Headlines News :
முகப்பு » » நடேசய்யரின் சமூக வாழ்வியல் – ஒரு பார்வை : சட்டத்தரணி இ. தம்பையா

நடேசய்யரின் சமூக வாழ்வியல் – ஒரு பார்வை : சட்டத்தரணி இ. தம்பையா


(மக்கள் பண்பாட்டுக் கழகம் கஹவத்தையில் 16.12.2013 அன்று ஏற்பாடு செய்திருந்த பௌர்ணமி நிகழ்வில் ஆற்றப்பட்ட உரை)

காலமானவர்களை நினைவுகூர்வது தற்போது வெறும் சம்பிரதாயமாகவும் நினைவுகூர்வோரின் அந்தஸ்த்திற்கான நடவடிக்கையாகவும் மாறிவிட்டது. குடும்ப சூழ்நிலையில் குடும்ப அங்கத்தவர்களுக்கு காலமானவர் செய்த கடமைகளுக்கான நினைவு கூறப்படுவதுண்டு. குறிப்பிட்ட கட்சி, தொழிற்சங்கம் மற்றும் வேறு அமைப்புகளின் தலைவர்கள் கட்சியை, தொழிற்சங்கத்தை வளர்க்கும் நோக்கிலும் அவர்களின் பின்னோர்களால் நினைவுகூறப்படுவதுண்டு.

குறுகிய வட்டங்களைக் கடந்து பொது செயற்பாட்டிலும், சமூக செயற்பாட்டிலும் நேரடியாக ஈடுபட்டவர்கள், அச் செயற்பாடுகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் போன்ற பலர் பெரிதும் நினைவுகூறப்படுவதில்லை.

கோ.நடேசய்யர்அவ்வாறான ஒருவரே கோ.நடேசய்யர். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் தேவைகள் நோக்கங்களுக்கு அப்பால் தோட்டத் தொழிலாளர்களின், இன்றைய மலையக தமிழ் மக்களின், இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வுடனும், இலங்கை நாட்டின் உருவாக்கத்துடனும் அவரின் பங்கைத் தொகுப்பதற்காக மக்கள் பண்பாட்டுக் கழகம் என்னை ‘நடேசய்யரின் சமூக வாழ்வியல் – ஒரு பார்வை’ எனும் தலைப்பில் கருத்துரைக்க கேட்டுள்ளதென நம்புகிறேன்.

நடேசய்யர் வாழ்வு பற்றி இதுவரை பல தகவல்கள், நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு, வேறுபட்ட முறைமையில் நான் அவரை அவதானிக்க முயற்சிப்பதன் விளைவாக எனது கருத்துரை அமையும் எனவும் நம்புகிறேன்.

‘உழைத்து மாய்வதே எங்களின் வேலை. எனென்று கேட்க எங்களுக்கு ஏது உரிமை’ என்று களுத்துறை மாவட்டத்தில் ஒரு தோட்டத்தில் கங்காணி ஒருவரின் கல்லறையில் எழுதப்பட்ட வாசகத்தை எடுத்துக்காட்டி இவை தாம் இலங்கையில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்களின் தலைவிதியாக இருப்பதாகவும் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாயை திறக்காமல் உழைத்து சாவதையே அவர்களால் செய்ய முடிந்தது என்று டொனமூர் அரசியல் சீர்திருத்த குழுவின் இலங்கையர் சகலருக்கும் சர்வஜனவாக்குரிமை வழங்க வேண்டும் என்ற சிபாரிசின் மீது இலங்கையின் சட்டசபையில் உரையாற்றும் போது குறிப்பிட்டடுள்ளார் கோ. நடேசய்யர்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்க கூடாது என்று வாதாடியவர்களின் வாய்களை அடைக்கும் விதத்தில் விவாதங்களை முன்வைத்து அவர் பேசியுள்ளார்.

இவர் 1887 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி தஞ்சாவூர் தென் ஆர்காடு வளவனூர் கிராமத்தில் பிறந்தார். தாசில்தார் கோதண்டராமய்யரும் கல்லூரி ஆசிரியையான பகீரதம்மாளும் அவரின் பெற்றோர்கள்.

மாணவ பருவத்திலேயே பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான உணர்வை கொண்டிருந்த அவர் ஆங்கிலம் மூலம் பொது கல்வி பயில்வதை நிறுத்திக்கொண்டு, நெசவு தொழிற்பயிற்சியை பெற்றதுடன் பின்னர் வர்த்தக டிப்ளோமா படிப்பை முடிந்து கொண்டார். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலைமையுள்ள அவர் இலங்கைக்கு 1919இல் வந்தார். வெளியார் அனுமதிக்கப்படாத பெருந்தோட்டங்களுக்குள் புடவை வியாபாரியாக சென்று தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலையை அறிந்து இந்தியாவுக்கு சென்று தஞ்சாவூர் காங்கிரஸ் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க பிரசுரமொன்றை வெளியிட்டார். இலங்கையில் இயங்கிய தென்னிந்திய வியாபாரிகள் சங்கத்தின் ஆண்டு விழாவில் கலந்துக்கொள்ளவென வந்திருந்தாலும் இலங்கை வாழ் இந்தியர்கள் குறிப்பாக தோட்டத்தொழிலாளர்களின் நிலைமைகளை நேரில் கண்டறிய அப்பயணத்தை பயன்படுத்திக்கொண்டார். அவர் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் இந்தியாவுக்கு வெளியில் பிரிட்டிஷாரால் கொண்டு செல்லப்பட்டு வேலைக்கு அமர்ந்தப்பட்ட இந்தியர்கள் பற்றி அதிக அக்கறை கொண்டிருந்தார். அதன் காரணமாக அவர் இலங்கைக்கு 1920 இல் வந்து இங்கு பிரிட்டிஷ் காலனித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், இலங்கை வாழ் இந்தியர்களின் உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பான நடிவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.

எழுத்துலகு
ஐரோப்பிய வர்த்தகளுக்கு இணையாக இந்தியர்கள் வர்த்தத்துறையில் ஈடுபட வேண்டிய அவரின் முயற்சியால் 1914, 1915களில் இந்தியாவில் தென்னிந்திய வியாபாரிகள் சங்கம், தென்னிந்திய மில்காரர்களின் சங்கம் போன்றவற்றை ஆரம்பித்தார்கள். இவற்றினூடாக இந்திய வர்த்தகர்களை ஸ்தாபனப்படுத்தினார். இதனுடன் ‘வர்த்தக மித்திரன்’ என்ற பத்திரிக்கையை வெளியிட்டார். அதற்காக 1919இல் இலங்கையிலும் சந்தா சேர்த்தார். அவரின் நண்பர் ஒருவரின் முயற்சினால் இலங்கையின் தென்னிந்திய வியாபாரிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது
Colombo 1929
1920இல் இலங்கைக்கு வந்த அவர் இலங்கை தேசிய காங்கிரஸ் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அருளானந்தன், டாக்டர் ரட்ணம் ஆகியோரினால் வெளியிட்டப்பட்ட தேசநேசன் என்ற தமிழ் தினசரிக்கு 1921 ஆண்டு முதல் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தினார். இது இலங்கையின் முதல் தமிழ் தினசரியாகும். அத்துடன் லாரி முத்துகிருஸ்ணாவுடன் த சிட்டிஷன் (1922)என்ற ஆங்கில பத்திரிகையையும் வெளியிட்டார். தேசபக்தன் (1924), போர்வாட் (1926), தொழிலாளி (1929), இந்தியன் எஸ்பேட் லேபர் (1929), இந்தியன் ஒப்பினீயன் (1936), தோட்டத் தொழிலாளி (1947) மற்றும் உரிமை போர், சுதந்திர போர், வீரம், சுதந்திரன் (1947) (தமிழரசுக்கட்சியின் இதழாக தொடர்ந்தது) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
அவர் பத்திரிகை ஆசிரியராக இருந்த இலங்கை வாழ் இந்தியர்களின் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் அவலங்களை அம்பலப்படுத்துவதுடன் பிரிட்டிஷாருக்கு எதிராக தேசிய சுதந்திர கருத்துகளையும் வெளியிட்டார். இதனால் ஆரம்பத்தில் தோட்டத்துரைமார்களும் பின்னர் தோட்ட கங்காணிகளும், இந்திய வர்த்தகர்களும், சிங்கள பேரினவாதிகளும் அவரை எதிர்த்தனர்.

‘தேச நேசன்’ என்ற அவர் இலங்கையில் ஆரம்பித்த பத்திரிக்கை சில இந்திய வர்த்தகர்களின் சதியால் ஒரு வருடத்தில் நின்று போனது அப்பத்திரிக்கையில் தோட்டதுரைமாருக்கு எதிராக மட்டுமன்றி தொழிலாளர்களை அடக்கி ஆண்ட கங்காணிமார்களுக்கும் எதிராக தொழிலாளர்கள் எழுதிய கடிதங்களும் வெளியிடப்பட்டன.

அவர் வெளியிட்ட ‘தேச பக்தன்’ பத்திரிகையில் அவர் எழுதியிருந்த குறிப்பு அவரின் பத்திரிக்கை தர்மத்தை நன்கு வெளிக்கொணர்ந்துள்ளது. ‘தேசநேசன் ஒருவருக்கும் விரோதியல்ல ஆனால் பொய்யனுக்கு விரோதி, போலியர்களுக்கு விரோதி, அக்கிரமகாரனுக்கு விரோதி, வேஷக்காரனுக்கு விரோதி அதுபோலவே தேசபக்தன் உண்மையையே நாடி நிற்பான். சாதி, மதம் பாரான், உண்மையான சமத்துவம், சகோரத்துவம் பொது ஜனங்களுக்கு உண்டாக உழைப்பான். பணக்கார சாதி, ஏழை சாதி என்று இப்பொழுது ஏற்;படுத்தி வரும் ஜாதியை மனந்தளராது எதிர்ப்பான். தொழிலாளர் சார்பில் அன்புக்கொண்டு உழைப்பான்’ என்ற அந்தக் குறிப்பினூடாக அவரது கொள்கையை துல்லியமாக வெளிப்படுத்தி இருத்தார்.

பத்திரிக்கையை நடாந்துவதற்காக இந்திய வணிகர்கள், பெரிய கங்காணிமார்கள், நகர்புற, தோட்ட புற தொழிலாளர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பணத்தை சேகரித்தார். அவர் மக்களிடமிருந்து பணம் சேகரித்து பிரசுர தொழில் செய்து நின்று பிடித்த ஒருவராவர். கொழும்பு கண்ணாரதெருவில் நடாத்திய அவரின் அச்சுக்கூடத்திற்கான பெயர் ‘தொழிலாளர் அச்சுக்கூடம்’. இக்காலகட்டத்தில் அவருக்கெதிராக கருத்து நிலையை கொண்ட இந்தியன் (1924), சத்தியமித்திரன் (1927) ஆகிய பத்திரிகைகளை சில இந்தியர்கள் இலங்கையில் வெளியிட்டனர். தோட்டத்துரைமார்களின் நிதியுதவியுடன் ‘ஊழியன்’ (1931) என்ற பத்திரிக்கை அவருக்குகெதிராக நடத்தப்பட்டது.

அவர் இப்பத்திரிகைகளில் வெளி வந்த கருத்துகளுக்கு எதிராக மட்டுமன்றி லேக்ஹவுஸ் நிறுவன டைம்ஸ் பத்திரிகை நிறுவன பத்திரிகைகளில் இந்தியர்களுக்கும், தோட்டத் தொழிலாளர்களுக்கும் எதிராக வெளிவந்த கருத்துக்களுக்கெதிராக தர்க்க ரீதியாக அவரது எழுத்துக்கள் மூலம் கருத்துக்களை முன்வைத்தார். தினகரன், வீரகேசரி பத்திரிகைகளிலும் அவர் எழுதியுள்ளதாக கூறப்படுகின்றது. அவரின் கருத்துக்களை இருட்டடிப்பு செய்ய அப்போது சில பத்திரிகைகள் திட்டமிட்டு செயற்பட்டன அவர் சட்ட நிரூபன சட்டசபை உறுப்பினராக இருந்தபடியால் அங்கு அவர் ஆற்றிய உரை மூலம் அவரது கருத்துகள் வெளியாகின. அவை ஹன்சார்டில் பதிவாக்கப்பட்டதுடன் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட வேண்டிய சிறப்புரிமையும் அவருக்கு இருந்தது. அவர் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றின் மூலம் மக்களை விழிப்படைய செய்ய உழைத்துள்ளார். அவை அவரின் எழுத்து நிபுணத்துவத்தை வெளிக்காட்டுகின்றன.

இன்ஸ்வரன்ஸ், ஒயில் என்ஜின்கள், வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் நிறுவனங்களும் ஆகிய புத்தங்களை அவர் இலங்கைக்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் வெளியிட்டார். அத்துடன் வியாபாரப் பயிற்சி என்ற நூலையும் வெளியிட்டார். இந்நூல் இந்தியர்களை வர்த்தகதுறையில் விழிப்படைய செய்வதற்காக எழுதப்பட்டதெனலாம். ‘வெற்றியுனதே’ என்ற நூல் உழைப்பின் உயர்வையும், ‘நீ மயங்காதே’ என்ற நூல் மக்களை எழுச்சியையும் கொண்டதாக அமைந்தன.
தேயிலைப் பெட்டிகள் வாகனங்களில்
‘கதிர்காமம்’ என்ற நூல் கதிர்காம ஆலயத்தின் வரலாறு பற்றியதாகும். ‘தொழிலாளர் அந்தர பிழைப்பு’ என்ற நாடக நூலில் பெரிய கங்காணிகளால் ஏமாற்றப்பட்டு, ஆசைக்காட்டப்பட்டு இந்தியாவிலிருந்து இலங்கை பெருத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியர்கள் அழைத்து வரப்பட்டமையையும் கங்காணிமார்களின் அடக்குமுறைகளுக்குள்ளாகும் தொழிலாளர்களின் அவலங்கள் பற்றியும் அம்பலப்படுத்தப்பட்டது. ‘தொழிலாளர் சட்ட புஸ்தகம்’ என்ற நூல் தொழிலாளர்களின் சட்ட ரீதியான உரிமைகள் பற்றியும், வென்றெடுக்கப்பட வேண்டிய உரிமைகள் பற்றியும் குறிப்பிடுகின்றது அந்நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘சட்டம் அமுலில் இருந்தும் பல தொழிலாளர்களுக்கும் அதன் நிபத்தனைகள் தெரியாதிருக்கும் காரணத்தால் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டிய நன்மைகளை பெறாதிருக்கின்றார்கள்.
தொழிலாளர்களை சட்ட நிபுணர்களாக்க இப்புத்தகம் எழுதப்படவில்லை. அயோக்கியர்களிடம் அகப்பட்டுக்கொண்டு அவதிப்படாதிருக்க வேண்டியே இது எழுதப்பெற்றது என்பதை மறக்க வேண்டாம்’ ‘இந்திய இலங்கை ஒப்பந்தம்’ என்ற நூல் இலங்கை வாழ் இந்தியர்கள் பற்றி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். இந்நூலில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு சிங்களவர்கள் அதனை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முனையும் சூழலில் இலங்கை வாழ் இந்தியர்கள் இலங்கையை தமது தாய் நாடாக எற்று தங்களை இலங்கையின் நிரந்தரவாசிகளாக பதிந்து கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி இருத்தார். ‘அழகிய இலங்கை’ என்ற நூல் இந்திய வம்சாவளியினரை மையமாக வைத்துது இலங்கை வரலாற்றை கூறும் நூலாகும்.Planter Raj, The Ceylon Indian Crisis   ஊசளைளை ஆகிய ஆங்கில நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார.

நடேசய்யர் எழுத்துத்துறையில் மக்களின் அவலங்களை எடுத்துக்காட்டி உரிமைக்குரல் எழுப்பினார். பிரித்தானிய காலனித்துவத்திருந்து சுதந்திரம் வேண்டுமென்பதுடன் இலங்கை வாழ் இந்தியார்கள் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் உரிமையுடன் சமத்துவமாக வாழ வேண்டுமென்பதை வலியுறுத்தினார். அவர் எழுத்துடன் திருப்திப்ட்டு ஒதுங்கிவிடவில்லை சமூக செயற்பாடுகளிலும் ஈடுப்பட்டார்.

 சமூக செயற்பாட்டுத்தளம்
பெருந்தோட்டங்களுக்குள் தொழிற்சங்கவாதிகள் கூட நுழைவது சட்டப்படி அத்துமீறி பிரவேசித்த குற்றமாக கருதப்பட்ட காலத்தில் கோ. நடேசய்யர் 1919இல் இலங்கைக்கு வந்து தோட்டங்களுக்குள் புடவை வியாபாரி போன்று சென்று தொழிலாளர்களின் அவல வாழ்க்கை பற்றிய தகவல்களை திரட்டிக் கொண்டு இந்தியாவுக்கு சென்று இலங்கை வாழ் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வு பற்றி பிரசுரமொன்றை 1919இல் வெளியிட்டார். மவேலசியா, இலங்கை, பர்மா, மேற்கிந்திய தீவுகள், பிஜி, கிழக்காபிரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆங்கிலேயர்களின் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியர்களை குடியேற்றினர். அந்நாடுகளில் இந்தியர்களின் நிலை பற்றி அறிவதற்காக 1922 ஆண்டு இந்தியாவில் ‘சிம்லாவில்’ கூட்டமொன்று நடைபெற்றது. இலங்கையில் இருந்து சென்ற தூதுக்குழுவில் வில்லியம்ஸ், வில்கின்சன் ஆகிய ஆங்கிலேயர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் இலங்கையில் வேலை செய்வதற்காக மேலும் இந்தியர்களை கொண்டு வருவதை தூண்டும் எண்ணத்தை கொண்டிருந்தனர். சென்னையில் தொழில் மந்திரியாக இருந்த பி. என். சர்மாவின் அழுத்தத்தினால் நடேசய்யர் அழைக்கப்பட்டார்.

நடேசய்யர் 500 தோட்டத் தொழிலாளர்களிடம் அவர்களின் அவல நிலைகளை விளக்கும் சத்திய கடதாசிகளை – வாக்குமூலங்களை ரகசியமாக பெற்றுக் கொண்டு சிம்லா சென்று அக்கூட்டத்தில் சமர்ப்பித்தார். இவ்வாக்குமூலங்களை இந்திய அரசாங்கம் ஏற்கக்கூடாதென தோட்டத்துரைமார்கள் கேட்டுக் கொண்டனர். ‘நடேசய்யர் ஒரு விரும்பத்தகாத கிளர்ச்சிக்கார்’ என்றும் அவரது சாட்சியங்களை ஏற்க கூடாதுதென்றும் கேட்டு தந்தியொன்றை இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பியது. சாட்சியங்கனை பதிவு செய்வதற்கு பொறுப்பாக இருந்த சர்மா ‘கிளர்ச்சிகாரர்கள் உண்மை பேசக்கூடும்’ என்று கூறி நடேசய்யரின் சாட்சியங்களை பதிந்து கொண்டார். 500 வாக்கு மூலங்களும் தொழிலாளர்களின் கண்ணீர் கதையென கூறி அவர் அவற்றை சமர்பித்தார். அத்துடன் ‘சிட்டிசன்’ பத்திரிக்கையில் வெளிவந்திருந்த தோட்டத் தொழிலாளர் வாழ் நிலை பற்றிய ஆசிரியர் தலையங்கங்களை சான்றாக சமர்பித்தார்.

இதன் விளைவாக இந்தியர்களை இங்கு கொண்டு வருவதில் கட்டுபாடுகளையும் சில ஒழுங்குகளையும் கொண்ட குடியகல்வு சட்டவிதிகள் இலங்கையிலும் இந்தியாவிலும் ஆக்கப்பட்டன. இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் விவகாரங்களுக்கு பொறுப்பாக தொழில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

சிம்லா சென்று மேற்படி வேலைகளை அவதானித்ததால் நடேசய்யர் அவர்களுக்கு ஜீவனோபாயத்தை பெற்றுக்கொடுத்த தேசநேசன் பத்திரிகையின் ஆசிரியர் பதவியை கைவிட வேண்டியதாயிற்று. தொழிலாளர் சம்மோளனத்தை அமைத்து தொழிராளர்களை அங்கத்தவர்களாக சேர்ப்பதற்கு அவரும் அவரது மனைவி மீனாட்சி அம்மாளும் புடவை வியாபாரம் செய்பவர்கள் போன்றும், குறவர்கள் போன்றும் தோட்டங்களுக்கு சென்று பிரசாரங்களை செய்தனர். நாட்டார் பாடல்கள் போன்று தொழிலாளர்களை தட்டியொழுப்பும் பாடல்களை பாடி அணிதிரட்டினர்.

தோட்டத்தொழிலளார்கள் மதுவுக்கும், சூதாட்டத்துகு;கும் அடிமையாவதை எதிர்த்து பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார். தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இதையடுத்து தோட்டங்களில் இராப் பாடசாலைகள் நடாத்தப்பட்டன.

இந்திய தேசிய விடுதலை இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட சில இந்திய தலைவர்கள் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டமைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். இவரின் ஏற்பாட்டில் பெருந்தோட்டப்பகுதி நகரங்களில் பெட்டிசன் எழுதுபவர்களை நியமித்து தோட்டத்துரைமாருக்கு எதிராக முறைபாடுளை எழுதி இந்திய ஏஜன்டிற்கும், நீதிபதிகளுக்கும், தோட்டத்துiமாருக்கும் அனுப்பட்டு குடியேற்ற நாடுகளின் செயலாளருக்கும் அனுப்பட்டன.

இவரின் வழிகாட்டலில் தோட்டத்தொழிலாளர்கள், தோட்டத்துரைமாருக்கும் கங்காணிமார்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.

நடேசய்யர் பிராமணிய பழக்க வழக்கங்களை கொண்டிருந்தாக விமர்சனம் செய்யப்பட்ட போதும் அவர் சாதியத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தார் என்பது தெளிவு. அவரை எதிர்த்த இந்திய தனவந்தர்கள் அவர் ‘பிராமணன்’ என்பதை சுட்டிக்காட்டி அவரை தனிமைப்படுத்த முயற்சித்தனர்.
நடேசய்யர் பெண்களின் சமத்துவம் பற்றி வலியுறுத்தியுள்ளார். அவருடன் சரிக்கு சமமாக இருந்து தொழிற்சங்க அரசியல் பணிகளில் அவரது மனைவி மீனாட்சியம்மாள் ஈடுபட்டிருந்தார்.

சட்ட நிரூபண சபையில் டொனமூர் சிர்த்திருத்த சிபாரிசுகளின் படி பெண்களுக்கு வாக்குரிமையை வழங்குவதை சேர் பொன் இராமநாதன் எதிர்த்தார். அதற்கு பதிலளித்துப் பேசிய நடேசய்யர் ‘பெண்களுக்கு வாக்குரிமை வேண்டாம் என்று கூறும் எனது நண்பர்கள் சிலர் தங்களுக்குக் கிடைத்த சீதன பணத்தால் இங்கு வந்திருக்கிறார்கள். பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் தேர்தலில் மனைவியரும் நிற்பார்கள் என்று நினைத்து அவர்கள் தயங்குகிறார்களா?’ என்று கேட்டார்.

 தொழிற்சங்க இயக்கம்
ஏ.ஈ.குணசிங்க
1920இல் ஏ.ஈ.குணசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தொழிலாளர் யூனியன் நடவடிக்கையில் நடேசய்யர் ஈடுப்பட்டு குணசிங்கவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு உதவினார். 1927ஆம் ஆண்டு நடைபெற்ற துறைமுக வேலைநிறுத்தம் மூன்று வாரங்கள் நீடித்தது. வேலை நிறுத்தங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்குப் பதிலாக இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை வரவழைந்து தொழில் ஈடுப்படுத்தி வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சிக்ள மேற்க்கொள்ளப்பட்டன. இவ்வாறு தொழில் ஈடுப்பட வேண்டாமென தடுக்கும் முயற்சிகளில் நடேசய்யர் ஈடுபட்டார். அத்துடன் கொழும்பில் இருந்த இந்திய வர்த்தகர்களிடமிருந்து பணத்தையும் உணவு பொருட்களையும் சேகரித்து வேலை நிறுத்ததில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பகிர்தளிக்க ஏற்பாடு செய்தார். இவ்வேலை நிறுத்தம் தொடர்பாக சட்ட நிரூபனசபையில் கேள்வி எழுப்பினார்.

1928ஆம் ஆண்டு ஏ. ஈ குணசிங்க இலங்கையில் தொழில் செய்த மலையாளிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அத்துடன் அவர் தொழிற்சங்க இயக்கத்தை பெருந்தோட்டங்களுக்கு விஸ்தரிக்க விருப்பவில்லை. அவரின் இந்தியருக்குகெதிரான நிலைப்பாடும், சிங்களவர்கள் ஆரியர்கள் என்ற அவரின் அதிதீவிரவாத சிங்கள தேசியவாதமும் காரணமாக அவரின் தொடர்புகளை துண்டித்தார். அதனால் நடேசய்யரை குணசிங்க இலங்கை தொழிலாளர் யூனியனில் இருந்து வெளியேற்றினார்.

கொழும்பு நகரில் எல்லா மட்டங்களிலும் செல்வாக்குடைய, அடாவடித்தன செயற்பாடுகளை கொண்ட குணசிங்கவை நடேசய்யர் அம்பலபடுத்தினார் எனினும் 1924 – 34 வரை ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு இலங்கை வாழ் இந்தியர்களே காரணம் என்றும் நடேசய்யரை கூட இந்திய ஏஜண்ட் என்றும் சிங்கள மக்கள் மத்தியில் கருத்து பரப்பட்டிருந்தது. இந்நிலையில் 1931இல் நடேசய்யர் அகில் இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்Nமுளனத்தை அமைத்தார். அதனுடாக தொழிலாளரகளை அணிதிரட்டி கங்காணிமார்களின் அடக்குமுறைக்கும், ஆதிக்கத்திற்கும் எதிராகவும், தோட்டத்துரைமார்களுக்கு எதிராகவும் போராட்;டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள குறைப்புக்கு எதிராக 1931 மே மாதம் அட்டன் நகரில் பெரிய கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. கண்டியிலும் மாபெரும்கூட்டம் நடைபெற்றது. அதனையடுத்து நகரங்களில் கூட்டம் நடத்துவதற்கு நடேசய்யருக்கும், அவரது தொழிற்சங்கத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அவரின் முறைப்பாடுகளுக்கு எவ்வித பதிலும் அனுப்பவதில்லை என தோட்டத்துரைமார்கள் சங்கம் தீர்மானித்தது. அவருக்கு எதிரான இந்திய வர்த்தகர்கள் செயற்பட்டனர். அவரை ‘ஏமாற்றும் பிராமணன்’ என தூசித்தினர். தோட்டத்துரைமாரின் நிதி உதவியில் வெளிவந்த ‘ஊழியன்’ பத்திரிகை நடேசய்யருக்கு எதிராக அவதுறுகளை வெளியிட்டது. துரைமாரை உயர்த்தி எழுதியது. அந்தளவிற்கு அவரின் தொழிற்சங்க செயற்பாடு உக்கிரமடைந்தது.

1932இல் குறைந்த சம்பளத்தை ஏற்காத தொழிலாளர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பபடுவர் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களை இந்தியாவிற்க்கு அனுப்பும் இயக்கத்தை முன்னெடுத்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்தியாவுக்கு செல்ல உள்ளதாக காட்டி தோட்டத்துரைமார்களுக்கு அழுத்தம் கொடுத்து சம்பள குறைப்பை கைவிட வைக்கலாம் என நம்பினார். தொழிலாளர்கள் பெருமளவில் இந்தியாவுக்கு செல்ல முற்பட்டாலும் தோட்டத்துரைமார் சம்பள குறைப்பை கைவிடவும் இல்லை. தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கவும் இல்லை. 1925 – 1931 வரை சட்ட நிரூபண சபை அங்கத்தவராக இருந்த போது மட்டுமின்றி 1935 – 1947 வரை அரசாங்க சபையில் அங்கம்வகித்த வேளையில் நடேசய்யர் அப்பதவியை கொண்டு தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்க நடடிவடிக்கைகளை முன்னெடுத்தார்.

அவருடன் தொடர்பு கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது தோட்டத்துரைமார்கள் அடக்கு முறைகளை மேற்கொண்டனர். தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ‘ரேசன்’ அரிசி கூட நிறுத்தப்பட்டது. எனினும் இக்காலகட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வழக்குகளில் அதிமானவை வெற்றி பெற்றமைக்கு அவரின் தொழிற்சங்க நடவடிக்கைளே காரணமாகும்.

1942இல் தொழிலாளர் உரிமை பற்றிய ஏழு அம்சத்திட்டத்தில் அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் நடேசய்யர் கையொப்பமிட்டுள்ளார். அதில் சமசமாஜக் கட்சியும், இலங்கை இந்தியன் காங்கிரஸ்சும் கையொப்பமிட்டன. அந்தளவுக்கு அவர் தோட்டத் தொழிலாளர் விவகாரத்தில் இருந்து பிரிக்க முடியாதிருந்தார். எனினும் தோட்டங்களின் ஆங்கிலேய சொந்தக்காரகள் மட்டுமின்றி இந்திய சொந்தக்காரர்களும் நடேசய்யரை எதிரியாக கருதியது மட்டுமின்றி தோட்டங்களுக்குள் அவரையோ அவரது சங்க தலைவர்களையோ அனுமதிக்கவில்லை.

1940களில் நடேசய்யரின் தொழிற்சங்கத்தை விட பெருந்தோட்டங்களில் இலங்கை சமசமாஜ கட்சியினது தொழிங்சங்கமும் இலங்கை – இந்தியன் காங்கிரசும் வளர்ச்சியடைந்தன. அவர் இ.ச. கட்சியுடனும், இ.இ. காங்கிரசுடனும் தொடர்பு வைத்திருந்த போதும் அவற்றில் இணைத்து செயற்படவில்லை.

மலையகத்தில் முதலாவது தொழிற்சங்கவாதியான அவர் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும் தோட்டத்துரைமாருக்கும் எதிராக செயற்பட்டதுடன் இந்திய வர்த்தகர்களுடனும் தோட்ட சொந்தக்காரகளுடனும் சிங்கள பேரினவாதிகளுடனும் எவ்வித சமரசமும் செய்யாமல் அவருடைய பத்திரிகை தொழிலையும், தொழிற்சங்க இயக்கத்தையும் முன்னெடுத்தது போன்று அரசியலையும் முன்னெடுத்தார்.

 அரசியல் நடவடிக்கைகள்

i. ஏகாதிபத்திய எதிர்ப்பு
பாட்டாளிகளின் முதலாவது சோஷலிச நாடான சோவியத் ஒன்றியம் 1917 அமைக்கப்பட்டது. உலக நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களும், தொழிலாளர் வர்க்க எழுச்சி போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நடைப்பெற்ற இக் காலகட்டத்தில் நடேசய்யர் இந்தியாவில் பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிரான சுதந்திர போராட்ட கருத்துகளால் உள்வாங்கப்பட்டடிருந்தார். பிரித்தானியர் இந்தியர்களை வெளிநாடுகளில் குறைந்த கூலிக்கு வேலை செய்வதற்காக கொண்டு சென்றனர். அவர்களுடன் வர்த்தகம் உட்பட வேறு துறை சார்ந்தவர்களும் பிரித்தானிய காலனி நாடுகளுக்கு சென்றனர். அவ்வாறு சென்றவர்கள் பிரித்தானியர்களாலும் அந்நாட்டு ஆளும் வர்க்கத்தினராலும் ஒடுக்கப்பட்டனர்; தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்டனர்.

அதை கண்டு கொதித்தெழுத்த இந்தியர்களில் நடேசய்யரும் ஒருவர். தமிழ் நாட்டில் ஆங்லேயருக்கு எதிராக இந்திய வணிகர்களுடன் இணைந்து செயற்பட்டார். இலங்கைக்கு வந்த அவர் கொழும்பில் இருந்த இந்திய வணிகர்களுடன் துறைமுக, ரயில்வே துறைகளில் வேலை செய்த இந்திய தொழிலாளர்கள் பற்றி மட்டுமின்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பற்றியும் கூடிய கரிசனை செலுத்தினார். இந்திய தேசிய எழுச்சியில் ஈடுபட்டிருந்த தலைவர்களின் கருத்துக்களால் ஆகர்சிக்கப்பட்ருந்தார்.

1930களில் அன்னி பெசன்ட், திலகர் போன்ற இந்திய சுதந்திர இயக்க தலைவர்களை இலங்கைக்கு அழைத்து சுதந்திர போராட்ட கருத்துகளையும் பரப்பினார். 1921ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த மணிலாலை இங்கே தங்க வைத்து பிரித்தானிய காலனிக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சித்தார். இந்திய தேசியவாதியும், கம்யூனிஸ்ட்டுமான மணிலால் ஒரு சட்டத்தரணி அவர் மொரிஸியஸ், பிஜி, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தவராவார். அவர் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு வேண்டாதவராக இருந்தார். இவர் இலங்கைக்கு வந்து ஒரு சில நாட்களில் நாடு கடத்தப்பட்டார். இவரை மட்டுமல்ல இலங்கையில் இருந்த ஏனைய இந்திய தலைவர்களும் நாடு கடத்தபட்ட போது எதிர்ப்பு இயக்கங்களை முன்னெடுத்தார்.

இலங்கை தொழிலாளர் யூனியன். இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியவற்றில் தலைவராக இருந்த ஏ.ஈ.குணசிங்கவுடன் இணைத்து செயற்பட்டதால் இடது சாரிகளுடன் தொடர்பேற்பட்டது. அவருடன் முரண்பாடுகள் ஏற்பட்டு அவருடன் தொடர்புகளை தூண்டித்துக் கொண்டாலும் இலங்கை சமசமாஜ கட்சி, கமயூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் கூட்டிணைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களையும் தொழிலாளர் உரிமைப் போராட்டங்களையும் அவர் முன்னெடுத்தார். 1936 மாத்தளையில் ஒரு தோட்டத்தின் சின்னத்துரையாக இருந்த இடதுசாரியான பிரிஸ்கேடலை இணைத்துக்கொண்டு அரசியல் நடவடிக்கைகளை ஈடுபட்டார். இலங்கைக்கு பிரித்தானியரிமிருந்து பூரண சுதந்திரம் வேண்டுமென்ற நிலைப்பாட்டில் செயற்பட்டார்.
King Edward VIII

1921, 1922 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிரித்தானிய வேல்ஸ் இளவரசன் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் விஜயம் செய்த போது ‘பிரிட்டிஷ் அரசே கவனம்’ என்ற தலைபில் கட்டுரை எழுதி அவரது பிரித்தானிய காலனித்துவ எதிர்பை காட்டினார். அதில் பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் ஆட்டம் காணுவதாகவும் அது அழிவது நிச்சயம் என்றும் எழுதியிருந்தார். இந்நாடவடிக்கைகளின் காரணமாக அவர் ஒரு தேசத்துரோகி என்றும், அவர் கம்யூனிஸ்ட் மணிலாலுடன் மட்டுமின்றி வெளிநாடுகளிலுள்ள தீவிரவாதிகளுடனும் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் குடியேற்ற நாடுகளின் செயலாளருக்கு இலங்கை பொலிசார் அறிக்கை சமர்பித்திருந்தனர். இதனை அடுத்து இந்தியாவில் அவர் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பது பற்றி கண்காணிக்கும்படி செயலாளர் இந்திய பொலிசாரிடம் கேட்டிருந்தார்.

அவர் காந்தி, ஜவஹர்லால் நேரு போன்றோர் இலங்கைக்கு வந்த போது அவரின் பெயர் வரவேற்பு குழுவில் இடம்பெறாமல் சிங்கள தேசியவாத தலைவர்களின் பெயர்களே இடம் பெற்றிருந்தன. அத்துடன் 1939 ஆண்டு இலங்கைக்கு நேரு வந்த போது அவருக்கு வரவேற்பளிக்கபட்ட போது நடேசய்யர் சமர்பித்த வரவேற்பு பத்திரத்தில் இந்திய காங்கிரஸ் இலங்கை வாழ் இந்தியர்களை மறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டருந்தது. இது பற்றி நேரு பேசும் போது காங்கிரஸ் உங்களை கைவிடாது என்று கூறியுள்ளார். நேருவின் ஆலோசனையில் உருவாக்கப்பட்ட இலங்கை – இந்தியன் காங்கிரஸின் முதலறிக்கையில் நடேசய்யர் கையெழுத்திடவில்லை. அத்துடன் இடைக்கால குழுவின் இடம்பெற்றிருந்தாலும் அதனுடன் கருத்து முரண்பாடு கொண்டவராக இருந்தார். இந்திய காங்கிரஸின் நிலைப்பாட்டின் மீது அவர் முரண்பட்டிருந்தார். இந்திய தோட்ட முதலாளிகள், வர்த்தகர்கள், கங்காணிமார்களின் ஆதிக்கத்தில் இருந்த இலங்கை – இந்திய காங்கிரசுடன் முரண்பட்டவராகவே இருந்தார். அவர் அக்காலத்தில் சட்டசபையில் இருந்த போது சுதந்திரமாக செயற்பட்டார். இலங்கையில் இயங்கிய இந்திய சமூக சங்கங்கள் பிரித்தானிய பக்கம் சார்ந்து நடப்பதாக குறைகண்டார்.

ii. இடதுசாரி நிலைப்பாடு
நடேசய்யர் இலங்கை வாழ் இந்திய வர்த்தகர்கள், தோட்டக்கங்காணிமார்கள் மற்றும் இந்திய நடுத்தர வர்கத்தின் உதவியுடன் இங்கு பத்திரிகை மற்றும் தொழிற்சங்க பணிகளையும், சட்ட நிரூபண, சட்ட சபை உறுப்பினர் என்ற ரீதியான பணிகளையும் மேற்கொண்டிருந்தாலும் இலங்கையில் சமகாலத்தில் இயங்கிய இந்தியர் சங்கங்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அவை ஆங்கிலேயரை பகைத்துக் கொள்ளாத நிலைப்பாட்டில் இயங்கியது தொடர்பில் விமர்சனங்களை கொண்டிருந்தார். அவர் இலங்கைக்கு வந்த காலத்தில் இடதுசாரி நிலைப்பாட்டை கொண்டிருந்த ஏ.ஈ.குணசிங்கவுடனும் (அவர் பின்னர் தீவிர மலையாளிகள் எதிரப்பு நிலைப்பாட்டை எடுத்து தீவிர சிங்கள தேசியவாதத்தை நிலைப்பாட்டை எடுத்தார். அவர் அநகாரிக தர்மபாலவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு செயற்படலாயினார்.) அவருடன் தொடர்புக் கொண்டு இருந்தவர்களுடன் இணக்கபாட்டுடன் இயங்கினார். அவர்களுக்கு இந்திய சுதந்திரப்போராட்ட தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரும், கம்யூனிஸ்ட்டுகளில் ஒருவருமென அடையாளம் காணப்பட்ட மணிலால் (இவர் லண்டனில் சட்டம் பயின்று 1907இல் அங்கே சட்டத்தொழிலை ஆரம்பித்தார்.) 1921 ஆண்டு இலங்கைக்கு வந்த பிறகு அவருடன் ஏற்பட்ட நெருக்கத்தின் காரமாக அவரின் கருத்துகளின் செல்வாக்கிற்கு உட்பட்டவராக தோட்டத் தொழிலாளர்களின் வாழ் நிலைபற்றியும், உரிமைகள் பற்றியும் கவனம் செலுத்தினார். இலங்கை சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பவற்றுடன் நெருக்கமாக செயற்பட்டார். அவற்றுடன் இணைந்து தனது வேலைத்திட்டத்துடன் அவற்றை இணைத்துக்கொண்டு பிரிடிஷ் காலனித்துவதற்கு எதிரான நடவடிகைகளிலும் தோட்டத் தொழிலாளர்க்கான உரிமைகளை வென்றெடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். அவர் தன்னை ஒரு இடதுசாரி என்றோ அல்லது தான் மாக்சிய அடிப்டையில் செயற்படுவதாகவோ வெளிபடையாக பிரகடனப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் தனது தொழிற்சங்கத்தை இடதுசாரி சங்கம் என்று அழைக்காவிட்டாலும் அவரின் வாழ்வையும், செயற்பாடுகளையும் அவதானித்தால் அவர் இடதுசாரி ஆதரவாளனாக அல்லது ஒரு இடது சாரியாக இருந்தார் எனலாம். அவர் 1940களில் மாக்சியம் பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் கூடிய கவனம் செலுத்தியதாக அறிய முடிகிறது ஆனால் தன்னை அவர் மாக்சியராக செல்லிக்கொள்ளவில்லை.

பிரிஸ்கேடில் என்ற கம்யூனிஸ இயக்கங்களில் ஈடுபாடு கொண்டிருந்த மாத்தளை, மடுல்கலையில் ரேலுகாஸ் தோட்டத்தில் சின்னத்துரையாக வேலை செய்த அவுஸ்திரேலியர், இலங்கை தோட்டத்; தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களிலும், பிரிடிஷ் காலனித்து எதிர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டார். அவர் கம்யூனிஸ்ட் கட்சி. சுமசமாஜ கட்சிகளுடன் அணைந்து செயற்பட்டார் அவரை இணைத்துக்கொண்டு நடேசய்யர் பல போராட்டங்களில் ஈடுபட்டார்.

நடேசய்யர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இயக்கத்தின் உறுப்புரிமை கொண்டவராக இருந்தாரா என்று சந்தேகம் எழுப்பபட்ட போதும் அதற்கு இதுவரை ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அவருக்கு தீவிரவாத இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கங்களுடன் தொடர்புகள் இருந்திருக்கலாம்.

iii. சட்ட நிரூபண, சபை சட்டசபை அங்கத்துவம்
இலங்கையில் 1924 முதல் 1931 வரை சட்ட நிரூபண சபை இயங்கியது இதில் முதலாவது தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். அதில் அவருக்கு 2948 வாக்குகள் கிடைத்தன. (இவை தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளாகும் என அவர் கூறியதுண்டு) ஆறு மாதங்களின் பின் நடைபெற்ற இடைத்தேர்தல் அவர் 16324 வாக்குகளை பெற்று வென்றார். அது தொடக்கம் 1931 ஆண்டு வரை அச்சபையில் இந்திய வசம்சாவளியினரின் பிரதிநிதியாக இருந்தாலும் அவர் இலங்கையின் அனைத்து மக்களுக்காகவும் சபையில் குரல் எழுப்பியுள்ளார்.

அச்சபையில் தோட்டத் தொழிலாளர்கள் குறித்து கொண்டுவரப்பட்ட சட்டங்களின் மீது விவாதித்த போது தொழிலாளர் நலன்சார் கருத்துக்களை முன்வைத்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கும் டொனமூர் குழுவினரின் சிபாரிசுபடி சர்வசன வாக்குரிமையை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பல சிங்கள உறுப்பினர்களும் சில தமிழ் உறுப்பினர்களும் எதிர்த்த போது அவர் சரியான எதிர்வாதங்களை முன்வைத்து தோட்டத் தொழிலாளர்களும் சர்வசன வாக்குரிமை கிடைக்க வழி செய்தார். சிங்கள உறுப்பினர்களும் சில இலங்கைத் தமிழ் உறுபினர்களும் தெரிவித்த இலங்கை வாழ் இந்தியர்களுக்கு குறிப்பாக தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிராகவும், அவர்களை தரக்குறைவாகவும் காட்டிய கருத்துகளுக்கும் எதிராக சபையில் வாதம் புரிந்தார்.

1929 ஆம் ஆண்டு நடைபெற்ற சபைக்கான தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. பின்னர் 1936இல் நடை பெற்ற அரசாங்க சபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். தோட்டத் தொழிலாளார்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு செய்ததால் அவர்கள் இலங்கையின் பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் செயற்பட்டார். அவர்களின் சம உரிமையை வலியுறுத்தினார். இந்தியா பிரித்தானியர்களுக்கு தேவையான கூலிகளை வழங்கும் நாடாக இருக்க கூடாது என்றார்.

ia. பேரினவாத மேலாதிக்கம்
சிங்கள தேசியவாத தலைவர்களிடம் இருந்த இந்திய எதிர்ப்பு, தோட்டத் தொழிலாளர் எதிர்ப்பிற்கு எதிராக நடேசய்யர் அயராது போராட்டம் நடத்தி வந்துள்ளார். ஏ.ஈ குணசிங்கவின் மலையாளி எதிர்ப்பு இந்தியர் எதிர்ப்புக்கு எதிராக தேகபக்தன் பத்திரிகையில் அம்பலப்படுத்தியதுடன் தாக்குதல்களையும் நடத்தியுள்ளார். தோட்டத் தொழிலாளர்களை மையமாக கொண்ட இலங்கை சிங்கள மக்களின் இந்திய எதிர்ப்பு அர்த்தமற்றது என்பதை தொடர்ந்து எடுத்துக் கூறிவந்தார். அதேவேளை தோட்டங்களில் 25 சதவீத சிங்கள தொழிலாளர்கள் வேலைக்கமர்த்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். காரணம் தொழிலாளர்களாக சேர்க்கப்பட்ட சில சிங்களவர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வினால் தோட்டத் துரைமாருக்கு எதிராக செயற்பட்டனர். அவர்களுடன் இணைந்து செயற்பட்டால் இந்திய தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தும் நிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் சிங்கள, இந்திய தொழிலாளர்கள் இணைந்து செயற்பட சிங்களவர்கள் தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்பட வேண்டுமென விரும்பினார்.

a. சில இலங்கைத் தமிழர்களின் மேலாதிக்கம்.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம்

இலங்கை வாழ் இலங்கை, இந்தியத் தமிழர்களிடையேயான ஒற்றுமையை வலியுறுத்தினார். எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் அழைப்பை ஏற்று அவர் 1947இல் ‘சுதந்திரன்’ பத்திரிகைக்கு ஆசிரியரானார். அதன் முதல் இதழில் பத்திரிகையின் நோக்கம் பற்றி அவர் எழுதிய குறிப்பு தமிழர் ஒற்றமையை வலியுறுத்துகிறது. ‘தமிழர் யார் என்ற பிரச்சினை கிளம்புகிறது. வெகு காலத்திற்கு முன் வந்தவர்கள் தங்களை இலங்கைத் தமிழர் என்கிறார்கள். பின் வந்தவர்கள் இந்தியத் தமிழர் என்கிறார்கள். எல்லோரும் தமிழர் என்பதை மறந்துவிட்டனர். இந்தியத் தமிழர்களில் சிலர் தங்களை இந்தியன் என்று கூறிக்கொள்வதில் தங்களுக்கு ஏதோ பிரத்தியேக நன்மை இருப்பதாக கனவு காண்கிறார்கள். இந்தப் பிரிவினை யாரால் ஏற்பட்டது என்பதை அறிவாரா? இவ்விரு தமிழர்களையும் பிரித்து வைப்பதில் தங்களுக்கு பயன் ஏற்படுமென்று சிங்களச் சகோதரர்கள் செய்துள்ள சூழ்ச்சி. இந்த சூழ்ச்சியிலீடுபட்டுள்ள சில சுய நலத் தமிழர்களும் இருக்கின்றனர். ஆகவே இந்த சூழ்ச்சியிலிருந்து தமிழ் பொது மக்கள் தப்ப வேண்டும். இந்த ஒரே நோக்கம் கொண்டுதான் சுதந்திரன் ஆரம்பிக்கப் பெற்றிருக்கிறது. சாதாரண மக்களிடம் அரசியல் ஞானத்தை பரப்ப வேண்டியது முதல் கடமையாகும்’ என்பது அக் குறிப்பாகும். இப் பத்திரிகை பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ ஏடானது. இதே கால கட்டத்தில் ‘சுதந்திரன்’ காரியாலயத்திலிருந்து நடேசய்யா தோட்டத் ‘தொழிலாளி’ என்ற அவரது கடைசிப் பத்திரிகையை வெளியிட்டார்.

சேர். பொன் இராமநாதன்
எனினும் அவர் இந்தியர்களை, இந்தியத் தோட்டத் தொழிலாளர்களைப் பற்றி தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டு வந்த இலங்கைத் தமிழ்த் தலைவர்களுடன் எதிர்வாதம் புரிந்துள்ளார். குறிப்பாக சேர். பொன் இராமநாதன், எஸ். மகாதேவா, சி. சுந்தரலிங்கம், ஜி.ஜி. பொன்னம்பலம் போன்றோர் தோட்டத் தொழிலாளர்களை குடியேற்ற கூலிகள் என்று விழித்ததை எதிர்த்துள்ளார்.

அவர்கள், கண்டியர்களை இந்தியர்கள் கீழிருந்தும், ஐரோப்பியர்கள் மேலிருந்தும் நசுக்குகிறார்கள் என்று சட்ட சபையில் தெரிவித்த கருத்துக்களை நடேசய்யர் காண்டித்துள்ளார்.

இன்று ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ள தோட்டத் தொழிலாளர்களை பிரதானமாகக் கொண்ட மலையகத் தமிழ் மக்கள் மீதான சிங்கள மேலாதிக்கத்தை எதிர்த்தது போன்று இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் சிலரின் மேலாதிக்க நிலைப்பாட்டையும் கண்டிக்கத் தவறவில்லை.
அவர் 1947.11.06 அன்று கொழும்பில் காலமானார். எஸ்.ஜே.வி. செல்வநாயகமே அவரின் இறுதி நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடேசய்யர் பற்றிய சில அவதானிப்புகள்
1. அவரை மனிதாபிமானி, ஜனநாயகவாதி, பிரிட்ஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் என்றும் இடதுசாரி முனைப்பு கொண்டவர் என்று கூறலாம்.
2. அவர் இலங்கை தமிழ் பத்திரிகை துறையின் முன்னோடி. துணிவான மக்கள் நலன்சார் பத்திரிகையாளன்.
3. ஆவரின் இலக்கியப் பணி மலையக தமிழ் இலக்கியத்தின் ஆரம்பமெனலாம்.
4. மூடநம்பிக்கைகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் எதிரானவர்.
5. சாதியத்திற்கு எதிரானவர்.
6. பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரானவர்.
7. பெருந்தோட்ட தொழிற்சங்க முன்னோடி அவரே பெருந்தோட்ட தொழிற்சங்க வரலாற்றுக்கு பாதை வெட்டி முதற் பயணம் மேற்கொண்டவர்.
8. மலையக பாராளுமன்ற முன்னோடி.
9. மலையகத் தமிழ், இலங்கை தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு அடித்தளமிட்டவர்.
10. தனிப்பட பன்முக ஆளுமை கொண்டவர்.
11. தோட்டத் தொழிவாளர்கள் சிங்களத் தொழிலாளர்களின் ஒற்றுமையை விரும்பியவர்.
12. அவர் இலங்கை வாழ் இந்திய வர்த்தகர்களின் நலனுக்காக இலங்கைக்கு வந்திருந்த போதும் அவரின் செயற்பாட்டுத் தளம் பிரிட்டிஷ் காலனித்துவ எதிர்ப்பு, பேரினவாத எதிர்ப்பு, தோட்டத் தொழிலாளர்களின் உரிமை, இலங்கை தமிழர்களின் ஒற்றுமை என விரிவடைந்து செல்கிறது.
சில கேள்விகள்
1. 1940களுக்கு பிறகு அவரது பத்திரிகை, தொழிற்சங்க, அரசியல் தளத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது ஏன்?
2. இ.ச.ச கட்சி, இலங்கை-இந்தியன் காங்கிரஸ் அவரது இடத்தை பிடித்துக் கொண்டதற்கு காரணம் என்ன?
3. 1947 பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது ஏன்?
4. 1947 சுதந்திரன் பத்திரிகையை பொறுப்பேற்றத்திற்காக அரசியல் நிலைபாடென்ன?
5. அவரின் இயக்கத்தினுடாகவோ, வேறு வகையியோ அவரது பாரம்பரியத்தை அவதானிக்க முடியாதது ஏன்?
சில முடிவுகள்
1. பண பலம், ஸ்தாபன பலம் போன்றவை இல்லாததுடன் நிலையான அரசியல் கருத்தியல் இல்லாமையும் அவரின் பத்திரிக்கை தொழிற்சங்க, அரசியல் தளத்தை தக்கவைக்க முடியவில்லை.
2. இ.ச.ச கட்சி வளம் கொண்டதாகவும், அரசியல் கருத்தியல் கொண்டதாக சர்வதேச, தேசிய நிரோட்டத்துடன் இணைந்து காணப்பட்டால் அவரின் இடத்தை அதுவும் பிடித்துக் கொண்டது.
3. இலங்கை – இந்தியன் காங்கிரஸ் இந்திய அரசாங்க ஆசிர்வாதத்துடன், இலங்கை வாழ் இந்திய தனவந்தர்களினதும், கங்காணிகளினதும் கூட்டாக இருந்ததால் வளமிகுந்ததாக இருந்தது. நடேசய்யர் இந்திய அரசாங்கத்துடன் தன்னை இனங்காட்டவில்லை தோட்டத் தொழிலாளர்கள் என்ற வட்டத்திற்குள் இருந்ததுடன் வேறு ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் அவரிடம் இருக்கவில்லை. இந்தியாவிலும் அவருக்கு சமமான நிலைப்பாட்டை கொண்டவர்கள் பலவீனப்பட்டிருந்தனர். இதனால் இலங்கை இந்தியன் காங்கிரஸ் வளர்ந்து பின்னர் இ.தொ.கா என மாறியது.
4. 1947 தேர்தலில் தோல்வியடைய இ.இ. காங்கிரசின் சதி காரணமென சொல்லப்படுகின்றது. அவர் சட்ட நிரூபண சபை, சட்ட சபை உறுப்புரிமையை பத்திரிகை துறைக்கும், தொழிற்சங்கத்திற்கும் பயன்படுத்திய அளவிற்கு அத்துறைகளை பாராளுமன்ற அங்கத்துவத்திற்காக பணன்படுத்தவில்லை.
5. அவர் சந்தித்த பின்னடைவுகளுக்கு பின் அவர் தனது இயங்குமுறையை மாற்றிக் கொண்டார். பிரிட்டிஷ ஆட்சி நீக்கத்திற்கு பின்னர் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக செயற்படுவதன் அவசியம் குறித்து தீர்மானித்திருக்கலாம்.
6. அவரின் நேரடி தொழிற்சங்க. அரசியல், பத்திரிகைத்துறை வாரிசுகள் இல்லாவிட்டாலும் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் வர்க்க ரீதியாகவும் தேசிய இனரீதியாகவும் வளர்ச்சியடையவும் அவர்களின் சமூக அசைவியக்கத்திற்கும் அவரின் 24 வருட பங்களிப்பு அடித்தளமிட்டுள்ளது.
7. இவ்வுரையின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டப்பட்ட கல்லறை வாசகமான ‘உழைத்து மாய்வது எங்களின் வேலை. ஏனென்று கேட்க எங்களுக்கு ஏது உரிமை’ என்பதை அவரின் வாழ்க்கை நடைமுறையால் தலைகீழாக மாற்றினார்.
8. அவரின் பின்னோர்கள் அவர் வழி சீர்தூக்கி பார்க்கத்தவறி, அவர் விட்ட இடத்திலிருந்து பயணத்தை தொடர தவறியதால், தொடர முடியாததால் இன்று பேரினவாதிகளினதும் முதலாளிகளினதும் பிடிக்குள் மலையகத் தமிழ் மக்கள் மாட்டிக் கொண்டிருப்பது மட்டுமின்றி அச்சமுகத்தின் முதலாளி வர்கத்தினதும், அச்சமுகத்திலிருந்து தோன்றியுள்ள சில புதுப்பணக்கார மற்றும் படித்த சமூகத் தட்டினரான லும்பன் மாபியாக்களிடமும் மாட்டிக் கொண்டுள்ளனர். இப்பிடிகளிலிருந்து விடுபட்டு ஜனநாயக ரீதியான முற்போக்கான தலைமையை கட்டி வளர்ப்பதே அவரின் பணியை தொடரும் வழிமுறை ஆகும்.

நன்றி - இனியொரு
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates