Headlines News :
முகப்பு » , , » சவூதியில் ஆணி அடித்து ரத்தம் எடுத்த காட்டுமிராண்டி எஜமானர்கள் - என்.சரவணன்

சவூதியில் ஆணி அடித்து ரத்தம் எடுத்த காட்டுமிராண்டி எஜமானர்கள் - என்.சரவணன்


சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிக்காக சென்ற மலையகப் பெண்ணின் உடலில் ஆணிகள் ஏற்றி இரத்தம் எடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த கொடுமைகளுக்குப் பின் 4ஆம் திகதி நாடு திரும்பிய அந்த தமிழ் பெண் விமான நிலையத்துக்கு அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் ஒக்டோபர் 8ஆம் திகதி பலங்கொட பெரிய ஆஸ்பத்திரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.

அழகுமலை பாப்பாத்தி எனும் இந்த 37 வயது பெண், 4 பிள்ளைகளின் தாயாவார். பலங்கொடையில் உள்ள தேயிலை தோட்டமான எக்ஸ் தோட்டத்தை சேர்ந்த இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சவுதிக்கு பணிபெண்ணாக சென்றிருக்கிறார். இது வரை எந்த சம்பளமும் அவருக்கு வழங்கப்படாத நிலையில் அது குறித்து கேட்கப்பட்டபோதெல்லாம் கொடூர சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

கொதிக்க வைத்த எண்ணையை உடலில் ஊற்றியிருக்கிறார்கள். வீட்டிலுள்ளவர்கள் ஆணிகளை அடித்து இரத்தத்தை சிந்தைவைத்து அதனை போத்தலில் சேகரித்திருக்கிறார்கள். பிறப்புறுப்பில் போத்தலை திணித்து காயப்படுத்தியும் இரத்தம் சிந்த வைத்திருக்கிறார்கள். காலையில் எடுக்கப்படும் இந்த இரத்தத்தை எங்கே கொண்டு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று தனக்கு தெரியாதென்றும் கூறி கதறுகிறார் பாப்பாத்தி. பல நாட்கள் பட்டினியால் அவதிப்பட்டிருக்கிறார். 

உடலில் பல தீக்காயங்களும், ஆணியேற்றப்பட்ட காய அடையாளங்களுக்கு வைத்தியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இடது கையின் தோல்பட்டையும் உடைந்திருப்பதாக மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இன்று பல சிங்கள நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டிருந்த போதும் எந்தவொரு தமிழ் ஊடகமும் இது குறித்து எதுவும் வெளியிடவில்லை. மலையக தோட்டப் பெண்ணாக இருந்தது தான் ஒரே காரணமோ தெரியவில்லை.

இதனை வெளிக்கொணர்ந்த லக்பிம சிங்கள பெண் பத்திரகையாளரான லாலனி ரத்நாயக பலங்கொட சமூக அபிவிருத்தி மன்ற தலைவரான விகாராதிபதி இம்புல்பே விஜிதவன்ச எனும் பிக்குவின் துணையுடன் ஆஸ்பத்திரி சென்று தகவல்கள் சேகரித்து வெளியிட்டுள்ளார்.

தூதுவராலயத்தை சேர்ந்தவர்களின் உதவியுடன் தான் வெள்ளியன்று நாடு திரும்பினேன், விமானத்தில் வைத்து மயக்கமடைந்துவிட்டேன். கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து அதிகாரிகள் என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். இன்னுமொரு இலங்கை பணிப்பெண் ஒருவரை புதிதாக எடுத்திருக்கிறார்கள். ஏழ்மையை போக்க என நம்பிப் போகும் எங்களுக்கு இறுதியில் இவ்வளவு தான் மிச்சம்.

உடலில் ஆணிகள் எற்றப்பட்டும், கொல்லப்பட்டும், தற்கொலைக்கு உள்ளாக்கப்பட்டும், சித்திரவதை, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், வருடக்கணக்கில் எந்த சம்பளமுமின்றி கொடுமைகளை அனுபவித்து வரும் இலங்கை பணிப்பெண்களில் கதைகள் தொடர்கதையாக நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. வெட்கங்கெட்ட இந்த இலங்கை அரசோ தொடர்ந்தும் சொந்த நாட்டுப் பெண்களை அந்நிய வருமானத்துக்காக அனுப்பிக்கொண்டேயிருக்கிறது. இந்த பெண்களுக்கு நேரும் கதி பற்றி போதிய நடவடிக்கைகள் இன்று வரை எடுக்கப்படுவதில்லை. சவூதி அரசுக்கு நோகும் எதையும் இலங்கை அரசு செய்வதில்லை என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது.

ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் இந்த கொடுமைகள் தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறி இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர். எமக்கு கிடைக்கும் தகவல்களின்படி மாதக்கணக்கில் அவர்கள் நாட்டுக்கு அனுப்பமுடியாத நிலையில் மோசமான பராமரிப்புடன் இப்பெண்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டாருடன் தொடர்புகொள்ளகூட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாலுறவை லஞ்சமாக கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கையில் உள்ள குடும்பத்தினர் தொடர்புகொண்டு அவர்களை மீள பெற முயற்சி எடுக்கின்றபோதும், தூதரகமோ, சவூதி எஜமானர்களின் அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறும் விடுதலை பத்திரம் எடுக்கமுடியாதிருப்பதாக தெரிவித்துகொண்டிருக்கிறது. இரக்கமற்ற அந்த சவூதி எஜமானர்களிடமிருந்து என்று இவர்களுக்கு சொந்த நாடு திரும்பும் உரிமை கிடைக்கும்.

பாப்பாத்தியின் கதை முடிவல்ல தொடர்கதைகளில் ஒன்றே ஒன்று.

Share this post :

+ comments + 2 comments

2:22 AM

மலையக மந்திரிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்தார்கள். இவர்களை கல்லால் அடித்து கொள்ள வேண்டும் நமது மக்கள்

3:42 AM

இலங்கை அரசு முழு பாது காப்புடன் அனுப்ப வேண்டும்

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates