Headlines News :
முகப்பு » » மலையகத்தின் ‘அபிவிருத்தி’ அரசியல்: பத்தாண்டுத்திட்டத்தின் அவசியமும் அணுகுமுறையும் - மல்லியப்புசந்தி திலகர்

மலையகத்தின் ‘அபிவிருத்தி’ அரசியல்: பத்தாண்டுத்திட்டத்தின் அவசியமும் அணுகுமுறையும் - மல்லியப்புசந்தி திலகர்


இலங்கையில் அபிவிருத்தி அரசியல் எனும் சொல்லாடல் தற்காலத்தில் அதிகம் பேசப்படுகின்றது. மேலோட்டமான பார்வையில் அரசயிலில் அபிவிருத்தி வந்துவிட்டதோ என்ற தோற்றப்பாட்டினை இந்த சொல்லாடல் தந்தாலும் அதன்  உட்கருத்து வேறு. ஆளும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் மக்களுக்கான அடிப்படைக் கட்டுமான அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளைத்தான் இந்த அபிவிருத்தி அரசியல் எனும் சொல்லாடல் குறித்து நிற்கின்றது. மலையகத்தில் மாத்திரமல்லாது தற்போது வடக்கு கிழக்கு அரசியலிலும் இந்த அபிவிருத்தி அரசியல் பற்றிய பேச்சுக்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த மூன்று  தசாப்தங்களாக அங்கு நடைபெற்ற யுத்தம் இந்த அபிவிருத்தி அரசியலுக்கு அந்த மக்களை இழுத்துச் சென்றுள்ளது எனலாம்.

எனினும் மலையகப் பின்புலத்தில் இந்த அபிவிருத்தி அரசியலுக்கு மூன்று தசாப்த கால வரலாறு உண்டு. மலையக அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரை 1977ம் ஆண்டுக்குப்பின்னர் பொதுவாகவே ஆளுகின்ற அரசாங்கத்துடன் இணைந்து உரிமைகள் சலுகைகளப் பெற்றுக்கொளவது என்பது பொதுவாக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்த, வகிக்கின்ற எல்லா மலையகக் கட்சிகளின் நிலைப்பாடாகவும் இருந்து வருகின்றது. இருந்தும் மலையக மக்களின் அடிப்படை கட்டுமான அபவிருத்திப்பணிகள் முழுமையடையாத நிலையில் மலையக அபிவிருத்திக்கான பத்தாண்டுத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. அந்த பத்தாண்டுத் திட்டம் பற்றிய பார்வைக்கு முன்பாக அத்தகைய திட்டம் ஒன்றுக்கான பின்புலம் மற்றும் முப்பது வருடகாலத்திற்கு மேலாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி அரசியல் பற்றிய பார்வையை செலுத்துவது பொருத்தமுடையது.

மலையக மக்களின் தோட்டப்புற வாழ்க்கை மிகுந்த அவலத்துக்குரியது. சுமார் 200 வருடகால பழமை வாய்ந்த லயன் குடியிருப்புகளிலேயே பெருந்தோட்ட மக்களின் 95 சதவீதமானோர் வாழ்கின்றனர். 5 சதவீத்தினர் தனி அல்லது இரட்டை வீடுகளாகவும் உள்ளன. அதைத் தவிர்த்து அவர்களது குடியிருப்புக்கான பாதைகள் சில இடங்களில் கொன்கிறீட் இடப்பட்டு நிறைவானதாகவும் பல இடங்களில் குண்டும் குழியும்மாகவும் காணப்படுகிறன. அது போலவே குடிநீர், மலசலகூடம், மின்சாரம், என பல்வேறு சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளில் ஒரு முழுமையை காணக்கிடைப்பதில்லை. ஆனால் தொடர்ந்தும் மக்களுக்கு அபிவருத்தி அரசியல் பற்றியே  சொல்லப்பட்டு வருவதோடு தேர்தல் காலங்களில் அத்தகைய அபிவிருத்தியை அடைவதற்காக மக்களுக்கு வாக்குறுதிளாகவும் இந்த அபிவிருத்தி குறித்த கோஷங்களே முன்வைக்கப்பட்டு வருகின்றது.

எனினும் மலையக மக்கள் பற்றி பேசும்போதெல்லாம் மக்கள் தங்கள் வாழ்க்கைச் சூழலின் வசதியீனங்களைப் பற்றியே அதிகம் பேசுவதும் மலையக மக்கள் பற்றிய பிற சமூக புரிதல்கள் அந்த மக்களின் ஏழ்மை நிலையில் வாழ்வது பற்றிய படங்களாகவும் அமைந்துள்ளது.. கடந்த 35 வருடங்களுக்கு மேலாக மலையகத்தில் அமைச்சுப்பதவிசார் அரசியல் சூழ்நிலை நிலவுகின்றதன் பின்னணியில் மக்களின் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறாதநிலையில் மக்கள் அறியாமையில் பேசுதாக சொல்வதும் அபத்தமானது. அதேநேரம் கடந்த 35 வருடகாலமாக எவ்வித அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை என யாரும் கூறினால் அந்த கூற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. பல்வேறு அபிவிருத்திப்பபணிகள் மேற்கொள்ளப்ட்டுள்ள அதே நிலையில் மலையக மக்களுக்கு முழுமையாக அது சென்றுசேரவில்லை என்பதும் மக்கள் அது குறித்த வெறுப்பினை அல்லது விருப்பமின்மையை எப்போதுமே வெளிக்காட்டுகின்றார்கள் என்கின்ற யதார்த்தமும்தான் முறையான அபிவிருத்தித் திட்டத்துக்கான தேவையை வலியுறுத்தி நிற்கின்றன.

இலங்கையில் மலையகம் என்பது நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை கேகாலை, இரத்தினபுரி, களுத்தறை மற்றும் கொழும்பு (அவிசாவளை) மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது. இதில் நுவரெலிய மாவட்டம் மலையகத்தின் இதயப்பிரதேசமாகக் கொள்ளப்படுவதால் அதனை மையாகக் கொண்டுள்ளது. அந்த மாவட்டத்தின் புவியியல், குடியியல் நிலைமைகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் அத்தகைய ஒரு தோற்றப்பாட்டை நுவரெலியா மாவட்டத்திற்கு வழங்கியுள்ளது. மலையக மக்களுக்காக பெரும்பாலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம், அமைச்சுப்பதவி என்பன நுவரெலியா மாவட்டத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றன. தற்போது அது முழுமையாக நுவரெலியா மாட்டத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டமை மலையக மக்களைப் பொறுத்தவரை துரதிஸ்டவசாமானது. இந்த அரசியல் பிரதிநிதித்துவ நிலைமை  நுவரெலியா மாவட்டத்துக்கு கிடைத்த வரமாக அமைந்த அதேவேளை மலையக மக்கள் வாழும் ஏனைய மாவட்டங்களுக்கு அதுவே ஒரு சாபமாகவும் அமைந்துள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை அவர்கள் எந்த மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றார்களோ அந்த மாவட்டத்துக்கே தங்களது நிதி ஒதுக்கீடுகளைச் செய்யமுடியும். மாகாணசபை உறுப்பினர்களின் நிலையும் அதேதான். ஆனால் அமைச்சுப் பதவிகளைப் பொறுத்தவரை தேசிய ரீதியாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம். ஆனால் குறித்த அமைச்சு எந்த துறைசார்ந்து அமைகின்றது என்பது முக்கியமானது.

இந்த மூன்று தசாப்த காலத்தில் மலையக அரசியல் தலைவர்கள் புடவைக்கைத்தொழில், உல்லாசப்பயணம், கிராமிய அபிவிருத்தி, கால்நடை, போக்குவரத்து, தபால் தொலைத்தொடர்புகள், கல்வி, நீதி, சமூக அபிவிருத்தி, சிறுகைத்தொழில், நீர்வழங்கல் வடிகாலமைப்பு, சிறுகைத்தொழில், வீடமைப்பு,  பொருளாதார அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டைமைப்பு என பல அமைச்சுக்களில் அமைச்சர்களாகவோ அல்லது பிரதி அமைச்சர்களாகவோ பதவி வகித்துள்ளனர். இன்றும் இருக்கின்றனர். இதில் தோட்ட உட்கட்டமைப்பு தவிர்ந்த ஏனைய அமைச்சுக்கள் தேசிய ரீதியாக செற்படவேண்டியவை. அவற்றில்; குறித்த அமைச்சர் தனது அதிகாரத்தைக்கொண்டு எந்த அளவுக்கு மலையக மக்களுக்கு பணியாற்றலாம் என்பதை அவரே தீர்மானித்து சேவையாற்றலாம். மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களோடு ஒப்பிடும்போது மலையக அமைச்சர்களின் பணி இதுவிடயத்தில் குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை.

பெருந்தோட்ட மக்களுக்காக சேவையாற்றக்கூடியதாகவிருந்த தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் வினைத்திறனற்ற செயற்பாடுகளால் இன்று கையை விட்டுச்சென்றுள்ளது. மேற்படி அமைச்சுக்களில் அமைச்சுப்பதவி வகித்தவர்கள் பெரும்பாலும் நுவரெலியா மாவட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. எனவே அமைச்சர்களுக்கு தமக்குரிய வாக்குகளைத் தக்கவைத்தக்கொள்ளும் தேவை இருந்தது. எனவே பெரும்பாலான அபிவிருத்திப்பணிகள் நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தியே அமைந்தவிடுகிறது. தொழிற்பயிற்சி பாடசாலை, கலாசார நிலையம், வைத்தியசாலை என பாரிய திட்டங்களும் கொன்கீரீட் பாதைகளும் பாடசாலைகளும் கூட நுவரெலியா மாவட்டத்தையே மையப்படுத்தின. ஆனால், மலையக பெருந்தோட்ட மக்களின் மூன்றில் ஒரு பங்கினரே நுவரெலியா மாவட்டத்தில் வாழ்கின்றனர். ஏனையோர் பதுளை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை என வாழ்கின்றனர். அவர்களுக்கான அபிவிருத்திப்பணிகள்  குறித்த அக்கறை குறைந்தே காணப்படுகிறது. இதில் பதுளை மாவட்டம் ஓரளவு உள்வாங்கப்பட்டாலும் ஏனைய மாவட்டங்களின் நிலைமை மிகவும் மோசமானது. 

நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப்பணிகளும் துறைசார்ந்தவர்களின் அபிவிருத்தித் திட்டமிடலாக அல்லாமல் மக்களின் கோரிக்கைகள் மனுக்களுக்காக குறிப்பாக கட்சிக்கார்களின் அல்லது தமது சங்கத்துக்காரர்களின் (இது எல்லா கட்கிகளுக்கும் பொருந்தும்) தேவையின் நிமித்தம் மேற்கொள்ளப்படுவதாக அமைந்தவிடுகின்றது. கட்சிக்காரர்கள் அல்லது சங்க உறுப்பினர்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும்போது பொதுவாக அவர்களின் விருப்பு ஒழுங்கு பின்வருமாறு அமைந்தவிடுகின்றது.

  1. தோட்டத்துக்கு கோயில் கட்டுதல், 
  2. கோயிலுக்கு சிலை வாங்குதல் 
  3. மரண வீட்டுக்கான தற்காலிக கூடாரம் (டென்ட்) 
  4. குடிநீர் விநியோகத் திட்டம்
  5. பாதை, நடைபாதை அமைத்தல்
  6. கலாசார மண்டபம், 
  7. தாம் வாழும் தற்காலிக கூடாரத்திற்கான தகரம் 
  8. நாற்காலிகள்
  9. பேண்ட் வாத்தியகருவிகள் (Drum set)  
  10. மின்இணைப்புக்கான கட்டணம் 

இதற்கான பதிலாக அரசியல் கட்சிகளினால் வழங்கப்படும் தீர்வுகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே அமையும். இதில் மக்களை குறைகான முடியாது. அவர்களின் அன்றாட வாழ்க்கை சூழ்நிலையையும் தேவையையும் மையப்படுத்தியே அவர்களது கோரிக்கை அமையும். அப்படி ஆரம்பித்த அவர்களது கோரிக்கைகள் இன்று நிரந்தர மனுக்களாகிப ;போகின. ஐந்து பொதுத்தேர்தல்களில் வேட்பாளர்களிடம் சீமெந்து வாங்கி கட்டிய வரலாறு கொண்ட கோயில்கள் பல மலையகத் தோட்டங்களில் காணலாம். அந்த சீமெந்து பக்கட்டுகளுக்கான விலை அவர்களது வாக்குகளாக அமைந்துவிடுகின்றமையை மக்கள் உணர மறுக்கின்றனர். ஏறக்குறைய 20 வருடங்களுக்குரிய தங்களது வாக்குரிமையை விற்று ஊருக்கு ஒரு கோயில் கட்டியாக வேண்டிய நிலைமை மலையகத்தில் நிலவுகின்றது.

இப்படியாக மக்களினால் முறையாக முன்வைக்கப்படாமலும் அரசியல்வாதிகளால் முறையாக முன்னெடுக்கப்படாமலும் நகர்ந்துகொண்டு இருப்பதுதான் மலையக மக்களுக்கான அபிவிருத்தி. இதன் பெயர்தான் மலையகத்தின் அபிவிருத்தி அரசியல். இந்த முறையற்ற அல்லது திட்டமிடப்படாத அபிவிருத்திப்பணிகள் தோட்டப்பகுதிக்கான வீடமைப்பு திட்டத்தின்போது நன்கு புலப்பட்டது. மலையக பெருந்தோட்ட மக்களின் தேவையோ 250000 வீடுகளுக்கு மேல் உள்ளது. மலையக மக்கள் முன்னணி தலைவர் அமரர்.பெ.சந்திரசேகரன் அமைச்சராகவிருந்த காலத்தில் மலையகப்பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் கீழ் 23000 வீடுகள் வரை கட்டப்பட்டுள்ளது. இதற்கு ஆறு வருடங்கள் ஆகின. இப்போது அந்த திட்டமும் நடைமுறையில் இல்லை அதே பாணியில் அதை முன்னெடுத்திருந்தாலும் இன்னும் அரை நூற்றாண்டுக்கு மேல் அந்தத்திட்டத்திற்காக செலவிடவேண்டியிருந்திருக்;கும்.

இதகைய முறையற்ற அபிவிருத்தித்திட்டங்கள் கணிசமான அளவு முன்னெடுக்கப்பட்டபோதும், முன்னெடுக்கப்படுகின்றபோதும் அரசியல் கட்சிகள் விமர்சனத்தையே விளைச்சொல்லாகக் கேட்கவேண்டியிருக்கிறது. அதற்கான காரணத்தை அரசியல்வாதிகள் உணர்ந்து கொள்பவர்களாகவும் இல்லை.

இத்தகைய பின்னனியில் ஒரு கால  வரையறைக்குள் (பத்தாண்டுகள்) மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை செய்து முடிப்பதை அடிப்படையாகக் கொண்டதே ‘பத்தாண்டுத்திட்டம்’. இதனை தயாரிப்பதற்கான நிதி ஐ.நா அபிவிருத்தி திட்டத்தினால் வழங்கப்பட்டாலும் திட்டத்தயாரிப்பு பொறுப்பு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினாலேயே (அமைச்சு நடைமுறையில் இருந்த 2005 - 2010 காலப்பகுதியில்) முன்னெடுக்கப்பட்டடது. அதன் செயலாளராகவிருந்த மலையக மக்கள் சமூகத்தைச் சேர்ந்த திரு.எம்.வாமதேவன் அவர்கள் பல தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை தயாரித்திருந்தார். இதற்காக சிவில் சமூகத்தவரின் ஒத்துழைப்புகளும் ஆலோசனையும் பெறப்பட்டன. அரசியல் கட்சிகளும் தங்கள் ஆலோசனைகளை முன்வைத்தன. ஆனால் திட்ட வரைபு முடிவடைந்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நாளில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு அரசினால் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கான காரணம் அரசாங்கத்தின் தேசிய மட்ட நிகழ்ச்சி நிரல் எனவும் கொள்ளலாம். அதாவது ஆளும் அரசாங்கம் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம், போன்று ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒரு அபிவிருத்தித்திட்டத்தினை அறிமுகம் செய்து நடைமுறைபடுத்தி வருகின்றது. இதில் ‘கந்துரட்ட உதான’ (மலைநாட்டு எழுச்சி) எனும் திட்டத்தின் கீழ் மலையகப் பெருந்தோட்ட அபிவிருத்தியும் கொண்டுவரப்படலாம் எனவும், எனவே தனியான பத்தாண்டுத்திட்டமோ, தோட்ட உட்கட்டமைப்பு எனும் தனியான அமைச்சோ தேவையில்லை என்பது அரசின் நிலைப்பாடு. மறுபுறம் லயன் வீட்டு முறையை மாற்றி அமைக்கும் திட்டங்கள் ஏதும் ‘கந்துரட்ட உதான’வில் இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. எனவே தோட்டப்பகுதிக்கே தேவையெனவுள்ள அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்ள பத்தாண்டுத்திட்டடம் போன்ற தனித்துவமானத் திட்டங்கள் அவசியமாகின்றன. 

அதேநேரம் மலையக மக்களின் பிரதான அரசியல் பலம் என தன்னை அடையாளப்படுத்தும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு பொறுப்பாகவிருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தாம் முன்னெடுக்கும் திட்டமிடப்படாத அரசியல் சார்ந்த அபிவிருத்திப்பணிகளை முன்னிறுத்தி இந்த ‘பத்தாண்டு’ திட்டத்தை புறக்கணித்து ‘அதில் உள்ளதையே நாங்கள் அமுல்படுத்துகிறோம்’ என கூறிவருவதும் இந்தத்திட்டம் நடைமுறைக்கு வராமைக்கான காரணியாக அமைகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எவ்வித அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சிகளும் பிரதிநிதிகளும் முன்னெடுக்கும் முறையற்ற அபிவிருத்திப்பணி இன்னும் இருநூறு வருடங்கள் சென்றாலும் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு உண்மையானதும் முழுமையானதும் தேவையானதுமான அபிவிருத்தியைப் பெற்றுக்கொடுக்கப்போவதில்லை என்பதுவே இதில் உள்ள யாதார்த்தம் ஆகும்.

பெருந்தோட்ட வாழ்விடப்பிரதேசங்களை (Settlement Area) அபிவிருத்தி செய்வதற்கான பத்தாண்டுத்திட்டம்  மூலம் முழு மலையகத்துக்குமானதாகவும் அபிவிருத்தியாக அது அமையும் வாய்ப்பு உள்ளது.  எங்கெல்லாம்  லயன் குடியிருப்பு காணப்படுகிறதோ அங்கெல்லாம் அபிவிருத்தி என்கின்ற ஒரு நிலைமை தோன்றும். அப்படியான ஒரு அபிவிருத்தியே ஒட்டுமொத்த மலையக மக்களுக்கானதாக அமையும். அரசாங்கத்திடம் முறையாக வேண்டுகோள் விடுப்பதன் மூலம், பேரம்பேசுதல் மூலம் தேவையெனில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் இந்தத் திட்டத்தை எப்படியேனும் நடைமறைக்குக் கொண்டு வரலாம். பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அபிவிருத்தி விடயங்களுக்கு நிதியீட்டம் செய்து தமது வாக்கு வங்கி சிதறாமலும் அதேநேரம் முறையான அபிவிருத்திப் பாதையிலும் மலையக பெருந்தோட்ட உட்கட்டுமான அபிவிருத்தியினை மேற்கொள்ளலாம்.

ஆனால், பெருந்தோட்ட மலையக மக்களுக்கான பத்தாண்டு அபிவிருத்தித்திட்டத்தினை முன்னெடுக்கவேண்டிய பொறுப்புவாய்ந்த தரப்பினரே அதுபற்றிய விளக்கங்கள் இல்லாமல் இருப்பதும் அதைத்தான் நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம் என கூறுவதும், வேறு எந்த தரப்பினரையும் அதை நடைமுறைப்படுத்தும் நோக்கிலான ஒரு அழுத்தத்தை கொடுக்க முடியாத வகையில் தடைசெய்வதும் மலையகப் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை மேலும் சில நூற்றாண்டுகளுக்கு அப்பால் தள்ளிச்செல்லும் அவலம் ஒன்றுக்கும் வழிவகுக்கின்றது. இந்த உண்மையும் உணரப்படுவது அவசியமாகிறது.

Share this post :

+ comments + 1 comments

"இலங்கையில் மலையகம் என்பது நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை கேகாலை, இரத்தினபுரி, களுத்தறை மற்றும் கொழும்பு (அவிசாவளை) மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது. " -######-என்ற மலைய பகுதிகளின் அறிமுகம் மிக சிறப்பான பகிர்வு , அதே வேளையில் புதியவர்களின் புரிதலுடன் உங்களோடு அழைத்துசெல்ல உதவும் .
" கடந்த 35 வருடகாலமாக எவ்வித அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை என யாரும் கூறினால் அந்த கூற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. பல்வேறு அபிவிருத்திப்பபணிகள் மேற்கொள்ளப்ட்டுள்ள அதே நிலையில் மலையக மக்களுக்கு முழுமையாக அது சென்றுசேரவில்லை " ---#######இந்த பகுப்பாய்வுதான் உண்மையை வெளிப்படையாய் வெளிப்பூச்சு இல்லாமல் எடுத்துரைத்துள்ளதாக அறிகிறேன் .
"அன்றாட வாழ்க்கை சூழ்நிலையையும் தேவையையும் மையப்படுத்தியே அவர்களது கோரிக்கை அமையும். அப்படி ஆரம்பித்த அவர்களது கோரிக்கைகள் இன்று நிரந்தர மனுக்களாகிப ;போகின."---#######அவர்களின் கோரிக்கைகள் இன்றைய நிலையில் எப்படி மாறியுள்ளது என்பதை மிக சரியாய் பதிவு செய்துள்ளீர்கள் .
"எங்கெல்லாம் லயன் குடியிருப்பு காணப்படுகிறதோ அங்கெல்லாம் அபிவிருத்தி என்கின்ற ஒரு நிலைமை தோன்றும். அப்படியான ஒரு அபிவிருத்தியே ஒட்டுமொத்த மலையக மக்களுக்கானதாக அமையும். அரசாங்கத்திடம் முறையாக வேண்டுகோள் விடுப்பதன் மூலம், பேரம்பேசுதல் மூலம் தேவையெனில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் இந்தத் திட்டத்தை எப்படியேனும் நடைமறைக்குக் கொண்டு வரலாம்."----###### மேற்கண்ட வரிகளில் தேவையெனில் "அழுத்தம் கொடுப்பதன் " எப்படி அழுத்தம் கொடுக்க முடியும் ? எப்படி அழுத்தம் கொடுக்க போகிறீர்கள் ? "பேரம்பேசுதல் " இன்றைய அரசியல் சூழலில் யார் யாரிடம் " பேரம் பேச "முடியும் ? இந்த வார்த்தைகள் தெளிவில்லை குழப்பம் இருப்பதாகவே புலப்படுகிறது . இன்னும்சரியாய் ,அழுத்தமாய் "ஜனநாயக போராட்டங்கள் "மூலம் அழுத்தம் கொடுக்கலாம் ! என்று இருந்திருக்கவேண்டும் என நினைக்கிறன் . அதேவேளையில் " எப்படியேனும் " என்பது சரி இல்லை , கடந்த கால படிப்பினை நிறைய கற்று கொடுத்துள்ளது , அந்த வெளிச்சத்தில் நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கான விளக்கமும் நேரடியாய் சொல்லப்படவேண்டும் ! அது நம்மை மட்டுமல்ல .... நமது ஆதரவாளர்களையும் ஒன்றிணைக்கும் , சில வார்த்தையை கொண்டு நம்மை எவரும் தவறாக திசை திருப்பமுடியாது !
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்-! ------#### அதிகாரசுகம் கண்டவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ? சரியான மதிப்பீடு , சரியான ஆய்வு ....ஒரு சில வார்த்தைகளைத் தவிர முழுமையான புரிதல் ! மலையகத்தை எமக்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி தோழரே !

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates