Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மு.சி கந்தையாவின் ‘நிசங்களின் சத்தம்’ - லெனின் மதிவானம்

மு.சி கந்தையாவின் ‘நிசங்களின் சத்தம்’ மலையக சமூகத்தின் நினைவுப் பதிவுகள் 


கவிஞர் மு.சி. கந்தையா எழுபதுகளில் இலங்கையில் மலையக இலக்கியத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர். அரசியல் சமூக நெருக்கடிகளின் காரணமாக தாயகம் திரும்பிய பின்னரும் தொடர்ந்து சமூகச் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டி வருபவர். மலையகச் சமூகம் பொறுத்து பல்வேறு பரிமாணங்களும், வௌ;வேறு வரலாறுகளும் முன் வைக்க கூடிய ஒரு சூழலில், அத்தகைய சமூக உருவாக்கத்தில் வேர்கொண்டு பின், நசிந்து போன அரசியலின் விளைப்பொருளான சமூக முரண்பாடுகள்- இனமுரண்பாடுகள் எவ்வாறு இம்மக்களை இந்நாட்டிலிருந்து அந்நியப்படுத்தி இந்தியாவிற்கு புலம்பெயர வைத்தது என்பது குறித்து சிந்திக்க வேண்டியதும் காலத்தின் தேவையாகும். தனிமனித அளவிலும் சமுதாய அளவிலும் மனித உறவுகள் மாறுகின்ற போது தம் காலத்து பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் சிறப்பாக அடையாளம் கண்டுக் கொண்ட ஒருவராலேயே காலத்தை வென்று நிற்க கூடிய  படைப்புகளை  உருவாக்க முடியும். அந்தவகையில் அந்தவகையில் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தாரை வார்த்து இம் மண்ணில் மதர்த்து தளைத்து நிற்கும் தேயிலைச் செடிகள்: அவை பலி கொண்ட சோகமிக்க சமூகத்தின் குரலே மு.சி. கந்தையா என்ற மனிதனையும் கவிஞனாக்கியிருக்கின்றது. மலையக மக்கள் இம் மண்ணில் வஞ்சிக்கப்பட்ட போது  தமது பூர்வீக மண் தம்மை காக்கும்- இன்பத்தை தரும் என்ற நம்பிக்கையில் அங்கு சென்றவர்கள் எவ்வாறு அரசியல் அநாதைகாளக்கப்பட்டு இன்னும் “சிலோன் காரர்கள்”; என்ற அடையாளத்துடன் வாழ்கின்ற அவலம், இவரது கவிதைகள் சமூகப் பொறுப்புணர்வுடன் பட்டைத் தீட்டுவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கியிருக்கின்றது. ஒருவகையில் இவரது கவிதையின் களம் வௌ;வேறு சூழலாக இருந்த போதினும் அதன் மையச்சரடாக விளங்குவது மலையக சமூக பின்புலமே.  அத்தகைய வாழ்க்கை அனுபங்களை கொண்டு சிறந்த படைப்பாளியாகவும், சமூக ஆளுமையாகவும் உருவாகியுள்ள மு.சி. கந்தையா மலையக சமூகத்தின் அனுபவபிரதியாக விளங்குகின்றார். இத்தகைய வாழ்வியல் அனுபவங்களினுள்ளிருந்து எழும் இலக்கிய பிரதிகள் தான் மலையக சமூகத்தின் எதிர்காலவியலை உருவாக்கக் கூடிய சாத்தியங்களை தோற்றுவித்திருக்க கூடிய கூறுகளில் ஒன்றாகும். இத்தகைய சூழலில் உருவான மனிதர்களின் பிரசன்னத்தின்  வெளிப்பாடாகவும் இத்தொகுப்பு கவனத்தைப்பெறுகின்றது. மலைகய சமூகத்தின் நிலைக் குறித்து “சோரம் போகும் அதிகாரம்”; என்ற கவிதையில் அவரது உணர்வுகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றது:

துச்சாதனர்களுக்கும்
ஆதிகார சோரத்திற்கும்
மேய்ச்சல் நிலமாக!

இம்மலைப் பிரதேரத்தை
மலடாக்கும்…
ஆட்சிமையின் ஆயுதங்கள்
முனை மழுங்க
ஊதாரி எண்ணங்களால்
ஊமையாகிப்போயின…

இம்மண்ணின் ஆளுமைக்கு
புதிய வேர்கள் முளைத்து எழட்டும்!

மலையக மக்களின் தோட்டப்புற வாழ்வுடன் இணைக்கப்பட்ட அரை அடிமை நிலை- அதனடியாக தோன்றிய வர்க்க இனத்துவ அடக்குமுறைகள்- கூடவே அம்மக்கள் தமக்காக செய்த கலகங்கள் யாவும் அவர்களை இந்நாட்டின் தனித்தவமான இனம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அத்தகைய தேசியத்தின் அடியாக எழக் கூடிய எழுச்சிகள் மாற்றங்கள் ஒருவகையில் இந்நாட்டின் ஆதிக்க சக்திகளை கதிகலங்கவே செய்திருக்கின்றன. எனவே மலையக மக்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமாக கட்டவழித்து விடப்பட்ட இனவண்முறைகள் மற்றும் காலத்திற்கு காலம் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் இம்மக்கள் ஒரு தனித்துவமான இனம் என்ற இருப்பை சிதைப்பதற்கான முயற்சிகளே. இத் தொகுப்பின் உயிர் நாடியான நிஜங்களின் சத்தமும் அதுதான். இவ்வாறே ‘ இறந்தகாலம் பெற்ற நிகழ்காலம்’ என்ற கவிதையும் மலையக மக்களின் துன்பம் தோய்ந்த வரலாற்றை பதிவாக்கும் முயற்சியின் வெளிப்பாடாகும்.

இவ்வாறே மலையகத்தில் பெருந்தோட்டதுறையில் குறைந்த தொழிலாளர்களை கொண்டு கூடிய லாபத்தை பெறவேண்டும் என்ற நலனும் பரந்துப்பட்ட தொழிலாளர்களை பெரும் பாண்மையாக கொண்டிருந்த மலையக சமூகத்தின் ஒரு சமூகமாக உருவாக்கத்தை சிதைக்க வேண்டும் என்ற நசிந்து போன அரசியல் பின்னணியுமே இலங்கை இந்தியாவுடனான சமரங்களை மேற்கொள்ள வேண்டிய சூழலை உருவாக்கியிருந்தது. அதேசமயம், 1960களின் ஆரம்பத்தில் இந்தியாவிற்கு சீனாவுடனான முரண்பாடுகள், இந்தியா பாக்கிஸ்தான் முரண்பாடுகள் , பர்மா இந்தியர்களை துரத்தியடித்த சம்பவங்கள் யாவும் இலங்கையுடன் சுமூகமான உறவை பேன வேண்டிய நிர்பந்தம் இந்தியாவிற்கு ஏற்படுத்தியிருந்தது. அந்தவகையில் இவ்விரு நாட்டினரதும் ஏகபோக   நலனை அடிப்படையாகக் கொண்டே சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. இவ்வொப்பந்தம் இம்மக்களை அரசியல் அநாதைகளாக்கியதுடன் அம்மக்களின் இயல்பான வாழ்வும் ஈவிரக்கமற்ற முறையில் சிதைக்கப்பட்டது. இச் சம்பவத்தை மலையகத்தில் தோன்றிய பல இலக்கிய படைப்புகள் பதிவாக்கியிருக்கின்றன.

இலங்கைப் பொருளாதார
வண்டியில்
பல்லும் சில்லூமாகி
காப்பி தேயிலை
இரப்பருக்குள்
புதைந்தவர்களின்
வாரிசுகள்!

நாடுகள் விட்டு நாடுகள்
கடத்தப்பட்டு
‘மேய்ப்பர்கள் இல்லாத’
மந்தைகளாகிப் போன
தலைமுறையின்
விழிகள் அலைகின்றன
மூலத்தின் முகவரியைத் தேடி…!

என இக்கவிஞரும் அச்சம்வம் பற்றி எழுதுகின்றார். மேலும் இத்தகைய அரசியல் நெருக்கடிகளின் காரணமாக மீண்டும் தமது பூர்வீக மண்ணுக்கு செல்கின்ற போது ஏற்படுகின்ற முரண்களை வெளிக் கொணர்வதாக அவரது ‘திறந்துக் கிடக்கும் வானம்’ என்ற கவிதை அமைந்துள்ளது. அதில் பின்வரும் வரிகள் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்;;;;;:

கிழடு தட்டிய…
கையூட்டலுக்கு…
தேர்வானைக் கதவுகள்
ஆடைகளை இழக்கும்!

சாதி சான்றிதழுக்கும்
பேரங்கள் பேசும்…
கிராமத்து கடைநிலை அதிகாரங்கள்!

மலையக மக்களில் 90 சத வீதமானோர் மலையகத் தோட்டத் தொழிலாளர்களாகவும் நகர சத்திகரிப்பு தொழிலாளர்களாகவும் காணப்பட்டனர்.  மிக சிறு தொகையினரே சொத்துடமைப்பெற்றவர்களாக இருந்தனர். இவர்கள்; இலங்கையை வருமானத்தை பெறுகின்ற இடமாக இலங்கையை கருதியதுடன் தமது சொத்துகளுக்கு பாதுகாப்பளிக்கும் பூமியாக இந்தியாவை கருதினர். “இச்சிறுதொகையினர் சந்திர மண்டலத்திற்கு சென்றால் கூட பிழைத்துக் கொள்ளக் கூடியவர்கவர்ளாக இருந்தனர்” என்பார் மலையக சமூக ஆய்வாரள் பி.ஏ. காதர். இத்தகைய சிறுப்பாண்மையினரின் நலனை கொண்டு இந்தியாவை மலையக மக்களின் சொர்க்க பூமியாக காட்ட முனைவதும் அதன் பின்னணியில் தமது இருப்பை சிதைக்கும் வகையில் ‘இந்தியத் தமிழர்கள்’ என அழைக்க முற்படுவதும் எத்தகைய கையாலகாதனம் என்பதை அண்மைகால ஆய்வுகள்(மல்லியப்பு சந்தி திலகர் சூரிகாந்தி பத்திரிகையில் எழுதிவரும் தொடர் அவதானத்திற்குரியது) எடுத்துக்காட்டுகின்றன. இது போக இந்தியா இன்னொரு வல்லரசாக வளர்ந்து வரும் நாடாகும். அந்நாட்டில் தொழில் போட்டி என்பது கடுமையானதாக காணப்படுகின்றது. இந்த சூழலில் அடிநிலைக்; கூலித் தொழிலில் ஈடுப்படுவதாக இருந்தாலும் கடுமையான தொழில் போட்டியை சந்திக்கவேண்டிய சூழல் காணப்படுகின்றது. இவ்வாறாதோர் சூழலில் இலங்கையிருந்து தாயகம் திரும்பியவர்கள் சந்திக்க நேர்ந்த கொடூரங்கள் சொல்லில் அடங்காதவைகள். இத்தகைய நடப்பியல் வாழ்க்கையை நேர்மையாக அரசியல் தளத்தில் நின்று புரிந்துக் கொண்டமையாலேயே சமூக ஏற்றத்தாழ்வுகளின் மீதாகவும் அதன் போலித்தனங்களுக்கு எதிராகவும் அவரால் கவித் தீ உமிழ முடிந்நது.

துண்டு நிலங்களும்
சட்டத்தால் பறிக்கப்பட்டு
வாழ்வுரிமையை
இழக்கபோகும்
ஏங்களின் வரலாறு!

மீண்டும் ஓர்
அகதிகள் முகாமில்..
தஞ்சம்
கோரும்- என்
ஆறாம் தலைமுறை!

என்ற வரிகள் கூடலூரில் பிரிவு 17 இல் உள்ள நிலங்களில் குடியேற்றப்பட்ட தாயகம் திரும்பியவர்களின் நிலையை அழகுற எடுத்துக்காட்டுகின்றது. இங்கு முரண்பாடுகளையும் இடர்பாடுகளையும் சரியாக அடையாளம் கண்டுக் கொண்டமையினாலேயே வாழ்க்கையின் மீது ஒரு உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தி வாழ்வக்காக போராட வேண்டும் என்ற உந்துதலையும் மு.சி. கந்தையாவின் கவிதைகள் எமக்கு தருகின்றன.

இலங்கையில் மலையக மக்களை வர்க்க அடக்குமுறைகள் எந்தளவு பாதித்திருந்ததோ அதேயளவில் இனவொடுக்கு முறைகளும் இம்மக்களைப் பாதித்திருந்தது. இந்நாட்டில் இனவொடுக்கு முறை மலையக மக்களைப் பாதித்ததை விட வடக்கிழக்கு மக்களையே அதிகமாக பாதித்தது என்ற போதினும் நசிவு தரும் அரசியல் போக்கின் பரிமாணத்தை இவ்விரு மக்கள் குழுமத்தினரும் சந்திக்க தவறவில்லை.

தேசத்தின் நிர்வாக
பல்லுக்கும் சில்லுக்கும்
சத்துணவாக்கப்பட்டது!

சுனநாயக தேவதை
ஆடையணிய மறுத்த
அந்தக் கருப்ப நாட்களில்

இன ஒழிப்பு நாட்டின்
மூலை முடுக்கெல்லாம்
சனநாயகப்படுத்தப்பட்டது!

என (அ)சிங்க(ள)வாதம் என்ற கவிதையில் வரும் வரிகள் இந்நாட்டில் பேரினவாதம் குமிழிட்டு மேற்கிழம்பியதை; எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாறே இத்தொகுப்பில் அமைந்துள்ள ‘நெருப்புக்கு முத்தம்’,  ‘யுத்தக் காடுகள்’, ‘ஈழக் குருதியில் என் மண்ணும்’ , மனிதம் வீழ்ந்த போது’ ஆகிய கவிதைகள் இலங்கையில் தமிழ் தேசியப் போராட்டம் பற்றியதாக அமைந்திருக்கின்றன. யுத்தச் சூழலில் இயக்கங்களின் வன்முறை, மனித உரிமை மீறல்கள், கூடவே காணாமல் போன இஞைர்கள் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இலக்கியம் படைத்தவர்கள் வெகு சிலரே. குறைந்தபட்ச விமர்சனங்களை முன்வைத்தவர்கள் கூட இனந்தெரியாமல் அழிக்கப்பட்டார்கள். ரஜனி திராணகம, அன்ரனி நோபேட், செல்வி என இப்பட்டியலை நீட்டிச் செல்லாம். இந்தப் பின்னணியில் நமது எழுத்தாளர்களின் மௌனத்தை நாம் புரிந்துக் கொள்ள முடிகின்றது. இன்று இந்த மௌனம் கலையப்பட்டுள்ளது என்பதற்கு சாட்சியாக யோ. கர்ணன், ஷோபாசக்தி (புலம்பெயர்ந்திருந்ததனால் யுத்த காலத்திலும் மேற்குறித்த பதிவுகளை வெளிக் கொணர முடிந்தது.) முதலானோரின் எழுத்துக்கள் சான்றாய் அமைந்திருக்கின்றன. பேராசிரியர் அ. மார்க்ஸின் இலங்கை குறித்த ஆய்வுகள்; தமிழ் தேசிய போராட்டம் பற்றிய நடுநிiலான பார்வையை முன் வைக்கின்றது.   இத்தொகுப்பில் பேரினவாதம் வெளிக் கொணரப்பட்டளவிற்கு தமிழ் பாசிசத்தின் இன்னொரு பக்கம் வெளிக் கொணரப்படவில்லை என்பது இத்தொகுப்பில் காணப்படுகின்ற மிக முக்கிய குறைப்பாடுகளில் ஒன்றாகும்..

பொதுவாகவே ஒடுக்குமுறைக்குட்பட்ட சமூகங்களிலும் அவ்வொடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களிலும் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்களே. தெலுங்கானா போராட்டமாக இருந்தாலென்ன? இரசிய புரட்சியாக இருந்தாலென்ன அல்லது இரண்டாம் உலகப் போராக இருந்தாலாலென்ன அவற்றில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. இந்தச் சூழல் இந்தியாவிற்கு ஒன்றும் அந்நியமாதல்ல. மேற்குவங்காளத்தை சேர்ந்த நயன்தாரா என்ற பதினொரு வயது சிறுமி காவல் துறையினரால் பாலியல் வன்பனர்ச்சிககுட்ட பட்ட கொடுமை குறித்து கவிஞனின் உணர்வுகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றது:

நான் குதறப்பட்ட பொழுது..
எனது நரம்புகளின் ஒட்டுமொத்த
கதறல் ஒலி
உங்கள் செவிகளுக்குள்
எட்டியிருக்க நியாயமில்லை!
சீருடைக்குள் புகுந்த
கொடியக் குறியான
அநாகரிக ஆணிகளை
எந்தக் கொதிவுலையில்
இட்டுருக்கப் பொகின்றீர்கள்….?

அண்மையில் டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி காமுகர்களால் மிகக் கொடுரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் இதற்கு தக்க எடத்துக்காட்டாகும். அவ்வாறே  இன்று பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முகைள் உலகெங்கும் வௌ;வேறு வடிவில் நடைப்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. அண்மைக்காலத்தில்  நமது கவனத்தை ஈர்த்த சம்வம் வாத்சாத்தி  பழம் குடியினருக்கு எதிராக வனத்துறை அதிகாரிகள் மூலம் இந்திய அரசு மேற்கொண்ட தாக்குதல்களாகும். இச்சம்பவத்தின் போது அச்சமூகத்தை சார்ந்த பெண்கள் வனத்துறை அதிகாரிகளால் மிக கொடுரமாக வன்புனர்ச்சிக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் சிறு நீர்கழிப்பதற்காக அனுமதி கேட்கப்பட்ட போது கூட “நாங்க உங்களோட படுத்தவங்க படுத்தவங்க தானே, பாவாடையை தூக்கிகிட்டு எங்க முன்னாடியே போங்க, நாங்கதான் முழுசா பாத்திட்டோமே அப்புறம் என்ன வெட்கம்” எனக் கூறியதால் பயத்தில் சிலர் பாவாடையுடனே சிறுநீர் போயுள்ளனர். இது போக குழந்தைப்பிறந்து ஒரு மதமே ஆகியிருந்த பச்சை உடம்புக்காரி தன் நிலைக் குறித்து கதறி அழுத போது அந்த காமகர்கள் விட்டப்பாடிலில்லை.( பெ.சண்முகம், புதுவிசை ஜனவரி-2012)இவ்வாறாக பெண்களுக்கெதிராக நடைப்பெற்றுவரும் கொடுமைகள் ஒருப்புறமிருக்க பெண்கள் அரசியல் உணர்வுப் பெற்று இயக்கபணிகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் அவர்கள் சந்திக்க நேர்ந்த பாதங்கள் சொல்லில் அடங்காதவை. அந்தவகையில் 1971-இலங்கையில் ஏற்பட்ட ஜே.வி.பி(மக்கள் விடுதலை முன்னணி) கிளர்ச்சியின் போது அவ்வியக்கத்தில் அங்கம் வகித்த மனம்பேரி என்ற பெண் காவல் துறையினரால் கொடுரமாக கற்பழிக்கப்பட்டு நிர்வாணமாக தெருவில் இழுத்து செல்லப்பட்ட கொடுரத்தை இத்தொகுப்பில் உள்ள “மனதில் மனம்பேரி” என்ற கவிதை சிறப்பாக பதிவாக்குகின்றது. அத்தகைய துயர் நிறைந்த வாழ்வை சாட்சியாக பதிய வைக்கின்றார் இக்கவிஞர். இக் கவிதைகள் சம்பவத்தை பதிவாக்குவதாக மட்டுமன்று அத்தகைய கொடுரங்களுக்கு எதிரான ஆத்திரத்தையும் உருவாக்குகின்றன.

இவ்விடத்தில் இன்னொரு முக்கியமான விடயமும் சுட்டிகாட்ட வேண்டியது அவசியமாகும். தனிநபர்களைப் பாடுகின்ற போதிலும் கூட அவ்வாளுமைகளை சமூக பின்புலத்துடன்- அரசியலுடன் இணைத்துப் பார்க்கின்ற ஒரு போக்கை நாம் இக் கவிஞரில் காணக் கூடியதாக உள்ளமை முக்கியமான அம்சமாகும். ‘சிவானந்தன் நினைவாக’, ‘மனதில் மனம்பேரி’, ‘வீசுவானந்தன் நினைவாக’, ‘பகவத்சிங் பதிவால்…’ ஆகிய கவிதைகள் இதற்கு தக்க எடுத்துக்காட்டுகளாகும். அவ்வாறே ஒரு ஒடுக்கு முறைக்குள்ளான சமூகம் பற்றிய கரிசனைக் கொள்கின்ற மனிதனொருவர் ஏனைய ஒடுக்கப்படும் மக்களின் பால் அவரது கவனத்தை செலுத்துவது தார்மீகமாகதொன்றாகும். மாதேஸ்வர மலைக் கிராமங்களின் நடைப்பெற்ற மனிதவதைகள் குறித்து ‘நிசங்களின் சந்தம்’(இத்தொகுப்பின் தலைப்பு) என்ற கவிதை சித்திரிக்கின்றது.  

முடிவாக நோக்குகின்ற போது, கவிஞர் கூற முயலும் பொருள் சமுதாயம் சார்ந்தது. அவர் தம் கருத்துக்களை கவிதை வடிவில் விருத்தி செய்துக் கொண்டு போகின்றார். தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் காணப்படும் கொடுமைகள் அடக்குமுறைகள் தொடர்பாக எழுகின்ற கோபத்தின் வெளிப்பாடாகவும் அவரது கவிதைகள் அமைந்திருக்கின்றன. இத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நோக்கினால் அடிநிலையில் இருந்து அல்லற் படுகின்ற தொழிலாளர்கள், பெண்கள் ஆகியோர் மீதே பெரும்பாலும் அவரது பார்வை விழுந்திருக்கின்றது என்பதை இலகுவாகவே காணலாம். அந்தவகையில்; இத்தொகுப்பில் அடங்கியுள்ள  கவிதைகள் யாவும் வஞ்சிக்கப்பட்ட உழைக்கும் மக்களில் வேர் கொண்டு மக்களிடையே பரவ முயற்சிக்கின்றன. கவிதைக்கே உரித்தான அழகியல் கூறுகளும், புதிய சிந்தனைகளும் கொண்டு அடக்குமுறைகளுக்கும் அதிகாரத்திற்கும் சுரண்டலுக்கும் எதிரான கலகங்களை கவிதையாக்கும் ஆளுமை இக்கவிஞரில்  சிறப்பாகவே உள்ளது. தொடர்ந்து சமூகமாற்றத்துக்கான வழி முறைகள் யாவை என்பது பற்றிய தேடுதல்கள் ஊடாக அவரது கவிதைகள் செழுமைப்பட வேண்டியுள்ளது.  அவை மக்களை ஒன்றுப்படுத்தி அவர்களது உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் ஆசைகளையும் நிறைவேற்ற செய்வதாக இருக்கவேண்டியது நமது கால புறப்பாட்டின்  தேவையாகும் என்பதை உணர்ந்து கவிதைகள் படைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

நன்றி: மகுடம்( மலையக சிறப்பிதழ்)

சிவனு லட்சுமணன் நினைவுரை


11 மே மாதம்  டிக்கோயா கிரைப் சேர்ஜ் மண்டபத்தில்
அமரர் சிவனு லட்சுமணனின் நினைவு தினத்தை முன்னிட்டு மலையக சமூக அபிவிருத்தி மையத்தினர் ஒழுங்கமைத்துள்ளனர். இந்நிகழ்வு ‘இன்றைய மலையக அரசியல் குறித்த மீள்பார்வையும் எதிர்கால செயற்பாடுகளும்” என்ற தொணிப்பொருளில்  நடைப்பெறவுள்ளது.

அருட்தந்தை மா. சக்திவேல் தலைமையில் நடைப்பெறும் இந்நிகழ்வில் “ 

மலையக தேசியம்- சவால்களும் தீர்வுகளும்” என்ற
தலைப்பில் சிவம் பிரபாகரனும்,

“ மலையக சமூக மறுமலர்ச்சி தொடர்பில் செய்யக் கூடியவைகளும்- செய்ய வேண்டியவைகளும்” என்ற தலைப்பில்
திரு. எம். ஜெயகுமாரும்

கட்டுரை சமர்ப்பிக்கவுள்ளனர். அவையினர் கருத்தாடலும் இடம்பெறும். மேலதிகமான தகவல்களுக்கு

071- 4903509 (சிவம் பிரபாகரன்) என்ற இலக்கத்துடன் தொடர்புக் கொள்க.

இலங்கை இந்திய வம்சாவளி மலையக மக்கள் : ஒரு மீளாய்வு - மல்லியப்பு சந்தி திலகர்


தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமது சமூக நிலைமாற்றத்தளத்தை மீளாய்வு செய்து தம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான கலந்துரையாடல்களை இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் ஆரம்பித்தல் வேண்டும். 

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் பலத்த போராட்டங்கள் விட்டுக்கொடுப்புகள் இழப்புகளுக்கு மத்தியில் தம்மை ‘மலையக மக்கள்’ எனும் பொது அங்கீகாரத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இலங்கைத்தமிழர்கள் தமது பேராட்ட வியாபகத்தின் ஊடாக சர்தேச ரீதியாக தம்மை இலங்கைத் தமிழர்களாக உறுதிபட வெளிக்கொணர்ந்திருக்கும் நிலையில் இந்த மலையகத் தமிழர் என்கிற கருத்துருவாக்கம் தனித்துவமானதும் குறிப்பிடத்தக்கதுமான முன்னேற்றம் ஆகும். இதற்காக இந்த கருத்துருவாக்கத்தை ஆரம்பித்துவைத்த இலங்கை திராவிட முன்னேற்ற கழக செயற்பாட்டாளர் தோழர் அமரர் இளஞ்செழியன் அவர்களும் அதனை மக்களிடத்தில் பரவலாக கொண்டு சென்ற அரசியல்  சமூக செயற்பாட்டாளரும் கல்வியாளருமான   இரா. சிவலிங்கம் அவர்களும் நினைவு கூரத்தக்கவர்கள்.

அதே நேரம் இலங்கைத்தமிழர்களின் தனிநாட்டு கோரிக்கையும் சர்வதேச வியாபகமும் மலையக மக்களுக்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் என்கிற குறியீட்டினையும் அவசியமாக்கியுள்ளது. ஏனெனில் இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட மலையக மக்களது பிரச்சினைகளை சர்வதேச தளத்துக்கு கொண்டு செல்வதற்கு இந்தியாவின் பங்களிப்பு மலையக மக்களுக்கு அவசியமாகவுள்ளது. இலங்கை தமிழர்களுக்கே இந்தியாவின் பங்களிப்பு அவசியமானதும் முக்கியத்துவமானதுமானதாக உள்ள நிலையில் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கான இந்தியாவின் பங்களிப்பு சற்று அதிகமாகவே வேண்டப்படுகின்றது. எனவே இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் என்கிற இன்றைய அடையாளமும் பரிமாணமும் மிகவும் அவசியமானதாக அமையும்.

இந்திய வம்சாவளி மலையக தமிழர் சமூகம் தொழிலாளர் சமூகமாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தாலும் இன்று சமூக நிலைமாற்றத்துக்கு உள்ளாகி நான்கு வகுதிகளாக உள்ளனர்.

1. தோட்டத் தொழிலாளர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்

2. தோட்ட சேவையாளர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்.

3. மலையகப் பெருந்தோட்டங்களை அண்டிய நகரங்களையும் கண்டி கொழும்பு உள்ளிட்ட நகரங்களை  சார்ந்த வர்த்தக சமூகமும்  அவற்றை அண்டிய புறநகர்வாழ் மக்களும்

4. ஆசிரியர் அரசாங்க உத்தியோத்தர் தொழில் துறையினர் மற்றும் தனியார்துறை தொழிலாளர்கள்

எனப்படுவோரே இந்த வகுதிகளாவர்.

தற்போது தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து வருகின்றபோதும் அவர்களை சார்ந்து கட்டியெழுப்பப்பட்டுள்ள தொழிற்சங்க கட்டமைப்பே ஒட்டுமொத்த மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்தவத்தை பாராளுமன்றத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தற்போது உள்ள மலையகத்தமிழர்களான பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் தொழிற்சங்க பின்புலத்தோடு தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பது உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.  

அதே நேரம் அண்மைக்கால சமூக அரசியல் சூழல் இந்த மலையக சமூக நிலைமாற்ற வகுதியினர் குறித்த மீளாய்வு ஒன்றை வேண்டி நிற்கின்றது. இலங்கையில் வட கிழக்கு பகுதியில்  நடைபெற்ற யுத்தம் சகோதர இலங்கை தமிழர்களை உலகின் எல்லா பாகத்துக்கும் புலம்பெயர்ந்தவர்களாக மாற்றியுள்ளது. அந்த வகையில் மலையகமும் அவர்களின் புகலிடமாக மாறியுள்ளது. மனிதாபிமான ரீதியில் அந்த புலப்பெயர்வை மலையகத்தமிழர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்த மலையகம் வாழ் இலங்கைத் தமிழ் மக்கள் மலையக மக்களின் ஐந்தாவது (மேற்கூறிய வகைப்படுத்தலில்) வகுதியினராக  தற்போது இடம்பிடித்துள்ளனர் என்பதையே அண்மைக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன. இது அத்தகைய புலம்பெயர் மக்களின் மீதான மலையக மக்களது மனிதாபிமான உணர்வுகளுக்கு அப்பாலான புரிதலாக இருக்க வேண்டியுள்ளது. மலையக மக்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் சலுகைகள் ஏன் உரிமைகள் கூட இந்த மலையகம் சார்ந்து புலம்பெயரந்துள்;ள இலங்கைத்தமிழ் மக்களுக்கு கிடைக்கின்றது. குறிப்பாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விடயங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மலையக மக்களுக்காகவே கிடைக்கின்ற அந்த வாய்ப்புக்களை பங்கிட்டுக்கொள்ளப்படுகின்றன என்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயமாகின்றது.

அதே நேரம் பிந்திய எழுபது எண்பதுகளில் இனவன்முறைகள் காரணமாகவும் தொழில் நிமித்தமாகவும் மலையகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வன்னியில் குடியேறிய இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமக்காகவே உள்ள வாய்ப்புக்களை அனுபவிக்க முடியாதுள்ளதோடு யுத்தத்தின் இடப்பெயர்வின் பின்னர் மீள் குடியேற்றத்தில் தமது காணியுரிமையை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். அவர்களுக்கான காணி உரிமை வன்னியில் மறுக்கப்படுகின்றன என்கின்ற யதார்த்தம் உணரப்படவேண்டும். ஏறக்குறைய நாற்பது வருடகாலம் வன்னிப்பிரதேசத்தில் வாழ்ந்தும் இன்று அவர்களுக்கான காணி உரிமை மறுக்கப்படுவது வருத்தத்துக்குரியது.  கொடிய யுத்தத்தின் இறுதிகட்டம் வன்னியில் வாழ்ந்த மலையக மக்களையே அதிகம் பாதித்தது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகவுள்ளது. தற்போது மீள் குடியேற்றமும் இவர்களையே பாதிக்கின்றது. இவர்களை மலையக மக்களின் ஒரு வகுதியினராக ஏற்றுக்கொள்ளும் நிலை இன்று உள்ளதா? அதற்கான வாய்ப்புகள் உண்டா? 

அதே நேரம் புலம்பெயர்ந்து மலையகத்தில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் மலையகத்தில் ஒரு அங்கமாக ஆகியுள்ளனர். இவர்கள் இவர்களை மலையக மக்களாகவே உள்வாங்கிக் கொள்ளவதா?  என்கிற கலந்துரையாடல்கள் அவசியமாகின்றன.

ஏனெனில் மலையக மக்களின் கல்வி வேலைவாய்ப்பு வியாபாரம் மற்றும் பல்கலைக்கழக அனுமதிகளில் இவர்களின் பங்களிப்பு மலையக மக்களோடு இன்று இரண்டரக்கலந்து வருகின்றது. மலையக மக்களை விட மலையகத்தில் சொந்த காணி வீடு இவர்களுக்கு வீதாசார ரீதியாக அதிகம் உண்டு. மலையக மக்களின் இந்த விட்டுக்கொடுப்புகள் ஒரு உச்சத்தை அடைந்து கடந்த  பொதுத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக மலையக மக்களின் வாக்குகளில் இருந்து மலையக மக்கள் செறிவாக உள்ள மாவட்டத்தில் இருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற அவையில் 11 பேராக இருந்த மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநித்துவம் இம்முறை சரிபாதியாக குறைந்துள்ளது. நுவரெலியாவுக்கு அடுத்து அதிகமாக மலையக மக்கள் வாழும் பதுளை  மாவட்டத்தில் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் முற்றாக இழக்கப்பட்டுள்ளது. ஆனால் மலையக மக்களின் இதயப்பிரதேசமான நுவரெலியா மாவட்டத்தில் இருந்து நுவரெலியா மாவட்டத்தில் இருந்து மாத்திரம் பெறப்பட்ட ஐந்து பாராளுமன்ற ஆசனங்களில் ஒன்றை இலங்கைத்தமிழர் ஒருவர் பெற்றுக்கொண்டுள்ளார். மலையக மக்களும் அவருக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் அவரது தெரிவிற்கான மேலதிக வாக்குகளை நுவரெலியா மாவட்டத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களே வழங்கியுள்ளனர்.


1947 ம் ஆண்டு அரசவையில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்திய வம்சாவளி மலையகத்தமிழர்களின் பிரதிநிதித்துவம் பலரின் கண்களை குத்தவே 1948 க்கு பின்னர் மலையக மக்கள் குடியுரிமை பறிக்கபட்டவர்களானார்கள். நாடற்றவர்களானார்கள். அந்த குடியரிமை பறிப்புக்கு துணைநின்றவர்கள் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்கள் இன்றும் தொடர்ந்துவருகின்றது. இந்திய அரசாங்கத்துடனான பல்வேறு ஒப்பந்தங்களுக்கு மத்தியில் கணிசமானோர் இந்தியாவுக்கு திரும்பினர். அவ்வாறு திரும்பி சென்ற மக்கள் இன்றும் கூட ‘சிலோன்காரர்கள்’ என அழைக்கப்படும் மனோநிலையே தமிழ் நாட்டில் நிலவுகின்றது. வடகிழக்கு யுத்தத்தினால் இந்தியாவுக்கு அகதியாக சென்றோர் தமிழ்நாட்டில் 30000 பேர்வரை அகதிமுகாம்களில் வாழ்கினறனர். தமிழ் நாட்டில்  மட்டும் அல்லாது கர்நாடகா அந்தமான் தீவுகள் ஆந்திராவிலும் கூட இலங்கை மலையக மக்கள் வாழ்கின்றனர். இந்த நிலையில்  இலங்கை இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறித்த மீளாய்வை வேண்டி நிற்கும் ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கிறோம். 

அண்மைய அவதானிப்புகள் மலையக மக்களின் இன்னுமொரு வகுதியினரை  உள் வாங்கிக்கொள்ளவேண்டிய தேவையை உணர்த்தி நிற்கின்றது. உலகம் முழுவதும் பரந்து வாழும் மலையகத் தமிழர்கள் கனடா இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும்  வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் பதினைந்து லட்சம் பேர் என புள்ளிவிபரங்கள் காட்டும் மலையக மக்கள் உலகம் முழுவதுமாக பரந்து 26 லட்சம் பேராக உள்ளனர். இந்த பதினைந்து லட்சம் மக்களே பிரதான வேராக உள்ள நிலையில் அந்த எண்ணிக்கை பாதுகாப்பதும் அந்த மக்களின் இருப்பு அரசியல் சமூக கலை பண்பாட்டு கூறுகளை பாதுகாத்தல் இன்றைய நிலையில் ஒரு சவாலான விடயம் என்ற புரிதல் மலையக மக்கள் சார்ந்த எல்லா வகுதியினருக்குமான பொறுப்பாக அமைகின்றது. கல்வி ரீதியாக இன்னும் முழுமையான வளர்ச்சியை பதிவு செய்யாத இந்த சமூகம் தனது இருப்பைப்பாதுகாக்க இனி எவ்வாறான உத்திகளை கையாளவேண்டியிருக்கும் என்பது அந்த சமூகத்தின் முன்நிற்கும் பாரிய கேள்வி. மலையக மக்களின் வேரான தோட்டத் தொழிலாளிகளின் எண்ணிக்கை இன்று வெறும் ஒரு லட்சத்து எண்பதினாயிரமாக குறைவடைந்துள்ளது. இது மேலோட்டமாக பார்க்கின்றபோது சந்தோஷப்படக்கூடிய விடயமாகத்தான் தெரிகிறது. ஏனெனில் தொடர்ச்சியாக தொழிலாளியாக இருக்க வேண்டுமா என்கிற கேள்விதான அது. ஆனால் அவ்வாறு தோட்டத் தொழிலில் இருந்து விலகிச்செல்லும் மக்கள் தற்போது என்னவாக இருக்கிறார்கள்? அவர்களது அரசியல் சமூகப் பண்பாட்டுத் தளம் யாது? எனும் கேள்விகள் எழாமல் இல்லை. தொழிலாளியாக திரட்சிபெற்று தொழிற்சங்கம் மூலமாகவும் அதனூடான அரசியல் மூலமாகவும் இருப்பை தக்கவைத்த இந்த மக்கள் கூட்டத்தின் அரசியல் அடையாளமே இன்று கேள்விக்கு உட்பட்டு நிற்கிறது. படித்தவர்கள் அல்லது வல்லமை பெற்றவர்கள் தொழிற்சங்க அரசியல்வாதிகளை குறைகாண்பதோடு தங்களது சமூக அக்கறை நிறைவடைந்து விடுவதாக நினைத்துவிடுவது அபத்தமானது. 

மலையக மக்களின் ஒவ்வொரு சமூகக் குழுமமும் ஒரு பண்பாட்டுத்தளத்தில் இணைந்து தமது சமூக இருப்பை உறுதிசெய்துகொள்ளும் அவசியம் மிக விரைவில் வேண்டப்படுகிறது. இதற்கு புலம்பெயர் மலையகத்தமிழர்களின் பலம் அதிகம் வேண்டப்படுகிறது என்பதே யதார்த்தமானது. ஒப்பீட்டு ரீதியில பொருளாதார ரீதியாக முன்னால் செல்லும் புலம்பெயர் மலையகத்தமிழர்கள் (இந்தியா தவிர்த்து) இந்த சமூகம் குறித்த பார்வையை மேலும் விரிவுபடுத்தவும் விசாலப்படுத்தவும் காலம் கணிந்துள்ளது. புலம்பெயர் இலங்கைத்தமிழர்கள் மத்தியில் தோன்றியிருக்கக்கூடிய அமைப்பாக்க சிந்தனைகளுடன் ஒப்பிடும் போது மலையகம் சார் புலம்பெயர் மக்களின் செயற்பாடு இன்னும் விரிவுபடவேண்டிய தேவை இருப்பதை உணரமுடிகிறது. 

மலையக மக்களின் பிரச்சினைகள்  குறித்து பரப்புரைகளை விரிவுபடுத்துவது முதலாவது தேவையாக உள்ளது. இந்த மக்களின் பிரச்சினைகள் சர்வதேச கவனத்தைப் பெறவேண்டும். சர்வதேச கவனத்திற்கு முன்பாக அவர்களின் தாயக பூமியான இந்தியாவுக்கு மலையக மக்கள் பற்றிய கவனம் கொண்டுச்செல்லப்படவேண்டிய தேவையுள்ளது. இந்தியாவில் இலங்கைத் தமிழர்களைப்பபற்றி தெரிந்து வைத்திருக்கிற அளவுக்கு மலையக மக்களைப்பற்றி தெரியாது என்பது கசப்பான உண்மை. அவர்கள் அடிக்கடி சொல்லும் தொப்புள் கொடி உறவு யார் என அதனை உச்சரிப்பவர்களுக்கே தெரியாது.

இன்றைய நிலையில் இலங்கை இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறித்த சர்வதேச பரப்புரை இன்றியமையாதது. மலையக மக்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் மலையக மக்கள் குறித்த கலந்தரையாடல்கள் எழுத்துக்கள் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். குறைந்த பட்சம் சமூக வலைத்தளங்களையாவது (முகநூல் போன்ற)  இந்த பரப்புரைகளுக்கு பயன்படுத்தும் அர்ப்பணிப்பு ஒவ்வொரு மலையகத்தமிழர்களிடத்திலும் ஊற்றெடுக்க வேண்டும். இன்று உலகம் ஒரு கிராமமாக மாறியிருக்கிறது. ஆனால் மலையகத் தோட்டங்கள் எனும் கிராமங்களே உலகம் எனும் வாழும் மக்களே மலையக மக்களின் அரசியல் இருப்பைத் தக்கவைக்கின்றனர் என்பது உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டும். அவர்கள் போராடி காத்துவரும் அந்த இருப்பை உறுதி செய்ய உலகம் முழுவதும் வாழும் ஒவ்வொரு மலையகத்தமிழரும் உறுதி கொண்டு எழ வேண்டும்.

நியாயத்தை ஆட்டிப்படைக்கிறதா அதிகாரம்?


ஓர் ஊடகவியலாளனாக அன்றி சாதாரண பொதுமகனாக ஆதங்கம் நிறைந்தவனாய் எழுதுகிறேன்.

கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 21 ஆம் திகதி மலையக தொழிற்சங்க கூட்டமைப்பினர் கொட்டகலையில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தீர்மானித்திருந்தனர்.
அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தத் தயாரானபோது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அவ்விடத்துக்கு வந்து குழப்பம் விளைவித்தனர் என்பது செய்தி.
ஆம்! மலையக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படைச் சம்பள அதிகரிப்பு போதுமானது அல்ல என்பது வெட்டவெளிச்சமானதாகும். இரண்டு வருடங்களுக்கு வெறும் 70 ரூபா (நாளொன்றுக்கு)அதிகரிப்பில் அவர்களால் என்ன செய்துவிட முடியும்?

இந்த இரண்டு வருடங்களுக்குள் எரிபொருளோ, மின்கட்டணமோ, போக்குவரத்துச் செலவோ, இதர அத்தியாவசிய செலவுகளோ அதிகரிக்க மாட்டாது என்பதை ஒப்பந்தக்காரர்களால் நிச்சயித்துக் கூறமுடியுமா?
ஐந்து பேர் உள்ள குடும்பம் ஒன்றுக்கு இந்த அதிகரிப்பு போதுமானது என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் தீர்மானித்தமையை எண்ணி தலைமைகளை உருவாக்கியவர்கள் என்ற வகையில் மலையகம் வெட்கம் கொள்கிறது.
அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தை மக்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மார்தட்டிக்கொள்கிறது. ஆனால் மக்களோடு மக்களாக இருந்து பார்த்தவன் என்ற வகையில் அவர்களின் வேதனையை வரிகளுக்குள் அடக்கிவிட முடியாது.
இதைத் தட்டிக்கேட்க திராணியற்றவர்களாக தொழிலாளர்கள் மனதுக்குள் குமுறி அல்லல் படுகிறார்கள் என்பதே யதார்த்தமான உண்மை.
அவர்கள் ஆரம்பம் முதலே அடக்கியாளப்பட்டவர்கள். ஆதலால் கூச்ச சுபாவம் அவர்களைத் தட்டிக்கேட்க விடுவதில்லை என்பது ஒருபுறமிருக்க நியாயமான சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டியது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் கடமையல்லவா?

சரி… ஆகட்டும்.

நிலைமை இப்படியிருக்கையில் கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிரான போராட்டத்தை அமைச்சர் ஆறுமுகனின் கோட்டையாகக் கருதப்படும் கொட்டகலையில் நடத்துவதற்கு எதிர்ப்புக் கூட்டணி தீர்மானித்து அதற்கான திகதியை முன்னரே அறிவித்திருந்தது.
எனினும் அன்றைய தினத்தில் அதே இடத்தில் கூட்டு ஒப்பந்தத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இ.தொ.கா. அறிவிக்கவில்லை.
மக்களாகவே சந்தோசத்தை வெளிப்படுத்துவதற்காக கூடினார்கள் என இ.தொ.கா. கூறினாலும் தலைமைத்துவம் வழங்கப்படாமல் மக்கள் கூடினார்கள் என்பதை நியாயப்படுத்த முடியுமா?

எந்தவொரு முன்னறிவித்தலும் இன்றி கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொலிஸார் ஆதரவு வழங்கியதன் பின்னணி என்ன?

கூட்டு ஒப்பந்தத்தில் நியாயமான சம்பள உயர்வு கிடைத்ததற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால் அதை ஏன் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட மறுநாளோ அல்லது ஒரு வாரத்திற்குள்ளோ நடத்தியிருக்கக் கூடாது?

ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலானோர் அதிக மதுபோதையில் இருந்துள்ளார்கள். அவர்கள் சொந்தக் காசில் தான் மதுபானம் வாங்கி அருந்திவிட்டு ஆர்ப்பாட்டத்துக்கு வந்தார்களா?
அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவர் நகுலேஸ்வரன், நுவரெலிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சக்திவேல், மத்திய மாகாண சபை உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் இருந்ததாக பொதுமக்கள் தகவல் வழங்கினார்கள். இவர்கள்தான் ஆர்ப்பாட்டக்காரர்களை வழிநடத்தியதாகவும் சிலர் கூறினார்கள்.
"ஆறுமுகனின் கோட்டைக்குள் எந்த நாயும் வரக் கூடாது. வரவும் விடமாட்டோம்" என அதிகாரத் தொனியில் இந்த மக்கள் பிரதிநிதிகள் அங்கு பேசினார்கள்.

அவ்வாறெனின் இவர்களுக்கும் இ.தொ.கா.வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தலைமைபீடத்தால் கூற முடியுமா?ஆக, நியாயத்தை அதிகாரம் ஆட்டிப்படைக்கிறதா? என மக்கள் கேட்கிறார்கள். அமைச்சர் ஆறுமுகரே என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

அரசியல் தலைமை என்பது மக்கள் சேவை என்பதில் மாத்திரம் வரையறுத்துக்கொள்ளாது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உதாரணமாக செயற்பட வேண்டியது அவசியமாகும். அப்படி ஒரு தலைமைத்துவத்தை மலையகம் எதிர்பார்க்கிறது.
தொழிலாளர்கள் அப்பாவிகள் என்பதால் சில சந்தர்ப்பங்களில் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக கொட்டகலையில் கொம்பு முளைத்த வெள்ளைக் காகம் நான்கு கால்களுடன் பறக்கிறது பாருங்கள் எனச் சொன்னால் யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்?
கொட்டகலையில் மலையக தொழிற்சங்க கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை குழப்புவதற்காக வேறொரு ஆர்ப்பாட்டம் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் தொடர்பில்லை என்று அறிக்கை விட்டுக்கொள்ளலாம். 

ஆனால் அமைச்சர் ஆறுமுகனின் கோட்டையில் அவருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதும் வெளிப்படையே.

-இராமானுஜம் நிர்ஷன்

உழைக்கும் வர்க்கத்துக்கு ஏமாற்றம் கொடுத்த கூட்டு ஒப்பந்தம்


பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் வெறும் 70 ரூபாவால் மாத்திரம் அதிகரிக்கப்பட்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை மலையக மக்களின் வாழ்க்கைச் சுமையை தாங்கும் சக்தி குறித்து ஆழமாக சிந்திக்க வைத்துள்ளது.

நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்லும் தற்போதைய நடைமுறையில் இரு வருடங்களுக்கு இந்தச் சிறுதொகையை வழங்குவதற்கு ஒப்பந்தமாகியுள்ளது.

நாளாந்த தேயிலை விலைபங்கீட்டுக் கொடுப்பனவு 30 ரூபாவாகவும் வரவுக் கொடுப்பனவு 140 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மொத்தமாக 620 ரூபா சம்பளம் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகின்ற போதிலும் சில நியமங்களின் அடிப்படையிலேயே அவை வழங்கப்படுகின்றன.

மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்துவருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் வாழ்க்கை ஜீவனத்தையும் நாளாந்த நடைமுறையினையும் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையிலன்றி அவர்களுக்குள் ஒருவராக இருந்து பார்த்தால் பிரதிபலன் நிச்சயம் கண்ணீராகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் அந்தளவுக்கு வலிகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது.

"தங்க இடமும் தங்கக் காசும் இலவசமாம், தேயிலைக்கடியில் மாசியும் தேங்காயும் கிடைக்குமாம்.." என நம்பிவந்து ஏமாற்றப்பட்டவர்கள் என நாட்டார் பாடல்களில் கேலிக்கையாகக் கூறுவதுண்டு. 

அப்படியென்றால் இவர்களின் ஆரம்பமே ஏமாற்றம் என்பது தெளிவாகிறது. இதன் தொடக்கமோ தெரியவில்லை அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ ஒருவரால் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

வறுமை என்னும் தீயின் அணல் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்க அரசியல் இலாபம் தேடும் சில தொழிற்சங்கங்களும் அரசியல்தலைவர்களும் மாற்றுப்புறத்தில் குளிர்காய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

எந்தவொரு தொழிற்சங்கமாயினும் சரி அரசியல் கட்சியாயினும் சரி மக்களின் நன்மைகருதி ஆரம்பிக்கப்பட்டதென்றால், அது இறுதிவரை நிறைவேற்றப்பட வேண்டும். தாமே ஒட்டுமொத்த மலையக மக்களின் பிரதிநிதிகள், சேவைக்கு முன்னுதாரணமானவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் தமது வாழ்நாள் காலத்தில் பேச்சில்போன்று செயலிலும் தீரத்தை காட்டுவார்களாயின் வரலாற்றில் அவர்களுடைய பெயர் நிச்சயமாக எழுதப்படும்.

ஆனால் அதற்கு மாறான சம்பவங்களே இங்கு நடைபெற்று வருகின்றன. 

அப்பாவி தமிழர்களின் வாழ்க்கையை திறந்த மேடையாக்கிக்கொள்ள முனையும் பலர் அதில் நாடகமாடி வெளித்தோற்றத்தில் சிறந்தவர்கள் என காட்ட முற்படுகிறார்கள். 

மலையகத்தில் இயங்கும் தொழிற்சங்கங்களுக்கு அவற்றுக்கென்று தனிக்கொள்கை, தனிச்செயற்பாடு, தனிநோக்கங்கள் உண்டு. அந்த நோக்கங்களை அவை எந்தளவுக்கு அடைந்துள்ளன என்பதை சுயமதிப்பீடு செய்தல் அவசியமாகும்.

குறிப்பாக மலையக தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துக்கு பிற்போக்குடைய கொள்கைகள் பின்பற்றப்பட்டமைக்கான காரணத்தை பொறுப்புக்கூறவேண்டிய அனைத்து தொழிற்சங்கங்களும் பதிலளிக்க முன்வரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பாதைசெப்பனிடுவதும்,கூரைத் தகடுகள் கொடுப்பதும் மட்டுமே மலையக அபிவிருத்தியும் மக்களுக்கான சேவையும் என்ற பிரதான எண்ணத்தினை அரசியல்தலைவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை தீர்த்துவைப்பதன் மூலம் மலையகத்தில் பலகாலமாக இருந்துவரும் நிரந்தரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

மலையகத்தில் கல்வியில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. சிறுபராயத்தில் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கிடைக்காததனால் அவர்களின் கல்வி வளர்ச்சியும் குன்றுகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படுமானால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாமல்லவா?

அதேபோன்று 'சிறுவர் தொழிலாளர்கள்" என்ற கொடுமை மலையகமெங்கும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பெற்றோர் விழிப்புணர்ச்சி கொள்ளாதது முக்கியமான காரணம் எனினும் வறுமையே தூண்டுகோலாக அமைகிறது. இங்கு சம்பள அதிகரிப்பின் தேவை உள்ளதை நம் தலைவர்கள் உணர்வார்களா?

மலையக தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

எனினும் ஐந்து வருடங்கள் கடந்த பின்னரும் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்படவில்லை.

தொழிலாளர்களின் சம்பளத்தை 105 ரூபாவாக அதிகரித்துள்ளோம் என கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் மார்தட்டிக்கொள்கின்ற போதிலும் அதில் 75 வீத வரவுக் கொடுப்பனவு குறித்த உடன்படிக்கை குறித்து கரிசனை கொள்ளவில்லை என்றே கூறமுடியும்.

அத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திடம் தாம் முன்வைக்கும் சம்பளக் கோரிக்கை எதுவென்பதை இறுதி வரை மக்களுக்கு தெளிவுபடுத்தாததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
தொழிலாளர்களின் வரவுக் கொடுப்பனவை விட அடிப்படைச் சம்பளத் தொகையை அதிகரிக்கும் நோக்கம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் இறுதி வரை கருத்து தெரிவிக்கவில்லை.

கூட்டு ஒப்பந்த விதிமுறைகளுக்கு அப்பால் பல்வேறு தோட்டங்களில் அளவுக்கு அதிகமான வேலை நேரம் நிர்வாகத்தினரால் வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஆயினும் இது குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

அதேபோன்று வெளிப்படைத் தன்மையில்லாமல் பேச்சுவார்த்தைகள் தொடர்பான விடயங்கள் இரகசியமாகப் பேணப்பட்டதையும் இங்கு மறுக்க முடியாது.


நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியிலும் அந்நிய செலாவணி இலாபமீட்டலிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்குவதன் மூலமே அவர்களின் எதிர்கால இருப்பினை தக்க வைத்துக்கொள்ள முடியும். 

வேதனையோடு தொடரும் மக்களின் வாழ்க்கையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்தலைவர்கள் வரலாற்றுக்கு கட்டாயம் பதில்சொல்லியாக வேண்டும். அல்லது கறைபடிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக அவர்களின் பெயர் என்றும் அவமானத்தை குறித்துக்காட்டிக்கொண்டிருக்கும்.

அரசியல், தொழிற்சங்க பேதங்கள் தேவையில்லை, யார் பெரியவர் என்ற நிலையும் அவசியமில்லை, மக்களுக்காக ஒன்றிணைந்தால் நிச்சயமாக சாதிக்க முடியும். அது எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வாக அமைவதுடன் ஆரோக்கியமான, காத்திரமான எதிர்காலத்துக்கு நல்ல அடித்தளமாகவும் அமையும்.

மக்களால் மக்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். வலிமை மிக்க மனித உணர்வுகளை சுயலாபத்துக்காக கிள்ளிக் கொலைசெய்யாது அரசியலின் உண்மையான சேவையை வழங்க முன்வருதலே காலத்தின் தேவையாகும்.

மனோ கணேசன் தரப்பினர் மீது தாக்குதல்


இலங்கையில் மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டம் நடத்த முற்பட்ட 16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் மீது சிலர் நடத்திய தாக்குதலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.
கொட்டகலை நகரில் இன்று முற்பகல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
தொடர்புடைய பக்கங்கள்

தோட்டத் தொழிலாளர்களுக்கான அண்மைய சம்பள ஒப்பந்தத்தை எதிர்த்து, 16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடத்த நடவடிக்கை எடுத்திருந்தது.

ஆனால் இந்தக் கூட்டமைப்புக்கு எதிராக இன்னொரு குழுவொன்று கொட்டகலை நகரில் போராட்டம் நடத்த முனைந்ததாகவும், அந்தக் குழுவினர் தம்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதலில் காயமடைந்த தான் உள்ளிட்ட மூன்று பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் மனோ கணேசன் கூறினார்.
இதேவேளை, கொட்டகலையில் நடந்த தாக்குதல் காரணமாக தமது போராட்டம் இறுதியில் பத்தனை நகரில் நடத்தப்பட்டதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதேசத் தலைவர்களே தங்களைத் தாக்கியதாக மனோ கணேசன் தரப்பினர் கூறுகின்றனர்
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 450 ரூபாயிலிருந்து 520 ரூபாயாக உயர்த்த வேண்டுமென்று 16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோருகின்றது.
அந்தக் கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், கொட்டகலையில் தம்மை போராட்டம் நடத்தவிடாமல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்களும் ஆதரவாளர்களும் தமக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும், நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்னவும் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அங்கிருந்த காவல்துறையினரும் தம்மை அங்கு போராட்டம் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தாம் பத்தனை நகருக்குச் சென்று போராட்டம் நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தாக்குதலைத் தொடர்ந்து16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பத்தனை நகரில் தமது கண்டனக் கூட்டத்தை நடத்தியது
மனோ கணேசன், விக்ரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய, வீ.ராதாகிருஷ்ணன், பி.திகாம்பரம் உள்ளிட்டோர் தலைமையிலான பல்வேறு அரசியல்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, கொட்டகலை நகரில் மனோ கணேசன் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் முத்து சிவலிங்கம் பிபிசி தமிழோசையிடம் மறுத்தார்.
தமது கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்துகொள்ளப்பட்ட சம்பள ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஆளும் மகிந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு பி.பி.சி

இரத்தினபுரி தமிழர்களை பாதுகாத்திடுங்கள் என தொண்டமானுக்கு சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது : மனோ கணேசன்

மனோ கணேசன்
இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இரத்தினபுரி மாவட்ட வேவல்வத்தை பொலிஸ் பிரிவில் அலுபொல தோட்டத்தில் வாழும் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த பெரும்பான்மை இன கோஷ்டி ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

தமது குடியிருப்புகளுக்குள் நுழைந்தவர்களின் மீது தமிழ் தொழிலாளர்களும் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு தரப்பினரும் காயப்பட்ட நிலையில் தற்போது பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இதே பகுதியில் கலபொட தோட்டத்திலும், இரண்டு நாட்களுக்கு முன்னர் நிவித்திகல பகுதியில் தொலஸ்வல என்ற தோட்டத்திலும், சில நாட்கள் முன்பு பெல்மதுல்ல பகுதியின் லெல்லுபிடிய, கோணகும்புற ஆகிய இரண்டு தோட்டங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் சமீப காலத்துக்குள் நடைபெற்றுள்ளன.

பெரும்பான்மை இன கிராமத்தவர்களால் சூழப்பட்ட இரத்தினபுரி மாவட்ட தோட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய இனவாத தாக்குதல்கள் தொடர்பில் விசேட அக்கறை செலுத்தி, அவற்றை அரசாங்க உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து இத்தகைய சட்டவிரோத சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வரும்படி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுசெயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு நான் பகிரங்க கோரிக்கை விடுக்கிறேன்.

சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து தமிழ் பிரதிநிதித்துவம் பெற்றுகொடுக்க அன்று உழைத்த எனக்கு, இரத்தினபுரி தமிழர்களை பாதுகாத்திடுங்கள் என்று தொண்டமானுக்கு இன்று சொல்வதற்கு முழுமையான உரிமை இருக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுவோம் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களில் வாழும் தமிழ் தொழிலாளர்களின் மீது இனவாத தாக்குதல்கள் நடைபெறுவது தொடர்கதையாகி விட்டது. தனிப்பட்ட முரண்பாடுகளால் ஏற்படும் சம்பவங்கள் இனவாத தோற்றம் பெற்று, பெரும்பான்மை இனத்து காடையர்களால் வீடு புகுந்து தமிழ் தொழிலாளர்கள் தாக்கப்படுவது வழமையாகிவிட்டது. எங்காவது தொழிலாளர்கள், கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது கிடையாது.

தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் தொடர்பாக இன்று அதிகாலை மூன்று மணிக்கு எனக்கு அந்த தோட்டத்து மக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு அறிவித்தார்கள். அது தொடர்பாக அந்த வேளையில் செய்யக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நான் மேற்கொண்டேன். சில மாதங்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட தோட்ட ஆலயத்துக்குள் புகுந்து சில பெரும்பான்மையினர் காடைத்தனம் செய்திருந்தனர். அதிலும் நான் தலையிட்டிருந்தேன். அந்த சம்பவம் தொடர்பாக ஒரு வழக்கு இப்போது நிலுவையில் உள்ளது. அந்த பழைய விரோதத்துடன், இன்றைய சம்பவம் சம்பந்தப்பட்டது. இன்றைய சம்பவத்தில் சுமார் 30 குண்டர்கள் மதுபோதையில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கலகம் விளைவித்துள்ளனர்.

கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது நமது கட்சியும், மலையக மக்கள் முன்னணியும் இ.தொ.கா.வுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட காரணத்தாலேயே அங்கு வெற்றி கிடைத்தது. எம்மைப் பொறுத்தவரையில் அந்தக் கூட்டு அமைக்கப்பட்டதன் பிரதான நோக்கம், தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவரும் இரத்தினபுரி தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பதாகும்.

இரத்தினபுரியிலும், கேகாலையிலும் கிடைத்த வெற்றிகள் இ.தொ.காவின் தனிப்பட்ட வெற்றிகள் அல்ல. இது சப்ரகமுவயில் வாழும் சிறு குழந்தைக்கும் தெரிந்த உண்மை. ஆனால் இரத்தினபுரி, கேகாலை மாவட்ட வெற்றிகள் ஏதோ தங்களது கட்சியின் தனிப்பட்ட சொந்த வெற்றிகள் போல் இ.தொ.கா. அரசாங்கத்துக்கு காட்டிக்கொண்டது எமக்கு தெரியும். அதைப்பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. நான் தமிழ் இனத்தைத்தான் பார்க்கிறேனே தவிர தேர்தல் அரசியலை பார்ப்பது இல்லை. இது தமிழ் மக்களுக்கு தெரியும். ஆனால் மக்களை பாதுகாக்கும் கடைமையில் இருந்து இ.தொ.கா. தவறுமானால் வாக்கு வாங்கிக் கொடுத்த நான் சும்மா இருக்க மாட்டேன். எனவே அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்த்துடன் அங்கம் வகிக்கும் இ.தொ.கா, தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இரத்தினபுரி தமிழர் தொடர்பாக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறையாக்க வேண்டும்.

பகல் வேளையில் சம்பவங்கள் நடைபெற்றால், இரவு வேளையில் கூட்டம் கூட்டமாக வந்து பெரும்பான்மை இனத்து காடையர்கள் தாக்குவார்கள் என இரத்தினபுரி தோட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் அச்சத்துடன் இரவுகளில் விழித்திருந்து வாழும் நிலைமை நீங்க வேண்டும். இரத்தினபுரியில் இனிமேலும் இனவாத சம்பவங்கள் நடைபெற்றால் அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

'இரத்தினபுரி மாவட்டத்தில் இனவாதத் தாக்குதல்கள்'



இலங்கையில் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள தமிழ்த் தோட்டக் குடியிருப்புகள் மீது அண்மைக் காலமாக இனவாதத் தாக்குதல்கள் அதிகளவில் நடந்துவருவதாக ஆளுங் கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சபரகமுவ மாகாணசபை உறுப்பினர் கூறுகிறார்.

வேவல்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுபொல என்ற தோட்டத்திற்குள் நுழைந்த கோஷ்டி ஒன்று இன்று புதன்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயப்பட்ட மூன்றுபேர் பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சபரகமுவை மாகாணசபை உறுப்பினர் கணபதிப்பிள்ளை ராமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

அண்மைக் காலங்களில் இவ்வாறான பல தாக்குதல் சம்பவங்கள் இப்பகுதியில் நடந்துள்ளதாகவும் அதுபற்றி தமது கட்சித் தலைமை அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு அறிவித்துள்ளதாகவும் ராமச்சந்திரன் கூறினார்.

இனவாத அரசியல்வாதிகளே இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அலுப்பொல தோட்டத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொலிஸ் காவலும் சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சபரகமுவ மாகாணசபை உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

1998-ம் ஆண்டில் வேவல்வத்தையில் இனவாதிகளின் வன்முறையில் தோட்டக் குடியிருப்புகள் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சபரகமுவை தேர்தல்

இதேவேளை, இதேபகுதியில் கலபொட என்ற தோட்டத்திலும் நிவித்திகல என்ற இடத்தில் தொலஸ்வல என்ற தோட்டத்திலும் பெல்மதுல்ல பகுதியில் கோணகும்புற, லெல்லுபிட்டிய ஆகிய தோட்டங்களிலும் தமிழர்கள் மீது அண்மைய நாட்களில் இனவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளதாக மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

கேகாலை, இரத்தினபுரி ஆகிய இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கிய சபரகமுவ மாகாணசபைக்கான தேர்தலில் மலையகத்தின் அனைத்துக் கட்சிகளும் இணைந்து இரண்டு உறுப்பினர்களை வென்றெடுத்த நிலையில், அப்பகுதி தமிழர்களை பாதுகாக்க அரசாங்கத்துடன் கூட்டுச்சேர்ந்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு / பி.பி.சி

கூட்டு ஒப்பந்தமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனமும்


இரா. ரமேஷ்
பேராதனைப் பல்கலைக்கழகம்

1. அறிமுகம்:
தொண்ணூறுகளின் அரம்பத்தில் பெருந்தோட்டங்கள் கம்பனிகளுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட போது கூட்டு ஒப்பந்த அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் நிர்வகிக்கப்பட வில்லை. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நியதிச் சட்டங்கள் மற்றும் பொதுவாக காணப்பட்ட தொழிற்சட்டங்களின் அடிப்படையிலேயே பெருந்தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டன. ஆகையால் சம்பளமானது சம்பள நிர்ணய சபையினூடாக தீர்மானிக்கப்பட்டன. எவ்வாறாயினும் 1998ம் ஆண்டு முதற் கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநித்துவப்படுத்திய தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பாக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்றது. இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தமானது ஒரு பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்களின் நலன்களோடு தொடர்புடையதாகும். ஒரு வகையில் அது முழு மலையக மக்களினது வாழ்வியலைத் தீர்மானிக்கும் அம்சம் என்றே கூறலாம். எனவே கூட்டு ஒப்பந்தம் அரசியல் தொழிற்சங்க ரீதியில் மலையக்தில் மிகுந்த முக்கியத்தும் பெற்றுள்ளது. அத்தோடு தேசிய ரீதியாகவும் முக்கியத்துவம் பெறும் விடயமாக உள்ளது. உண்மையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக மிக நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இது விடயத்தில் வரலாற்றின் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களும் பணி பகிஸ்கரிப்பும் இடம்பெற்றுவந்துள்ளன. அந்தவகையில் இன்று தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெறுகின்றன.

2. தொழிலாளர்களின் வேதனம்: தற்போதைய நிலை 
 2011ம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி செய்யப்பட்ட சம்பள கூட்டு ஒப்பந்தத்தின் படி தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் 380 ரூபாவாகவும் 75% மேல் வருகை காணப்படுமாயின் 105 ரூபாவும் ஒரு நாளுக்கான நியமத்தைப் பூர்த்தி செய்தால் 30 ரூபாவும் வழங்கப்படுகின்றது. மொத்தமாக 515 ரூபா சம்பளம் ஒரு நாளைக்கு வழங்கப்படுவதாக கம்பனிகள் சார்பில் வாதிடப்படுகின்றது. ஆயினும் நடைமுறையில் 515ரூபா சம்பளம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. இதற்குப் பல காரணிகள் உண்டு. சில தோட்டங்களில் வரவு கொடுப்பனவை இல்லாது செய்யும் வகையில் முகாமைத்துவம் சில உபாயங்களை கையாள்கின்றன. இதனால் 105  ரூபா கொடுப்பனவினை 60-70% மான தொழிலாளர்களால் பெற முடிவதில்லை. தேயிலை விளைச்சல் இல்லாத காலங்களில் 17 அல்லது 18 கிலோகிராம் தேயிலையினைப் பறிக்க வேண்டுமெனவும் இறப்பர் தோட்டங்களில் சாதாரண காலங்களில் 6மப இறப்பரையும் விளைச்சல் காலங்களில் 9மப இறப்பரையும் பெற்றுதருமாறு தோட்ட முகாமைத்துவத்தால் நிபந்தனை விதிக்கப்படுவதுடன் அது நியம கொடுப்பனவு 30 ரூபாவினைப் பெற அவசியமெனவும் குறிப்பிடப்படுகின்றது. சில தோட்டங்களில் ஒரு நாள் நியமத்தை பூர்த்தி செய்யாவிடின் ஒப்பந்தத்தை மீறும் வகையில் ½ பெயர் வழங்கப்படுகிறது (அதாவது அடிப்படை சம்பளத்தில் அரைவாசி மாத்திரம் வழங்குதல்). உண்மையில் இன்று ஒரு நாளுக்கான நியமத்தைத் தீர்மானிப்பதில் தோட்ட முகாமைத்துவத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் அதிகாரம் உண்டு என கூட்டு ஒப்பந்தம் குறிப்பிடுகின்றது. ஆயினும் நடைமுறையில் தோட்ட முகாமைத்துவத்தாலே தீர்மானிக்கப்படுகின்றது. அதனால் நாளுக்கு நாள் இது மாற்றமடைகின்றது. மறுபுறமாக 25 நாட்கள் தோட்டத்தில் வேலை வழங்கப்படுமாயின் அதில் குறைந்தது 18 நாட்கள் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும். அவ்வாறன்றில் வருகைக் கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது. இதன்படி பார்க்கும்போது 75%மான தொழிலாளர்களின் வேதனம் 380 ரூபாவுடன் மட்டுப்படுத்தப்படுகின்றது. தேயிலை விளைச்சல் அதிகமாக இருக்கும்  மார்ச் ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் மாத்திரமே தொழிலாளர்கள் நியமக் கொடுப்பனவு 30 ரூபாவினை பெற முடியும்.  இன்று காலநிலை மாற்றம் தேயிலை விளைச்சல் பருவங்களிலும் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளமையால் இதுவும் கடினமாகவே உள்ளது.

3. வாழ்க்கைச் செலவும் தொழிலாளர் வேதனமும்
2011ம் ஆண்டு சம்பளம் நிர்ணயம் செய்யும்போது வாழ்க்கைச் செலவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளுக்கும் இன்று காணப்படுகின்ற விலைகளுக்கும் இடையே பெரியளவிலான வேறுபாடு உண்டு. 2011க்குப் பின்னர் பொருட்களின் விலைவாசி தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டதுடன் இரு தடவைகள் பெற்றோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இவை நேரடியாக வாழ்க்கை செலவில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது மிகக் குறைந்த வேதனம் பெறும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வாழ்க்கையிலும் எதிர்மiறாயன தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. பின்வரும் அட்டவணை கடந்த மூன்று ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பினைக் காட்டுகின்றது.

ஆகவே மேற்கூறிய அட்டவணையானது விலைவாசி அதிகரிப்பினையும் அதற்கேற்ற வகையில் சம்பள அதிகரிப்பிற்கான தேவையை வெளிக்காட்டுகின்றது. 2009ஃ2010ம் ஆண்டு குடும்ப வருமானம் மற்றும் செலவு தொடர்பாக இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வின்படி ஒரு குடும்பத்திற்கு (4 பேர் கொண்ட) உணவு மற்றும் உணவில்லாத செலவுகளுக்கு சராசரியாக 31331ரூபா தேவை எனக் குறிப்பிடுகின்றது. மேலும் 2பேர் தொழில் செய்யும்  குடும்பத்தின் சராசரி மாத வருமானம் 36451 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பெருந்தோட்ட மக்களின் வருமானத்துடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.  ஒரு குடும்பத்தில் சராசரியாக 4 பேர் வேலை செய்தால் மாத்திரமே 36451ரூபா வருமானத்தை பெருந்தோட்டத்துறையில் பெற முடியும். 2013ம் ஆண்டு ஒரு மதிப்பீட்டின்படி 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு மாத செலவுக்கு சராசரியாக 40000 ரூபா வரை தேவை எனக் குறிப்பிடப்படுகின்றது. வாழ்க்கைச் செலவில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணமாகும். ஆயினும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்றுள்ள சம்பளக் கட்டமைப்பில் இருந்துக் கொண்டு மேற்கூறியத் தொகையினை எட்டுவது இயலாத காரியமாகும். இன்றுள்ள சம்பளக் கட்டமைப்பின்படி மாதத்தில் 30 நாற்கள் வேலை வழங்கப்பட்டாலும் 40000 வருமானத்தை தோட்டத் தொழிலாளர்களால் உழைக்க முடியாது என்பதனை மனங்கொள்ள வேண்டிய விடயமாகும்.  இது தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பெரிதும் நியாயப்படுத்துகின்றது. 

4. தொழிலாளர் வேதனத்தில் பாதிப்பு செழுத்தும் காரணிகள் 
இன்று தோட்டங்களில் இரண்டு பேர் சராசரியாக வேலை செய்கின்றார்கள். நன்கு விளைச்சல் உள்ள தோட்டங்களில் 20 தொடக்கம் 24 நாட்கள் வரை வேலை வழங்கப்படுகின்றது. 25 நாட்கள் வேலை செய்தாலும் மாதம் ரூபா 12875 மட்டுமே பெற முடியும் (380X 25 + 9500,  105X25+ 2625, 25X30) (9500+2625+750 = 12875) இதில் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி கோவில் கொடுப்பனவு தொழிற்சங்க சந்தா கூட்டுறவு சங்கம் மரண சங்கம் உணவுக்கான கழிப்பனவு தேயிலை பெருநாள் முற்பணம் சம்பள சீட்டுக்கான கழிப்பனவு என மொத்த வேதனத்தில் 30-40 வீதம் கழிப்படுகின்றன. விபரிக்கப்பட்ட சம்பள சீட்டுக்கு கூட சில தோட்டங்களில் 7 ரூபாய் கழிக்கப்படுவது வியப்புக்குரிய விடயமாகும். மேலும் வேறு கழிப்பனவுகள் என 6 ரூபாய் அறவிடப்படுகின்றது. இது எதற்கான அறவீடு என்பது குறித்த விபரங்கள் சம்பள சீட்டில் குறிப்பிடப்படவில்லை. இன்று அதிகமான தொழிலாளர்கள் லயன் அறைகளைத் திருத்துவதற்காக கடன் பெறுகின்றார்கள். இதற்குத் தமது வேதனத்திலிருந்து 22% வட்டியைச் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. உழைக்கும் பணத்தில் பெரும்பகுதி வட்டிக்காகவே செலவாகின்றமையினை பல தோட்டங்களில் காண முடிந்தது. உண்மையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 31331 ரூபாவினை குடிமனை தேவைகளுக்கு செலவிட வேண்டுமாயின் அவர்களின் ஒரு நாள் வேதனம் குறைந்தது 650ரூபாக அதிகரிக்கப்பட வேண்டும். அப்பொழுதே இருவர் தொழில் செய்யும் குடும்பமொன்றில் மாத வருமானம் சராசரியாக 26000 ரூபாவினையேனும் பெற முடியும்.

இன்று தோட்டங்களில் வரவு கொடுப்பனவு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. உண்மையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவு கொடுப்பனவு கிடைக்காமைக்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. குறிப்பாக தொழிலாளர்கள் திருமணம்  மரணம் பண்டிகைகள் திருவிழாக்கள் உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல் சடங்கு சுகயீனம் போன்ற பல தனிப்பட்ட காரணங்களால் வேலை வழங்கப்படுகின்ற அத்தனை நாட்களும் வேலைக்குச்  செல்வதில்லை. உண்மையில் 515 ரூபா சம்பளத்தினை மொத்த தொழிலாளர் படையில் 10 வீதத்துக்கு குறைவாக இருக்கின்ற காவலாளிகள் பங்களா சேவையாளர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் தொழிற்சாலை ஊழியர்கள் போன்றோரே பெறுகின்றனர். வரவு கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியாமைக்கு தொடர்ச்சியான காலநிலை மாற்றம் பாடசாலைகளில் இடம்பெறும் கூட்டங்கள் ஞாயிறு தினங்களில் வேலை செய்தல் பெண் தொழிலாளர்கள் 15-20 கிலோகிராம் நிறையுடைய பச்சை கொழுந்து பைகளை கடும் வெயிலில் சுமப்பதால் ஏற்படும் சுகவீனம் போன்றவற்றையும் குறிப்பிடலாம்.

தொழிலாளர் வரவு கொடுப்பனவு சில நேரங்களில் 18 நாள் தொடர்ந்து  தொழில் செய்கின்ற ஒருவருக்குக் கிடைக்காமல் போகலாம். அதற்கு தோட்ட முகாமைத்துவத்தின் திட்டமிட்ட செயல்கள் காரணமாகும். தொழிலாளர் வரவு தொடர்பான பதிவுகள் தோட்ட முகாமைத்துவத்திடமே கானப்படும். இதில் மாற்றங்கள் செய்தாலும் தொழிலாளர்களுக்குத் தெரிவதில்லை. தோட்ட முகாமைத்துவம் சராசரியாக 25 நாட்கள் வேலை வழங்கினாலும் பெண் தொழிலாளர்கள் 18 அல்லது 19 நாட்கள் மாத்திரமே செல்வர். அதற்கு அவர்களுக்குள்ள குடும்பஃதனிப்பட்ட அர்ப்பனிப்புகள் பிரச்சினைகள் என்பனவே காரணமாகும்.

5. கூட்டு ஒப்பந்த வரலாறும் அதன் இன்றைய நிலையும்
1996ம் ஆண்டிலிருந்து தொழிலாளர்களின் வேதனம் கூட்டு ஒப்பந்தத்தின் மூலமே தீர்மானிக்கப்படுகின்றது. நாட்சம்பளமும் சில நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகளும் மாத்திரமே இவர்களின் மாத வருமானத்தில் அடங்குகின்றன. குறைந்தபட்ச சம்பளம் என்ற விடயம் முதன் முதலில் 1927ம் ஆண்டு சம்பளக் குழுவினால் குறைந்தபட்ச சம்பள சட்டத்தின்(Minimum Wages Ordinance)  கீழ் தீர்மானிக்கப்பட்டது. சம்பள நிர்ணய சபை தாபிக்கப்படும் வரை தொழிலாளர்களின் சம்பளம் முதலாளிகளிடம் இருந்து நேரடியாக வழங்கப்படவில்லை. சம்பளத்தை தோட்ட உரிமையாளர்கள் தன்னிச்சையாகத் தீர்மானித்தனர். சம்பளத்திற்குப் பதிலாக அரிசி மற்றும் ஏனைய உணவு பண்டங்கள் வழங்கப்பட்டதுடன் தொடர்ச்சியான சம்பளமும் வழங்கப்படவில்லை. பின்னர் குறைந்தப்பட்ச சம்பள சட்டத்தின் கீழ் தோட்ட சம்பள சபை தாபிக்கப்பட்டது. அதில் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்கள் தோட்;ட முதலாளிகள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் இடம்பெற்றனர். இதுவே 1996ம் ஆண்டிலிருந்து கூட்டு ஒப்;பந்தம் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது.

1984ம் ஆண்டு மறைந்த தலைவர் தொண்டமான் தலைமையில் சம்பள அதிகரிப்பிற்கானப் போராட்டம் இடம்பெற்றது. இதன் பயனாக வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. (ஒரு நாளைக்கு மூன்று ரூபா என்றடிப்படையில்) அத்துடன் நாட்டில் வாழ்க்கைச் செலவு சுட்டி அதிகரிக்கும் போது வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது. ஆயினும் இவை இன்று பின்பற்றப்படுவதில்லை. எவ்வாறாயினும் இந்தப் போராட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் குறைந்த வேதனம் 23.75சதமாக நிர்ணயிக்கப்பட்டது. 1994ம் ஆண்டு தொழிலாளர் சம்பளம் ரூபாய் 72.24 சதத்தில் இருந்து 83 ரூபாவாக உயர்த்தப்பட்டது. இதற்கு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களின் அழுத்தம் ஆதரவு காரணமாக அமைந்தது. 1994க்குப் பின்னர் அரசாங்கம் சம்பள நிர்ணய விடயத்திலிருந்து விலகிக் கொண்டது. அதன் பின் பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களைக் கொண்டு கூட்டுஒப்பந்தம் ஒனறின் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க ஆரம்பித்தன. 1996ம் ஆண்டு பிரிதொரு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (டுதுநுறுரு) மற்றும் ஒருங்கிணைந்த பெருந்தோட்டக் கூட்டமைப்பு ஆகியன கைச்சாத்திட்டன. இவை தொழிலாளர்கள் சார்பிலும் முதலாளிமார் சம்மேளனம் முதலாளிகள் சார்பிலும் கைச்சாத்திட்டன. 1997ம் ஆண்டு தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் 83 ரூபாவாக காணப்பட்டது. இது 1999ம் ஆண்டு 95 ரூபாவாக உயர்த்தப்பட்டது. உண்மையில் தொழிலாளர்களின் வேதனக் கட்டமைப்பில் 2000க்குப் பின்னரேயே குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. அதனை பின்வரும் அட்டவணையின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

6. தேயிலை உற்பத்தி உற்பத்தி செலவு விற்பனை கம்பனி வருமானம்
இன்று பெருந்தோட்ட கம்பனிகள் உற்பத்தி செலவு அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற வேதனம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் சேமநல வசதிகள் இதற்குக் காரணம் என்பது அவர்களின் தர்க்கமாகும். ஆயினும் மொத்த உற்பத்தி செலவில் தொழிலாளர்களுக்கான செலவு 60 வீதம் எனவும் ஏனையவை தேயிலை உற்பத்தி விநியோகம் விற்பனைக்கான நிர்வாக செலவாகும். உண்மையில் கம்பனிகள் இது தொடர்பாக தெளிவான தரவுகளை வெளியிடுவதில்லை. இதனால் உண்மையான உற்பத்தி செலவு குறித்த விடயங்களை தொழிலாளர்களால் அறியமுடியாதுள்ளது.  பெருந்தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டதனைத் தொடர்ந்து தகவல் அறிவதற்கான உரிமை பெரியளவில் மறுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்குத் தோட்டத்தின் வருமானம் அல்லது உற்பத்தி தொடர்பான எந்தவிதமான தகவல்களும் வழங்கப்படுவதில்லை. அவ்வகையில் இது ஒரு மனித உரிமை மீறலாகவும் காணப்படுகின்றது.

இன்று சராசரியாக ஒரு தொழிலாளி 16-19 வரையான கிலோகிராம் பச்சை தேயிலையைப் பறிக்கின்றார். இது எல்லா தோட்டங்களிலும் உள்ள பொதுவான நியமமாகும். இதனைக் கொண்டு 4 கிலோகிராம் தேயிலையைத் தயாரிக்க முடியும். இன்று கொழும்பு ஏல விற்பனையில் 1 கிலோகிராம் தேயிலை 380 ரூபாவுக்கு மேல் (2013) விற்கப்படுகின்றது. இதன் மூலம் ஒரு தொழிலாளியிடமிருந்து 1520 ரூபாய் இலாபம் கிடைக்கின்றது. இதில் சம்பளம் நுPகுஃ நுவுகு என்பவற்றுக்கு 600 ரூபாவை கழித்தாலும் ஒரு தொழிலாளியிடமிருந்து எல்லை இலாபமாக 905 ரூபாய் கம்பனிக்குக் கிடைக்கின்றது. ஆகவே தொழிலாளர்களே தோட்டம் நஸ்டத்தில் இயங்க காரணம் என்ற வாதம் இதன் மூலம் முறியடிக்கப்படுகின்றது. இன்று கம்பனிகள் உற்பத்தி செலவினை கட்டுப்படுத்துவதற்கான உபாயங்கள் இருந்தும் அது விடயத்தில் பெரிதும் அக்கரைக்காட்டுவதில்லை. இறுதியில் தொழிலாளர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்பட்டமையே உற்பத்தி செலவுக்கு காரணம் என்ற தர்க்கத்தை கட்டியெழுப்புகின்றனர். உற்பத்தி செலவில் அடங்கும் காரணிகளை பகுப்பாய்வு செய்து அதனை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேண்டும். இன்று தோட்டங்களில் இடம்பெறும் பல அநாவசியமான செலவுகள் இதனுள் உள்வாங்கப்பட்டுள்ளது. உற்பத்தி செலவு இலாபம் என்பவற்றுக்கு அப்பால் இன்று வாழ்வுக்கான வேதனம் (டiஎiபெ றயபந) என்பது உலகளாவிய ரீதியில் முக்கிய எண்ணக்கருவாக மாறியுள்ளது. ஒரு மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வேதனம் வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். இதனை சர்வதேச தொழிலாளர் தாபனமும் வலியுருத்தி வருகின்றது. அந்தவகையில் பெருந்தோட்ட மக்களுக்கும் வாழ்வுக்கான சம்பளத்தை வழங்க பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வரவேண்டும். பெருந்தோட்ட மக்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் வாழ்வுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கத்துக்கும் கடப்பாடுண்டு. இது விடயத்தில் உற்பத்தி செலவு இலாபம் ஆகியவற்றுக்கு அப்பால் நின்று செயலாற்ற வேண்டும்.  பின்வரும் அட்டவணை தேயிலை மறறும் இறப்பருக்கான உற்;பத்தி செலவினைக் காட்டுகின்றது. இன்று இறப்பர் ஒரு கிலோ கிராமுக்கான உற்பத்தி செலவு 120 ரூபாவாகும். ஆயினும் அதன் சராசரி விற்பனை விலை 360 ரூபாவாகும். இதன் மூலம் ஒரு கி.கி இறப்பரிலிருந்து கம்பனி பெறும் இலாபம் வெளிப்படுகிறது. உற்பத்தி செலவுக்கு அப்பால் கம்பனிகள் ஈட்டும் இலாபத்தினையும் நோக்க வேண்டும். அதனை பின்வரும் அட்டவனை மூலம் விளங்கிக்கொள்ளலாம். 

இவ்வட்டவணை இலங்கை தேயிலை கொழும்பு ஏல விற்பனையில் உயர் விலைக்கு விற்கப்படுவதனை காட்டுகின்றது. இப்புள்ளிவிபரங்கள் தேயிலைக்கான விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற கருத்தினை வலுவற்றதாக்கின்றது.
இவ்வட்டணை தேயிலை உற்பத்தி செய்யும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் தேயிலை முக்கியப் பங்கினை வகிப்பதனைக் காட்டுகின்றது.

இவ்வட்டவணை தேயிலை இறப்பர் என்பவற்றின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினை காட்டுகின்றது. குறிப்பாக இறப்பர் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பினைக் காட்டுகின்றது. கீழுள்ள அட்டவனையானது தேயிலை உற்பத்தி செய்யப்படும் மூன்று பிரதேசங்களையும் அவற்றின் உற்பத்தி அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் காட்டுகின்றது. தாழ்நிலப்பகுதிகளில் தேயிலை விளைச்சல் அதிகமாகக் காணப்படுவதுடன் அதற்கான கேள்வியும் அதிகமாகும். 

2010ம் ஆண்டு தேயிலைத் துறையின் மூலம் 17 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்தமை வரலாற்றில் மிக உயர்ந்த வருமானமாகும். தேயிலை ஏற்றுமதி வருமானம் 2009 2010 2011 ஆகிய ஆண்டுகளில் முறையே 136171 162793 164869 மில்லியன் ரூபாவாகும். 2009ம் ஆண்டு 291ஆமப மாக காணப்பட்ட தேயிலை உற்பத்தி 2010ம் ஆண்டு 331.4 ஆமபமாக பெரியளவில் அதிகரித்தது. அதேபோல் ஏற்றுமதி அளவும் 2009ல் 208ஆமபலிருந்து 2010ல் 298ஆமபமாக அதிகரித்தது. உலகளாவிய ரீதியில் இலங்கை தேயிலைக்கான கிராக்கி குறைவடையவில்லை. உலகில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. பின்வரும் அட்டவணை இதனை மேலும் தெளிவுபடுத்துகின்றது.

7. தொழிலாளர் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியம்
மேலே வழங்கப்பட்டுள்ள தரவுகள் பெருந்தோட்டத்துறை இலாபத்தில் இயங்குவதனைக் காட்டுகின்றது. இவ்வாறு இலாபத்தினை ஈட்டுகின்றபோதும் தொழிலாளர் வேதனக் கட்டமைப்பில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்படவில்லை. இன்று தற்காலிகமாக நகர்புறங்களில் தொழில் செய்வோர் நாட் சம்பளமாக சராசரியாக 600 வரையில் உழைக்கின்றார்கள். நகரப்புற கடைகளில் வேலை செய்வோர் 800 ரூபா வரையில் உழைக்கின்றார்கள்.  கட்டுமான பணிகளில் ஈடுபடுவோர் 900-1000 ரூபா வரை சம்பளம் பெறுகின்றனர். தனியார் துறைகளில் பணிபுரியும் திறனுள்ள தொழிலாளர்கள் (ளுமடைடநன டுயடிழரச) 1000-2000 வரையில் சம்பளம் பெறுகின்றனர். ஆயினும் உடலை வருத்தி தொழில் செய்யும் தேசிய பொருளாதாரத்திற்குப் பெரிதும் பங்களிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் 380 ரூபாய் வேதனத்தை மாத்திரமே பெறுகின்றனர். ஏனைய துறைகளில் தொழில் செய்வோரின் வேதனம் வாழ்க்கைச் செலவு ஏற்றத்திற்கு ஏற்ப வருடாந்தம் மீளாய்வு செய்யப்படுகிறது. அரச துறையில் வருடாந்தம் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சம்பளம் அதிகரிக்கப்படுகின்றது (inஉசநஅநவெ). அத்துடன் ஏனைய துறைகளில் அதிகமானோர் மாத சம்பளத்துக்காகவே தொழில் செய்கின்றார்கள். ஆயினும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் சுமார் 200 வருட காலமாக நாட் கூலிக்காகவே தொழில் செய்கின்றார்கள். இவர்களின் வேதனம் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்பட்டாலும் அது நாகரீகமான மானிட வாழ்க்கையினைக் கொண்டு நடாத்துவதற்குப் பொருத்தமற்றது. வாழ்க்கைச் செலவு சுட்டிகள் தொடர்ந்து அதிகரித்து சென்ற போதும் அதற்கான சலுகைகள் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆயினும் அரச மற்றும் தனியார் துறையில் உள்ளோர் இச் சலுகைகளை அனுபவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சம்பளத்திற்கு அப்பால் நுவுகுஃநுPகு க்கான கொடுப்பனவு வாடகையற்ற வீடு தண்ணீர் வசதி இலவச சுகாதாரம் சலுகை விலையில் தேயிலை போன்ற பல சேமநல வசதிகள் வழங்கப்படுவதாக முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிடுகின்றது. ஆயினும் இவற்றின் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது. இன்று அரசசார்பற்ற நிறுவனங்களே பெருந்தோட்டப் பகுதிகளில் இம்மக்களின் சேமநல விடயங்களில் அதிகளவில் செயற்பட்டு வருகின்றன.

மேலும் தோட்ட முதலாளிகள் சம்மேளனம் சராசரியாக ஒரு வீட்டில் 3 பேர் வேலை செய்வதாகக் குறிப்பிடுகின்றனர். அதில் 16 வயதைப் பூர்த்தி செய்த பெண்களை உள்ளடக்குகின்றார்கள். இது தவறான வாதமாகும். இன்று இந்நிலை மாறிவிட்டது. இன்றைய இளைஞர்கள் தோட்டத்துறை தொழிலை நாடுவதில்லை அதிகமானோர் சாதாரண தரம் வரை கற்றுள்ளனர். அவர்கள் இன்று நகர்ப்புறங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் சுயத்தொழில்களிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். மொத்த இளைஞர் யுவதிகளில் 8% மானவர்களே இன்று தோட்டத்துறை தொழிலை நாடுகின்றார்கள். அவர்கள் பாடசாலை கல்வியை முழுமையாக பூர்த்தி செய்யாதவர்களாகும். மேலும் பெருந்தொகையான இளைஞர் யுவதிகள் தொழில் இன்றி காணப்படுகின்றனர். இந்நிலையிலும் அவர்கள் தோட்டத் தொழிலை நாடுவதில்லை. இதற்கு குறைந்த வேதனமும் தொழில் கௌரவம் இன்மையும் காரணமாகும். 2011ம் ஆண்டு முதலாளிமார் சம்மேளனம் விடுத்த அறிக்கையொன்றில் ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு தொழிலுக்கு சமூகம் தந்தால் 527 ரூபாய் வேதனம் பெறுவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.  அதில் அடிப்படை சம்பளம் 380 ரூபாய் நுவுகுஃநுPகு கொடுப்பனவு 57 ரூபாய் ஊக்க கொடுப்பனவு 30 ரூபாய் வருகைக்கான கொடுப்பனவு 105 ஆகியன உள்ளடக்கப்பட்டிருந்தது. இங்கு புரிந்துகொள்ள வேண்டிய விடயம் யாதெனில் எத்தனை பேர் இந்த 572 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர் என்பதாகும். கலாநிதி சந்திரபோஸ் மற்றும் சிவப்பிரகாசம் ஆகியோர் 2011 இல் மேற்கொண்ட ஆய்வொன்றின்படி 1.41% மட்டுமே அத்தொகையினைப் பெறுகின்றார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டது.

உண்மையில் இவ்வாறான அறிக்கைகளை வெளியாட்கள் பார்க்கும்போது இது உண்மையென நம்புவதுடன் மறுபுறமாக தொழிலாளர்கள் உயர் வருமானத்தைப் பெறுவதாக எண்ணுவர். முதலாளிமார் சம்மேளனம் எல்லா சந்தர்ப்பங்களிலும் தொழிலாளர் வேதனத்தை திரிபுப்படுத்தி கூறுவதுடன் அவர்களுக்குக் கிடைக்கின்ற தரம் குறைந்த சேம நலன்களையும் உயர்த்தி கூறி வருகின்றனர். இவ்வாறான கருத்துக்களுக்கு எதிராக எதிர் வினைகளை சரியான ஆதாரங்களுடன் காட்டி வாதிடவேண்டும். கடந்த கால கூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தைகளிலும் கம்பனிகளின் இலாபம் உற்பத்தி ஏற்றுமதி தொடர்பான தகவள்களை திரிபுப்படுத்திக் கூறியுள்ளனர். தொழிற்சங்கங்கள் இவற்றை உணர்ந்து பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக வேண்டும். ஊடகங்களுக்கு தகவல்களை சரியாக வழங்குவது அனைவரினதும்  கடப்பாடாகும். சுமார் 80% தொழிலாளர்கள் அடிப்படை வேதனத்தினை மாத்திரமே பெறுகின்றனர். எல்லா கழிப்பனவுகளும் போக சராசரியாக 6000-7000 க்கும் குறைவான வேதனமே வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. (சுமார் 21-23 நாட்கள் வேலை செய்திருந்தால்) ஒரு பெண் தொழிலாளி 25 நாட்கள் வேலை செய்தால் அவரால் 515ரூபா என்றடிப்படையில் 12875 ரூபாய் வேதனம் கிடைக்கும். இதில் எல்லா கழிப்பனவுகளும் போக 80000 ரூபாய் எஞ்சும். ஆயினும் அவரது கணவரால் இவ் வேதனத்தைப் பெற முடியாது. அவரால் (515 என்றடிப்படையில் பார்த்தால்) சராசரியாக 18ஃ19 நாட்கள் வேலை செய்திருந்தால் 9785 ரூபாய் பெற முடியும். (தோட்டங்களில் ஆண்களுக்கு ஒரு மாதத்தில் சராசரியாக 18-20 நாட்களே வேலை வழங்கப்படுகின்றது). இதில் கழிப்பனவுகள் போக 7000 ரூபாவரை மிஞ்சும். ஆகவே இருவரினதும் வருமானம் 15000 ரூபாவேயாகும். இதனைக் கொண்டு 5 பேர் கொண்ட குடும்பத்தை நடத்துவது பெரிதும் கடினமாகும். தோட்டத் தொழிலாளர்களுக்கான மாற்று வருமான மூலங்கள் பெரிதும் குறைவாகும். மரக்கறி செய்கை வீட்டுத் தோட்டம் ஆடு மாடு கோழி வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட நிலம் நேரம் முதலீடு இவர்களிடம் இல்லை. மொத்த தொழிலாளர்களில் சுமார் 3% மானோரே இவ்வாறான தொழில்களில் ஈடுபடுவர். இதனை அனைவருக்கும் பொதுமைப்படுத்த முடியாது. 75% க்கு மேல் வேலைக்கு சமூகமளித்த குடும்பங்களின் நிலை இவ்வாறாயின் வெறுமனே அடிப்படை சம்பளம் மாத்திரம் வாங்கும் இருவர் தொழில் செய்யும் குடும்பங்களின் மாத வருமானம் எல்லா கழிப்பனவுகளும் போக சராசரியாக 10000  ரூபாவாக காணப்படும்.

8. குடிமனை செலவும் தொழிலாளர்களின் தற்போதைய வேதனமும்
2009ஃ2010ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட குடிமனை வருமானம் மற்றும் செலவு தொடர்பான ஆய்வு அறிக்கையானது இலங்கையில் ஒரு குடும்பம் (4-5 பேர்) சராசரியாக உணவு மற்றும் உணவல்லாத பண்டங்களுக்காக 31331 ரூபாவை செலவிடுவதாகக் குறிப்பிடுகின்றது. இதில் உணவு மற்றும் பானத்திற்காக 13267 ரூபாவும் உணவல்லாத விடயங்களுக்காக 18064 ரூபாவும் செலவிடுதாகக் குறிப்பிடுகின்றது. இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பார்க்கும்போது மிகக் குறைந்த வருமானத்தையே பெறுகின்றார்கள் என்ற முடிவுக்கு வரமுடிவதுடன் நாகரிகமான வாழ்க்கை ஒன்றினைக் கொண்டு நடாத்தக்கூடிய வருமானம் கூட இவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது வெளிப்படுகின்றது. இது குறித்த துறை சார் தரவுகள் பின்வருமாறு.

தோட்டத்துறை மக்கள் குறைந்த வேதனம் பெறுவதனால் அவர்களின் மாத செலவு குறைவாகக் காணப்படுவதுடன் மொத்த வருமானத்தில் 51% உணவுக்காக செலவிடுகின்றனர் என்பது இவ்வட்டவணை மூலம் வெளிப்படுகிறது. கல்வி சுகாதாரம் மற்றும் பௌதீக முன்னேற்றத்துக்கு ஏனைய துறைகளுடன் ஒப்பிடும்போது குறைந்த பணத்தினை செலவிடுகின்றனர். மறுபுறமாக தோட்ட மக்கள் அதிக பணத்தை உணவுக்காக செலவிடுவதற்கு அதிகரித்த வாழ்க்கைச் செலவு காரணமாகும். வாழ்க்கை செலவுக்கேற்ப வேதனம் அதிகரிக்கப்பட்டால் பெருந்தோட்ட மக்கள் மத்தியில் சமூக பொருளாதார நிலைகளில் விருத்தி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. தோட்டத்துறை மக்கள் சமூக பொருளாதார வளர்ச்சி நிலையில் பின்னடைந்து இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் இரண்டு பேர் தொழில் செய்யும் ஒரு குடும்பத்தில் மாதம் 23998 ரூபாய் வருமானத்தினைப் பெற முடியுமா என்பதாகும். இக் கட்டுரையில் ஏலவே குறிப்பிட்டதன்படி இருவர் தொழில் செய்யும் குடும்பத்திற்கு மாத வருமானம் சராசரியாக 14000 ரூபா வரையிலேயே கிடைக்கின்றது.

தொழிலாளர் வேதனம் தொடர்பாக ஆய்வு செய்யும்போது இவ்வருடம் ஜனவரி மாதம் 27 நாட்கள் வேலை செய்த ஒரு பெண் தொழிலாளியின் சம்பளச் சீட்டைக் காணக்கிடைத்தது. அதன் விபரங்கள் வருமாறு.

27 நாட்கள் வேலை செய்த தொழிலாளிக்கே வீட்டிற்கு எடுத்துச் செல்ல வெறும் 7103 ரூபாய் மாத்திரமே கிடைக்கின்றது எனின் சாதாரணமாக 18 நாட்கள் அல்லது அதற்குக் குறைவாக வேலை செய்வோரின் மிகுதி சம்பளம் என்னவாக இருக்கும் என்பது இதன் மூலம் வெளிப்படுகின்றது. எல்லா மாதங்களும் 27 நாட்கள் வேலை வழங்கப்படுவதில்லை என்பதுடன் அனைத்து நாட்களும் வேலை செய்யக்கூடிய உடல்நிலை குடும்பச் சூழல் எல்லா தொழிலாளர்களுக்கும் கிடைப்பதில்லை. மொத்த தொழிலாளர் படையில் 5%மானோரே இவ்வாறு காணப்படுவர். இதுவரை பார்த்த புள்ளிவிபரங்கள் தரவுகள் யாவும் இலங்கையின் தேயிலைக்கு இன்றும் பெரியளவில் கேள்வி இருப்பதனையும் தொடர்ந்து இலாபத்துடன் இத்துறை செயற்படுவதனையும் வெளிப்படுத்துகின்றது. ஒரு சில ஆணடுகளில் சிறியளவில் சரிவுகள் ஏற்பட்டிருந்தாலும் அவை பெருந்தோட்டத் துறையினை பெரியவில் பாதிக்கவில்லை.

அதேபோல் இறப்பருக்கும் இன்று பெரியளவில் கேள்வி இருப்பதனை அவதானிக்க முடியும். 2009 2010 2011 ஆகிய ஆண்டுகளில் முறையே 11327 19580 22811 மில்லியன் ரூபாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இன்று இறப்பருக்கு உயர் விலையும் அதிகரித்த கேள்வியும் உண்டு. இறப்பர் 1மப க்கான உற்பத்தி செலவு 120 ரூபாவாகக் காணப்படுவதுடன் அது 535 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 2009ல் ஒரு கிலோகிராம் இறப்பர் விலை 202 ரூபாவாகவும் 2010ல் 377 ரூபாவாகவும் 2011ல் 535 ரூபாவாகவும் காணப்பட்டுள்ளது. இது இறப்பர் விலையின் அதிகரிப்பினைக் காட்டுகின்றது. இன்றைய நிலையில் இறப்பர் தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை 650 ரூபா வரை அதிகரித்தாலும் எத்தகைய பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

9. 2013ம் ஆண்டு கூட்டு ஒப்பந்தமும் தொழிலாளர் வேதனமும் :சில சிபாரிசுகள் 
தற்போதைய நிலையில் இறப்பர் தேயிலைக்கான வருமானத்தைப் பார்க்கும் போது தொழிலாளர்களுக்கான ஒரு நாள் அடிப்படை வேதனத்தை 500 ரூபாவாகவும் ஏனைய கொடுப்பனவுகள் அனைத்தையும் சேர்த்து (105+30) மொத்தம் ஒரு நாள் சம்பளமாக 635 ரூபாவை வழங்க முடியும். காரணம் ஒரு தொழிலாளியிடமிருந்து கம்பனி எல்லை வருமானமாக 885 ரூபாவினை (4x380=1520-635=885) பெறுகின்றது. இப்போது வழங்கப்படுகின்ற சம்பள முறைப்படி பார்த்தால் 1005 ரூபா ஒரு தொழிலாளியிடமிருந்து கம்பனி இலாபமடைகின்றது (4x380=1520-515=1005). அடிப்படை சம்பளம் 500 ரூபாவாக மாற்றப்பட்டு ஏனைய கொடுப்பனவுகள் அனைத்தும் சேர்த்து 635 ரூபாவுடன் நுPகுஇ நுவுகு க்கான கொடுப்பனவுகளை சேர்த்தாலும் ஒரு தொழிலாளியிடமிருந்து கம்பனிக்கு சராசரியாக 650 ரூபா வருமானம் உண்டு. இன்று ஒரு கிலோகிராம் தேயிலைக்கான சராசரி உற்பத்தி  செலவு 420 ரூபாவாகும். இதனுள் தொழிலாளர்களின் மற்றும் முதலாளிகளின் (தோட்ட நிர்வாகம்) வேதனம் உரம் இரசாயனப் பொருட்கள் போக்குவரத்து பெற்றோல் டீசல் விறகு மின்சாரம் எழுதுகருவிகள் தொலைபேசி போன்றவற்றுக்கான அனைத்து செலவுகளும் அடங்கும். ஆகவே உற்பத்தி செலவுக்கு வெறுமனே தொழிலாளர்களின் வேதனத்தை காரணம் காட்டி அதனை தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கும் 635ரூபா சம்பளத்தினை வழங்க முடியும். இன்று இறப்பர் தோட்டத் தொழிலாளி ஒருவர் சராசரியாக 20-22 லீற்றர் பால் எடுக்கின்றார். அதிலிருந்து 6-7 கிலோகிராம் பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. இன்று 1 கிலோகிராம் பாலின் விலை சராசரியாக 365 ரூபாவாகும். ஆகவே ஒரு தொழிலாளி 2190-2555 ரூபா வரை இலாபத்தினைத் தேடி கொடுக்கின்றார். ஆனால் அவருக்கு நாள் சம்பளத்துடன் ஏனைய கொடுப்பனவுகளையும் சேர்த்தால் மொத்தம் 650 வரையில் கிடைக்கும். ஆயினும் கம்பனி எல்லை வருமானமாக ஒரு இறப்பர் தோட்டத் தொழிலாளியிடமிருந்து 1700 அல்லது 1800 ரூபாவைப் பெறுகின்றது. இறப்பர் மே மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையில் அதிகளவான உற்பத்தியைத் தருகின்றது. இக் காலங்களில் ஒரு தொழிலாளி 25-35 லீற்றர் பால் எடுக்கின்றார். அதிலிருந்து 10 கிலோகிராம் இறப்பர் உற்பத்தி செய்ய முடியும். இக் காலப்  பகுதியில் ஒரு தொழிலாளி சராசரியாக 3000 ரூபா வருமானத்தினை தோட்டத்திற்குப் பெற்றுக் கொடுக்கின்றார். இன்று இறப்பர் தோட்டங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்க ஒரு வகை மருந்து (Attaral) பயன்படுத்தப்படுகின்றது. இம் மருந்தைப் பயன்படுத்தினால் விளைச்சல் அதிகமாக உள்ள காலங்களில் ஒரு தொழிலாளியால் 60-70 லீற்றர் பால் எடுக்க முடியும். இதன் மூலம் 20-28 கிலோகிராம் இறப்பர் உற்பத்தி செய்ய முடியும். அதன் பெறுமதி 10220 ரூபாவை தாண்டுகின்றது. ஆயினும் தொழிலாளர்களுக்கு 515 ரூபாவும் மேலதிக 1 கிலோகிராம் பாலுக்கு 35 ரூபாவும் மாத்திரமே வழங்கப்படுகின்றது. விளைச்சல் காலங்களில் 9 கிலோகிராம் ஒரு நாளுக்கான நியமமாகும். அதன்படி பார்த்தால் மொத்தம் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1180 ரூபா மாத்திரமே கிடைக்கின்றது. 

ஆயினும் கம்பனிகளுக்கு ஒரு தொழிலாளியிடமிருந்து 9040 ரூபா இலாபம் கிடைக்கின்றது. இந்த வருமானம் மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு தொழிலாளியிடமிருந்து கம்பனிக்குக் கிடைக்கின்றது. இன்று இறப்பர் தோட்டங்களில் சாதாரண காலங்களில் 6 கிலோகிராமும் உற்பத்தி அதிகமான காலங்களில் 9 கிலோகிராம் இறப்பரும் ஒரு நாளுக்கான நியமமாகக் காணப்படுகின்றது. சாதாரண காலங்களில் மாத்திரம் ஒரு தொழிலாளியிடமிருந்து 1590 ரூபா எல்லை வருமானத்தைப் கம்பனி பெறுகின்றது. இதன் மூலம் தேயிலைத் துறையினைவிட இறப்பர் துறை அதிக இலாபத்தினைத் தருவதனை அறிய முடிகின்றது. ஆகவே 635ரூபா சம்பளம் என்ற கோரிக்கையினை இம்முறை முன்னெடுப்பது சிறந்தது. அதனை வழங்கும் இயலுமை இலாபம் கம்பனிகளுக்கு உண்டு. மறுபுறமாக கௌரவமான வாழ்க்கையினை தொழிலாளர்கள் கொண்டு நடாத்த 635ரூபா நாட்சம்பளம் ஒப்பீட்டளவில் சமாளிக்கக்கூடியதாகும். 500 அடிப்படைச் சம்பளமாக மாற்றப்பட்டால் ETF க்கு 60 ரூபாவினையும் நுவுகு க்கு 15ரூபாவினையும் கம்பனிகள் செலவிடவேண்டியிருக்கும். ஆகவே மொத்தம் 575ரூபாவினை ஒரு தொழிலாளிக்குக் கம்பனி செலவிடும். இதனுடன் ஏனைய கொடுப்பனவுகளையும் சேர்த்தால் (105+30) 711 ரூபா ஒரு தொழிலாளிக்கான செலவு. இது எல்லா சந்தர்ப்பங்களிலும் இடம்பெறுதில்லை. 90% மானோருக்கு 575 ரூபாவினையே செலவிட நேரிடும். கம்பனி ஒரு தொழிலாளிக்கு 711 ரூபாவினை செலவிட்டால் கம்பனிக்கு எல்லை வருமானமாக ஒரு தொழிலாளியிடமிருந்து 809ரூபா கிடைக்கின்றது. மறுபுறமாக 575 ரூபாவினை ஒரு தொழிலாளிக்கு செலவிட்டால் கம்பனிக்கு 929ரூபா ஒரு தொழிலாளியிடமிருந்து எல்லை வருமானாகக் கிடைக்கின்றது. அதேபோல் இறப்பர் தோட்ட தொழிலாளி ஒருவருக்கு கம்பனி 711 ரூபாவினை செலவழித்தாலும்கூட கம்பனிக்கு சாதாரன காலங்களில் 1479 எல்லை வருமானமும் பால் விளைச்சல் அதிகமாக உள்ள காலங்களில் 2574ரூபா எல்லை வருமானத்தினையும் ஒரு தொழிலாளியிடமிருந்து கம்;பனி பெறுகின்றது. இதனடிப்படையில் பார்க்கும் போது இறப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு 500 அடிப்படை சம்பளமாக வழங்குவதில் எந்தவித பாதிப்போ நஸ்டமோ ஏற்படபோவதில்லை.

10.முடிவுரை
இக்கட்டுரையில் பெருந்தோட்டத் துறை இலாபத்தில் செல்வதனை நிரூபிப்பதற்காகவே  அதிகமான புள்ளி விபரங்கள் காட்டப்பட்டுள்ளன. ஆகவே சிவில் அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் மலையக அரசியல் கட்சிகளும் இவற்றை நன்கு அறிந்து செயற்பட வேண்டும். ஊடகங்களுக்கு நேர்காணலுக்குச் செல்லும் தொழிற்சங்கத் தலைவர்கள் அரசியல்வாதிகள் பெருந்தோட்டத்துறையின் உற்பத்தி இலாபம் உற்பத்தி செலவு மற்றும் இன்றைய நிலை தொடர்பான போதிய தெளிவில்லாத நிலையிலேயே காணப்படுகின்றனர். சரியான புள்ளி விபரங்களுடன் தரவுகளுடன் வாதிடுவதன் மூலமே தொழிலாளர் வேதனத்தை அதிகரிக்க முடியும். அறிவு பூர்வமாகப் பேசுதல் சிந்தித்து செயற்படுதல் இம் முறை அவசியமாகும். தொழிலாளர்கள் சார்பாக பேசுபவர்கள் சரியான ஆதாரத்துடன் வாதிடத் தவறுவதால் முதலாளிமார் சம்மேளனம் தோட்டக் கம்பனிகளின் செயற்பாட்டையும் தற்போதைய வேதனக் கட்டமைப்பையும் சேம நலன்களையும் நியாயப்படுத்தி சம்பள அதிகரிப்பை நிறுத்திவிடுகின்றார்கள்;. அதற்கான ஆயத்தங்களை இம்முறையும் மேற்கொள்வர். தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சில சேம நலன்களையும் சம்பளத்தின் உள்ளடக்குகின்றார்கள். இவை தவறானக் கணிப்பாகும். மலையக சிவில் அமைப்புகள் மக்களை கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக இயன்றளவு தெளிவுபடுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு உற்பத்தி வருமானம் உற்பத்தி செலவு தொடர்பாக விளக்க வேண்டும். இதன் மூலம் சம்பள அதிகரிப்பிற்கு ஒரு கூட்டிணைந்த அணுகுமுறையினைக் கையாள வேண்டும். அன்றில் சில தொழிற்சங்கங்களின் தவறான கருத்துக்களையும் சலுகைகளையும் கண்டு தொழிலாளர்கள் ஏமாந்துவிடுவர். இம் முறை கூட்டு ஒப்பந்தத்திற்கு முன் கூட்டியே தயாராகவேண்டும். அதற்கு அவசியமான செயற்பாடுகளை  எல்லா மட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும். மலையக அரசியல் தலைமைகள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சு வார்த்தைகளில் அரசாங்கத்தினை தலையிடுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த நாட்டின் பிரஜைகளாகவும் தேசிய பொருளாதாரத்தின் முக்கியப் பங்காளிகளாகவும் இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கௌரவமான வேதனத்தைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கத்துக்குக் கடப்பாடு உண்டு. காரணம் அரசாங்கத்தினை அமைப்பதில் மாற்றுவதில் இம் மக்கள் பங்காளிகளாக உள்ளனர். பேச்சு வார்த்தையில் அரசாங்கப் பிரதிநிதிகளும் ஒரு தரப்பாக பங்கேற்க வேண்டும். அன்றில் தொழிலாளர்களுக்கான மாதசம்பள முறை ஒன்றினை அறிமுகப்படுத்த முடியாமல் போகும். மாதசம்பள முறையே இன்றைய தேவையாக உள்ளது. இவ்விலக்கினை அடைய சகல தரப்பினரையும் கொண்ட கூட்டிணைந்த செயற்பாடு அவசியமாகும். கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது பல தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி தொடர்ந்து விமர்சிப்பதில் பயனில்லை. அதிலிருந்து பாடங்களைக் கற்று இவ்வாண்டுக்கான கூட்டு ஒப்பந்தத்திற்குத் தயாராக வேண்டும்.

முதலாளிமார் சம்மேளனத்துடன் பேசுவோர் சரியான தரவுகளுடன் தர்க்க ரீதியாக விவாதிக்க வேண்டும். இதற்கு அறிவு சார் அரசியல் தலைமைத்துவம் அவசியமாகும். மலையக அரசியலில் காணப்படுகின்ற மிகப்பெரிய குறைபாடு இதுவேயாகும். பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குக் கொள்கை ரீதியான மாற்றங்களைக் கொண்டு வரவும் அது தொடர்பாக தேசிய மற்றும் சர்தேச ரீதியாகவும் நியாய பிரசாரம் செய்யக்கூடிய இயலுமைக் கொண்ட அறிவுசார் அரசியல் தலைமைத்துவத்தை நோக்கி இச்சமூகம் செல்ல வேண்டிய தேவை மிக வேகமாகவே அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எல்லா ஊடகங்களிலும் கூட்டு ஒப்பந்தம் குறித்து பேச வேண்டும் எழுத வேண்டும். இதன் மூலம் சம்பள அதிகரிப்பினை நியாயப்படுத்தியும் அதற்கு ஆதரவாகவும் ஒரு சூழ்நிலையைக் கட்டியெழுப்ப முடியும். இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் ஏனைய சமூகத்தவர்களின் ஆதரவினையும் வென்றெடுக்க முடியும். நீடித்தப் பிரயத்தனம் அர்ப்பணிப்பு கூட்டு செயற்பாடுகள் மற்றும் புலமைசார் பேச்சுவார்த்தை ஆகியவற்றின் மூலம் தொழிலாளர் வேதனத்தை அதிகரிக்க முடியும்.

எல்லாவற்றுக்கும் அப்பால் 2013ம் ஆண்டு கூட்டு ஒப்பந்தமானது சம்பள கூட்டு ஒப்பந்தம் என்பதை கடந்து அடிப்படை கூட்டு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக தோட்ட முகாமையாளர்களும் தோட்ட தலைவர்களும் பேரம் பேசும் நிலையை ஏற்படுத்ததாத வகையில் அமைய வேண்டும். 02 வருடத்திற்கு ஒரு முறை சம்பளம் பற்றிப் பேசுவது தொழிலாளர்களுக்குப் பாதகமானது. எனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் சம்பளம் வருட வருடம் தீர்மானிக்கப்பட வேண்டும். பெருந்தோட்டக் கம்பனிகள் பெருந்தோட்டத் துறையைப் சிறப்பாக பராமரிப்பதனை உறுதிப்படுத்தி பெருந்தோட்டங்கள் சிறுதோட்ட உடைமையாளர்களுக்கு குத்தகைக்கு நிலையை தடுப்பதற்கான ஏற்பாடுகளை கொண்டிருக்க வேண்டும். பெருந்தோட்டக் காணிகள் சிறுதோட்ட உடமையாளர்களுக்குத் குத்தகைக்கு விடப்படுகின்ற நிலையில் தொழிலாளர்களுக்குக் காணி பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்த மக்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் தொழிற்சங்கங்களுக்கு அழுத்தம் கோடுக்க வேண்டும். 

மிக முக்கியமாக இன்று பெருந்தோட்டங்களில் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் காணப்படும் 37000 ஹக்டயர் காணியை சிறு உடமையாளர்களுக்குப் பிரித்து வழங்குவது தொடர்பாக 2012ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இன்று பல தோட்டங்களில் காணிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. இதன் மூலம் பெருந்தோட்டங்களை படிப்படியாக சிறு உடமையாளர்களிடம் கையளிக்கும் திட்டம் அரசாங்கத்திடம் உண்டு. இதனை கம்பனிகள் நன்கு உணர்ந்து செயற்படவேண்டும். பயிரிப்படாத நிலங்களில் மீள் நடுகைகளை செய்ய வேண்டும். தோட்டங்கள் காடுகளாவதற்கு தொழிலாளர் பற்றாக்குறை காரணமென்பது கம்பனிகளின் வாதமாகும். தொழிலாளர் பற்றாக்குறைக்கான காரணத்தை கம்பனிகள் உணரவேண்டும். கவர்ச்சிகரமான சம்பளம் தொழில் கௌரவம் காணப்படுமாயின் இப்பிரச்சினை ஏற்படப்போவதில்லை. பெருந்தோட்டத்துறையினை பாதுகாக்கும் கடப்பாடு கம்பனிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உண்டு. தோட்டக்காணிகளை அபகரித்தல் இன்று தீவிரப்பிரச்சினையாக மாறியுள்ளது. இது தொடருமாயின் தோட்டங்களின் இருப்பிலும் தொழிலாளர்களின் வாழ்விலும் பெருந்தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மறுபுறமாக இன வன்முறைகள் வெடிப்பதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துவிடும். இது குறித்தும் இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் பேசப்படவேண்டும்.  அத்துடன் வேதனத்துக்கு அப்பால் தொழிலாளர்களின் சேம நலன் மற்றும் தொழில் நியமங்கள் குறித்தும் பேசுவது அவசியமாகும். இவை தொடர்ந்து கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் மறக்கப்படும் மறுக்கப்படும் விடயமாக காணப்படுகின்றது. 

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates