Headlines News :
முகப்பு » , » மலையகத்தின் மாணிக்கம்:அதிபர் இராஜமாணிக்கம் - பாராட்டு விழாவில் புகழாரம் - சுதாமதி

மலையகத்தின் மாணிக்கம்:அதிபர் இராஜமாணிக்கம் - பாராட்டு விழாவில் புகழாரம் - சுதாமதி


பதுளை, எல்ல, நிவ்பர்க் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ராஜமாணிக்கத்தின் இருபத்தைந்து வருடகால ஆசிரியப்பணியையும், இருபது வருடகால அதிபர் பணியையும் பாராட்டி பாடசாலையின் பழைய மாணவர்களும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரும் இணைந்து விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழா 1-12-2013 ஞாயிறு பாடசாலையின் 'நடேசய்யர்' அரங்கில் நடைபெற்றது.

1929 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது எண்பது ஆண்டுகால பழைமை வாய்ந்த இந்த பாடசாலையில் 20 வருடங்கள் தொடர்ச்சியாக அதிபராக பதவி வகித்துள்ள அதிபர் இராஜமாணிக்கம் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் மற்றும் இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் மாணவர்களை திறம்பட  வழிநடாத்தி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளமைக்கான சான்றாக இந்த விழா அமைந்திருந்தது.

பாடசாலை மண்டபத்திற்கு அதிபர் உள்ளிட்ட சிறப்பு அதிதிகள் மங்கள மேளம் இசைத்து வரவேற்கப்பட்டனர். பாதையின் இரு மருங்கிலும் வரிசையாக திரண்டிருந்த பழைய மாணவர்களும் பெற்றோரும் தமது  அதிபரை வாழ்த்தி வணங்கி வரவேற்றனர். பழைய மாணவர்கள் மாத்திரமல்லாது சில பெற்றோரும்  ஆசீர்வாதம் பெற்றமை உணர்வுபூர்வ நிகழ்வாய் அமைந்தது.

பாடசாலை அபிவிருத்தி சங்க தலைவர் நாதனின் வரவேற்புரையுடன் விழா ஆரம்பமானது. பெற்றோரின் சார்பில் உரையாற்றிய பிரான்ஸிஸ் 'எங்களது பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக உழைத்துள்ள அதிபர் இன்னும் பல இலக்குகளை எய்த பிரார்த்திக்கிறோம்' என கூறினார். சக அதிபர்கள் சார்பாக கோணமுட்டாவ தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் யோகேஸ்வரன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். ஒரு அதிபராக பல்துறை விற்பன்னராக திகழும் ராஜமாணிக்கம் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக இந்த பாடசாலைக்கு போதிய வளங்களைப் பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் உறுதியான நோக்கத்துடன் தனது இலக்குகளை அடையும் வல்லமையைப் பெற்றுள்ளார். வலய மட்ட அதிபர்களுக்கான கூட்டங்களின் போது எல்லா தமிழ்மொழி மூல பாடசாலைகளின் உரிமைக்காகவும் துணிந்து குரல்கொடுப்பதை சக அதிபர் என்ற வகையில் நான் பெருமையுடன் நினைவு கூறுகின்றேன் என புகழுரைத்தார்.

வலயக்கல்வி பணிப்பாளர்கள் சார்பாக உதவி கல்விப் பணிப்பாளர் எஸ்.மதியழகன் உரையாற்றுகையில் தான் யாழ் பிரதேசத்தில் இருந்து மலையகப்பகுதிக்கு வந்து இந்த பணியில் இருக்கின்ற நிலையில் தன் வாழ்நாளில் யாழ் மண்ணில் கூட கண்டிரா காட்சியை இன்று இந்த மலையக மண்ணில் காண்பதை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த அதிபரின் மாணவர்கள் இத்தனை சிரத்தையுடன் தமது அதிபருக்கு விழா எடுக்கிறார்கள் என்றால் அவரது பணி அத்தகைய பெறுமதி வாய்ந்ததாகவுள்ளது. இந்த பாடசாலையின் தரம் குறித்து வினா எழுப்புவோர் பாடசாலை வளாகத்தை ஒரு மணித்தியாலயம் சுற்றிபார்த்தால் அதற்குரிய விடையைப் பெறுவர். அதே போல சிறியதாக உள்ள அதிபரின் அலுவலகத்திள் உள்ள விருதுகளும் அறிவித்தல் பலகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தூரநோக்கு, செயற்திட்ட முன்மொழிவுகளும் சான்று பகரும். மைதானமே இல்லாத இந்த பாடசாலையை தேசிய ரீதியில் கரப்பந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுக்களில் வெற்றிபெறச் செய்யும் ஆளுமை அதிபர் ராஜமாணிக்கம் அவர்களுடையது என தெரிவித்தார். 

கல்விப்பணிப்பாளர்களின் சார்பில் உரையாற்றிய கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.திசாநாயக்க அதிபர் ராஜமாணிக்கம் இந்தப் பாடசாலையின் ஊடாக எமது வலயத்திற்கும், மாவட்டத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் தேசிய ரீதியில் புகழை ஈட்டித்தந்தவர். அதேபோன்று தனித்துவமிக்க தலைமைத்துவ பண்புகளைக் கொண்டிருக்கும் இவர் இரண்டாம் நிலைத்தலைமைகளை தமது ஆசிரிய குழாமில் உருவாக்கி வைத்திருப்பது சிறப்புக்குரியது என வாழ்த்தினார்.

அதிபருக்கு கல்வி வழங்கிய ஆசிரியர்களின் சார்பில் தெமோதரை தமிழ்செல்வன் மாசிலாமணி மற்றும் பி.எம்.எம்.ஏ.காதர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தனது 90வது வயதில் தனது மாணவனின் பாராட்டு விழாவைக் காண கைத்துணையுடன் வந்திருந்த முன்னாள் அதிபர் பி.எம்.எம்.ஏ.காதர் சௌதம் தமிழ் வித்தியாலயத்தை தரம் ஐந்தில் இருந்து தரம் பத்துவரை உயர்த்திச் செல்லுவற்கு பங்கெடுத்த ஐந்தாம் வகுப்பில் சித்திபெற்ற நான்கு மாணவர்களில் ராஜமாணிக்கம் முதன்மையானவர். இவருடன் பிரபாகரன், லோகேஷ்வரி, பத்மாவதி ஆகிய மாணவர்களை மட்டுமே கொண்டு தரம் பத்துவரை அந்த பாடசாலையை தான் தரம் உயர்த்தி எடுத்ததாகவும் அவர்களுள் இடைவிலகிச் சென்ற ஒருவரைத் தவிர மற்றைய மூவரும் தரம் 10 ல் சித்திபெற்று இன்று சமூகத்தில் முன்னணியில் நிற்பது மகிழ்ச்சியளிக்கின்றது எனவும் தெரிவித்தார். அத்துடன் தனது தரமுயர்த்தல் முயற்சிக்கு அப்போது கல்விக்காரியாலத்தில் அனுமதி கிடைக்காத போதும் இந்த மாணவர்களின் மீது இருந்த நம்பிக்கையில் அனுமதியை எதிர்பார்த்து தான் அடுத்தடுத்த வகுப்புக்களை தரமுயர்த்தி சென்றதான முறைமையை வருகை தந்திருந்த சகோதர சிங்கள கல்வி அதிகாரிகளுக்கு விளங்க வேண்டும் என்பதற்காக சிங்களத்திலும் உரையாற்றியமை முன்னாள் அதிபர் காதரின் ஆளுமையையும் தூரநோக்கத்தையும் காட்டி நின்றது.

நண்பர்களின் சார்பாக ஆசிரியர் கே.எம்.சீ. பிரபாகரன் தனது இளமைக்கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். தன்னுடன் கல்வி கற்ற ராஜமாணிக்கம் ஏழ்மை நிலையிலும் எவ்வாறு கல்வியைப் பெற்றுக்கொள்வதில் உறுதியாகத் திகழ்ந்தார் என்பதை அவரது உரை பதிவு செய்தது. 

சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட எழுத்தாளரும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான மல்லியப்பு சந்தி திலகர் அதிபர் இராஜமாணிக்கத்தின் பல்பரிமாண ஆளுமையை ஆய்வு செய்து உரையாற்றினார். 'இந்த காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்' எனும் ஹைக்கு கவிதையின் ஆழத்தைக் கூறி எல்லா மூங்கில்களும் புல்லாங்குழல் ஆகிவிடுவதில்லை என்றும் அதற்குரிய பக்குவத்தை அந்த மூங்கில் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்குவம் கொண்ட ஒரு இனிய புல்லாங்குழலுக்கு ஒப்பானவர் அதிபர் ராஜமாணிக்கம். அவரது ஆளுமையில் 'ராசா' எனும் கரப்பந்தாட்ட விளையாட்டு வீரனின் ஆளுமை மேலோங்கியிருப்பதையும் அவரது இலக்கிய தாகம் இந்த பாடசாலையினுள்ளே அமைக்கபட்டிருக்கும் குறிஞ்சிப்பேரவையெனும் இலக்கிய இயக்கத்தின் ஊடாகவும் அவரது சமூகத் தாகம் அவரது பாடசாலை மண்டபங்களுக்கு இட்டிருக்கும் நடேசய்யர், சி.வி.வேலுப்பிள்ளை, எப்ரஹாம் சிங்கோ, திருச்செந்தூரன், இரா.சிவலிங்கம், தமிழோவியன், சிவனு லட்சுமணன் எனும் பெயர்களினூடே வெளிப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த பின்புலத்தில் அதிபர் இராஜமாணிக்கம் அரசியலின் பால் ஈர்க்கப்பட்டது ஆச்சரியப்படுவதிற்கில்லை என்றும் சில நேரங்களில் இவரது அரசியல் முன்னெடுப்புகளில் பின்னடைவை அடைந்திருப்பாரெனில் அது சமூகத்தின் பின்னடைவே தவிர தனிப்பட்ட அவரது ஆளுமையின் பின்னடைவாகக்  கருத முடியாது. மலையகம் தொழிற்சங்க அரசியல் முறைமையிலிருந்து மாற்றம் பெற்று தனித்துவ அரசியலுக்கு பயணிப்பதற்கு தொழிலாளர்க்கு அடுத்த நிலையில் படையாகத் திரண்டிருக்கும் ஆசிரிய சமூகத்திடமே அந்த அரசியல் தங்கியிருக்கின்றது. இந்த முன்னெடுப்புகளை ஏற்படுத்திய முன்னாள் ஹைலன்ஸ் கல்லூரி அதிபர் அமரர் இரா.சிவலிங்கம், தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய அதிபராக இருந்த அமரர் வி.டி.தர்மலிங்கம் போன்றோர் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளனர் எனவும் தெரிவித்தார். அதிபர் இராஜமாணிக்கத்தின் தலைமைத்துவ வெற்றியை எழுத்தாளர் திலகர் திறன் மற்றும் அர்ப்பணிப்பை கொண்டு இலக்கினை அடையும் முகாமைத்துவ நுட்பத்தை கணித மொழியில் விளக்கியமை சபையோரின் கவனத்தை ஈர்த்தது.

பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் லெனின் மதிவானம் பாடசாலை அதிபராக இருக்கும் அதிபர் இராஜமாணிக்கத்தின் சமூக வேட்கை இந்த பாடசாலையின் பெறுபெறுகளை இன்னுமொரு தளத்திற்கு இட்டுச் செல்கின்றது. தனியே பாடசாலை செயற்பாடுகளுக்கு மத்தியில் தான் பிரதிநிதித்துவம் செய்யும் சமூகத்தின்பால் கொண்டுள்ள பற்று அவரது ஆன்;மாவுடன் பிண்ணிப் பிணைந்துள்ளமை அவரது பணிகளில் எடுத்துக்காட்டப்படுவதாக உள்ளது. மலையக மண்ணில் உழைப்பாளர;களின் உரிமைக்காக உயிர்நீத்த சிங்களத் தோழன் ஆபிரஹாம் சிங்கோவின் பெயரை பாடசாலை மண்டபத்துக்குச் சூட்டும் துணிவு என்பது மிகுந்த போற்றுதற்குரியது. உழைப்பாளர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இராஜமாணிக்கத்தின் ஆளுமை அதற்கேயுரிய போர்க்குணத்துடன் சமூக அடக்கு முறைகளுக்கு எதிரான மீதான நியாயமான கோபத்துடன் வெளிப்படும்போது அவரது செயற்பாடுகளில் அது பிரபலிப்பதை அவதானிக்கமுடிகின்றது. விறகு வெட்டியின் மகனான ஆபிரஹாம் லிங்கன் தனது கடுமையான உழைப்பினாலும் கல்வியினாலும் சட்டத்தரணியாகி அமெரிக்காவின் ஜனாதிபதியாகவும் உருவெடுக்கிறார். பின்னர் தன் வெள்ளையின  சமூகமல்லாத கறுப்பின மக்களின் விடுதலைக்காக உழைக்க நேர்கையில் தன் இனத்தவராலோயே அவன் அழிக்கப்படுகிறான். அதேபோல ஆபிரஹாம் சிங்கோ எனம் சிங்களத் தோழன் இனம் என்ற எல்லையைக் கடந்து உழைக்கும் வர்க்கமான மலையக தொழிலாளர்களுக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளான். அந்த உணர்வை அப்படியே பதிவு செய்வதாக இந்த பெயரிடல் இடம் பெற்றிருப்பது ஒரு துணிச்சல் மிக்க செயற்பாடாகும். இவரது பணிகளுக்காக அதிபர் இரண்டு தடவை ஜனாதிபதி விருதினைப் பெற்றுக்கொண்டபொதும் அதனை விளம்பரம் செய்யாது தொடரச்சியாக நான்கு வருடங்கள் பாடசாலைக்கு கிடைத்த தேசிய உற்பத்தித் திறன் விருதினை முன்னிறுத்திய பண்பாளராகத் ராஜமாணிக்கம் திகழ்கிறார் என பாராட்டினார்.

ஏற்புரையாற்றிய அதிபர் இராஜமாணிக்கம் நான் என் வாழ்வில் பாரிய சாதனைகள் எதனையும் செய்துவிடவில்லை. என் மீது சுமத்தப்பட்ட பணிகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன். ஆனால் மலையக மக்கள் அடிமைநிலையிலிருந்து விடுபட வேண்டும் என்பதே எனது எண்ணத்தில் எப்போதும் ஒடிக்கொண்டிருக்கிறது. அதனை நோக்கி நமது சமூகத்தின் ஒவ்வொரு பிரஜையும் திடசங்கட்பம் கொள்ள வேண்டும். இதுவே எனது அவா என தெரிவித்தார். தனக்கு பாராட்டு விழா எற்பாடு செய்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்தார். 

கவிஞர் பசறையூர் வேலாயுதத்தின் வாழ்த்துக்கவிதையும்  மாணவர்களின் நடன நிகழ்ச்சிகளும் விழாவுக்கு சிறப்பு சேர்த்தன.  பெற்றோரின் சார்பில் மேடையில் தோன்றிய கலைஞர் சோமையாவின்   அரங்க ஆற்றுகை அனைவரது பாராட்டையும் பெற்றது. இலங்கையில் திராவிட முன்னேற்றக் கழகம் எந்தளவு தூரம் வேருன்றியிருந்திருக்கின்றது என்பதற்கு இந்த கலைஞர் உதாரணமாகத் திகழ்கிறார். 

அதிபர் ராஜமாணிக்கத்திற்கு பழைய மாணவர்கள், பாடசாலை அபவிருத்தி சங்கத்தினர், தோழமைக் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினர் விளையாட்டு கழகத்தினர், பெற்றோர் என பல தரப்பினரும் வரிசையாக வந்து வாழ்த்துத் தெரிவித்து பொன்னாடையிட்டு நினைவு சிற்பங்களை வழங்கியமை உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்தது. அதிபர் ராஜமாணிக்கத்தின் தாயார் திருமதி சுப்பராயனுக்கு அதிபர் யோகேஸ்வரன் அவர்களும், பிரதம அதிதி லெனின் மதிவானம் அவர்களும் பொன்னாடை இட்டு கௌரவித்தனர். பழைய மாணவி துஷ்யந்தியின் நினைவுரையுடனும் பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் எஸ். விஜயகாந்தின் நன்றியுரையுடனும் கிளிட்டஸ் குமார் நிகழ்ச்சித்தொகுப்பில் குறிப்பிட்டது போன்ற அதிபர் ராஜமாணிக்கம் மலையக மாணிக்கம் என்பதை பறைசாற்றி புதிய நம்பிக்கைகளையும் விதைத்து இனிதே நிறைவேறியது பாராட்டு விழா. விழாவுடன் விருந்தினர்களுக்கு பகல் விருந்தும் அளித்து மகிழ்வித்த ஏற்பாட்டாளர்கள் பாராட்டுக்குரியவர்கள் .

-  (01-12-2013)

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates