Headlines News :
முகப்பு » , » வாய்க்கரிசி -மல்லியப்பு சந்தி திலகர்-

வாய்க்கரிசி -மல்லியப்பு சந்தி திலகர்-



அந்த தோட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் பொலீசாரால் நிறைக்கப்பட்டிருந்தது. அவர்கள் கைகளில் துப்பாக்கிகள். பலத்த பாதுகாப்பு. தோட்ட மக்கள் அன்று வேலைக்கு சென்றிருக்கவில்லை. வெள்ளைக் கொடிகளால் தோட்டம் முழுக்க சோகம் நிரம்பியிருந்தது. 

‘எத்தனை மணிக்கு மையத்த தூக்குறாங்களா?’ 

கேள்வி கேட்டவருக்கு பதில் சொல்ல யாருக்கும் தெரியவில்லை. 

‘கொஞ்சம் இருங்கப்பா குருசாமிய கொண்டுவாராங்களா…..அவன் வந்து அவங்க அம்மா மூஞ்ச பார்த்துட்டானா… ஒடனே எடுத்துற வேண்டியதுதான்…..’ 

என்று அப்பா ஆறுதல் சொன்னார்.

குருசாமி அண்ணனை எனக்கு சின்ன வயதிலிருந்தே தெரியும். நல்ல உயரம். சுருள் முடி. சுறுசுறுப்பாக இருப்பார்;. நாங்கள் தோட்டத்துக்கு வெளியே வடபகுதி இடமொன்றில் அப்பாவின் தொழில் நிமித்தமாக குடிபெயர்ந்திருந்தோம். குருசாமி அண்ணனும்; அதே ஊரில் பேக்கரி ஒன்றில் வேலை செய்தார்;. தோட்டத்துக்கு வெளியே தொலைதூரம் வந்த பின்பு தன் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஊரில் இருக்கிறார்கள் என கேள்விப்பட்டு எங்கள் வீடு தேடி வந்திருந்தார்;. அப்பா எப்போதும் அரவணைத்துப் போகும் சுபாவம் உள்ளவர். 

'சந்தோஷம் தம்பி, பக்கத்துல தானே வேலை செய்யுற. லீவு கெடைக்கிற நேரமெல்லாம் இந்தப் பக்கம் வந்துட்டுப் போ. தோட்டத்த வுட்டுட்டு ரொம்ப தூரம் வந்திருக்கிறோம். ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா நாலு வார்த்த பேசிக்கிட்டிருந்திட்டு போகலாம்….’’ 

அப்பாவின் அன்பு கட்டளையை ஏற்றுக்கொண்ட குருசாமி அண்ணன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்துபோவார்;.

குருசாமி அண்ணன் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதை நான் அதிகம் விரும்புவேன். நான் வீட்டில் சின்ன பையனாக இருந்ததால் வரும்போது எனக்கு அவர்; வேலை செய்யும் பேக்கரியில் இருந்து பனிஸ், ஸ்பன்ஜ், ரோஸ்ட்பாண் எல்லாம் கொண்டு வந்து தருவார்; என்பதுதான் என் விருப்பத்துக்குக் காரணம். 

குருசாமி அண்ணனின் பேச்சில் இருந்து அவர் பெரிதாக படிப்பு அறிவு உள்ளவரில்லை என்பது தெரியவரும். ஆனால் வாட்டசாட்டமாக இருப்பார். நன்றாக உடுத்துவார்;. நாலு விஷயங்களையும் பேசுவார்;. அப்பாவும் அவரும் பேசிக்கொள்கிற விஷயங்களை சும்மா பக்கத்தில் நின்று பார்த்தும், கேட்டும் கொண்டிருப்பேன். அவர்களது பேச்சில் எங்கள் தோட்டம் பற்றி நிறைய அடிபடும். தோட்டத்தை விட்டு வந்திருக்கிற சோகம் தெரியும். ஊரில் உள்ள ஒவ்வொருவர் பற்றியும் அவர்களின் குறைநிறைகளைப்பற்றியெல்லாம் அலசுவார்கள். எப்போதாவது லீவுக்கு தோட்டத்துக்கு போய்விட்டு வந்தால் அங்கிருந்து எங்களுக்கு தோட்டத்தில் பொலஸ்(காய்), சவசவக்காய், சேமன்கீரை, புளி(ச்சக்)கத்தரிக்காய், தேயிலை தூள் போன்றனவெல்லாம் கொண்டுவருவார்;. நாங்கள் இருந்த ஊரில் இந்த சாமான்களெல்லாம் கிடைக்காது. அன்றைய பேச்சுக்களில் தோட்டத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் பற்றி சுவாரஸியமான விஷயங்களையெல்hம் குருசாமி அண்ணன் சொல்லுவார். 

‘அத ஏன்ப்பா கேக்குறீங்க. ராமசாமி மகள இவன் சின்ன குமாரு கூட்டிக்கிட்டு ஓடிட்டான். அந்த கோபத்துல… ராமசாமி மகன் விஜயகுமாரு சின்ன குமாரருவுட்டு தங்கச்சிய கூட்டிக்கிட்டு போயிட்டான்…’ 

என்று குருசாமி அண்ணன் சொல்ல,

‘மொத்தத்துல்ல பொண்ணு குடுத்த பொண்ணு எடுத்துக்கிட்டாங்கன்னு சொல்லு…’ என்று அப்பா பதில் சொல்ல இருவரும் கலகலவென சிரிப்பார்கள். நானும் கூடவே.. காரணம் புரியாதபோதும்.

குருசாமி அண்ணன் எங்களுக்கு சொந்தம் கிடையாது. ஆனால் அவரும் அப்பாவை ‘அப்பா’ என்றுதான் அழைப்பார். தோட்டங்களில் உள்ள நல்ல பண்பாடுகளில் இதுவும் ஒன்று. உறவுக்காரர்களாக இல்லாத போதுகூட தோட்டத்தில் ஒருவரை ஒருவர் முறைசொல்லிதான் அழைத்துக்கொள்வார்கள். 

‘அவரை மாமானு கூப்பிடனும், இவங்கள அத்தைனு கூப்பிடனும், இவர அண்ணானுதான் கூப்பிடனும்….’ 

என அம்மாவும் எனக்கு அடிக்கடி உபதேசிப்பார். அதனால்;; நான் குருசாமியை ‘அண்ணன்’ என்றே அழைப்பதுண்டு.

காலத்தின் போக்கில் நாட்டு நடப்புகளும் மாறிப்போயின. அப்பாவுக்கும் உடம்புக்கு சரியில்லாமல் போக நாங்கள் மீண்டும் தோட்டத்துக்கே வந்து குடியேறிவிட்டோம். அப்பா முன்பு தாத்தா செய்த கங்காணி வேலையை செய்ய ஆரம்பிச்சுட்டார். நாட்கள் நகர்ந்தன. நான் வளர்ந்திருந்தேன்.

ஒரு நாள் காலையிலேயே வெளியே சென்ற அம்மா, வீட்டுக்குள் வந்து 

‘இங்கேருங்க…. நடுலயத்துல அழகம்மா அக்கா காலையில செத்துபோச்சாம்….. இப்பதான் பெரிய பாப்பா கண்டு சொல்லிட்டுப் போச்சு…’ 

என அப்பாவுக்கு சாவு சேதி சொன்னார் அம்மா. அப்பா அவசரமாக புறப்பட்டு சாவு வீட்டுக்கு போனார். அப்பா தோட்டக்கமிட்டித்தலைவர், கோயில் கமிட்டித்தலைவர் வேலையெல்லாம் செய்தவர். கங்காணியும் கூட என்பதால் தோட்டத்தில் இவர் பேச்சுக்கு மரியாதை இருக்கும். நாலுபேர் நாலு விஷங்களை கேட்க வருவார்கள். அப்பாவும் அவர்களுக்கு ஆலோசனை சொல்லுவார். ஏதேனும் கூட்டங்கள் நடந்தால் அப்பாவைத்தான் மேடையில் பேசவும் அழைப்பார்கள். 

செத்த வீட்டுக்கு போன அப்பா சற்று வெகமாக நடந்து வீட்டுக்கு திரும்பி வந்தார். கூடவே அழகர்சாமி அண்ணனும் வந்திருந்தார். அழகர்சாமி, செத்துப்போன அழகம்மா அம்மாவின் மூத்த மகன். இளைய மகன்தான் குருசாமி அண்ணன். 

‘இப்ப யோசிச்சுக்கிட்டிருந்து சரிவராது அழகர், நானும் வாரென். யூனியன் ஆபிசுக்கு போயிட்டு பிரதிநிதியையும் கூட்டிக்கிட்டு பொலிசுக்கு பொயி சொல்லுவோம். மத்தவங்கள இங்கின ஆக வேண்டிய காரியத்தை பார்க்கச் சொல்லு…. நாம பொலிசில கெடைக்கிற தகவலை வச்சு என்னைக்கு எடுக்கிறதுனு முடிவு பண்ணலாம்’

அப்பா தனது திட்டத்தை அழகர்சாமி அண்ணனிடம் சொல்ல அவரும்; ஆமோதித்து தலையாட்டினார். அவரது முகத்தில் இரண்டு கவலை. அம்மா இறந்து போனது ஒருபக்கம். தம்பிக்கு தகவல் சொல்லனுமே என்ற கவலை இன்னொரு பக்கம்.

பொலிசுக்கு போய் திரும்பி வந்த அப்பாவும் அழகர்சாமி அண்ணனும் தந்த சொன்ன சேதி நிச்சயமில்லாததாகவிருந்தது. 

‘எங்களால ஆன எல்லா முயற்சியும் எடுத்திருக்கிறோம். பொலிசிலயும் அவங்களால முடிஞ்ச அளவுக்கு ஒதவி பண்ணுறதா சொல்லியிருக்கிறாங்க. குருசாமிய ‘பூசா’வுல தான் வச்சிருக்கிறாங்களாம்…இங்க இருந்து தகவல்போயி அவனை கூட்டிக்கிட்டு வாரதா இருந்தா இரண்டு மூனு நாள் ஆகலாம். கேஸ் பெரிய விஷயங்கிறதுனால பெரிய எடங்கள்ல அனுமதி கெடைச்சாத்தான் கொண்டுவரலாமாம். மையத்த எப்ப எடுக்கிறது? குருசாமி வரும் வரைக்கும் வச்சிருக்கிறதானு நீங்க குடும்பக்காரங்க முடிவு பண்ணுங்க’ 

என ஒரே மூச்சாக அறிவித்துவிட்டு அப்பா பதிலை எதிர்பார்த்து நின்றார். 

‘என்னதான் இருந்தாலும் தம்பிக்கு அம்மாவுட்டு மூஞ்ச காட்டாம பொதைக்கிறது எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு அப்பா. தம்பி வந்து பார்த்தவுடனேயே எடுப்போம்.’ 

அழகர்சாமியண்ணனின் பதில் உருக்கமானதாக இருக்க அதுவே முடிவாக தீர்மானிக்கப்பட்டது.
மல்லியப்புசந்தி திலகர்

இப்போது சாவின் சோகம் திசை திரும்பியிருந்தது. இப்போது எல்லோரும் குருசாமியின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருநாள்…. இரண்டு நாள்… பொலிசுக்கு போவதும் வருவதுமாக இருந்தார்கள். தோட்டங்களில் வழமைபோல் செத்த வீடுகளில் நடக்கும் இரவு நேர ‘பைலா’ போடுற விஷயமெல்லாம் இந்த செத்த வீட்டில் இருக்கவில்லை. தோட்டமே குருசாமியின் வருகையை எதிர்பார்த்திருந்தது. ஆட்கள் வேலைக்கு போகிற எண்ணிக்கை குறைவாக இருந்தது. அப்படியே வேலைக்கு போகின்றவர்களும் திரும்பி வந்து செத்த வீட்டையே சூழ்ந்துகொண்டிருந்தார்கள். இப்போது நாலு நாளாகிவிட்டது… செத்த உடம்பு காய்ந்து நிறம் மாறியது… சற்று வாடை வீசவும் தொடங்கிவிட்டது… மீண்டும் அப்பாதான் ஆரம்பித்தார்… 

‘இப்போ என்ன பன்றது. அழகர், நீ சொன்ன மாதிரியே எல்லாம் ஏற்பாட்டையும் செய்தாச்சு. பொலிசுல இருந்து நமக்கு இன்னமும் நல்ல தகவல் ஒன்னு வரல. ஓங்க அம்மா செல்வாக்கா வாழ்ந்த ஆளு. அவங்க பேரு மட்டும் அழகம்மா இல்ல. உண்மையிலேயே அழகானவுங்க….. பொறுமைசாலி… அவங்கள இப்படி காயவச்சு கொண்டுபோயு பொதைக்கிறது அவ்வளவு நல்லதில்ல. நீ ஒரு நல்ல முடிவு சொல்லு…’ 

அப்பா பேச்சை முடிப்பதற்குள் அறைகுறை மனதோடு.. 

‘இன்னைக்கு மூனு மணிக்கு எடுத்திடலாம் அப்பா’ அதுக்குள்ள தம்பிய கொண்டுவாரது அந்த மாரியோட கையிலதான் இருக்கு. அவனுக்கு குடுத்து வச்சது அவ்வளவுதான்.’ 

என மாரியம்மன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு அழகர்சாமி அண்ணன் முதன்முதலாக கண்கலங்கினார். எல்லோருமே ஒருமுறை கண்களைத் துடைத்துக்கொண்டு ஆக வேண்டிய காரியங்களில் ஈடுபடத் தொடங்கினர். 

நேரம் இரண்டு மணியை நெருங்கியது. 

‘அப்புச்சி…. ஆக வேண்டிய வேலைகளை தொடங்குங்க…’ அப்பா, டோபி மாமாவுக்கு உத்தரவிட்டார். 

‘எங்கடா இவன்… பேச்சைவிட்டுட்டு இங்கவா. உன் காரியத்தை ஆரம்பி…’ 

பாபர் அண்ணன் பரமலிங்கத்துக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

காரியங்கள் ஆயின… 

“சொர்க்கம் சேர்…. வைகுந்தம் சேர்…. கைலாசம் சேர்…. அருணாச்…சலம் சேர்…..” அப்புச்சி அவர்பாட்டில் சொல்லிக்கொண்டிருக்க பெண்கள் அரிசியையும் சில்லறையையும் அள்ளி அழகம்மா அம்மா மீது தூவிசென்றார்கள். 

‘வாய்க்கரிசி போட வேற யாரும் பொம்பள ஆளுக இருக்கிறீங்களா? பெட்டிய மூடப்போறோம்… யாரும் இருந்தா வாங்க… ஆம்பள ஆளுங்க எல்லாம் காட்டுல போட்டுக்;கலாம்….’

பரமலிங்கம் அண்ணன்; உரத்துச்சத்தமிட்டார். 

நடுலயத்தின் நடுவே யார் நடந்தாலும் தெளிவாகத் தெரியும். இரண்டு பக்கமும் லயம். நடுவில மைதான அளவில் விசாலமான வாசல்; இரண்டு லயத்துக்கும் சேர்த்து. தபால்வேலை செய்யும் தருமலிங்கம் அந்த வாசலில் சற்று பதற்றத்துடன் நடந்து வந்தான். கையிலிருந்த பீடித்துண்டை மரியாதை கருதி வீசிவிட்டு அப்பா அருகே வந்து காதில் ஏதோ சொன்னான். அப்பா கோயில் லயம் பக்கமாக திரும்பி கைகள் இரண்டையும் மேலே தூக்கியவாறு கும்பிடு போட்டுக்கொண்டே சொன்னார்: 

‘மாரி கண்தொறந்துட்டா… அழகர்…. தம்பிய பொலிசு கூட்டிக்கிட்டு வருதாம்.. தோட்டத்து ஆபிசுக்கு தகவல் அனுப்பியிருக்காங்க… தலவாக்கலையை தாண்டிட்டாங்களாம்….’ 

பெட்டி மூடுவது ஒத்திவைக்கப்பட்டது. எல்லோரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். நடுலயத்தின் வாசலை மக்கள் தலைகொண்டு மறைத்திருந்தார்கள். கோடிப்பக்க மரக்கறித் தோட்ட கொய்யா மரங்களில் ஏறி சிறுவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். 

இரண்டு ஜீப் வண்டிகள் வந்தன. இருபது முப்பது பொலிசுகாரர்வரை ஆயுதங்களுடன் இறங்கினர். தோட்டத்தின் எல்லா மூலைகளிலும் துப்பாக்கிகள் சகிதம் காவலுக்கு நின்றனர். இன்னொரு ஜீப்வண்டி வந்தது. இரண்டுபக்கத்திலிருந்தும் துப்பாக்கிகளுடன் இராணுவ வீரர்கள் இருவர் இறங்கினர். கைகளில் மெஷின்கன். அப்போதுதான் அவ்வளவு உயர்ரக துப்பாக்கிகளை அருகிலிருந்து நானும் பார்க்கிறேன். ஒரு உயர் அதிகாரி கதவை திறக்குமாறு பணித்தார். ஜீப்பின் பின்கதவு திறக்கப்பட்டது. இரண்டு கையிலும் விலங்கிடப்பட்ட நிலையில் தாடியுடன் கறுப்பு நிற சட்டையணிந்து குருசாமி அண்ணன்;. என்னால் என் கண்களையே நம்பமுடியவில்லை. எனக்கு பனிஸ் கொண்டுவரும் அந்த கைகளா……! பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்….. நான் என்னையே கேள்வி கேட்டேன்… 

‘குருசாமி அண்ணன் என்ன குற்றம் செய்திருப்பார்?’ 

இதுவரை எழாத கேள்வி இப்போதுதான் என் தலைக்குத் தட்டியது…. ஆமிக்காரன் காதில் கேட்டுவிடாதபடி அப்பாவின் காதுகளில் கேட்டேன். 

‘அண்ணனை சந்தேகத்தின் பேருல கைது பண்ணியிருக்கிறாங்க….’என்றார். என்ன சந்தேகம்?... என்று கேட்டுவிடாத அளவுக்கு நான் பக்குவப்பட்டிருந்தேன்.

இரண்டு பக்கம் இராணுவ காவலுடன் அம்மாவின் முகம்பார்க்க பெட்டி அருகே வருகிறார் குருசாமி அண்ணன். எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு அவர் முகத்தைப்பார்க்கிறார்கள். அவர் அழவில்லை. முகத்தில் விரக்தி தெரிந்தது. மரணச்சடங்குகள் முடிவுற்றிருந்தன. மகன் செய்யும் கடமைகளை அழகர்சாமி அண்ணன் தலைப்பிள்ளை என்ற வகையில் பொறுப்பேற்றிருந்தார். ஏற்கனவே நீர்மாலையும் எடுத்தாயிற்று. சற்று யோசித்த அப்பா கற்பூரத்தட்டை எடுத்து 

‘அம்மாவுக்கு சூடம் காட்டு தம்;பி’ என கொடுத்தார். 

ஆவலுடன் கைநீட்டிய குருசாமி அண்ணனுக்கு தட்டை வாங்கும் வசதியிருக்கவில்லை. பொலிஸ் உயரதிகாரிக்கு தர்ம்சங்கட நிலை. எல்லோரும் ஒருவரையொருவர் பாரத்துக்கொண்டார்கள். அப்பா ஏதோ தவறு செய்துவிட்ட உணர்வோடு பார்த்தார். நிலைமையை உணர்ந்த இராணுவ உயரதிகாரி; அவரது கையாலேயே விலங்கினை திறந்துவிட்டார். கற்பூரத்தட்டை கையுயரத்துக்கு மேல் தூக்கிய குருசாமி அண்ணன் ‘அம்மா…’ என உரத்துச் சொல்லி சூடத்தை காண்பித்தார். அது அந்த மாரியம்மனுக்கே கேட்டிருக்க வேண்டும். அப்படியொரு அழுகையும் கண்ணீரும். அங்கு ஓராயிரம் கண்கள் குளமாயின. அந்த உயரதிகாரியும் தனது கைக்குட்டையை எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்டு மீண்டும் கைவிலங்கைப்பூட்டினார். புதைகுழிவரை போவதற்கு குருசாமி அண்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் வாய்க்கரிசி போடும் வாய்ப்பு குருசாமி அண்ணனுக்கு கிடைக்கவில்லை. அவரை மீண்டும் ஜீப்பில் ஏற்றினார்கள். அம்மாவை தோளில் ஏற்றினார்கள். ஜீப்கள் விரைந்து சென்றுவிட்டன. 

சுடுகாட்டில் ஆண்கள் நாங்கள் எல்லாம் வாய்க்கரிசி போட்டுக்கொண்டிருந்தோம். எனது கையிலும் ஒரு பிடி. குருசாமி அண்ணனை சிறுவயது முதல் அறிந்தவன் என்ற வகையில் நிச்சயமாக ஒன்றினை மனதில் நினைத்துக்கொண்டு அவருக்குமாய் சேர்த்து அழகம்மா அம்மாவின் மேல் அரிசியை தூவினேன். “அம்மா, உங்கள் மகனுக்கு பேக்கரியில் பாண் ‘சுடுவதையும்’ தாண்டிய அறிவு இருந்திருக்குமா….?” என எண்ணிக்கொண்டே…..

(முற்றும்) (கதை கற்பனை - கரு உண்மை)

(கதைக்களம் - மலையகத் தோட்டம், கதைக்காலம் 1989) எழுத்து : 2009

நன்றி - முச்சந்தி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates