Headlines News :
முகப்பு » » மலையக அபிவிருத்திக்கு தடைக்கல்லாக நிற்கும்; வறுமை - பிருந்தா தாஸ்

மலையக அபிவிருத்திக்கு தடைக்கல்லாக நிற்கும்; வறுமை - பிருந்தா தாஸ்


மனிடன் என்று பிறந்து விட்டால் அவன் வாழ்வில் வறுமை என்ற துன்பம் பெரியதொரு பிரச்சினை எனலாம். குறைந்த வருமானம் எனும் கொடூர அரக்கன் மலையக மக்கள் வாழ்வில் நீண்டதொரு பாரிய பின்னடைவையும் வறுமையையும் ஏற்படுத்துகிறான்.

அந்த வகையில் மலையகத்தில் ஒரு குடும்பத்தை எடுத்துக்கொண்டால் தாய், தந்தை உட்பட குழந்தைகள் மூவர் (குறைந்தபட்சம்) காணப்படுவர். தாயும் தந்தையும் தோட்டத் தொழிலாளியாக வேலை செய்வர். இவ்விருவரின் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்துவது என்பது சிரமமான காரியம். நாட்டில் அதிகரித்து வரும் பொருள்களின் விலையுயர்வானது மலையக மக்கள் மட்டுமல்ல முழு நாட்டு மக்களின் வயிற்றிலடிக்கும் நிலையே காணப்படுகிறது.

இன்று ஆசியாவின் பல நாடுகளிலும் வறுமை தாண்டவமாடினாலும், மலையகப் பிரதேசத்தை எவ்வளவு தூரம் அபிவிருத்திப் பாதையில் கொண்டு சென்றாலும், ஏதோ ஒரு வடிவில் வறுமை இருக்கிறது என்பதை இனம் கண்டுகொண்டே இருக்கின்றோம். இந்த வறுமை நிலையை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகளைக் கைக்கொள்வதற்கு பெரும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இப்போது மலையகம் இருக்கின்றது. இதற்கு காரணம் இடப்பிரச்சினை, வாழ்வாதாரப் பிரச்சினை, தொழில் பிரச்சினை போன்றனவாகும். அத்துடன் வருமானப் பற்றாக்குறை காரணமாக வறுமை மட்டுமல்லாது பல்வேறு சுற்றாடல், சமூகப் பிரச்சினைகளும் ஏற்பட்டு காலநிலையின் மாற்றத்திற்குக்கூட வழி வகுக்கச் செய்கின்றது.

அதிலிருந்து முற்றாக மீண்டு செல்வதற்கான வழிவகைகளை இன்னும் இந்த அரசாங்கம் முழுமையாக அமைத்துக் கொடுக்கவில்லை. அண்மைக் காலங்களில் கூட வீதி புனரமைப்புகள் இடம்பெற்ற போதிலும், கடுமையான மழை காரணமாக வீதிகள் உடைந்தும் மண் சரிவுகளும் ஏற்பட்டிருககிறது. நாட்டின் தலைவர்களுக்கு அதிகாரத்தினைக் கொடுத்திருந்தாலும் அதனைக் கொண்டு மக்களுக்கு முழுமையான அல்லது சரியான பயனுள்ளதாக அமைத்துக் கொடுக்கவில்லை. எது எப்படி இருப்பினும்; மலையக வளர்ச்சிக்கு அந்தந்த பிரதேச தலைவர்கள், பல்வேறு அறிஞர்கள், பொருளியல் விற்பன்னர்கள் திட்டமிட்டிருந்தால் இயற்கைக்கு பாதிப்புறாத அபிவிருத்தி நிலைத்திருக்க வழி வகுத்திருக்கும் என்பது எனது கருத்து.

மாகாணசபைத் தேர்தல் பிரசாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இச்சமயத்தில் மலையகத்தில் நாளுக்கு நாள் மோதல்கள், தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றமையை நாம் அறிவோம். பதவி மோகத்தில் நடக்கின்ற இச்செயற்பாடுகளினால் அப்பாவி இளைஞர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பதை மறுக்க முடியாது. தேர்தல்களும் பிரசாரங்களும் இளைஞர்கள் மத்தியில் புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவதைத் தவிர வன்செயல்களுக்கு அல்ல! அத்துடன் தேர்தல் காலத்தில் நான் அதை செய்வேன். இதைச் செய்வேன் என்ற தலைவர்கள,; பின்னர் காணாமல் போன சம்பவங்கள் நடைபெறுவதும் பொய் அல்ல. அதை வறுமையில் இருக்கும் மலையகத்தாரிடம் அறிந்து கொள்ள முடியும். 

வறுமை, சம்பள உயர்வு, இடவசதி, போக்குவரத்து, கல்வி அபிவிருத்தி போன்றவை குறித்து காலாகாலமாக பேசி வரும் மலையகத் தலைவர்கள் ஏன் அதற்கான முடிவுகளை இன்னும்; பெற்றுத் தரவில்லை! மலையக மக்களின் துயர் துடைக்காமல் இனவாதமும் பதவி மோகமும் சண்டையுடன் கூடிய வன்முறைகள் தலைவிரித்தடுகிறது. இந்த வறுமையானது முழு அபிவிருத்திக்கு தடையாகவும் அச்சுறுத்தலாகவும் காணப்படுகிறது என்பதை மலையகத் தலைவர்கள் உணரவில்லை போலும். எனவே சமூகத்தின் அனைத்து கட்டமைப்புகளை குலைத்திடும் இம் மாதிரியான செயற்பாடானது எம் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

குறைந்தளவு வருமானம், வருமானமின்மை, அல்லது அன்றாட ஜீவனோபாயத்துக்கு வழியில்லாத நிலையிலேயே மலையக மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால் வருமானம் இல்லாத நிலை மட்டும் வறுமையாக இருந்து விடவில்லை. அங்கு ஏற்றுக் கொள்ளத்தக்க வாழ்க்கைத் தரம் ஒன்றுக்கான தெரிவுகள் மற்றும் வாய்ப்புகள் என்பன மறுக்கப்படும் நிலையே வறுமையாக இருந்து வருகின்றது. எனவேதான் வருமானம் சார்ந்த வறுமை என்றும் மனித வறுமை என்றும் வேறாக வறுமையை நோக்கலாம். எனவே ஐ.நா. மனித அபிவிருத்தி அறிக்கையில் (ருNனுP - 1997)‘வறுமை என்பது வருமானம் தொடர்பான விடயத்தில் மட்டும் கவனத்தில் எடுக்கப்படக்கூடாது. அது அதன் அனைத்து வகையான பரிமாணங்களிலும் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும’ எனக் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தார். எதற்கு வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மட்டுமான விஜயம் என்று நினைக்கின்றேன். மலையகம் என்ற ஒரு பிரதேசம் இருக்கின்றது என்பது அவருக்கு தெரிந்திருக்குமோ என்னவோ? என்றாலும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு வறுமையில் வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மக்களின் ஒரு சாரார் ஒரு வகையில் புலம்பெயர்ந்து தமது வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் அத்தியாவசிய உடைமைகள் காணப்படுகின்றன. ஆனால் மலையக மக்கள் தங்குமிட வசதிகள் இருந்தும் அதை சரியாக நிர்மாணித்து கொடுக்காத அவலநிலையில் இருப்பதை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நவநீதம்;பிள்ளை அவர்கள் மலையகம் சென்றிருந்தால் மலையகத்துக்கும் விடிவு பிறந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. மலையகம் பற்றிய அவல நிலையினை பல ஊடகங்கள் எடுத்துக் காட்டியும் அதற்கான தீர்வு இன்னும் பெறமுடியாத நிலையிலேயே உள்ளது. மலையக அபிவிருத்தியில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது? ஆராய்ந்து பார்க்குமிடத்து ஒன்றும் இல்லை. மாறாக இனவாதம், வன்செயல்கள், சிறுவர் துஷ்பிரயோம், வறுமை போன்றவைகள் தான் அதிகமாக காணப்படுகிறது. உல்லாசப் பயணிகள் வந்து போகும் இடங்கள் குறிப்பாக நுவரெலியா, கண்டி, பேராதெனிய போன்ற இடங்களில் அபிவிருத்தியைக் காணலாம். ஆனால் தூர பிரதேசங்களை பார்வையிட்டால் அவை மிகவும்; பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. ஐ.நா. ஆணையாளர் அதைப் பார்வையிட்டிருந்தால் நிச்சயம் எமக்கும் வழி பிறந்திருக்கும.

இதற்கமைவாக ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பானது (குயுழு) நிறுவப்பட்டமைக்கான காரணம் மலையகம் போன்ற 'கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை, விவசாய விருத்தியை மேம்படுத்துவதன் மூலம் வறுமையைக் குறைக்கலாம் என்பதற்காகும். ஐ.நா. இவ்வாறான திட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்தாலும் நவநீதம்பிள்ளை போன்றோர் மலையகம் போன்ற பகுதிகளை பார்வையிட்டு அதற்கான அபிவிருத்தி செயல் திட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்தியிருந்தால், அவரின் இலங்கைக்கான வருகை முழுமையடைந்திருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

அந்தவகையில் பார்க்கிறபோது வறுமையின் தாக்கங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.       
  • குறைந்த ஆயுள் காலம்
  • கல்வியறிவின்மை
  • ஒதுக்கப்படுதல்
  • போதிய வளங்கள் அமையாமை என்பனவாகும்.
  • வறுமைக்கு இலக்கணம் வகுத்தவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். 
  • தமது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் ஆற்றல் இல்லாமை 
  • மூலவளங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத நிலை
  • கல்வி மற்றும் திறமைகள் காணப்படாமை
  • போதிய ஆரோக்கியம், போஷாக்கு இல்லாமை
  • வதிவிடம், நீர் மற்றும் சுகாதார வசதிகள் சரியாக அமையாமை
  • வன்செயல் மற்றும் குற்றச்செயல்கள் (சிறுவர், இளைஞர்கள்  
  • துஷ்பிரயோகம்)
  • அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகாரத்தில் குரலெழுப்பும் 
  • சுதந்திரம், வாய்ப்பு அளிக்காமை.

இவ்வாறான காரணிகளை உள்ளடக்கிய ஒரு பன்முகத்தோற்றம் கொண்ட விடயமே மலையக மக்களின் வறுமைக்கு காரணமாயிருக்கிறது. 

இவ்வாறு உலகில் சுமார் 1.3 பில்லியன் மக்கள் தொகையினர் எவ்விதமான ஆதரவற்ற நிலையிலேயே வாழ்வதாகவும் உலக சனத்தொகையின் அரைவாசிப்பேர் நாளொன்றுக்கு இரண்டு அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானத்திலேயே வாழ்கின்றனர் எனவும் கூறப்படுகின்றது. எனவேதான் உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் வறுமை நிவாரணங்களை வழங்கி, வறுமையை ஒழிப்பதற்கான செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. 

உலகின் பல நாடுகளது வறுமைக்கு நிவாரணமாக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தாலும் நமது நாடான இலங்கையில் குறிப்பாக மலையகம் போன்ற இடங்களில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்களில் முக்கியமானது சமுர்த்தி திட்டமாகும். இதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக வறுமையைக் குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தாளப்பட்டு வருகின்றமை கண்கூடு. 

சமுர்த்தி சேவையின் செயற்பாடுகள்

கட்டாய சேமிப்பு, சுயவிருப்பு சேமிப்பு.
சனசமுக செயற்றிட்டங்கள்.
சமுர்த்தி கடன் திட்டம். 
சமுர்த்தி அபிவிருத்திக் கடன் திட்டம். 
சமுர்த்தி தொழில் முனைவு கடன் திட்டம்.
சமுர்த்தி வங்கித் தொடர்பான திட்டம்.
விவசாய அபிவிருத்தி திட்டம்.
சுய வேலை வாய்ப்புக்கான திட்டம்.
சமூக அபிவிருத்தித் திட்டம்.
சிறு கைத்தொழில்களின் அபிவிருத்தி, 
சமூக பாதுகாப்பு நிதியம், 
சமுர்த்தி புலமைப் பரிசில்கள், சுயவேலை வாய்ப்புத் திட்டங்கள்,

மற்றும் மகிந்த சிந்தனையின்; கீழ் பலதரப்பட்ட செயற்றிட்டங்கள் போன்றன மக்களின் வறுமையை ஒழிப்பதற்கென கொண்டுவரப்பட்டு, தற்போது நடைமுறையில் செயற்பட்டும் வருகின்றன. இருந்தும் இவ்வாறான திட்டங்கள் மலையக மக்களின் வாழ்வு நிலையை உயர்த்தியதாக எனக்குத் தெரியவில்லை. 

இதற்குக் காரணம் 
பொருட்களின் விலையேற்றம்
உள்நாட்டு உற்பத்திக்கான சரியான சந்தை வாய்ப்பின்மை 
கல்வி கற்றலில் ஆர்வம் இன்மை
பாடசாலை இடைவிலகல்
சோம்பறித்தனம்
வேலை வாய்ப்பு பெற்று பெண்கள் வெளிநாடு செல்கின்றமை.
அரசுகள் அபிவிருத்திகள் பற்றிக் கதைத்தும் நிறைவேற்றாமை.
அபிவிருத்தி இடம்பெற்றும் அது மக்களுக்கு முழுமைப்படுத்தப்படாமை

போன்றவையே இம்மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு தடைகளாக இருக்கின்றன எனலாம். வறுமை நிலையிலுள்ள நாடுகளாக 174 நாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அதில் இலங்கை 84ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

எனவே மலையக மக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை நோக்கியதான செயற்பாடுகளுக்கு அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி வறுமை கோட்டின் கீழுள்ளவர்கள் வெளியே நகர்வதற்கான சந்தர்ப்பமும் அனைத்துச் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும் என்பதே மலையக மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பும் அவாவுமாகும்! 

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates