Headlines News :
முகப்பு » » மலையக அரசியல் தலைவர்களுக்கு ஒரு மனம் திறந்த மடல்

மலையக அரசியல் தலைவர்களுக்கு ஒரு மனம் திறந்த மடல்


மலையக மக்கள் இருநூறு ஆண்டுகால வரலாற்றின் மக்கள். மலையக தேசத்தை உருவாக்கிய சிற்பிகள். வியர்வையே நமது முதலீடு. நாம் அடைந்தது என்ன?

இன்று வடக்கு கிழக்கு பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டு உலக நாடுகள் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் நிலையில் மலையக மக்கள் சர்வதேச அரங்கில் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள ஒரு துரதிஸ்டவசமான காலப்பகுதியில் மலையக அரசியல் தலைவர்களை நோக்கி பகிரங்க கடிதம் ஒன்றை எழுதுவதை மலையக சிவில் சமூகம் தமது தலையாய கடமையாக கருதுகிறது.

அதனால் மலையக சிவில் அமைப்புகளான மலையக சமூக ஆய்வு மையம், அடையாளம், மலையக பாட்டாளிகள் கழகம் ஆகியன மலையக தலைவர்களை நோக்கி காலத்தின் கட்டாயத்தில் திறந்த மடல் ஊடாக கேள்விக் கணைகளை தொடுக்கின்றன.

அறிமுகம்
பிரித்தானியர்களின் தேவைக்காக இந்தியாவில் இருந்து கூலித் தொழிலாளர்களாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலையக மக்கள் இன்று இலங்கையில் இருநூற்றாண்டு வரலாற்றுக்கு உரித்துடையவர்களாக மாறிவிட்டனர். ஆனால் மலையக மக்களை இன்னும் இந்திய வம்சாவழியினர் என்று அடையாளப்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்ளும் தலைவர்கள் சமூகத்தில் பொறுப்பான பதவி நிலைகளில் உள்ளமை கவலையளிக்கிறது.

அன்று பிரித்தானியர்கள் தங்களது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக பலவந்தமாக அழைத்துவரப்பட்ட மலையக தமிழர்களுக்கு அன்று பிரித்தானியர்களால் குதிரை கொட்டில் போன்ற லயன் வீட்டு வசதி வழங்கப்பட்டது. இருநூறாண்டுகள் கடந்துள்ள நிலையில் மலையக மக்கள் வாழும் தோட்டங்களில் அதே குதிரை கொட்டில் வடிவிலான லயன் குடியிருப்புக்கள் இருப்பதை காணும்போதும் துண்டு நிலம்கூட தங்களுக்கென சொந்தமாக இல்லாத நிலையை காணும்போதும் எம்மை அறியாமலேயே கண்ணீர் வடிகிறது.

மலையக மக்களின் அடையாளங்கள் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்டதனால் இன்னும் முழுமையான கல்வி, சுகாதார, பொருளாதார, வாழ்வாதார அடிப்படை வாழ்வுரிமைகளை அவர்கள் பெற்றுவிடவில்லை. இதற்கு காரணம் மலையக மக்களின் பிரச்சினைகள் அரசியல் அரங்கில் பேசுபொருளாக ஆக்கப்படாமையாகும்.

அதாவது மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய மற்றும் சர்வதேசமயப்படுத்தப்படாது மலையகத்திற்குள்ளேயே அரசியல் தலைவர்களால் புதைக்கப்பட்டமையாகும். இந்நிலைக்கு பல காரணங்கள் உள்ளன. அரசியல் கட்சிகள் அதன் தலைவர்களின் திறமின்மை, இடதுசாரி முற்போக்கு சிந்தனைவாத கட்சிகளின் செயற்பாடுகளின்மை, வலுவான சிவில் சமூக அமைப்பு இன்மை, இந்திய சவால்கள் என இன்னும் பலவற்றை கூறலாம்.

மலையக மக்களின் பிரச்சினைகள்
  • மாகாண சபைகள் போதிய அதிகாரங்களை கொண்டுள்ளனவா?
  • மாகாண சபை நிர்வாகத்தில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மலையக உறுப்பினர்களுக்கு இருக்கின்றதா?
  • மாகாண சபைகளின் அதிகார எல்லைக்குள் மலையக மக்களின் வாழ்விடங்கள் அமைகின்றனவா?
  • திட்டமிட்ட நில பறிப்பை மலையக அரசியல் தலைவர்களால் தடுக்க முடிந்ததா?
  • மலையகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் கட்டாய கருத்தடையை மலையக தலைவர்களால் தடுக்க முடிந்ததா?
  • மலையக மக்களுக்கு அவசியமான சுகாதார வசதிகளை மலையக அரசியல் தலைவர்களால் பெற்றுக் கொடுக்க முடிந்ததா?
  • 'மலையக கல்வி'யை வளப்படுத்த முடிந்ததா?
  • தமிழ் மொழியின் பாவனையை நிர்வாகத்தில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க முடிந்ததா?
  • மாகாண நிர்வாகம் மலையக மக்களுக்கு போதிய வேலைவாய்ப்புக்களை தருகிறதா?
  • பெருந்தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளை மலையக அரசியல் தலைவர்களால்; தடுக்க முடிகிறதா
  • தோட்டத் தொழிலாளர்களின் நாட்கூலியை மாதச் சம்பளமாக்க முடிந்ததா?
  • மலையக மக்களின் துணைப் பொருளாதாரமான சிறு விவசாயத்தைஃகால்நடை வளர்ப்பை; பாதுகாப்பு உள்ளதாக்க முடிந்ததா?
  • மலையக பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை மலையக மக்களின் கைகளுக்குள் கொண்டுவர முடிந்ததா?
  • மலையகத்தின் பல பகுதிகளில் மக்கள் சேறு கலந்த அசுத்தமான குடிநீரை பருகிவருகின்றனர்.
  • மலையக மண்வாசனை அப்படி இருப்பது போல சில மலையக மக்கள் கிராமங்களில் மண்ணெண்ணை வாசமும் நீடிக்கிறது காரணம் மின்சார வசதியில்லை.
  • கல்வி அறிவில் இன்னும் கடை வரிசையில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
  • மலையகத்தில் ஒரு தேசிய பாடசாலை இல்லை, நமக்கென்று ஒரு பல்கலைக்கழகம் இல்லை.
  • மலையக மக்கள் வாழ்கின்ற பத்துக்கு பத்து லயன் காம்பராவை உரிமை கோர முடியாது காணி உரிமை இல்லை.
  • மலையக இளைஞர் யுவதிகளை கொழும்பிற்கு வேலைக்கு அனுப்பாதிருக்க மலையகத்தில் தொழில் பேட்டைகளை ஆரம்பிக்கலாம் அதற்கான இயற்கை வளம், இடவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் அதனை பேரம்பேசி பெறுவதற்கு மலையக மக்களை உறவு கொண்டாடும் தலைமைத்துவங்களுக்கு வக்கில்லை.

 இப்படியாக மலையக மக்களின் பிரச்சினைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இது மனித உரிமை மீறல் இல்லையா? இன ஒடுக்குறை இல்லையா? இப்படி ஒரு சுழ்நிலையில்தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்தார். மலையக மக்களும் இலங்கையின் தேசிய இனம்தான்.

மலையக தேசியம்

'ஒரு தேசிய இனம் என்பது பொதுப் பிரதேசம், பொதுப் பொருளாதார வாழ்வு, பொது மொழி மற்றும் பொதுக் கலாசாரத்தில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும்' என அரசியல் அறிஞர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மலையக மக்களும் இலங்கை பிரஜைகள் ஆவர். மலையகம் எமது தாயகமாகும். மலையக மண்ணை வளப்படுத்தி செழிக்கச் செய்து இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் மலையக மக்களே ஆவர். ஆகவே அந்த மக்களுக்கும் அந்த மண் சொந்தமாக்கப்பட வேண்டும்.

மலையக மக்களின் அடிப்படை பொருளாதரம் என்பது பெருந்தோட்டத்துறை பொருளாதாரமாகும். மலையக மக்களே பெருந்தோட்ட பொருளாதாரத்தை உருவாக்கியவர்கள் என்பதற்கு அப்பால் அரசியல் மட்டத்தில் அவர்களுக்கு பேரம் பேசும் சக்தியையும் அது உருவாக்கிக் கொடுத்துள்ளது. 

மலையக மக்களின் மொழி தமிழ் மொழியாகும். அவர்களுக்கு நீண்ட வரலாற்று ரீதியாக வளர்ச்சி அடைந்த பண்பாடு, கலாசாரம் என்பவற்றை கொண்ட சமூகமாகும்.

மலையக தேசியம் குறித்து மலையக தலைவர்கள் எவரும் வாய் திறப்பதில்லை. காரணம் தேசியம் பற்றி பேசி போராட்ட அரசியல் செய்ய அவர்கள் விரும்பவில்லை. சரணாகதி அரசியல்தான் அவர்களின் இலக்கு. போராட்ட அரசியல் செய்வார்கள் என்று நம்பிக்கை வைத்திருந்த சிலரும் அதில் இருந்து விலகிச் செல்வதை காண முடிகிறது.

'மலையக மக்களை நாம் ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை தேசிய இனம் என்று எவரும் இன்னும் வரையரை செய்யவில்லை. உலகலாவிய தமிழ் மக்கள் கூட்டத்தில் மலையக மக்களை ஒரு சிறுபான்மை இனமாகவே நாம் பார்க்கிறோம். மலையக மக்கள் தேசிய இனமா என்பதற்கு எதிர்காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கொழும்பில் மலையக இளைஞர்களை சந்தித்த போது கூறியுள்ளார்.

மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட மனோ கணேசனின் இக்கருத்தை மலையக மக்களின் சிவில் அமைப்புகள் என்ற ரீதியில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மலையக மக்களும் இந்நாட்டின் தேசிய இனம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். வரலாற்றில் மலையக மக்களை தேசிய இனமாக அரசியல் சக்திகள் வரையரை செய்துள்ளன. மலையக மக்கள் இயக்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பவற்றை உதாரணமாகக் கூறிக் கொள்ள விரும்புகிறோம். மனோ கணேசன் மட்டுமல்ல மலையக மக்கள் இந்நாட்டின் தேசிய இனம் இல்லை என்று எவர் சொன்னாலும் அது வன்மையாகக் கண்டிக்கப்படும்.

மலையக தேசியத்திற்காக குரல் கொடுத்தால்தான் எமது உரிமைகள் எம்மை வந்தடையும் என நம்புகிறோம். இந்த கருத்தாடலை மலையக அரசியல் தலைவர்கள் தங்கள் கைகளில் ஆயுதமாக ஏந்தி உரிமை போராட்டத்தை ஜனநாயக ரீதியில் தொடங்க முன்வர வேண்டும். 

நவநீதம் பிள்ளையின் வருகை

மலையக மக்களுக்கு மேற்கண்டவாறு பிரச்சினைகள் மலைபோல் குவிந்து கிடக்கும் தருணத்தில்தான் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து ஆராய ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் கடந்த ஒகஸ்ட் 25ம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார். 

இலங்கையில் அவர் ஒருவாரகாலம் தங்கியிருந்தார். அக்காலகட்டத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய வட பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். மீறப்பட்ட மனித உரிமைகளை மக்களிடம் இருந்து முறைப்பாடாக கேட்டறிந்து கொண்டார்.

நவநீதம்பிள்ளை ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மனித உரிமைகள் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் சமூக பிரதிநிதிகள் என பல தரப்பினரை சந்தித்திருந்தார். இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகளை ஆராய்ந்து அது குறித்து ஐநா மனித உரிமை பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவித்துச் சென்றுள்ளார்.

நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகையும் மலையக அரசியல் தலைவர்களின் அக்கறையின்மையும்

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகம் என்பது எவரதும் தனிப்பட்ட நலன்களைப் பேணும் அமைப்பு அல்ல. அந்த அமைப்பின் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளில் வாழும் மக்களின் உரிமைகள் தொடர்பிலும் குரல் கொடுக்க வேண்டிய அதிகாரத்தை அது பெற்றுள்ளது. இலங்கையும் ஐநா மனித உரிமை சாசனங்களில் கைச்சாத்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கை மக்களின் உரிமைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பையும் கடப்பாட்டையும் ஐநா மனித உரிமைகள் ஆணையகம் கொண்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

நவநீதம்பிள்ளையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து வடக்கு கிழக்கு தமிழர்கள் பிரச்சினையை எடுத்து கூறியது. முஸ்லிம் மக்கள் பிரச்சினை குறித்தும் எடுத்துரைத்தது. கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படுவது குறித்தும் முறையிட்டது. ஆனால் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒன்றும் பேசியிருக்கவில்லை. மலையக மக்களுக்கென்று தலைவர்கள் இருக்கிறார்கள் தானே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்திருக்கக் கூடும். அல்லது மலையக மக்களை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் இருந்திருக்கலாம். அது மிகப்பெரிய தவறாகும். இலங்கை தமிழரசு கட்சி நீண்டகாலமாக பின்பற்றி வந்த மலையக மக்கள் பற்றிய அக்கறையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கணக்கிலெடுக்காமை கவலையளிக்கிறது.

முஸ்லிம்கள், சிங்களவர்கள்

அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக இருந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நவநீதம்பிள்ளையிடம் முஸ்லிம் மக்கள் உரிமை பிரச்சினை தொடர்பில் 43 பக்க அறிக்கையை சமர்பித்தது. மேலும் முஸ்லிம் மக்களின் சிவில் அமைப்பான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் முஸ்லிம் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கையை நவநீதம்பிள்ளையிடம் சமர்பித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே செய்திருந்தது.

இதேவேளை, நவநீதம்பிள்ளை இலங்கையில் இருந்தபோது சிங்கள அமைப்புக்கள் நவநீதம்பிள்ளையிடமும் வழங்குமாறு கூறி சிங்கள மக்களின் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றை இலங்கையில் உள்ள ஐநா தூதரகத்தில் கையளித்தன.

வடக்கு கிழக்கு தமிழர்கள், இலங்கை முஸ்லிம்கள், இலங்கை கிறிஸ்தவர்கள், இலங்கை சிங்களவர்கள் என இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களின் பிரச்சினைகள் குறித்தும் நவநீதம்பிள்ளைக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாகத் திகழும் பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்கள் எந்த நாட்டின் பிரஜைகள் என்ற கேள்வி எழுகிறது. மலையக மக்களுக்கு ஒரு உரிமை பிரச்சினைகூட இல்லையா? எல்லா துறைகளிலும் அவர்கள் தன்னிறைவு அடைந்துவிட்டார்கள் என்ற தோற்றப்பாட்டை மலையக தலைவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியுள்ளனர். இதனையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

இலங்கை வந்த நவநீதம்பிள்ளையை, மலையக மக்கள் பற்றி பேசும்அவர்களிடம் வாக்குபெறும், சந்தா பெறும் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏன் சந்திக்கவில்லை?

நவநீதம்பிள்ளையை சந்திக்க இவர்கள் இலங்கையில் உள்ள ஐநா அலுவலகத்தில் அனுமதி கோரினார்களா?

நவநீதம்பிள்ளையை சந்திக்க வாய்ப்பு பெற்ற கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ஊடாக மலையக மக்கள் பிரச்சினைகள் குறித்து மகஜர் ஒன்றையேனும் கையளித்தார்களா?

ஐநா மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்கும் தகுதியை இவர்கள் இழந்துள்ளார்களா?

மக்கள் நலன் எதற்கு தாம் வசதி வாய்ப்புடன் இருந்தால் போதும் என நினைக்கிறார்களா?

நவநீதம்பிள்ளையை சந்தித்தால் தங்களுடைய எஜமான்களின் முகங்கள் கறுத்துபோய்விடும் என அஞ்சுகிறார்களா?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

மலையக மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என மார்தட்டிக் கொள்ளும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நவநீதம்பிள்ளையை சந்திக்கவில்லை. அன்று மலையக மக்களுக்கு பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்க போராடிய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் போராட்ட எழுச்சி அரசியலில் வழிவந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களின் உரிமைகள் என்ன என்றே வாய்திறக்காமல் இருப்பது வருந்தத்தக்கது.

13ம் திருத்தச் சட்டத்தை இல்லாது செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளின்போதும், திவிநெகும சட்டமூலத்தின்போதும், ஜனநாயக விரோத 18ம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் இன்னோரன்ன சந்தர்ப்பங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாய் திறக்கவில்லை. அமைதியாக மௌனித்தே இருந்தனர். இதற்காகவா மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கின்றனர்?

இந்நிலையில், மலையகத்தின் எதனை எப்போது செய்ய வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்றாகவே அறிந்து புரிந்து செயற்படுகிறதென அதன் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இதனையே சொல்லி ஏமாற்றியது போதும் ஐயா என்றே அவருக்கு பதில் சொல்லம் தோன்றுகிறது. மேலும், நவநீதம்பிள்ளையின் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நிரலுக்குள் நுழைந்து குட்டையை குழப்புவதற்கு நாம் விரும்பவில்லை என்றும் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து மூலம் மலையகத்தில் அவர் மூத்த அரசியல்வாதியா என்ற கேள்வி எழவே செய்கிறது.

கெரளவ முத்து சிவலிங்கம் அவர்களே! வட கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் நவநீதம்பிள்ளையை சந்தித்ததால் நவநீதம்பிள்ளையின் குட்டை குழப்பப்பட்டுவிட்டதா? 'ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம்' என்று சொல்வார்கள் அதுபோல இருக்கிறது உங்களது கருத்து. மலையக மக்களின் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவராது உள்ளுக்குள்ளேயே மூடி மறைத்து அதற்கு தீர்வு தருகிறோம் என்று எல்லாத் தேர்தல் காலங்களிலும் உங்களால் மக்களை ஏமாற்றி பதவி ஆசனங்களை தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

எதிர்காலத்தில் மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திடம் கொண்டு செல்லப்படும் என நவநீதம்பிள்ளை இலங்கை வந்து திரும்பியதும் கூறும் முத்து சிவலிங்கம் அவர்களே! உணவு இன்றி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு கையில் இருந்த பழத்தை கொடுக்காது மரத்தில் ஏறி பழம் பறித்துக் கொடுப்பதாகக் கூறுகிறீர்களே இது நியாயமா? தர்மமா? உங்களை நீங்களே சுயக்கணிப்பீடு செய்து பாருங்கள். பெயருக்கு தலைவர் பதவி வகி;க்கும் நீங்கள் உங்களை ஆட்டிவைக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் மலையக மக்களின் வாழ்வாதார உரிமைப் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி நல்ல திட்டங்களை செயற்படுத்த முயற்சியுங்கள். இல்லாவிடின் நன்கு படித்து வளரும் மலையக சமூகம் தலைதூக்கும் போது நீங்கள் தலைகுனிய நேரும் என்பதை நினைவில் கொள்ளவும். 

தொழிலாளர் தேசிய சங்கம்

மலையக மக்களின் அதிக ஆதரவு கொண்ட தொழிற்சங்கம் என தொழிலாளர் தேசிய சங்கம் கூறிவருகிறது. தோட்டத் தொழிலாளியின் பிள்ளை என்பதால் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் மலையக மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிவேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் கூறிவருகிறார்.

எங்களை நாங்களே ஆழ வேண்டும். இந்தியாவிலிருந்து வந்தவர்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிடுகிறார். கௌரவ திகாம்பரம் அவர்களே! நம்மை நாமே ஆழ வேண்டும் என்றால் முதலில் நமக்கான வாழ்வுரிமைகள் அனைத்தும் கிடைத்துள்ளனவா என எண்ணிப்பார்க்க வேண்டும்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் அரசியல் பாசறையில் வளர்ந்த நீங்கள் எந்த தரப்பில் இருந்தாலும் அவர் வழியில் மலையக மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பீர்கள் என்று மலையக மக்கள், இளைஞர்கள் எண்ணினார்கள்.

ஆனால் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்து 10 வருடங்களுக்கு மேலாகியும் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையே ஏன்? ஏன் செய்யவில்லை என்று கேட்டால் அதிகாரம் இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படியானால் மாகாண சபை உறுப்பினர் பதவியும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் அதிகாரம் உள்ளதா?

வட கிழக்கு போன்று மலையகத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரம் தேவையில்லை. நுவரெலியா மக்கள் எல்லா இனங்களுடனும் சமாதானமாக வாழ்கிறார்கள் என்று சிங்கள தொலைகாட்சி விவாதம் ஒன்றில் கூறினீர்களே. அப்படி இருக்கையில் உங்களுக்கு எங்கிருந்து, எப்படி அதிகாரம் கிடைக்கும்?

மலையக மக்களின் காணி உரிமை, திட்டமிட்ட பேரின குடியேற்றம், தரிசு நில பறிப்பு போன்ற மலையக மக்கள் வாழ்வுரிமை பிரச்சினை குறித்து இதுவரை நீங்கள் பாராளுமன்றில் பேசியதில்லையே ஏன்?

நவநீதம்பிள்ளைக்கு மலையக மக்கள் பிரச்சினைகளை கொண்டு செல்வது குறித்தோ நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் குறித்தோ உங்கள் தொழிற்சங்கம், கட்சி சார்பில் உங்களுக்கு வாக்களித்த, உங்களை நம்பியுள்ள மக்களை தெளிவுபடுத்த ஒர் ஊடக அறிக்கைகூட வெளியிடவில்லையே ஏன்?

தொண்டமானிடம் இருந்து மலையகத்தை மீட்பதற்கு முன்னர் மேல்கூறப்பட்டவைகளை திகாம்பரமும் அவருடைய தொழிலாளர் தேசிய சங்கத்தில் உள்ள கற்றறிந்த மேதாதயர்களும் சிந்திக்க வேண்டும்.

ஜனநாயக மக்கள் முன்னணி

ஊடகங்களில், மேடைகளில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், கலந்துரையாடல்களில் மலையக, வட கிழக்கு, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பற்றி பேசும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும் தனது பேச்சை பேச்சோடு மாத்திரம் நிறுத்திக் கொண்டுள்ளமை கவலையளிக்கிறது. மறுபக்கம் 'பேச்சு பேச்சாக இருக்கனும்' என்று வடிவேல் சொல்லும் நகைச்சுவையும் நினைவுக்கு வந்;து செல்கிறது.

கொழும்பில் இருந்து கொண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எங்கு என்ன நடந்தாலும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் செல்கிறார்களோ இல்லையோ ஊடகங்களுக்கு மனோ கணேசனின் அறிக்கை சென்றுவிடுகிறது. ஊடகங்கள் அவருக்கு இப்படி ஒரு மதிப்பளிப்பதை அவர் தவறாக பயன்படுத்தி வருகிறாரோ என்ற சந்தேகம் தற்போது பலர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனை நியாயப்படுத்தும் முகமாகவே அவரது சில செயற்பாடுகளும் அமைந்துள்ளன.

மலையக மக்களின் உரிமை பற்றி பேசிய மனோ கணேசன் உலக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நிறுவனத்தில் ஆணையாளர் பதவியில் உள்ள நவநீதம்பிள்ளை இலங்கை வந்தபோது எங்கு சென்றிருந்தார்?

மறுமுனையில் நவநீதம்பிள்ளையிடம் மலையக மக்கள் பிரச்சினை கொண்டு செல்லப்படவில்லை என ஊடகங்களில் அறிக்கை விடுகிறார். அப்படியானால் மனோ கணேசன் யார்? அவர் மலையக மக்களின் தலைவர் இல்லையா?

மனோ கணேசனால் நவநீதம்பிள்ளையிடம் மலையக மக்கள் பிரச்சினையை கொண்டு சென்றிருக்க முடியாதா?

ஏனைய தலைவர்களைவிட சிவில் அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பு பேணி வருகிறவர் இவர்தானே? மற்றையவர்களைவிட அதிகம் கூட்டமைப்புடன் ஒட்டி உறவாடுபவரும் இவர்தானே?

கௌரவ மனோ கணேசன் அவர்களே! 'வடக்கில் பிரச்சாரம் செய்ய அண்ணன் மாவை சேனாதிராஜா அழைக்கிறார்' என்கிறீர்களே. மறுபக்கம் மலையக மக்கள் சார்பில் ஓரு கேள்வி இருக்கிறது. அதே மாவை சேனாதிராஜா உள்ளிட்;ட குழுவினர்தான் கொழும்பில் நவநீதம்பிள்ளையை சந்தித்தனர்.

அப்போது மாவை சேனாதிராஜாவின் குழுவில் ஒருவராகச் சென்று மலையக மக்கள் குறித்து நவநீதம்பிள்ளையிடம் எடுத்துக் கூறியிருக்க முடியாதா?

மாவை சேனாதிராஜாவிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி மலையக மக்கள் பற்றியும் நவநீதம்பிள்ளையிடம் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் எடுத்து கூறுங்கள் என கேட்டிருக்கலாம்.

மலையக மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வுரிமை பிரச்சினைகள் குறித்து மனு ஒன்றை தயாரித்து கூட்டமைப்பிடம் வழங்கி நவநீதம்;பிள்ளையிடம் கொடுக்கச் சொல்லியிருக்கலாம்.

கூட்டமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தால் நீங்கள் கறிவேப்பிள்ளையாக மாத்திரமே அவர்களால் பயன்படுத்தப்படுகிறீர்களா? என்ற கேள்வி எம்முள் எழுகிறது.  

உரிமை போராட்ட ஆர்ப்பாட்டங்களில் முதல் நகபராக பங்குபற்றியதை வைத்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் நவநீதம்பிள்ளையை சந்தித்த போது அவர்கள் மூலமாவது மலையக மக்கள் பிரச்சினையை நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கலாமே?

இவைகளை செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என மனோ கணேசன் கூறுவாராயின் அவருடன் நட்புறவு கொள்பவர்கள் அவரை எந்த நிலையில் வைத்திருக்கிறார்கள் என்பதை நினைத்து பார்த்துக் கொள்ள முடியும்.

வட கிழக்கு தேசியம் என்றால் உரத்து குரல் எழும்பும் நீங்கள் மலையக தேசியம் என்றவுடன் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போவது ஏன்?

பிரசல்ஸ் சென்றிருந்த போது நவநீதம்பிள்ளையை சந்தித்து மலையக மக்கள் பிரச்சினைகள் பற்றி எடுத்து கூறியதாக கொழும்பில் மலையக இளைஞர்கள் மத்தியில்; கூறியுள்ளீர்களே! அப்படி பேசியிருந்தால் அது தொடர்பில் ஊடகங்களில் ஏன் செய்தி வரவில்லை? நவநீதம்பிள்ளை ஏன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையக மக்கள் பிரச்சினை பற்றி நீங்கள் கூறியதாக வாய் திறக்கவில்லை?

தேர்தல் காலங்களில் தன்னை சுதாகரித்துக் கொள்ள மலையக இளைஞர்கள் மத்தியில் பொய் சொல்கிறீர்களா?

ஊடகங்களை பயன்படுத்தி பெயர்போடும் அரசியல் செய்யாது உண்மையான சமூக உணர்வை கொண்டு ஆக்கபூர்வ நடைமுறைச் சாத்திய செயற்பாட்டு அரசியலை நீங்கள் எப்போது தொடங்குவீர்கள்;?

மலையக மக்கள் சார்பில் உங்கள்; மீது நாங்கள் தொடுத்துள்ள கேள்விகளுக்கும் நாங்கள் வெறுமனே அறிக்கை மூலம் மாத்திரம் பதிலை எதிர்பார்க்கவில்லை என முன்கூட்டியே கூற விரும்புகிறோம். தயவு செய்து உங்கள் தமிழ் உணர்வை செயற்பாட்டு நடைமுறை சாத்தியமான அரசியலில் காண்பிக்கவும். அப்போதுதான் நீங்கள் குரல் கொடுப்பதில் உண்மை உள்ளதா என வெளிவுலகிற்கு தெரியவரும்.

ஐக்கிய தேசியக் கட்சி

ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பாதுகாப்பு அரண் என ஐக்கிய தேசியக் கட்சி தம்மை தாமே கூறிக் கொண்டாலும் வரலாற்றில் தமிழ் மக்கள் மீதும் மலையக மக்கள் மீதும் பொதுவாக ஒட்டுமொத்த மக்கள் மீதும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது நீங்கள்தான் என்பதை மலையக மக்கள் மறந்துவிடவில்லை.

எல்லா தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி தேடித் தந்த மலையக மக்களை ஐக்கிய தேசியக் கட்சி மறந்துவிட்டது. நவநீதம்பிள்ளையை சந்தித்த அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தானாக முன்வந்து மலையக மக்கள் பிரச்சினையை அவரிடம் எடுத்துச் சொல்வார் என்று நம்பினால் அது அசாத்தியமானதே. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ள, மலையக மக்களின் தலைவர்கள் என தங்களைக் கூறிக் கொள்ளும் ஆர்.யோகராஜன், கே.வேலாயுதம், எஸ்.சதாசிவம் போன்றவர்கள் தங்களது தலைவர் ஊடாக நவநீதம்பிள்ளையிடம் மலையக மக்கள் உரிமை பிரச்சினைகள் தொடர்பில் மகஜர் ஒன்றையாவது கையளித்திருக்கலாமே. ஆளும் கட்சியில் இருப்பவர்களை விமர்சனம் செய்யும் இவர்கள் எதிர்கட்சியில் இருந்து கொண்டு தங்களுக்கு வாக்களித்த மக்களின் உரிமை பற்றி பேச வேண்டியதை கடமையாகக் கொண்டிருக்க வேண்டாமா?

மலையக தேசிய முன்னணி

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோரன்ஸ்; மலையக தேசியம் மற்றும் மலையக மக்கள் உரிமை பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மேடைகளில் பேசுபவர். இவர்களின் தலைமையில் தற்போது தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள மலையக தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பில் மலையக மக்கள் பற்றி பேசும் ஜெய ஸ்ரீரங்கா தலைமையிலான பிரஜைகள் முன்னணி, பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, ஐயாதுரை தலைமையிலான தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட தொழிற்சங்க, கட்சிகள் இணைந்துள்ளன.

தங்களது கூட்டணிக்கு இவர்கள் மலையக தேசிய முன்னணி என பெயரிட்டுள்ளனர். உண்மையில் தேசியம் என்ற சொல்லில் தெளிவுகொண்டுதான் இவர்கள் பெயரிட்டார்களா என்ற சந்தேகம் எழுகிறது. காரணம் இந்த கூட்டணியில் உள்ள பிரபா கணேசன் தனது தேர்தல் ஊடக அறிக்கைகளில் மலையக மக்களை இந்திய வம்சாவளியினர் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுவதை அவதானித்திருக்கிறோம். எனவே கொள்கை அடிப்படையில் இவர்களிடம் முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறது.

மின்னல் நிக்ழ்ச்சியில் மலையக மக்களின் பிரச்சினைகளை பேசி அவர்கள் மனதில் இடம்பிடித்த ஜெய ஸ்ரீரங்காவும்கூட நவிபிள்ளையை சந்தித்து மலையக மக்கள் வாழ்வுரிமை பிரச்சினை பற்றி கூற முன்வரவில்லை. ஜெய ஸ்ரீரங்கா சார்ந்த ஊடக நிறுவனம் நவிபிள்ளையை சந்தித்த போதும்கூட ஸ்ரீரங்காவால் மலையக மக்கள் பிரச்சினையை ஊடகவியலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அவரது கவனத்திற்கு கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவரும் அதனை செய்யவில்லை. போகிற போக்கில் ஊடகம் ஊடாக அரசியல் செய்வதில் ஜெய ஸ்ரீரங்கா மனோ கணேசனை விஞ்சிவிடுவாரோ என்ற குழப்பமே மலையக மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

மலையக மக்கள் முன்னணி

ஆளும் கட்சியில் இருந்தாலும் எதிர்கட்சியில் இருந்தாலும் மலையக மக்களின் பிரச்சினைகளை அச்சமின்றி பாராளுமன்றில் பேசிய அமரர் பெரியசாமி சந்திரசேகரனால் உருவாக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணி தனித்துவம் என்ற பெயரில் கலப்படம் அடைந்துள்ளது. மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் போன்று மக்களின் உரிமைகள் பற்றி பேசுவதற்கு அவரின் பாரியார் திருமதி. சாந்தினி சந்திரசேகரனுக்கோ, கட்சியின் அரசியல்துறை தலைவர் வி.இராதாகிருஷ்ணனுக்கோ திராணியில்லாது போய்விட்டது.

இலங்கையில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து மலையக மக்களின் பிரச்சினை பற்றி பேசும் மலையக மக்கள் முன்னணி நவநீதம்பிள்ளை இலங்கை வந்தபோது எங்கு சென்று ஒழிந்து கொண்டதோ தெரியவில்லை? சிறிய மீன்பிடித்த மலையக மக்கள் முன்னணி திமிங்கிலம் கிடைத்தபோது அதனை கைநழுவ விட்டதேனோ

சிவில் அமைப்புக்கள்

மலையக மக்கள் பற்றி பேசும், பேசாத தலைவர்கள் அந்த மக்களின் அடிப்படை உரிமை பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர தவறியபோதும் இலங்கை வந்த நவநீதம்பிள்ளையை பாரிய சிரமங்களுக்கு மத்தியில் சந்தித்த மலையகத்தின் இரண்டு சிவில் குழுக்கள் மலையக மக்களின் ஒட்டுமொத்த வாழ்வுரிமை பிரச்சினையை அவரின் செவிகளுக்கு எட்டச் செய்துள்ளன. மலையக மக்கள் சார்பில் நவநீதம்பிள்ளையிடம் இரண்டு மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

மலையக மக்களின் வாக்குகளால் அதிகாரம் பெற்ற அரசியல் தலைவர்கள் இதனை செய்ய தவறிய நிலையில் சிவில் அமைப்புக்கள் இதனை வெற்றிகரமாக செய்து முடித்தமை மலையக தலைவர்களுக்கு நேரடி மூக்குடைப்பாகும்.

இம்மடலின் ஊடாக எந்தவொரு அரசியல் கட்சிகளையோ, சமூக அமைப்புக்களையோ, தனிநபர்களையோ சாடுவது எமது நோக்கமல்ல. மக்கள் அரசியலை செய்து மக்களோடு மக்களுக்காகவே இருங்கள் என்பது எமது வேண்டுகோள்.

மக்களின் சுதந்திர அரசியலில் நம்பிக்கை வைக்கும் மக்கள் செயற்பாட்டாளர்கள் மக்களை ஓரணியில் திரட்டுவோம். ஓன்றான நோக்கத்திற்காக செயற்படுவோம்.

'ஐக்கியமாய் எழுவோம். தேசியமாய் இணைவோம்.'

இப்படிக்கு,

ப. விஜயகுமார்
அடையாளம்

அருட்தந்தை மா. சத்திவேல்
மலையக சமூக ஆய்வு மையம்

அழகசுந்தரம் ஜெயகுமார்
மலையக பாட்டாளிகள் கழகம்  
Share this post :

+ comments + 2 comments

12:25 AM

அருமையான கருத்து.மலையகத்துக்கு நல்ல தலைமை இல்லை. சுயநலம் பிடித்த சொகுசு வாழ்கை வாழும் தலைமைகளால் பிரயோசனம் இல்லை. தூக்கி எறியப் பட வேண்டும். இதில் சொல்லப்பட்டுள கருத்துகள் யாவும் உண்மையே. கொழும்பில் இருந்து கொண்டு சுக வாழ்வு வாழ்பவர்களுக்கு மலையக மக்களின் உண்மை நிலை எப்படி தெரியும். மலையாக இளைஞர்கள் வீறு கொண்டு எழ வேண்டும்.

1:56 PM

மேலுள்ள கருத்துக்களில் விமர்சனங்கள் இருப்பினும் கூட நாளைய மலையகத்தைக் கட்டியெழுப்புவதற்கான காத்திரமான கருத்துக்கள் பரவலாக இடமபெற்றுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.காலத்திற்கு காலம் பண்பாட்டு அமைப்புக்கள் இவ்வாறு துண்டறிக்கைகளை வெளியிடுவதை அவதானிக்கலாம். அறிக்கைக்கு உரிமை கோரியுள்ள மூன்று அமைப்புக்களில் தற்போது மலையகத்தில் இளையவர்களை உள்வாங்கித் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிற அமைப்புகள் என அறியலாம்.நாம் தொடர்ச்சியாகவும் அந்த வகையில் இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து ஒரு அரசியல் கட்சியாக செயற்பட்டு அதனைப் பதிவு செய்து தமது அரசியல் நடவடிக்கைககளை மேற்கூறிய விவாதங்களை மையப்படுத்தி மேற்கொள்வார்களெனில் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் ஆவரது மலையக மக்கள் விமோசனம் அடைவார்கள் என்பது எனது தாழ்மையான அபிப்பராயம்.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates