Headlines News :
முகப்பு » » மலையக பெண்களும் அரசியலும்

மலையக பெண்களும் அரசியலும்



மார்ச் 8ம் திகதியானது பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட தினமாக உலகம் முழுவதும் பெண்கள் தமது விடுதலைக்காகவும் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும் போராடிய தினமாகும் இப்போராட்டத்திற்கான வெற்றிகள் மிகக்குறைவாகவே கிடைத்துள்ளது.

ஏனெனில் வளர்ந்த நாடுகளும் சரி வளர்முக நாடுகளும் சரி பெண்கள் தீர்மானம் எடுக்கும் இடத்திற்கு வருவதை அச்சமூகங்கள் தடுக்கின்றனர் அல்லது தடையாக இருக்கின்றனர் என்றே கூறவேண்டும். இது இவ்வாறாக இருக்க எமது நாட்டுப் பெண்களை சற்று நோக்குவோம்.

இன்றும் பெண் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் அரசியலில் 30% இட ஓதுக்கீடு தேவை என்று அல்லது சட்டமாக்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்து வருகின்றனர். ஏனெனில் எமது அண்மைய நாடுகளான இந்தியா, நேபாலம் வங்காளதேசம், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சட்டமாக்கப்பட்டுள்ளது. இவையெல்லா நாடுகளும் இலங்கையோடு ஓப்பிடுகையில் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய நாடுகளாக காணப்பகின்றன. ஆனால் அங்கு பெண்களுக்கான சமத்துவம், அங்கீகாரம் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நாட்டு பெண்கள் தமக்கு அரசியலில் 50மூ ஒதுக்கீடு தேவையென குரல் கொடுத்து வருகின்றனர். 

இலங்கை கல்வியறிவில் 93% காணப்பட்டாலும் பெண்களுக்கான அரசில் பிரதிநிதித்துவத்துக்கான ஓதுக்கிடு இன்று வரையுமே எட்டாக்கணியாக காணப்படுகின்றது. ஆனால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு அல்லது மொத்த வரவு செலவு திட்டத்திற்கு வருமானத்தை இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் பெண்களும், தோட்டத் தொழிலாள பெண்களும், புலம் பெயர் தொழிலாள பெண்களுமே 50%ற்கும் அதிகமான உழைப்பினை அல்லது வருமானத்தினை வழங்குகின்றனர். ஆனால் இலங்கை வரவு செலவு திட்டத்தில் இப்பெண்களின் அபிவிருத்திக்கான ஒதுக்கீடு என்ன? இவ்வாறு உழைக்கும் பெண்களின் வருமானத்திலேயே அரசியலில் ஈடுப்பட்டுள்ள அனைத்து ஆண் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் சம்பளம் பெறுகின்றனர். பெண்கள் உழைப்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு தன்மானம் இருக்கின்றதா? இல்லையா? என எண்ணத்தோன்றுகின்றது.   

இவ்வாறான பிரச்சினைகள் இருப்பினும் சில பெண்கள் அரசியலில் ஈடுப்படுகின்றனர். அவர்களுக்கு ஆணாதிக்க தலைமைகளினால் ஏற்படும் தடைகளும் பிரச்சினைகளும் எண்ணிலடக்காதவை. அரசியல் கட்சிகளில் பெண்கள் எவ்வளவு உழைத்தாலும் அக்கட்சிகளின் இரண்டாம் நிலைப் பதவிகளுக்கு கூட எந்த அரசியல் கட்சியிலும் வழங்கப்படவில்லை. இதற்கு எமது சமூகத்தில் பெண்கள் சம்பந்தமான பால் நிலை சார் மனபாங்கும், பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுப்படுவதற்கான, தடைகள் இலங்கை அரசியல் ஆணாதிக்க அதிகார தன்மைகொண்ட கட்சி அமைப்புக்கள் போன்ற பிரதான விடயங்கள் பெண்கள் அரசியலில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கோ தலைமைத்துவ பொறுப்பை ஏற்பதற்கோ தடைக்கற்களாக காலம் காலமாக தொடர்கின்றன. 

இனி நமது பார்வையை மலையக பக்கம் திருப்பினால் தேசிய அரசியலிலும் சரி பிரதேச அரசியலிலும் சரி 'இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?' என்ற போக்கோடு மக்கள் காணப்படுகின்றனர். மலையகத்தில் அரசியல் தொழிற்சங்களில் பெண் தலைமைத்துவமோ அல்லது அரசியல் கட்சிகளில் பெண் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவமோ மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு அல்லது தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ளவோ அவர்கள் வாழும் சூழல், கலாசாரம், ஆணாதிக்கம், வாழ்வாதாரம் போன்ற அனைத்துமே பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு மட்டுமன்றி அதைப்பற்றி சிந்திப்பதற்கு சுதந்திரமோ உரிமையோ அற்று காணப்படுகின்றனர்.

ஒரு நாட்டில் மக்களுக்கான அடிப்படை உரிமை அரசியல் உரிமையாகும். அதில் பிரதானமானது வாக்குரிமையாகும். ஆனால் மலையக மக்களைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவ்வுரிமையை அனுபவிக்ககூடிய சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். தோட்டத் தலைவர்கள் யாருக்கு வாக்களிக் சொல்கின்றார்களோ அவர்களுக்கே பெண்கள் வாக்களிக்க வேண்டும். பெண்கள் தாம் விரும்பும் ஒருவரை தெரிவுசெய்வதற்கு அல்லது வாக்களிப்பதற்கு ஆணாதிக்க அரசியல் கலாசார கட்டமைப்பு தடைவிதிக்கின்றது. மலையக பெண்கள், அரசியல் என்பது ஆண்களுக்குரியது என்ற மரபு வழி மனபாங்குடனேயே இன்றும் காணப்படுகின்றனர். மற்றும் அடிப்படை ஆவணங்கள் பிரச்சினையால் வாக்குபதிவு, தேர்தல் நடக்கும் போது தம்மை உறுதிப்படுத்துவதற்கான அடையாள அட்டை அல்லது வேறு ஆவணங்கள் இன்மையும் அவர்கள் வாக்களிப்பதற்கும் அல்லது அவர்களது வாக்குரிமை மீறப்படுவதற்கும் சந்தர்ப்பங்களாக அமைகின்றது. இவ்விடயத்தில் மலையக அரசியல்வாதிளோ, தொழிற்சங்கவாதிகளோ அக்கறைக் காட்டவதாக தென்ப்படவில்லை.

மலையக தோட்டத் தொழிலாளர்களிலும் 50%ற்கு மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கின்றனர். வாக்காளர் தொகையிலும் 50%ற்கு மேற்பட்டவர்கள் பெண்களே. மேலதிகமான பெண்களின் வாக்குகளைப் பெற்று அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகள் தமக்கு வாக்களித்த பெண்களின் அபிவிருத்திபற்றியோ உரிமைகள் பற்றியோ எவ்வித கரிசனையும் காட்டுவதில்லை. 

பெற்றோர்களேஇ மலையகப் பெண்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு தடையாக விளங்குகின்றனர். பெற்றோர்கள் தமது குழந்தைகளை வளர்க்கும் போது ஆண் குழந்தைகளுக்கு வழங்கும் சுதந்திரங்களை பெண்களுக்கு வழங்குவதில்லை. மரபுகள், மூடநம்பிக்கைகள் என்பவற்றை காரணம் காட்டி ஒரு பெட்டிப்பாம்மபாகவே வளர்த்தெடுக்கின்றனர். காலங்காலமாக திருமணமான பெண்கள் தனது கணவனுக்கு அடிபணிபவர்களாக இருப்பதற்கு பழக்கியுள்ளனர்.  இத்தகைய நிலையில் இருந்து விடுப்பட்டு மலையக பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தை பெற வேண்டும் எனில் ஒவ்வொரு பெற்றோர்களும் சிறு வயதுமுதற்கொண்டு தமது பெண்குழந்தைகளை நல்ல தலைமத்துவப்பண்புடையவர்களாக, கல்வியறிவுடையவர்களாக, துணிவுடையவர்களாக மற்றும் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் திறனுடையவர்களாக வளர்க்க வேண்டும்.

மலையக் பெண்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்தது போதும். மூடநம்பிக்கைகளை தாழ்வு மனபான்மையை தகர்த்தெரிந்து மலையகத்தில் ஆற்றல் உள்ள பெண்கள் இருக்கின்றனர் என்பதை நாம் ஏனைய சமூகத்திற்கும் மலையக அரசியல்வாதிகளுக்கம் உணர்த்த வேண்டும். நமது உழைப்பில் தம்மை வளர்த்துக் கொண்டிருக்கும் ஆணாதிக்க அரசியல் போக்கை முறியடிக்க வேண்டும். பெண்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலை ஏற்படுத்துவதற்கும் மலையக தோட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறவும் அவர்களின் சுகாதாரம் தேசிய நீரோட்டத்துடன் இணைக்கப்படுவதற்கு சக்தியும், ஆற்றலும், அறிவும், ஆர்வமும் நல்ல தலைமைத்துவ பண்புகளும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். 

ஏனெனில் மலையகம் இன்று மாலுமி இல்லாத கப்பல் போன்று இருக்கின்றது. அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எண்ணிலடங்காத அளவிற்கு உருவாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றுக்கிடையில் பிரிவுகளும் பிரச்சினைகளும் யார் பெரியவர் என்ற ஆணவமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. தமக்கு வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டு தாம் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் பணத்திற்கும் விலை போய்க்கொண்டிருக்கின்றனர். எனவே திராணிபிரக்ஞை உள்ள தலைமைத்துவத்தை உருவாக்கவதற்கும் மலையக பெண்களின் வாக்கு பெண்களுக்கே என்ற தூரநோக்கோடு செயற்பட ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்க வேண்டும்.

பெண்கள் அரசியலில் தலைமைத்துவத்தினை பெறுவதென்பது இலகுவான ஒரு விடயயம் அல்ல. அதனைப் படிபடியாயகவே ஏற்படுத்த வேண்டும். முதலில் குடும்பத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். தான் சார்ந்த சமூகத்தில் தலைமைத்துவ பண்புடையயவர்களாக மாற வேண்டும். பின்னர் நாட்டின் அரசியலில் தலைமைத்துவத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மலையகப் பெண்கள் பல கடமைப்பொறுப்புக்களளை செய்ய வேண்டியுள்ளது. அவையாவன,

பெண்கள் பல்வேறு துறைசார் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டும்.
சுயமாகவே தலைமைத்துவப்பண்பை, ஆளுமையை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு ஒரு விடயத்தை சிறப்பாக செய்ய முடியும் என்பதை பல்வேறு துறைகளிலும் நிரூபித்துக் காட்ட வேண்டும். 

தீர்மானம் எடுக்கும் சக்தியை வளர்க்க வேண்டும். 
எதிர்காலத்தில் மலையகப் பெண்கள் யாருடைய தலையீட்டினையும் கவனத்திற் கொள்ளாது சுயயமாக சிந்தித்து தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும்.

வாக்களிப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல் பெண்கள் வேட்பாளர்களாகவும் போட்டியிடுவதற்கு முன்வரவேண்டும்.
தேர்தல் களத்தில் தமது கொள்கை பிரசாரங்களை அச்சமின்றி வெளியிடுவதற்கு முன்வர வேண்டும்.
  
இவ்வாறு மலையகப் பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு பெற்றோர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும் வழிசமைத்துக் கொடுக்க வெண்டும். அதற்கு ஆண்கள் சமூதாயம் சரியான அங்கிகாரத்தினை வழங்க வேண்டும்.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates