Headlines News :
முகப்பு » , » கே.ராஜலிங்கம்: ‘மக்கள் சேவையில் மூழ்கி தன் நலன்களையே மறந்த தியாகச் சுடர்’ - பி.பி.தேவராஜ்

கே.ராஜலிங்கம்: ‘மக்கள் சேவையில் மூழ்கி தன் நலன்களையே மறந்த தியாகச் சுடர்’ - பி.பி.தேவராஜ்

கே.ராஜலிங்கம்
தூய வெண்ணிற கதராடை, கறுப்பு பிரேமுடனான கண்ணாடி. அடக்கமே உருவெடுத்தாற்போன்ற எளிமை மிக்க தோற்றம். அமைதி குடி கொண்ட இன்முகம். ராஜலிங்கத்தை பார்த்தவுடனேயே அவரிடத்தில் ஒரு மரியாதை தோன்றும்.

ராஜலிங்கம் மலையக மண்ணில் பிறந்து வாழ்ந்தவர். மண்ணின் மைந்தன். சிறு வயதிலேயே தன்னை சுற்றி நடக்கும் அவலங்களையும், அக்கிரமங்களையும் கண்டு மனம் வெதும்பிப் போவார். பள்ளிக்கூடத்தில் படித்த சமயத்தில் பாரதியார் பாடல்களிலே பெரிதும் ஈடுபாடு கொண்டு, அநியாயங்களை கண்டால் அதை எதிர்க்க வேண்டும் என அவருடை உள்ளொலி கூறியது. என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம். என்று மடியும் எங்கள் அடிமையில் மோகம் என தன் சுற்றுப்புற அனுபவத்தில் இருந்தே அவருக்குள்ளே ஓர் உத்வேகம் கொண்ட உணர்ச்சி வெளிப்பட்டது. கே. ராஜலிங்கம் மலையக மக்களுக்கு ஏற்பட்டிருந்த அவலத்திற்கு எப்படி ஒரு தீர்வு காண்பது என்பதிலேயே தன்னுடைய கவனத்தை செலுத்தினார். தன்னுடைய சொந்த நலன்களையும், முன்னேற்றத்தையும் பாராது சமூக சிந்தனையுடையவராக அவர் காணப்பட்டார்.

பி.பி.தேவராஜ்
ராஜலிங்கத்தின் அமைதியான தோற்றத்திற்கு பின்னால் அவருள்ளே ஒரு பூகம்பமே திரண்டு கொண்டிருந்தது. ராஜலிங்கத்தை போன்ற சம வயது கொண்ட இளைஞர்கள் இத்தகைய அநீதிகளை பற்றி விவாதித்து வெளிப்படையான கருத்துக்களை கூறுவார்கள். ஆனால் ராஜலிங்கமோ மனதிற்குள்ளே நிகழ்ந்து கொண்டிருந்த பிரளயத்தை வெளியே காட்டாமல், இதற்கு எப்படி ஒரு முடிவை காண்பது என்று குமுறிக் கொண்டிருந்தார்.
துரைமார் நடத்திய அந்த ராஜ்யத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் அதிகாரம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. மனிதரை துச்சமாக மதித்து அன்றாடம் அராஜகம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அந்த காலத்தில் மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கலை எதிர்த்து நடத்திய சத்தியாக்கிரக இயக்கம் மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது. தென்னாபிரிக்காவில்தான் மகாத்மா காந்தி சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு வழிவகுத்தார். இந்தியா திரும்பியவுடன் கத்தியின்றி ரத்தமின்றி சாத்விக அடிப்படையில் வன்முறையற்ற முறையில் மகாத்மா காந்தி ஒரு பேரியக்கத்தையே தோற்றுவித்தார். அக்கால இளைஞர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே மகாத்மா காந்தியின் செயல்பாடுகளினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள்.  

மகாத்மா காந்தியின் இந்த புது முறையிலான போராட்டம் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளில் மற்றும் உலகளாவிய ரீதியில் மக்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. எப்படி தோட்டப்புறத்திலே நிகழும் அடாவடித்தனத்திற்கு ஓர் தீர்வு காண்பது என்று ஏங்கிக் கொண்டிருந்த ராஜலிங்கத்திற்கு காந்தி வழியே தன் வழி என்பதில் உறுதி பூண்டார்.

1927ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இலங்கை விஜயத்தை மேற்கொண்டபோது ராஜலிங்கத்தின் வாழ்வில் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டது.உன்னை நீ அறிந்து கொள்வதற்கு மக்கள் சேவையில் மூழ்கி விடுவது தான் வழி என்ற மகாத்மா காந்தியின் கூற்றை ராஜலிங்கம் ஒரு தாரக மந்திரமாக ஏற்று தன் வாழ்வை இதற்கெனவே அர்ப்பணம் செய்து கொண்டார். கதராடை தவிர வேறு ஆடை அணிவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டார். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். மகாத்மா காந்தியின் அகிம்சை வழியை ஏற்று எத்துனை துன்பங்கள் வந்தாலும் இதிலிருந்து மாறுவதில்லை என்று சங்கற்பம் செய்து கொண்டார்.

ராஜலிங்கம் உணர்ச்சிவசப்பட்டு எதையும் அவசரகோலத்தில் செய்யக் கூடிய பண்பை கொண்டிருக்கவில்லை. அவரிடத்திலே ஒரு நிதானம் இருந்தது. ஒரு தடவை முடிவு செய்தவுடன் மிகவும் அமைதியாக எத்தகைய சோதனைகளையும் ஏற்று செயல்படும் ஆற்றல் அவரிடத்தில் காணப்பட்டது. தியாகங்கள் செய்வதற்கு அவர் தயங்கவில்லை. எத்துனை கோடி துன்பங்கள் வந்தாலும் இனியொரு விதி செய்து அதை பலப்படுத்துவதே அவருடைய ஒரே குறிக்கோளாக இருந்தது. ஒரு தொலைநோக்கு இலக்கை அடைவதற்காக கனவுகளில் அவர் சஞ்சரித்தார். மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டிய ராஜலிங்கத்தின் இந்த பன்பு ஒரு தீர்க்கதரிசியை போல் அவரை அடையாளப்படுத்தி காட்டியது.

ராஜலிங்கம் மலையக மக்களோடு மட்டுமல்லாமல் இன, மத வேறுபாடுகள் பாராது சகல மக்களோடும் மிகவும் சரளமாக பழகினார். அனைவரையும் சமரச நோக்கோடு பழகுவது அவருக்கு கைவந்த கலையாக இருந்தது. வேறுபட்ட கருத்துடையவர்களை சந்தித்து தனது எண்ணங்களை பரிமாறிக் கொண்டார். மானுடத்தை நேசித்த ஒரு மாமனிதராகவே அவர் திகழ்ந்தார். இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் அவர் பழகிய விதம் அவருக்கு சிறப்பான நன்மதிப்பை தேடித்தந்தது.

உள்ளத்தில் ஒளி பிறந்தால் வாக்கினிலே ஒளி தோன்றும் என்பது ஆன்றோர்கள் கண்டறிந்த உண்மை. ராஜலிங்கத்தின் உள்ளம் நிர்மலமானதாய் ஒளிவீசும் தன்மையை பெற்றிருந்தது. எனவே அவர் பேசும் போது மக்களை கவர்ந்ததில் வியப்பில்லை. கூட்டங்களில் பேசும் போதும் சரி அல்லது சாதாரண கலந்துரையாடல்களிளும் சரி ராஜலிங்கத்தின் பேச்சுக்கு ஒரு தனி மதிப்பிருந்தது.

உன்பது நாழி, உடுப்பது நான்கு முழம் என்பது போல் ராஜலிங்கத்தின் தேவைகள் மிகக் குறைவாகவே இருந்தன. வசதிகளை அவர் நாடிச் செல்லவில்லை. சில சமயங்களில் மிகவும் வசதியான ஏற்பாடுகள் அவருக்கு கிடைத்தன. ஆனால் தாமரை இலை தண்ணீர் போல இது பற்றி அவர் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. எளிமை மிக்க வாழ்க்கை ஆனால் வானளாவிய சிந்தனை என அவர் வாழ்ந்தார்.

1909ஆம் ஆண்டில் கம்பளைக்கு அருகிலுள்ள சங்குவாரி தோட்டத்தில் அவர் பிறந்தார். வெள்ளைக்காரர்கள் அந்த தோட்டத்துக்கு வைத்த பெயர்(sanguar) சங்குவார். ஸ்கொட்லாந்து பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் இந்த பெயரை வைத்திருக்க வேண்டும். இந்த நகரத்தில் ஒரு புகழ்மிக்க அரச மாளிகையும் கோட்டையும் இருந்தன. ஆனால் வெள்ளைக்காரர்கள் வைத்த பெயரை தங்களுக்கேயுரிய பாணியில் தமிழ்படுத்தி சங்குவாரி என்ற பெயரே புழக்கத்திலிருந்தது. சங்குகள் வாரும் இடமோ இது என்கின்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது.

தனது ஆரம்ப கல்வியை சங்குவாரி தோட்ட பாடசாலையில் பெற்ற பின்னர் கம்பளை சென்ட். அன்ரூஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து அதற்கு பின் சென்ட் அந்தோனிஸ் கல்லூரியில் லண்டன் மெட்ரிக்குலேஷன் பரீட்சையில் சித்தியடைந்தார். அதே பாடசாலையில் ஆசிரியராக 1921ஆம் ஆண்டில் பணியேற்றார். அதற்கு பின்னர் சங்குவாரி தோட்டத்திலேயே சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் அந்த தோட்டப் பாடசாலையிலேயே ஆசிரியராக பணியைத் தொடர்ந்தார்.

ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் போதே அவருக்கு தன்னைச் சுற்றி நடக்கும் அராஜகத் தன்மைக்கும், அடக்கி ஆளும் போக்குக்கும் ஒரு தீர்வு காண வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

1927ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் விஜயத்திற்குப் பின்னர் இந்து இளைஞர் சபை என்ற பெயரில் கண்டியில் ஒரு அமைப்பை ஆரம்பித்தார். இந்த இளைஞர் சங்கமே பிற்காலத்தில் போஸ் சங்கமாகவும், அதன் பின்னர் திரு. பெரிசுந்தரம் அவர்களுடன் இணைந்து மலைநாட்டு இந்தியர் கழகமாகவும் உருப்பெற்றது.

கல்வி அறிவுதான் மக்களுக்கு விமோசனம் தரும் என்ற உணர்வுடன் அவர் கல்வியை தோட்ட மாணவர்களுக்கு எடுத்துச் செல்வதிலேயே மிகவும் கவனம் செலுத்தினார். 1932ஆம் ஆண்டில் சவுக்குமலை தோட்டத்தில் ஒரு இரவு பாடசாலை ஆரம்பித்தார்.

மகாத்மா காந்தி நடத்திய சபர்மதி ஆசிரம அடிப்படையில் புசல்லாவையில் சரஸ்வதி வித்தியாலயத்தையும், இளைஞர் சமாஜத்தையும் நிறுவினார். அந்த காலத்தில் ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி நிர்வகிப்பது என்பது மிகவும் கடினமான ஓர் காரியமாகும். சோல்லொணா கஷ்ட நஷ்டங்களுக்கூடே தனது உள்ளத்தில் கிளர்தெழுந்த உத்வேகத்தில் பசி நோக்காது, மெய் வருத்தம் பாராது மிகவும் பாடுபட்டார். அந்த காலத்தில் பஸ்கள், கார்கள் கிடையாது. புகையிரத மார்க்கமாகவும், கால்நடையாகவும் பல இடங்களுக்குச் சென்று சரஸ்வதி வித்தியாலயத்திற்காக நிதி சேர்த்தார்.

இன்று மிகச் சிறந்த ஒரு பாடசாலையாக புசல்லாவையிலே உள்ள சரஸ்வதி வித்தியாலயம் அவருடைய அந்த உழைப்பினால்தான் உருவாக்கப்பட்டது.
1939ஆம் ஆண்டில் இலங்கை, இந்திய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்த நாள் முதற்கொண்டே அந்த அமைப்பில் அவர் ஆர்வம் செலுத்தினார். 1940ஆம் ஆண்டு இலங்கை, இந்திய காங்கிரஸின் நிர்வாகத் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1941ஆம் ஆண்டு இலங்கை, இந்திய காங்கிரஸ் லேபர் யூனியன் என்ற தொழிற்சங்கம் அமைக்கப்பட்டபோது அதில் இரவு பகல் பாராது உழைத்தார்.

1941ஆம் ஆண்டில் அவர் இலங்கை, இந்திய காங்கிரஸின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில மத்திய காரியாலயத்தில் இரண்டு, மூன்று பேரே வேலை செய்தனர். அவர்களும் தலைவர்களும் சேர்ந்துதான் சகல வேலைகளையும் செய்தார்கள். திரு. ராஜலிங்கம் காலையில் 7.00 மணிக்கே வந்து காரியாலயத்தை கூட்டி, பைல்களை ஒழுங்குபடுத்தி, கடித நகல்களையும் தயார் செய்து சேவகர்கள் இல்லாவிடில் தானே சென்று தபால்களை கட்டில் சேர்த்து விட்டும் வருவார். இதை அக்காலத்தில் அவரோடு இணைந்து பணி புரிந்த பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

1939ஆம் ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேரு இலங்கைக்கு விஜயம் செய்த போது இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அமைப்புகளை அழைத்து கொழும்பு பம்பலப்பிட்டியில் டி.பொன்சேகா பாதையில் அமைந்த ஒரு இல்லத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பண்டித ஜவஹர்லால் நேருவின் ஆலோசனையுடன் இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து இலங்கை, இந்திய காங்கிரஸ் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

1940 ஆம் ஆண்டில் அதன் முதல் தலைவராக லெட்சுமணன் செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். லெட்சுமணன் செட்டியாருக்கு சுகவீனம் ஏற்பட்டு அதே ஆண்டில் செப்ரம்பர் மாதம் திரு. பெரிசுந்தரம் இலங்கை, இந்திய காங்கிரஸுக்கு தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

1942ஆம் ஆண்டு திரு. பெரிசுந்தரத்தின் பதவிக் காலம் முடிந்தவுடன் இணைலட்சுமணன் செட்டியாருக்கு சுகவீனம் ஏற்பட்டு அதே ஆண்டில் செப்ரம்பர் மாதம் திரு. பெரிசுந்தரம் இலங்கை, இந்திய காங்கிரஸுக்கு தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

1942ஆம் ஆண்டு திரு. பெரிசுந்தரத்தின் பதவிக் காலம் முடிந்தவுடன் இணைச் செயலாளராக பதவி வகித்த திரு. அப்துல் அஸீஸ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 1945ஆம் ஆண்டில் பெரிசுந்தரம் தலைமை பொறுப்பை ஏற்றார். அதற்குப் பின்னர் 1946ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரை திரு. சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கை, இந்திய காங்கிரஸின் தலைவராக பணி புரிந்தார். 1948ஆம் ஆண்டில் முதன் முதலாக ராஜலிங்கம் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஆண்டுக்கு ஒரு தடவை தலைவர் தேர்தல் நடத்துவது என்ற அந்த சமயத்தில் வழமை இருந்ததால் 1950ஆம் ஆண்டில் ஜனாப் அப்துல் அஸீஸ் மீண்டும் தலைவராக பொறுப்பேற்றார்.

1951 முதல் 52ஆம் ஆண்டு வரை தலைமை பொறுப்பு திரு. ராஜலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டு முதல் 53 ஆம் ஆண்டு வரை மீண்டும் அஸீஸ் தலைமை தாங்கினார். 1953ஆம் ஆண்டு மீண்டும் ராஜலிங்கம் தெரிவாகினார்.

இதற்கு பின்னர் ஏற்கனவே இலங்கை, இந்திய காங்கிரஸில் நிலவிய உட்பூசல்கள் பெரிதாக வளர ஆரம்பித்தன. கடைசியாக திரு. ராஜலிங்கம் இலங்கை, இந்திய காங்கிரஸுக்கு தலைமை தாங்கியது 1955ஆம் ஆண்டில் தான். இதற்கு பின்னர் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது. அப்துல் அஸீஸ் தலைமையில் புதிய ஒரு ஸ்தாபனமாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உருவாகியது.

இந்த பிளவுக்கு பின்னர் இலங்கை இந்திய காங்கிரஸ் பாரதூரமான பாதிப்புக்கு உள்ளானது. இதே காலகட்டத்தில் இலங்கையின் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டு பண்டாரநாயக்க 1956ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். அந்த சமயத்தில் தான் இலங்கை, இந்திய காங்கிரஸ் பெயர் மாற்றம் பெற்று இலங்கை ஜனநாயக காங்கிரஸ் என்றும், தொழிற்சங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் பெயர் மாற்றப்பட்;டது. காலப்போக்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற பெயர் மாத்திரமே இயங்கியது. இதற்கு அரசியல் பிரிவு என்று அரசியல் விடயங்களை கவனிப்பதற்காக தேர்தல் ஆணையாளரிடம் பதிவு செய்யப்பட்டது.

இதேபோன்று ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸில்; அரசியல் பிரிவும் இயங்கி வந்தது. 1956ஆம் ஆண்டு முதற்கொண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக அவர் மறையும் வரை செயல்பட்டு வந்தார்.

1960ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் ஒரு பிளவு ஏற்பட்டது. திரு. வெள்ளையன் தலைமையின் கீழே இலங்கை தொழிலாளர் தேசிய சங்கம் என்ற பெயரில் புதுஸ்தாபனம் அமைக்கப்பட்டது.

திரு. ராஜலிங்கம் இந்த பிளவுகள் பற்றியும், உட்பூசல்கள் பற்றியும் பெரிதும் வேதனையடைந்தாலும், அவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலேயே தொடர்ந்தும் செயல்பட்டு வந்தார். தொண்டமானுடன் இணைந்து தன் பணிகளை ஆற்றி வந்தார். காங்கிரஸ் தொழிற்சங்க செயற்பாடுகளிலே அவர் தன்னுடைய ஆர்வத்தை விட மலையக மக்களின் கல்வி மற்றும் வேறு அபிவிருத்திகளிலேயே அதிகக் கவனம் செலுத்தினார் என்று கூற வேண்டும்.
மலையக மக்கள் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும் என்ற பேரவாவோடு அவர் எத்தனையோ இளைஞர்களுக்கு கொழும்பிலும், வேறு இடங்களிலும் தொழில் பெற்று தருவதிலே அதிக நேரம் செலவிட்டார். காங்கிரஸ் வட்டாரத்திற்கு வெளியே இருந்த மக்களோடும், அரச தலைவர்களோடும் இலங்கை - இந்திய பிரச்சினை பற்றி விவாதிப்பதில் அவருடைய பெரும் அளவு நேரத்தை செலவிட்டார். தனது இறுதி மூச்சு வரை மலையக மக்களின் முன்னேற்றம் என்பதிலேயே அவர் தன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தினார்.

ராஜலிங்கம் ஒரு அபூர்வமான மனிதர். தியாகச் சுடர். இலங்கைக்கு விஜயம் செய்த கல்கி ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ராஜலிங்கத்திற்கு மலையக காந்தி என்ற நாமத்தை சூட்டி அவருடைய படத்தை அட்டைப் படமாக பிரசுரித்து திரு. ராஜலிங்கத்தின் சேவையை பாராட்டி கட்டுரை எழுதினார். மலையக காந்தி என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.  

ராஜலிங்கம் போன்றோர் அளித்த உந்து சக்தியினால்தான் இன்று அன்றிருந்த நிலையை விட மலையகம் மாற்றம் கண்டிருக்கிறது. இன்றும் பின் தங்கிய நிலையில் இருந்தாலும் ராஜலிங்கம் போன்றோர் கட்டிய அஸ்திவாரத்தின் மேல்தான் இன்று மலையக மக்களின் முன்னேற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

(இன்றையள தினம் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் கே.இராஜலிங்கம் நினைவுப் பேருரை இடம்பெறுவதையொட்டி இந்த கட்டுரை பிரசுரமாகிறது. கட்டுரையாளர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இந்து கலாசார ராஜாங்க அமைச்சருமாவார். )



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates