதேசத்தில் நிரந்தரமான வதிவிடங்களையும், வாழிடங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் மத்தியில் இருந்து ஒரு சக்திவாய்ந்த படித்த மத்திய தர வர்க்கம் ஒன்று உருவாக வேண்டும். அப்போதுதான் மலையக தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செல்நெறிகள் சரியான திசைநோக்கி நகருதல் சாத்தியமாகும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates