Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

71 ஏப்ரல்! கிளர்ச்சி, எழுச்சி, வளர்ச்சி! - என்.சரவணன்

சோவியத் புரட்சியின் ஆரம்பம் அரோரா கப்பலின் பீரங்கிக் குண்டிலிருந்து ஆரம்பித்தது. 71 எழுச்சி வெல்லவாயவிலிருந்து ஆரம்பித்தது. 1818 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்ட அதே ஊவா பிரதேசத்தில் வெள்ளவாய போலிஸ் நிலையத்தின் மீது திட்டமிடப்பட்டபடி அந்தத் தாக்குதல் 1971 ஏப்ரல் 5 அன்று ஆரம்பமானது.

சுதந்திர இலங்கையின் முதலாவது ஆயுதப் போராட்டம் அது. இலங்கையின் வரலாற்றில் வடக்கிலும் தெற்கிலும் ஆயுதப் போராட்டத்துக்கு தள்ளப்பட்ட இரு தரப்பினரும் அரச பயங்கரவாத போக்கின் அடாவடித்தனங்களில் இருந்து பிறந்தவை. 

ஜனநாயக வெளியில் கிடைக்கிற அரசியல் அவகாசத்துக்குள் அரசியல் செயற்பாடுகளை செய்யவிடாது இயக்கங்களைத் தடை செய்தததன் விளைவே இரகசிய தலைமறைவு அரசியலுக்குள் நிர்ப்பந்திக்கப்பட்ட அரசியலாகும். ஜேவிபி 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடத்திய மாபெரும் கூட்டத்தைக் கண்டு பயந்தது சிறிமா அரசாங்கம். அக்கூட்டத்தில் ஜேவிபியின் தலைவர் ரோகண விஜேவீர ஐந்து மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஆற்றிய உரை அக்கூட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. அது ஒரு வரலாற்று சிறப்பம்சம் கொண்ட உரை. இந்த கூட்டம் நடத்தப்பட்டு 20 நாட்களில் அதாவது மார்ச் 16ஆம் திகதி சிறிமாவோ அரசாங்கம் ஜேவிபி மீதான தடையை பிரகடனப்படுத்தியது.

சிறிமா அரசு தடை செய்ததன் விளைவு 71' ஏப்ரல் கிளர்ச்சி. அதுபோல 1983 கலவரங்களுக்கு ஜேவிபியே பொறுப்பு என்று குற்றம்சுமத்தி ஜேவிபியை  தடை செய்து தலைமறைவுக்கு தள்ளியதன் விளைவு 87-89 கிளர்ச்சிகள்.

71ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சி இலங்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஓரிரவில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்ற  எடுக்கப்பட்ட முயற்சி அது. இளைஞர்கள் பலர் மோசமாக அரச பயங்கரவாதத்தால் படுகொலைசெய்யப்பட்ட அக்கிளர்ச்சி நிகழ்ந்து நேற்றைய தினத்துடன் 54 ஆண்டுகளை எட்டிவிட்டன. 

பாம்பரிய இடதுசாரிகளின் வீழ்ச்சி 

ஒரு குறிப்பிட்ட காலம் வரை இலங்கையின் வரலாற்றில் முற்போக்கு பாத்திரம் வகித்து வந்த இடதுசாரிகட்சிகள் ஒரு காலக்­கட்டத்தின் பின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை காரணிகளாலும் துண்டு துண்டாக பிளவுபட்டன. ஆளும்கட்சிகளோடு சேர்ந்து கரைந்தே போயின. 

1960இல் இறுதிக்காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்டிரு­ந்த வேலையில்லாத் திண்டாட்டப் பெருக்கம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, விவசாயிகளின் வருமானத் தேக்கம், சம்பளக் குறைப்பு போன்ற உடனடிக்காரணங்கள் அரசை எதிர்த்து நிற்கின்ற அணியினை உருவாக்கியது. இவ்வணிக்கு ஜே.வி.பி. தலைமை கொடுத்தது.


ஜே.வி.பி.யின் உருவாக்கம் 

சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 1966இல் ரோஹண விஜேவீர உள்ளிட்ட குழுவினர் வெளியேற்றப்பட்டனர். ஏற்கெனவே அக்கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கம்யூனிஸ்ட் மாணவர் பிரிவை கட்டியெழுப்பி அதனை தலைமை தாங்கி நடத்தி வந்த விஜேவீர, அம்மாணவர் பிரிவில் அங்கம் வகித்த இளைஞர்களைக் கொண்டு கட்சிக்கும் தெரியாமல் இரகசிய அரசியல் வேலைகளில் ஈடுபட்டார். குறிப்பாக அரசியல் கலந்துரையாடல் நடத்தச் சென்ற இடங்களில் பண்ணைகளை அமைத்தார். பின்னொரு காலத்தில் ஆயுதங்களை அங்கு களஞ்சியப்படுத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையை கட்சித் தலைமை அறிந்தது. இதனால் விஜேவீரவுக்கும் சண்முகதாசனுக்குமிடையில் கருத்து மோதல் ஏற்பட்டு இறுதியில் விஜேவீரவின் அரசியல் பணிகள் கட்சிக்குள் தடைசெய்யப்பட்டதுடன் முழுநேர ஊழியத்திலிருந்தும் விலக்கப்பட்டார். இறுதியில் கட்சியின் அனுமதியின்றி, 1966 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி டட்லி-செல்வா உடன்படிக்கைக்கு எதிராக ஊர்வலத்தில் கலந்து கொண்டதன் காரணமாக கட்சியிலிருந்து விஜேவீர விலக்கப்பட்டார். 

விலக்கப்பட்ட விஜேவீர தன்னுடன் கட்சியிலிருந்த தோழர்கள் சிலரையும் இணைத்துக்கொண்டு 1967இல் ஜே.வி.பி.யை (மக்கள் விடுதலை முன்னணியை) உருவாக்கினார். 


ஏனைய இடதுசாரிக் கட்சிகளோடு ஒப்பிடும் போது ஆயுதப் போராட்டத்தை முற்றாக ஜே.வி.பி. மட்டுமே அங்கீகரித்தது. ஆயுதப் போராட்டமின்றி தமது இலக்கை அடைய முடியாது என்பதை ”அரசியல் வகுப்புகள் 5” மூலமாக இளைஞர்களுக்கு ஊட்டியது. அரசியல் வகுப்பை முடித்த இளைஞர்களுக்கு முதற் கட்டமாக உடற்பயிற்சி வழங்கப்பட்டது. 1969 காலப்பகுதியில் ஆயுத சேகரிப்பில் ஈடுபடும்படி முன்னணி உறுப்பினர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. 

இதே காலப்பகுதியில் ஏனைய பாராளுமன்ற இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி போன்றவை ஜே.வி.பி.யை காட்டிக் கொடுக்கத் தொடங்கின. குறிப்பாக அக்கட்சிகளின் பத்திரிகைக்கு ஊடாக ஜே.வி.பி.யின் இரகசிய செயற்பாடுகள் பகிரங்கப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து அப்போதைய டட்லி அரசாங்கம், ”சேகுவரா பியுரோ” (Chegura Bureau) எனும் பெயரில் ஜே.வி.பி.யைக் கண்காணிப்பதற்காக விசேட பிரிவொன்றை உருவாக்கியது. இப்பிரிவின் செயற்பாடுகள் காரணமாக பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இடப்பட்டார்கள். தலைமறைவாக இருந்த விஜேவீரவும் 1970 மே மாதத்தில் கைது செய்யப்பட்டார். அதே மாதம் நடந்த பொதுத் தேர்தலின் மூலம் ஆட்சியும் மாறியது. 


ஒடுக்குவதற்கான தயாரிப்புகள்

ஸ்ரீ.ல.சு.கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்தது. இவ் ஐக்கிய முன்னணியில் கம்யூனிஸ்ட் கட்சி ,லங்கா சமசமாஜக் கட்சி கூட்டு சேர்ந்திருந்ததையும் இங்கே கவனிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து யூலையில் விஜேவீர விடுதலை செய்யப்பட்டார். விஜேவீரவின் விடுதலையால் ஜே.வி.பி.யின் நடவடிக்கைகள் விரிவடைந்தன. இரகசிய வேலைகளுக்கு முன்னுரிமை அளித்த அதே வேளை பகிரங்க அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதாக கட்சி முடிவெடுத்தது. கட்சியின் அரசியல் கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டபோது அதில் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக மக்கள் பெருந்தொகையாக கலந்து கொண்டார்கள்.

ஜே.வி.பி.யின் வளர்ச்சி குறித்து ஆளும் கட்சி கலக்கமுற்றது. அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த இரத்தினவேல் ”சேகுவாரா இயக்கம் அரசின் பிரதான எதிரியாக தலை தூக்கியுள்ளது. அதனை ஈவிரக்கம் இன்றி கலைத்து அழித்தொழிக்க வேண்டும். அதற்கேதுவாக சட்டதிட்டங்கள் கொண்டு வருவதில் அரசு கவனம்செலுத்த வேண்டும்” என 1970 ஒகஸ்டில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து (அவசரகால சட்டத்தின் கீழ்) மரண பரிசோதனையின்றி சடலங்களை எரிப்பதற்கான சட்டத்திருத்தம் உடனடியாக கொண்டுவரப்பட்டது.

பாரிய அடக்கு முறைக்கான ஆயத்தங்களை அரசு செய்து வருவதை இனம் கண்ட ஜே.வி.பி, ஆயுத சேகரிப்பு வேலைகளையும் துரிதப்படுத்தியது. வெடி குண்டு தயாரிப்புக்கான தீர்மானத்தையும் அரசியல் குழு எடுத்தது. வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு நாட்டில் ஏனைய பகுதிகளுக்கும் ஜே.வி.பி. விநியோகித்தது.


புரட்சியும் எதிர்ப்புரட்சியும் 

1971 ஜனவரியில் விஜேவீர தொடர்ச்சியாக நாடு பூராவுமுள்ள மாவட்ட கமிட்டி முழு கூட்டத்தில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் ஒன்றையொன்று எதிர் நோக்கியுள்ள தருணம் இதுவென்றும் மார்ச் மாத இறுதியில் உறுப்பினர்களை ஆயுதபாணிகாளாக்கும் வேலைகளைப் பூரணப்படுத்தும் படியும் கூறினார். தான் அடுத்ததாக அரச அதிகாரத்தை கைப்பற்றுவது பற்றி பேச வருவதாகவும் கூறிச் சென்றார். 

1971 பெப், 27ம் திகதி ஹைட்பார்க்கில் நடத்தப்பட்ட பகிரங்கக் கூட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதப் போரெச்சரிக்கை விடப்பட்டது. மார்ச் 13ம் திகதி விஜேவீர கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு விட்டார். 1971 மார்ச் 16ம் திகதி நாடு முழுவதும் அவசரக்காலச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்தபடி தாக்குதலுக்கான தீர்மானத்தை எடுக்கும் படி விஜேவீரவிடமிருந்து தகவல் அனுப்பப்பட்டது. அதன்படி மத்தியக்குழு (அப்போது முரண்பட்டு இருந்த தரப்பும் கூட்டாகச் சேர்ந்து ) ஏப்ரல் 5ம் திகதி விடியற்காலை 11.30க்கு நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் தீர்மானத்தை எடுத்தது. ஆனால் அத்தீர்மானம் 5ஆம் திகதி இரவு தாக்குதலை ஆரம்பிப்பதென மாற்றப்பட்டது.

ஆனால் அத் தீர்மானம் மாற்றப்பட்ட தகவல் மொனறாகலைக்கு போய்ச் சேரவில்லை. எனவே தான் ஏப்.5ம் திகதி 5.20க்கு மொனறாகலை-வெல்லவாய பொலிஸ் நிலையம் முதலில் தாக்கப்பட்டது. இது ஒரே நேரத்தில் நாடு பூராவும் உள்ள பொலிஸ் நிலையங்களை தாக்கும் திட்டத்தை குழப்பியது. இதற்கிடையில் தாக்குதல் பற்றி அறிந்த பாதுகாப்புப் படையினர் உசாராயினர். ஏப்.5ம் திகதி 92 பொலிஸ் நிலையங்கள் கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டன. பல பொலிஸ் நிலையங்களை கைவிட்டு விட்டு பொலிஸார் பின்வாங்கினர். இக்கிளர்ச்சியை எதிர்கொள்ள பலமில்லாத நிலையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் உலக நாடுகளிடம் உதவி கோரியது. 


அடக்குமுறை 

இவ்வேண்டுகோளைத் தொடர்ந்து சிங்கப்பூர் விமான நிலையத்தில் நிலை கொண்டிருந்த பிரித்தானிய படையினர் பெருமளவு ஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் அனுப்பினர். 18 யுத்த பீரங்கிகளையும் 6 ஹெலிகப்டர்களையும் அமெரிக்கா வழங்கியது. எகிப்தும் பெருந்தொகையான ஆயுதங்களை வழங்கியது. இந்தியா விமான ஓட்டிகள் உள்ளிட்ட 7 விமானங்களையும் பெருமளவு ஆயுதங்களையும் 159 கூர்க்கா படைகளையும் அனுப்பியது. சோவியத் யூனியன் அன்டோனோவ் எனப்படும் இராட்சத விமானங்களையும் மிக்-15 ரக விமானம் ஒன்றையும் இரு ஹெலிகப்டர்களையும் சிறந்த விமான ஓட்டிகளையும் அனுப்பியது. 

எந்தவித ஈவிரக்கமுமின்றி 15,000 தொடக்கம் 20,000 வரையிலான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 40,000த்துக்கும் மேற்பட்டோர் பிடிக்கப்பட்டு சிறைச்சாலைக்கும் வதை முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர். கிளர்ச்சி அடக்கப்பட்டது. கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் மீதான விசாரணையை 1972 யூனிலிரு­ந்து 1974 டிசம்பர் வரை விசேட ஆணைக்குழு மேற்கொண்டது. விசாரணையின் முடிவில் விஜேவீர உள்ளிட்ட பலர் சிறைத் தண்டனை பெற்றனர்.

மீளுருவாக்கம். 

தண்டனை அனுபவித்து வந்தவர்களில் மூன்று பிரிவினர் இருந்தனர். அமைப்பைக் காட்டிக் கொடுத்துவிட்டு அரசியலில் இருந்து முற்றாக வெளியேறியவர்கள், தம்மால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சரியான பதில் கிடைக்காத நிலையில் மாற்று அரசியல் ஸ்தாபனத்தை கட்டியெழுப்புவதாகக் கூறி வெளியேறியவர்கள். எஞ்சிய மிகச் சொற்பமான சிலர் தத்துவார்த்த கருத்தாடலில் ஈடுபட்டு வந்தார்கள். மூன்றாவது தரப்பினர் ஜே.வி.பி.யின் அரசியலில் எந்தத் தவறுமில்லை என்ற கருத்துடையோரும், ஒருசில விடயங்களை திருத்திக் கொண்டு முன்செல்லலாம் என்ற கருத்து­டையோரும் அடங்கிய குழு. இக்குழுவே பின்னர் விஜேவீர தலைமையில் ஜே.வி.பி.யை மீளக் கட்டியெழுப்பியது. ஜே.வி.பி. சிறைக்குள்ளேயே மீளுருவாக்கம் பெற்றது. 

1977 முற்பகுதியில் பொதுத் தேர்தல் நெருங்கியதால் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜே.வி.பி. யினர் பலர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை அடைந்ததுமே ஜே.வி.பி. முதல் தடவையாக சட்டபூர்வமாக அரசியல் ஸ்தாபனமாக இயங்கத் தொடங்கியது. பதிவு செய்யப்படாததன் காரணமாக 1977ல் பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டது.

1979 உள்ளூராட்சி தேர்தலின் போது அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயற்சித்த போதும் அது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத் தேர்தலிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டது. 1981 மாவட்ட சபைத் தேர்தலிலும், 1982 ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டது. ஜனாதிபதி தேர்தலின்போது ஜே.வி.பி. அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அத்தேர்தலின் மூன்றாவது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியாக ஜே.வி.பி. திகழ்ந்தது. ஜே.வி.பி.யின் இவ்வளர்ச்சியானது ஆளும் ஐ.தே.க.வை கலக்கமடையச் செய்த விடயமாக அமைந்தது ஆனாலும் இத் தேர்தலின் மூலம் ஜே.வி.பி.யின் பலத்தின் அதிகரிப்பை காண முடிந்ததே ஒழிய அதிகார பிரதிநிதித்துவம் வளர்ச்சி காணவில்லை. 

தடையும் தலைமறைவும் 

1983 மே தின கூட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தி விஜேவீர உரையாற்றியிருந்தார். 1983 யூலைக் கலவரத்தைத் தூண்டி தலைமையேற்று நடத்திய அன்றைய ஆளும் ஐ.தே.கட்சி அக்கலவரத்தின் பழியை ஜே.வி.பி. மீதும் ஏனைய இடதுசாரி கட்சிகள் மீதும் சுமத்தியது. 1983 யூலை 30 ம் திகதி ஜே.வி.பி, கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜக் கட்சி ஆகிய மூன்றையும் 83 கலவரத்துக்கு காரணமெனக் குற்றம் சுமதி ஐ.தே.க அரசாங்கம் தடைசெய்தது. இத்தடையின் காரணமாக ஜே.வி.பி.யை தலைமறைவு அரசியலுக்குத் தள்ளியது.


இந்நியாயமற்ற தடையை நீக்கும் படி ஜனாதிபதி உட்பட சர்வதேச ஸ்தாபனங்கள் பலவற்றுக்கு வேண்டுதல் விடுக்கப்பட்ட போதும் அது சாத்தியமற்றுப் போனது. தலைமறைவு அரசியல் தற்காப்புக்கான தேவையையும் ஏற்படுத்தியது. அரசியல் அழுத்தங்களை பகிரங்கமாக செலுத்த வாய்ப்பில்லாத நிலையில் ஆயுத ரீதியான செயல்களுக்கும் வித்திட்டது. கிடைத்த தலைமறைவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆயுதப் பயிற்சி, துப்பாக்கிகள், குண்டுகள் தயாரித்தல், ஆயுத சேகரிப்பு என்பவற்றில் ஈடுபட்டது. அரசியல் வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தியது. 

வடக்கு கிழக்கு பிரச்சினை காரணமாக இராணுவத்தை விஸ்தரிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்ட போது அத்தருணத்தைப் பயன்படுத்தி அமைப்பின் உறுப்பினர்களை இராணுவத்திற்குள் ஊடுருவ விட்டது. இதற்கூடாக இராணுவ பயிற்சியையே ஜே.வி.பி. பிரதான நோக்காக கொண்டிருந்தது. ஆயுத சேகரிப்புக்காக சில படை முகாம் மீதும் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. 1987ல் இலங்கை-இந்திய உடன்படிக்கையும் அதனைத் தொடர்ந்து வந்த இந்திய அமைதி காக்கும் படையையும் ஜே.வி.பி. வன்மையாக எதிர்த்தது. அதனை இந்திய விஸ்தரிப்புவாதத்தின் போக்காகக் கருதியது. தமது இராணுவ நடவடிக்கைகாக அன்று தேச பக்த மக்கள் இயக்கம் (D.J.V.P.) என்ற ஒன்றை ஜே.வி.பி. உருவாக்கியது. அதில் வேறு சில அரசியல் ஸ்தாபனங்களும் இணைந்திருந்தன. D.J.V.P. யின் பேரில் ஆயுத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததை தக்க சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கம், (ஜே.ஆர், ஜே.ஆரைத் தொடர்ந்து பிரேமதாசா) அதே D.J.V.P. பேரில் அரசியல் படுகொலைகளைப் புரிந்தது. இப்படுகொலைகள் பற்றிய விபரங்கள் பட்டலந்த ஆணைக்குழு விசாரணைகளின் போது பல உண்மைகள் அம்பலமாகின.


மீண்டும் வன்முறை 

1987-1989 காலப்பகுதியில் ஜே.வி.பி. பயங்கரவாதம் என்னும் பெயரில் ஏறத்தாள ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் டயர்களுக்கும், ஆறுகளுக்கும், புதைகுழிகளுக்கும் பலியாகினர். அரசாங்க தகவல்களின் படி 60,000 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர் என்றே கூறப்படுகின்றது. பலர் வதைபுரியப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். 1989ல் விஜேவீரவும் பிடிக்கப்பட்டு கொலை செய்யபட்டார். மோசமான முறையில் ஒடுக்கப்பட்ட ஜே.வி.பி. மீள எழப்போவதில்லை எனப் பலர் எதிர்ப்பார்த்தனர். ஆனால் 90களின் ஆரம்பத்தில் பலர் விடுதலையாகி வந்ததும் கட்சி புனரமைக்க­ப்பட்டது. மீண்டும் பகிரங்க அரசியல் பணிகளைத் தொடங்கினர். 

மீண்டும் மீளுருவாக்கம் 

நாடெங்கிலும் சந்திரிக்கா அலையும் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தங்களும் நடந்து கொண்டிருந்தன. ஜே.வி.பி.யும் இலங்கை முற்போக்கு முன்னணியும் இணைந்து தேச மீட்பு முன்னணியை கட்டியெழுப்பின. இலங்கை முற்போக்கு முன்னணியின் பேரில் தேர்தலிலும் இறங்கியது. ஒரு உறுப்பினர் பதவியையும் வென்றெடுத்­தது. 1994 நவம்பர் ஜனாதிபதி தேர்தலிலும் தமது வேட்பாளரையும் நிறுத்தியது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்காகவே தாம் அத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையும் நீக்குவதாக சந்திரிகா வாக்குறுதி அளித்தால் தாம் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாகவும் தெரிவித்தது. சந்திரிகா தாம் பதவிக்கு வந்தால் 1995 ஆம் ஆண்டு யூன் 15 ம் திகதிக்கு முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதாக வாக்குறுதி அளித்தார். இதனால் ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளர் நிஹால் கலப்பத்தி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

1997 உள்ளூராட்சித் தேர்தலில் 101 உறுப்பினர்களை வென்றது. 98 மாகாண சபைத் தேர்தலில் 25 உறுப்பினர்களை வென்றது. 2000 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தேர்தலில் 10 உறுப்பினர்களை வென்றது. 2001 தேர்தலில் அது 16 ஆக உயர்ந்தது. 2004 ஆம் ஆண்டு அது 39 ஆக உயர்ந்தது. 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கூட்டு சேர்ந்து போட்டியிட்டதில் 4 உறுப்பினர்களை மட்டுமே வெல்ல நேரிட்டது. கட்சிப் பிளவைத் தொடர்ந்து பலவீனமடைந்திருந்த நிலையில் 2015 தேர்தலில் 6 உறுப்பினர்களாக ஆனது. 2020 தேர்தலிலும் 3ஆக அது குறைந்தது. ஆனால் நான்கே ஆண்டுகளில் மீண்டும் மக்கள் சக்தியாக எழுந்து ஜாந்திபதித் தேர்தலிலும் வென்று பாராளுமன்றத் தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று 22 மாவட்டங்களில் 21 மாவட்டங்களை வென்று மொத்தம் 152 ஆசனங்களை வென்றது.


அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக 71 ஏப்ரலிலும் 87-89 இலும் கொடுக்கப்பட்ட விலைக்கு இன்று உரிய வெற்றி கிடைத்திருக்கிறது. 71 ஆயுதக் கிளர்ச்சியிலிருந்து ஜனநாயகப் பாதை வரையான கடினமான பயணம் பல வடுக்களைக் கொண்டது. பல தவறுகளையும் கொண்டது. பல சாதனைகளையும் கொண்டது. ஆனால் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் வெளியில் அதற்கேயுரிய அமைப்பை ஏற்றுக்கொண்டு லட்சிய மாற்றங்களை நிகழ்த்துவதன் சவால்களை இன்றைய ஜேவிபி அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது.

"கஜபாகு கப்பல் அரோராவாக ஆகட்டும்! எடலின் சதுக்கம் ஒரு பெட்ரோகார்ட் முகாமாக ஆகட்டும்!"

என்று அன்று ஹைட்பார்க் மைதானத்தில் ஆற்றிய ஆக்ரோஷம் நிறைந்த விஜேவேரவின் உரை ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கான அறைகூவல். அந்த பிரபலமான உரை ஏப்ரல் எழுச்சிக்கான பலமான வித்து. 

நன்றி - தினகரன் 06.04.2025

மகாவம்சம் எவ்வாறு உலக மரபுரிமையானது? - என்.சரவணன்

உலகிலேயே தொடர்ச்சியாக வரலாற்றைப் பதிவு செய்துவரும் இரு முதன்மை நாடுகளில் இலங்கையும் ஒன்று. முதல் நாடாக சீனாவைக் குறிப்பிடலாம் சுமார் மூவாயிரத்துக்கு அதிகமான ஆண்டுகளாக சீன இவ்வாறு வரலாற்றைப் பதிவு செய்து வருகிறது. இலங்கை 2500 வருடகாலமாக வரலாற்றைப் பாரம்பரியமாகப் பதிவு செய்துவரும் நாடாக இலங்கை திகழ்கிறது. 

அப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன மகாவம்ச ஓலைச்சுவடிகளை ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் ஒரு உலக மரபுரிமையாக 2023ஆம் ஆண்டு அறிவித்தது.

இதற்கான விண்ணப்பம் இலங்கை அரசால் தேசிய நூலக சேவைகள் சபைக்கு ஊடாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்டிருந்தது. அதனை பரிசீலித்த யுனெஸ்கோ நிறுவனத்தின் சர்வதேச நடுவர்கள் மகாவம்சத்தை உலக மரபுரிமையாக அங்கீகரித்து பிரகடனப்படுத்தினார்கள்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான மகாவம்சம் இப்போது அந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கி.பி. 1849ல்  குடியேற்ற நாடுகளுக்குப் பொறுப்பு வகித்த எமர்சன் டெனன்ட் (James Emerson Tennent) இலங்கையைப் பற்றிய முக்கிய நூல்களை எழுதியவர். Ceylon An Account of the Island என்கிற நூலில் இலங்கையைப் பற்றி மிக முக்கியமான இரண்டு விஷயங்களை அவர் சுட்டிக் காட்டினார். அவர் "சிங்களவர்கள் தான் உலகில் தங்கள் வரலாற்றை தொடர்ச்சியாக எழுதி வருகிறார்கள்" என்று அந்நூலில் கூறுகிறார். அடுத்ததாக, நீர்ப்பாசன தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஒரு சமூகம் உண்டென்றால் அது சிங்களவர்களாகத்தான் இருக்கும் என்றும் அந்த நூலில் அவர் குறிப்பிடுகிறார்.   

இலங்கையின் வரலாற்றை உறுதிப்படுத்தும் பிரதான நூல் மகாவம்சமாகும். மகாவம்சத்தின் முதலாவது பிரதி கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு உரியது. அதுவே இன்று நம்மிடம் உள்ள மிகப் பழமையான வரலாற்றுச் சான்றாகும். மகாவம்சத்தை எழுதுவதற்கு மூலாதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டதாக அதில் சில மூல நூல்கள் குறிப்பிடபடுகிற போதும் அவை அனைத்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மகாவம்சமே நமக்கு கிடைக்கிற பிரதான பழமையான நூலாக கொள்ளப்படுகிறது. “வம்ச” கதைகளை பதிகிற மரபொன்று அனுராதபுர ராஜ்ஜிய காலத்தில் இருந்திருக்கிறது. மகாவம்சம் எழுதப்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தீபவம்சம் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. இது அனுராதபுர கால பிக்குகளால் எழுதப்பட்ட இலங்கையின் வரலாற்றை உள்ளடக்கிய ஒரு நூலாகும். ஆனால் மகாவம்சம் தரும் விபரங்கள் அளவுக்கு அதில் இல்லை. 

மகாவம்சம் எழுதப்படுவதற்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் இன்னுமொரு மகாவம்சம் எழுதப்பட்டிருப்பதாக பல பதிவுகள் உள்ளன. அதை 'சிஹல அத்த கதா மகாவம்சய' என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அவற்றின் பிரதிகள் எதுவும் இதுவரை கிடைத்ததில்லை. ஆனால், அநுராதபுரம் திக்சந்த பிரிவெனாவில் வசித்து வந்த மகாநாம தேரர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் மகாவம்சத்தை எழுதியபோது ‘சிஹல அத்த கதா மகாவம்சம்’ பயன்படுத்தப்பட்டதாக மகாவம்ச உரையில் (Tika) குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் அதிலும் மகாவம்சம் அளவுக்கு விபரங்கள் கிடையாது.

மகாவம்சம் எழுதப்பட்ட அதே காலப்பகுதியில் அபயகிரி விகாரையைச் சேர்ந்த பிக்குகளால் “உத்தர வங்ச கதா” என்கிற ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. மகாவம்சத்தை எழுதும் போது மகாநாம தேரர் இதையும் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அதுவும் இதுவரை கிடைத்ததில்லை.

இலங்கையின் புராதன ஓலைச்சுவடிகள் பல காலனித்துவ காலத்தில் பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. போர்த்துக்கல், ஒல்லாந்து, ஜெர்மன், இங்கிலாந்து, டென்மார்க் உள்ளிட்ட இன்னும் சில நாடுகளில் இன்றும் இலங்கையில் கூட இல்லாத இலங்கையின் முக்கிய வரலாற்று ஆவணங்களாக கருதக் கூடிய ஓலைச்சுவடிகள் அங்குள்ள அருங்காட்சியகங்களில் உள்ளன. 

பொலன்னறுவை காலத்தில் கலிங்க மாகன் ஆட்சி செய்த போது, பாரிய அளவிலான ஓலைச்சுவடிகளின் கட்டுக்களை அவிழ்த்து அனைத்தையும் தீயிட்டு அழித்தான் என்கிற செய்தி உண்டு. அச்சம்பவத்தின் மூலமும் ஏராளமான வரலாற்று ஆவணங்களை இழந்திருக்கிறோம். 

மகாவம்சம் எந்த மொழியில் எழுத்தப்பட்டது என்பது பற்றிய குழப்பங்களை இன்றும் சில இடங்களில் காண்கிறோம். மகாநாம தேரர் அதனை பாளி மொழி உச்சாடனத்தை சிங்கள எழுத்துக்களைப் பயன்படுத்தி  எழுதினார் என்பதையே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மகாநாம தேரர் எழுதிய மகாவம்ச மூலப் பிரதிகள் இதுவரை கிடைத்ததில்லை. பிற்காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான மகாவம்ச பிரதிகள்; அந்த மூலப்பிரதியிலிருந்து பிரதி பண்ணப்பட்ட பிரதிகளே. அவ்வாறு படியெடுக்கப்பட்ட மிகப் பழமையான மற்றும் முழுமையான ஓலைச்சுவடியே தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருப்பதாக இனங்காணப்பட்டு அது உலக மரபுரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.   

இலங்கையில் உள்ள மகாவம்சத்தில் 2915 பாலி மொழி செய்யுள்கள் உள்ளன. 12ஆம் நூற்றாண்டில் பொலன்னறுவை மன்னன் பராக்கிரமபாகு மன்னனின் மகளை கம்போடிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். அப்போது இலங்கையில் மகாவம்சத்தின் பிரதி ஒன்று கம்போடியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அந்நாட்டு நாட்டு மொழியில் அது எழுதப்பட்டது. இந்த மகாவம்சம் 'கம்போடிய மகாவம்சம்' என்றும் விட்டாரிக்க மகாவம்சம் என்றும் அழைக்கப்படுகிறது.  இதில் 5772 செய்யுள்கள் உள்ளன. இதற்குக் காரணம் வெவ்வேறு காலங்களில் அந்த மகாவம்சப் பிரதியில் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிற விபரங்கள் எனலாம்.   

தற்போது இலங்கையில் காணப்படும் மிகப் பழமையான மகாவம்ச பிரதிகள் எனப்படுவது இரண்டாவது தொகுதியையும் உள்ளடக்கிய முதலாவது அத்தியாயத்திலிருந்து 99 வரையிலான பகுதியாகும். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மகாவம்சத்தின் வெவ்வேறு ஏழு பிரதிகள் உள்ளன, அவற்றில் ஒன்று மிகப் பழமையான மகாவம்சமாக உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த மகாவம்சமே உலக மரபுரிமையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மகாவம்ச நூல் மிகத் தெளிவாக ஓலைச்சுவடிகளை எழுதுவதில் தேர்ச்சிபெற்ற ஒரு மகாதேரர் ஒருவரே அப்போது நகலெடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதைச்  செய்ய அவருக்கு சுமார் 15-20 ஆண்டுகள் எடுத்திருக்கும் என்று கருதக் கூடிய அளவுக்கு மிகவும் நுட்பமாக இது எழுதப்பட்டிருக்கிற பிரதி இது.

மகாநாம தேரருக்குப் பின்னர் மகாவம்சம் எழுதும் மரபு தொடர்ச்சியாக பேணப்பட்டு வந்திருக்கிறது. 1956 இல் அது அரசாங்கத்தின் பணியாக பொறுப்பேற்கப்பட்டு கலாசார அமைச்சினால் மகாவம்ச உருவாக்க பணியகம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ச்சியாக அது எழுதப்பட்டு வருகிறது.

மகாவம்சப் பிரதியின் நம்பகத் தன்மை குறித்த கேள்விகள் பல இருந்தபோதும் மறுபுறம் அதில் உள்ள விபரங்களே வரலாற்றை மீள் கண்டுபிடிப்பதற்கும் உறுதுணையாக பிற்காலத்தில் இருந்திருக்கிறது. இலங்கையிலும், இந்தியாவிலும் நடத்தப்பட்ட தொல்லியல் ஆராய்ச்சிகளின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மகாவம்சமானது தெற்காசியாவில் ஒரு முக்கியமான வரலாற்று ஆதாரமாகும், புத்தர், அசோக சக்கரவர்த்தி, புத்த மதம் என உலகம் மதம் என பல விபரங்களை தென்னாசிய வரலாற்றுக்குத் தந்திருக்கிறது. இலங்கையர்கள் பெரும்பாலும் அதை தமது தேசத்தின் தோற்றம், பரிணாமம், என்பவற்றின் பிரதிபலிப்பாகவும் பண்பாட்டு அடையாளத்திற்கான சான்றாகவும் கருதுகிறார்கள்.

இலங்கையில் பௌத்த பண்பாட்டு மரபில் பௌத்த துறவிகளின் அன்றாடப் பணிகளாக தியானம், வாசிப்பு, எழுத்து போன்றவையே பிரதானமாக இருந்திருக்கின்றன. எனவே எழுதுதல், ஓலைச்சுவடிகளை பிரதி செய்து பரப்புதல் அதனைப் பேணிப் பாதுகாத்தல் என்பனவும் அவர்களின் கடமைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.  

இலங்கையின் வரலாற்றுக் காலத்தில் இலக்கியங்களை பனையோலைகளில் பதிவு செய்கின்ற பாரம்பரியமே நீடித்து வந்திருக்கிறது. ஆனால் பனையோலைச் சுவடியொன்றின் ஆயுட்காலம் அதிகபட்சம் 500 அல்லது 600 ஆண்டுகளே. பனையோலைச் சுவடிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை வழிவழியாக பல தடவைகள் பல நகல்களை எடுத்து ஏனைய பௌத்த ஆறாமயக்களுக்கும், விகாரைகளுக்கும் அனுப்பப்பட்டன. அதாவது இன்றுள்ள அச்சடித்து விநியோகிப்பது போன்ற பணி. இப்படியான மரபொன்று இருந்ததனாலேயே இலங்கையில் இன்றும் ஆயிரக்கணக்கான சிங்கள இலக்கியங்கள் எஞ்சியுள்ளன. மகாவம்சமும் அவ்வாறு கிடைக்கப்பெற்றவை தான்.

இன்றும் தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற பல பண்டைய தமிழ் இலக்கியங்கள் இவ்வாறு பௌத்த, சமண, ஜைன துறவிகளால் எழுதப்பட்டு, பிரதி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டவையே. இலங்கையில் ஏன் இலக்கியங்கள், வரலாறுகள் தமிழில் சிங்களத்துக்கு நிகராக கிடைக்கவில்லை என்பதற்கான உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

எனவே, கி.பி 5 ஆம் நூற்றாண்டில் எழுதத் தொடங்கப்பட்ட மகாவம்சத்தின் பல பிரதிகள், இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள புத்த விகாரைகளிலும், அருங்காட்சியகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் இன்னும் தப்பிப்பிழைத்து பாதுகாக்கப்படுகின்றன. அந்த வகையில் யுனெஸ்கோவுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஓலைச்சுவடிகள், மகாவம்சத்தின் அனைத்து அத்தியாயங்களையும் மற்றும் அனைத்து செய்யுள்களையும் முழுமையான, சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளில் ஒன்றாகும். இவை ஒன்றரை ஆயிரம் ஆண்டுகளாக; உரையை நகலெடுத்து மீண்டும் நகலெடுக்கும் தொடர்ச்சியான பாரம்பரியத்தின் மூலம் தப்பிப்பிழைத்துள்ளது. இவ்வோலைச்சுவடி, கே.டி.சோமதாசா நூலகராகப் பணியாற்றிய காலகட்டத்தில் (1964 - 1970) ஆராய்ச்சிக்காகவும் காப்பக நோக்கங்களுக்காகவும் வரலாற்று கையெழுத்துப் பிரதிகளைச் சேகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தால் கையகப்படுத்தப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம்

“மகாவம்சம்” மூல நூல் இலங்கையின் பண்டைய இதிகாசம் தொடக்கம் கி.பி 301 வரையான மாகாசேனன் மன்னரின் காலப்பகுதிவரை மகாநாம தேரரால் எழுதப்பட்டது. அதுமுதல் 36 அத்தியாங்களைக் கொண்டது. 37வது அத்தியாயத்தை அவர் எழுதிக்கொண்டிருக்கும் மகாநாம தேரர் போது மரணமாகிவிட்டார். அது 50 செய்யுள்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் “அத்தியாயம் நிறைவுற்றது” என்று குறிப்பிட்ட அவர் 37வது அத்தியாயத்தில் அப்படி குறிப்பிடாததால் அவர் அந்த அத்தியாயத்தை முடிக்கவில்லை என்றும் தொடரவிருந்தார் என்றும் பல ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.

2வது தொகுதி கி.பி  301 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரையான காலப்பகுதியைப் பதிவு செய்கிறது. அது மூன்று பாகங்களைக் கொண்டது.

1. முதலாவது பாகம் - மன்னர் கித்சிரிமேவன் அரசரின் காலம் தொடக்கம் மகாபராக்கிரமபாகுவின் காலம் (302-1186) வரையான 884 ஆண்டுகளைப் பதிவு செய்கிறது. மொத்தம் 42 அத்தியாயங்களைக் கொண்டது அது.

2. இரண்டாவது பாகம் – 1186-1357 வரையான விஜயபாகு மன்னர் காலத்திலிருந்து ஸ்ரீ ஐந்தாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலம் வரை 171 வருட காலத்தைப் பதிவு செய்கிறது.

3. மூன்றாவது பாகம் – 1357-1815 வரையான விஜயபாகு மன்னர் காலத்திலிருந்து ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் காலப்பகுதிவரை 441ஆண்டுகளைப் பதிவு செய்கிறது. ஆட்சி முழுமையாக அந்நியர் கைகளில் சிக்கும் வரையான காலப்பகுதி இது.

மகாவம்சம் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கத்திய அறிஞர்களினதும் பொது வாசகர்களின் கவனத்திற்கும் முதன்முதலில் வந்தபோது, மகாவம்சம் குறித்த ஆர்வம் பரவலாக எழுந்தது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் சிவில் அதிகாரியாக இருந்தவரும் வரலாற்றாசிரியருமான ஜோர்ஜ் டேர்னர் தென்னிலங்கையில் உள்ள முல்கிரிகலவில் அமைந்திருந்த ஒரு புத்த விகாரையிலிருந்து மகாவம்சத்தின் (முதல் பகுதி) பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளைக் கண்டுபிடித்தார். இலங்கையின் பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகத்தின் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன், அக்கையெழுத்துப் பிரதியை ஐரோப்பாவிற்கு வெளியீட்டிற்காக அனுப்பினார். யூஜின் பர்னூஃப் ஆரம்பத்தில் ரோமானியமயமாக்கப்பட்ட ஒலிபெயர்ப்பை உருவாக்கி பின்னர் அதை 1826 இல் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். ஆனால் இவை ஒப்பீட்டளவில் சிறிய கவனத்தையே பெற்றன.

பின்னர் கண்டெடுக்கப்பட்ட மூல கையெழுத்துப் பிரதிகளிலிருந்து பணியாற்றி, எட்வர்ட் உப்ஹாம் 1833 இல் ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார். ஆனால் அந்த மொழிபெயர்ப்பு விளக்கத்தில் பல பிழைகள் காணப்பட்டன. எனவே முதலில் அச்சிடப்பட்ட பதிப்பாகவும் பரவலாக வாசிக்கப்பட்ட ஆங்கிலம் மொழிபெயர்ப்பு பிரதியானது 1837 ஆம் ஆண்டு ஜார்ஜ் டேர்னர் வெளியிட்ட பிரதியே.

வெளிநாட்டு பெற்றோர்களுக்கு பிள்ளையாக யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜோர்ஜ் டர்னர் 1811 இல் இங்கிலாந்தில் மேற்கல்விக்காக சென்று அவர் 1820 இல் இலங்கை திரும்பும்போது இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் வசமாகியிருந்தது. அவர் இலங்கை திரும்பியதும் ஒரு சிவில் அதிகாரியாக பதவியேற்றார். ஆங்கிலேயர்களால் அப்போது கண்டி கைப்பற்றப்பட்ட்பின்னர் அப்பிரதேசத்தைப் பரிபாலிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களில் ஒருவராக டர்னர் சில காலம் கடமையாற்றினார். பின்னர் அவர் சப்பிரகமுவாவுக்கு அரசாங்க அதிபராக நியமனம் பெற்றார். அங்கு பணியாற்றியபோது அவர் முழுமூச்சாக பாளி, சிங்களம் ஆகிய மொழிகளைக் கற்றார். அதன் பின்னர் கண்டி அரசாங் ஆதிபராக பொறுப்பேற்றார். அங்கிருந்தபோது மகாவம்சத்தின் முதலாவது தொகுதியைக் கண்டெடுத்து அவற்றைத் தொகுத்து அதன் செய்யுள் தொகுதியாக கொள்ளப்படும் வங்சத்தப்பகாசினி தொகுதிகளையும் சேகரித்துக்கொண்டு அவற்றை ஒழுங்ககமைத்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பணியை மேற்கொண்டார். அது முதலாவது தடவை 1836 ஆம் ஆண்டு கோட்டை கிறிஸ்தவ அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதன்போது அவருக்கு கண்டி அஸ்கிரிய மகாவிகாரையைச் சேர்ந்த பிக்குமார் ஒத்துழைத்திருக்கின்றனர். இதே காலத்தில் அவர் மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியையும் மொழிபெயர்க்க முயற்சித்த போதும் அவருக்கு அன்று இருந்த பாளி மொழிப் புலமை போதாது என உணர்ந்துகொண்டார்.

1866 இல் பட்டுவந்துடாவே ஸ்ரீ தேவரக்சித்த பண்டிதர் மகாவம்சத்தின் இரண்டாம் பாகத்தை தொகுத்து வெளியிட 1871 ஆம் ஆண்டு அன்றைய தேசாதிபதி ரொபின்சன் ஆதரவளித்தார். தேசாதிபதியின் அனுமதியும் ஆதரவும் இருந்தபோதும் அவர் அதே ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததால் இந்தப் பணிக்கு இடையூறு ஏற்பட்டது. ஆனால் 1872 இல் புதிய தேசாதிபதியாக நியமனமான கிரகெரி டர்னரின் மகாவம்சப் பிரதியைப் பார்த்து வியந்ததுடன் இரண்டாம் தொகுதியை மொழிபெயர்க்கும் பணியை 1874 இல் ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரரிடமும், பட்டுவந்துடாவே ஸ்ரீ தேவ ரக்சித்த பண்டிதரிடமும் ஒப்படைத்தார்.

இவர்கள் இருவரும் இதற்கான மூல நூல்களைத் தொகுப்பதற்காக சத்கோறளை ரிதி விகாரை, செங்கடகல நுவர, கிருவாயே முல்கிரிய, மாத்தறை, காலி, பெந்தோட்டை, பாணந்துறை, சல்பிடிகோறளை போன்ற பிரதேசங்களில் இருந்த புராதன விகாரைகளில் பாதுகாக்கப்பட்டுவந்த பதினோரு மகாவம்சப் பிரதிகளை கண்டுபிடித்தனர். அவற்றை அவர்கள் முறையாக சரிபார்த்து தொகுத்து சிங்களத்துக்கு மொழிபெயர்த்து இரண்டாம் பாகமாக வெளியிட்டதுடன், அவர்கள் டர்னர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த மகாவம்சத்தின் முதலாம் பாகத்தையும் ஆங்கிலத்திலிருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்த்து முடித்தனர். ஆக மகாவம்சத்தின் முதலாவது தொகுதியும், இரண்டாவது தொகுதியும் ஒரே காலத்தில் சிங்களத்தில் முதன்முதலில் வெளியானது.

மகாவம்சத்தின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு 1905 ஆம் ஆண்டு “தீபவம்சம், மகாவம்சம்” (Depavamsa und Mahavamsa) என்கிற தலைப்பில் வெளிவந்தது. அப்பிரதியை ஆங்கிலத்தில் முதற் தடவை மொழிபெயர்த்தவர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமியின் மனைவி எதேல் குமாரசுவாமி. 1908 ஆண்டு அப்பதிப்பு  வெளிவந்தது. துரதிர்ஷ்டவசமாக மகாவம்சத்தின் ஆக்கவரலாறு பற்றி பேசுபவர்கள் எவருமே எதேல் குமாரசுவாமியை பதிவு செய்ய மறந்துவிடுகிறார்கள்.

5ஆம் நூற்றாண்டில் மகாவம்சம் எழுதப்பட்டபோதும் அது அதற்கு முன்னைய சுமார் பத்து நூற்றாண்டு கால வரலாற்றைப் பதிவு செய்கிறது. அதற்கான மூலாதரங்களாக அதற்கும் முந்திய தீபவம்சம் போன்ற வரலாற்று ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்படிப் பாருக்கும் போது முறிவடையாமல் தொடர்ச்சியாக தலைமுறை தலைமுறையாக எழுதப்பட்டு வந்த வரலாற்று மரபுக்கு சான்றாக இலங்கை இருந்து வருகிறது.

பௌத்த மதப் பரவல், இலங்கையில் புத்தரின் வகிபாகம், அசோகனின் பணிகள், இலங்கை அரசர்கள் பௌத்தத்துக்கு ஆரிய பங்களிப்பு என்பன பதிவு பெற்றிருப்பதால் மகாவம்சம் பௌத்த செல்வாக்குள்ள ஆசிய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது. இதன் காரணமாக இந்த நாடுகளிலும் மகாவம்சம் மொழிபெயர்க்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மகாவம்சத்தை மேலும் விரிவாக்கி இலங்கையில் கூட இல்லாத மேலதிக தகவல்களுடன் கம்போடியாவில் வெளியான ஒரு மகாவம்சம் கூட உண்டு. அதற்கு “கம்போடிய மகாவம்சம்” என்று அழைக்கிறார்கள்.

"உலகின் மிக நீண்ட – இடையறாத வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றான மகாவம்சம் ஒரு முதிர்ச்சியடைந்த வரலாற்று மரபைத் தொடக்கி, கி.மு.  6 ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையின் வரலாற்றை காலவரிசைப்படி  தந்திருக்கிறது. தெற்காசியாவில் அத்தகைய முதலாவது வரலாற்றுப் பதிவாக அது திகழ்கிறது.” என்று உலக மரபுரிமையாக மகாவம்சத்தை யுனெஸ்கோ 2023 இல் பிரகடனப்படுத்திய போது அறிவித்தது.

எவ்வாறிருந்த போதும் இங்கு “மூலப்பிரதி” என்கிற ஒன்று கிடையாது என்கிற முடிவுக்கே வர முடியும். முழுமையானது என்று எதுவும் இல்லை. திரிபு இல்லாதது எதுவும் இல்லை ஈற்றில் உண்மையானது என்றும் ஒன்று இல்லை.

ஆனால் மகாவம்சம் ஈழத்தீவில் இன்றும் பெரும் அரசியலை நிகழ்த்தி வருகிறது.

நன்றி - தினகரன். 30.04.2025

புத்தனின் ஆக்கிரமிப்பு : புத்த உருவ வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் - என்.சரவணன்

தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதைப் பற்றி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கடந்த பெப்ரவரி 21 அன்று உரையாற்றியிருந்தார்.

மதவாதம் மற்றும் இனவாதம் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும், அப்பிரதேச மக்களின் உண்மையான அபிலாஷைகளுடனேயே இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென்றும் சில குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இக்கட்சிகள் இத்தகைய நிலைமைகளை அரசியல் பிரச்சினைகளாக மாற்றி வருவதாகவும் தெரிவித்தார்

குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனவாதமும், மதவாதமும் மீளெழுச்சியடைய அனுமதிக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.

இத்தகைய கருத்துக்களை பொத்தம்பொதுவாக இரு தரப்பும் தமக்கானது என்றோ, தமக்கு எதிரானதென்றோ எடுத்தும்கொள்ளும் வகையிலேயே இரட்டை அர்த்தம் தரும் கருத்தாக இருக்கிறது. பொதுவாக சாணக்கியமாக இராஜதந்திரத்துடன் கருத்தை கூறிவிட்டதாகக் கருதிக் கொள்ளலாம். இலங்கையின் இனப்பிரச்சினை குறித்த கருத்துக்களை பல அரசியல் தலைவர்களும் இவ்வாறு தான் சாணக்கியத்துடன் கடந்து போகிறார்கள்.

இலங்கையின் பேரினவாத கட்டமைப்பு என்பது இன்று அரசியல் நிகழ்ச்சிநிரல்களையும் கடந்து சிவில் நிர்வாகத் துறையில் ஆழ வேரூன்றி வியாபித்து இயங்கி வருகிறது. இனவாத அணுகுமுறைகளுக்கான கட்டளைகள் மேலிருந்து பிறப்பிக்கும் வரை அதிகாரிகள் காத்திருக்க வேண்டியதில்லை. அது நிறுவனமயப்பட்ட ஒன்றாக ஆகிவிட்ட நிலையில் தன்னியல்பாக அந்த நிகழ்ச்சிநிரல் வெற்றிகரமாக இயங்கும்.

புதிய அரசாங்கம் அடிப்படையில் இனப்பிரச்சினை இருப்பதை ஏற்றுக் கொள்வதே இதை சரிசெய்வதற்கான முன் நிபந்தனை. இதுவரையான அரசாங்கங்கள் இனவாத நிகழ்ச்சிநிரலில் தங்கியிருந்த அரசாங்கங்களாக இருந்தன. ஆனால் தற்போதைய அரசாங்கமானது ஏற்கெனவே நிறுவனமயப்பட்டுவிட்ட இனவாத கட்டமைப்பின் மேலிருந்து ஆட்சி செய்யும் அரசாங்கமாக இருக்கிறது. அதைக் களைவதாயின் கொள்கை ரீதியான முடிவை வேகமாக எடுத்தாக வேண்டும். இனப்பிரச்சினை நீடிக்கும் வரை நாட்டின் அபிவிருத்தியையும், அரசியல் – சமூக ஸ்திரத்தனமையையும் முழுமையாக வெற்றிகொள்ள முடியாது  என்பதை வரலாற்று அனுபவத்திலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார சமத்துவம் மாத்திரம் அனைத்துவித சமத்துவத்தையும் கொண்டுவந்துவிடாது என்பதை கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்வதும் அரசியல் பட்டறிவுக்கு தெரிந்தாகவேண்டும்.

வெறுமனே “நாங்கள் இனவாதிகள் அல்லர்” என்கிற பிரகடனம் போதுமானது இல்லை என்பதையும், இனி அது செல்லாது என்பதை உணர வேண்டும்.

இலங்கையில் சிவில் நிர்வாகம் என்பது தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு நீதியையும், சிங்களவர்களுக்கு இன்னொரு நீதியையும் வழங்கி வருகிறது என்பதை ஆட்சியாளர்கள் இன்னமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பரஸ்பர சந்தேகமும், நம்பிக்கையீனமும், விரக்தியும், பகையுணர்ச்சியும்  மேலோங்கி வளர்ந்திருப்பதை சரியாக இனங்கண்டு தீர்ப்பது அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும். இனப்பிரச்சினை  “தேசியப் பிரச்சினை” என்று அழைக்கப்பட்து வந்த காலம் ஒன்று இருந்தது. இன்றும் அதுவே நடைமுறைத் தன்மை. வெறும் ஆட்சிமாற்றம் கண்டுவிட்டதால் அந்த நிலை மாறப்போவதில்லை. நடைமுறை தீர்வை நோக்கி நகர்வதே முக்கிய தேவை.

மக்கள் அதனை பொறுத்துக்கொண்டும், சகித்துக் கடக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்பதே கள யதார்த்தம். 

தையிட்டி பிரச்சினை பேரின அரசியல் கதம்பங்களின் நீட்சி என்பதை உணர்ந்தால் மட்டுமே அதனை சரியாக கையாளமுடியும். 

பௌத்த சின்னங்களின் எழுச்சி

இலங்கையில் பௌத்த அடையாளங்கள் காலப்போக்கில் அரசியல் அதிகாரத்துவத்துக்கான பகடைகளாக ஆக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு பெருவரலாறு உண்டு.

பௌத்த தர்ம பூர்வீக மரபின் பிரகாரம் புத்தர் வழிபாட்டுக்கு ஒருவர் அல்லர்.

புத்தர் தன்னை வணங்குவதை விரும்பாதவர். ஊக்குவிக்காதவர். ஆனால் பௌத்த தர்மத்தை போதிப்பதற்காக குறியீடாக புத்தர் உருவ வழிபாடும், பின்னர் அதை ஒரு வழிபாட்டுத் தளமாகவும், காலப்போக்கில் விகாரைகளாகவும் வளர்ச்சியுற்று இன்றைய வடிவத்தை எட்டிருக்கிறது.

பௌத்த துறவிகளின் மடாலயங்கள் போன்றன பௌத்த துறவிகளின் வாழ்க்கை முறைமைக்கு ஏற்ற இடங்களாக பேணப்பட்ட ஒரு பண்பாடாகவும் இருந்து வந்திருக்கிறது. அவர்கள் பௌத்த தர்மத்தை கற்கவும், கடைபிடிக்கவும், கற்பிக்கவும், கடத்தவும் அம்மடாலயங்கள் பேணப்பட்டு வந்துள்ளன. ஆரம்பத்தில் குகைகளிலும், குகைகளை அண்டிய காடுகளிலும் அவர்களின் வாழ்விடங்களாக அமைத்துக் கொள்ளப்பட்டன. காலப்போக்கில் அருகே தியானத்துக்கான இடங்களில் குறியீடாக உருவச் சிலைகளை அமைத்துக் கொண்டதன் நீட்சியே இந்த உருவ வழிபாட்டு வழிமுறை. சிலை உருவாக்கத்தில் அன்றைய மன்னர்களின் வகிபாகவே அதிகம் எனலாம்.

சிலைகளின் அரசியல்

இலங்கையின் வரலாறு நெடுக நிகழ்ந்த போர்களில் சமய சின்னங்களின் மீதும், சமய வழிபாட்டிடங்களின் மீதும், வழிபாட்டு உருவங்களின் மீதும் மாறி மாறி அழித்தொழிப்புகளும் ஆக்கிரமிப்புகளும் போரின் அங்கமாக இடம்பெற்றுள்ளன. சிலைகளும் நினைவுச்சின்னங்களும் பௌத்தத்தைப் பாதுகாக்கும் தேசியவாதக் கதையாடலுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்கிறார் சிங்கள பௌத்த சித்தாந்த உருவாக்கத்தைப் பற்றிய ஆய்வை மேற்கொண்ட நீள் டிவோட்டா (Neil DeVotta). 

புத்தர் பரிநிர்வாணமடைந்ததன் பின்னர் அவரைத் தகனம் செய்ததன் பின்னர் அவரின் அஸ்தியில் கிடைத்ததாக சொல்லப்படுகிற எலும்பு எச்சங்கள் பரவலாக பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு அவற்றைப் புனித சின்னங்களாக்கி அவற்றை ஆதாரமாகக் கொண்டு பெரிய விகாரைகள் கட்டப்பட்டு புனிதத் தளங்களாக ஆக்கப்பட்டு புனித வழிபாட்டிடங்களாக ஆக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் புராதன இலக்கியங்களில் ஒன்றான “தலதா வங்சய” என்கிற வரலாற்று இலக்கியமானது புத்தரின் தாதுப்பல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நாளில் இருந்து அதைப் பாதுகாக்க எவ்வாறான போராட்டங்களை எதிர்கொண்டு காப்பாற்றப்பட்டு இறுதியில் இன்று தலதா மாளிகையில் பாதுகாத்து பேணப்பட்டு வருகின்றது என்பதைப் பற்றிப் பேசுகிறது.

இவ்வாறு, புத்தர் சிலைகள் உருவாக்கப்படுவதற்கு முன்பு, கல்லால் செய்யப்பட்ட ஆசனத்திற்குப் பதிலாக, அவர்கள் போதிகளை வணங்கினர். காலப்போக்கில், முதலில் வைக்கப்பட்ட இருக்கையில் புத்தரின் சிலையையும், ஸ்ரீ மகா போதியின் கீழ் புத்தர் அமர்ந்து புத்த நிலையை சித்தரிகின்ற வகையில் அமைக்கப்பட்டன.

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக (கி.மு  247 - 207) தேவநம்பியதீசன் மன்னனின் பௌத்த பரப்புப் பணிகளின் போது புத்தர் சிலை முதற் தடவையாக பிரதிஷ்டை செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. பின்னர் முதலாம் ஜெட்டதிஸ்ஸ மன்னரால் புத்தரின் சிலையொன்றை தூபாராமையில் பிரதிஷ்டை செய்து வைத்ததாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மகாவம்சம் – 36வது அத். 128-129 செய்யுள்) அச் சிலை "ஊரு சிலா படிமா" என்று அழைக்கப்பட்டதாக வம்சக் கதைகளில் குறிப்பிடப்படுகின்றன.

இதன் பின்னர், ஸ்ரீ மகா போதியின் கீழ் வஜ்ராசன வடிவத்தில் அமர்ந்திருக்கிற புத்தர் சிலையொன்று ருவன்வெலி சேய பௌத்த வழிபாட்டிடத்தில் புத்தரின் சிலை செய்யப்பட்டதாக அறியப்ப்படுகிறது. துட்டகைமுனு இங்கே மூன்று திசைகளிலும் ஆசனமமைத்து கிழக்குப் பக்கமாக ஒரு சிலையை உருவாக்கினான் என்கிறது மகாவம்சம். கி.மு. இது 2 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் நிகழ்ந்தது என்பதால் புத்தர் சிலைகளின் உருவாக்கம் அந்த காலகட்டத்தில் இருந்திருப்பதை உணரலாம்.

கி.பி. 66 ஆம் ஆண்டில்,  மன்னர் வசப புத்தர் நான்கு புத்தர் சிலைகளை உருவாக்கி, அவற்றை ஸ்ரீமகா போதி அருகே வைத்தார். இதுவும் போதிக்கு அருகே நிறுவப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை தொல்லியல் ரீதியாக உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், அதைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கிற விபரங்களின் அடிப்படையில் ஒருவித தர்க்கரீதியான முடிவுக்கு வர முடிகிறது. அதாவது, இந்த காலகட்டங்களில் புத்தர் சிலை பற்றிய புரிதல் சமூகத்தில் இருந்ததால் புத்தர் சிலை பற்றிய சில அறிகுறிகள் காணக் கிடைக்கின்றன.  முதலாம் ஜெட்டதிஸ்ஸ மன்னன் காலத்து புத்தர் சிலை ஒன்றும் குறிப்பிடப்படுகிற போதும் அது தேவனம்பியதீசன் மன்னனின் படைப்பு என்கிற சந்தேகம் கிளப்பப்படுகிறபோதும் அதை ஏற்றுக்கொள்ள போதுமான தொல்பொருள் சான்றுகள் இன்னமும் கிடைக்கவில்லை. எனவே, கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி 1 ஆம் நூற்றாண்டு வரை புத்தரின் சிலைகள் உருவாக்கப்பட்டதாக கருத முடிகிறது.


இந்தியாவில் இருந்து அசோக மன்னனால் அனுப்பப்பட்ட அவரின் மகன் மகிந்த தேரரின் மூலம்   இலங்கையில் சம்புத்த சாசனம் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து இலங்கையில் பௌத்த தூபிகளும் போதி மரங்களும் புனிதச சின்னங்களாக நாது முழுவதும் பரவின. ஆனால் புத்தர் உருவ வழிபாடு ஏற்படுத்தப்படவில்லை. அது அறிமுகமாகியிருக்க்கவுமில்லை. அன்றைய அரசர் தேவநம்பியதீசன் மகிந்த தேரரால் பௌத்த மதத்துக்கு மாற்றப்பட்டார் என்று தீபவம்சம், மகாவம்சம் போன்ற இலங்கையின் புனித வரலாற்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன இலங்கை முழுவதும் போதி மரம் பரவியமை ஒருபுறம் பௌத்த தர்மம் பரவியதன் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

மகாயான பௌத்தத்தை பின்பற்றிய மன்னர் வலகம்பா காலத்தில் அபயகிரி தரப்பு துறவிகள் புத்தரை மனித உருவச சிலையை நிர்மாணித்திருக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

அனுராதபுர காலத்து புத்தரின் உருவ வடிவமுள்ள வெண்கலச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிற போதும் அத கால நிர்ணயம் குறித்து இன்றும் சந்தேகங்கள் உள்ளன.

பௌத்த தூபிகள் புத்தர் மரணித்து ஒரு நாற்றண்டின் பின்னர் கட்டப்பட்டிருப்பதைக் காண முடிகிறது இந்தியாவில் பிப்ராவா (Piprahwa Stupa) கி.மு 4 ஆம் - 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. அதேவேளை அசோகனால் கட்டப்பட்டதாக அறியப்படும் சாஞ்சி தூபி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதியாக கூறப்படுகிறது. மூன்றாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் தேவனம்பியதீச மன்னனால் கட்டப்பட்ட தூபாராம இலங்கையின் முதலாவது தூபியாக கருதப்படுகிறது. 

உருவ வழிபாடு

"புத்தர் தனது சொந்த உருவத்தை உருவாக்கி அதனை வணங்கச்செய்ய வேண்டும் என்று விரும்பாதவர். புத்தர் பரிநிர்வாணம் அடைந்து சுமார் 500 ஆண்டுகள் ஆகியும் புத்தரின் சிலைகள் இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. புத்தர் தன்னை வணங்குவதை ஆதரித்ததில்லை. ஆரம்பத்தில் அவரின் உபதேசங்களை வழிவழியாக கடத்தியவர்களும் புத்தரை உருவ வழிபாட்டு நிலைக்கு கொண்டுவரவில்லை.  அவ்வாறு செய்வது புத்தருக்கு செய்யும் அவமரியாதை என்று கருதினர்.


கிமு 5–3 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இந்தியாவின் வடமேற்கு வழியாக மகா அலெக்சாண்டர் ஆக்கிரமித்துக்கொண்டு வந்து கந்தாரம் எனப்படுகிற இந்திய ஆப்கானிஸ்தான் எல்லைகளில் நிலைகொண்டு சில காலம் ஆட்சி செய்தவேளை கிரேக்க உருவ வழிபாட்டு மரபு இந்தியாவுக்குள் ஊடுருவியதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் மனித உருவிலான கடவுளர்களின் உருவங்கள் வழிபாட்டு வடிவமாக உருவெடுத்தது.

கிரேக்க இந்திய தொடர்புகளுக்கு முன்பு ஆரம்பகால பௌத்த மரபு புத்தரை மனித உருவமாக சித்திரிப்பதை கொண்டிருக்கவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக போதிமரம், பாதச்சுவடுகள், தூபிகள் போன்றன பௌத்தத்தை குறியீடாக சித்திரிக்கிற சின்னங்களாக கருதப்பட்டு வந்தன.

உலகின் பௌத்தம பரவியிருக்கிற நாடுகள் அனைத்திலும் புத்தர் உருவ சிலைகள் வேறுபடுகின்றன. அவரவர் நாகரீகத்துக்கு ஏற்ப புத்தரின் உருவத்தை தங்கள் விருப்பப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் நான்கு முகங்களைக் கொண்ட புத்தர் உருவத்தை உருவாக்குகிறார்கள். நான் திசைகளிலும் பௌத்தர்களால் பார்க்கப்படவேண்டும் என்கிற கருத்தாக்கமாக அது கொள்ளப்பட்டது. சில புத்தர்கள் விகாரமான உருவத்துடன் பெரிய வயிறைக் கொண்டிருக்கிறார். சில இடங்களில் புத்தர் குலுங்கச் சிரித்தபடி இருக்கிறார். சில நாடுகளில் புத்தர் அமைதியாக சாந்தமாக இருக்கிறார். இலங்கையில் தேரவாத பௌத்த மரபு அத்தகைய சாந்தம் நிறைந்த புத்தராகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அனுராதபுர பொலன்னறுவை காலம் தொட்டு அத்தகைய அமைதியான உருவம் கொண்ட புத்தரையே இலங்கையின் பௌத்த பண்பாட்டு மரபில் காண முடிகிறது.

அதேவேளை புத்தர் இத்தனை அழகாகவும், இளமையாகவும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், சுமார்  80 வயதில் மரணித்ததாலும், தியானம், விரதம் என்பவற்றாலும் புத்தர் மெலிந்த, நலிந்த நிலையில் இருந்திருக்கவே வாய்ப்புள்ளதாகக் கருதி அவரை மெலிந்த தோற்றத்திலான உருவத் தோற்றத்தைக் கொண்ட சிலைகளும், ஓவியங்களும் கூட உருவாக்கப்பட்டிருப்பதை நாம் கண்டிருக்கிறோம்.

அவ்வாறான மெலிந்த உருவ புத்தர் சிலையொன்று கி.பி 2ஆம் 3ஆம் நூற்றாண்டுக்கு உரிய ஒரு சிலை கிழக்கு ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் பகுதிகளுக்கு இடையில் கண்டெடுக்கப்பட்டிருகிறது. இதனை உண்ணாநிலை புத்தர் (fasting Buddha) என்று அழைக்கின்றனர்.

இலங்கையில் அதிகம் காணப்படுகிற புத்தர் சிலைகள் மூன்று வடிவத்தில் இருப்பதைக் காணலாம்

  • பத்மாசன சிலைகள்
  • நிற்கும் சிலைகள் 
  • படுக்கை சிலைகள்

இவற்றில் சமாதி முத்திரையுடன் பத்மாசன நிலையில் இருந்தபடி இருக்கும் சிலைகளே நாடாளாவிய ரீதியில் பிரசித்தம். உலக அளவிலும் அதுவே பிரசித்தம். இவ்வாறு அமர்ந்தபடி உள்ள சிலைகளையே நாடளாவிய ரீதியில் மூலைக்கு மூலை நிறுவுகிற வழக்கம் விரவியுள்ளது.

சாந்தமாக அமர்ந்தபடி இருக்கிற இந்த புத்தர் உருவங்கள் இன்று ஏனைய மதத்தினருக்கு ஒரு ஆக்கிரமிப்பின் வடிவமாக ஆனதொன்ரும் தற்செயல் அல்ல. அது முற்றிலும் பேரின அரசியல் உள்ளடக்கத்தின் விளைவால் ஆனது.

தம்மதீப ஐதீகம்

அடுத்த ஐயாயிரம் ஆண்டுகளுக்கு பௌத்த மதத்தைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை இலங்கைத் தீவிடம் ஒப்படைத்து விட்டு புத்தர் மறைந்ததாக ஒரு ஐதீகம் இன்றும் நம்பப்படுகிறது. அதையே தம்மதீப கோட்பாடாக இலங்கை பௌத்தர்கள் மத்தியில் நிறுவப்பட்டிருக்கிறது. புத்தரின் வழிபாடுகளும், போதனைகளும், அவரின் தர்மமும் பரப்பப்பட்டுள்ள இந்தியா, நேபாள், தாய்லாந்து, மியான்மார், ஜப்பான், சீனா, கொரியா உள்ளிட்ட எந்த நாடுகளிலும் அவ்வாறு இலங்கைக்கு பொறுப்பளித்த வரலாற்று விபரம் கிடையாது. புத்தர் இலங்கைக்கு மூன்று தடவைகள் விஜயம் செய்த தகவல்களும் கூட இலங்கைக்கு வெளியில் எங்கும் கிடையாது. தீபவம்சம், மகாவம்சம் போன்ற இலங்கைக்கே உரிய வரலாற்று இலக்கியத்தில் மட்டுமே அப்படி ஒரு ஐதீகம் பதியப்பட்டுள்ளது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

தேவைக்கும் அதிகமான விகாரைகள் நாட்டில் பெருகிக்கொண்டே செல்கின்றன. மறுபுறம் பௌத்த துறவறம் பூணுவோரின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதை ஒரு நெருக்கடியாக உணருகின்றனர். ஏற்கெனவே துறவறம் பூண்டவர்களில் பலர் தமது சீருடைகளை களைந்து மீண்டும் பொது வாழ்க்கைக்கு திரும்புவோரின் எண்ணிக்கை குறித்தும் எச்சரிக்கை செய்யப்படுகின்றன. ஆனால் விகாரைகளும், புத்த சிலைகளும் கவனிக்க ஆளற்ற அளவுக்கு பெருகுகின்றன.

தம்ம தீப சித்தாந்தத்தின் பேரால் பௌத்தத்தை இலங்கையில் காத்திட வேண்டும் என்கிற முனைப்பில் அதையும் சிங்களவர்களிடம் ஒப்படைத்திருப்பதாக புனைந்து சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த ஏனையோர் தூர அந்நியப்படுத்தப்பட்டு அவர்கள் ஈற்றில் சிங்கள பௌத்தத்தின் எதிரிகளாகவே சித்திரிக்கிற அளவுக்கு பேரின சித்தாந்தம் வளர்த்தெடுக்கப்பட்டு ஈற்றில் இன – மத முறுகல்களின் கதம்ப வரலாறாக இலங்கையின் வரலாறு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

பௌத்தத்தைப் பேணிப்பாதுகாப்பது அரசின் கடமையென்று 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் நிறுவியது இதன் நீட்சியாகத் தான். நாடெங்கிலும் புத்த விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் கண்மூடித்தனமாக கட்டியெழுப்பி வருவதும் தம்மதீப சித்தாந்தத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டதும்; அரசியலமைப்பின் மூலம் அதிகாரம் பெற்றிருக்கிற மகாவம்சப் புனைவின் விளைவு தான்.

தமிழர் பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்படுகிற பௌத்த தொல்லியல் சான்றுகள் அனைத்தும் சிங்கள பௌத்தத்துக்கு உரியது என்று உரிமைகோருவோர் அரசதிகார சிங்கள பௌத்த கட்டமைப்பின் ஆதரவினாலேயே மேற்கொள்கின்றனர். 

இந்த இலங்கைத் தீவில் பௌத்தர்களே வசிக்காத இடங்களிலும் பாரிய விகாரைகள் முளைப்பதும், விரிவடைவதும், வியாபிப்பதும் மேற்படி உள்ளடக்கத்தில் இருந்து தான். புத்தரே விரும்பாத, புத்தர் சொல்லாத விபரங்களும் ஐதீகங்களாக புனையப்பட்டு சிறுபான்மை இனத்தவர் மீதும், மதத்தவர் மீதும் புத்தர் ஒரு ஆக்கிரமிப்பாளராக இன்று நிலைநிறுத்தப்பட்டதற்கும் அமைதியை போதித்த புத்தருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதே வரலாற்று உண்மை.

புத்தர் எது நடக்கக் கூடாது என்று போதித்தாரோ அது புத்தரின் பெயரிலேயே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை. 

கதிர்காம அனுபவம்.

சமீபத்தில் கதிர்காமம் சென்றிருந்த போது அங்கே கிரிவெஹர விகாரையின் வாசலில் புதிய ஒரு கல்வெட்டு நிறுவப்பட்டிருந்தது.

அதில் இந்த வசனம் செதுக்கப்பட்டிருந்தது.

“கௌதம புத்த பெருமானார் 500 அரஹத் பிக்குகளுடன் 3ம் முறை இலங்கைக்கு விஜயம் செய்து (புத்த ஆண்டு 8 / கி.மு 6 நூற்றாண்டில்) கதிர்காமம் "கிஹிரி வனத்தில்” சகல உயிரினங்களுக்கு இடையேயும் அமைதி ஏற்படுத்தி தர்ம போதனை புரிந்து சுகதேகியுடன் வாழ்ந்ததோடு அங்கு பயன்படுத்திய தங்க ஆசனமும், புத்த பெருமானாரின் தலைமுடியும், அனோமா கங்கையருகில் சிதுவத் இளவரசனால் தலைமுடியை வெட்டிய தங்கத்தினாலான வாளும் வைப்புச் செய்யப்பட்டு மகாகோச பிராந்திய நிர்வாகியினால் "மங்கள மகா வெஹெர” எனும் பெயரால் புத்தர் வாழ்ந்த காலத்திலேயே அமைக்கப்பட்டதாகக் கருதப்படும். "கிஹிரிவெஹெர" அல்லது கிரிவிஹாரை சைத்திய ராஜயானன் வஹன்சே.”

புத்தர் வாழ்ந்த காலத்திலேயே அமைக்கப்பட்ட கிரிவிஹாரை என்று இதில் குறிப்பிடப்பட்டிருப்பது மோசமான வரலாற்று அபத்தம் என்றே உணர முடிந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே நிறுவப்பட்ட தொல்லியல் நூதனசாலைக்கு அடுத்த நாள் சென்று அதன் இயக்குனரும் தொல்லியலாலருமான பெத்தும் என்பவருடன் ஒரு நேர்காணலை எடுத்தேன். இந்த அபத்த கல்வெட்டைப் பற்றி கேட்டபோது, அவரும் அது ஒரு மோசமான திரிபு என்பதை ஏற்றுகொண்டார்.

புத்தர் தன்னையோ தன்னைக் குறியீடாகக் கொண்டோ வணங்குவதை ஏற்றுக்கொள்ளாதவர். மேலும் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் இவ்வாறான போதிகள் இருந்ததாக இலங்கை இந்திய தொல்லியல் சான்றுகள் எதுவும் இல்லை.

நன்றி - தினகரன் 23.02.2025



கிளீன் ஸ்ரீ லங்கா: ஆட்சியதிகார முழக்கங்களின் வரலாற்று வழித்தடம் - என்.சரவணன்

2025 புத்தாண்டு ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ முழக்கத்துடன் (Slogan) ஆரம்பித்திருக்கிறது. 

ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க அத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து அத்திட்டத்தைப் பிரகனடப்படுத்தி நீண்ட உரையையும் வழங்கினார். அந்நிகழ்வில் பல வெளிநாட்டுத் தூதுவர்களும் இராஜதந்திரிகளும், அரசாங்கத் தலைவர்களும், அதிகாரிகள் பலரும் கூட கலந்துகொண்டிருந்தனர்.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயலணியொன்றும் உருவாக்கப்பட்டு, அதற்கான காரியாலயம், வேலைத்திட்டம், அனைத்தும் தொடக்கப்பட்டு வேகமாக பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

சகல வலதுசாரிக் கட்சிகளும் இவ்வாட்சியைக் கவிழ்ப்பதற்கு மறைமுகமாக அணிதிரண்டபடி நாளாந்தம் அவதூறுகளால் போர் தொடுப்பது எதிர்பாரக்காதவை அல்ல. ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் தொடக்கப்பட்டு இந்த பத்து நாட்களில் முட்டையில் மயிர்பிடுங்க முயற்சிக்கும் போக்கை கவனித்தாலே நமக்கு அவர்களின் கையாலாகாத்தனமும், வங்குரோத்துத் தனமும் எளிமையாகப் புரிந்துவிடும்.


சுதந்திர காலம் தொட்டு முழக்கங்கள்!

“கிளீன் ஸ்ரீ லங்கா” என்பது இன்றைய ஆட்சியின் பிரதான முழக்கங்களில் ஒன்று. இலங்கையின் வரலாற்றில் இவ்வாறான முழக்கங்களை (Slogans) சகல ஆட்சியிலும் கவனிக்கலாம்.

இலங்கை சுதந்திரமடைவதற்கு (பெயரளவில்)  ஓராண்டுக்கு முன்னரே சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் நடந்துவிட்டது. 1948 இல் இலங்கை சுதந்திர பிரகடனத்தின் போது முதலாவது பிரதமராக டி.எஸ். சேனநாயக்க இருந்தார். இலங்கைக்கு சுதந்திரம் கோராமல் அரசியல் சீர்திருத்தத்தை மட்டுமே கோரிக்கொண்டிருந்த “கரு வெள்ளையர்” (சிங்கள மொழியிலும் “கலு சுத்தோ” என்று இவர்களை விமர்சிக்கும் வழக்கம் உண்டு) குழாமுக்கு    தலைமை வகித்தவர்காக டீ.எஸ்.சேனநாயக்க இருந்தார். ஆனால் டி.எஸ்.சேனநாயக்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி 'தேசத்தின் தந்தை' என்ற நாமத்தை சூட்டியது. அதுவே பேச்சுவழக்கில் நிலைபெற்றுவிட்டது. ஜே.ஆர். 1962 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையொன்றில் “1944 இல் கூட இலங்கை தேசிய காங்கிரஸ் சுதந்திரம் கோரவில்லை” என்று ஒத்துக்கொண்டார். (12.07.1962, ஹன்சார்ட் பக்கம் 83).

டி.எஸ். சேனநாயக்கவுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவராக மாறிய பிரதமரான டட்லி சேனநாயக்க "அரிசி தந்த தந்தை" என்று அழைக்கப்பட்டார். அவரது அரசாங்கம் இரண்டு கொத்து அரிசியை இலவசமாக வழங்கியதால் அவ்வாறு அழைக்கப்பட்டார். டட்லிக்குப் அடுத்து பிரதமராக ஆன சேர் ஜோன் கொத்தலாவல மக்கள் செல்வாக்கு இல்லாத நிலையில் அவ்வாறான நாமமெதுவும் சூட்டப்படவில்லை.

1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க 24 மணி நேரத்திற்குள் 'சிங்களத்தை' அரச மொழியாக்குவதாக உறுதியளித்ததன் மூலம் அவர் சிங்கள தேசியவாதிகளின் கதாநாயகனாக ஆனார். சிங்கள பௌத்தத் தேசியவாதமே தன்னை ஆட்சியலமர்த்தும் என்பதை உறுதிசெய்துகொண்ட பண்டாரநாயக்க “சங்க, வெத, குரு, கொவி, கம்கரு” – (மதகுருமார்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள்) என்கிற அரசியல் முழக்கத்துடன் ஆட்சியிலமர்ந்தார்.

இறுதியில் அவருக்கு ஆதரவளித்த தரப்பினராலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  பண்டாரநாயக்கவின் இறுதி நாட்களில், அரசியல் அவதானிகள் அவரை பிற்போக்குவாதிகளின் கைதி என்று விமர்சித்தனர். 1956 ஆம் ஆண்டு மக்கள் ஐக்கிய முன்னணியின் அந்த ஜனரஞ்சக முழக்கம் இறுதியில் கைவிடப்பட்டது. 1970 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கைகோர்த்து ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை அமைத்ததுடன் பிரித்தானிய “டொமினியன்” பெயரைக் கொண்ட பெயரளவிலான “சுதந்திரம்” மாற்றப்பட்டு பிரித்தானிய கிரீடத்துடனான உறவை முடிவுக்கு கொண்டு வந்தார். 1972 ஆம் ஆண்டு குடியரசாக ஆக்கப்பட்டு, குடியரசு அரசியலமைப்பும் கொண்டுவரப்பட்டது.

70இல் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க போட்டியிட்ட போது "எங்கள் அம்மா கிட்ட வருவார். இரண்டு கொத்து அரிசி தருவார்" (அபே அம்மா லங்க எனவா ஹால் சேறு தெக்க தெனவா) என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்தனர்.  இறுதியில் சிறிமாவோ, "நான் சந்திரனில் இருந்தாவது அரிசி கொண்டு வந்து தருவேன்” என்றார். 1976 அளவில் நாட்டின் உணவு பற்றாக்குறை உச்ச அளவுக்கு ஏறி, இறுதியில் அதுவரையான வரலாற்றில் அதிக வெறுப்பை சம்பாதித்த அரசாங்கம் என்பதை 77 தேர்தல் முடிவுகள் புலப்படுத்தின. ஆனால் 1976  உணவுப் பற்றாக்குறை காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவான பேரணி நடத்தியவர்கள் இவ்வாறு கோஷமிட்டு வீதிகளில் சென்றனர்.

" மிளகாய் இன்றி கறி உண்பேன்."

அரிசி இன்றி சோறுன்பேன்.

சர்க்கரை இன்றி தேநீர் குடிப்பேன்.

மேடம் நீங்கள் சொன்னால்

புல்லைக் கூட நாங்கள் உண்போம்"

என்றனர்


1977-ல் நடந்த தேர்தலில் சிறிமாவை தோற்கடித்து ஆறில் ஐந்து பெரும்பான்மை அதிகாரத்தைக் கைப்பற்றி பிரதமராக ஆனார் ஜே.ஆர்.ஜெயவர்தன. கண்டிய ரதல தலைவர்கள் ஜே.ஆருக்கு சிங்களவர்களின் அரசன் என்று முடிசூட்ட எடுத்த முயற்சிகள் பற்றி கூட அப்போது பரவலாகப் பேசப்பட்டன. 

அத் தேர்தலில் ஜே ஆரின் ஜனரஞ்சக அரசியல் முழக்கமாக “தர்மிஷ்ட சமாஜய” (நீதியான சமூகம்) என்கிற வாசகத்தை பிரச்சாரம் செய்திருந்தார். ஆனால் மக்கள் தந்த பேராதரவை முறைகேடாக பயன்படுத்தி; தனி ஒருவரின் கையில் அதிகாரங்களைக் குவிக்கக் கூடியதும், அராஜங்கங்களுக்கு வழிவகுக்கக் கூடியதுமான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிமுறையை உருவாக்கி அநீதியான யாப்பை உருவாக்கினார். திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டை முதலாளிகளுக்கு சுரண்டவிட்டு நாடு பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட சமூகத்தை ஏற்படுத்தக் காரணமானார்.

1982 ஆம் ஆண்டு நடத்தப்படவேண்டிய பொதுத் தேர்தலையே நடத்தாமலேயே ஆட்சியை நீடிப்பதற்காகாக குறுக்கு வழியில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஆட்சியை நீடித்தார். அத்தேர்தலின் முழக்கமாக “இலங்கையை சிங்கப்பூராக ஆக்கிக் காட்டுவேன்” என்றார். அவருக்குப் பின் பிரதமர் பிரேமதாச ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார்.

“சமாதானம் மலரும், துயரங்கள் முடியும்” (සාමය උදාවෙයි, දුක්ගිනි නිමාවෙයි) என்கிற முழக்கத்துடன் பிரேமதாச ஆட்சியேறினார். இந்திய இராணுவத்தை விரட்டுவது, புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்துவது, வறுமை ஒழிப்பு, பத்து லட்சம் வீட்டுத் திட்டம் என திட்டங்கள் வகுத்தபோதும் அவற்றை நிறைவு செய்வதற்கு முன்னரே அவர் கொல்லப்பட்டார். ஜேவிபியை அடக்குவது என்கிற பேரில் ஏராளமான சிங்கள இளைஞர்களின் படுகொலைக்கு காரணமானார்.

1994 இல் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க நவீன விகார மகாதேவி என்று அழைக்கப்பட்டார். சமாதான தேவதை என அழைக்கப்பட்டார். சந்திரிகாவின் தேர்தல் முழக்கமாக “17 ஆண்டு ஐதேக ஆட்சி சாபத்தை நீக்குவது” என்பது ஒரு புறம் இருந்தாலும் அவரின் இன்னொரு பிரதான முழக்கமாக இருந்தது “சமாதானம். அதற்காகவே ‘வெண்தாமரை இயக்கம்’ போன்ற இயக்கங்களைத் தொடக்கி, அதிகாரப்பரவலாக்கம், புதிய அரசியலமைப்பு மாற்றம் என்றெல்லாம் முழங்கினாலும். இறுதியில் சமாதானமும் கைகூடவில்லை. அதிகாரப் பரவலாக்கமும் அரசியலமைப்பு முயற்சியும் காற்றில் தூக்கியெறியப்பட்டது. ஈற்றில் அடுத்த 1999 தேர்தலில் சந்திரிகா “சமாதானத்துக்கான போர்” என்கிற முழக்கத்தை தொடர்ந்தார்.

2005 தேர்தலில் மகிந்த வென்றார். அத்தேர்தலில் “ரணில் – புலி கூட்டு” என்று பிரச்சாரம் செய்த அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாகவும் “மகிந்த சிந்தனை” என்கிற முழக்கத்தையும் பிரகடனப்படுத்தினார். அவ்வாட்சியின் போது யுத்தத்த்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவர் என்று அவருக்கு 2010 இல் மேலும் சந்தர்ப்பம்  கொடுத்த மக்கள் அமோக வெற்றியை கொடுத்திருந்தனர். இக்காலப்பகுதியில் மகிந்தவின் ஆட்சியில் நடந்த ஊழல், துஷ்பிரயோகம், அராஜகம், அநியாயம் என்பவற்றால் நாடு அதலபாதாளத்தை நோக்கிச் சென்றது. ‘மகிந்த சிந்தனை’ முழக்கம் மகிந்தவின் குடும்பத்துக்கும் ஆதரவாளர்களுக்கும் மட்டுமே பயன்பட்டிருந்தது. ஆனால் சிங்களத் தேசியவாதிகளால் மகிந்த மகாராஜா என்று அழைக்கப்பட்டார்.

மகிந்தவை ஆட்சியில் இருந்து விரட்டுவதற்காக பல தரப்பும் ஒன்றிணைந்து மைத்திரிபால சிறிசேன தலைமையில் “நல்லாட்சி” என்கிற தேர்தல் முழக்கத்தை முன்வைத்து ஆட்சியமைக்கப்பட்டது. “நல்லாட்சி” அரசாங்கம் என்றே அந்த ஆட்சியை அடையாளப்படுத்தும் சொல்லாடல் ஜனரஞ்சக பாவனையாக இருந்தது. “நல்லாட்சி” பாதிவழியிலேயே குழி பறிக்கப்பட்டு மகிந்தவின் கரங்களுக்கு மீண்டும் கைமாற்றப்பட்டது.

யுத்தத்தை வென்று கொடுத்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாட்டைக் கொடுக்கவேண்டும்  என்கிற கோஷத்துடன் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்கிற முழக்கத்துடன் 69 லட்ச வாக்குகளுடன்  அமோக வெற்றியுடன் சிங்கள பௌத்தர்கள் கோட்டபாயவை ஆட்சியில் அமர்த்தினார்கள். தன் சகோதரர்களால் சீரழிக்கப்பட்ட நாட்டை கோட்டாபயவால் சரி செய்ய வேண்டி ஏற்பட்டது. அதற்குள் நாடு குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையை எட்டியது. மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளுக்காக வரலாறு காணாத அளவுக்கு வீதிகளில் வரிசைகளில் நிற்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது கோட்டாவின் ஆட்சி.


அதன் விளைவு; “கோட்டா கோ” என்கிற முழக்கத்தை மக்கள் கையிலெடுத்து “அரகல”போராட்டத்தின் மூலம் கோட்டாவை விரட்டியடித்தனர். சிங்கள பௌத்தர்களால் துட்டகைமுனுவின் மறு அவதாரமாக கொண்டாடப்பட்ட கோட்டா இறுதியில் ஜோக்கராக வெளியேறினார். மகிந்த சாம்ராஜ்யம் அத்தோடு சரிந்தது. முடிவுக்கும் வந்தது.

பல தடவைகள் தேர்தலில் தோற்ற ரணில் விக்ரமசிங்க இலவசமாக ஜனாதிபதிப் பதவியை கோட்டாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். எஞ்சிய ஆட்சி காலத்தை நிதி வங்குரோத்து நிலைமையில் இருந்து தற்காலிகமாக நாட்டை பாதுகாப்பவராக தன்னை ஆக்கிக் கொண்டார்.

ஆனால் மக்கள் அதற்காக அவருக்கு 2024 தேர்தலில் வாய்ப்பைக் கொடுக்கவில்லை. மாறாக “மாற்றம்”, “மறுமலர்ச்சி” என்கிற முழக்கத்தையும் “நாடு அனுரவுக்கு” என்கிற முழக்கத்தையும் வரவேற்றார்கள். 76 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சி அதிகார முறைமையை முடிவுக்கு கொண்டு வந்தார்கள் மக்கள்.

இவ்வாறான தேர்தல் முழக்கங்களுக்குப் புறம்பாக அரசாங்கங்கள் தமது வேலைத்திட்டங்களாக உப முழக்கங்களை வைப்பதுண்டு. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தமது புரட்சிகர மாற்றத்தின் ஆரம்ப காலகட்டங்களில் ஐந்தாடுத் திட்டம், பத்தாண்டுத் திட்டம் என்றெல்லாம் ஏற்படுத்தி மக்களை விழிப்புறச் செய்து மக்களையும் அப்பணிகளில் பங்காளிகளாக்கி அத்திட்டங்களை நிறைவேற்றிய உலக வரலாறுகளைக் கண்டிருக்கிறோம். அவை கலாசார புரட்சியாகயும், பண்பாட்டு மாற்றமாகவும் அறியப்பட்டதர்கான காரணம் அவை கட்டமைப்பு மாற்றத்துக்கான அடிப்படைகளை ஏற்படுத்தியமை தான்.

இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஆட்சிக்கு வந்து இரு மாதங்களில் முன்வைத்தத் திட்டம் தான் “கிளீன் ஸ்ரீ லங்கா” என்கிற வேலைத்திட்டமும். முழக்கமும்.


லீ குவானின் “கீப் கிளீன் சிங்கப்பூர்”

உலக வரலாற்றில் இதற்கு முன்னர் இதே தலைப்பில் சில முன்னுதாரணங்கள் நமக்கு உள்ளன. சிங்கப்பூரின் சிற்பி என்று அறியப்பட்டவரான சிங்கப்பூரின் அன்றைய தலைவர் லீ குவான் "Keep Singapore Clean” (கீப் கிளீன் சிங்கப்பூர்) என்கிற முழக்கத்தின் மூலம் தான் நாட்டைக் கட்டியெழுப்பினார். அவர் 1968 ஆம் ஆண்டு அத்திட்டத்தை தொடங்கியபோது இன்றைய சிங்கப்பூரை எவரும் கற்பனை செய்தும் பார்த்திருக்க மாட்டார்கள். 

லீ குவானுக்கு அன்று இலங்கை ஒரு முன்மாதிரியாக இருந்தது. இலங்கையைப் போல “சிங்கப்பூரை ஆக்கிக் காட்டுவேன்” என்று அன்று அவர் கூறியிருந்தார். ஆனால் இலங்கையோ மோசமான முன்னுதாரண நாடாக ஆக்கப்பட்டது. இனங்களின் உரிமைகளை சரிவரக் கையாளத் தவறியதே இலங்கையின் பின்னடைவுக்குக் காரணமென பிற்காலத்தில் லீ குவான் தெரிவித்தார்.

“சிங்கப்பூர் கிளீன்” திட்டமானது வெறும் தூய்மைத் திட்டமாக பிரகடனப்படுத்தவில்லை. மாறாக கல்வி, விழிப்புணர்வு, மக்களின் பொறுப்புணர்ச்சி பற்றிய நடத்தை மாற்றம், தொழிநுட்ப வளர்ச்சி, கழிவு முகாமைத்துவம் என்பன எல்லாமே அத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டன.  

காலப்போக்கில் உலகிலேயே தூய்மையான நாடாக அடையாளம் காணப்பட்டது. மக்களின் வாழ்க்கைத் தரம் வேகமாக உயர்ந்தது. இயற்கை வளம் எதுவுமற்ற சிங்கப்பூர் பிராந்தியத்தில் ஒரு வளர்ச்சியடைந்த நாடாக ஆனதை உலகே வியப்புடன் உற்று கவனித்தது. இன்று அப்பிராந்தியத்திலேயே குறைவிருத்தி நாடுகளின் மத்தியிலோர் வளர்ந்த நாடாக எழும்பியுள்ளது. அண்டைய நாடுகள் தமது நாட்டை ஒரு சிங்கப்பூராக ஆக்குவதற்கு கனவு கண்டனர்.

இறுதியில் 1970 களின் முடிவில் ஜே.ஆர். “இலங்கையை சிங்கப்பூராக ஆக்கிக் காட்டுவேன்” என்று தேர்தலில் வாக்கு கேட்கும் நிலைக்கு  இலங்கை உருவாகி இருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.


மோடியின் கிளீன் இந்தியா திட்டம்

2014 ஆம் ஆண்டு மோடி அரசாங்கம் "Swachh Bharat" சுவாச் பாரத் என்கிற கிளீன் இந்தியா திட்டத்தை ஒரு பெரிய திட்டமாகக் கொண்டு வந்தது. ஆனால் அத்திட்டமானது நேரடியாக “தூய்மை”யான இந்தியாவை இலக்கு வைத்து திட்டமிடப்பட்டது. இந்தியா முழுவதும் நெடுங்காலமாக நீடித்து வந்த மலசல வசதியின்மையை தீர்க்கும் திட்டம் இதில் முக்கிய அங்கமாக இருந்தது. இந்தியாவின் சனத்தொகை அதிகரிப்பும், வாழ்விட பெருக்கமும் தூய்மையற்ற ஒரு நிலைக்கு தள்ளிக்கொண்டே சென்றமையை உலக அளவில் கவனிக்கப்பட்டது. இந்தியாவை ஏளனம் செய்வதற்கான காரணியாக இந்நிலைமை வளர்ச்சியடைந்து இருந்தது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கணிசமான அளவு இந்த சிக்கல் தீர்க்கப்பட்டது மட்டுமன்றி இது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் சென்றடைந்தது. தூய்மை இந்தியாவின் அவசியம் பற்றிய தேவை தொடருந்தும் உணரப்படுவதற்கு இத்திட்டம் வழிகோலியது.


“கிளீன் சிறிலங்கா”

இன்றைய “தூய்மை இலங்கை” திட்டத்தின் வடிவம் மேற்படி இரு நாட்டு வடிவங்களில் இருந்து மாறுபட்டது. அதாவது வெறுமனே தூய்மைத் திட்டம் என்பதோடு மட்டுப்படாத; பறந்து விரிந்த திட்டம் இது. இன்னும் சொல்லப்போனால் லீ குவானின் திட்டத்தை விட விரிந்தது என்றே சொல்ல வேண்டும்.

தூய்மை என்பதன் அர்த்தம் விரிக்கப்பட்டு; அரசாங்கம், குடிமக்கள், சிவில் நிர்வாகத்துறை இவற்றின் நடத்தை மாற்றத்தை மைய இலக்காகக் கொண்டது கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம்.

அரசாங்கம் எத்தனை சிறந்த திட்டங்களைக் கொண்டுவந்தாலும் நடத்தை மாற்றம் (Attitude change) வளர்ச்சியுறாவிட்டால் அதில் எந்தப் பலனும் கிடையாது. எனவே தான் இதில் போலீசார், இராணுவத்தினர் மட்டுமன்றி சிவில் நிர்வாகத்துறையினர், துறைசார் வல்லுனர்கள் என்போரும் இந்த வேலைத்திட்டத்தின் இயக்குனர்களாக ஆக்கப்பட்டார்கள். நீதித்துறைக்கும் இதில் கணிசமான பொறுப்பு உண்டு.

பாதசாரிகள் முறையான கடவையில் கடக்க மாட்டார்களாயின், வீதிகளில் பொறுப்பற்று குப்பைகளை எறிவார்களாயின், வீதிகளில் பொறுப்பற்று வண்டிகளை செலுத்துவார்களாயின், அரசாங்க ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தை நிதியையும், நேரத்தையும் துஷ்பிரயோயம் - விரயம் செய்வார்களாயின் எத்தனை சிறந்த ஆட்சியதிகாரம் இருந்தும் எதைத் தான் மாற்ற முடியும்.

தார்மீக கூட்டுப்பொறுப்பு அனைத்துப் பிரஜைக்கும் உண்டு. ஆட்சியை கட்சிகளிடம் கொடுத்துவிட்டு அவர்கள் அனைத்தையும் மாற்றிவிடுவார்கள் என்று கனவு காண முடியுமா. இதில் பிரஜைகளின் கடமையும் பொறுப்பும் என்ன என்பதே இன்றைய கேள்வி. பிரஜைகள் தமது கடமைகளையும், பொறுப்பையும் சரிவர செய்வதன் மூலமே உரிமைகளைக் கோருவதற்கான தார்மீக உரிமையையும் பெறுகிறார்கள்.

அது தேசத்தின் மீதான பிரக்ஞையில் இருந்தே புறப்படும். அந்த பிரக்ஞை செயற்கையாக உருவாக்கக் கூடியதல்ல. பழக்கவழக்க நடத்தைகள் சீரழிந்து போனதற்குப் பின்னால் ஒரு வரலாற்று நீட்சி உண்டு. அதுபோல சமூக, அரசிய, நிர்வாக அமைப்பு முறைக்கும் பங்குண்டு. இந்த கலாசார, பண்பாட்டுப் பரிவர்த்தனையை உருவாக்குவதற்கு படிப்படியான நடத்தை மாற்ற விழிப்புணர்வு அவசியம். உடனடியாக மாற்றிவிடமுடியாது.

கிளீன் சிறிலங்கா திட்டமானது குறைந்தபட்சம் அந்த நடத்தை மாற்ற விழிப்புணர்வுக்கான ஆரம்பத்தை தொடக்கி வைத்திருக்கிறது. அது கூட்டு உணர்வினாலும், கூட்டு முயற்சியாலும், மட்டுமே சாத்தியப்படுத்தலாம்.

தற்போது கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரங்கள் எதிர்க் கட்சிகளால் தொடங்கப்பட்டுள்ளன.

”செயல் - அதுவே சிறந்த சொல்” என்பது சே குவேராவுக்குப் பிடித்த வாசகங்களில் ஒன்று. முழுநேர  தீவிர செயற்திறன் மிக்க, அர்ப்பணிப்புள்ள ‘சேகுவேரா’ இயக்கமொன்றின் ஆட்சி வேறெப்படி அமையும். இவ்வாட்சியின் மீது கொள்கை ரீதியான பல்வேறு விமர்சனங்கள் யாருக்கும் இருக்கலாம். அவ்வாறு விமர்சனங்களை இப்போது செய்யாதவர்களும் இனி வரும் காலங்களில் விமர்சனங்கள் கண்டனங்களில் இறங்கிவிடுவார்கள். அது அரசியல் நியதி. அந்த நியதிக்கு எந்த ஒரு ஆட்சியையும் விதிவிலக்கில்லை. வெறுப்பை சம்பாதிக்காத எந்த ஆட்சி தான் உலகில் நிலைத்திருக்கிறது.

ஆனால் வரலாற்றில் பல்வேறு விதத்திலும் வித்தியாசங்களைக் கொண்ட ஒரு ஆட்சியென்பது உண்மை. இவ்வாட்சி கொள்கை பிடிப்புள்ள இறுக்கமான ஒழுக்க விதிகளைக் கொண்ட கட்சியால் வழிநடத்தப்படுவது என்பது இலங்கையின் வரலாற்றுக்கு புதியதொன்று. இலங்கைப் பிரஜைகளுக்கு பரீட்சார்த்தமான ஒன்றும் கூட.

பிரதமர் அருணி ஜனவரி 21, 22 ஆகிய திகதிகளில் இதைப் பற்றி பாராளுமன்றத்தில் விவாதங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார். இத்திட்டத்தைப் பற்றிய விரிவான விளக்கம் அதன் மூலம் எட்டும் என்று எதிர்பார்ப்போம்.

அதேவேளை அதன் மீதான நியாயமான விமர்சனங்களை முன்வைப்பதன் மூலம் அத்திட்டத்தை நேர்த்தியாக்குவதும் நம் எல்லோருடையதும் கடமை.


நன்றி தினகரன் - 12.01.2025

ஜேவிபியின் இந்திய எதிர்ப்பு: ஒரு வரலாற்றுப் பார்வை - என்.சரவணன்

“மூலோபாயமானது முழுப் போராட்டத்தின் மையமாகும்; அதற்கான பாதையின் தற்காலிக - உடனடி சமரே தந்திரோபாயமாகும்”

என்பார் லெனின் (“இடதுசாரி கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு” - நூலிலிருந்து).

இந்தியாவுடனான ஜேவிபியின் முரணையும் உறவையும் இந்தக் கோணத்தில் பார்ப்பதா என்பதே இந்த வாரம் பரவலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் விவாதங்களாகும்.

இந்தியத் தலையீட்டு மரபு

கிறிஸ்துவுக்கு முன்னர் இருந்தே இலங்கை மீதான ஆக்கிரமிப்பு மரபு இந்தியாவுக்கு உண்டு.

இலங்கை சிங்கள மக்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டிருக்கும் ஐதீகங்களைப் பலப்படுத்தி வந்த காரணிகளை சுறுக்கமாக இவ்விடயப் பரப்புக்குள் உள்ளடக்கலாம்.

  • தென்னிந்திய ஆக்கிரமிப்பு படையெடுப்புகள் 
  • காலனித்துவ கால இந்தியத் தமிழர்களின் குடியேற்றமும். சிங்களவர்களுக்கு அடுத்ததாக பெரும்பான்மை இனமாக அவர்கள் ஆனதும்.
  • 1920 களில் இருந்து இந்திய வம்சாவளியினர் வழியாக இந்தியத தலையீடுகளும், சிங்களத் தலைவர்களுடனான கடுத்து மோதல்களும்.
  • தென்னிந்திய திராவிட இயக்கங்களின் செல்வாக்கும், திராவிடஸ்தான் பீதியும்
  • இந்திய முதலீடுகளும், சுரண்டலும்
  • ஈழப் போராட்டமும் அதற்கான இந்திய மத்திய அரசினதும், தமிழ்நாடு அரசினதும் அனுசரணைகளும் ஆதரவும்
  • 1987 இல் இருந்து இலங்கை ஒப்பந்தமும், மாகாணசபை ஸ்தாபிப்பும்
  • விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் இந்தியத் தலையீடுகள்
  • இந்திய – இலங்கை வர்த்தக ஒப்பந்தங்கள்
  • தமிழக மீனவர்களின் எல்லை மீறல்

இலங்கை மீதான தென்னிந்திய படையெடுப்புகள் பற்றி சிங்கள பௌத்தர்களின் புனித வரலாற்று நூலான மகாவம்சத்தில் ஏராளமான கதைகள் உள்ளன. சிங்கள மக்களுக்கு இந்திய எதிர்ப்புவாத மனநிலையை நிறுவியதில் மகாவம்ச ஐதீக மரபுக்கு பெரும் பங்குண்டு.

அதேவேளை இலங்கையின் பண்பாட்டு வளர்ச்சியில் இந்திய பாரம்பரியங்களின் பங்கு (குறிப்பாக தென்னிந்திய வகிபாகம்) மறுக்க இயலாது. ஏறத்தாள மொழி, கலாசாரம், உணவு-உடைப் பண்பாடு, மதப் பாரம்பரியம், கலைகள் அனைத்திலும் இந்தியாவின் வகிபாகமின்றி இலங்கை வளர்ந்ததில்லை.

ஏன் சிங்கள இனத்தின் தோற்றமே இந்தியாவில் இருந்து வந்த விஜயன் மற்றும் அவனின் தோழர்களின் வழித்தோன்றல்களில் இருந்து உயிர்த்தது தான் என்பதை மகாவம்சமே விளக்குகிறது. பௌத்தம் அங்கிருந்து தான் வந்தது. சிங்கள மொழி உருவாக்கத்துக்கான அடிப்படை அங்கிருந்தே கிடைக்கிறது. எந்த சிங்கள பௌத்தத்தனத்தைப் பாதுகாக்கவேண்டும் என்று கூறப்படுகிறதோ அந்த சிங்களமும் பௌத்தமும் இந்திய இறக்குமதியே என்பதை எவரால் மறுக்க முடியும்?


ஜேவிபியின் இந்திய எதிர்ப்பின் பின்புலம்

இலங்கையின் வரலாற்றில் இந்தியாவை அதிகமாக எதிர்த்ததும், வெறுத்துமான சக்தியாக ஜேவிபியை துணிந்து குறிப்பிடலாம். “இந்திய விஸ்தரிப்பு வாதம்” என்கிற கருத்தாக்கத்தை ஜேவிபி தோற்றுவித்தது 1968 ஆம் ஆண்டாகும். அதன்படி இந்திய எதிர்ப்பு இலங்கையின் அரசியலில் நேரடியாக தாக்கம் செலுத்தப்பட்டு அரை நூற்றாண்டைக் கடந்து விட்டது.

இந்திய விரோதப் போக்கின் ஊற்று சீன மாவோவாத பின்னணியில் இருந்து தொடங்கியது என்று ஜேவிபியின் முதலாவது செயலாளரான லயனல் போபகே குறிப்பிடுகிறார். 

ரோகண விஜேவீரவும் ஜேவிபியின் ஸ்தாபக உறுப்பினர்களாக இருந்த அன்றைய இளைஞர்கள் பலரும் அதற்கு முன்னர் சண்முகதாசனின் சீன சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள். சண்முகதாசனின் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்டவர்கள். இந்தியாவுக்கு எதிரான சீன சார்பு பிரச்சாரங்களை உள்வாங்கியவர்கள்.

பிற்காலத்தில் சண்முகதாசன் ஈழப் போராட்ட இயக்கங்களிலேயே ஈபிஆர்எல்எப் இயக்கத்தை அதிகம் வெறுத்ததற்குக் காரணமும் கூட அவ்வியக்கத்தின் இந்திய சார்புக் கொள்கையும், இந்தியப் படையுடன் சேர்ந்து இயங்கியதும் தான். அதற்கு மாறாக  அவர் புளொட் இயக்கத்தினருடன் நெருக்கமாக இருந்தார். ஏனென்றால் ஈழப் போராட்ட இயக்கங்களிலேயே இந்திய எதிர்ப்பை அதிகம் கொண்டிருந்த இயக்கமாக புளொட் இருந்தது. “வங்கம் தந்த பாடம்” என்கிற நூலை வெளியிட்டு இந்திய எதிர்ப்பு கருத்தாக்கத்தை இயக்க உறுப்பினர்களுக்கு பாடமாக நடத்தியவர்கள்.

ஆனால் 71 கிளர்ச்சிக்குப் பின்னர் இந்திய எதிர்ப்பைக் கைவிட்டதாக குறிப்பிடுகிறார் லயனல் போபகே. ஆனால் 80 களின் அரசியல் கள நிலை மீண்டும் இந்திய எதிர்ப்பு நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது.


“அகண்ட பாரத” கோட்பாட்டிலிருந்து இந்தியா வெளியே வந்து விட்டதா என்றால்; இல்லை என்று கூறத் தயங்கத் தேவையில்லை. ஆனால் இந்திய காலனித்துவ அதிகாரத்தை நிறுவுவதாயின் அதனை நேரடியாக கைப்பற்றி மேற்கொள்ளவேண்டும் என்பதில்லை. புதிய உலக ஒழுங்கில் ஆக்கிரமிப்பானது ஆயுதங்களைக் கொண்டு  நிறுவது அல்ல. மாறாக பல்வேறு நுட்பமான வழிகள் இன்று வளர்ந்துவிட்டுள்ளன. நவகாலனித்துவ முறையியல் என்பது பொருளாதார, கலாசார, தகவல் தொழில்நுட்ப, செயற்கை நுண்ணறிவுப் பொறிமுறைகளால் வளர்த்தெடுக்கப்ப்பட்டுள்ளது.

முதலாளித்துவம், எகாதிபத்தியம் என்கிற கருத்தாக்கங்கள் எல்லாம் பட்டை தீட்டப்பட்டு மறுவடிவம் பெற்றுள்ளன. மறு கோட்பாட்டக்கம் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவை ஏகாதிபத்தியத்தின் தலைமையாக கருதிவந்த போக்கானது; இன்று அவ்வப்போதைய நலன்கள் சார்ந்து அடிக்கடி மாறி மாறி உருவாகிற அதிகாரத்துவ முகாம்களாக பரிமாற்றம் கண்டிருக்கிறது. அவ்வாறான ஆக்கிரமிப்பு கூட்டு நாடுகள்; அவ்வப்போது சேர்ந்தும், பிரிந்தும், புதிய கூட்டுகளை நிறுவிக் கொண்டும் பலவீனமான நாடுகளை சுரண்டும் உலகமே இன்று எஞ்சியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நிலையான - நிரந்தமான  கூட்டுகள் எதுவும் இல்லை. 

இந்தப் பார்வையில் இருந்தே இந்தியத் தலையீட்டின் பண்பையும் வடிவத்தையும், அளவையும் கணிப்பிட முடியும்.

1965 இல் ஆரம்பிக்கப்பட்டஜேவிபி 1968 ஆம் ஆண்டளவில் தமது உறுப்பினர்களை கோட்பாட்டு ரீதியில் வளர்த்தெடுப்பதற்காக  ஜே.வி.பி நடாத்திய பிரபலமான 5 வகுப்புகளில் முறையே "பொருளாதார நெருக்கடி", "சுதந்திரம்", "இந்திய விஸ்தரிப்புவாதம்". "இடதுசாரி இயக்கம்". "இலங்கையில் புரட்சிக்கான பாதை" என்பன அடங்கும்.

இந்திய முதலாளித்துவ வர்க்கம் இந்திய சந்தையை விரிவுபடுத்தி வந்தது. எனவே இந்தியா தனது அரசியல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை நமது நாட்டின் மீதும் சுமத்தி வருவதற்கு எதிராகவே வகுப்புக்கள் நடத்தப்பட்டன.

இந்தியாவின் அரசியல் பொருளாதார ஆக்கிரமிப்புக்கு இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினரை தனது நான்காம் படையைப் போல பாவித்து வருகிறது என்கிற கருத்து மேற்படி கருத்தாக்கத்தின் அங்கம் தான்.

1970 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் “தேசபக்த மக்களுக்கான அறைகூவல்” என்கிற துண்டு பிரசுரத்திலும் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் சுதேசிய அடுவருடிகள் ஐக்கிய தேசியக் கட்சியே என்று குறிப்பிட்டது. 

71 கிளர்ச்சி பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் முன் விஜெவேற சாட்சியமிளித்த போது எஸ்.நடேசன் இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றி ஜேவிபி கொண்டிருந்த கருத்துக்களை உறுதி செய்ய பல கேள்விகளை கேட்கிறார். ஓயாமல் அதற்கு பதிலளித்த விஜேவீர.

ஒரு இடத்தில் “இந்திய முதலாளித்துவ வர்த்தகத்தின் நலன்களுக்கு இந்திய வம்சாவளியினர் சாதகமாக இருக்கிறார்கள்” என்றும் குறிப்பிடுகிறார். மேலும்

“தொழிலாள வர்க்கம் ஒரு தொழிலாள வர்க்கமாக ஒழுங்கமைக்கப்படாமல் போனால் தோட்டப்புற மக்கள் ஒரு புரட்சிகர சக்தியாக புரட்சிக்கு சேவை செய்யப்போவதில்லை. மாறாக முதலாளித்துவ வர்க்கம் அவர்களை எதிர்ப்புரட்சிக்குப் பயன்படுத்தும். நகர்ப்புறங்களிலும், சிங்கள பிரதேசங்களிலும், தமிழ் பிரதேசங்களிலும் இது தான் நிலைமை.” என்கிறார்.

71 கிளர்ச்சியை அடக்க இந்தியா

உலக ஏகாதிபத்தியங்கள் தமக்கு தேவைப்பட்டால் தனி நாடொன்றை பிரித்து கூறுபோடவும் முடியும், தேவைப்பட்டால் பிளவுபட்ட நாடுகளை இணைத்துவிடவும் முடியும் என்பதற்கு உலகில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

பங்களாதேஷ், நேபாள், பூட்டான், பாகிஸ்தான் போன்ற தனது நேரடி எல்லை நாடுகளிலும் இந்தியா நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிட்டு மாற்றிய ஆட்சி மாற்றங்களை நாம் அறிவோம். 1988 இல் மாலைதீவைக் கைப்பற்றுவதற்காக புளொட் இயக்கம் மேற்கொண்ட சதியை இராணுவ உதவி அனுப்பி அதை முறியடித்ததையும் அறிவோம். அதுபோலவே 1971 ஜேவிபி மேற்கொள்ளப்பட்ட இலங்கையின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைக் முடியடிக்க இந்தியா சகல உதவிகளையும் செய்தது.

அக்கிளர்ச்சியின் போது சிறிமா அரசாங்கம் வெருண்டு போயிருந்தது. உலக நாடுகளில் இருந்தெல்லாம் உதவி கோரியது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு அக்கிளர்ச்சியை நசுக்கியது.

71 ஏப்ரல் கிளர்ச்சி குறித்து வெளிவந்த பல நூல்களில் மிக முக்கியமான நூல் ஜேவிபியினரின் நியமுவா வெளியீடாக 931 பக்கங்களில் வெளிவந்த “71 ஏப்ரல் விசாரணை” என்கிற நூல்.   அதில் பல உத்தியோகபூர்வ அரச ஆவணங்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கை விமானப்படை தளபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய அறிக்கையும் உள்ளங்டங்கும். அதில்

“சமர் நடந்த இடங்களில் இருந்து காயப்பட்டவர்களை கொண்டுவருவதற்காக இந்தியாவிடமிருந்தும், பாகிஸ்தானிடமிருந்தும் உதவி கோரினோம். அக்கோரிக்கையை அடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் 8 ஹெலிகொப்டர்களையும் 25 விமான ஓட்டிகளையும், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களையும் எமக்கு வழங்கின. அவற்றைக் கொண்டு விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டோம். கட்டுநாயக்க விமானத் தளத்தில் இவை தரித்திருந்தன.

இந்திய இராணுவத்தைச் சேர்ந்த மேலும் 150 பேர் கட்டுநாயக்க விமானத் தளத்தில் தரித்திருந்து இயங்கினார்கள்....”

80களில் இருந்து

1986 ஆம் ஆண்டு விஜேவீர எழுதிய “இனப்பிரசினைக்கோர் தீர்வு” நூலில் கூறப்பட்ட மூலோபாய சூத்திரத்துக்குள் அடக்கக்கூடியதல்ல தற்போதைய ஜேவிபியின் இந்தியா தொடர்பான மறு அவதார அணுகுமுறை.

ஆரம்பத்தில் இந்தியா என்பது ஒரு அரசியல், பண்பாட்டு, பொருளாதார ஆக்கிரமிப்பு நாடாக சித்திரித்து வந்த போதும்; மேற்படி நூலிலோ அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து இந்தியா பாதுக்காக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்திருப்பது புலப்படுகிறது. இலங்கையை பிரித்து ஈழ நாட்டை உருவாக்கி அதை தமிழ் நாட்டுடன் காலப்போக்கில் இணைத்து; பின்னர் அண்டைய திராவிட மாநிலங்களையும் இணைத்துகொண்டு ஈற்றில் “திராவிடஸ்தான்” என்கிற நாட்டை உருவாக்குவதே திமுக ஆட்சியின் அடிப்படைத் திட்டமென்றும். இந்தியாவைத் துண்டாட முயற்சிக்கிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சதியில் திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்து செயலாற்றுவது இரகசியமல்ல என்றும் குறிப்பிடுகிறார். (ப. 173,174)

இந்த நூலை விஜேவீர எழுதி ஓராண்டில் இந்திய விமானப்படை அத்துமீறி யாழ் குடாநாட்டுப் பகுதிகளில் உணவுப் பொதிகளை விமானங்களின் மூலம் போட்டமை, இந்திய மத்திய அரசின் மிரட்டல்கள், இலங்கை இந்திய ஒப்பந்தம், 13வது திருத்தச் சட்டம், மாகாண சபைகள், இந்திய அமைதி காக்கும் படையின் வருகை, அப்படையின் அடாவடித்தனங்கள் எல்லாமே இந்தியா பற்றிய கண்ணோட்டத்தை மீண்டும் மாற்றியது. இந்திய ஆக்கிரமிப்பின் வடிவமே இந்தியாவின் போக்கு; என்கிற முடிவுக்கு வரவேண்டி இருந்தது.

மாகாண சபையை ஜேவிபி எதிர்த்தது இரு அடிப்படை காரணங்களால். ஒன்று அது நாட்டை பிரதேசங்களாக துண்டாடி பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் என்பதால். அடுத்தது இந்தியாவின் அரசியல் தலையீட்டை இலகுவாக்குவதற்கு ஏதுவாக “வடக்கு - கிழக்கு தமிழர் சுயாட்சி” ஆகிவிடும் என்பதால்.

திருகோணமலை துறைமுகத்தின் மீதான அமெரிக்க ஆர்வத்துக்கு ஜே.ஆர் அரசாங்கம் கொடுத்த பச்சை சமிக்ஞையானது இந்தியா உடனடியாக களமிறங்கத் தூண்டியதன் காரணி என்பதை விஜேவீர அறிவார். அதேவேளை அமெரிக்காவை ஒருபோதும் இலங்கைக்குள் அனுமதிப்பதை விஜேவீர விரும்பாதபோதும்  இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் திருமலை துறைமுகத்தின் மீதான இந்தியா தனது செல்வாக்கை ஏற்படுத்தியதையும் எதிர்த்தார். இலங்கையின் இறையாண்மையின் மீதான அச்சுறுத்தலென்றும் பிரச்சாரம் செய்தார்.

87-89 காலப்பகுதியில் இந்திய எதிர்ப்பு வாதம் தலைதூக்கிய போது ஏறத்தாழ பெருவாரி சிங்கள சக்திகள் இந்தியாவை எதிர்த்து ஒன்றிணைந்தார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், பல்வேறு சிங்கள அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்தது மட்டுமன்றி அதற்குத் தலைமை தாங்கியது ஜேவிபி யின் முன்னணி அமைப்புகளின் ஒன்றான தேச மீட்பு முன்னணி.


எப்போதும் இந்திய அரசுடேன் நட்பைப் பேணி வந்த சிறிமா பண்டாரநாயக்கவும் இந்திய எதிர்ப்பில் முக்கிய பாத்திரம் வகித்தார். இந்தக் கூட்டணி சற்று பலமாக இருந்ததன் காரணம் அக்கூட்டணியானது ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்கிற பொதுக் கூட்டணி என்பதாகும். பத்தாண்டுகளாக ஜே ஆரின் அராஜக அரசாங்கத்தை எதிர்க்க வழி தேடிக்கொண்டிருந்த அச்சக்திகளுக்கு இந்தியாவின் அணுகுமுறையை இந்தியாவின் சண்டித்தனமாகவே  கருதியது. இலங்கையின் இறையாண்மையை ஜே.ஆர் இந்தியாவுக்கு பலியாக்கிவிட்டார் என்றே குற்றம் சுமத்தியது.

அவ்வாறு எதிர்த்த சக்திகள் 1987 க்குப் பின்னர் ஆட்சியிலமர்ந்த எந்த அரசாங்கமும் மாகாண சபை முறையை இரத்து செய்ய துணிந்ததில்லை. மாகாண சபையை தீவிரமாக எதிர்த்த முதன்மை சக்தியான ஜேவிபி கூட இறுதியில் அதனை எதிர்க்க முடியாத இடத்துக்குத் தான் வந்து சேர்ந்தது.

உள்ளூர் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி  ஆளும் கட்சிக்குள்ளிருந்தும் இந்திய எதிர்ப்புவாதம் தலை தூக்கியது. பிரதமர் பிரேமதாச, அமைச்சரவையில் இருந்த காமினி திசாநாயக்க, லிலித் அத்துலத் முதலி  உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் இந்திய எதிர்ப்புவாத அலையில் ஒன்றுபட்டனர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது முக்கிய நிகழ்வுகளில் பிரதமர் பிரேமதாச கலந்துகொள்வதை தவிர்த்தார். அந்த அலையின் ஒரு வடிவமாக இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இராணுவ அணிவகுப்பு மரியாதையின் போது ரோஹித்த விஜிதமுனி என்கிற கடற்படை சிப்பாய் ஒருவரால் திடீரெனத் தாக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை பிரேமதாச விடுவித்தார்.

அரசாங்கத்துக்கும் – விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையின் போதும் இந்தியாவை பிரிவினைவாதத்துக்கு சாதகமான சக்தியாகவே ஜேவிபி பிரச்சாரம் செய்தது.

இவ்வாறான இந்திய எதிர்ப்புவாதத்துக்கு அப்போது தலைமை தாங்கிய சக்தியாக ஜேவிபி இருந்தது.

அப்பேற்பட்ட ஜேவிபி யின் மக்கள் செல்வாக்கையோ,  அரசியல் வளர்ச்சியையோ இன்றைய இந்தியா சாதகமாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

இருதரப்பு தந்திரோபாய விட்டுக் கொடுப்புகள்

எதிர்ப்பரசியலை எங்கே செய்ய வேண்டும், சமரச அரசியலை எங்கே எப்போது, எந்த அளவுக்கு செய்ய வேண்டும் என்பதையும் NPP சரியாகவே அறிந்து வைத்திருக்கிறது. அதுவே இன்றைய தேவையும்.

இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று வல்லரசுகளையும் சமமாக கையாண்டு வருவதில் இருந்து அதன் கவனமான ஆட்சிப் பயணத்தைக் கவனிக்கலாம்

மூலாபாயம் தந்திரோபாயம் பற்றிய மாக்சிய தத்துவார்த்த வழிகாட்டலை பிரயோகிப்பது எப்படி என்பதைப் பற்றி ஜேவிபி புதிதாக பாடம்  கற்க வேண்டியதில்லை.

தென்னாசியாவில் இந்தியா சண்டியர் தான். அதன் புவிசார் அரசியல் அணுகுமுறை என்பது தற்காப்பு இராஜதந்திர அணுகுமுறையோடு நின்றுவிடவில்லை.

இந்தியாவுக்கென்று அரசியல், பொருளாதார, பண்பாட்டு ஆக்கிரமிப்பு குணம் இருக்கவே செய்கிறது. அது அரசாங்கங்களின் கொள்கையல்ல. இந்திய அரசின் நிலையான அணுகுமுறையே. இந்தியாவின் அனுசரணையின்றி அயல் நாடுகளில் எந்த ஆட்சியையும் நிறுவப்பட்டுவிடக் கூடாது இருந்து வரும் நாடு இந்தியா.

அதேவேளை இந்தியாவின் ‘அகண்ட பாரத’ முனைப்பிலிருந்து இந்தியா பின்வாங்கி விட்டது என்கிறார் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி. ஆனால் காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடுகையில் பிஜேபி ஆட்சியில் அப்படிப்பட்ட நெகிழ்ச்சி இருக்கிறதா என்கிற கேள்வி நமக்கு எழுகிறது. அகண்ட பாரத கருத்தாக்கத்துடன் இந்துத்துவ முலாமையும் பூசிக்கொண்டு ‘இந்துத்துவ ராமராஜ்ஜிய விஸ்தரிப்பு’க் கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது தற்போதைய பிஜேபி என்பதை நாமறிவோம். அந்த வகையில் இந்தியா என்பது தென்னாசிய பிராந்தியத்தில் நவகாலனித்தை பிரயோகிக்கும் நாடு என்பது பரகசியம்.

ஆனால் அளவு ரீதியில் அதற்கான முனைப்பு அத்தனை வீரியத்துடன் இல்லை என்பது ஒரு தற்காலிக ஆறுதல் எனலாம்.

எவ்வாறாயினும் “நாடுகள் ஒன்றிலொன்று தங்கியிருத்தல்” கோட்பாட்டின் பிரகாரம் அந்தந்த நாடுகள் தமக்கான பேரம்பேசும் ஆற்றலை வளர்த்து வைத்துக்கொள்வதும், பேணுவதும் அடிப்படியான தகுதிகளே. அந்தவகையில் இலங்கை என்கிற குட்டித்தீவின் பேரம் பேசும் ஆற்றலில் முதன்மையாக அதன் அமைவிடம் தகுதி பெறுகிறது.

சுதந்திரத்துக்குப் பின்னர் பிரதானமாக அமெரிக்கா, சீனா, இந்தியா,  ரஷ்யா போன்ற நாடுகளின் தலையீடுகளும், ராஜதந்திர ஈடுபாடுகளும் இலங்கையின் அமைவிட முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே இருந்து வருவதை கவனித்திருப்பீர்கள். மற்ற காரணிகள் எல்லாம் அதற்கடுத்ததே.

இன்றைய இந்திய எதிர்ப்பாளர்கள்

இந்திய எதிர்ப்பை இன்றும் பேணி வரும் தரப்பு சிங்களப் பேரினவாதத் தரப்பே. ஆனால் புதிய அரசியல் நிலைமைகளின் கீழ் பலர் சற்று அடங்கி இருக்கிறார்கள். ஆனால் சிங்கள பௌத்தர்களை தூண்டக் கூடிய நிகழ்வுகளுக்காக தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் தரப்பு அது. குறிப்பாக மாகாண சபை முறைமையை கலைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் சக்திகளும் இதில் அடங்கும்.

இந்தியாவின் இராஜதந்திர வலைக்குள் NPP அரசாங்கம் சிக்கிவிட்டது என்கிற விமர்சனத்தையே அவர்கள் முன் வைக்கின்றனர்.

இந்தியாவுடனான NPP யின் ‘நட்பு கொள்ளும் அணுகுமுறை’ நடைமுறை அரசியலில் தவிர்க்க முடியாதது. எதில் பிடிவாதமாக இருக்கவேண்டும், எதை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது நீண்டகால தேவைகளை மாத்திரம் கொண்டிருக்காது மாறாக சமகால நடைமுறை தேவைகளும் தான் வகிபாகம் செலுத்தும். தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கிற ஒப்பந்தங்களில் ஜேவிபி எதிர்த்து வந்த எட்கா ஒப்பந்தமும் கூட அந்த 34 ஒப்பந்தங்களில் அடங்கும்.

13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நிர்பந்திப்பது என்பது இந்தியாவின் மானப் பிரச்சினையாகவும் தொடர்கிறது. அதற்காக இந்தியா தனது பிரதமர் ஒருவரை காவு கொடுத்திருக்கிறது. இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த 1200க்கும் மேற்பட்டோரை இழந்திருக்கிறது. ராஜீவ் காந்தி இலங்கையில் தாக்கப்பட்டதை இலங்கைப் பெரும்பான்மை இனத்தவர்கள் பெருமிதமாகக் கருதி வருகிறார்கள். இத்தனைக்கும் பிறகும் மாகாண சபை தோல்வியுற்ற தீர்வாக தொடர்கிறது. இந்நிலையிலேயே பிரதமர் மோடியின் பேச்சில் 13வது திருத்தச் சட்டம் பற்றி அழுத்தங்களையும் கவனிக்கலாம்.

அதை விட அதிகமாக 87-89 காலப்பகுதியில் ஜேவிபி ஆயிரக்கணக்கான அதிகமான தமது தோழர்களையும் இதே காரணத்துக்காக விலைகொடுத்து இருக்கிறார்கள் என்பதையும் எளிமையாக கடக்க முடியாது.

அரசியல் களத்தின் இன்றைய வடிவம் மாறியிருக்கிறது.

ஜேவிபி யைப் போல NPPயானது இடதுசாரித் தனத்தில் தீவிரம் பேணும் இயக்கமல்ல. மாறாக சற்று தாராளவாத சக்திகளையும் இணைத்து கொள்கை நெகிழ்ச்சிப் போக்கைக் கொண்ட, இலங்கையின் இறைமையில் உறுதிகொண்ட; இலங்கைக்கான புதிய ஒழுங்கை வேண்டி நிற்கிற இயக்கமே NPP. அந்த வகையில் NPP என்பது ஜேவிபியின் கொள்கைகளில் இருந்து ஓரளவு விட்டுக்கொடுப்பையும் சமரசத்தையும் செய்து கொண்ட வடிவம் என்றால் அது மிகையில்லை.

இந்த விட்டுக்கொடுப்புகள் ஜேவிபியின் மூலோபாய – தந்திரோபாய அணுகுமுறையின்பாற் பட்டது என்று கூறமுடியும். அதே வேளை NPPயில் இருந்து கற்றுக்கொள்கிற நடைமுறைப் பாடங்கள் எதிர்கால ஜேவிபியின் மூலோபாயத்திலும் மாற்றங்களைக் கொண்டுவருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.


மூலோபாய – தந்திரோபாய மாற்றம்?

இந்தியா மீது ஜேவிபிக்கு இருந்த பார்வை மாறியிருப்பது போல நிச்சயமாக ஜேவிபிக்கு இந்தியா மீதிருந்த பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மை. அதற்கான  தேவை ஒருபுறம். அதைவிட இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பில் இலங்கையின் அமைவிடம் முக்கியமானது. தென்னாசிய நாடுகளுக்கு வெளியில் உள்ள நாடுகள் இலங்கையை கையாளக்கூடிய சாத்தியங்கள்; இலங்கையின் தேவைகளில் இருந்தே வழிதிறக்க இயலும். அப்படியாயின் இலங்கையின் அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையானது இந்திய உபகண்டத்தின் இருப்பில் தாக்கத்தை செலுத்தக் கூடிய ஒன்று. அதன் நீட்சியாகவே ஒருவகையில் இலங்கைக்கு ஒரு பெரிய அண்ணனாக தன்னை பேணிக்கொள்வதிலும், அதனை அனைவருக்கும் நினைவுறுத்துவதிலும் இந்தியா தீவிர வகிபாகத்தை செய்தாக வேண்டும். 

இதுவரை இலங்கையில் புதிதாக எவர் ஆட்சியேறினாலும் அவர்களின் முதல் ராஜதந்திர விஜயம் இந்தியாவுக்கானதாக அமைந்திருக்கிறது. அரச தலைவரின் முதல் விஜயம் இந்தியாவுக்கானதாக இருக்க வேண்டும் என்பதை ஒரு மரபாகவே பேணி வருகிறது. அது ஒரு புதிய அரச தலைவரை கௌரவிக்கும் நிகழ்வாக மாத்திரமன்றி, இந்தியாவின் ஆசீர்வாத சடங்காகவும், நல்லெண்ண சமிக்ஞைக்கான உடன்பாடுகளையும் கூடவே செய்துகொண்டு வழியனுப்பி வைப்பதையும் வழமையாகக் கொண்டுள்ளது.

மூலோபாயம் இல்லாத தந்திரோபாயம் என்பது காலப்போக்கில் தந்திரோபாயத்தையே மூலோபாயமாக மாற்றிவிடும் ஆபத்தை உருவாக்கிவிடும். அதுவே  ஈற்றில் சந்தர்ப்பவாத தவறுகளுக்கு வழிவகுத்துவிடும் ஆபத்து உண்டு.


இலங்கையை இந்தியாவின் அங்கமாக்கலாமா? காந்தி என்ன சொன்னார்?

மகாத்மா காந்தியிடம் எதிர்காலத்தில் இந்தியாவின் ஒரு பாகமாக இலங்கையை ஆக்குவது பற்றிய கேள்வியொன்றை ‘யங் இந்தியா’ (Young India 10.02.1927) பத்திரிகைக்காக ஒருவர் காந்தியிடம் கேள்வியைக் கேட்கிறார். காந்தி அதற்கு இப்படி பதிலளிக்கிறார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவுகிற நெருக்கமான இன, மொழி மற்றும் மத ஒற்றுமைகள் இருக்கும் நிலையில் எதிர்கால இந்திய சுயராஜ்ஜிய கூட்டமைப்பில் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

“பிரிட்டிஷ் இந்தியா” என்பது ஒரு செயற்கையான வர்ணனையாகும். இது அந்நிய ஆதிக்கத்தை, அதாவது பிரிட்டிஷ் ஆதிக்கத்தையே நினைவூட்டுகிறது. ஆகவே அதன் எல்லை நம்மை அடிமைகளாக வைத்திருப்பவர்களின் விருப்பப்படி சுருங்குகிறது அல்லது விரிகிறது. மாறாக சுதந்திர இந்தியா ஒரு ஆக்கபூர்வ முழுமையாக இருக்கும். அதன் சுதந்திரக் குடிமக்களாக இருக்க விரும்புவோர் மட்டுமே அதில் சேர்க்கப்படுவார்கள். எனவே சுதந்திர இந்தியா அதன் புவியியல், இன மற்றும் கலாச்சார வரம்புகளைக் கொண்டிருக்கும். எனவே ஒரு சுதந்திர இந்தியா, பர்மியர்கள் விடயத்தில் இனம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை அங்கீகரிக்கும், அது பர்மிய தேசத்திற்கு சக தோழர்களின் கரங்களை நீட்டி உதவும் அதே வேளையில், முழுமையான சுதந்திரத்திற்கான அவர்களின் உரிமையை அங்கீகரிக்கும், இந்தியாவின் அதிகாரத்தில் உள்ள வரையில் அதை மீண்டும் பெறவும் தக்க வைத்துக் கொள்ளவும் உதவும்.

இலங்கையைப் பற்றி அவ்வளவு நம்பிக்கையுடன் என்னால் பேச முடியாது. நமக்கும் இலங்கைக்கும் பொதுவான கலாசாரம் இருந்தாலும், தென்னிந்தியர்கள் பெரும்பான்மையாக இலங்கையில் வசித்து வந்தாலும், அது ஒரு தனி கட்டமைப்பாகும். நான் கற்பனை செய்கிற இந்தியாவைப் பொறுத்தவரை எனக்கு ஏகாதிபத்திய அபிலாஷைகள் எதுவும் இல்லாததால், இலங்கையை ஒரு முழுமையான சுதந்திர அரசாகக் கருதுவதில் நான் திருப்தியடைவேன். ஆனால், அத்தீவின் மக்கள் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க விரும்புவார்களானால், இலங்கையை சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள நான் தயங்கமாட்டேன்.


இலங்கைக்கான எச்சரிக்கை சமிக்ஞைகளா இந்த ஓவியங்கள்

அனுரா குமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலிலும், அவரின் தேசிய மக்கள் கட்சி பாராளுமரத் தேர்தலிலும் வெல்லும் என்பதை இந்திய உளவுத் துறையினர் கடந்த ஆண்டு இறுதியிலேயே கணித்திருந்தது உண்மை.

பெப்ரவரி மாதம் அனுரவை இந்திய மத்திய அரசாங்கம் இந்தியாவுக்கு அழைத்து பல சந்திப்புகளை மேற்கொண்டது அதன் விளைவாகத் தான்.

அந்த சந்திப்புகளின் போது வழமையான சாதாரண உடையில் அனுர பிரசன்னமளிக்கவில்லை. மாறாக கோர்ட் சூட் டையுடன் மிக மிடுக்காக அந்த சந்திப்புகளில் கலந்து கொண்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால் ஜனாதிபதியானதும் டிசம்பரில் மோடியின் அழைப்பின் பேரில் சந்தித்த வேளை கூட மிகச் சாதாரண வெள்ளை சேர்ட்டுடனேயே சந்திப்புகளின் பொது அவர் காட்சியளித்தார்.

சரி அது இருக்கட்டும் அதை விட இன்னொரு சுவாரசியமான ஒரு விடயத்தை கவனிக்க முடிந்தது. கடந்த பெப்பரவரி மாதம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் அனுர குமார திசாநாயக்கவை அவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்துக்கு அழைத்து சந்தித்த வேளை ஜெயசங்கர் அனுரவை இருத்தியிருந்த இடத்தை எத்தனை பேர் கவனித்து இருப்பீர்கள் தெரியாது.

அவர்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்த அந்த இருக்கைகளின் நடுவில் ஒரு ஓவியம். அந்த ஓவியம் சொல்லும் செய்தி என்ன?

இராமர் இலங்கை அரசன் இராவணனை “இராட்சசனை” வென்று திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பதனை அடையாளப்படுத்தும் ஓவியம் இது. தர்மத்தை நிலைநாட்டியதனை அர்த்தப்படுத்தும் வகையிலான குறியீடு இது.

கோட்டபாய ஜனாதிபதியாக ஆனபோது 2021 பெப்ரவரியில் டில்லிக்கு அழைக்கப்பட்ட வேளை பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது இலங்கையில் ராவணனுக்கு எதிராக, ராமர் போர் புரியும் தஞ்சாவூர் ஓவியத்தை, கோத்தபய ராஜபக்சேவுக்கு காட்டியா நிகழ்வைப் பற்றி அப்போது தினமலர் பத்திரிகையும் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.

அதன் மூலம் நாட்டின் வலிமையையும், ஹிந்து மதத்தின் பெருமையையும், தன் ஆளுமையையும், பிரதமர் மோடி சூசகமாக அறிவித்திருந்தார் எனலாம்.

ஐதராபாத் இல்லம் என்று அழைக்கப்படும் அந்த இல்லத்தில் இரு நாடுகளின் தலைவர்கள் அமர்ந்து பேசும் அறையில், பிரபல ஓவியர் ரவிவர்மா அல்லது வட மாநில ஓவியர் வரைந்த பல ஓவியங்கள் அங்கே மாட்டப்பட்டுள்ளன. அங்கே இருந்த ராமர் பட்டாபிஷேகம் காணும் ஓவியத்தை எடுக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். பிரதமர் மோடியின் உத்தரவின்படி, ராமர், சீதை, ராவணன், அனுமர் போன்றவர்களின் படங்களும், இலங்கையை போரின் மூலம் தீக்கிரையாக்கிய படமும், ராவணனுக்கு எதிராக ராமர் போர் புரியும் காட்சியும் நிறைந்த, பெரிய தஞ்சாவூர் ஓவியம் ஒன்று, அங்கு மாட்டப்பட்டது.


கோத்தபயா ராஜபக்ச, அங்கே வரவேற்கப்பட்டபோது அந்த ஓவியங்கள் அவருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் இந்தியா வலிமையான நாடு என்பதை உணர்த்தும் விதமாக அந்த ஓவியம் இருந்தது என்றும் செய்தி வெளியானது. மேலும், சீதையை ராவணன், இலங்கைக்கு கடத்தி சென்றதும், அனுமர், சீதையை கடல் கடந்து காப்பாற்ற சென்ற காட்சியும், இலங்கையை தீக்கிரையாக்கிய காட்சியும், அந்த ஓவியத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த ஒரு ஓவியத்தின் வாயிலாக, இந்தியாவின் வலிமையையும், ஹிந்து மதத்தின் பெருமையையும், கோத்தபயா ராஜபக்சேவுக்கு, பிரதமர் மோடி மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார் என்றே பேசப்பட்டது.

இராமாயணக் கதைகளை அப்படியே உண்மை என்று ஏற்று அக்கதையின் நாயகன் இராமரை வழிபடுவதையும், இராம ராஜ்ஜியத்தை உருவாக்குவதே தமது இலக்கு என்று பறைசாற்றிக்கொண்டு ஆட்சியமைத்திருக்கும் ஒரு அரசாங்கம்; அந்த இராமரின் எதிரியான இராவணனின் நாட்டையும், இராவணனுக்குப் பின் வந்த அந்த நாட்டின் தலைவர்களையும் எப்படி எதிர்கொள்ளும், அவர்களுக்கு எப்படியான சமிக்ஞைகளைக் கொடுக்கும் என்பதற்கான அடையாளங்களே இவை.

மறுபுறம் இந்தியாவை ஆக்கிரமிப்பாளர்களாக சித்திரிக்கின்ற சித்தாந்தத்தைக் கட்டமைத்தவர்களும், அக்கருத்தாக்கத்துக்கு ஒரு காலத்தில் தீவிரமாக தலைமை கொடுத்தவர்க்களுமான ஜேவிபியின் தலைவர் அனுர ஜனாதிபதியாகுமுன் வரவேற்றபோது இராம பட்டாபிஷேக படத்தின் அருகில் சந்திப்பை ஏற்பாடு செய்தனர். ஆனால் ஜனாதிபதியான பின்னர் ஜெய்சங்கருடனான டெல்லி சந்திப்பு ஒரு ஹோட்டலில் நிகழ்ந்ததாலேயோ என்னவோ அவ்வோவியங்களுக்கு வேலை இருக்கவில்லை போலும்.

ஜெயசங்கருடனான வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான பல்வேறு சந்திப்புகள் அதே அறையில் அதே பின்னணியில் நிகழ்ந்த படங்களை இணையத்தில் காணக் கிடைத்தது. ஆனால் பின்னணிப் படங்கள் மட்டும் மாறி இருப்பதைக் கவனிக்கும் போது இலங்கைத் தலைவர்களுக்கு குறிப்பான சமிக்ஞைகளை சூசகமாக அறிவிக்கும் சந்திப்புகளும் தானா இது என்கிற கேள்வி எழாமல் இருக்குமா?

தாய்வீடு - ஜனவரி 2025


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates